Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟34💟

வேறு வழியில்லாத சுவாஹனா மெதுவாக எழுந்து நின்றாள், 'தூங்குவதைப் பார்... வளர்ந்துக் கெட்டவன், கட்டில் நீளத்துக்கு படுத்துக் கொண்டால் தாண்டி செல்வதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது?' என சிணுங்கினாள்.

மெல்ல கட்டில் அதிராமல் சாய்கிருஷை தாண்டுவதற்காக காலை உயர்த்தினாள் சுஹா, அந்தோ பரிதாபம்... அந்நேரம் பார்த்தா அவன் புரண்டு படுக்க வேண்டும்? திடீரென்று அவன் அசையவும் எதிர்பாராது தடுமாறியவள் அவன் மீதே பொத்தென்று பூப்பந்தாக விழுந்தாள்.

ஆனால் அவனுக்கு பூப்பந்தாக தெரியவில்லை போலும்? காலில் பெரிய பாறாங்கல்லே விழுந்த மாதிரி ஆவென்று அலறி நடுநிசியில் ஊரை கூட்ட முயன்றான் கிருஷ்.

அதிர்ந்தவள் வேகமாக அவன் மீதே நீந்தி முன்னேறி அவனுடைய வாயை பொத்தினாள்.

"உஷ்... உஷ்... ப்ளீஸ்... ப்ளீஸ்... கத்தாதீர்கள்!" என்றாள் சுஹா, பாட்டி எழுந்து வந்து விடுவார்களோ என்ற பதட்டத்துடன்.

"ஆ... அம்மா... எதற்குடி இப்படி நடுராத்தியில் என் காலை போட்டு உடைத்தாய்?" என்று காலை பிடித்தபடி ஒரேடியாக முனகினான் கிருஷ்.

"ஐயோ இல்லை... ரெஸ்ட் ரூம் போகலாம் என்று எழுந்தேன். தாண்டும் பொழுது நீங்கள் திரும்பி படுக்கவும் தெரியாமல் தடுமாறி விழுந்து விட்டேன்!" என்றாள் பப்பி ஃபேஸை முகத்தில் கொண்டு வந்து.

"நீ தெரியாமல் எல்லாம் விழுந்திருக்க மாட்டாய், இரவு உனக்கு இந்த ஓரம் படுக்க இடம் கொடுக்கவில்லை என வேண்டுமென்றே எகிறி குதித்து என் காலை உடைக்கப் பார்த்திருப்பாய்!" என்று முறைத்தான்.

"ஆங்... அந்த பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது, நீங்கள் தான் அது போலெல்லாம் எகிறி குதிப்பீர்கள். உங்கள் கால் உடையும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு வெயிட்டாகவா இருக்கின்றேன்?" என பாவமாக வினவினாள் சுஹா.

அப்பொழுது தான் பெரும் பூக்குவியல் என அவள் தன் மீது முழுதாக விழுந்து படர்ந்து கிடப்பதை உணர்ந்தான் அவன்.

அவள் உடலின் மென்மை அவன் உணர்வுகளை தீண்ட, அவனுடைய விழிகள் மிகவும் நெருக்கமாக தெரிந்த அவள் முகத்தை ஆவலுடன் மொய்த்தது.

அதுவரை இருந்த பாவனை மாறி அவன் விழிகளில் ஒருவித மயக்கம் பரவவும் சுதாரித்த சுஹா, தன்னிலை உணர்ந்து அவன் மீதிருந்து வேகமாக எழ முயன்றாள்.

ஆனால் அதை செயல்படுத்த விடாமல் அவளை தன் கரங்களால் சுற்றி வளைத்து தன்னோடு சேர்த்து இறுக்கினான் கிருஷ். அவனை திகைப்போடு பார்த்தவள், செய்வதறியாத பதட்டத்துடன் இமைகள் படபடக்க தடுமாறினாள்.

அதைக் கண்டு இதழ்களில் புன்முறுவல் பூக்க, அவளை தன் அணைப்பிலிருந்து விலக்காமலே மெத்தையில் தனக்கு கீழே புரட்டினான் கிருஷ்.

அவன் டீசர்டை இறுகப் பற்றியவள் சத்தமிட்ட இதயத்துடிப்பை சமன்செய்யும் வழி தெரியாமல் விழிகளை உயர்த்தி அவனையே பிரமிப்புடன் பார்த்தாள்.

படபடப்பில் லேசாக வியர்வை அரும்பியிருந்த நெற்றியில் குனிந்து மென்மையாக இதழ் பதித்தவன், "சரி போ!" என்றான் கிசுகிசுப்பாக.

தொண்டையில் அடைத்ததை விழுங்கியபடி, ம்... என்று மலங்க மலங்க விழித்தாள் அவள்.

அவள் நிலையை எண்ணி பொங்கிய சிரிப்பை இதழ் கடித்து அடக்கியவன், "ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என சொன்னாயே, போகவில்லையா?" என்று கேலியாக புருவம் உயர்த்தினான்.

அவன் கேலியில் முகம் குங்குமாய் சிவக்க, அவனை தள்ளிவிட்டு ஓடினாள் சுஹா.

திரும்பி அறைக்கு வந்தவளுக்கு அவனுடன் உறங்க செல்ல கூச்சமாக இருந்தது. தயக்கத்துடன் சென்று ஜன்னல் கம்பிகளை இறுக்கப் பற்றியபடி நின்றாள். உடலும், மனமும் எதையோ எதிர்பார்த்து தவித்து கொண்டிருந்தது. கிருஷின் செயல்கள் அவள் ஆன்மாவை சிலிர்க்கச் செய்தது போல் உணர்ந்து தன்னுடல் பாரம் கூட தாங்க முடியாமல் விழிகள் மூடி கம்பியில் தலைசாய்த்து நின்றாள்.

சில நிமிடங்கள் கழித்து, "சுஹா!" என்று கிறக்கமாக அழைத்தான் கிருஷ்.

ம்... என்று குரல் மட்டும் கொடுத்தவள் அவன் புறம் திரும்பவேயில்லை.

"அங்கேயே நின்றுக் கொண்டிருக்கிறாயே தூங்க வரவில்லையா?" என அக்கறையுடன் வினவினான்.

"இல்லை... எனக்கு தூக்கம் வரவில்லை!"

"அதற்காக விடிய விடிய அங்கேயே நிற்கப் போகிறாயா என்ன?"

பதிலேதும் கூறாமல் மௌனம் சாதித்தாள் சுஹா.

"இங்கே வா!"

"ம்ஹும்... நீங்கள் தூங்குங்கள்!"

"உனக்கு வேண்டுமென்றால் இந்த ஓரமாகவே இடம் கொடுக்கிறேன், வந்து படுத்துக் கொள்!" என்றவனின் குரலில் குறும்பு கொப்பளித்தது.

'ரொம்ப தாராளம் தான்!' என கன்னம் சிவந்தவள், "பரவாயில்லை நீங்களே படுத்துக் கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம்!" என்று மறுத்தாள்.

"ப்ச்... இப்பொழுது நீ வரப் போகிறாயா இல்லையா?" என்று அதட்டினான் கிருஷ்.

மெல்ல தயக்கத்துடன் அருகில் வந்தவளை ஒரே இழுப்பில் பிடித்திழுத்து கட்டிலில் சாய்த்தவன், "பயப்படாமல் தூங்கு... நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்!" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

அதைக் கேட்டவள், ஐயோ... என்று வெடித்த நாணத்தோடு திரும்பி தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள். அவனுடைய உரத்த சிரிப்பு, விடியும் வரை அவளை அவன் புறம் திரும்பாமல் இருக்க செய்தது.

காலையில் இருவரும் ஆற்றுக்கு குளிக்க போவதற்கு தேவையான துணிமணிகளை எடுத்து கொண்டு கிளம்பினர்.

காரை எடுக்க சென்ற கிருஷிடம், "என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று வினவினாள் சுஹா.

"ஏன் ஆற்றுக்கு போவதற்கு காரை எடுக்கிறேன்?"

"அதெல்லாம் எதுவும் வேண்டாம், நடந்துப் போகலாம். நீங்கள் அப்படியே கிராமத்தை சுற்றி பார்த்தது போலவும் இருக்கும்!" என்று அழைத்து சென்றாள்.

வழியெங்கும் பரந்து விரிந்திருந்த இயற்கை அழகை ரசித்து கொண்டே வந்தவன் அவ்வப்பொழுது தனக்கு தோன்றிய சந்தேகங்களை எல்லாம் அவளிடம் கேட்டு தெரிந்துக் கொண்டான்.

வரப்பில் நடக்க தடுமாறியவனை கரம் பிடித்து அழைத்து சென்றாள் சுஹா.

ஒருவழியாக ஆற்றுக்கு வந்து சேர்ந்ததும் முகத்தை சுருக்கினான் கிருஷ்.

"ஏய்... இதென்ன இப்படி இருக்கிறது?"

"ஏன் எப்படி இருக்கிறது?"

"நீட்டாக படியெல்லாம் கட்டி இல்லாமல், இப்படி கன்னாபின்னாவென்று இருக்கிறது!"

"நீங்கள் எதிர்பார்ப்பது போல் இது டூரிஸ்ட் ப்ளேஸும் இல்லை, ஸ்விம்மிங் பூலும் இல்லை. சாதாரணமாக ஊருக்குள் இருப்பதெல்லாம் இப்படி தான் இருக்கும். அதுவும் இல்லாமல் இங்கும் படித்துறை இருக்கிறது, ஆனால் அங்கே கூட்டமாக இருக்கும். இங்கே ஆள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது, குளிக்க வசதியாக இருக்கும் என்பதால் எப்பொழுதும் நாங்கள் இங்கே தான் வருவோம்!" என்றாள் விளக்கமாக.

ம்... என்று அமைதியாக நின்றவனை பார்த்து சிரிப்பு வர, "குளிக்க போகவில்லையா?" என்று கேட்டாள் சுஹா.

"ஆங்... இதோ..." என்றவன், "நீ?" என இயல்பாக கேள்வி எழுப்பினான்.

"நான் இந்த துணிகளை அலசி விட்டு வருகிறேன், பாட்டி வேண்டாம் என்று தான் சொன்னார்கள். எனக்கு தான் ஆற்றில் அலச ஆசையாக இருக்கிறது என எடுத்து வந்து விட்டேன். நீங்கள் போங்கள்!" என்று துணிகளை துவைக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரம் அவளுடைய வேலையையும், ஆற்றையும் மாற்றி மாற்றி வேடிக்கைப் பார்த்தவன் பின்பு தன் ஆடைகளை களைந்து விட்டு ஆற்று நீரில் இறங்கினான்.

கிருஷை சந்திக்க சங்கடப்பட்டுக் கொண்டு சிறிது நேரம் கழித்தே நீரில் இறங்கினாள் சுஹா.

சிறுப்பிள்ளையிலிருந்தே இங்கே வந்து நீரில் விளையாடுவதென்றால் அவளுக்கு கொள்ளை இஷ்டம். ஊரில் இருக்கும் வரை காமாட்சி பாட்டியுடன் தினமும் இங்கே வந்து விடுவாள்.

"ஏய்... என்ன அப்படியே குளிக்க வருகிறாய் டிரஸ் சேஞ்ச் பண்ணலை?" என்று கேள்வி எழுப்பினான் கிருஷ்.

அவன் இயல்பாக கேட்டாலும் சுஹாவை வெட்கம் பிடுங்கி தள்ள, "யோவ்... உன் வேலையை பார்யா!" என்றாள் பட்டென்று பதில் சொல்ல கூச்சப்பட்டு கொண்டு.

"யோவ்வா? இனி நான் வாயை மூடிக் கொண்டிருப்பது தான் உத்தமம் என்று நினைக்கிறேன்!"

"தெரிந்தால் சரி!" என நீரில் மூழ்கி எழுந்து விளையாட ஆரம்பித்தாள் அவள்.

ஆனால் நம் கிருஷால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியுமா என்ன? கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே தோன்றி விடாது...?

அவளின் விளையாட்டை கவனித்துக் கொண்டிருந்தவன், "ஆமாம் உனக்கு நீச்சல் தெரியுமா?" என கேட்டான்.

"ம்... தெரியுமே... காமாட்சி பாட்டி தான் சொல்லிக் கொடுத்தார்கள், அவர்கள் நன்றாக நீந்துவார்கள்!"

"ச்சே... மிஸ்ஸாகி விட்டதே!" என்று சலித்துக் கொண்டான் அவன்.

"ஏன்... என்னவாயிற்று?"

"இல்லை... உனக்கு நீச்சல் தெரியவில்லை என்றால் நீ நீரில் தடுமாறும் பொழுது நான் ஹீரோ மாதிரி வந்து காப்பாற்றி இருப்பேன், ஒரே ரொமான்டிக்காக இருந்திருக்கும். ப்ச்... இப்பொழுது அந்த சான்ஸ் மிஸ்ஸாகி விட்டது!" என்று பெருமூச்சு விட்டான்.

"ஐய்யே... ரொம்ப ஆசை தான், ஆளைப் பார்!" என பழிப்பு காண்பித்து விட்டு, தன் தலைமுடியை ஷாம்பூவால் அலச ஆரம்பித்தாள் சுஹா.

அவளை பார்க்க பார்க்க அவனுடைய மண்டைக்குள் கேள்வி ஒன்று வண்டாய் குடைய ஆரம்பித்தது.

'ஆமாம்... இவள் எப்படி டிரஸ்ஸோடு சோப் தேய்த்து குளிப்பாள்? கேட்டால் திட்டுவாள், பரவாயில்லை புதுசா என்ன? தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும்!' என்று அவளிடம் விவரம் கேட்டான்.

"இப்படி டிரஸ்ஸோடு குளித்தால், நீ எப்படி இப்பொழுது சோப் போட முடியும்?"

"ஷ்... அப்பா... எங்கிருந்து தான் இப்படி எல்லாம் உங்களுக்கு சந்தேகம் தோன்றுமோ தெரியவில்லை!" என அலுத்துக் கொண்டவள், "அந்த கவலை உங்களுக்கு எதற்கு?" என்று முறைத்தாள்.

"ம்... எல்லாம் ஒரு ஜெனரல் நாலேஜ் தான். ப்ச்... நீ கேட்டதற்கு பதில் சொல்!"

"உஃபோ... சுடிதார்கு உள்ளேயே போட்டுக் கொள்வேன் போதுமா?" என்றாள் சலிப்புடன்.

"அப்பொழுது துணியை துவைக்க வேண்டுமென்றால் துணிக்கு வெளியில் சோப் போட்டுக் கொள்வாயா?" என பட்டென்று கூறி விட்டு கடகடவென்று சிரித்தான் கிருஷ்.

"யூ... பிச்சிடுவேன்!" என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு நீரை அள்ளி அடுத்தடுத்து அவன் மீது வேகமாக வீசினாள் சுஹா.

ஏய்... என்று அருகில் வந்து அவள் கரம்பற்றி தடுத்தவனை பிடித்து ஒரே தள்ளாக தண்ணீரில் தள்ளி விட்டவள், "என்னை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு நீங்கள் ஒழுங்காக குளிக்க பாருங்கள், கிளம்ப வேண்டும்!" என்று நீந்த ஆரம்பித்தாள்.

தலையசைத்தபடி நீரில் மூழ்கியவன், திடீரென்று துள்ளிக் குதித்தான்.

'என்ன இது?' என புருவம் சுருக்கியபடி நின்று ஆற்றினுள் உற்றுப் பார்த்தான் கிருஷ்.

மீண்டும் எதுவோ அவன் காலை கவ்வ, ஆ... என்று தடுமாறி வேறுப்பக்கம் சென்றான். ஆனால் அது அவனை விடாமல் துரத்தி துரத்தி கவ்வியது.

"ஏய் சுஹா... இந்த ஆற்றில் பாம்பு இருக்கிறதா என்ன?"

"என்ன உளறுகிறீர்கள்?" என நீரில் மிதந்தாள் அவள்.

"ஏய்... இல்லை நிஜமாகவே எதுவோ என் காலை கடிக்கிறது!" என்று புலம்பியவனை கண்டு சிரித்தவள், "ஓ காட்! அது மீனாக இருக்கும், அளவில் சற்று பெரியதாக உள்ளது லேசாக காலை கவ்வும். உடனே சுறா மீன் என்றளவுக்கு அலறாதீர்கள். சங்கரா மீனில் சற்று சிறிய அளவாக தான் இருக்கும்!" என்றாள்.

ஓ... என்றவன், "இவ்வளவு நேரமாக ஒன்றும் செய்யவில்லையே?" என கேட்டான்.

"ஆங்... இவ்வளவு நேரமாக அதற்கு பசி எடுக்கவில்லையாம், பசித்ததும் உங்கள் காலை கடித்து சாப்பிட வந்து விட்டது!" என்றாள் நக்கலாக.

அவளை முறைக்க முயன்று தோற்றவன் முடியாமல், அங்கும் இங்கும் தாவி குதிக்க ஆரம்பித்தான். மீன் போல அவன் துள்ளிக் குதிப்பதை கண்டு கலகலவென்று நகைக்க ஆரம்பித்தாள் சுஹா.

இதுவரை அவள் இப்படி வாய் விட்டு சிரிப்பதை பார்த்திராத கிருஷ், வியப்புடன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

இளங்காலை வெயிலில், நீரில் மூழ்கி எழுந்ததால் உண்டான நீர்திவலைகள் அவள் முகத்தில் வைரமென மினுக்க மினுக்க கன்னங்கள் குழிய நகைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro