Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஒரு பெரிய உயிர் காப்பாற்றப்பட்டபோது...

ஆறாயிரம் கிலோ எடை உள்ள தனது பெரிய உடம்பின் அன்றாட குறைந்தபட்ச தேவையான 250 கிலோ தீவனத்திற்காகவும், 90 லிட் தண்ணீருக்காகவும் அந்த யானை பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்தும் கிடைக்காமல் நாள்பட்ட பட்டினி காரணமாக ஒரு இடத்தில் சாய்ந்து சரிந்து விழுந்தது. கூடவே உற்சாகமாக நடந்து வந்து கொண்டிருந்த குட்டி யானை தன் தாயின் திடீர் தள்ளாட்டத்தையும், சரிவையும் தாங்கமுடியாமல் தனது அம்மாவிற்கு என்னாச்சோ? ஏதாச்சோ? என்று சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டது.

இந்த சம்பவம் நடந்த இடம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மாக்கான்பாளையம் வனமாகும். குட்டியானையின் சத்தத்தை கேட்டு கிராம மக்களும் வனத்துறையினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
முதலில் என்ன நடந்தது என்பது தெரியாவிட்டாலும் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்த வனத்துறையினர் உடனடியாக யானையின் உணவிற்க்கும் தண்ணீருக்கும் ஏற்பாடு செய்தனர். இரண்டையும் பார்த்த மாத்திரத்தில் குட்டி யானை ஒடோடிப்போய் தன் பசி தாகத்தை தீர்த்துக்கொண்டு தன் தாய்க்கும் கொண்டுவந்து கொடுத்தது.  

தாய் யானைக்கோ அருகில் போடப்பட்ட தீவனத்தைக்கூட எடுத்துச் சாப்பிட முடியாத அளவிற்கு களைத்துப் போயிருந்தது. மருத்துவக்குழுவானது ஊசிமூலமாக தெம்பு மருந்து ஏற்றியபிறகு தாய் யானை கொஞ்சம் கண்ணைத்திறந்து பார்த்தது. கண்ணைத் திறந்ததும் அது தேடியது தனது குட்டியைத்தான், 'அம்மா நான் இங்கேயிருக்கேன்' என்பது போல ஒடோடிப்போய் அம்மாவின் தும்பிக்கைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு அன்பை சொரிந்தது.

சுற்றிலும் நல்லவர்களும் நம்பிக்கையானவர்களும் இருப்பதை அறிந்ததாலோ என்னவோ தாய் யானை கொஞ்சம் கொஞ்சமாக தனது உடலை அசைத்து எழ முயற்சித்தது, ஆனால் முடியவில்லை. படுத்த நிலையிலையிலேயே சாப்பாட்டையும் தண்ணீரையும் நிறைய எடுத்துக்கொண்டது. இன்னும் கொஞ்சம் தெம்பு வந்து மீண்டும் எழ முயற்சித்தது, அப்போதும் முடியவில்லை.

பிறகு கிரேன் கொண்டுவரப்பட்டு அதன் உதவியுடன் யானையை துாக்கி நிறுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் அம்மாவை ஏதோ செய்யப்போகிறார்கள் என்று நினைத்து கிரேனை முட்டி தள்ளுவதும், அது அதன் சின்ன உடம்பால் அது இயலாது போய் திரும்ப அம்மாவிற்கும் கிரேனிற்கும் நடுவில் நிற்பதுமான குட்டி யானை தவித்துப் போனது.

பிறகு குட்டி யானையை ஒரு ஒரமாக தனிமைப்படுத்தி நிறுத்தி வைத்துவிட்டு தாய் யானையை துாக்கி நிறுத்தினர். மீண்டும் உணவுடன் சத்து மருந்துகளும் கலந்து வழங்கப்பட்டது. உடல் முழுவதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உடல் சூடு தணிக்கப்பட்டது. பெரிய உயிரைக் காப்பாற்ற நடைபெற்ற இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

நான்கு கால்களிலும் நிற்கும் தெம்பு கிடைத்ததும் அடுத்த நொடி கிடுகிடுவென நடந்து சென்று குட்டியை அனைத்துக் கொண்டது, அதன் பிறகு தாயும் சேயும் காட்டுக்குள் வெகு வேகமாக வீறு நடைபோட்டு சென்றன. ஒரு விலங்கினத்தின் தாய்-சேய் பாசத்தை பார்த்து மக்கள் கண்கலங்கினர், சுற்றுச்சுழல் கெட்டுப்போய்விட்டதன் துவக்கமே இது என எண்ணி வனத்துறையினர் மனம் கலங்கினர்.

தகவல் தந்து உதவிய அருண் மற்றும் ரேஞ்சர் சிவசுப்பிரமணியனுக்கு நன்றி!  

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro