ஆல.தமிழ்ப்பித்தன் என்ற கதாசிரியரின் கதை
சட்..சட்..சட்..சட்..
பெடல் தறியை குறுக்கும் நெடுக்குமாக ஒட்டிக்கொண்டிருந்தவர் ஒரு நெசவாளி மட்டுமல்ல ஒரு கதாசிரியரும் கூட'முகவரிகள்' என்ற தனது சிறுகதை தொகுப்பு நுாலை சமீபத்தில் வெளியிட்ட நுாலாசிரியரும் கூட.
பனிரெண்டு மணி நேரம் தறி ஒட்டினால் கிடைக்கும் நாள் கூலி நானுாறு ரூபாயில் நுாறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கி படிக்கும் புத்தகப் பித்தர்.
பெயர் ஆல.தமிழ்ப்பித்தன்
விருதுநகர் மாவட்டம் ராசபாளையம் வட்டம் புனல்வேலியில் இன்னமும் மாற்றமும் ஏற்றமும் பெறாத ஒன்றிரண்டு ஒட்டு வீடுகளில் இவரது வீடும் ஓன்று. விவரம் தெரிந்த நாளில் இருந்து உணவுக்கு தறியையும், உணர்வுக்கு துமைப்பித்தனையும், பட்டுக்கோட்டையாரையும், கண்ணதாசனையும் தன்னகத்தே கொண்டவர்.
தன்மான உணர்வும் தமிழ் உணர்வும் அதிகம் கொண்ட இவருக்கு உள்ள பொழுது போக்கு கதை எழுதுவதும் கவிதை வடிப்பதும்தான்.
தமிழை உயர்த்திப்பிடிக்க ஒற்றை ஆளாய் நின்று நான்கு பன்னாட்டு கருத்தரங்கு நடத்திய செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனர், தலைவர் கவிஞர் சுரா, தமிழ்ப்பித்தனின் கதைகளை படித்துவிட்டு 'இதை நான் புத்தகமாக போடுகிறேன், அந்த புத்தகத்தை விழா எடுத்து வெளியிடுகிறேன் இது தமிழ்ப்பித்தனுக்கு செய்யும் உதவியல்ல தமிழுக்கு செலுத்தும் நன்றி' என்று சொல்லி சொல்லியபடியே விழா எடுத்து நுாலை வெளியிட்டார்.
விழாவில் பேசிய தமிழ்ப்பித்தனின் தமிழ் வீச்சு அவரது புத்தகத்தை வாங்கவும், வாசிக்கவும் வைத்தது. தமிழ்ப்பித்தன் தான் பார்த்த படித்த கேட்ட அனுபவித்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கதைகள் ஒவ்வொன்றும் ஒரு வித ரசனையோடு இருக்கிறது.
எளிய மக்களின் வாழ்க்கையை அவர்கள் வலியை இப்படி எல்லாம் சொல்லமுடியுமா என வியக்கவைக்குமளவு கதையின் நடை அமைந்துள்ளது.பொய்யர்களை லஞ்சப் பேயர்களை எழுத்தெனும் சாட்டையால் விளாசியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு இவரிடம் பிடித்தது புத்தகம் முழுவதுமே பரவலாக காணப்படும் நையாண்டியான நடைதான்.
நன்றியின் நிழல் என்ற கதையில் ஊரால் ஒதுக்கப்பட்ட ஒருவர் இறந்த போது அவரை தொட்டு துாக்கி அடக்கம் செய்ய யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் கதையின் நாயகன் அதற்கு முற்பட, மாசப்பிறப்பு விரதம் அது இது என்று சொல்லி மனைவி தடுக்க,உனக்கு மாசப்பிறப்பு முக்கியம் எனக்கு மனுசப்பிறப்பு முக்கியம்.ஒரே நேரத்தில் தீனியையும் தின்னுக்கிட்டு சாணியையும் போடுற எரும மாட்டு வாழ்க்கையை என்னால் வாழமுடியாது என்று வீறுகொண்டு செல்கிறான் இந்த கோபமான வார்த்தைகளை ஒரு கிராமத்துக்காரராக இருந்திருந்தால் மட்டுமே வார்க்க முடியும்.
காதல் வாழ்க சிறுகதையில் கட்டிட தொழிலாளிகள் இருவருக்கு இடையே காதல், அந்த காதல் கல்யாணத்தில் முடிய ஒரு பொழுது விடிய வேண்டும். திடீரென மாப்பிள்ளை விபத்தில் சிக்கி காலை இழந்துவிடுகிறான். அவனே காதலியை கூப்பிட்டு வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொள் என்று சொல்கின்ற போது காதலி பேசும் வார்த்தைகள் தமிழக பண்பாட்டை கலாச்சாரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
இப்படி 24 கதைகள் உள்ளன, ஒவ்வொன்றிலும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இந்த கதைப்புத்தகத்தின் விலை நுாறு ரூபாய்.இதை வாங்கிப்படிப்பதன் மூலம் நுாலோடு பேராடும் எளிய எழுத்துப் போராளியான ஆல.தமிழ்ப்பித்தன் இன்னும் பல நுால்களோடு வாழ்வார்,வளர்வார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro