✨திருடியே! மேரி மீ மேரி மீ-10✨
சீதா- யாதவ் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது அதே மண்டபத்தின் பின்னால் கடைசி இருக்கையில்
அமர்ந்திருந்தான் பூபதி.
அவன் முகத்தில் தோழியை நினைத்து பெருத்த வருத்தம் இருந்தது.
தனக்காக என்று அவள் யோசித்து இப்படி போய் மாட்டிக் கொண்டாளே என்ற கவலையும் அதே நேரம் தங்களின் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட யாதவ்வின் மீது பயங்கர கோபமும் வெறியும் அவனிடம் அதிகமாகவே இருந்தது.
சீதா கடைசியாக சொன்ன விஷயங்கள் மட்டுமே அவனை எதுவும் செய்ய விடாமல் கையை கட்டி போட்டிருந்தது.
"பூவு கோபப்படாம கேளு இதெல்லாம் என்னாண்ட விருப்பப்படி தான் நடக்குது... இந்த நகையும் தங்கச்சி கல்யாணமும் நமக்கு ரொம்ப இம்போர்ட்டண்ட்டு தயவு பண்ணி காரியத்த கெடுத்துவுட்றாத பூவு...நேத்து நம்ம தொக்கா சிக்கி இருந்தா நம்ம எல்லாரும் டிவி நியூஸ்லயும் பேப்பர்லயும் பெருசா போட்டோவோட வந்திருப்போம். அதோட போலீஸ் நம்மள சும்மா விட்ருவாங்கன்னு நினைக்கிறியா? அடி நுங்கு எடுத்துருவாய்ங்க.. அப்படியே நம்ம இந்த கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆயிட்டாலும் வேற ஏதாது இதே மாதிரி கேஸ் வந்தா அதுக்கும் நம்மள தான் சந்தேகம்னு எழுதி வைப்பாங்க. வாழ்க்க முழுசும் ஜெயிலுக்கும் கோர்ட்டுக்கு அலைய வேண்டிதுதான்"
"அதுக்குன்னு உன்னையே பழியாட ஆக்க போறியா சீத்து?"
" ஒரு ஆறு மாசம் மட்டும் தான் டா நான் அவன்ட பொண்டாட்டியா இருக்கணும்.. அத்து வர மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்னல அவனால ஒன்னும் பண்ண முடியாது என்ன பத்தி உனக்கு தெரியும் தான? சீதா ..சீட்டர் சீதா என்கிட்ட வம்பு பண்ணா சீவிடுவேன் சீவி.. நான் அவனான்ட ஃசேப்டியா இருந்துப்பே..
அப்புறம் என் நைனாக்கு இந்த மேரேஜ பத்தி தெரிய வேணா. தெரிஞ்சா இங்கேயும் எங்கிட்ட காசு கலக்ட்டு பண்ண வந்துரும்... அப்படியே என்ன பத்தி கேட்டு உயிரை வாங்கினா நா ஊரவிட்டு ஓடி போயிட்டேன்னு சொல்லிடு ...நான் செத்தே போனாலும் அது கண்டுக்காது அதுக்கு என்ன விட அந்தா பாட்டுலும் சரக்கும் தான் முக்கியம்.."என்று மிக நீளமாக பேசிய சீதாவை நினைத்து மனதிற்குள் வெதும்பி கொண்டே கையாலாகாதவனாக சீதா-யாதவ் திருமணத்தை பார்த்துக் கொண்டிருந்தான் பூபதி.
இங்கோ திருமணம் நடந்து முடிந்திருக்க, இந்திரராஜன் தன் குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் அழைத்துக் கொண்டு 'இதற்கு எல்லாம் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா அனுபவிப்பீங்க..' என்று சபித்துக் கொண்டே சென்று விட்டார்.
பாவம் அவர் தான் இனி செய்த பாவங்களுக்கு அனுபவிக்கப் போகிறார் என்று அவருக்கு அப்போது தெரியாத அல்லவா!
திருமணம் முடிந்த கையோடு சீதா யாதவ் இருவரையும் அழைத்துக் கொண்டு நந்தவனம் வந்து சேர்ந்தனர் குடும்பத்தினர்.
இது ஒரு அவசர திருமணம் என்பதால் அன்றைக்கு நடைபெற இருந்த வரவேற்பு எல்லாம் தள்ளி வைக்கப்பட்டது. அத்தோடு அவர்களின் சொந்த பந்தங்களையும் வரவேற்பிற்கு அழைப்பதாக கூறி மரியாதையோடு அனுப்பி வைத்தனர் யாதவ் குடும்பத்தினர்.
அதன் பிறகு மண்டபத்தில் இருந்து மூன்று கார்களில் யாதவ்வின் குடும்பம் நந்தவனத்திற்கு புறப்பட்டனர்.
முதல் காரில் யாதவ் அனன்யா சீதா மூவரும் செல்ல, அடுத்து வந்த காரில் கோபாலகிருஷ்ணன் யமுனா தாயம்மாள் மூவரும் இருந்தனர். மூன்றாவது காரில் பிரகாஷ் குடும்பமும் நந்தவனத்தை நோக்கி பயணித்தனர்.
யாதவ் வண்டி ஓட்ட, சீதாவின் அருகே பின் இருக்கையில் அமர்ந்திருந்த அனன்யாவிற்கு சங்கடமாக இருந்தது. எப்போதும் வளவளவென்று பேசுபவள் தான், ஆனால் இன்று ...மௌனமாக அமர்ந்திருந்த தன் புது அண்ணியான சீதாவிடம் என்ன பேசுவது ?என்று தெரியாமல் இருக்க.. அதை சமாளிப்பதற்காக மொபைலில் கேம் விளையாடியவாறு வந்தாள் அவள்.
சீதாவிற்கு அதற்கு மேல் சங்கடம்... புதிதாக அணிந்திருந்த புடவை நகை தலையில் வைத்திருந்த மல்லிகை பூ எல்லாம் அவளை ரொம்பவே எரிச்சலாக்க, அத்தோடு அருகில் அமர்ந்திருந்த அனன்யா வேறு ஏதோ துப்பாக்கி சுடும் சத்தத்தோடு (பிரீ பையர்) விளையாடியவாறு வர, அதுவும் போதாது என்று யாதவ் வேறு அவளுக்கு ஒன்றும் புரியாத கொரியன் பாப் பாடல்களை ஓடவிட்டு அதற்கு ஹம்மிங் செய்தவாறு வர, மொத்தத்தில் சீதா வெடிப்பதற்கு முன் அமைதியாக இருக்கும் எரிமலையின் நிலையில் இருந்தாள்.
இடையில் ஒரு இடத்தில் நிறுத்தி மதிய உணவை முடித்தவர்களின் பயணம் தொடர்ந்தது.
கிட்டத்தட்ட மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு நந்தவனத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
சீதா நந்தவனத்திற்குள் வரும் பொழுது அவளுக்குள் கொஞ்சம் படபடப்பு .. காரணம் அந்த வீட்டின் செழிப்பும் இன்னும் ஆறு மாதங்கள் இங்கே தான் இருக்க வேண்டுமே என்ற அலுப்பும் சேர்ந்து அவளை என்னவோ செய்தது.
யமுனா இருவருக்கும் ஆராத்தி எடுத்து உள்ளே அழைக்க, சீதாவும் யாதவ்வும் புதுமண தம்பதியராய் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தனர்.
அதன் பிறகு சம்பிரதாயத்திற்காக சீதாவை பூஜை அறையில் விளக்கேற்ற சொல்ல,
ஒருமுறை திரும்பி யாதவ்வை பார்த்தவள் விளக்கேற்றி வைத்தாள்.
தாயம்மாள் தன் பேரனின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அதுவே அங்கு இருந்த மற்றவர்களின் விருப்பமாகவும் இருந்தது.
அதன் பிறகு பால்பழம் ஊட்டி விடும் சம்பிரதாயம் யாதவ்விற்கு நிச்சயம் 'பிடிக்காது' என்று அதை கைவிட்டு விட்டனர் அவனின் குடும்பத்தினர்.
தாயம்மாள் அனன்யாவிடம் சீதாவை அவள் அறைக்கு கூட்டிப் போக சொல்ல, சரி என்பது போல் தலையாட்டிய அனன்யாவும் "வாங்க அண்ணி போகலாம்" என்று அழைக்க சீதா அங்கிருந்து சென்றாள்.
அதுவரை யாரும் சீதாவிடம் எந்த கேள்வியும் கேட்கவும் இல்லை. யாதவ் எப்படி சீதாவை கரம் பிடிக்க சம்மதித்தான் என்றும் விசாரிக்கவில்லை.
இப்பொழுது சீதாவை அங்கிருந்து அனுப்பிவிட்டு தன்னிடம் விசாரிக்க போகிறார்கள் என்று யாதவ்விற்கு புரிந்தது.
முதலில் ஆரம்பித்தது தாயம்மாள் தான்..
"தம்பி நீ எந்த முடிவை எடுத்தாலும் சரியா தான் இருக்கும்னு தெரியும் அதான் இவ்வளவு நேரம் இந்த கேள்வியும் கேட்காம எல்லாம் பண்ணிட்டோம்.. ஆனா இது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த சொப்னா பொண்ணு பத்தி உனக்கு முன்னவே தெரிஞ்சு இருக்கும்னு மண்டபத்துல உன் முகத்தை வைச்சே கண்டுபிடிச்சிட்டேன்.. ஏன் தம்பி இது முன்னாடியே எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்களே கல்யாணத்தை நிப்பாட்டி இருப்போமே? எதுக்கு நமக்கு இவ்ளோ பெரிய அசிங்கம்?"என்று வருத்தமாக கேட்க,
யாதவ் பெருமூச்சுடன்,"எனக்கும் இந்த விஷயம் லேட்டா தான் தெரியும் பாட்டி.. சொல்லப்போனா கல்யாணத்துக்கு முந்தின நாள் நைட்டு தான் எனக்கு தெரியும்.. அதுக்கப்புறம் கலெக்ட் பண்ண எவிடன்ஸ் தான் நீங்க பார்த்தது"என்றான்.
"உனக்கு சொப்னா பத்தி முன்னாடியே தெரியாதுனு சொல்ற.. சரி ..உனக்கு ஒரு நாள் முன்ன தான் அத பத்தி தெரிஞ்சதுன்னே வச்சுப்போம்..அந்த பொண்ணு சீதாவ கடைசி நிமிஷத்துல எப்படி கல்யாணம் பண்ணின? உனக்கு எப்படி அந்த பொண்ண தெரியும்?" என்று இப்போது கேள்வி கேட்டது கோபாலகிருஷ்ணன்.
"என் கல்யாணத்துல சொப்னா ஓட மேக்கப் ஆர்டிஸ்ட் அவதான்.. ஏன்னு தெரியல அவளை பார்த்ததும் எனக்கு பிடிச்சிருந்தது அட்ராக்சன்னு கூட வச்சுக்கலாம்.. ஆனா அத அவ கிட்ட சொல்லல.. ஏன்னா நான் அப்ப கல்யாண மாப்பிள்ளையா இருந்தேன். சொப்னா பத்தி தெரிஞ்சதும் ஏதோ ஒரு பெரிய ரிலீஃப் ..ஒரு செகண்ட் கூட வேஸ்ட் பண்ணாம சீதா கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணேன். சீதாக்கும் என்ன பிடிச்சிருந்ததால ஒத்துகிட்டா"என்று சாதாரணமாக மிக நீளமானப் பொய்யை சொல்லி முடித்தான் யாதவ்.
கோபாலகிருஷ்ணன் அதை முழுமையாக நம்பவில்லை என்றாலும் அதற்கு மேல் கேள்வி எழுப்ப அவருக்கு தோன்றவில்லை. ஏனென்றால் மகன் இவ்வளவு நீளமாக பேசி வருடங்கள் கடந்து இருக்க, இன்று தான் அவன் சீதாவிற்காக சற்று நீளமாக பேசியிருக்கிறான்.
"சீதாவை பத்தி சொல்லுப்பா அவளோட அப்பா அம்மா எங்க இருக்காங்க? அவங்களுக்கு இந்த கல்யாணத்த பத்தி தெரியுமா?"என்று யசோதாவும் தன் பங்கிற்கு கேட்க,
"அதெல்லாம் நானே சொன்னா நல்லா இருக்காது சோ அவ கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க.." என்றுஅவருடன் சீதாவை கோர்த்துவிட்டான் யாதவ்.
பின்னே அவன் ஒரு கதை சொல்லி அதை அவள் மறுத்து விட்டால் மற்றவர்களுக்கு சந்தேகம் வந்து விடுமே?
"டேய் கட்டின பொண்டாட்டி குடும்பத்தை பத்தி சொல்ல உனக்கு என்ன தயக்கம்?இல்ல உனக்கே தெரியாதா?" என்று அவனின் அத்தை வசுந்தரா மீண்டும் அதே கேள்வியை கேட்க முயல,
"இப்ப முடியாது அத்த எனக்கு டயர்டா இருக்கு நைட் ஒழுங்கா தூங்கல சோ இப்ப நான் ரெஸ்ட் எடுக்க போறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்றவன் அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அறைக்கு சென்று விட, அவனை குறுக்கு விசாரணை செய்ய அவரின் மகன் பிரகாஷ் அவன் பின்னாலயே போனான்.
"அண்ணி இதுதான் என்னோட ரூம் நீங்க டயர்டா இருந்தா இங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க.."என்று லேசான சங்கோஜத்துடன் புதிதாக தன் அறைக்கு புதிதாக வந்திருந்த அண்ணியிடம் சொன்னாள் அனன்யா.
அதற்கு சரி என்பது போல் தலை அசைத்த சீதா, "ம்ம் எனக்கு ஒன்னு தேவ... கேட்டா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே? "என்று அனன்யாவிடம் கேட்க,
"ஐயோ அண்ணி நான் உங்களை விட வயசு கம்மியான பொண்ணு இப்பதான் எனக்கு ஓட் போடுற வயசு வந்து இருக்கு.. சோ என்ன அனுன்னு பேர் சொல்லியே கூப்பிடலாம்... இப்ப உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னு சொல்லுங்க.. பண்றேன்"
சீதா நினைத்தது போல்,
அனன்யா ரொம்பவும் பிகு பண்ணாமல், உதவி செய்கிறேன் என்று சொன்னதும் மன இறுக்கம் தளர்ந்தவள்
"அது உங்ககிட்ட.. ச்சே.. உன்கிட்ட நைட்டி இருக்கா அனு? இல்லாக்காட்டி வேற ஏதாவது லேசா போட்டுக்குற சுடிதார் மாதிரி ட்ரஸ் இருக்கா? இந்த சேல நச நசனு வருது பா.. எப்போ கழட்டி அப்படிக்கா போடுவோம்னு இருக்கு.. என்னால இதுக்கு மேல அட்ஜஸ்ட்டு பண்ண முடில."என்று சீதா பாவம் போல் சொன்னதும்,
அவளின் முக பாவனையில் சிரித்த அனன்யா,"அண்ணி என்கிட்ட நைட்டி எல்லாம் இல்ல அதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்.. நான் நைட் டிரஸ் தான் போடுவேன்.. உங்களுக்கு ஓகேனா நான் இப்போதைக்கு உங்களுக்கு சுடிதார் தரேன் அதை போட்டுக்கோங்க.."
சீதாவிற்கு வேறு வழி இல்லை பின்னே அவளது துணிகள் எல்லாம் இன்னும் திருமணம் நடந்த மஹாலில் தான் இருந்தது.
"எத்த வேணா போடுவேன் அனு இந்த நச நச மட்டும் எனக்கு வேணாம்"என்று சீதா உடனடியாக பதில் அளிக்க, அனன்யாவும் தனது கபோர்டில் இருந்த சுடிதார்களில் ஒன்றை சீதாவுக்கு எடுத்து கொடுத்தாள்.
"யாதவ் நீ பண்ணது சரி இல்ல.. எதுக்காக சொப்பனாவ பழிவாங்கறதுக்காக யாரோ ஒருத்தியை கல்யாணம் பண்ணின?"என்று தன் அறைக்குள் தன் அனுமதியில்லாமல் வந்து நின்று தன்னையே கேள்வி கேட்கும் பிரகாஷை பார்த்தும் முறைத்த யாதவ்,"பிரகாஷ் ஐ நீட் சம் ரெஸ்ட்... கெட் அவுட்"என்றான்.
"என் வாயை மூடி அனுப்பிட்டா நீ பண்றது எல்லாம் சரியா? உனக்கு இருக்கிற பிரச்சனைக்கு யாரா இருந்தா என்ன? கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான?"
"பிரகாஷ்.."என்று அழுத்தமாக அவனின் பெயரை சொன்னான் யாதவ்.
"இன்னைக்கு நீ பண்ணின காரியத்துக்கு சொப்னாவ மட்டும் பத்தி தப்பா பேச மாட்டாங்க.. நம்ம மொத்த குடும்பத்தையும் பற்றியும் தப்பா பேசுவாங்க.. மீடியாவுக்கு எல்லா பக்கமும் கண் இருக்கு மறந்துடாத.."என்று பிரகாஷ் யாதவ் கோபத்தின் எல்லையை தாண்டுகிறான் என்று தெரிந்தும் தனது வாக்குவாதத்தை தொடர,
கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவன்,"பிரகாஷ்.. மீடியாவை டீல் பண்றது என்னோட ப்ராப்ளம்.. அது உனக்கு தேவையில்லாதது.. அதோட இது என்னோட லைஃப்.. நான் யார கல்யாணம் பண்ணிக்க டிசைட் பண்றேன்னு உன்கிட்ட சொல்லித்தான் பெர்மிஷன் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல ..கெட் அவுட் ஆப் மை ரூம்"
அப்பவும் அடங்காத பிரகாஷ்,
"சொப்னாவ கல்யாணம் பண்ணி இருந்தா கூட உனக்கு எந்த பிராப்ளமும் இருந்திருக்காது.. அவளுக்கு ஏற்கனவே லவ்வர் இருந்திருக்கு அதனால.."என்று ஏதோ சொல்ல வர, யாதவ்வின் கோபம் எல்லை மீற அவனை ஓங்கி மிதித்திருந்தான்.
*****
எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் அம்பர்லா கட் காட்டன் சுடிதார் அணிந்து மெஜந்தா நிறத்தில் லெக்கின்ஸ் அதே நேரத்தில் துப்பட்டாவும் அணிந்து கொண்டு உடைமாற்றும் அறையில் இருந்து வெளியே வந்த சீதா, "அனு இந்த பேண்ட்டு தான் என்னான்ட கணுக்காலுக்கு மேல வர இருக்குது.. மத்தபடி.. எல்லாம்.. ஜூப்பரு ஃபிட்டு"என்று என்று கூறியவாறு கழுத்தோரம் சுருண்டு இருந்த துப்பட்டாவை சரி செய்தபடி நிமிர,
அங்கு அனுவிற்கு பதிலாக தாயம்மாள் இருந்தார்.
சீதா உஷாரானாள்.
'ஆஹா இந்த கிழவி முழியே சரில்லயே... சந்தேகம் வந்திருக்குமோ ..சீத்து எல்லாத்தையும் சமாளிக்க ரெடியா இருந்துக்கோ'
"வாமா வந்து உட்காரு உனக்காக தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்" என்று தாயம்மாள் அவளை தன் அருகில் அமர சொல்ல, சற்று தயக்கத்துடன் அமர்ந்தாள் சீதா.
"ம்ம் உன் பேரு என்ன?" இது தான் தாயம்மாள் அவளிடம் கேட்ட முதல் கேள்வி...
'சீதா... சீட்டர் சீதா'என்று புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் போல் தாடையை உரசி சொல்ல.. அவளுக்கும் ஆசைதான் ஆனால் அப்படி சொல்ல முடியாமல்,
"சீதா"என்றாள்.
"என்ன படிச்சிருக்க?"என்று வந்தது அடுத்த கேள்வி,
'பத்தாம் க்ளாஸ் ஃபெயிலு'என்று சொல்ல முடியாமல், தான் போலி சர்டிபிகேட் வாங்கி வைத்திருக்கும் பியூட்டிஷியன் கோர்ஸை தன் படிப்பு என்றுசொல்லி வைத்தாள்.
"அப்பா அம்மா எல்லாம் எங்க இருக்காங்க?"என்று தாயம்மாள் கேட்டதும் ஒரு நொடி மௌனமான சீதா "அம்மா இல்ல..நை..ஹ்ம் அப்பா இருக்கு..ஹ்ம் இருக்காங்க.. ஆனா இப்ப எங்கன இருக்காங்கன்னு தெரியாது.."
என்று சொன்னவளோ,
'ஆமா அந்த ஆளு எங்கன்ன குடிச்சிக்கினு மட்ட ஆகி கிடக்கோ' என்று மனதிற்குள் நினைக்க,
"அப்போ வளர்த்தது?"
"அப்பாவோட அம்மா தான் வளர்த்தாங்க.. அவங்களும் கொஞ்சம் வருஷம் முன்ன என்ன விட்டுனு மொத்தமா போய்ட்டாங்க..."என்று சொல்லிய போது சீதாவின் குரல் பழைய நினைவுகளால் கரகரத்தது.
தாயம்மாள் அதற்கு மேல் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
" சரி கண்ணு கலங்காத... இனி நீயும் எங்க வீட்டுல ஒருத்தி.. சொல்லப்போனா வருங்காலத்துல எங்க வீட்டோட மகாராணி... பழசை நினைச்சு கவலைப்படாத.. என்னையவே உன் பாட்டியா நினைச்சுக்கோ.." என்று உண்மையான அன்புடன் அவளின் தலையை வருடியவாறு தாயம்மாள் சொல்லிய போது சீதாவிற்கு உண்மையாகவே அழ வேண்டும் போல் இருந்தது.
ஆனால் அவள் அழவில்லை.
தாயம்மாவை புருவ சுழிப்புடன் பார்த்தாள்.
பேரன் ஊரு பேரு தெரியாத ஒருத்தியை திருமணம் செய்திருக்கிறான். அவள் உண்மையை சொல்கிறாளா? பொய் சொல்கிறாளா? என்று தெரியாமல், பாசமாக பேசியதோடு மட்டுமல்லாமல் இந்த வீட்டின் மகாராணி என்று வேறு சொல்லகிறாரே, என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை.. தனக்குத் திருமணமே வேண்டாம் என்ற யாதவ் அவ்வளவு சீக்கிரத்தில் ஒருத்தியை நம்பி திருமணம் செய்து இருக்கிறான் என்றால் அது எவ்வளவு பெரிய அதிசயம் என்று...
தாயம்மாவை அடுத்து யமுனா வசுந்தரா இருவரும் வந்து அவர்கள் தங்கள் பங்கிற்கு விசாரணை செய்து விட்டு செல்ல, இதற்கு மேல் முடியாது டா சாமி என்று நினைத்த சீதா களைப்பில் சோபாவில் அமர்ந்திருந்தவாறே தூங்கி விட்டாள்.
இரவு உணவிற்கு அவளை அழைக்க வந்த அனன்யா சீதா நன்றாக உறங்குவதை பார்த்து எழுப்ப மனம் இன்றி சென்று மற்றவர்களிடம் சொல்ல,
யாதவ், தான் சென்று எழுப்புவதாக சொல்லிவிட்டு அனன்யாவின் அறைக்கு சென்றான்.
அங்கு சோபாவின் கைப்பிடியில் தலை சாய்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சீதாவை சில நொடிகள் பார்த்தவன்,
"ஏய் ஸ்வீட் ஹார்ட் கெட்டப்... டின்னர் சாப்பிட வா.. எல்லாரும் உனக்கு தான் வெயிட் பண்றாங்க"என்று அழைக்க,
ஆழ்ந்த நித்திரையில் இருந்த சீதா அசைய கூட இல்லை.
சற்று தயங்கினாலும் இம்முறை அவளின் தோளை தொட்டு எழுப்பினான் யாதவ்.
சீதாவிற்கு அடுத்தடுத்த மூன்று நாட்கள் தூக்கமின்மையினால் இன்று அடித்து போட்டது போல் நன்றாக தூக்கம்...
யாரோ தன்னை உலுப்பி எழுப்புவது தெரிந்தாலும் கண்களை திறக்க முடியவில்லை.
அப்பொழுது சட்டென்று யாரோ அவளின் கழுத்தில் உரசுவது போல் இருக்க,"கையை எடுடா பேமாரி.."என்ற கத்தியபடி எழுந்திருந்தாள் சீதா.
அவளின் முன்னால் யாதவ் இருக்க,
"டேய் எச்ச எம்மேல கை வைக்க கூடாதுன்னு சொல்ல தானே செஞ்சேன்.. இப்ப என்ன பண்ண? அறிவுகெட்ட கூமுட்ட.. பரதேசி..என்ன தொட்டா கைய வெட்டுவேன்"என்று பாதி உறக்கத்திலேயே எழுப்பி விட்டதால் எரிச்சலும் தன் மேலேயே கை வைப்பதா? என்ற கோபமும் சூழ, அவள் கத்த ஆரம்பிக்க, அவனோ தன் கைகளை கட்டியவாறு அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
திட்டிக்கொண்டே கீழே குனிந்த சீதா அப்பொழுது தான் கவனித்தாள்.. அவளின் மேலே போர்வை போர்த்தப்பட்டு இருப்பதை...
'ஓஓ இதான் என்னான்ட கழுத்த உரசிச்சா? ஐயையோ இந்த ரோபோ வேற முறைக்கிறானே! சரி சமாளிப்போம்'
"இந்தாப் பாரு சாரே ... நான் செவனேன்னு தூங்கினு இருந்தேன் என்ன ஃபர்ஸ்ட் வந்து டிஸ்டர்ப்பு பண்ணது நீயி.. தப்பு உன் மேல தான்.. இருந்தாலும் போனா போவுது நம்ம சாரேன்னு பாவம்னு உன்னைய மன்னிச்சுவிடுறேன். இப்போ நீ கம்முனு போ நான் தூங்கணும்"என்று சீதா சொல்ல, யாதவ் இப்பொழுது லேசாக சிரிக்க அவளுக்கோ அது வில்லத்தனமான சிரிப்பாக தோன்றியது.
'சீத்து உஷாராய்க்கோ'
"ஸ்வீட் ஹார்ட்உன்னோட இந்த மந்த் பேமெண்ட்ல ஒரு பத்தாயிரம் ரூபா கம்மி பண்றேன்... என்ன டிஸ்ரெஸ்பெக்ட்டா பேசினா ஆர் ட்ரீட் பண்ணா நம்ம காண்ட்ராக்ட் படி பேமெண்ட்ல கம்மி பண்ற ரைட்ஸ் எனக்கு இருக்கு.. சோ இனி பார்த்து பேசு.."என்று புன்னகை மன்னனாக சொன்ன யாதவ், சீக்கிரம் சாப்பிட வருமாறு அழைத்து விட்டு அறையை விட்டு வெளியே சென்று விட,
சீதாவோ, "அய்ய ஒருத்தாட்டிக்கே பத்தாயிரரூபா ஸ்வாகா ஆச்சின்னா.. நம்மளான்ட வாய்க்கு பத்து லட்சத்துல ஒத்த பைசா மிஞ்சாதே.."என்று நினைத்தவள்,
அவன் தனக்கு வைத்த ஆப்பை நினைத்து பொறுமிக் கொண்டே சாப்பிட சென்றாள்.
அங்கு பிரகாஷை தவிர்த்து மொத்த குடும்பமும் இருக்க, இயல்பு போல் அனன்யா அருகே அமர்ந்தவளை குடும்பமே வித்தியாசமாகத்தான் பார்த்தது.
ஏனென்றால் யாதவ் அருகே அவன் மனைவி அமர்வதற்காகவே ஒரு இருக்கை தள்ளி அமர்ந்திருந்தனர் அவர்கள்.
அவள் அதை கவனிக்கவில்லை என்று நினைத்தவர்கள் அதை விட்டு விட யாதவ் சீதாவை முறைத்து வைத்தான். சீதாவோ,"போடா டேய் போடா என்கிட்டேயே பத்தாயிரம் ரூபா நவுட்டிகினல.. உன்னான்ட சைடுலாம் வந்து குந்த முடியாது.. முடிஞ்சத பாத்துக்கோடா"என்று நினைத்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு அனன்யாவிடம் பேச ஆரம்பித்தாள்.
உணவிற்கு பிறகு தாயம்மாள் நாளை அவர்களின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு குலதெய்வ வழிபாட்டிற்காக செல்ல வேண்டும் என்று சொல்ல, யாதவ் சரி என்று சம்மதித்தான்.
அதுவரை சீதா அனன்யாவின் அறையிலேயே தங்கிக் கொள்ளட்டும் என்று தாயம்மாள் சொல்ல ஆளுக்கு முன்னே முந்திக் கொண்டு சீதா இப்பொழுது "சரி பாட்டி" என்றாள். யாதவ் முறைத்தான்
இரவில் உறங்குவதற்கு முன் அனன்யா, சீதா இருவரும் சற்று நேரம் அவர்களுக்கு பிடித்த சினிமா நடிகர்களை பற்றி பேசினார்கள்.
"அண்ணி கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே?"என்று அனன்யா கேட்க,
"கேளு.. இப்பதான் நம்ம தோஸ்த் ஆயிட்டோமே"என்று சீதா இலகுவாக சொன்னதும்,
"உங்க ஸ்லாங் வந்து ரொம்ப டிஃபரண்டா இருக்கு.. இதெல்லாம் லோக்கல்ல இருக்கிறவங்க தான் பேசுவாங்க.. நீங்களும்..."என்று இழுத்தவள், சீதாவின் முகம் மாற்றத்தை கவனித்து விட்டு, "தப்பான அர்த்தத்துல கேட்கல.. நான் ஸ்டேட்டஸ் எல்லாம் பார்க்க மாட்டேன்.. நீங்க எப்படி இருந்தாலும் என் அண்ணி தான்"
என்றாள் அவசரமாக..
சீதா சிரித்தாள் .
"அண்ணி பதில் சொல்லுங்க?"
"அனு நா லோக்கல் ஏரியா தான்... போதுமா? இப்போ தூங்கு"என்ற சீதா தனக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு கண்களை மூடிவிட்டாள்.
அவளுக்கு நேற்று இரவு யாதவ்வுடன் நடந்த வாக்குவாதம் நினைவிற்கு வந்தது.
யாதவ் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி உடன்..
'ஏத?'என்று விழித்தவளிடம்,
"அதான் நேத்தே நீ பார்த்தியே அந்த சொப்னாவுக்கு ஆல்ரெடி லவ்வர் இருக்கான்?"
"இருந்துட்டு போட்டும்.. அத்துக்கு நான் எதுக்கு சாரே உன்னைய கண்ணாலம் பண்ணனும்? இதுல லாஜிக்கே இல்லையே..நீ வேற நல்ல பொண்ணா பாத்துக்கோ.."
"இப்போ அவசரத்துக்கு நான் எங்க போய் நல்ல பொண்ண தேடுவேன்... நீதான் திருட வந்து எங்கிட்ட வசமா சிக்கி இருக்க.."என்று யாதவ் நக்கலாக சொல்லியதும் கோபமான சீதா,
"இதுக்கு நான் ஒத்துக்காட்டி?"
"நீயும் உன்னோட ப்ரெண்ட்ஸும் ஜெயிலுக்கு போய் களி திங்க வேண்டியதுதான்.."
"உங்களான்ட வீட்ல என்னல்லாம் ஏத்துக்க மாட்டாங்க சாரே.."
"அது என் பிரச்சனை நான் பாத்துக்குறேன்"
'விடா கண்டன் விடமாட்டான் போலயே... சரி அடுத்த பிட்ட போடுவோம்' என்று நினைத்த சீதா
"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.. நான் வேணா உனக்கு நல்ல பொண்ணா பாத்துனு வந்து சொல்றேனே"
"ஏன் விட்டா அப்படியே இந்த நகையை தூக்கிட்டு எஸ்கேப் ஆகுறதுக்கா?எனக்கும் கல்யாணத்துல இஷ்டம் இல்ல தான்.. நேரம் வரும்போது டிவோஸ் பண்ணிடலாம் ரெண்டு பேரும்.. இப்போதைக்கு ஒத்துக்கோ"
சீதாவிற்கு வேறு வழி இல்லை அவன் சொல்வதைக் கேட்கும் நிலையில் அல்லவா அவள் இருக்கிறாள்...
"சரி கல்யாணத்துக்கு ஒத்துக்குறேன்.. டிவோர்ஸு எப்ப பண்ணுவ?"
"ஒரு பத்து வருஷத்துல டிவோர்ஸ் பண்ணிடுவேன் கண்டிப்பா" என்று யாதவ் சொன்னதை கேட்டதும், சீதா அரண்டு விழித்தாள்.
"அத்தெல்லாம் முடியாது சாரே.. நான் கிழவியார காட்டியும் உன்னான்ட குப்ப கொட்டனுமா? ஒரு மாசம்தான் என்னாலனா பொறுத்துக்க முடியும்.."
"சரி உனக்கும் வேணா எனக்கு வேணாம் ஏழு வருஷம் .."
"அய்ய ஒரு மாசம் எங்க
ஏழு வருஷம் எங்க... ஒரு மூணு மாசம் ஓகே.."என்று சீதா சொல்ல,
"சரி அஞ்சு வருஷம்" என்றான் யாதவ்...
"ஸ்ஸப்பா...இந்தப் பாரு சாரே அநியாயம் பண்ற நீ.. வருஷ கணக்குல சொல்லிட்டு இருக்குற?..அவ்வளவு நாள் எல்லாம் என்னாலனா நடிச்சிட்டு இருக்க முடியாது"
"சரி மூணு வருஷம்..."என்று யாதவ் பெருந்தன்மையாக சொல்ல,
முடியவே முடியாது ஆறு மாசம் என்றாள் சீதா.
"உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ஒரு வருஷம்" என்று யாதவ் சொல்ல, கடைசியில் அதுவே முடிவானது.
"சரி ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு சாரே.."என்றாள் சீதா.
"என்ன கண்டிஷன்?"என்று கண்களில் கூர்மையுடன் கேட்டவனை ஓரப் பார்வை பார்த்தவள்,
"எனக்கு மாசம் மாசம் துட்டு தந்தா தான் எனக்கு சரிப்பட்டு வரும்... ஏன்னா நான் ஒரு வருஷம் என்னான்ட தொழில (திருடுவதை) விட்டுனு இருக்கணுமே.."
"கண்டிப்பா தரேன் மாசம் இர
ரெண்டு இலட்சம் ஓகேவா..."என்று யாதவ் கேட்க,
'ஆஹா நம்ம ஆயிரம் இரண்டாயிரம் வரும்னு எதிர்பார்த்தா இந்த ரோபோ லட்ச கணக்குல தரும் போலயே'என்று நினைத்த சீதா அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
"சரி சரி கம்மிதான் இருந்தாலும் ஒத்துக்குறேன்"என்று வெளியில் கெத்து குறையாமல் சொன்னாள் சீதா.
அதன் பிறகு யாதவ் ஒரு பேப்பரில் இருவரது பொதுவான விருப்பங்களையும் கண்டிஷன்களையும் எழுதினான்.
"இத வச்சு என் அட்வகேட் கிட்ட பேசி டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணிடுறேன்... ஒரு வருஷம் காண்ட்ராக்ட்.."என்று யாதவ் சொல்ல, பாதி விருப்பும் வெறுப்பும் கலந்த நிலையில் இருந்த சீதாவும் சரி என்று சொன்னாள்.
நேற்று இரவு நடந்ததை நினைத்து யோசனையில் இருந்த சீதா அப்படியே தூங்கி விட, மறுநாள் காலையில் அனன்யா தான் அவளை எழுப்பியது.
"அண்ணி... சீக்கிரம் எழுந்திரிங்க .. பாட்டி உங்கள கூப்பிடுறாங்க.."
கைகளை விரித்து உடலை நெளிந்து வளைத்து சோம்பல் முறித்த சீதா, மணியைப் பார்க்க அது ஐந்து என்று காட்டியது.
'மிட் நைட்ல எழுப்பி சாகடிக்குதுங்களே..'
"காலங்காத்தாலே அவங்களுக்கு என்னத்த பண்ணனுமாம்?"என்று அலுப்பான குரலில் கேட்க,
"பாட்டி சொன்னாங்க நீங்கதான் இன்னைக்கு குளிச்சிட்டு விளக்கு ஏத்தணுமாம்.."
"ஆஆஆ.. நேத்து தானே ஏத்துனேன்... அது போதாதா?"
அனன்யா சிரித்துக்கொண்டே,
"இன்னைக்கு செவ்வாய்க்கிழமை.. எப்பவும் அம்மா தான் விளக்கேத்துவாங்க.. ஆனா பாட்டி ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க.. இனி நீங்கதான் செய்யணுமாம்"என்று சொல்லவும்,
'கொடுமை பண்றாங்களே சாமி.. நான் இந்நேரத்துக்கெல்லாம் குப்புற அடிச்சு கும்தாவா தூங்குறவ... என்னான்ட போய் இப்படி பண்ணுதுங்களே'என்று அலுத்து கொண்டாலும், குளித்துவிட்டு அனன்யாவின் சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு சீதா கீழே வரும் பொழுது , மியூசிக் பிளேயரில் சுப்ரபாதம் ஓடிக் கொண்டிருந்தது. தாயம்மாள் தெய்வத்திற்கு அவல் அரிசி பொறி பொரிகடலை கலந்து பிரசாதம் தயாரித்திருக்கும் பணியில் இருந்தார்.
யமுனா பூ கட்டி முடித்திருக்க, அதை கீழே வந்த சீதாவிற்கும் அனன்யாவிற்கும் சரி பாதியாய் வைத்து விட்டவர், தான் தொடுத்து வைத்திருந்த கதம் பூவை பூஜை அறையில் இருந்த தெய்வங்களுக்கு போட்டு விட்டு சீதாவை விளக்கேற்ற சொல்ல, அவளும் சிவனே என்று விளக்கேற்றிவிட்டு அவ்வளவு தானா? என்பது போல் பார்க்க, அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்ட சொன்னார் தாயம்மாள்.
ஒருவழியாக அவர் சொன்னபடி எல்லாம் செய்து சாமி கும்பிட்டு விட்டு அப்பாடி... என்று சீதா அமர, அடுத்த வேலையாக இன்று ..வீட்டு மகாலட்சுமி ஆன அவள் தான் முதலில் டீ போட்டு சமையல் வேலையை தொடங்க வேண்டுமாம்.. என்று தாயம்மாள் சொல்ல, உண்மையாகவே கடுப்பாகிவிட்டாள் சீதா.
'என் குப்பத்துல மகாராணி கணக்கா மஜாவா இருந்த என்ன எங்கன வந்து நிறுத்திருக்கு பாத்தியா இந்த சனியம் புடிச்ச விதி? எவன்டா சொன்னது பணக்காரன் வீட்ல ஜாலியா இருக்கலாம்னு'என்று புலம்பி கொண்டே சமையலறையில் டீ போட்டுக் கொண்டிருந்த சீதாவின் அருகே வந்த அனன்யா,"அண்ணி ஹெல்ப் வேணுமா?" என்று கேட்டாள்.
"ஹெல்ப்ல்லாம் வேணாம் அனு வேலையை பினிஷ் பண்ணிட்டேன்...ஆமா உன்னான்ட அண்ணா சீக்கிரம் எழுந்திருக்க மாட்டானா..ஹ்ஹ்ம் மாட்டாங்களா?"என்று சீதா மெதுவான குரலில் கேட்க,
"அண்ணா எப்பவும் 6.30 க்கு எழுந்து ஜாக்கிங் போவாங்க.. இன்னும் எழும்புறதுக்கு அரை மணி நேரம் இருக்கே.."என்றாள் அனன்யா.
'மவனே என்னான்ட தூக்கத்த கெடுத்துட்டு நீ மட்டும் நல்லா தூங்குறியாடா ரோபோ மூஞ்சி வாயா...'என்று மனதிற்குள் அவள் கொதித்துக் கொண்டிருக்க,
அந்நேரம் பார்த்து தாயம்மாள் அவள் போட்டு வைத்திருந்த டீயை ஒரு கப்பில் ஊற்றி அதை யாதவ்விற்கு அவளிடம் கொடுத்து அனுப்ப,
பயங்கர கோபத்தில் இருந்த சீதா அதை வாங்கிக் கொண்டு அவன் அறைக்கு வந்த பொழுது தலையணை ஒன்றை கட்டிப்பிடித்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் யாதவ்.
அவளுக்கு இருந்த கோபத்தில் கொண்டு வந்திருந்த டீயை அவன் முகத்தில் ஊற்றி விடலாமா? என்று யோசித்தவள் அவன் தனக்கு பணம் தர வேண்டுமே என்பதால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டு டீயை டேபிளில் வைத்தவள்,'வன்முறைய கையில எடுக்காம இவன சாப்டாக்கி பழி வாங்கணும்'என்று நினைத்து
அவன் அறையை சுற்றி பார்க்க, அவனின் ட்ரெஸ்ஸிங் டேபிள் ஓரத்தில் இருந்தது அவளுக்கு தேவையான பொருள்...
'ஆஹா கெடச்சிட்டே'என்று அதை கையில் எடுத்துக் கொண்டவள், மெதுவாக உறங்கிக் கொண்டிருந்தவனின் அருகே வந்து அவனின் தூக்கம் கலையாதவாறு அவனின் நெற்றியில் ஆரம்பித்து வரை கன்னம், தாடை வரை தன் பணியை முடித்தவள்..
'இப்பதாண்டா அம்சமா இருக்க அம்பி.. என்னான்ட கண்ணே பட்டுடும் போல இருக்கு' என்று திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தவள், அவனின் கன்னத்தைக் கிள்ளி விட, அடுத்த நொடி யாதவ்வின் கைப்பிடியில் இருந்தாள் சீதா.
தொடரும்..
Happy reading😊❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro