அத்தியாயம் - 7
அந்த நீள் இரவின் நிசப்த நிமிடங்களில் காற்றின் பலத்தைத் தாண்டி கேட்ட ஒலி கார்த்தி, ப்ரேம், சிவா மற்றும் ஹரியின் சிரிப்பொலி மட்டுமே. நெடுஞ்சேரனின் சொல்லைக் கேட்டு நண்பர்கள் நால்வரையும் தன்னுடைய வீட்டிற்கு பின்னாளிருந்த தோட்டத்தின் ஒரு கோடியிலிருந்த அந்த சிறு தோட்டத்து வீட்டின் வெளியே தென்னை மரத்தில் கட்டி வைத்திருந்தனர்.
எதற்கும் சளைக்காமல் தங்களுக்குள்ளே கிண்டலும் கேலியாகப் பேசிக்கொண்டிருந்தவர்களை நம்பாமல், "வீட்டுக்குள்ள போட்டு அடைச்சு வைங்கலே. இவனுக பேச்சும் முழியும் சரியில்ல" என்றவர் அவர்களுடன் எதுவும் பேசாமலே சென்றுவிட்டார்.
அதன் பிறகு நால்வரையும் ஒரு கட்டில் மட்டுமே இருந்த அறைக்குள் வைத்து அடைத்தனர். ஹரி அந்த கட்டிலில் அமர்ந்துகொண்டு சுவரில் சாய, கார்த்தி அதில் கால் மேல் கால் போட்டு தலைக்குக் கையை தலையணையாக்கிப் படுத்திருக்க அவன் காலுக்கு நேராகச் சிவாவும், கட்டிலின் நேரெதிராக தரையில் அமர்ந்திருந்தான் ப்ரேம்.
கையில் அலைபேசியில்லை. பொழுது போக ஒரு தொலைக்காட்சி பெட்டி கூட அங்கில்லை. ஓடியும் ஓடாதது போல் இருந்த அந்த மின்விசிறி அவர்களைப் பள்ளி, கல்லூரி காலத்திற்கு அழைத்துச் செல்ல எந்த விதமான இடையூறும் இல்லாமல் அந்த நேரத்தையும் விடாமல் மொத்தமாய் சிறகடித்துப் பறந்தனர் கடந்த கால நினைவுகளோடு.
"டேய் இவனுகள நாம கட்டி வச்சிருக்கோமா இல்ல இவனுக நம்மள கட்டி வச்சிருக்கானுகளா?" என்ற சந்தேகம் அங்கிருந்த அனைவருக்கும் வந்தது.
நேரம் செல்ல செல்ல அவர்கள் கதையை வெளியிலிருந்தவர்களும் சுவாரஸ்யமாகக் கேட்கத் துவங்கினர்.
இடையிடையில், "அண்ணே இளநி இன்னும் வரல"
"அண்ணே கார்ட்ஸ் இருக்கா ஒரு கழுத்தை ஆட்டம் போடலாம்"
"கொசுவத்தி இருந்தா கொஞ்சம் தாங்க" என்று அவர்களை இம்சிக்கவும் தவறவில்லை.
இவர்கள் தொடர் கேள்வியும் தாங்காமல் ஒரு கட்டு சீட்டுக் கட்டை மட்டும் கையில் கொடுத்தனர். "ஏலேய் இன்னொரு ஏதாவது கேட்டீங்க சாவடிப்பேன்" என்ற எச்சரிக்கையோடு ஒருவன் ஜன்னல் வழியாகக் கொடுத்தான்.
"சரி கேக்கல வர்றியா ஆட்டத்துக்கு மூணு கை கொறையிது"
"லேய் என்ன லந்தா" என்று ஒருவன் ஹரியைப் பார்த்து முறைக்க, அவனுக்கு அருகில் இருந்தவனோ, "விடுயா நாமளும் வெட்டியா தான இருக்கோம் ஒரு கை ஆடி தான் பாக்கலாம். நாம கூடயே இருக்கறப்ப அவனுகளால எப்படி நம்மள தாண்டி வெளிய போக முடியும்?"
"அண்ணே நீ கற்பூரம்ண்ணே" கார்த்தியின் வார்த்தை அவனுக்கு எதையோ சாதித்த உணர்வு வர ஒரு பிரகாசமான புன்னகை வந்தது இதழ்களில்.
"யோவ் அய்யா எப்பவேணாலும் வருவாக கூட ஆடிட்டு இருந்தது தெரிஞ்சது சமாதிதான்டி" என்று அவர்கள் வெளியேற அடுத்த ஒரு மணி நேரத்தில் கழுதை பட்டத்தை வழக்கம் போல கார்த்தியின் தலையில் அதிகம் கட்டி இருந்தான் ஹரியும் ப்ரேமும் இணைந்து.
"டேய் ஸ்பேட் (Spade) ஆஸ்ல(Ace) இருந்து டைமண்ட் குயின் வரைக்கும் என்கிட்டே தான்டா இருக்கு. இதுவே பனன்டு கார்டு வருது. முடியாது முடியாது ஆட்டைய நிறுத்துங்க" அலறி கார்த்தி அனைத்தையும் ஒன்றாக இணைத்துவிட்டான்.
அதற்கு அவனை மற்ற மூவரும் இணைந்து அடிக்க அதன் பிறகு மெத்தையே இல்லாத தரையில் WWE விளையாட என்று பொழுது ரெக்கை கட்டி பறக்க இப்பொழுது அவர்கள் வந்து நின்றது கல்லூரி காலத்துச் சேட்டைகளில்.
"இத விட பர்ஸ்ட் இயர்ல நியாபகம் இருக்கா கெமிஸ்ட்ரி லேப்ல ஒரு தடவ அந்த காலெண்டர் வாயன் (கெமிஸ்ட்ரி ப்ரோபஸ்ர்) ஒரு கெமிக்கல் காமிச்சு இத பாய்ஷன் தொடவே கூடாது ஒரு ரிசெர்ச்காக அவன் வச்சிருக்கேன்னு சொன்னான்" கார்த்தி தொடங்கினான்.
"மாப்பிள்ளை அதை மறக்க முடியுமா? அதை எடுத்து நாம சிவா வாய்க்குள்ள ஊத்தி, 'டேஸ்ட் எப்படி மாப்பிள்ளை இருக்குனு கேட்டோம்' இவனும்..." என்று கார்த்தி மேலும் கூற வர, அவனை இடைமறித்து சிவா,
"லெமன் ஜூஸா மச்சி? லெமன் இருக்கு ஆனா உப்பு போட மறந்துட்ட" அன்று கூறிய அதே வரியை இன்றும் கூறி தன்னுடைய சிரிப்பை அடக்கினான் சிவா.
"ஹாஹாஹா... அது பாய்ஷன்-னு சொன்னதும் போட்டான் பாரு மயக்கம். இப்ப வரைக்கும் மறக்க முடியல பங்கு..." தரைக்கும் சுவற்றிற்கும் விழுந்து விழுந்து சிரித்தான் ஹரி.
"என்னடா சொல்றிங்க விஷம் குடுத்தீங்களா?" ஜன்னல் வழியாக ஒரு குரல் வந்தது.
"அட இல்லண்ணே தண்ணில கொஞ்சம் கெமிக்கல் கலந்து கொடுத்தோம் இவனுக்கே தெரியாம. அன்னைக்கு தான் நாம தல படம் ரிலீஸ். பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோக்கு தான் போகல சரி மேட்னி ஷோக்கு போகலாம்னு தான் பிளான் பண்ணி இவன குடிக்க வச்சு அந்த வாத்தியார்கிட்ட சொன்னோம். அவன் என்னனா எங்களை விட்டுட்டு அவன் இவன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொல்லி நிக்கிறான். வேக வேகமா அவனோட கார் டயரை பஞ்சர் பண்ணிட்டு அப்டியே அந்த ஆள்கிட்ட மழுப்பிட்டு இவன தியேட்டர்ல பொய் தான் எழுப்புனோம்" என்றான் ஹரி சிரித்துக்கொண்டே.
"ஒரு படத்துக்கு இப்டி எல்லாமா பண்ணுவீங்க?" என்றான் நெடுஞ்சேரனின் அடியாள் வியப்பாக.
"அதே மாதிரி ஹோலி கொண்டாட்டம்னு ஒரு நாள் பொண்ணுங்க ஹாஸ்டல்ல ஒரே அலப்பறை. நாங்க சும்மா விடுவோமா தேடுனோம் ஹாஸ்டல் முழுக்க ஒண்ணுமே சிக்கலை. கடைசில ஒரு பெரிய மூட்டை வெள்ள கோலப்பொடி இருந்தது எடுத்துட்டு வந்து அடிச்சோம் பாருங்க அப்ப தான் தெரிஞ்சது அது பொடி இல்ல பிளீச்சிங் பவுடர்னு. அடுத்த ரெண்டு நாள் ஒரே அரிப்பு தான் எல்லாருக்கும்"
"அட பாவிகளா"
"அட போ ண்ணே எனக்கு அறிவு இருந்து அப்பயே சுதாரிச்சிருக்கணும். செகண்ட் இயர்ல டூர் கூட்டிட்டு போனாங்க கேரளாக்கு. போட்ல சவாரி போய்ட்டு இருந்தோம். அதோட ஆழம் என்னனு கேட்டுட்டு இருந்தாங்க எங்க வாத்தி எல்லாம். ஒரு நூறு, நூத்தி அம்பது அடி இருக்கும்னு சொல்லிட்டு இருந்தாரு அவர். ஒடனே இவன்" என்று ஹரியை காட்டிய கார்த்தி,
" 'மாப்பிள்ளை பாருடா கோல்ட் பிஷ்'-னு சொன்னான், நானும் ஆர்வத்துல பாக்காத திமிங்கலத்தை பாக்குற மாதிரி எட்டி பாத்தா பின்னாடி இருந்து கால தூக்கி விட்டான் பாருங்க அப்டியே டைவ் அடிச்சிட்டே போய்ட்டேங்க எவ்ளோ ஆழத்துக்கு போனேன்னு தெரியல. எனக்கு நீச்சல் தெரியாது கண்ண கஷ்டப்பட்டு தொறந்து பாத்தா ஒரே இருட்டு.
திடீர்னு நானே மேல வந்து நின்னேன். பாத்தா லைப் ஜாக்கெட் தான் என்ன இந்த கொலைகாரன்கிட்ட இருந்து காப்பாத்தி விட்ருக்கு. அடுத்து காலேஜ்க்கு ஒரு மாசம் அவுங்களே ரெண்டு பேருக்கும் லீவு குடுத்து அனுப்பிட்டாய்ங்க" தன்னுடைய சோக கதையை சிரித்துக்கொண்டே கூறினான்.
"அட கொலைகார பாசங்களா. நல்ல வேலை உங்ககூட நான் சீட்டு ஆட வரல இல்லனா என்ன கொன்னுருப்பிங்களே" தன்னை உள்ளே செல்ல வேண்டாம் என்று தன் பங்காளியிடம் கூறியவனிடம் மானசீகமாக நன்றியை தெரிவித்தான்.
"அண்ணே எங்களை பாத்தா அப்டியா தெரியுது? சும்மா உள்ள வா ண்ணே" சீண்ட ஆள் கிடைக்க மகிழ்ச்சியில் கார்த்தி அவரை உள்ளே அழைத்தான். அவரோ இவர்கள் இருக்கும் திசை பக்கம் கூட வர கூடாதென்று ஓடியேவிட்டார்.
அவன் சென்றதை உறுதி செய்த பின்னர், "டேய் இப்டியே தயவு செஞ்சு ஓவொருத்தனையா ஓட விடணும்" என்றான் கார்த்தி முணுமுணுப்பாய்.
"அது எப்பிடிடா கார்த்தி அறிவு இருக்குற மாதிரியே பேசி, எல்லா காரியத்தையும் சிங்கிள் பர்ஷன்ட் கூட மிஸ்டேக் இல்லாம செய்ற. நீ அமைதியா இருந்தா கூட அவன் பொலம்பிட்டு போயிருப்பான். போட்டான் பாரு ஒரு குண்டு 'நீங்க சொல்ற பொண்ணு இது தான்னு' மூட்டையை காட்டி" சதேகமாய் நண்பனை பார்த்து முறைதான் ப்ரேம்.
சொல்நிலையை மழுப்பும் விதமாக, "போறபோக்குல ஒரு சோசியல் சர்வீஸ், பாரு இதுலயும் ஒரு நல்ல விசியம் நாம கவனிச்சீங்களா நாம இப்டி எல்லாம் ஜாலியா மொபைல் இல்லாம, டிவி இல்லாம முக்கியமா இன்டர்நெட் இல்லாம பேசி சிரிச்சு விளையாண்டு எத்தனை வருஷம் ஆச்சு? இப்ப என்ன நம்மள கொன்னா போட்டுட்டாங்க?"
"அந்த எண்ணம் வேற இருக்கா?" என்றான் சிவா பாவமாக.
"இவன்கிட்ட பாத்தே இருடா பொண்ண கடத்திட்டு போய் சாட்சி கையெழுத்து போட சொல்றப்ப இவன் வேணும்னே மணமகன் இடத்துல கையெழுத்து போட்டுட்டு சாரி மச்சான்-னு சொல்லி ஏதாவது சமாளிப்பான்" அவனை மேலும் கீழும் சந்தேகமாய் பார்த்துக்கொண்டே கூறினான் ஹரி.
"மீ? யு ஆர் டவுட்டிங் மீ?" ஆச்சிரியமாக வாயை பிளந்து கேட்டான் கார்த்தி.
"நீ தான்டா சில்ற உண்டியல்" - அவன் தலையை அடித்து கூறினான் ஹரி.
"டேய் அதில்லடா..." திடீரென கதவு 'படார்' என்ற சத்தத்துடன் திறக்க அங்கு ஆசுவாசமாக நின்றிருந்தான் வெற்றி.
அவனை சாதாரணமாக பார்த்த ஹரி, "தம்பி சில்லுன்னு சர்பத் ஒன்னு கொண்டு வா. வெயில் அதிகமா இருக்கு"
"அப்ப இருந்து நானும் கள்ளு கள்ளுனு கேட்டுட்டேன் வர மாட்டிக்கிது, என்னனு போய் கேளு" என்றான் கார்த்தி அவனை வேண்டும் என்றே சீண்டும் பொருட்டு.
"டேய் எதுக்குடா மதுவ கடத்த வந்திங்க?" வேட்டியை மடித்து கட்டி தோரணையை கேட்டான் வெற்றி.
"தம்பி அந்த பொண்ண கடத்துறது எங்க பிளான்லயே இல்ல. ஏதோ நெனச்சு வந்தோம் ஏதோ நடந்துடுச்சு. ஆனா டா எங்க அப்பா எல்லாம் நாம பண்ணுன சொதப்பல் கதையை கேட்டா வயிர புடிச்சு புடிச்சு சிரிப்பாருடா" நண்பர்களிடம் கூறுவது போல் ஹரி ஓரக்கண்ணால் வெற்றியின் முகபாவனையைக் குறிப்பெடுத்து வைத்தான்.
"எங்க அம்மா நான் என்னமோ வீர தீர சாகசத்தை பண்ண மாதிரி பிள்ளைக்கு கண்ணு பட்ருக்கும்னு சுத்தி போடும். அதுக்காகவே போய் அம்மா கை வீங்கிருக்கா பாரு, கால் ஒல்லியாகிடுச்சா பாரு, முகம் கருத்துடுச்சா பாருன்னு போன ஒடனே ஒரு அலப்பறைய போற்றுவேன். அப்றம் கவனிக்கும் பாரு என் அம்மா... அப்டியே வேலை எல்லாம் விட்டுட்டு அங்கையே ஓசி சோறு ஒக்காந்த இடத்தை விட்டு எந்திரிக்காம சாப்புட தோணும்" கனவிலே மிதந்து உற்சாகமாய் கூறினான் கார்த்தி.
இயற்கையாகவே வெற்றிக்கு அதிக பொறுப்புகள் தந்தை தமையனைப் போல வந்தது. அதுவும் சுற்றி இருந்த நண்பர்கள் அனைவரும் சுற்றுலா, பப் எனக் கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்க வெற்றியை இறுதி ஓர் வயதிலே தமயன் பின்னால் சென்று அவன் தொடங்கிய தொழிலுக்கு உதவியாக இருக்கும்படியும், தந்தையின் அரசியல் வாழ்க்கைக்குத் தொண்டர்களுடன் இணைந்து கோர்ட், பொதுக் கூட்டம் என்று தன்னுடைய விருப்பு வெறுப்பைப் பார்க்காமல் பொறுப்பில் திணிக்கப்பட்டான்.
முதலில் ஆர்வத்தில் வேலைகளைச் செய்யத் துவங்கி இருந்தாலும் காலம் கடக்கக் கடக்க தன்னுடைய பாதை அதுவல்ல என்ற எண்ணம் மட்டுமே கால்கள் எடுக்கும் அடி ஒவ்வொன்றும் உச்சிப்பொட்டில் விழுந்த நீராய் உரைக்க, அடுத்த சவால்களில் மனமே இல்லாமல் வேலையிலும் முழு கவனத்தைச் செலுத்த முடியாமல் கைக்கு வந்த அனைத்தும் ஒரு வித சிக்கலில் சென்று முடிந்தது.
முதலில் அவனைப் பாராட்டிய தந்தை அவனுடைய தடுமாற்றத்தை உணர்ந்து தோள் தட்டி எடுத்துக் கூறி ஆதரிக்காமல் அவனுடைய தவறை மட்டுமே கூற வெறுத்தது அந்த வேலை முற்றிலுமாக. தாய் இருந்தாலாவது அவர் மடி சாய்ந்து ஆறுதல் தேடியிருப்பான். இயற்கையாகவே விளையாட்டும் குறும்பும் தன் குணமாய் கொண்டவன் இப்பொழுது வரை இழக்காத ஒரே ஒரு குணம் அந்த விளையாட்டுத் தனத்தை மட்டுமே.
"மதுவ கடத்த வரலைனா அப்ப யாரை கடத்த வந்திங்க?" மேலும் அவர்களுடன் பேச்சில் இணைய முற்பட்டான் வெற்றி.
"வேற யாரு உன் தங்கச்சிய தான்" பாய்ந்து வந்த வெற்றி கீழே அமர்ந்திருந்து தனக்குப் பதில் கூறிய கார்த்தி சட்டையைப் பிடித்து அப்படியே தூக்கினான்.
"என் தங்கச்சிய கடத்துறத என்கிட்டையே வந்து இவ்ளோ தைரியமா சொல்றியாடா பாடிசோடா?"
அவன் செயலில் ஆச்சிரியம் அடைந்தாலும் விரிந்த விழிகளுடன் வாயைப் பிளந்து அவனைப் பார்த்த கார்த்தி, தன்னை பற்றியிருந்த அவன் புஜத்தை ஒரு கையால் தொட்டுப் பார்த்து, "யோவ் எப்டியா இவ்ளோ சூப்பரா அர்ம்ஸ் வச்சிருக்க? ஜிம் போவியா?"
"கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுடா. உனக்கும் என் தங்கச்சிக்கு என்ன பழக்கம்?" கையில் சிக்கியவனைச் சிறிது பைத்தியமாக்க முடிவெடுத்து விட்டான் கார்த்தி.
"பழக்கம் எல்லாம் இல்லையா, தெரிஞ்சவங்க மூலியமா கொஞ்சம் பழக்கம் அவ்வளவு தான்"
"கொஞ்சம் பழக்கம் ஆனதுக்கே என் தங்கச்சிய லவ் பண்ணுற அளவுக்கு வந்துட்டியா?"
"இப்ப யாரு லவ் பண்றது? நான் லவ் எல்லாம் பண்ணல சும்மா வீட்டுல இருக்க போர் அடிச்சது, அப்றம் பாருங்க பிலைட்ல போகணும்னு சாக்கடைல விழுந்து எந்திரிச்சி வயசுல இருந்து ஆசை. அது தான் கெளம்பி வந்துட்டேன்" வந்த ஆத்திரத்தில் வெற்றி கார்த்தியின் கன்னத்தைப் பதம் பார்த்தான்.
தன் கன்னத்தைத் தொட்டுப் பார்த்து விழித்த கார்த்தி வெற்றியின் சட்டையைப் பிடித்து, "என்னடா ஆளாளுக்கு என்ன அடிக்கிறீங்க? அந்த கீழ ஒக்காந்துருக்கான் பாரு ஊதா சொக்கா சட்டை அவன் தான் உன் தங்கச்சிய லவ் பண்றது. அவன் சட்டையை புடிச்சு கேளுடா பேமானி" வெற்றியை ஒரு உதறு உதறி சட்டையைச் சரி செய்தான் கார்த்தி.
இவை அனைத்தையும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து பார்த்த நண்பர்களைப் பார்த்து முறைத்து சிவாவைக் காலிலே ஒரு அடி கொடுத்துத் தான் அமைதியானான் கார்த்தி.
அமைதியாக தன் அருகில் வந்தமர்ந்த கார்த்தியிடம் மெதுவாக ஹரி, "என்ன மாப்பிள்ளை உன் மேலையே ஒருத்தன் கை வச்சிட்டான் சும்மா விட்டுட்டு வந்து நிக்கிற?"
"சும்மா இருடா ரோடுல போற காதல் பரத் பேச்ச கூட கேப்பேன் ஆனா உன் பேச கேக்க மாட்டேன். அவன் ஆர்ம்ஸ் பாத்தியா சும்மா கிண்ணுனு நிக்கிது. நம்ம கை எல்லாம் தொட்டா ரெண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள போகுது. நம்ம வீரத்தை காமிக்கிற இடம் இது இல்ல. ரோடுல பேட் வச்சிட்டு விளையாடுவனுக்கல்ல பத்து வயசு பசங்க? அவனுக தான் நம்ம டார்கெட்"
"த்தூ" காரி துப்பி சிவாவின் மேல் பாய்த்திருந்த வெற்றியைக் கேளிக்கை கூத்தாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும். அவர்கள் சண்டையைப் பிரிக்க முயன்ற ப்ரேம் ஒரு கட்டத்தில் முடியாதென நகர்ந்துவிட்டான்.
"மச்சினனையே இந்த அடி அடிக்கிறான் நாளைக்கு பொண்டாட்டியை எப்படி அடிப்பான்..." சும்மா இருந்த ஓணானை எடுத்து சிவாவின் சட்டைக்குள் போட்டான் கார்த்தி. அதைக் கேட்ட வெற்றி, சிவா இருவரும் உரைத்து நின்றனர்.
"சாரி மச்சான் மன்னிச்சிடுங்க அவன் சும்மா ஒளறுறான்..." சிவா அப்படியே வெற்றி பக்கம் விழுந்தான்.
"முடியாது டா உனக்கு என் தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுக்க முடியாது" வெற்றி தண்ணீரில் விழுந்த காகமாகச் சிலிர்த்து நின்றான்.
"மச்சான் அந்த பொண்ண நான் உனக்கு எப்படியாவது தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" வணிகரீதியாகப் பேசத் துவங்கினான் சிவா.
"யாருடா யாருக்கு மச்சான்? எனக்கு ஒன்னும் உன் தயவு தேவையில்லை, எனக்கு கல்யாணம் பண்ற வேலைய என் அண்ணனுக்கும் அபர்ணாவுக்கும் கல்யாணம் நடந்ததும் எனக்கும் மதுவுக்கும் கல்யாணம் பண்ணி வக்கிறேன்னு என் மாமா எனக்கு வாக்கு குடுத்துருக்காரு" வீராப்பு விருபாண்டி மீசையை முறுக்கி சிவாவைத் துச்சமாகப் பார்த்தான் வெற்றி.
"ஒரு வேலை உன் மாமா மூத்த பொண்ணு வேற ஒரு பையன லவ் பண்ணிட்டு அவன் கூட ஓடி போயிடுச்சுனா?" மச்சினன் சண்டையில் சுகமாக சிரித்துக்கொண்டே நுழைந்தான் ஹரி.
அவனை நெற்றி சுருங்க பார்த்த வெற்றி, "ஏலேய் கிராக் விழுந்த சோபா அவ எதுக்குடா என் அண்ணனை விட்டுட்டு வேற ஒருத்தன வேற ஒருத்தன் பின்னாடி போகணும்?"
"டேய் செதில வெட்டுனா மீனு மாதிரி துள்ளாதடா, உன் மாமன் மக வேற ஒரு பையன லவ் பண்றா அத நானே என் கண்ணால பாத்தேன்"
ஒரு நிமிடம் நின்று யோசித்த வெற்றி, "அது எங்க குடும்ப விசியம், சம்மந்தமே இல்லாம அத நீங்க பேச தேவையில்லை" பேச்சை வெட்ட நினைத்தான்.
ஆனால் ஹரியோ மேலும் மேலும் அவனைச் சிக்கலில் தள்ள முடிவெடுத்து, "இப்ப கூட நாங்க உனக்காக மட்டும் தான் பேசுறோம் வெட்டி சார். ஒன்னு எப்டியும் அந்த பொண்ணு அதோட லவ் பத்தி உங்க வீட்டுல சொல்ல பயந்து சொல்லாது. ரெண்டு உங்க வீட்டுல சொன்னாலும் கண்டிப்பா அந்த பையன் வேணாம்-னு உன் அண்ணனை தான் கல்யாணம் பண்ணனும்னு கம்பெல் பண்ணுவாங்க. இந்த ரெண்டுல எது நடந்தாலும் அந்த பொண்ணு எப்டியும் ஓடி போகும் அது அந்த பொண்ணு சும்மா இருந்தாலும் உங்க வீட்டு பெத்த பெத்த பணத்துக்காகவே பசங்க விட மாட்டாங்க. இப்ப சொல்லு நாளைக்கு உன் அண்ணன் கல்யாணம் மணமேடை வரைக்கும் வந்து நின்னுச்சுனா உன் அப்பா என்ன பண்ணுவாரு?"
ஹரியை நர நர எனப் பற்களை கடித்துக்கொண்டே யோசித்துக்கொண்டிருந்தான் வெற்றி. "பொண்ணு லவ் பண்ற விசியம் உன் அப்பாக்கு தெரியும் அதுக்கு தான் இந்த சின்ன ஊருல கல்யாணம்"
"என் தங்கச்சி எல்லாம் இவன லவ் பன்னிருக்க மாட்டா" ஆணித்தரமாக எதிர்த்தான்.
"யார்ரா இவன், ரோபோ ஷங்கர் மாதிரி 'அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்...'-னு திரும்ப திரும்ப அங்கையே வந்து நிக்கிறான். அவன் என்ன தான் சொல்ல வர்றான்னு சொல்லி முடிக்கட்டும் அப்றம் நீயே முடிவு பண்ணு" பொறுமையாய் இருந்த ப்ரேம் வெற்றியின் கோவத்தில் இடையில் வந்தான், ஹரி ஏதோ மார்க்கத்தைக் கண்டுகொண்டான் என்று.
வெற்றி அமைதியாக இருக்க மேலும் தொடர்ந்தான் ஹரி, "உன் அண்ணன் கல்யாணம் எப்படியும் மொத்த தமிழ்நாடும் பாக்குற மாதிரி தான் பண்ணுவாரு சோ கல்யாணம் நினைக்க விடுவாரா? நிச்சியம் விட மாட்டாரு. அந்த இந்தான்னு உன் மாமா மேல பழியை தூக்கி போட்டு ரெண்டாவது பொண்ண கல்யாணம் பண்ண வச்சிடுவாரு. இப்ப சொல்லு சேதாரம் எங்க ஆகும்? உன் அப்பா சும்மாவே உனக்கு மரியாதை குடுக்க மாட்டிக்கிறாரு இதுல உன் ஆசையா சொன்னா மட்டும் அந்த இடத்துல விட்டுடுவாரா? சொல்ல வேண்டியது இவ்ளோ தான்.
இந்த இடத்துல இருந்து நீ எங்களை வெளிய விட்டாலும் சரி விடலானாலும் சரி எங்களுக்கு வெளிய போக அஞ்சே நிமிஷம் தான் ஆகும். ஆனா உனக்காக ஏதோ என் ஃப்ரன்ட் மச்சான் ரொம்ப அப்பாவியா இருக்கானே-னு ஹெல்ப் பண்ண வெயிட் பண்றோம்"
நீண்ட சொற்பொழிவில் தொண்டை அடைக்க கார்த்தி அருகில் வந்தமர்ந்து, "பெர்பாமன்ஸ் பண்ணிட்டு வந்துருக்கேன் ஒரு கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி வைக்கிறது இல்ல? என்ன செயலாளர் இது?" நெடித்துக்கொண்டான் ஹரி.
"கக்கூஸ் போகணும்னு சொன்னதுக்கே ரூம்ல ஒரு மூலைல போன்னு சொல்லிட்டு போய்ட்டானுக. இதுல கூல் ட்ரிங்க்ஸ் போய் கேட்டா செருப்பாலேயே அடிப்பான். மூடிட்டு அடுத்த சீன் பாரு இல்லனா மிஸ்ஸாகிடும்" ஹரியை முறைத்துக்கொண்டு கூறினான் கார்த்தி.
"ஆனா ஹரி எந்த நம்பிக்கைல நம்மள அவன் நம்புறேன்?" சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டான் கார்த்தி.
"உனக்கு இருக்க அறிவு கூட அவனுக்கு இல்ல மாப்பிள்ளை... பாவம்"
"இப்ப நான் என்ன பண்ணனும்?" வேறு வழியே இல்லாமல் இயலாமையில் அவர்களுடன் சமாதானம் ஆக நினைத்தான் வெற்றி.
"தண்ணி தவிக்கிது, மூச்சா வேற அப்ப இருந்து முட்டிகிட்டு இருக்கு... சொல்லு நாங்க என்ன பண்ணட்டும்?" - கார்த்தி.
அவனைப் பார்த்து முறைத்த வெற்றி, "டேய் கொஞ்சம் இறங்கி வரேன்னு ரொம்ப துள்ளாதீங்க. அஞ்சே நிமிஷம் உங்கள பாத்துருந்தாலும் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன் உங்கள பத்தி"
"யோவ் நாங்க தண்ணி கேட்டோம் கக்கூஸ் போகணும்னு சொன்னோம். அவ்ளோ தான? என்னமோ தண்ணி எடுத்து கழுவி விட சொன்ன மாதிரி..."
கார்த்தி பேசியதை வெட்டிய வெற்றி, "டேய்..." சீறினான்.
"வாயில தண்ணி ஊத்தி வாய கழுவி விடுவியான்னு கேக்க வந்தேண்டா மச்சான்" உன்னை பத்தி எனக்கு தெரியும் பங்கு என்ற பார்வை தான் மற்ற நண்பர்களிடமிருந்து வந்தது.
"பாம்பாட்டி டேய்... ஓங்கி ஒரு குத்து குத்துனேன்னு வை மண்ணுக்குள்ளே அப்டியே போய்டுவ" எழுந்து நின்ற கார்த்தி வெற்றி தோளில் கை போட்டு அவனை இழுத்து ஹரிக்கும் தனக்கும் இடையில் அமர்த்தி பிரேமிடம் கண்ணடித்து தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையைச் செய்யுமாறு கூறினான்.
"யாருக்கு யாருடா மச்சான்? இவனையே எந்த கெணத்துக்குள்ள தள்ளி விடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் இதுல புதுசா உறவு கொண்டாட வந்துட்டானுக" சிவாவை முறைத்துக்கொண்டு பதிலளித்தான் வெற்றி.
"அப்டிலாம் சொல்ல கூடாது. என்னைக்கு சிவா யமுனாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டானோ அப்படியே நீங்க எங்க மச்சான் போஸ்ட்க்கு ப்ரமோட் ஆகிட்டீங்க என்னடா பாத்துட்டு இருக்க? வந்து விசுறு மேன்" அந்த நான்கு சுவர்களுக்கு ராஜாவை போலே உணர்ந்தான் போலும். தோரணையாய் சிவாவிடம் ஆணையிட்டான் கார்த்தி.
"யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராமையா போகும்?" முணுமுணுத்துக்கொண்டே ஏதேனும் நாளிதழாவது ஒன்று கிடைக்குமா என்று தேட எதுவுமே இல்லை அங்கே.
"நியூஸ்பேப்பர் எதுவுமில்லடா கைய வச்சு விசிறிக்கோ நீயே"
"பாத்தியா மச்சான் வாங்குறது வெறும் அம்பத்தி மூணாயிரம் ருபாய் சம்பளம் தான். இதுல எங்க எ.சி, கார், பங்களானு வளர்ந்த உன் தங்கச்சிக்கு இவன் சோறு போடுவான். கண்டிப்பா எ.சி கூட வாங்கி மாட்ட மாட்டான், வெறும் அந்த பேன் மட்டும் போதுமா? பக்கத்துலயே ஒக்காந்து விசுற வேணாம்? நாங்க காலேஜ் படிக்கிறப்ப வெளிய போனா கைல ஒரு ருபாய் இருந்தாலும் குடுத்துடுவோம் ஆனா இவன் பிச்சை எடுக்குற நிலைமை வந்தாலும் அமுக்குணி மாங்கா மாதிரி அமைதியா இருப்பான்"
"அவ்ளோ சேத்து வச்சு என்ன பண்றது ம்ம்ம்ம்... இது வரைக்கும் இவனுக்கு-னு ஒரு கார் கூட இல்ல. ஆனா ஒன்னு மச்சான் யமுனாவை கண்டிப்பா நல்ல பஸ் பாத்து தான் கூட்டிட்டு வருவான்" கார்த்தியோடு இணைந்து கொண்டான் ஹரி.
"அடுத்தவனோட ஆசையெல்லாம் எரிச்சு அதுல எப்படி தான் குளிர் காயிறானுகளோ. போதும் நிறுத்துங்கடா முட்டா பயலுகளா. கிச்சா னாலே இளிச்ச வாயன் தான? என்ன நான் சட்டையை கழட்டி வீசுறாவா?"
இரண்டு பட்டன்களை சிவா அவிழ்த்திருக்க, "ஒரு நாள் முழுசும் கக்கூஸ் குள்ள இருந்த அந்த சட்டையை வச்சு உன் மச்சானுக்கு விசிறி விடுவியா?"
"நான் என்ன பண்ண காலைல சாப்பிட நாட்டுக்கோழியும், இங்க சாப்பிட மாம்பழமும் சேந்து வேலைய காட்டிடுச்சு போல"- சிவா
"ஏலேய் இப்ப நான் எனக்கு காத்து வேணும்-னு சொன்னேனா?" - வெற்றி.
"நீங்க சொல்லல உங்க நெத்தில இருந்து வழிஞ்சு ஓடுற வேர்வை சொல்லுதே எ.சி லேயே வளைந்த ஒடம்பு... சரி உங்க பாக்கெட்ல ஏதாவது பேப்பர் இருந்தா எடுங்க விசிறி விடட்டும் அவன்" வெற்றியை எடுக்கக் கூறினாலும் கார்த்தியே அந்த வேலையையும் தன் கையில் எடுத்துக்கொண்டான், வெற்றியின் சட்டை பாக்கெட்டில் கை விட்டு ஒரே முறையில் அனைத்தையும் எடுத்திருந்தான் வெற்றி சுதாரிக்கும் முன்.
"டேய் அதெல்லாம் முக்கியமான பேப்பர்ஸ் குடுடா" தங்களுக்கு நேர் நின்ற ப்ரேமின் கையில் மொத்தத்தையும் கொடுத்தான் ஹரி. அதிலிருந்த ஒவ்வொரு காகிதத்தையும் பிரித்துப் பார்த்த பிரேம் இறுதியாக ஒரு காகிதத்தைச் சிவாவிடம் கொடுத்து கட்டிலில் சென்று அமர்ந்துகொண்டான்.
அந்த இடைவெளியில் கார்த்தி, "ஏன் மச்சான் உன் ஊர்ல இந்த நொங்கு ஓடு இருக்குதுல அது ரெண்டு வச்சு நடுல ஒரு குச்சி வச்சிட்டே வண்டி ஓட்டுவாங்கல்ல அந்த வண்டி இங்க கிடைக்குமா?"
"ஏன் கேக்குற?"
"இல்ல அத சின்ன வயசுல இருந்தே வச்சு ஓட்டணும்னு ஆசை" - கார்த்தி.
"அதென்ன ரெடி மேட் வண்டியா நீ கேட்ட ஒடனே கிடைக்க அதுக்கெல்லாம் எவனாவது நொங்கு ஓடைகிறவன் அத தூக்கி ஒடச்சு போட்டதும் எடுத்துட்டு வந்து அதுக்கு ஏத்த மாதிரி குச்சி தேடி சரியா அந்த ஓடுல சிக்க வச்சு ஓட்டணும். பட் டோன்ட் ஒர்ரி நான் இருக்கேன்ல செஞ்சு தர்றேன். போன வருஷம் கூட செஞ்சு ஓட்டுனேன்யா... கார் என்ன பைக் என்ன இது தான் வண்டி. என்ன அடிக்கடி கழண்டுக்கும்" இவர்களுடன் தான் ஐக்கியமானதை முற்றிலும் மறந்து பேசினான் வெற்றி.
"அது பரவால்ல ஆனா எங்களுக்கு நாலு வண்டி வேணும். ஆளுக்கு ஒன்னு ஒன்னு" - ஹரி
"அதெல்லாம் பாத்துக்கலாம். சரி அடுத்து என்ன பிளான் அத சொல்லுங்கையா" - வெற்றி
'காரியத்துலையே கண்ணா இருக்கான் பாரு சாவு கிராக்கி ஆனா ஒரு இளநி சொல்ல மாட்டிக்கிறான் இருடி உன்ன கதற வைக்கிறேன்' என்று அவனை முறைத்த கார்த்தி, "ஒரு இளநி சொல்லுங்களேன் குடிச்சிட்டே பேசலாம்"
இவர்கள் இதை நிச்சயம் விட மாட்டார்கள் என்று நன்கு இளநீரை வெட்டி கொடுத்து அவர்கள் பதிலுக்காகக் காத்திருந்தான். தண்ணீரையே பார்க்காத காட்டு யானை போல் வைத்திருந்த ஸ்ட்ராவை தூக்கிப் போட்டு அப்படியே வாயில் கவுத்தி முப்பது வினாடியில் காளியும் செய்திருந்தான் கார்த்தி.
"சோத்துக்கு செத்தவன் மாதிரி திங்க கூடாது" எரிச்சலாகக் கூறினான் ப்ரேம்.
"பூமர் அங்கிள்.... பூமர் அங்கிள் இன்னும் ஒரே நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள கைல இருக்க இளநிய குடிச்சிடு இல்லனா சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை" கார்த்தியைப் போலக் குடித்த ஹரியும் அவனுடன் இணைந்துகொண்டான்.
"சோதிக்காதிங்கடா என்ன பிளான் சொல்லுங்க" பொறுமை காற்றில் முக்கால்வாசி அவனுக்குப் பறந்திருந்தது.
"வேற என்ன எப்படியாவது சமந்தா ஸ்லேவா (Slave) மாறிடணும்" படு சீரியஸாக பேசினர் ஹரியும் கார்த்தியும் ஒரே நேரத்தில் மணி அடித்தது போல்.
'பொத்' சத்தம் வந்த திசை திரும்பிப் பார்க்க அங்குச் சிவா கையிலிருந்த இளநீரை அப்படியே தரையில் போட்டு, "எனக்கு கல்யாணமே வேணாம்டா காலம் முழுக்க சன்யாசியாவே இருந்துக்குறேன். நீங்களும் உங்க பிளான் மயிரும் மயிறு மாதிரியே இருக்கு" கொந்தளித்துவிட்டான் சிவா இவர்களின் பேச்சில்.
"சாக்கடைல ஓடும் தண்ணி என் ஃப்ரன்ட் ஒரு பன்னி... பாத்தியா மச்சான் எப்படி பேசுறான் பாரு இந்த பச்சை சட்டை, ஊதா பாண்ட் போட்ட ராமராஜன் உன் தங்கச்சிக்கு தேவ தானா?" எரியும் நெருப்பில் எண்ணெய்யை மட்டுமல்லாது நெய்யையும் இணைந்து ஊற்றி ஹோமத்தை அற்புதமாக வளர்த்தான் கார்த்தி.
"டேய் சனி வாயனே இது ஜீன்ஸ் பாண்ட்டா. எனக்கு நீங்க என் கல்யாணத்தை நடத்த வந்த மாதிரி தெரியல, நிறுத்த வந்த 'மௌனம் பேசியதே' சகுனி மாதிரி தான் இருக்கு"
"கண்டு புடிச்சிட்டான் பங்கு" மெதுவாக கார்த்தி காதில் சொல்லி சிரித்தான் ஹரி.
"கார்த்தி கொஞ்சமாவது சீரியசா தான் இரேண்டா. அவன் வாழ்க்கைடா இது அடுத்த என்ன பண்ண போறோம்னு கேட்டா நீங்க சமந்தாக்கு அடிமை ஆகுற கதையை சொல்றிங்க. இந்த ஹரியை நம்பி வந்ததுக்கு அவன் வாய்க்கு மிச்சர் அரசிட்டே இருக்கான்" இவர்கள் அலப்பறையை அவனால் தாங்க முடியாமல் கத்திவிட்டான் ப்ரேம் அவர்களும் வேறு வழியே இல்லாமல் சிரிப்பை அடக்கி அமைதியாகிவிட்டனர்.
"வெற்றி உன் தங்கச்சிய எப்படியாவது ஊருக்கு வெளிய கூட்டிட்டு வர முடியுமா?"
சிறிது நேரம் யோசித்த வெற்றி, "வாய்ப்பு ரொம்ப கம்மி. என்ன நம்பி என் அப்பா ஒன்னும் பண்ண விட மாட்டாரு அதுவும் யமுனா விசியம் கஷ்டம் தான். யமுனா எங்க போனாலும் என் மூத்த அண்ணே அன்பு இல்லாம அப்பா அனுப்ப மாட்டாரு"
"உன் நைனா பெரிய லம்பாடியா தான் இருப்பாரு போல மச்சான். பேசாம அந்த ஆள சாக்கு போட்டு மூடி ஒரு முட்டு சந்துல தள்ளிவிட்டு கும்முகும்முனு கும்மி அடிச்சிடலாமா?" மூட்டையைத் தேட துவங்கியது கார்த்தியின் கண்கள் தன் சொற்களைச் செயலாக்க.
"வேற மாறி வேற மாறி..." உசுப்பேற்ற அருகிலே ஒரு குரல் ஹரியுடையது.
"ஏங்க பேசாம உங்க அண்ணாகிட்ட எடுத்துச்சொல்லி உங்க தங்கச்சிய காப்பாத்தலாம்" வெற்றியிடம் தன யோசனையைக் கூறினான் ப்ரேம்.
"அங்க தான் தப்பு பண்றீங்க. அவன் அப்பன் பேச தட்டாத பையன். தம்பி போய் கிணத்துல விழுப்பானு சொன்னா கூட அடுத்த நிமிஷம் உள்ள யோசிக்காம குதிப்பான் அவனை நம்புறது சுத்த மடத்தனம். இப்ப யமுனா லவ் பண்ற விசியம் அவனுக்கு தெரியாம இருக்கும்னு நனைக்கிறிங்களா? கண்டிப்பா தெரியும் இந்த செக்யூரிட்டி, அடி ஆளுங்க எல்லாமே அவனோட ஏற்பாடு தான். அவன் கோவக்காரன் வேற ஒரே போடு தான் முண்டமா தான் இருக்கனும். அவனை மீறி என்னால யாமுனகிட்டே கூட பேச முடியல"
தாடையிலிருந்த தாடியைத் தடவிக்கொண்டே யோசித்தான் வெற்றி. "வாழ்க்கை இப்டியே போய்டுமா சார்?" வருத்தம் இழையோடிய குரலில் சிவா புலம்பினான்.
"இப்டி தான் போகும் முடிஞ்சா வாழு இல்லனா தூக்கு மாட்டிட்டு சாவுடா பன்னாடை - அப்டினு கடவுள் சொல்லுவாரு மாப்பிள்ளை நான் இல்ல"
"ஹரி பீ சீரியஸ்"
மூச்சை இழுத்துவிட்டு வெற்றியைப் பார்த்துத் திரும்பிய ஹரி, "உன் ஆளுங்கள எப்படியாவது நைட் சாப்பாடுக்கு இங்க இல்லாம பாத்துக்கோ. அது போதும் எங்களுக்கு"
"டேய் வெட்டுக்கிளி வாயா ஏண்டா பாதி சொல்லி பாதி முழுங்குற?" ஒரு வேலையாவது உருப்படியாகச் செய்கிறானா என்ற கோவம் எல்லாம் கார்த்திக்கு இல்லை மாறாக அவன் என்ன திட்டம் வகுத்துள்ளான் என்று தெரிந்தாக வேண்டிய கட்டாயம்.
"இங்க இருந்து தப்பிச்சு மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள தான் போகணும். நைட் நேரம் கண்டிப்பா அந்த நெடுமரம் ஆளுங்கள சேத்து தான் போட்ருப்பான் போனோம் அடுத்த நாள் பந்தல் போட மேடை கட்ட எல்லாம் நம்மளோட குடலை வச்சு தான் காட்டுவாய்ங்க. சோ முதல இங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டு தான் அடுத்த பிளான். மச்சான் ஏதாவது பண்ணிடு" வெற்றியிடம் வந்து முடித்தான்.
"அத நான் பிளான் போடறேன். ரெடியா இருங்க" வேட்டியை மடித்துக்கட்டி சட்டை காலரைத் தூக்கிவிட்டு விறைப்பாக அவ்விடத்தை விட்டு அகன்றான்.
"இவன் போற தினுச பாத்தா எனக்கு என்னமோ சரியா படல மாப்பிள்ளை. பாரு ஏதாவது வேலை பாக்காம மட்டும் இருக்கட்டும் பாம்பை எடுத்து ஜட்டிக்குள்ள போட்டுவிட்றேன்" ஆவேசமாக கார்த்தி திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.
"பாம்புனு சொல்றப்ப உன் கால் நடுங்காம சொல்லி பழகு அதுக்கு அப்றம் அத புடிக்கிறத பத்தி பேசலாம்டா அழுகிப்போன முட்டைகோசு. மாப்பிள்ளை வயிறு காலைல இருந்து சேவலை விட மோசமா கூவிட்டே இருக்கு. ஏதாவது பாத்து பேசி வாங்கி தா மாப்பிள்ளை இல்லனா உன் பாணில ஏதாவது உளறி பழைய சோறு மட்டும் கூட போதும்"
சிறிது நேரத்திற்குப் பிறகு உறங்கிக்கொண்டிருந்த கார்த்தி வேகமாக எழுந்து ஓடி கதவின் அருகே மூக்கை எடுத்துச் சென்ற கார்த்தி கதவையும் ஜன்னலையும் மாறி மாறி மோப்ப நாயைப் போல் மாறி மாறி மோப்பம் பிடிக்க அவனை ஜந்துவைப் போல் பார்த்தனர் மற்ற மூவரும்.
"என்னடா அவனுகளுக்கு சோறு வந்தது உனக்கு தெரிஞ்சு போச்சா?"
சந்திரமுகியைப் போலச் சட்டெனத் திரும்பி அக்னி பார்வை பார்த்தவன், "சாதாரண சோறு இல்லடா. அவிங்க பிரியாணி சாப்புட போறானுகடா அதுவும் சிக்கன் பிரியாணி விட மாட்டாண்டா இந்த கார்த்தி" சட்டையின் ஸ்லீவ்ஸை மடித்துக்கொண்டே வேகமாகச் சென்று அந்த மரக் கதவை தன் பலம் கொண்டு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை தட்டினான்.
கதவை அவன் தட்டிய வேகமும் ஒலியும் வெளியிலிருந்தவர்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனை போல தோன்ற வேகமாக சென்று ஒருவன் சிறு பயத்துடன் கதவை திறந்தான். கதவைத் திறந்தது தான் தாமதம், தனக்கு எதிரில் நின்றவனை ஒரே தள்ளில் தள்ளிவிட்டு வாசனை வந்த பக்கம் செல்லவிருந்தவனைக் கதவைத் திறந்த அதே நபர் பிடித்து நிறுத்தினான்.
ஏதோ வேகத்தில் அப்பொழுது தள்ளிவிட்டு விட்டான் ஆனால் இப்பொழுது தான் அவனைப் பார்க்கிறான். நல்ல கட்டுமஸ்தான உடல் கார்த்தியை விட இன்னும் ஒரு மடங்கு இருப்பான் நிச்சயம். வெறும் வெள்ளை பனியன் மட்டுமே அணிந்திருந்தான், அடர் கரு நிறம் இருட்டையும் அவனையும் பிரித்த காட்டத் தவறியது ஆனால் சற்று சிவந்த கண்கள் அவன் கோவத்தைக் காட்டியது.
"எதுக்குடா இப்ப என்ன தள்ளிவிட்டது போன?" பேச்சில் அவன் கவனம் இருந்தாலும் கார்த்தியின் சட்டையைக் கெட்டியாகப் பிடிக்கவும் தவறவில்லை.
"நான் எப்டிண்ணே உன்ன தள்ள முடியும்?"
அவன் காதை பிடித்துத் திருகிய அந்த அடியாள், "தள்ளுனியே சரி சொல்லு எதுக்கு கதவை அப்டி தட்டுன?" என்ன கூறுவதென்று தெரியாமல் கார்த்தி முழிக்க அந்த அடியாள் பின்னாலிருந்து மற்ற அடியாட்களும் வந்தனர் அந்த நேரம். ஆறு ஆண்கள் இருப்பர்.
அவர்களுக்குப் நடுவே இருந்த வீட்டின் ஜன்னல் வழி ஹரி எட்டிப் பார்த்து நின்றான், 'பசிக்கிது' என்று சைகை செய்துகொண்டே.
"அண்ணே போர் அடிக்கிது பப்ஜி வெளையாடனும் எங்க போன் தா"
"முடியாது உள்ள போ" கார்த்தியின் சட்டையைப் பிடித்தே ஆடை இழுத்துச் செல்வது போல் தர தரவென இழுத்துச் செல்ல அருகிலிருந்த ஒரு போஸ்ட் கம்பியைப் பிடித்து பிடிவாதமாக நின்றான் கார்த்தி.
"நோவ் விடு ண்ணா"
திமிறித் திமிறி தன்னை மீட்டுக்கொண்டவன் அந்த கம்பை கட்டிப்பிடித்துக்கொண்டு, "என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க? ஆஹ்? நாங்க நேத்து நைட் கூட பப்ஜி வெளையாடலை எல்லாம் எதுக்கு? எல்லாம் உங்களுக்காக தான். அது பாத்துட்டே இருந்தா எங்க மூளை வேலை செய்யாம போயிருக்கும். நல்ல வேலை அது வேலை செஞ்சது.
அதுனால தான் இன்னைக்கு வந்து உங்க வீட்டுல வந்து ஒரே ஒரு சோம்பு தாண்ணே திருட வந்தோம். அதுக்கு உன் பாஸ் எங்களை இங்க வந்து போட்டுட்டான். இப்ப நாங்க இங்க வந்தனால தான உனக்கு இப்டியே தென்னை மரம் காத்துல ஜாலியா இருக்க முடிஞ்சது சொல்லு. இப்ப சொல்லு. நாங்க இதெல்லாம் பண்ணுனது யாருக்காக உனக்காக தான? இல்லனா அங்க நாய் மாதிரி நீ வேலை பாத்துருக்கணும். இவ்ளோ பண்ணுன எங்களுக்கு நீ என்ன பண்ண? விட்டுட்டு பிரியாணி சாப்புட போற. இதெல்லாம் எந்த ஊருல நியாயம்?"
கார்த்தி உளறி அனைத்தையும் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த ப்ரேம் தலையில் கை வைத்து, "நாளைக்கு இங்க இருக்குற எல்லா தென்னை மரத்துக்கும் இவனோட சாம்பல் தாண்டா உரம். வாங்க எல்லாரும் அவனைக் கடைசியா பாத்துக்கலாம்" ஜன்னல் பக்கம் நடந்தான்.
எட்டிப் பார்த்தால் இவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அடியாட்கள் கார்த்தியை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தனர் கைகளை மார்பின் குறுக்கே கட்டி.
"காலைல சாப்டது அதுக்கு அப்றம் ஏதாவது தந்தியா நீ சாப்புட? நாங்க பாவம் தான? நாலு கொழந்தைகளை இப்டி எல்லாம் கொடும படுத்தினோம்ன்னு நாளைக்கு நீ பீல் பன்னிற கூடாது அதுக்காக தான் இதெல்லாம். சரி பிரியாணி எங்க இருக்கு சொல்லு பேசி பேசி தொண்டை எல்லாம் வரண்டுருச்சு. கூடவே ஒரு 7up இருக்குல்ல? ஏனா அசிடிட்டி, ஜீரண பிரச்சனை எல்லாம் இருந்தா பட்டுனு சரியாகிடும். ஓ பின்னாடி இருக்கா?"
"எதுக்குயா இவன் பேசுறத கேட்டுட்டு இருக்க? தூக்கி உள்ள போட்டுட்டு வா" என்றான் வேறொருவன்.
சுதாரித்து தன்னை பிடித்திருந்தவன் இடுப்பிலிருந்த ஒரு சிறு கத்தியை வேகமாக எடுத்து அந்த தடியனைப் பிரியாணியை நினைத்து ஒரே தள்ளில் மீண்டும் தள்ளிவிட்டு ஜன்னல் வழியாக ஹரி கையில் அந்த கத்தியைப் போட்டுவிட்டான், "மச்சி சிவா கழுத்துல வைடாஆஆஆஆ..." என்று கத்திவிட்டு தரையில் விழுந்தான் கார்த்தி. அவன் திட்டத்தைக் கற்பூரமாகப் பற்றிய ஹரி அடுத்த நொடி சிவா கழுத்தில் அந்த கத்தியை வைத்தான்.
"யோவ் பிரியாணி மொத்தமும் உள்ள அனுப்பி விட்ருங்க இல்லனா இவன போட்டு தள்ளிடுவேன்" நொடியில் நிகழ்ந்தேறிய இந்த சம்பவத்தை அங்கிருந்த அடியாட்கள் துளியும் எதிர் பார்க்கவில்லை.
"டேய் இப்ப தானடா இளநி குடிச்சீங்க?" கார்த்தியின் கழுத்தைப் பிடித்து நெரித்த ஒருவன் கேட்டான்.
"அண்ணே ரெண்டு தடவ மூச்சா போனா உள்ள வந்த தடயமே தெரியாம போய்டும். ஹரி கத்திய இன்னும் கொஞ்சம் ஆழமா உள்ள எறக்கு"
"என்னடா பூச்சாண்டி காட்டுறிங்களா பிரியாணிக்காக கூட இருக்கவனையே கொல்லுவானாம் இத நாம நம்பணுமாம்"
ஒருவன் கூற, காலையிலிருந்து இவர்கள் கல்லூரியில் செய்த அட்டகாசங்களைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவன், "இவனுகள பத்தி உனக்கு தெரியல. படத்துக்காகவே விஷத்தை குடுத்தவிங்க, பிரியாணிக்காக செஞ்சாலும் செய்வாய்ங்க. பிரியாணி தானடா குடுத்துடலாம். நாம வேற வர வச்சுக்கலாம். மதியம் வேற சாப்புட எதுவுமே குடுக்கல விடுயா அவனுகளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நம்ம தலை தான் உருளும்" அவனே சென்று ஒரு பெரிய பொட்டலத்தை கொடுக்க அதைப் பிடுங்கிக் கொண்டு அதே வீட்டிற்குள் ஓடினான் கார்த்தி.
உள்ளே வந்தவன் அவர்கள் உள்ளே வராமலிருக்க உள்ளிருந்து தாழ்ப்பாள் போட்டு இருந்த ஐந்து பொட்டலத்தைச் சரி சரி சமமாகப் பிரித்து வைத்து தலை தூக்கினான்.
"சிவானாலே இளிச்ச வாயன் தானடா உங்களுக்கு எல்லாம். பிரியாணிக்காக என் கழுத்துல கத்திய வக்கிர அளவு வந்துட்டீங்களேடா" கண்ணை கசக்கிக்கொண்டே பிரியாணியிடம் தஞ்சம் புகுந்தான் சிவா.
"இதே ஆர்வத்தை நாம வெளிய போகுறதுக்கு காட்டிருந்தா நேரம் காலம் மிச்சம். சோத்து மூட்டை நீ சாகுறப்ப உன் டெட்பாடி கூட ஒரு மூட்டை பிரியாணி வச்சி விடுறேண்டா"
ப்ரேம் கோவமாகக் கூற அவன் பங்கிலிருந்த ஒரு பெரிய கோழி லெக் பீஸை எடுத்துக்கொண்டவன், "சாகுறப்ப அத வச்சு நான் என்ன பண்ண? அந்த ஒரு மூட்டையை நான் உயிரோட இருக்குற வரைக்கும் இப்டியே எடுத்து எடுத்து கழிச்சிக்கிறேன்" என்று வேறு பக்கம் திரும்பி உன்ன துவங்கினான்.
ப்ரேம் ஹரியைப் பார்க்க அவன் பாதி உணவை முடித்திருந்தான், ப்ரேம் பார்வை தன் இலையிலிருக்கும் பீஸில் விழ அவனும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். ஒரு வழியாக இரவு உணவை அவர்கள் முடிக்க உண்ட மயக்கத்தில் உறக்கம் கட்டுப்படுத்த இயலாது வந்தது.
"மாப்பிள்ளை வெற்றி வந்து இவனுகள ஏதாவது பண்ணுவான் சிக்னல் ஏதாவது கிடைச்சா எழுப்பி விடு" ப்ரேமிடம் கூறி ஹரி படுக்க அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் உறங்கினர்.
திடீரென தன் மேல் தண்ணீர் பட்டு அடித்துப் பிடித்துத் தப்பித்தாக வேண்டும் என்று ஹரி எழ அவனை போலவே திரு திருவென விழித்து அமர்ந்திருந்தனர் மற்ற மூவரும்.
"கூறுகெட்ட குப்பனுகளா நைட் தப்பிச்சு போங்கன்னு ஏற்பாடு பண்ணுனா காலைல பத்து மணி ஆனது கூட தெரியாம இங்க என்னடா புடுங்குற வெளிய பாத்த மாதிரி தூங்கிட்டு இருக்கீங்க. இதுல இந்த நாலு தாய்லிகல ஊர் முழுக்க தேடிட்டு இருக்கேன் நைட்ல இருந்து"
"என்னது விடிஞ்சிடுச்சா?"
"விடியலடா விடிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு"
ஜன்னலை மறைத்து நின்ற வெற்றியின் காலை தள்ளி நிறுத்திப் பார்த்தல் சூரியன் நேராக அவர்கள் முகத்தில் தன் வருகையைப் பதிவிட்டுக் கொண்டிருந்தான்.
"மச்சான் நாங்க பிரியாணி சாப்ட்ட அலுப்புல கொஞ்ச நேரம் தூங்கிட்டோம்டா சாரிடா. வா இப்ப போகலாம்" அவனைச் சமாதானம் படுத்தும் நோக்கில் வெற்றியை நாடினான் கார்த்தி.
"பிரியாணி யார் உங்களுக்கு குடுத்தது?"
"குடுக்கல மச்சான் நாங்க தான் உன் ஆளுங்களுக்கு குடுத்தத பிடிங்கி சாப்பிட்டோம்" - சிவா
"அட எடுபட்ட பயலுகளா உங்கள தப்பிக்க வைக்க அதுல மயக்க மருந்து கலந்திருந்தேண்டா நான்" இருந்த ஒரு வாய்ப்பும் போன சோகத்தில் கட்டிலில் வெற்றி அப்படியே சரிந்தான்.
அவன் தோளில் கை போட்ட ஹரியை ஏதோ திட்டம் வைத்திருப்பான் போல என்று வெற்றி தலை தூக்கிப் பார்க்க, "அதுனால தான் பிரியாணி கொஞ்சமா இனிச்சுச்சு போல மச்சான். அடுத்த தடவ ஸ்வீட்ல கலந்து குடு" கார்த்தியும் ஆமாம் சாமி போட்டான் தலையை ஆட்டி ஆட்டி.
'இவர்கள் முட்டாளா இல்லை நான் முட்டாளா?' இந்த கேள்வி மட்டுமே வெற்றியின் மூளையில், மனதில் அப்பொழுது ஓடிக்கொண்டே இருந்தது.
- தூக்றோம்
- Bookeluthaporen
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro