✨திருடியே மேரி மேரி மீ -2✨
சீதா அவர்களின் குப்பத்துக்கு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
பூபதி தான் அவளை சரியான நேரத்திற்கு மருத்துவமனையில் வந்து சேர்த்தது. அவள் மேலோட்டமாக வெட்டி இருந்ததால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர் சொல்லிவிட அப்பொழுதுதான் அவனுக்கு மூச்சே வந்தது.
ஒரு புறம் சிலேன் ஏறிக்கொண்டிருக்க மற்றொரு புறம் அவன் வாங்கி வந்த ஆப்பிளை துவம்சம் செய்து கொண்டிருந்தாள் சீதா.
"ஏண்டி சடார்னு இப்படி பண்ணிட்ட? எவ்வளவு பயந்துட்டேன்னு தெரியுமா?" என்று அழாத குறையாக அவன் பேச,
கையிலிருந்த ஆப்பிளை கடித்து ரசித்து சுவைத்துக் கொண்டிருந்த சீதா அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
"ப்ச்ச் உன்ட்ட தானே பேசிட்டு இருக்கேன் நீ என்ன அறவா மிஷின் மாதிரி அறச்சினு இருக்க"என்று அவன் கோபப்பட,
அவள் அப்பொழுதும் வாயைத் திறக்கவே இல்லை.
"எம்மா தாயி பரதேவத தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சுக்கோ" என்று பூபதி கையெடுத்து கும்பிடுவதை பார்த்தவள்,
முகத்தை வெட்டி விட்டு சாப்பிடுவதை தொடர,
"இப்ப என்ன உன்னோட கால்ல விழுந்து மன்னிச்சுக்கோன்னு கேட்கணுமா?"என்று பூபதி கோபத்துடன் கேட்க,
சீதா மடக்கி இருந்த தனது கால்களை நன்றாக தெரியுமாறு நீட்டி வைத்தாள்.
"இருந்தாலும் உனக்கு ரொம்ப தான் கொழுப்பு டி. கொசு மாதிரி இருந்துகிட்டு என்ன வரத்துக்கு வார்ற"என்று புலம்பிக்கொண்டே பூபதி அவள் கால்களை தொட வந்த சமயம் மடக்கிக்கொண்ட சீதா,
"இங்க வாடா வெண்ண மவனே" என்று பூபதியை தன் அருகில் அழைக்க,
"எல்லாம் என் தலையெழுத்து" என்று அலுத்துக் கொண்டாலும் சீதாவின் அருகே சென்றான் அவன்.
அவனை உச்சி முடியை பிடித்து ஆட்டியவள், "இனிமே குடிப்பியா?" என்று மண்டையில் டங்கு டங்கு என்று கொட்ட,
"ஆஆஆ விடுடி ராங்கி பிடிச்ச ராட்சசி"என்று அலறினாலும் அவள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொண்டான் அவளின் நண்பன்.
"சரி சரி இனி குடிக்க மாட்டேன் அது எம்மேல சத்தியம்" என்று பெருந்தன்மையாக தன் மீதே சத்தியம் செய்து கொண்டவனை பார்த்த சீதாவிற்கு அவன் தன்னிடம் எதுவுவோ மறைப்பதாக தோன்ற,
"டேய் கருவாயா ஏதாவது பிரச்சனையா? என்கிட்ட சொல்லலாம் தானே?"
"பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல டி மனசு தான் கொஞ்சம் சரியில்ல"என்றவனை நம்பாமல் பார்த்தவள்,
"சரி இவ்வளவு தான் நம்ம பிரண்ட்ஷிப்பு அப்படித்தானே?"என்று போல் வராத கண்ணீரை வரவைத்துக் கொண்டு முகத்தை திருப்பி கொண்டு படுத்து விட,
"ஏய் சீத்தா"
".........."
" ராட்சசி"
"..........."
" எருமை " என்று
கூப்பிட கூப்பிட, அவள் திரும்பாததால்,
வேறு வழி இல்லாமல்,
"ப்ச்ச்.. வீட்ல கொஞ்சம் பணப் பிரச்சனை..அதனால அம்மாவுக்கும் எனக்கும் கொஞ்சம் சண்ட ஆயிட்டு.. வேற ஒன்னும் இல்ல"என்றான் சமாதானமாக
"கொஞ்சம் தான் பணம் பிரச்சனையா?"படுத்திருந்த சீதா அவனை நோக்கி முகத்தை திருப்பி கேட்டதும், அவன் மீண்டும் மௌனமாக,
"சொல்லித் தொலைடா சட்டி பானத் தலையா..??" என்று அழுத்தி கேட்கவும், அதற்கு மேல் மறைக்க முடியாமல் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒப்புவித்தான் பூபதி.
அவனின் அம்மா செல்வி ஒரு பணக்காரரின் வப்பாட்டி என்பதால் ஊருக்குள் அவர்களுக்கு அவ்வளவாக மரியாதை கிடையாது. அப்படி இருக்க, ஒரு துணி மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவனின் மூத்த தங்கை கனகா அதே மில்லில் சூப்பர்வைசர் ஆக வேலை பார்த்து கொண்டிருக்கும் ஒருவனை காதலித்து, அவனிடம் ஏமாந்து வயிற்றில் குழந்தையுடன் வந்திருக்கிறாள். அவனின் தாய் செல்வி அதை அறிந்து கனகாவை அடித்ததோடு, மருத்துவமனைக்கு அழைத்து சென்று அதை கலைக்க முயற்சிக்க கனகா அதை மறுத்துவிட்டாள். அதையும் மீறி குழந்தையை கலைக்க முயன்றால் தற்கொலை செய்வது கொள்வதாக மிரட்ட செல்வி திணறினார். வேறு வழியின்றி அவளை ஏமாற்றியவனை நேரில் சந்தித்து நியாயம் கேட்க, அவனோ கனகாவை திருமணம் செய்வதில் தனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்பதோடு தனது தாய் தந்தையரிடம் அவர்களை பேசுமாறு சொல்லி இருக்கிறான். அதை நம்பி அவனின் பெற்றோர்களிடம் செல்வி பேச ஆனால் அவர்களோ செல்வியை வப்பாட்டி என்று இளக்காரமாக பார்த்ததோடு மட்டுமில்லாமல் அளவுக்கதிகமாக வரதட்சனை கேட்டிருக்கிறார்கள்.
பூபதியின் அப்பா நினைத்தால் அவ்வளவு கொடுக்க முடியும் தான்.. அதனால் செல்வி அவரிடம் உதவி கேட்டிருக்கிறார்.ஆனால் அவரோ ஒருமுறை பூபதி அவரை அவமானப்படுத்தியதால், அவன் அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் ஒழிய ஒரு பைசா கொடுக்க மாட்டேன் என்று விட செல்வி தங்கையின் வாழ்க்கைக்காக மகனை மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கிறார். பூபதி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு கல்யாண செலவை தானே பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட, செல்விக்கும் அவனுக்கும் பயங்கர வாக்குவாதம் நடந்துள்ளது. அதனால்தான் துக்கத்தை மறைப்பதற்காக அவன் தொடக்கூடாது என்று நினைத்த மதுவை கையில் ஏந்தி இருக்கிறான்.
எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு பூபதி சீதாவை பார்க்க,
அவளோ நிதானமாக அவனைப் பார்த்து,
"எவ்வளவு வரதட்சனை கேக்குறாங்க? என்று கேட்டாள்.
"50 பவுன் நகை 5 லட்சம் ரூபா ரொக்கம் வேணுமாம் அதோட மாப்பிள்ளைக்கு ஒரு பைக் வாங்கி கொடுக்கணுமாம்"என்றான் பெருமூச்சுடன்.
"தப்பு அவங்க பையன் மேல வச்சுக்கினு நம்ம எதுக்கு அவ்வளவு வரதட்சனை கொடுக்கணுமாம்?"என்று சீதா கேட்க,
"இதைத்தான் நானும் கேக்க அவங்க வீட்டுக்கு போகலாம்னு இருந்தேன். அம்மா தடுத்திட்டாங்க நான் போனா அடிபிடி சண்டையா மாறிடுமாம் அவங்க பொண்ணு வாழ்க்கை வெளங்காம போயிடுமாம்"என்று சொன்னவனின் வார்த்தைகளில் அவனை உள்ளத்தின் வலி புரிய,
"இப்ப என்ன 50 பவுன் நகை 5 லட்சம் ரூபா ரொக்கம் அப்புறம் ஒரு பைக் அவ்ளோதானே எப்பவும் பண்ற திருட்டை விட கொஞ்சம் பெரிய இடமா பார்த்து கை வைப்போம் அவ்வளவுதான் வேலை முடிஞ்சது" என்று அசால்டாக சொல்லிய சீதாவை வாயை பிளந்து கொண்டு பார்த்தான் அவன்.
பின்னே அவர்கள் எப்பொழுதுமே சிறுசிறு திருட்டு தான் செய்வார்கள் அதுவும் மிகப் பெரியது என்றால் அதற்கு தண்டனை அதிகம் என்பதோடு ரிஸ்க்கும் அதிகம் எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதனாலயே கண்ணுக்கு உறுத்தாதவாறு சின்னதாக திருடிவிட்டு போய்விடுவார்கள். ஆனால் இன்று சீதா செல்வதை கேட்டதும் அவனுக்கு திக் என்று தான் இருந்தது. பெரும்பாலும் அவர்கள் அனைவரும் திருடுவதற்கு மாஸ்டர் பிளான் போட்டு கொடுப்பது சீட்டர் சீதா தான். அதுவும் எவ்வளவு பெரிய கடையை உடைத்து கொண்டு திருடினாலும் ஆளுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று கணக்குப்படி தான் திருடுவார்கள் அதற்கு கொஞ்சம் அதிகமாக திருடினாலும் அவர்கள் சீதாவின் கத்தி கீறலுக்கு ஆளாக நேரிடும் என்பது உண்மை.
ஆனால் இன்று அவளே மிகப்பெரியதாக என்று சொல்லிவிட பூபதி அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.
"டேய் என்னா ரொம்ப பீலிங்கா என்ன பாக்குற தங்கச்சி மேரேஜுக்கு துட்டு வேணுமா வேணாமா?"என்ற சீதா கேட்க பூபதி ஆம் என்பது போல் தலையாட்டினான்.
"அப்போ ரிஸ்க்கும் எடுத்துதா ஆவணும்.. பின்ன பணம் பறந்தா நம்மட்டனா வரும் .. ரிஸ்க்கு எடுக்குறோம் திருடுறோம் தங்கச்சி மேரேஜ் ஜாம் ஜாம்னு நடத்துறோம் புரிஞ்சிதா டோமர் தலையா? "என்று சீதா சிரிப்புடன் சொல்ல,
"தேங்க்ஸ் டி மல கொரங்கு இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு"என்று உணர்ச்சிவசப்பட்டான் பூபதி.
சரியாக ஒரு வாரம் கழித்து அவர்கள் எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் கூடியிருந்தனர் அவர்களின் குழுவினர்.
பொதுவாக அவர்களின் சந்திப்பு அந்த மீன் பஜார் முக்கு சந்தில் தான். பெரும்பாலான தெருநாய்கள் மீது இருந்த மீன் கழிவுகளை சாப்பிடுவதற்காக அங்கு அதிகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் அந்த பகுதியை சுற்றி அவ்வளவாக வரமாட்டார்கள். அது அவர்களுக்கு வசதியாக விட அதுவே அவர்களின் மீட்டிங் ஸ்பாட்டாக ஆகிப்போனது.
சீதா தான் முதலில் ஆரம்பித்தாள்.
"டேய் எல்லாரும் கேட்டுக்கோங்க டா இந்த தடவை நம்ம கை வைக்கப் போற இடம் கொஞ்சம் இல்ல ரொம்பவே பெரிய எடம் அதனால எல்லாரும் சூதானமா நடந்துக்கோங்க மாட்டிக்கிட்டீங்கன்னா மப்பு தான் நமக்கு"
"என்னப்பா சீட்டு மொட்டையா சொன்னா.. எனக்கு எங்கனா புரியும் நல்லா காட்டி விளங்குற மாதிரி சொல்லு" என்று குட்டி புலி கேட்கவும்,
"உனக்கு எதுவும் புரிய வேணாம் நான் சொல்ற மாதிரி செஞ்சா பொழைப்பீங்க கொஞ்சம் ஸ்லிப் ஆச்சுன்னாலும் தொக்கா தூக்கினு போயிடுவாங்க போலீஸ் அப்புறம் நமக்கு சங்கு தான்"
"இவ்வளவு நாள் ஸ்மூத்தா தானே நம்ம தொழில் போயிட்னு இருந்துச்சு திடீர்னு எதுக்கு நம்ம ரிஸ்க்கு எல்லாம் எடுக்கணும்"என்று அவர்களில் கொஞ்சம் மூத்தவனாக இருந்த குட்டி யானை ரவி கேட்க,
"நம்ம பாகுபலி தங்கச்சிக்கு கல்யாணம் கொஞ்சம் அவசரமா பணம் தேவைப்படுது அத்தோட நம்ம இதுவரை எந்த பெரிய திருட்டும் பண்ணினது இல்லையே கொஞ்சம் ட்ரை தான் பண்ணி பாப்போமே இங்கிலீஷ்ல ஏதோ சொல்லுவாங்களே எக்ஸ்பீரியன்ஸு பண்ணி தான் பாப்போம் எப்படி இருக்குன்னு?"என்று சீதா சொல்லவும் அங்கிருந்தவர்களின் முகம் ஒரு மாதிரியாக ஆனது.
"இப்போ என்னாத்துக்கு ஆளாளுக்கு மொகத்த தூக்கி வச்சினு இருக்கீங்க... எல்லாரும் உங்களுக்கு இஷ்டம் இல்லன்னா நகண்டுகலாம் யாரும் கலந்துக்கணும்னு கட்டாயம் கிடையாது"
"எனக்கு கொஞ்சம் டர்றா தான் இருக்கு ஆனாலும் இதுல நான் கலந்துக்க ஒத்துக்கிறேன்" என்று குட்டி புலி முதல் ஆளாக தன் சம்மதத்தை தெரிவிக்க, மற்றவர்களும் சற்று தயங்கி தயங்கி அடுத்தடுத்து ஒத்துக் கொண்டனர்.
சீதா அனைவருக்கும் தனது திட்டத்தை கூறினாள்.
கேட்க என்னவோ எளிதாக தான் இருந்தது. ஆனால் அவர்கள் கை வைக்கும் போகும் இடம் ரொம்பவே பெரியது என்பதால் அனைவருக்கும் மனதில் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது சீதாவை தவிர...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro