டிங் டாங் - 20
அன்று ஞாயிற்றுக்கிழமை. வைஷ்ணவியின் இல்லம் மொத்தமும் ஆனந்தமாய் மிளிரியது. காரணம் கார்த்தியின் மொத்த குடும்பமும் வைஷ்ணவியை முறையாய் பெண் பார்க்க வந்திருந்தனர். இரு குடும்பமும் முதலிலே பேசி வைத்திருந்த காரணத்தால் சேர்மத்தாய்க்கும் சுபத்ராவிற்கும் வைஷ்ணவியின் பிரியத்தை பற்றி தெரியவில்லை.
அதனால் எந்த விதமான இடையூறும் இல்லாமல், சங்கடமான பேச்சுகளும் இல்லாமல் இயல்பான பேச்சுகளுடன் அமைதியாக நகர்கின்றது. மறு பக்கம் வைஷ்ணவியின் சகோதரன் சித்தார்த் மாப்பிள்ளை வீட்டாரை கவனிக்க தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி அடுக்கிக்கொண்டே இருந்தான்.
வைஷ்ணவி தன்னை தான் பெண் பார்க்க வந்துள்ளனர் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அவர்கள் பேசுவதை நின்று ஆசையாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
"வைஷ்ணவி உள்ள வா" அடக்கப்பட்ட கோவத்தோடு மஹேஸ்வரி மகளை கடிந்தார்.
சுருங்கிய முகத்துடன் அறைக்குள் சென்ற மகளை பார்த்தவர் அவள் பின்பே செல்ல, மகாலட்சுமியும் அவரோடு சென்றார்.
அங்கு வியர்வை வடிந்த முகத்துடன் ஷெர்லின் தோழிக்காக சேலையின் மடிப்புகளை நேர்த்தியாக எடுத்து அயர்ன் செய்து உள்ளே வந்த தோழியை முறைத்து நின்றாள்.
"ஐ ரெடியா?" மகிழ்ச்சியாக வைஷ்ணவி தோழியிடம் சென்றாள்.
"அது ரெடி ஆகி பத்து நிமிஷம் ஆச்சு" அன்னையும் மகளை பார்த்து கோவப்பட்டார்.
"அட இதெல்லாம் எதுக்கு வைஷ்ணவி அம்மா? வைஷ்ணவியை தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே. பிள்ளை புடவை கட்டி கஷ்டப்பட வேணாம். விடுங்க இந்த சுடிதார் கூட அழகா தான் இருக்கு என் மருமகளுக்கு" வைஷ்ணவியை பார்த்து இன்முகமாய் மஹாலக்ஷ்மி கூறினார்.
"அய்ய இந்த டிரஸ் போட்டு உங்க கூட நிப்பாளா இவ?" - ஷெர்லின்
"ஏன் இந்த டிரஸ்க்கு என்ன கொறச்சல்?" - வைஷ்ணவி
"ஓ மறந்து போச்சா? ஒரு நாள் உங்க வீட்டு நாய தொறத்திட்டு போய் சாக்கடைல விழுந்தியே... அது இந்த டிரஸ் போட்டு தான்" என்றவள் மஹாலக்ஷ்மி பக்கம் திரும்பி,
"அது எப்ப தெரியுமா ஆண்ட்டி? நீங்க இங்க வந்திங்களே அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான். ஒடம்பு மொத்தமும் சாக்கடை தண்ணி தான். பக்கத்துல போய் தூக்கலாம்-னு போனா அப்டியே கப்பு தாங்கல" - ஷெர்லின்
"ரகசியத்தை எல்லாம் ஒடக்கிறதுன்னு முடிவாகிடுச்சு அப்போ பரிச்சைக்கு பயந்து ராத்திரியோட ராத்திரியா வீட்டு சுவரை ஏறி குதிக்கிறேன்னு சொல்லி சாணில விழுந்தவ உங்க மருமக-னு உன்ன பொண்ணு பாக்க வந்த இடத்துல வச்சு சொல்லுவேன்டி" வைஷ்ணவியின் சபதம்.
"ஏய் சொல்லிக்கோடி... கள்ள மங்கா திங்க போன இடத்துல நாய் விரட்ட நீ அலறி அடிச்சு ஓடுன வீடியோ இன்னும் என்கிட்டே தான் இருக்கு" - ஷெர்லின்
"க்ராதகி... நட்புக்கே துரோகம் பண்றியா நீ? அடுத்த ஜென்மத்துல உன்ன என்னோட தோழியா நான் ஏத்துக்க போறதில்ல" - வைஷ்ணவி
தோழி அருகே வந்த ஷெர்லின், "இந்த ஜென்மத்துலையே உன்ன நான் தோழியா ஏத்துக்கல. இதுல அடுத்த ஜென்மம் ஒன்னு தான் கேடு. ஒழுங்கா இதெல்லாம் போடு... இல்லையா இந்த சுடிதார் மேலயே சேலைய கட்டிவிட்டு லட்டு திங்க போய்டுவேன்"
"என்ன ரொம்ப தான் மெரட்டுற? இதுக்கு தான் பார்லர்ல இருந்து ஆள கூட்டிட்டு வர சொன்னேன். இப்போ பாருங்க கருகுன வயர் மாதிரி இருக்க இவ எனக்கு மேக்கப் போட்டு விடணுமா?"
புலம்பியவாறே குளியலறை சென்ற தோழியிடம், "நீங்க குடுக்குற ஐநூறு ரூபாய்க்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி கேக்குறனு தானேடி அவங்க வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க"
சிரிப்போடு நின்ற மஹாலக்ஷ்மியை பார்த்து, "இப்போ கூட நேரம் இருக்கு வேற பொண்ணு பாக்கலாம்" அவரின் மாறாத சிரிப்பில் ஏமார்ந்த தோழி, "சொந்தமா சூனியம் வச்சுக்குறிங்க..." என அடுத்த அடுத்த வேலைகளை பார்களானாள்.
ஒருவழியாக முக்கி திணறி வைஷ்ணவிக்கு புடவையை கட்டும் முன் ஷெர்லின் பாதி ஆளாய் மாறினாள். படுத்தி எடுத்துவிட்டாள் வைஷ்ணவி, இங்க சரியில்ல, அங்க தெரிகிறது, அந்த பக்கம் மடிப்பு சரியில்லை என்று.
"இதெல்லாம் தேவையாடா? நான் தான் உன்ன சுடிதார்ல இருக்க சொன்னேன்ல?"
"த்தை அப்டிலாம் இருக்க முடியாது... நான் புடவை கட்டி, காபி கொண்டு வந்து தருவேன். எல்லாரும் பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்லணும். சரியா?" அத்தையிடம் உத்தரவை கேள்வியாய் வைத்தாள்.
"கடைக்குட்டி சிங்கம் படத்துல இந்த டயலாக் பேசுன அந்த பொண்ண கார்த்தி கடைசி வர கல்யாணமே பண்ணிக்க மாட்டாரு... அங்கையும் கார்த்தி இங்கையும் கார்த்தி... ச்ச... என்ன ஒரு ஒற்றுமை" பூரித்த ஷெர்லினை வைஷ்ணவி எரித்தாள் பார்வையாலே.
"சொல்லிட்டா போச்சு. என் மருமக அழகு" வைஷ்ணவி நாடி பிடித்து கொஞ்சியவர் வெளியில் சென்றுவிட்டார்.
வைஷ்ணவியை வெளியில் அழைத்து வந்த மஹேஸ்வரி அனைவர் முன்பும் மகளை வணங்க கூறி நிற்க, "ஏன் ப்பா கேக்குறேன்னு தப்பா நெனைக்க வேணாம். உன்ற மகன் ரொம்ப பொறுப்பா இருக்காப்டி. உங்களுக்கு விருப்பம்ன்னா என்ற பேத்திய சித்தார்த்க்கு கல்யாணம் மூச்சுரலாம்" அங்கிருந்த எவரும் இதை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.
சுபத்ராவிற்கு பயமும், ஆச்சிரியமும் சேர்ந்து தொற்றிக்கொண்டது. திருமணம், குடும்பம் என்றெல்லாம் மனதளவில் கூட தயாராகவில்லை அவள். வைஷ்ணவியின் தந்தைக்கு யோசனையானது.
பெண் கொடுத்து பெண் எடுப்பது வழக்கம் தான் ஆனால் ஏதோ ஒரு தயக்கம், மகனை பார்த்தார்... அவனோ நிலைகொள்ளாமல் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் சம்மதம் இல்லாமல் எந்த நிலை வந்தாலும் இதை பற்றி சம்மதம் தெரிவிக்க கூடாதென்று உறுதியாக இருந்தார்.
அதற்குள் அன்னையிடம் சுப்பிரமணி, "ம்மா என்ன ம்மா இது பேச்சு?"
"இதுல என்றா தப்பு இருக்கு? மனசுல பட்டது கேட்டுபோட்டேன்" - சேர்மத்தாய்.
"சுபத்ராக்கு இப்போ கல்யாணம் பண்ணனும்னு எண்ணமே எனக்கு இல்ல ம்மா... இன்னும் கொஞ்சம் நாள் எங்க கூடயே இருக்கட்டும்ன்னு மகா ஆசை" - சுப்பிரமணி
"இந்த வூடு என்ன பட்டணத்துலையா இருக்குது? கால் தடுக்குனா நம்ம வூடு தான் சுப்பிரமணி. கண்ணு முன்னாடியே தானே இருக்க போறா... நல்லது நடக்குறப்ப தானா நடக்கும்னு வுட்றனும். உன் வூட்டுக்காரிக்கு புரிய வைக்கிறது உன்ற பொறுபு. அந்த கல்யாணம் நடந்தா இந்த கல்யாணமும் தன்னால நடக்கும்"
"அத்தை என்ன அத்தை இது? கட்டாயப்படுத்துற மாதிரி இருக்கு. நம்மளோட விருப்பத்தை அவங்க மேல திணிக்க வேணாம்" - மஹாலக்ஷ்மி
"திணிக்கிறேனா? திணிக்கிற அளவு என்ற அம்மணிக்கு என்ன குறை?" சேர்மத்தாய்க்கு கோவம் வந்தது மருமகள் பேச்சில்.
"பிரச்சனை வேணாம் பாட்டி... நான் சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்கிறேன்" பிரச்சனை பெரிதாகவிருப்பது புரிந்து ஒடனே தன்னுடைய முடிவை தெரிவித்த மகனை குழப்பத்தோடு பார்த்தார் வைஷ்ணவி தந்தை.
"அம்மா சொல்றாங்கன்னு அவசரம் வேணாம் தம்பி. எப்படி இருந்தாலும் வைஷ்ணவி தான் எங்க வீட்டு மருமக. ஜாதகம், ரெண்டு பெருக்கும் பிடித்தம்னு எல்லாம் இருக்கு. யாரும் உங்கள வற்புறுத்தல. தப்பா நெனைக்க வேணாம் சார்" சித்தார்த்திடம் கூறி அவன் தந்தையிடம் மன்னிப்பை வேண்டினார் சுப்பிரமணி.
"இதுல தப்பா நெனைக்க என்ன இருக்கு? அந்நியமா நினைக்காம சம்மந்தி-னு உரிமையா சொல்லுங்க" மகனை பற்றிய பேச்சு தீவிரமாக போகும் முன்பு அப்டியே அதை விட்டுவிட முயன்றார் சுந்தரம்.
"சரிங்க சம்மந்தி. கல்யாணம் எப்ப, போ எப்ப வைக்கலாம்?"
வார்த்தைகள் திசை மாற்றத்தை பார்த்தவன் சேர்மத்தாய் தன்னை கவனிக்காதிருப்பது கவனித்து அமைதியாக அங்கிருந்து தன்னுடைய அறைக்குள் நுழையும் முன்பே சகோதரி கை பிடித்து நிறுத்தினாள், "ஏண்டா சீர்காழி சித்தார்த்து... நான் ஹீரோயின் மாதிரி நிக்க வேண்டிய இடத்துல நீ ஹீரோ ஆகிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி போற?"
"அதான நல்லா கேளுங்க சங்கி மங்கி... இங்க நான் ஒருத்தி இருக்கறப்ப வேற புள்ள பின்னாடி போகலாமா?" - ஷெர்லின்
"இந்த பென்சில் மீசை காரண கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீ வடக்கன் ஒருத்தன புடிச்சிடலாம் அழகுராஜா" - வைஷ்ணவி
"போடி லூசு" சகோதரியின் பேச்சில் கடுப்பானவன் அவள் தலையில் அடித்து உள்ளே செல்ல, "சொல்லிட்டு போடா வீரபாகு"
"அவன் போய் ரெண்டு நாள் ஆச்சு. இங்கிட்டு திரும்பி பாரு... உன் ஆளே இல்லாம உனக்கு பூ வைக்க போறாய்ங்களாம் உன் குடும்பம்" சபையை நோக்கி தோழியின் கவனத்தை திருப்பினாள் ஷெர்லின்.
"அநியாயம்... அக்கிரமம்" பொங்கினாள் வைஷ்ணவி.
"அதே தான்" எரிமலையாய் பொங்கிய ஷெர்லின் வைஷ்ணவியிடம், "அதே ஆவேசத்த கண்ணுல வச்சு சேலய மடிச்சு கட்டிட்டு போய் கூட்டத்துக்கு நடுல நில்லு... உன் பேச்ச இனி எவனும் தட்ட மாட்டானுக" - ஷெர்லின்
"ஆமா... அதுக்கப்பறம் கல்யாணம்-னு ஒன்னு நடந்தா தானே தட்ட??"
வைஷ்ணவியின் மாடுலேஷன் சரியில்லாமல் போக நண்பியை திரும்பி பார்த்த பொழுது தான் அவள் எள்ளல் பேச்சு புரிந்தது ஷெர்லினுக்கு, "ஹிஹி... தமாசு தமாசு" சமாளித்துவிட்டாள் ஒரு வழியாக.
"பூ வைக்கிறது அடுத்த வாரம் வெள்ளி கிழமை இருக்கட்டும். கல்யாணம் கார்த்தி ஊர்ல இருந்து வந்ததும் வச்சுக்கலாம்" தினசரி நாட்காட்டியை பார்த்து கூறினார்.
"ஏங்க கார்த்தி இல்லாம எப்படி பூ வைக்கிறது?" தயக்கத்தோடு கணவனை பார்த்தார் மஹாலக்ஷ்மி.
"இப்போ வைக்கிறது தான் சரியா வரும் மருமகளே... என்ற பேரன் வரவே இன்னும் அஞ்சு மாசம் ஆகும். அப்றம் பூ வச்சு, கல்யாணம் இன்னும் நாளாகும். இப்பயே வச்சுப்போட்டா தான் சரியாப்படும்" என்றார் சேர்மத்தாய்.
அவர் கூறுவதும் சரியாக பட, "சரிங்க அத்தை" என்றார் மஹாலக்ஷ்மி.
"அப்றம் சீர் செனத்தை எல்லாம் என்ன பண்ணுவீங்க?" - சேர்மத்தாய்.
அன்னையை பார்வையால் கெஞ்சிய சுப்பிரமணி சுந்தரிடம் திரும்பி, "அம்மா அந்த காலத்து மனுசங்க அதான் அவசரத்துல கேட்டுட்டாங்க, நல்லது கெட்டது சொல்லி தர்ற ஒரு வாத்தியாரா இருந்துட்டு நான் இதெல்லாம் கேக்குறது தப்பு. உங்க மகளுக்கு நீங்க என்ன பண்ணணுமோ அத பண்ணுங்க.
அது எதுலயும் ஒரு ரூபா என் பையனோ, நாங்களோ எடுக்க மாட்டோம். எங்க பசங்க தான் எங்களோட உயிரே அவங்க அவங்க குடும்பத்தோட சந்தோசமா இருந்தா அதுவே எங்களுக்கு போதும்" என்றார். மஹேஸ்வரிக்கும், சுந்தருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி அவரது பேச்சில்.
சுப்ரமணியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளார் தான் ஆனால் அவரது குண நலன்களை பற்றியும், கார்த்தியை பற்றியும் முழுதாக அவர்கள் வாழ்ந்த பழைய இடத்தை பிடித்தால் தானே தெரிந்துகொள்ள முடியும், அது சாத்தியப்படாது என்று தெரிந்தது, ஆனால் இப்பொழுது சுப்ரமணியன் எதார்த்தமான பேச்சும், மஹாலக்ஷ்மி வைஷ்ணவியை ரசித்து சிரிப்போடு பார்ப்பதை பார்த்தும் இருந்த சிறு கவலைகள் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை போலே மனம் நிம்மதியடைந்தது.
"ரொம்ப சந்தோசமா இருக்கு சம்மந்தி... என் பொண்ண பத்தி நாங்க கவலையே பட வேண்டாம். ஆனாலும் நாங்க எங்களால முடிஞ்ச அளவு நகை சேத்து வச்சிருக்கோம். வைஷ்ணவிக்கு அறுவது பவுன், மாப்பிள்ளைக்கு அஞ்சு பவுன் போடுவோம். அது போக பண்ட பாத்திரம், கட்டில், பீரோ எல்லாம் வாங்கிடலாம்"
"அதெல்லாம் வேணாம் அண்ணா. வீட்டுல எல்லாமே இருக்கு" - மஹாலக்ஷ்மி
"ஆமா பெறவு தேவைப்பட்டா வாங்கிப்போடுங்க" - சேர்மத்தாய்.
"கல்யாண செலவு பாதி பாதி ஏத்துக்கலாம். சரி தானே உங்களுக்கு?" - சுப்பிரமணி
"பிரச்சனையே இல்ல சம்மந்தி. முழு சந்தோசம். பூ வைக்கிறது வழக்கப்படி நாங்க ஏத்துக்குறோம்"
கை எடுத்து ஆனந்தமாய் நன்றியை தெரிவித்தார் சுந்தரம், "மண்டபத்தை புக் பண்ணிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன் நான்"
அடுத்து பெண்ணை உறுதி செய்ய சுபத்ரா வைஷ்ணவிக்கு பூ வைக்க, மதிய உணவை இங்கே தான் நிச்சயம் உண்ணவேண்டும் என்ற வைஷ்ணவி வீட்டினரின் வற்புறுத்தலின் பெயரில் சைவ உணவு வகை வகையாக சித்தார்த் அடுக்கிவிட்டான்.
தனக்கு அருகில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த சுபத்ரா, பரிமாறும் சித்தார்த்தை பார்ப்பதை புரிந்து, "என்ன பேசி முடிச்சிடலாமா?" என்றாள் கிண்டலாக.
"அக்கா..." சுபத்ரா சினுங்க,
"ஏய் அவன் என் ஆளுடி... ஒரே நாள்ல உஷாரு பண்ணிடலாம்னு நினைக்காத. ஆறு வருசமா ரூட் விட்டுட்டு இருக்கேன்" இடையில் வந்தாள் வைஷ்ணவி அருகில் அமர்ந்திருந்த ஷெர்லின்.
"அவளை கண்டுக்காத அவ ஒரு தத்தி. ஒன்னும் பண்ண மாட்டா. என் அண்ணனுக்கு சினிமா ரொம்ப புடிக்கும். அத வச்சு பேச்சு குடு" சகோதரனை பற்றிய கீ பாயிண்ட்ஸ் எடுத்துக்கொடுக்க துவங்கிய வைஷ்ணவியிடம் உடனே,
"ஐயோ அக்கா அதெல்லாம் ஒன்னுமில்ல. நல்லா ஹெல்ப் பன்றாங்களே-னு பாத்தேன். அவ்ளோ தான்" வீட்டினருக்கு தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் குரலை தாழ்த்தி சரணடைந்தாள்.
"அத தான் சொல்றேன். இவ்ளோ வேலை எல்லாம் பாத்தா உனக்கு கல்யாணம் ஆனதும் ரொம்ப ஈஸியா போய்டும்ல? அவனே எல்லா வேலையும் பாத்துடுவான். என்னையே எடுத்துக்கோ. ஏன் என்னையே எடுத்துக்கோ. சமையலை... சாரி சாரி உன் அண்ணன கல்யாணம் பண்ணிக்க ஏன் ஓகே சொல்றேன்?" நிறுத்தினாள்...
சுபத்ராவும் வைஷ்ணவி மேலே தொடர்வாள் என்று பார்க்க அவள் பதில் சொல்லவில்லை, "இங்க என்ன நக்ஷத்திரா பூஜா ஆயில் விளம்பரமா எடுக்குறாங்க ஏன்-னு கேட்டா தான் பதில் சொல்லுவ?"
வைஷ்ணவியை திட்டி, சுபத்ராவிடம் "ஏன்-னு கேளு. நீ கேக்காத வர இந்த சனியன் சொல்லாது" என ஷெர்லின் சொல்லவும் வைஷ்ணவி ஆமாம் ஆமாம் என தலையை ஆட்டினாள்.
அவளும் சிரிப்போடு, "ஏன்?" என்றாள்.
"உன் அண்ணன் மாஸ்டர். சமையல் மாஸ்டர். ஹோட்டல் வச்சிருக்கார். இத விட என்ன வேணும்? ம்ம்-னு சொன்னா அங்க இருந்தே சாப்பாடு வந்துடும். நான் சமைக்க தேவையில்லை. பாத்திரம் கழுவுறது பிரீ, கிட்சன் தொடைக்கிறது பிரீ, காய் வெட்டுறதுல இருந்து பிரீ, வேர்வைல பிரீ... இப்டி லைப் மொத்தமும் பிரீ தான். அதுக்கு தான் உன்னையும் என் வழில வர சொல்றேன்"
"க்கா... ஜீனியஸ் நீங்க" - சுபத்ரா
"அதெலாம் ஒரு ராஜா தந்திரம்" - வைஷ்னவி.
"பண்றது மாமா வேலை. இதுல ராஜ தந்திரம் ஒன்னு தான் கேடு. ஏங்க சித்தார்த் மல்ஹோத்ரா அந்த ரசத்தை எடுத்துட்டு வாங்க. பந்திய முடிச்சிட்டு மொத இந்த வீட்டை விட்டுட்டு வெளிய போகணும். ச்சை ஒரு வாய் சோறுக்கு இவ பேச எல்லாம் கேக்கணும்-னு எனக்கென்ன தலை எழுத்தா?"
அந்த நேரம் ரசத்தை ஊற்ற வந்த சிதர்த்திடம், "ஏன் ஸ்பூன் எடுத்து ஊத்திடேன்... நல்லா ரெண்டு அள்ளி கரண்டி ஊத்துயா"
அவளை முறைத்தபடியே அவன் ஊற்றவும், "அப்டியே அந்த சின்ன கப்ல பாயசமும் அதுலயே ஒரு அப்பளத்தை ஒடச்சு போட்டு எடுத்துட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தாள்.
அப்பொழுதும் வைஷ்ணவி விடாமல், "பாத்தியா பாத்தியா? இவ சொல்றதையே கேக்குறவன் நாளைக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா எவ்ளோ வேலை குடுத்தாலும் அசராம செய்வான்"
இலையில் இருந்த உணவை கூட முடிக்காமல் மூடிய ஷெர்லின், "போங்கடா நீங்களும் உங்க சோறும்" எழுந்து சென்றாள் ஷெர்லின்.
"அக்கா சரி நாங்க பேசல நீங்க வாங்க சாப்புடுங்க" பாதியில் எழுந்து சென்றவளை பார்த்து தன்னால் தானோ என்ற வருத்தம் சுபத்ராவிடம்.
"அவ எல்லாம் சாப்பிட்டு தான் இலய மூடி வச்சிட்டு போனா. நீ வா நான் உனக்கு டிப்ஸ் தர்றேன்"
இவ்வாறே அன்றைய பகல் பொழுது முற்றிலும் போக இரவு தன்னறையில் படுத்திருந்த வைஷ்ணவிக்கு கார்த்தி இல்லாத ஒரு குறை மட்டுமே. மனம் அவனை அதிகம் தேடியது, குறைந்தபட்சம் அவன் குரலையாவது கேட்க ஆசை.
ஆனால் அவனிடம் பேசவோ இல்லை அவன் அன்னையிடம் அவனை வீடியோ கால் மூலம் அழைக்க சொல்லவோ சற்று மனம் தடுத்தது. தான் அவனை தேடுவது போல் அவனும் தன்னை தேட வேண்டும் என்ற ஒரு சிறு ஆசை. அவன் ஒரே ஒரு முறை ஒரு வார்த்தை பேசினால் கூட கூச்சம், அகங்காரத்தை விட்டு அவனிடம் சரணடையும் மனதை அவள் தடுக்க மாட்டாள்.
மற்ற நாட்களில் அவன் எண்ணம் நித்தம் வரும் தான், இப்பொழுது இன்று தங்களுக்கான வாழ்க்கையின் ஒரு முதல் படி. அதனால் தான் என்னவோ அவன் அருகாமையை மனம் நாடுகிறது. கார்த்தி மீண்டும் சவூதி சென்று பதினைந்து நாட்கள் ஆகியது.
அன்று கோவிலில் அவனிடம் பேசியது தான், அந்த நாளே, இரவு மதுரையில் விமானத்தை பிடித்துவிட சென்றுவிட்டான். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
"போன் பண்ணி வெக்கத்தை விட்டு பேசிடலாமா?" என்று தோன்ற, இன்னொரு மனமோ அன்று அவனிடம் வீறாப்பாக பிடித்தமில்லாமல் பேசியது நினைவில் வந்து அந்த செயலையும் தடுத்தது.
"கடலைமிட்டாய்... என்ன நானே வந்து பேசுனா தான் பேசுவீகளோ. ஏன் ஒரு தடவ துரை தானா பேச மாட்டீகளா?" ஏமாற்றத்தில் கைபேசியை அணைத்து குப்புற படுத்தவளுக்கு மெசேஜ் வரும் சத்தம் கேட்டு மீண்டும் கைபேசியை எடுக்க வைத்தது.
விருப்பமே இல்லாமல் பார்த்தவளுக்கு கார்த்தி தனக்கு ஒரு புகைப்படம் அனுப்பியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்க, எடுத்து பார்த்தால் ஆவலாக. புகைப்படத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
மயில் வண்ண பாட்டில் மிதமான ஒப்பனையில் மெல்லிய நகைகளோடு நின்ற வைஷ்ணவி தோழி ஷெர்லினை முறைத்து நிற்க, அருகில் நின்ற ஷெர்லின் பாதி தான் தெரிந்தாள் ஆனால் அவள் வைஷ்ணவியை கிண்டல் செய்தது பாதி தெரிந்த முகத்தின் சிரிப்பிலே உறுதிப்படுத்திவிடும்.
தோழிகள் தங்களுக்குள் மூழ்கி இருக்க, சுபத்ரா இந்த புகைப்படத்தை எடுத்ததை கவனிக்காமல் போனார்கள். அவனிடமிருந்து இத்தகைய செயலை எதிர் பார்க்காதவள் மனம் ஆனந்தத்தால் குளிருந்து போனது,
"யார் இந்த பொண்ணு?" பதில் செய்தி அனுப்பினாள் அவன் பதிலுக்காக. உடனே பார்த்துவிட்டான்.
'வீட்டுல எனக்கு பாத்துருக்க பொண்ணு. நல்லா இருக்காங்களா வைஷ்ணவி?'
"லூசு லூசு. ஏன் என் பொண்டாட்டி ஆக போறவ-னு சொல்ல வேண்டியது தானே?" புலம்பியவள் கோவமாக, 'நல்லாவே இல்ல. போங்க' அனுப்பினாள்.
கார்த்திக்கு அந்த பக்கம் சிரிப்பு தான் வந்தது அவள் பதிலில், 'ஏன் நல்லா இல்ல? அழகான அவளுக்கு ஏத்த கலர்ல புடவை, கண்ண உறுத்தாம லைட் மேக்அப், தலை நிறைய பூ, முகம் எல்லாம் சிரிப்பு, எல்லாத்துக்கும் மேல நான் குடுத்த அந்த சின்ன செயின்' - கார்த்தி
அவன் பதிலில் அவனே தனக்கு நேரில் நின்று தன்னை வர்ணிப்பது போல் வைஷ்ணவிக்கு வெட்கம் வந்து கன்னம் சிவந்து போனது. பதில் கூட பேச முடியவில்லை அவளால்.
'வைஷ்ணவி...?' அவள் பதில் வராமல் போக மீண்டும் அவனே செய்தி அனுப்பினான்.
'ம்ம்ம்?' - வைஷ்ணவி
'வீடியோ கால் பண்ணவா?' - கார்த்தி
வைஷ்ணவிக்கு இதயம் பார்க்கவா குதிக்கவா என்று சந்தேகத்தில் குதித்து குதித்து பறந்தது, "சமயலு என்னையா ஷாக் மேல ஷாக் குடுக்குற? என் குட்டி ஹார்ட் தாங்காது"
புலம்பினாலும் அவனுக்கு, 'சரி' என்று அனுப்பினாள். உடனே அழைப்பு வந்தது அவனிடமிருந்து, தன்னை சரி செய்யாமல் அறையின் மின் விளக்கை ஒளிரவிட்டு அழைப்பை ஏற்றாள். அழைப்பை ஏற்று அவன் முகத்தை பார்க்க கூட இல்லை, புதிதாக தன்னுடைய அறையை பார்ப்பது போல் எல்லா சுவற்றையும் கூர்ந்து கவனித்தாள்.
"என்ன கன்னம் சிவந்திருக்கு?" கார்த்தியின் கேலி பேச்சில் வேகமாக தன்னுடைய கன்னத்தை இடது கை கொண்டு தொட்டு கன்னத்து சிவப்பை சரி செய்ய முயன்றாள்.
"அதெல்லாம் போகாதுடா... நீ வெக்கப்படுறத குறைச்சா தான் அதுவும் நிக்கும்" அவன் சிரிப்பு அவன் பேச்சிலே தெரிந்தது.
வேகமாக கேமராவை கை வைத்து மறைத்து தன்னை சரி செய்தவள் முகம் எல்லாம் சிரிப்பில் நிற்கும் அவனை கண்களில் நிரப்பி வைத்துக்கொண்டாள்.
"ஹலோ... ஹலோ வைஷ்ணவி?" - கார்த்தி
தொண்டையை சரி செய்து, "ம்ம்ம் இருக்கேன்" என கமெராவில் இருந்த கையை விலக்கினாள்.
"உன் ரூம்க்கு டிவி எதுவும் மாடிட்டீங்களா?" - கார்த்தி
"இல்லையே" - வைஷ்ணவி
"அப்போ என்ன பாக்கலாமே" ஏக்கமாக கார்த்தி.
"ஏன் பாத்து என்ன பண்றது? நீங்க ஒரு கால் பண்றிங்களா? மெசேஜ் பண்றிங்களா? எந்த நேரமும் நைட் ஆகிட்டா போகும், ஆன்லைன்ல தான் இருப்பிங்க, ஆனா ஒரு நாளாவது ஹாய் ஹலோ எப்படி இருக்க? சாப்பிட்டியா? என்ன பண்றேன், ஏது பன்றேன்னு ஒன்னும் தெரியாது. சரி அது கூட வேணாம். ஊருக்கு போறதுக்கு முன்னாடி கெளம்பப்போறேன்-னு ஒரு வார்த்தை கூடவா சொல்ல தோணல?"
மனதில் இருந்த கோவத்தை எல்லாம் அவனிடம் வார்த்தையாய் தள்ளிவிட்டாள். அதற்கும் சிரிப்பு தான் அவனிடம்.
"சிரிக்காதிங்க" வைஷ்ணவி அவனை எச்சரித்தாள். வாய் விட்டு சிரித்தவனை அந்த கோவத்திலும் அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை,
"நீ ரூம் விட்டு வெளிய வா"
"மாட்டேன். நான் கோவமா இருக்கேன்" - வைஷ்ணவி
"வா வைஷ்ணவி. எனக்காக" - கார்த்தி
முகத்தை தூக்கி வைத்து வெளியில் வைஷ்ணவி வர, "என்னோட ரூம் ஜன்னல் பாரு" - கார்த்தி
கூர்ந்து கவனித்த பொழுது தான் அங்கு ஒரு கேமரா இருப்பது தெரிந்தது, "யோவ் பாடிசோடா, என்ன இது கேமரா?" அதிர்ந்தாள் பெண்.
"எனக்கு பெருசா பேச எல்லாம் தெரியாது வைஷ்ணவி. அதான் அப்போ அப்போ டைம் இருக்கறப்ப உன்ன பாத்துப்பேன்" - கார்த்தி
"பாப்பிங்கன்னா?" - வைஷ்ணவி
"காலைல எந்திரிச்சு என் ரூமை பாக்குறது, நைட்டும் பாத்துட்டே போறது, நைட் கோவம் வந்தா என் ரூமை பாத்து கல்ல விட்டு ஏறியிறது, அம்மா ஒரு நாள் நான் நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தலனாலும் அவங்கள மிரட்டி ஊத்த வைக்கிறது... இப்டி எல்லாத்தையும் பாப்பேன்" பேச்சற்று நின்றுவிட்டாள் வைஷ்ணவி.
"இப்போ சொல்லு. நான் உன்கிட்ட டெய்லி பேசி தான் நீ என்ன பண்ற, எப்படி இருக்கனு தெரிஞ்சுக்கணுமா? இப்போ கூட உங்கிட்ட பேசவே நூறு யோசனை. நம்மளோட வாழக்கையோட முதல் ஸ்டேப் எடுத்து வைக்கிறோம், இப்போ கூட உன்கிட்ட நான் பேசலானா நல்லா இருக்காதுன்னு தோணுச்சு. அதான் உன் முகத்த பாத்து பேச கால் பண்ணிட்டேன்" அ
வளிடம் அமைதி, "நான் கேமரால உன்ன பாக்குறது புடிக்கலைனா ஓகே தான். பாக்க மாட்டேன்" அவன் முகம் சோர்ந்து போனது அவள் அமைதியில்.
"ஆமா எனக்கு புடிக்கல" முகத்தை தூக்கி வைத்து பேசியவள் இணைப்பை துண்டித்து விட்டாள்.
ஏதோ ஒரு உரிமையில் அவளையும் காயப்படுத்தாமல், தன்னுடைய கூச்சத்தையும் வெளிக்காட்டாமல் இருக்க அந்த ஐடியா திடீரென உதித்து செயல்படுத்திவிட்டான். அவள் தவறாக புரிந்துக்கொண்டாளோ என்ற அச்சம் வேறு வந்தது அவனுக்கு.
மீண்டும் வைஷ்ணவியிடமிருந்து அழைப்பு வந்தது, "சாரி டா வைஷ்ணவி. நான் வேணும்னு அப்டி பண்ணல..."
"புடிக்கலைனு சொன்னது நீங்க மட்டும் என்ன பாக்குறது... எனக்கு டெய்லி உங்கள பாக்கணும். உங்ககிட்ட பேசலானாலும் பரவால்ல, பாத்தே ஆகணும் நான், பாத்துக்குட்டே இருக்கனும்"
மனதில் உள்ள ஏக்கம் எல்லாம் அவள் குரலில் அழுகையை கட்டுப்படுத்தி பேசுவதிலே தெரிந்தது அவனுக்கு. நெகிழ்ந்து போனான் அவள் அன்பில்.
"டேய் நீ என்ன பண்ற என்னை? என்னமோ பண்ற தெரியுமா?" இருவருக்கும் அந்த நாள் மனம் எல்லாம் கரும்பாய் தித்திப்பாய் இனித்தது.
Hi... comments plz, avasarathula eluthunathu adjust panikonga
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro