டிங் டாங் - 25
'சாரி'
'சாரி'
'சாரி'
'சாரி'
'சாரி'
இதோடு முப்பதுக்கும் மேற்பட்ட குறுந்செய்திகளை வரிசையாக அனுப்பியாயிற்று வைஷ்ணவி பக்கமிருந்து, ஆனால் எந்த மன்னிப்பிற்கும் பதில் தான் கார்த்தியிடம் வரவில்லை.
அவனுடைய கோவத்தின் நியாயத்தை உணர்ந்து, கணவனின் வார்த்தையில் மட்டும் தான் தவறுள்ளது என்று புரிந்தது, என்ன இருந்தாலும் அவனை கை நீட்டி அடித்திருக்க கூடாதென்று மனம் வருந்த தான் கணவனுக்கு கடந்த ஒரு மணி நேரமாக செய்தி அனுப்பிக்கொண்டே இருப்பது.
இன்றோடு ஐந்து நாட்கள் ஆகியிருந்தது வைஷ்ணவி செங்கோட்டை வந்து. அன்று விட்டு சென்றவன் தான், அதன் பிறகு இருவரும் ஒருமுறை கூட கைபேசியில் கூட பேசிக்கொள்ளவில்லை.
உன் வீட்டிற்கு போ என்று சொன்னவன் பேச்சை கோவத்தில் செயல்படுத்த முடியவில்லை வைஷ்ணவியால், உன்னை திருமணம் செய்த பிறகு இது தான் என் வீடு என உரிமையாய் அவன் வீட்டிற்கு தான் அவள் கால்கள் சென்றது. உள்ளே நுழைந்த வைஷ்ணவியை பார்த்தவுடன் மகாலட்சுமிக்கு பயம் வந்து ஒட்டிக்கொண்டது.
"எங்க ம்மா கார்த்தி?" வாசலை பார்த்து கேட்டார் முதல் கேள்வியாக.
"நான் பஸ்ல தான் த்தை வந்தேன், அவருக்கு நாளைக்கு ஏதோ பெரிய ஆர்டர் இருக்காம், அதான் நாளைக்கு வர என்னால வெயிட் பண்ண முடியாதுன்னு வந்துட்டேன்"
கண்களை சென்றடையாத சிரிப்பை முகத்தில் தேக்கி நிற்கும் மருமகளிடம் மறு கேள்வி கேட்கும் முன்பே, "ஏனுங்க மஹாராணி வந்துட்டீங்களா..." என சேர்மத்தாய் வந்து நின்றார்.
"மஹாராணி இல்ல... நான் பட்டது இளவரசி... என் செல்ல ராஜமாதாவுக்கு நான் என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் தெரியுமா?" அவர் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் கையை தட்டிவிட்டார் பெரியவர்.
"என் மகனையும் மருமகளையும் உன் கைக்குள்ள போட்டது பத்தலையோ உங்களுக்கு..." குத்தலாக பேசியவர் அவளுடைய வாடிய முகத்தை பார்க்கவே இல்லை, "மயக்கி என்ன பயன்? இந்த வூட்டுக்கு வாரிச பட்டது இளவரசியால குடுக்க முடியலையே கண்ணு... ஏன் மருமவளே?"
மஹாலக்ஷ்மியை பார்த்தவர், "ஜாதகம் பாத்துப்போட்டு தான இந்த கலியாணம் நடந்துச்சா இல்ல உம்ம மருமவளுக்காக அதையும் பாத்தாச்சுன்னு என்ற காதுல நூலை சுத்துணியலா?"
"அத்த என்ன அத்த இது? புள்ள மனசு நோகடிக்காதிங்க"
அவர் வார்த்தைகளை கேட்ட மஹாலக்ஷ்மிக்கே கண்ணீர் பெருக்கெடுக்க வைஷ்ணவியோ பெருகிய அழுகையை சிரிப்பை வைத்து மறைத்து, "கிழவிக்கு குசும்பு ஜாஸ்தி"
அவருக்காக வாங்கிய காட்டன் சேலையை அவர் கையில் கொடுத்து, "நான் அம்மாவை பாத்துட்டு வர்றேன்" பொதுவாக செய்தியை கூறி அன்னை வீட்டிற்கு ஓடினாள். அன்னையிடம் சம்ரதாயத்திற்காக பேசியவள் சில நிமிடங்கள் அங்கிருந்து கார்த்தியின் வீட்டிற்கு வந்த பொழுது சுப்பிரமணி இருந்தார் இல்லத்தில்.
"என்ன மாமா இன்னைக்கு ஏன் இவ்ளோ லேட்?"
"ஸ்கூல்ல கொஸ்டின் பேப்பர் வந்தது ம்மா, அதான் சைன் போட்டு வாங்கி வைக்க போனேன், நீ எப்போ வைஷ்ணவி வந்த?"
"அப்பயே வந்துட்டேன் மாமா அம்மாவை பாக்க போனேன்" மஹாலக்ஷ்மி மருமகளை உண்ண அழைத்தார்.
மருமகள் விரும்பி உண்ணும் உருளைக்கிழங்கு குருமாவுடன் தோசை செய்திருக்க அவளோ ஒரு தோசையோடு வயிற்று வலி என காரணம் கூறி மேலே சென்றதும் கணவனிடம் தன்னுடைய அத்தை வைஷ்ணவியிடம் பேசியதை கூற ஆத்திரப்பட்டவர் அன்னையை இது போல் பேசவே கூடாதென கடுமையாய் எச்சரித்து வைத்தார். அதன் பிறகு சேர்மத்தாய் வைஷ்ணவியிடம் பேசுவதே இல்லை.
அவளும் மனதின் வேதனை அத்தனையும் மறைத்து ஷெர்லினுக்கு உதவி செய்கிறேன் என கூறி முக்கால்வாசி நேரம் அவள் வீட்டிலேயே இருக்க அதற்கும் ஜாடை மாடையாக சேர்மத்தாய் பேச தங்கள் அறைக்குள் சென்று கண்ணங்களை மூடி கணவனை முடிந்தமட்டும் திட்டி தீர்த்துவிடுவாள் அழுகையோடே.
ஆறு மாதமாக கணவனின் கை சிறையில் இருந்தவளுக்கு இரவில் இருளும் தனிமையும் துணையாகி போக தலையணையை அணைத்து நடு நிசியை தாண்டிய பிறகும் தூக்கம் வராமல் திண்டாடிப்போனாள்.
தீண்டலும், கொஞ்சலுமாய் எந்நேரமும் அவளை பித்தாக்கி வைத்திருந்தவன் அருகாமை வேண்டி மனம் ஊமையாய் அழுக, அவன் மேல் கட்டுக்கடங்காத ஆத்திரம் தான் வரும்.
அதே சமயம் கார்த்தியோ பல முறை, "அம்மா மட்டும் உண்ண பாக்கலனா இந்நேரம் நான் உன்ன மிஸ் பண்ணிருப்பேன்ல டா?" என வருத்தத்தோடு அவள் முகம் பார்த்து கேட்ட பொழுது, "விடுங்க கார்த்தி" என அமைதியாக்கிவிடுவாள்.
எத்தனை முறை இது பற்றி பேசியிருப்பேன் அப்பொழுது கூட என்னால் தான் இந்த திருமணம் நடந்தது என உண்மையை கூறியிருக்கலாம் அல்லவா? அதை விட்டு பித்தன் போல் என்னை புலம்பவிட்டு வேடிக்கை தானே பார்த்துளாள் என்ற கோவம் அவனுக்கு.
அதோடு விட்டாளா? சுபத்ரா விசயமும், அவள் அறைந்ததும். அந்த சிறிய கைகளால் அடித்த பொழுது கூட வலி இல்லை என்றாலும் ஏதோ ஒன்று இன்னும் பேசினால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வளர்ந்து உறவில் விரிசல் வர கூடாதென்று தான் உடனே செங்கோட்டை வந்து விட்டது மனைவியை.
வைஷ்ணவி சென்ற அந்த நாள் இரவே மனைவி இல்லாமல் அவனுக்கும் உறக்கம் வராமல் தான் போனது, அதனால் தான் மறுநாள் நண்பன் திருநெல்வேலி செல்ல வேண்டும் என்று அழைத்த பொழுது அவள் மேல் இருந்த கோவத்தை தணிக்க மாற்று வழியாய் கருதி சென்றுவிட்டான்.
அங்கு சென்ற நான்கு நாட்களும் நிற்க கூட நேரமில்லாமல் அவனுக்கு ஓட மனைவியை வார்த்தைகளால் வதைத்தது கூட மறந்து போனது. சிவந்த விழிகளோடு தன் தோளில் சாய்ந்தவளின் வாடிய முகம் மட்டுமே கணவன் முகத்தை அரித்தது.
அப்பொழுது தான் திருநெல்வேலியில் இருந்து வந்த கார்த்தி வீட்டின் கதவை திறக்கும் பொழுது குறுந்செய்தி வந்த சத்தம் கேட்டு எடுத்து பார்க்கும் பொழுது, மனைவியிடமிருந்து எண்ணென்ற செய்திகள் வரிசைகட்டி வந்து நின்றது.
'சாரி' 'சாரி' என நூற்றுக்கும் மேற்பட்ட மன்னிப்புகள், அது மட்டுமல்ல, 'என்கிட்ட பேச மாட்டிங்களா கார்த்திக்?' என இறுதியாக அவள் அனுப்பியிருந்ததை பார்த்தவன் உடல் மொத்தமும் செயல் இழந்து கண்களை மூடி கதவில் தலை வைத்து அசையாது நின்றுவிட்டான்.
ஐந்து நாட்களாக வீட்டிலிருந்து தந்தை, அன்னை, சகோதரி அழைத்தாலும் பேசாதிருந்தவன் தந்தையிடம் வேலை இருப்பதாக கூறி பேச்சை முடித்துவிட்டான். அன்னையிடம் பேசவே இல்லை, அவர் மேலும் சிறு கோவம். தற்பொழுது தன்னவள் அனுப்பியிருப்பது சிறிய செய்தியாகவே இருந்தாலும் அவளது ஏக்கத்தை மொத்தமாய் அதில் இறக்கியிருந்தாள்.
அவளிடம் ஓடி சென்றடைய வேண்டிய இதயத்தை ஆணின் சோர்வு தடுக்க, மனதை திடப்படுத்தி கதவை திறந்து உள்ளே வந்து வெந்நீரில் நீண்ட குளியல் ஒன்றை போட்டான்.
சோர்வோடு வீடு மொத்தமும் நிறைந்த மனைவியின் வாசனையும், குரலும் படுக்கையில் அவனை வீழ்த்திய தருணம் தந்தையின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்தவன், "நாளைக்கு பேசுறேன் ப்பா" என்றான் கெஞ்சலாக.
"அப்பா பேசுனா கேப்ப, அம்மா போன் பண்ணா எடுக்க மாட்டியா ப்பா?" மனந்தாங்களுடன் அன்னை பேசவும் உடலிலிருந்து சோர்வெல்லாம் பறந்தது கார்த்திக்கு.
"வேலை அதிகம் ம்மா..."
"அம்மாகிட்ட பொய் சொல்ல வேணாம் கார்த்தி, எனக்கு உன்ன பத்தி தெரியாதா?"
"தெரிஞ்சும் ஏன் ம்மா இப்டி பொய் சொல்லி கல்யாணம் பண்ணனும்?"
"அதுக்கான காரணத்த வைஷ்ணவி கூட நீ வாழ்ந்த ஆறு மாசம் வாழ்க்கை சொல்லிருக்குமே ப்பா" நெற்றி பொட்டில் அடித்தது போல் திடுக்கிட்டது கார்த்தியின் கண்கள்.
"அம்மா..."
"அம்மா தான் ப்பா... உன்னோட அம்மா தான். அதுக்காக தான் ஆயிரம் பொய் சொல்லி யார் கூட இருந்தா நீ சந்தோசமா இருப்பியோ அந்த பொண்ணு கூட உன்னோட வாழ்க்கையை அமைச்சு வச்சேன்"
கண்களை மூடி திறந்தவன், "என்னைக்குமே என்னோட வைஷ்ணவியை கல்யாணம் பண்ணதுக்கு நான் வருத்தப்படல ம்மா... இந்த ஆறு மாசத்துல நூறு தடவையாவது உன்ன மிஸ் பண்ணிருப்பேன்ல வைஷ்ணவின்னு நான் பீல் பண்ணப்ப எல்லாம் எதுவும் பேசாம அமைதியா இருந்தா.
இப்போ இந்த விசியம் எனக்கு தெரியாம இருந்தா காலம் எல்லாம் பைத்தியம் மாதிரி இத சொல்லி நான் பொலம்புறப்ப நீ பேசிட்டே இருடா கிறுக்குனு தானே விட்ருப்பா? இந்த மாதிரி நான் முட்டாள் ஆகுறதுக்கு நீங்க வேற பொண்ண பாத்துருக்கலாம்"
மனதிலிருந்து வரவில்லை அந்த வார்த்தை, ஆனால் அதை சொல்லும் பொழுது மனைவியின் முகம் கண் முன்னே விரிய, முகத்தை மூடி தலையை கவிழ்த்துவிட்டான்.
"இதுக்கு தான்... இதுக்கு தான் ப்பா அந்த புள்ள சொல்லாம இருந்துருக்கும். வைஷ்ணவியை பத்தி உனக்கு தெரியுமோ இல்லையோ, உன்ன பத்தி என் மருமக உங்க கல்யாணம் முன்னாடியே நல்லா தெரிஞ்சு வச்சுருக்கா. அவ மேல உனக்கு ஆசை இருந்தாலுமே உன் மனச மறைச்சு நாங்க சொல்லற பொண்ண கல்யாணம் பண்ணிப்பன்னு தான் மறைச்சோம்"
"சரி... இப்போ சொல்லிருக்கலாமே?" தன்னை மொத்தமாய் புரிந்துகொண்ட மனைவியை எண்ணி கர்வமாகவும் இருந்தது.
"சொல்லிருந்தா? என்கிட்ட இப்போ சொன்னியே வேற பொண்ண பாத்துக்கலாம்னு... ஈஸியா நீ பேசிறுப ஆனா அவளா அத தங்கிருக்க முடியாது" கார்த்தி பக்கம் கனத்த அமைதி.
மஹாலக்ஷ்மியிடமிருந்து கைபேசியை வாங்கியிருந்த சுப்பிரமணி, "உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரிய வேணாம், ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் கார்த்தி, நம்ம வீட்டுல வாழுற பொண்ணுங்க மனசு எவ்வளவு சந்தோசமா, குளிர்ச்சியா இருக்கோ அத பொறுத்து தான் அந்த வீட்டோட சந்தோசம் இருக்கும். வைஷ்ணவி முகமே வாடிகெடக்குது தம்பி. சந்தோசமா சிரிச்சிட்டு இருந்த பொண்ணு ரூமே கதின்னு இன்னைக்கு அடைஞ்சு கெடக்குறத பாக்குறப்ப தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுது..."
"அப்பா..." என்றான் கார்த்தி வேகமாக.
"இதெல்லாம் பிரச்சனைன்னு சொல்லி அந்த பொண்ண வீட்டுக்கு வந்து விட்டுட்டு போறது நல்லாவா இருக்கு? வாழ்க்கையோட முதல் கட்டத்துல தான் இருக்க, இன்னும் இத விட பெரிய சவாலை எல்லாம் நீ சந்திக்கணும். அந்த நேரத்துல எல்லாம் நானோ, உனக்கு பொறக்க போற குழந்தையோ கூட நிக்காது, உன் மனைவி மட்டும் தான் உறுதுணையா நிப்பா. சின்ன பிரச்னைக்கே இப்படியா ஆளுக்கொரு திசைல இருப்பிங்க?" மெல்ல அவர் காட்டத்தை காட்டினார்.
"அம்மா வேற வைஷ்ணவியை மனசு நோகுறே மாதிரி வார்த்தைய விட்டுட்டாங்க. தான் மனைவி மேல தப்பே இருந்தாலும் அவ கூட நின்னு ஊரையே எதிர்த்து அப்றம் அவளுக்கு புரிய வைக்கிறவன் தான் தம்பி உண்மையான ஆம்பள... விட்டுட்டு போறவன் இல்ல"
மகன் யோசிப்பதை தெரிந்தவர், "வைக்கிறேன்" என வைத்துவிட்டார்.
கட்டிலில் சரிந்தவனுக்கு தந்தை, தாய் வார்த்தைகள் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்க தன்னையே அறியாமல் நெடு நேரத்திற்கு பிறகே கண்ணயர்ந்தான்.
வைஷ்ணவிக்கோ தூக்கமே வரவில்லை, எத்தனை முறை தான் மன்னிப்பு கேட்பது? அவனோடு பேச, அவன் குரல் கேட்க, அவன் கைகளில் சிக்குண்டு மாட்டி இன்ப வெள்ளத்தில் தத்தளித்து கூடி வாழ ஆசை எழுந்தது.
ஆனால் அவன் தான் அவள் செய்திகள் அத்தனையையும் பார்த்தும் பதில் பேசவில்லையே, இன்னும் கோவம் போகவில்லையா என வருத்தத்தோடே உறங்கிப்போனாள்.
மறுநாள் சென்னையில் ஒரு முக்கியமான திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் மதியமே கார்த்தியின் மொத்த குடும்பமும் கிளம்பியது, மஹாலக்ஷ்மி வைஷ்ணவியை அழைக்க அவன் வராமல் தான் மட்டும் வர விருப்பமில்லை என்பதை மறைத்து,
"இப்ப மட்டும் நான் இங்க இல்லனா ஷெர்லின் என்னை என்ன செய்வான்னே தெரியல த்த..." என சிரிப்போடு சொல்ல, அவரும் சரி என்று வைஷ்ணவியை வற்புறுத்தாமல் சேர்மத்தாயை மட்டும் பார்த்துக்கொள்ளுமாறு கூறி சென்றார்.
இரவு உணவை தயாரித்து சுட சுட இருந்த ரவை தோசையை சேர்மத்தாயின் அறைக்கு எடுத்து சென்றாள். மகன் அன்று திட்டியதிலிருந்து வைஷ்ணவியிடம் பேசாதிருந்தவர் இன்றும் அவளிடம் பேசாமல் மெத்தையிலமர்ந்து வழக்கத்தை மாற்றாமல் நாடகத்தில் கண்ணை வைத்திருந்தார்.
"என்ன பாட்டி ரொம்ப தான் மூஞ்சிய தூக்கி வச்சுகுறிக?" சிறு பிள்ளை போல முகத்தை வெட்டி மீண்டும் வேலையில் இறங்கியவரை பார்க்க சிரிப்பு தான் வந்தது வைஷ்ணவிக்கு.
"சரி என்கிட்ட பேச வேணாம், உங்களுக்கு கடலை சட்னி, சாம்பார் வச்சிருக்கேன் போதுமா இல்ல தேங்காய் சட்னி போடவா?" - வைஷ்ணவி
"ஹ்ம்ம் போதும் போதும்" என்றவர் கண்கள் தட்டில் ரவை தோசையை பரிமாறும் வைஷ்ணவியை பார்த்தது.
தான் பேசியதை பொருட்படுத்தாமல் இன்முகத்தோடு ஹாட்பாக்சில் இருந்த தோசையை வைத்தவள் சுட சுட இருந்த சாம்பாரை அவர் விரும்புவது போல் தோசை முழுதும் ஊற்றி, அதன் மேல் கெட்டியாக அரைத்த சட்னியை ஊற்றி அவர் கையில் கொடுத்தாள்.
அமைதியாக அவர் அருகில் அமர்ந்தபடியே உடன் சேர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே அவருக்கு தேவையானவற்றை வைத்து முதியவர் உண்டு முடிக்கும் வரை கவனித்துக்கொண்டாள். பிறகு உணவை சமயலறையில் வைத்துவிட்டு சென்றுவிடுவாள் என்று சேர்மத்தாய் நினைத்திருக்க வைஷ்ணவியோ வந்து மீண்டும் அவர் அருகில் அமர்ந்துகொண்டாள் கைபேசியுடன்.
தொலைக்காட்சியில் ஒரு கண்ணும் மறு கண் பேத்தியின் மீதும் அவர் வைத்திருக்க, சில நிமிடங்களில் கைபேசியை முன்னிருந்த சிறிய டீபாயில் வைத்துவிட்டு மௌனமாய் இருந்தாள். அவளை கவனிக்காமல் நாடகத்தில் கவனம் செய்திருந்த நேரம் திடீரென பேத்தி தன்னுடைய மடியில் வலிக்காமல் படுத்தவளை எதிர்பார்க்கவே இல்லை.
அவளை ஒரு வார்த்தை கூட சொல்லவும் முடியவில்லை, அவரும் கவனித்துக்கொண்டே தானே இருக்கிறார் கலையே இல்லாத அவள் முகத்தை. மொத்த வீடையும் இரண்டாக்குபவள் இப்பொழுதோ அமைதியின் திருவுருவமாய்...
சில நிமிடங்கள் கடந்தது, வைஷ்ணவி கண்ணிலிருந்து நிற்காமல் கண்ணீர் வர, "ஏனுங் அம்மனி என்ன இது? என்ன ஆகிப்போச்சுன்னு இப்டி கண்ண கசக்கிபோடுறிங்க?" அவருக்கே பதட்டமானது அவள் இந்த புது பரிமாற்றம்.
"என்ன மன்னிச்சிடுங்க கெழவி... எனக்கு அவரை ரொம்ப புடிக்கும், அதான் இப்டி எல்லாம் பண்ணேன்... எத்தனை தடவ வேணும்னாலும் உங்ககிட்ட சாரி கேக்குறேன் ஆனா அவரை என்கிட்ட பேச மட்டும் சொல்றிங்களா?என்கிட்ட பேசவே மாட்டிக்கிறாங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது நீங்க சொன்னா அவரு கேப்பாரு"
தேம்பி தேம்பி அழுகும் பேத்தியை பார்த்து அவருடைய குற்றவுணர்ச்சி இன்னும் அதிகரித்தது. பேரன் மேல் இப்படி பாசத்தை வைத்திருக்கும் பெண்ணையோ வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிவிட்டோம் என மனம் வாட்டியது.
"இந்த எந்திரிங்க அம்மணி..." அதட்டி எழுப்பி அவள் கன்னம் துடைத்து, "இது என்ன சின்ன புள்ள கணக்கா கண்ண கசக்கிப்போட்டு? உங்கிட்ட பேசாம உன்ர வீட்டுக்கார் எங்க போகிற போறான்? நீ சாப்பிடலள?"
சுருங்கிய முகத்துடன் இல்லை என்றவளை மிரட்டி உன்ன வைத்தார் அருகிலே அமர்ந்து, "அம்மணி இந்த கெழவி சொன்னதை மனசுல இருந்து தூக்கிபோட்டுடுங்க... ஏதோ ஒரு கோவத்துல சொல்லிப்போட்டேன், வயசாகுதுல?" என்றவரை பார்த்து மனதார சிரித்து,
"மன்னிச்சுப்போட்டேன் கெழவி, சரி நான் தூங்க போறேன்" என தங்கள் அறையினுள் தஞ்சம் புகுந்துவிட்டாள்.
மறு பக்கம் மாலையிலிருந்து மனைவியின் எண்ணங்களில் தலை வலி பெற்ற கார்த்தி மாலை பொழுதிலே இல்லம் வந்து படுக்கையில் சரிந்தான். அவள் அருகில் இருந்த பொழுது புரிந்துகொள்ளாத காதல், புகைப்படமாக மட்டுமே சுவற்றில் சிரித்துக்கொண்டிருக்கும் பொழுது புரிந்தது.
கேட்டு ரசித்த பாடல்கள் எல்லாம் வாழ்க்கையோடு ஒற்றுப்போனது. சோகத்தை மறக்க ராகத்தில் மூழ்கி ராகமும் அவளை இழுக்க என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான் அவன். பிரிவு நடத்திய பாடங்கள் பல அதில் தனிமை கண்ணீரை பரிசளித்தது வெளியே காட்டிக்கொடுக்காமல் தன் கண்ணீரை உரிந்த தலையணையை இன்னும் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்தாயிற்று.
அவள் இல்லாத இடம் சூனியமாய் தெரிந்தது. தலை வலி மாத்திரையை போட்டும் உறக்கம் அருகில் கூட நெருங்கவில்லை. அரைகுறையாய் போடும் அவள் டீ அந்த நொடி தேவைப்பட்டது.
"வைஷு மா..." என அனத்தியவன் இன்னும் இன்னும் தலையணையை கட்டிக்கொண்டான்.
சரியாக கைபேசி சினுங்க அவன் பாட்டியிடமிருந்து அழைப்பு வரவும் ஹலோ என்று கூட சொல்ல விடவில்லை அவனை.
"என்றா நினைச்சிட்டு இருக்க உன்ர மனசுல? என்ர பேத்தியை ஏண்டா அழுக வக்கிர?"
"பாட்டி..."
"பேசாத சொல்லிப்போட்டேன்... அந்த சின்ன புள்ளைய அழுக போட்டு நீ சந்தோசமா அங்க ஊர் அலைஞ்சிட்டு இருக்கியா? ஒழுங்கா என்ர பேதிக்கிட்ட பேசிப்போடு இல்லனா உன்ர வண்டி சக்கரத்துல காத்து இருக்காது சொல்லிப்போட்டேன்" அவனை பேசவிடாமல் கோவமாய் இணைப்பை அனைத்துவிட்டார்.
அவனுக்கும் முதியவர் பேசியதில் எதுவுமே கேட்கவில்லை மனைவி அழுகிறாள் என்பதை தவிர்த்து. மணியை பார்த்தான் இரவு ஒன்பதை தாண்டியிருந்தது.
ஏற்கனவே பாடாய் படும் மனதை அடக்க வழி தெரியாமல் தவித்தவனுக்கு விடை மனைவியாய் தெரிய இருவரின் வேதனையையும் தீர்க்க யோசிக்காமல் வீட்டை விட்டு தன்னுடைய ராயல் என்பீல்ட்டில் செங்கோட்டைக்கு பறந்தான்.
இல்லம் வந்ததும் பூட்டியிருந்த கேட்டை திறவாமல் ஏறி குதித்தவன் மாடியில் உள்ள தன்னுடைய அறையை சாவியில்லாமல் எப்படி திறப்பது என யோசித்தே சில நிமிடங்கள் கடக்க, தண்ணீர் அருந்த வந்த பொழுது வீட்டின் வெளியில் நிழலாடுவதை பார்த்து சந்தேகமாய் ஜன்னல் வழி வாசலை பார்த்த சேர்மத்தாய், பேரன் தான் வந்துள்ளான் என தெரிந்து கதவை திறக்க, அரவம் கேட்டு முதியவரை கவிழ்ந்த தலையுடன் உள்ளே சென்றான் தன்னுடைய அறையின் சாவியை எடுக்க.
"என்னம்லே உன்ர புத்தி வேலை செய்றத நிறுத்திப்போடுச்சோ? யார் என்ன சொன்னாலும் ஒடனே பொஞ்சாதிய திட்டிபோட்டு வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்க?" என்றார் கோவமாக.
அவர் திட்டும் நேரத்திலே தன்னுடைய சாவியை எடுத்தவன், வாகனத்தின் சாவியை ஆணியில் மாட்டிவிட்டு சேர்மத்தாயின் அருகில் வந்தவன் அவர் கை பிடித்து, "உங்க பேத்தி இனி இப்டி உர்ருனு இருக்க மாட்டா... என் மேல நம்பிக்கை வச்சு நிம்மதியா படுங்க"
அவர் கையில் அழுத்தமாய் தன் மற்றொரு கையை வைத்து மூடியவன் வேகமாக படி ஏறி தன்னுடைய அறைக்குள் சென்றான்.
நேரமே வந்த காரணத்தால் வைஷ்ணவி தலையணையை அணைவாய் வைத்து உறக்கம் தழுவியிருக்க பூனை போல் சத்தமே போடாமல் மெத்தையில் வந்தமர்ந்த கார்த்தி மனைவியிடமிருந்து தலையணையை மெதுவாக எடுத்து தூரமாக எறிந்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வைஷ்ணவி உடலை அசைத்து மீண்டும் உறக்கத்திற்கு போக, கார்த்தி மெதுவாக அவள் உடலோடு தன் உடலை உரசும்படி மனைவியின் நெஞ்சத்தில் தன் முகத்தை பதித்து படுத்தான். பயணத்தின் பொழுது உடலில் இருந்த குளிர்ச்சி, அவள் மார்பில் தலை சாய்ந்த பொழுது காணாமல் சென்றது.
சூடேற்றிய அவள் உடலோடு இன்னும் ஒன்றிட எண்ணினாலும் மனைவி உறக்கம் கலைந்திடும் என அச்சத்தில் அசையாது அவன் இருக்க, நான்கு நாட்களாக சவரம் செய்யாத அவனுடைய ஒரு வார தாடி வைஷ்ணவியின் உடலை குத்தி உறக்கத்திலிருந்து எழுப்பியது.
லேசாக கண்களை திறந்து பார்த்தபொழுது கணவன் தெரிய தன்னையே அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.
'எத்தனை அழைப்புகள், எத்தனை மன்னிப்பு செய்திகள் அனுப்பினேன் எதற்கும் பதிலே சொல்லாமல் இருந்துவிட்டு இப்பொழுது என்ன திடீர் பாசம்?' என்ற கோவம் வர, பெண்ணவள் கணவனை தள்ளினாள்.
மனைவி விழித்ததை அறிந்தவன் இனி ஏது தடை என அவள் இடையின் அடியில் கை கொண்டு அவள் மொத்த உடலையும் தன் உடலோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டான். வைஷ்ணவி வேண்டும் என்றே அவனை தள்ளும் முயற்சியில் தீவிரமாக இருக்க, கார்த்தி அவளை விடுவதாக இல்லை, திமிரும் அவளின் நெஞ்சத்திலே ஆடையின் மேல் இதழ்களை பதிக்க உடல் நடுங்கி அடங்கினாள் அவனிடம்.
பெண்ணின் திமிறலை அடக்கியவனால் அவளது மன கசப்பை கரைக்க முடியவில்லை.
"போயா... நான் வேணாம்னு சொல்லி தான என் அப்பா வீட்டுக்கு போக சொன்ன? நீ வேணாம் எனக்கு போ..." அவன் தலையை பிடித்து துள்ளினாள் அழுகையோடு.
அவளது பலத்தில் தோற்றவனாய் தலையை தூக்கி அவள் முகம் பார்க்க, மொத்தமும் சிவந்து கண்களுக்கு கீழ் கருவளையம் படர்ந்திருந்தது. "போங்க..." கார்த்தியை வைஷ்ணவி மீண்டும் தன்னை விட்டு தள்ளும் முயற்சியில் தன் மேல் கிடந்த அவன் கை கட்டை அவிழ்க்கப்பார்த்தாள்.
அவனோ அதையே சாக்காக வைத்து அவளை கீழே இழுத்து அவள் முகத்தை தன்னுடைய முகத்திற்கு நேராக வைத்தான்.
"எதுக்கு என் பொண்டாட்டிக்கு மூக்கெல்லாம் இப்டி செவந்துருக்கு?" விசும்பும் அவள் முகத்தை ஒரு கையால் ஏந்தினான்.
அவன் கையை தட்டிவிட்டு பேசாமல் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது வைஷ்ணவிக்கு, "ப்ச்..." அவள் அழுகையை பொறுக்க முடியாதவன் மூக்கோடு அவள் மூக்கோடு தன் மூக்கை உரசி, "வேணாம்டா..." என்றான் கெஞ்சலாக.
மெல்ல மெல்ல துவங்கிய அழுகை கேவலாக மாற அவன் நெஞ்சில் அழுகையோடு குத்தினாள், "நீங்க வேணாம் எனக்கு... போங்க... எனக்கு உங்கள புடிக்கல..."
சிறு பிள்ளையாய் அழுகும் மனைவியை கனிந்த காதலோடு நோக்கியவன் அவள் இடையிலிருந்து கையை எடுத்து, "சரி அப்போ நான் கிளம்புறேன்" என சொல்லிய அடுத்த நொடி காலர் இல்லாத அவன் டீ-ஷர்ட்டை பற்றியவள் அவன் மூக்கை கடித்துவைத்தாள்.
"ஸ்ஸ் ஆஆ..." நிஜமாகவே அந்த எதிர்பாரா தாக்குதல் வலித்தது அவனுக்கு.
"வலிக்குதா? எனக்கும் அப்டி தானே வலிச்சிருக்கும் நீங்க என்ன விட்டு போனப்ப?" அழுகை பாதி கோவம் பாதியாய் கேட்ட மனையாட்டி அவன் நெஞ்சில் சாய்ந்து மனதில் இருந்த வருத்தத்தை எல்லாம் கண்ணீர் மூலம் அவனிடம் கொட்டித்தீர்க்க அவள் தலையை மென்மையாய் கோதினான் சமாதானம் செய்யும் நோக்கோடு.
நேரம் செல்ல செல்ல அவள் அழுகை நிற்கப்போவதில்லை என்றான பின்னர், "டேய் வைஷ்ணவி வேணாம்டா... நீ அழுகுறத பாக்க கஷ்டமா இருக்கு" கெஞ்சினான்.
"எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா?" அவனை உதறி தள்ளி படுத்தாள்.
"என்னடா..." என்றான் தவிப்பாக.
"அன்னைக்கு என்ன சொன்னிங்க? வீடு வீடா நான் போய் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னேனா? ஏன் உங்களுக்கு தெரியாதா நான் யார் வீட்டு படிய மிதிச்சேன்னு? நீங்க அப்டி சொன்னப்ப எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா? ஆனா உங்களுக்கு தான் நான் எப்படி இருந்தாலும் கவலையே இருக்காதுல? அஞ்சு நாள்ல ஒரு நாள்... ஒரு தடவ ஒரு மெசேஜ் பண்ணிங்களா?"
அவள் விசும்பல் அதிகமாக எழுந்து அமர்ந்தவன் மனைவி அருகில் செல்ல அவனை தள்ளிவிட்டு, "வராதீங்க பக்கத்துல... என்ன மிஸ் பண்ணிருப்பேன்னு நீங்க பீல் பண்ணது எல்லாம் போய் தானே கார்த்திக்?" உதடெல்லாம் வறண்டு விக்கல் வர துவங்கியது வைஷ்ணவிக்கு.
"நான் அப்டி சொல்லவே இல்லையே வைஷ்ணவிமா... உன் மேல கோவம் தான் அதுக்காக நீ வேணாம், உன்ன புடிக்கலைனு அர்த்தம் இல்லையே"
"இல்ல அதான் அர்த்தம். நீங்... நீங்க உண்மையாவே என் மேல... என் மேல அக்கறையோடு இருந்தா நான் கஷ்டப்பட்டு நம்ம கல்யாணத்த நடத்துனதுக்கு சந்தோசம் தானே பட்டிருக்கணும்? ஆனா... ஆனா நீங்க என்ன அம்மா வீட்டுல இருக்க சொல்றிங்க?"
அவளை நெருங்கி வந்து நின்றான், "நீ தானே வைஷ்ணவி வர்றேன்னு சொன்ன?"
"நான் வரணும்னு சொன்னது ஷெர்லின் கல்யாணத்துக்கு, ஆனா வந்துருக்குறது நம்ம சண்டையால" - வைஷ்ணவி
"ஆமா கோவம் தான், சண்டை தான். என் பொண்டாட்டி என்ன எப்படி கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிட்டானு அவ வாயால கேட்டா இந்நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்பேன். இதுவே வேற ஒருத்தர் மூலியமா என் காதுக்கு வந்த நியூஸ் கோவமா, ஹர்ட் பண்ற மாதிரி வார்த்தையோடல வந்துருக்கு... அப்போ அதே கோவத்தை உன்கிட்ட நான் காட்டுறதுல என்ன தப்பு?"
"நீங்க கோவத்தை காட்டல கார்த்திக், வெறுப்ப தான் காட்டுனீங்க. அன்னைக்கு பைக்ல உங்க கூட வந்தப்ப நமக்குள்ள இருந்த அந்த கேப் மனச கடைஞ்சது... அதான் உங்கள புடிச்சா என் கைய தட்டிவிட்டிங்க"
ஒவ்வொரு தவறை சுட்டிக்காட்டும் பொழுதும் அவள் கண்களில் இருந்த தவிப்பும் வேதனையும் கார்த்தியின் நெஞ்சை கிழித்தது, "அது நீ என்ன அடிச்சதுக்கான ஈகோ டா மா... இப்போ அதை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு வந்துருக்கேன்" சரணடைந்து நின்றான்.
பெண்ணவள் விடும் எண்ணத்திலா இருந்தாள்? மீண்டும் மீண்டும் அவன் கைகள் அவளை அள்ளி அணைக்க வந்தது, "அது என்ன என் வீட்டுக்கு போக சொன்னிங்க?" அவனிடமிருந்து மீண்டும் திமிறி சற்று தள்ளி நின்றாள்.
"ஆமா அது உன் வீடு தான், இது நம்ம வீடு" அவனை வைஷ்ணவி முறைத்த அந்த சில நொடியில் அவள் கையை பற்றி தன் நெஞ்சோடு அணைத்து நிறுத்தினான்.
"விடுங்க... விடுங்க" இலகுவாக அணிந்திருந்த அந்த பேப்பரை ஒத்த டீ-ஷர்ட் அவன் கைகளின் அழுத்தத்தை நேரடியாக அவள் உடலில் உணர வைத்தது.
"பட்டி உன் மேல கோவத்துல இருந்தாங்க வைஷு அதான், அங்க போக சொன்னேன்"
"ஓ என்ன காப்பாத்திட்டதா எண்ணமோ? நமக்குள்ள ஆயிரம் சண்டை இருந்தாலும் நீங்க என் பக்கத்துல நின்னுருந்தா அன்னைக்கு என்ன பாத்து அத்தையையும் மாமாவையும் நான் கைக்குள்ள போட்டு கல்யாணம் பண்ணேன்னு சொன்னாங்க, அது மட்டுமா? இந்த வீட்டுக்கு வாரிசை என்னால தர முடியுமான்னு கேட்டப்ப..."
கோவத்தின் மூலம் சென்றிருந்த அழுகை மீண்டும் வைஷ்ணவியோடு ஒட்டிக்கொள்ள முகத்தை மூடி தரையில் சரிந்தவளை கைகளில் அள்ளியவன் அறைக்கதவை திறந்து காற்றோட்டமாய் மெத்தையில் அமர்ந்து மனைவியை மடியில் வைத்தான்.
"ஷ்... ஷ்... வேணாம்டா" சில நிமிட போராட்டத்திற்கு பிறகு மனைவி அழுகை குறைந்தது கார்த்தியின் தொடர்ந்த கெஞ்சலில்.
"சாரி வைஷ்ணவி... என்ன பாரு" அவள் மாட்டேன் என தலையை அசைக்க,
"சாரி"
"..."
"சாரி"
"..."
"சாரி டா" அவன் அழுத்தமாய் கூற அவளும் இன்னும் அழுத்தமாய் தலையை ஆட்டினாள்.
"அடிச்சுக்கோ" அவன் கூறுவதை நம்ப முடியாமல் அவனை திடுக்கிட்டு பார்த்தாள்.
"என்ன மன்னிக்கிற வர கோவம் தீர அடிச்சுக்கோ வைஷ்ணவி" விழி விரித்து நின்றாள். அவள் கையை எடுத்து கன்னத்தில் வைத்து, "அடிச்சுக்கோ" என்றான் மீண்டும்.
வேகமாக கையை உறுவிக்கொண்டாள், கண்ணீர் கூட சட்டென நின்றது, விக்கலும் கூட.
"அடிக்கிறது தப்பு" என்றாள் அப்பாவியாக.
சிரித்தான் கார்த்திக், "பொண்டாட்டி அடிச்சா தப்பில்ல" எனவும் கோரமான எண்ணம் உதித்தது, "தப்பில்ல?"
அவளின் விஷம எண்ணத்தை முழுதாக புரியாமல் விழித்தவன் தயக்கத்தோடு,
"தப்பில்ல" என்றான்.
"இல்ல?" - வைஷ்ணவி
"இல்ல..." - கார்த்தி
இது தான் சாக்கென அவன் தாடையை பற்றி பற்கள் பதியுமளவு அவன் கன்னத்தில் கடித்துவைத்தாள். கைகளை இறுகமூடி வலியை பொறுத்தவன் கண்கள் கூட கலங்கியது. தண்டனையை தாராளமாய் கொடுத்து மனம் நிம்மதியடைந்த பிறகே அவனை விட்டு விலகி, கண் கலங்கி நின்ற கணவன் முகம் பார்த்து சிரித்தாள் கலகலவென.
"நான் பண்ண தப்புக்கு தண்டனை கெடைச்சிடுச்சு... நீ பண்ண தப்புக்கு என்ன தண்டனை?" இப்பொழுது கோவம் அவன் கண்களில் இருந்தது.
வைஷ்ணவியின் சிரிப்பு மாறவே இல்லை, "நான் என்ன தப்பு பண்ணேன்?" சண்டைக்கு வந்தாள்.
மனைவியின் இடையில் அழுத்தத்தை கூட்டி, "ஏய் என்ன தப்பு பண்ணியா?" இன்னும் கோவமாய், "எதுக்கு சுபத்ரா மனசுல உன் அண்ணனை பத்தி ஆசைய வளர்த்து விடுற?" என்றான்.
"நான் தப்பு பண்ணல... உங்கள கல்யாணம் பண்ணது ஆகட்டும், என் நாத்தனார என்னோட அண்ணியா மாத்திக்க நினைச்சது ஆகட்டும் நான் தப்பு பண்ணவே இல்ல" அழுத்தமாய் கணவனை நேருக்கு நேர் பார்த்து அவனுக்கு ஈடான முறைப்புடன் சவால்விட்டாள்.
"உன் அண்ணன் வேற ஒரு பொண்ண லவ் பன்றான் வைஷ்ணவி" மனைவியின் முகத்தை பார்த்தான்.
அதிர்ச்சியை எதிர்பார்த்த விழிகளுக்கு ஏமாற்றம், "மனசுல ஒருத்திய வச்சிட்டு என் தங்கச்சிக்கு எல்லாம் உன் அண்ணனை கல்யாணம் பண்ணி வைக்க முடியாது"
"தெரியுமே..." என்றாள் சாதாரணமாக, "என் அண்ணனோட மொத்த ஜாதகமும் என் கைல இருக்கும்"
"தெரிஞ்சும் ஏன் இந்த வேலை? இது தான் உன் மேல நான் கோவப்பட்ட மெயின் ரீசன்" அவள் சட்டையின் அடியில் கையை கொண்டு சென்றவன் நறுக்கென கிள்ளி வைத்தான்.
"யோவ் சமயலு..." வலி தாங்க முடியாமல் வைஷ்ணவி கத்தினாள்.
"என்ன சமயலு? தெரிஞ்சும் நீ பண்ணது தப்பு தானே?"
"இல்ல. என் அண்ணன் ஒரு கிறுக்கன். நீங்க இங்க வந்தப்ப நான் உங்கள பாக்குறதுக்கு முன்னாடி அவன் சுபிய வளச்சு வளச்சு சைட் அடிச்சான். நடுல ஒரு லூசு வந்துச்சு. அந்த லூசு மேல இவனுக்கு ஒரு சின்ன க்ரிஷ். அந்த பொண்ணு இவன பாத்து ரெண்டு தடவ சிரிச்ச ஒடனே இவன் லவ்ன்னு நினைச்சிட்டு இருக்கான். ஆனா அவ சரியான கேடி கார்த்திக். வருசத்துக்கு ஒருத்தன்கூட சுத்துவா, வேற ஒருத்தன் பெட்டரா கிடைச்சா இவன விட்டு ஓடிருவா.
போன மாசம் தான் அவளை பத்தி தெரிஞ்சிட்டு பீல் பண்ணிட்டு இருக்கான். அவனை பொறுத்தவரை இது மண்ணாங்கட்டி லவ். அந்த லவ் போன ஒடனே சுபிய எப்படி பாக்குறதுன்னு முகத்தை தூக்கி வச்சிட்டே சுத்துறான். இன்னும் ரெண்டு மூணு மாசம் மட்டும் தடவை கிடைச்சா போதும் சுபிய புரிஞ்சு அவ பின்னாடி சுத்துவான் அந்த தெண்டம்"
வைஷ்ணவி பேசுவதை வியப்பாக கேட்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, "உன் அண்ணன் தெளிவில்லாம இருக்கான் வைஷ்ணவி, தனக்கு என்ன வேணும், யார் மேல ஈர்ப்பு இருக்கு, யார் மேல ஆசை இருக்குன்னு தெரியாம இருகவன எப்படி சுபத்ராக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?"
"ஏன் நீங்க என்ன கல்யாணம் பண்ணப்ப ஆசை, காதல் எல்லாம் இருந்தா பண்ணீங்க?" உதட்டை சுளித்து முறைத்தாள்.
சுளித்த அவள் இதழ்களை கெட்டியாக பிடித்தவன், "காதல் இல்லனு சொல்லு, ஆசை இல்லனு உனக்கு தெரியுமா?" வேகமாக கார்த்திக் கூறி அவள் இதழ்களில் தன்னுடைய பார்வையை பதித்தான்.
"அத நீங்க தான் சொல்லணும்" என்றாள் வெட்கத்தை அடக்கி. "அஞ்சு நாள் நீ இல்லாம கார்த்தி கார்த்தியாவே இல்லடா" சிரித்தான் அவள் கண்களை பார்த்து சரசமாக.
குறுகுறுவென பார்க்கும் அவன் கண்களை மூடியவள் மெல்ல அவன் பக்கம் சாய்ந்து தான் கொடுத்த பல் தடத்தில் இதழ் பதித்து எடுக்க, அவள் கையை விலக்கிவிட்டு, "இது எதுக்கு?" சிரிப்பு அவனிடம் மனைவியின் கண்களில் தெரிந்த எல்லையில்லா காதலில்.
"கடிச்சேன்ல..." வெட்கத்தோடு கூறினாள் வைஷ்ணவி.
கள்ள சிரிப்போடு மனைவியின் சட்டையினுள் கார்த்தி கை விட, கண்களை மூடி அவன் தொடுகையை அனுபவித்தவளிடம், "நானும் உன்ன கில்லுனேன்ல டா... அப்போ நானும் மருந்து போடவா?"
மனைவி காதில் சரசம் பேசியவனின் கழுத்தோடு தன் கையை மாலையாக்கி அவன் கழுத்தில் முகம் புதைத்து சில நிமிடங்களை வைஷ்ணவி கடக்க, அவள் கைகளும், இதழ்களும் எல்லை மீறி பயணிக்க துவங்கிய சமயம் கார்த்தி கைகள் தரும் எல்லையற்ற சீண்டலில் கிறங்கி தவித்தாள்.
"நான் உங்கள சந்தோசமா பாத்துக்குறேனா கார்த்திக்?" என்றவள் கேள்விக்கு?" தன் முகம் பார்த்து கேள்வி எழுப்பியவளுக்கு வார்த்தைகளால் பதில் கொடுக்காமல் அவள் நெற்றி மீது இதழ் ஒற்றி அவன் நேசத்தை கூறினான்.
"கார்த்திக்..."
வைஷ்ணவி நெகிழ்ச்சியில் கரைய, தன்னுடைய பெயரை ரசித்து சொல்லும் அந்த இதழ்களை சிறை செய்து ஆசை தீர தேடலை துவங்கி பொக்கிஷத்தின் எல்லையை கண்டறிய முடியாமல் மயங்கி சரிந்தான் அவள் அன்பில்.
இரவெல்லாம் ஓயாமல் அவன் ஆசை தீர்த்தவளின் ஓய்வு ஓய்ந்திடுமோ என்று உறக்கம் தழுவல் எழாமல் ரசித்து பார்த்திருந்தான், தன்னை பைத்தியமாக காதலித்தவளை... தன்னை காதலுக்கு பித்தாகியவளை.
பிடித்தவனுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன?
காலம் உருக,
அன்பு பெறுக,
காலம் கனிய,
பிடிக்க வைத்துவிடும் காதல்...
முற்றும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro