Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

101 வயது விளையாட்டு வீரர் கண்ணன்


அந்த விளையாட்டு வீரர் தனது வெற்றிக்கோட்டை தொட்ட போது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது, அதில் பாதிபேர் அந்த வீரரின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர்காரணம் 100 மீட்டர் துாரத்தை கடந்து வென்ற அந்த வீரருக்கு வயது 101.

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநில அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

35 வயதிற்கு மேற்பட்டு 95 வயது வரையிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒட்டப்பந்தயம், நடைப்பந்தயம், வட்டு, குண்டு, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தனர்.  


பகல் 11 மணியளவில் ஒரு அறிவிப்பு கேட்டது.  

விழுப்புரம் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் சார்பாக 101 வயது கண்ணன் இப்போது 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வார் என்பதுதான் அந்த அறிவிப்பு.

அறிவிப்பினை கேட்டதும் போட்டி துவங்கும் இடத்திற்கு அனைவரும் விரைந்தனர் வளைந்த முதுகு, செருப்பு அணியாத கால்களுடன் விளையாட்டு வீரர்களுக்கான பேண்ட்- டிசர்ட் அணிந்து ஒடுவதற்கான சிந்தடிக் தடகளத்தில் தயாராக இருந்தார்.பொதுவாக 95 வயதிற்கு மேல் யாரும் இருக்கமாட்டார்கள், அப்படியே இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தெம்பு இருக்காது என்பதால் விழாக்குழுவினர் 95 வயது வரைக்கும்தான் பனியன் மீது அணியும் 'நம்பர் டாக்' வைத்திருந்தனர்.

நமது பெரியவர் கண்ணனுக்கு 101 வயதானதை குறிக்கும் 'டாக்' இல்லை, இருந்தாலும் பராவாயில்லை என்று 95 வயதுடையவர்களுக்கான 'டாக்' அணிந்து தயாராக இருந்தார். அவருடன் போட்டியிட யாரும் இல்லாததால் அவர் மட்டுமே களத்தில் தனித்து நின்றிருந்தார். ஆனாலும் அவர் நுாறு மீட்டரை ஓடியோ நடந்தோ கடந்தால்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இதோ கண்ணன் நுாறு மீட்டரை கடக்க தயாராகிவிட்டார் அதற்குள் அவரது சுருக்கமான வரலாறு.



விழுப்புரம் மாவட்டம் பெரமண்டூர் ஊராட்சி கோபாலபுரம் கிராமம்தான் பெரியவருக்கு சொந்த ஊர். இவருக்கு தெரிந்தது எல்லாம் விவசாயம் மட்டுமே. மனைவி இறந்த பிறகு ஒண்டிக்கட்டையானார். தனக்கான சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவருகிறார். (முதியோர் பென்ஷன் என்று ஒன்று இருப்பது கூட தெரியாது, அந்த பகுதியில் உள்ளவர்கள் யாராவது முயற்சி எடுத்து வாங்கித்தந்தால் புண்ணியம் உண்டு) நிலத்தை ஒட்டி ஒரு குடிசை அமைத்து அதில் தானுண்டு தன் விவசாயம் உண்டு என்று யாருக்கும் சுமையாக இல்லாமல் இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்க செயலாளரும், உடற்கல்வி ஆசிரியருமான மோகன்குமாருக்கு ஒரு நல்ல பழக்கம். வருடா வருடம் நடைபெறும் மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் தனது மாவட்ட கிராமத்தில் இருந்து திடகாத்திரமான, வயதான ஆண் மற்றும் பெண்களை அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க வைத்து அவர்களை சந்தோஷப் படுத்துவார்.

அப்படி இந்த வருடத்திற்கான வீரர்களை தேடும் போதுதான் இப்படி 101 வயதான கண்ணன் என்று ஒருவர் இருக்கிறார் என தகவல் கிடைத்தது. உடனே அவரது இருப்பிடத்திற்கு தேடிப்போய் பார்த்தார். காது நன்றாக கேட்கிறது, கண் பார்வையில் கோளாறு இல்லை, மூப்பின் காரணமாக கொஞ்சம் முதுகு வளைந்துவிட்டதே தவிர சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை இது போதும் என்ற நிலையில் அவர் வயதையும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

பின் இப்படி சென்னையில் ஒரு போட்டி இருக்கிறது நான் அழைத்துப் போகிறேன் வருகிறீர்களா என்று கேட்டதும் சந்தோஷத்துடன் சம்மதித்த பெரியவர் கண்ணன் முதல் முறையாக தன் கிராமத்தைவிட்டு வௌியே வந்து சென்னையில் கால்பதித்தார். பெரியவரே வெயிலாக இருக்கிறது என் காலணியை போட்டுக்கொள்கிறீர்களா? என்று சிலர் கேட்டபோது கால்ல செருப்பு போட்டு பழக்கமில்லய்யா தவிர வெயில் எனக்கு சாமி அது என்ன ஒண்ணும் செய்யாது நன்றி என்று சொல்லி காலணியை தவிர்த்துவிட்டார்.

இதோ போட்டியை துவக்கிவிட்டனர் பெரியவருக்கு இருபக்கமும் இருந்து பார்வையாளர்கள் கைதட்ட கொஞ்சமும் அசராமல் அலுக்காமல் ஒட்டமும் இல்லாத நடையுமில்லாத ஒரு பாவனையில் நுாறு மீட்டரை கடந்து வெற்றிகரமாக முடித்து பதக்கத்தை பெற்ற போது அவரை விட அதிகம் சந்தோஷப்பட்டது மோகன்குமார்தான்.

பிப்ரவரி 21 ந்தேதி ஐதராபாத்தில் நடக்கும் தேசிய மூத்தோர் தடகளப் போட்டிக்கு பெரியவர் கண்ணன் கலந்து கொள்ளும் தகுதியினை பெற்றுவிட்டார்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro