டிங் டாங் - 12
மருமகள் பேசியதில் வாய் விட்டு சிரித்தவர், "என்ன வைஷு வில்லி மாதிரி பேசுற?"
"பின்ன உங்க பையன் பண்றது ஓவரா தான் இருக்கு. உங்ககிட்ட ப்ரப்போஸ் பண்ண மாதிரி அவர்கிட்டையும் ப்ரப்போஸ் பண்ணேன். அதுக்குன்னு இப்படியா பயந்துட்டு ஓடுறது?"
"என்ன அவன்கிட்டயும் பேசிட்டியா? ஏன்டா" இதை கேட்டு தான் மகன் ஓடுகிறானோ என்ற எண்ணம் அவருக்கு.
"ஆமா ரெண்டு வீட்டு ஆளுங்கள பொறுத்தவரை இது அரேஞ்ட் மேரேஜா இருக்கனும் அத நீங்க பாத்துக்கோங்க, ஆனா அவருக்கு தெரியணும் நான் அவரை விரும்பி தான் கல்யாணம் பண்ண போறேன்னு"
"கார்த்தி ஒரு பிடிவாதக்காரன் வைஷு மா... அவனுக்கு ஒரு விசியம் புடிக்கலைனா யார் என்ன சொன்னாலும் செய்ய மாட்டான்" அவர் கூறியதை கேட்டு வைஷ்ணவிக்கு முகம் வாடியது.
"வைஷ்ணவி.." பெரியவரின் குரலில் ம்ம்ம் கொட்டியவள் இப்பொழுதும் அமைதியாக இருக்க, "எனக்கு உன்ன புடிச்சிருக்கு ஆனா அதே சமயம் கார்த்தி விருப்பமும் எனக்கு முக்கியமல்ல? இத பத்தி அவன் உன்கிட்ட பேசுறப்ப மூஞ்சில அடிச்ச மாதிரி வேணாம்னு சொல்ற ஆள். அப்ப உன் மனசு கஷ்டப்பட கூடாது அதுக்கு தான் நானே இப்ப சொல்றேன்"
"சமையல் என்கிட்டே பேசுச்சு... இப்போ தான். வேணாம் வேணாம்னு சொல்றாரே தவற புடிக்கலைனு ஒரு வார்த்தை சொல்லல அத்தை. அப்ப அவருக்கு என் மேல ஒரு ஆசை இல்லனாலும் வேணாம்னு சொல்ல தோனலல?" அவருக்கும் அந்த யோசனை அவள் கூறியதும் தான் வந்தது.
"ஆமா தான்டா... ஆனா எனக்கு நீ ரொம்ப ஆசையா வளக்குறது புடிக்கல"
அவளும் யோசித்து, "சரி நீங்க சொல்ற மாதிரி இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்க யோசனைக்கு ஒரு டெஸ்ட். உங்க பையன்கிட்ட உங்க அண்ணன் பொண்ண அவருக்கு பொண்ணு பாக்கலாம்னு கேளுங்க. எனக்கு சொன்ன மாதிரி யோசிக்கலாம் பாக்கலாம்னு சொன்னா அவரை விட்டு அமைதியா இருக்கேன்.
அப்டி வேணாம்னு சொன்னா உங்க பையன் என்கிட்ட சிக்கிட்டதா வச்சுக்கோங்க. அத நீங்களே நெனச்சாலும் இனி மாத்த முடியாது"
"என் அண்ணன் பொண்ண வேணாம்னு சொன்னா அவனை நான் விடுவேனா என்ன?" வைஷ்ணவியை வம்பிற்கு இழுக்க முயன்றார்.
"என்ன பண்ணுவிங்க? என் அவரு மேல கை வச்சிங்க ஒரு பிரளயமே வெடிக்கும் சொல்லிட்டேன்"
"ம்ம் உன் அவுரு அப்டியே எனக்கு பயந்துட்டாலும்" என மாமியார் சிரித்தவர்,
"நாளைக்கே உனக்கு ரிசல்ட் சொல்றேன்டா" என்றவர் இணைப்பை துண்டித்துவிட்டார். வைஷ்ணவியோ அவனின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் இருக்குமோ என்ற யோசனையிலே மஞ்சத்தில் வீழ்ந்தாள்.
மறுநாள் சனிக்கிழமையாக போக வைஷ்ணவிக்கும் ஷெர்லினுக்கும் சுந்தர் விடுமுறை தந்துவிடுவான். காலையில் மெதுவாக சோம்பலுடன் எழுந்து பல் துலக்கி கீழே வந்த வைஷ்ணவியின் காதுகளில் எதிர் வீட்டில் இருந்து வழக்கத்தை விட அதிகமாக வந்த சத்தம் புருவத்தை உயர்த்த செய்தது.
மாடியை பார்த்தவள் அவன் வீட்டின் வாயிலையும் பார்த்து கீழே செல்ல அவளுடைய தந்தை வழக்கத்தை மாற்றாமல் செய்தித்தாளை வாயிலில் அமர்ந்து பிடித்தபடியே மகளை பார்த்தார்.
ஒரு மாதமாகவே அவளை பார்க்கும் அதே கேள்வி பார்வை தான். திடீரென இவளுக்கு எப்படி வேலைக்கு செல்லும் அளவிற்கு பொறுப்பு வந்தது என்று.
"என்ன வாத்தி, பார்வை எல்லாம் பலமா இருக்கே" தந்தையை சீண்ட அவர் கையிலிருந்த நாளிதழை பிடிங்கி வாசல் படியில் அமர்ந்து பார்க்க, "என்ன நேத்து போட்ட அதே நியூஸ் மாதிரி இருக்கே" சந்தேகமாய் தாழை கீழிறக்கி தந்தையை பார்த்தாள்.
மகளை பார்த்து வெற்றி சிரிப்போடு, "நீ கதவை தொறந்த ஒடனே நான் நேத்து நியூஸ்பேப்பர் மாத்தி வச்சிட்டேன் திடீர் என்ஜினீயர் அவர்களே" தன்னுடைய முதுகிற்கு பின்னால் இருந்து இன்றைய நாளிதழை எடுத்து மகளுக்கு காட்டினார்.
தந்தையின் சிரிப்பில் கோவமாக சுளித்தவள், "பேரு தான் எ.ஹச்.எம் ஆனா பண்றதெல்லாம் இந்த நாய் மாதிரி" அமைதியாக தனக்கு இரண்டடி தள்ளி படுத்திருந்த அந்த வாயில்லா ஜீவன் வயிற்றை பிடித்து வைஷ்ணவி நசுக்க கதறிக்கொண்டு அது அடித்து ஓடியது.
மகள் தன் கணவனை பேசவும் உள்ளிருந்து வந்த மஹேஸ்வரி கரண்டியை அவள் முதுகில் வைத்து அழுத்த, "ஆஆஆ" வென ஊரையே கூட்டும்படி கத்த, அதற்கும் அன்னையிடமிருந்து முதுகில் கையால் ஒரு அடி கிடைத்தது.
"இப்டி தான் அப்பாவை பேசுவியா?"
மகளை கண்டிக்க, "அதுக்கு ஏன் மஹேஷு இப்டி சூடி வச்ச. பாவம் பிள்ளை துடிச்சிடுச்சு" தந்தையானவர் மகளின் காயத்தை பார்த்து மனைவியை ஏசினார் சுந்தரம்.
"அவ நடிக்கிறாங்க. சூடு இல்ல தொட்டு பாத்துட்டு தான் வந்தேன். அவ பண்ற எல்லாத்துக்கும் நீங்களும் துணை போங்க. நல்லா வந்துருக்கீங்க அப்பாவும் மகளும்" தந்தை செல்லமாய் மகளை முறைக்க பல்லை காட்டி,
"ஹிஹி... ஜஸ்ட் பார் பன் டாடி. என் மேல பாசம் எவ்ளோ இருக்குன்னு டெஸ்ட் பண்ணேன்"
நைசாக எழுந்து அன்னையிடம் சென்று அவரை சில நிமிடங்கள் உதவி என்னும் பெயரில் தொந்தரவு செய்தவளை வெளியில் அனுப்ப மஹேஸ்வரி பட்ட பாடு அவருக்கும் வெளியில் இருவரின் பேச்சையும் கேட்டு சிரித்தபடி கேட்ட சுந்தருக்கு தான் புரியும்.
இது தான் பல வருடங்களாக இந்த வீட்டில் நடக்கும். வீட்டின் ஆண் பிள்ளை வார இறுதி நாட்களில் வருபவன் வந்த சுவடே தெறியாமல் கிளம்பிவிடுவான். இப்பொழுது கூட உள்ளே அமைதியாக படுத்து உறங்குபவனின் வருகை சகோதரிக்கு தெரியாது. அவ்வளவு அமைதி அவன்.
"சரி என்ன எதுத்த வீட்டுல ஒரே சத்தம்?" கடலை சட்னிக்காக உரித்து வைத்திருந்த கடலையை எடுத்து உண்டவள் கையில் ஒரு அடி போட்டு தட்டி எடுத்த மஹேஸ்வரி, "மஹாலக்ஷ்மி அண்ணன் பேமிலி வந்துருக்காங்க போல..." என்றார் அவள் அன்னை.
வைஷ்ணவியின் வாய் அசை போடுவதை நிறுத்தி ஒரு நிமிடம் யோசிக்க, "அந்த பொண்ணு உன்ன விட ஒரு வயசு சின்ன பொண்ணு போல வைஷ்ணவி. அழகா இருந்தா. ஒருவேளை கார்த்திக்கு பேச வந்துருப்பாங்களோ"
'இருக்குமோ?' என்ற யோசனை வர என்ன செய்யலாம் என்று யோசித்த வைஷ்ணவிக்கு அவளுடைய மாமியாரின் எண்ணம் வந்து நிம்மதியானது.
'ஒருவேளை மனசு மாறிட்டா?' மற்றொரு எண்ணம் உடனே வர, "மகேஷ்... நான் குளிச்சிட்டு வர்றேன். அதுக்குள்ள மசாலா தோசை ரெடி பண்ணி வச்சிரு"
என்றவள் மாடி ஏறி அவசர குளியல் ஒன்றை போட்டு எளிமையான இரவு உடையில் அறையை விட்டு எதிர் வீட்டை நோட்டம்விட தலையை காய வைக்கிறேன் என்னும் பெயரில் வந்தவள் தலையை ஆட்டி, 'ஓ ஹோ' என்னும் விதமாய் நின்றனர் கார்த்தியும் அவன் மாமன் மகளும். பார்த்த உடனே புரிந்துகொண்டாள் வைஷ்ணவி.
மொட்டை மாடியின் இறுதியில் நின்று ஏதோ தீவிரமான உரையாடலில் இருந்தனர். கார்த்தி வைஷ்ணவியை நோக்கி சுற்று சுவரில் ஏதுவாக அமர்ந்திருக்க, அவன் மாமன் மகள் அவனை பார்த்து அவனுக்கு அருகில் ஒரு சாய்ந்து நின்றாள். கிட்ட தட்ட கார்த்தியின் மடியில் சென்று அமர்வது போல் இருந்தது.
உள்ளுக்குள் பொறாமை தீயோடு அவள் செய்யும் அனைத்தையும் எந்த வித எதிர்வினையையும் காட்டாமல் அமைதியாய் அவள் பேசுவதை கேட்கும் கார்த்தி மேல் கோவமும் வந்தது.
ஆனாலும், 'நீ நடந்து ராஜா' என்று அமைதியாய் வேடிக்கை பார்த்தாள்.
அஸ்வினி. அழகாய் இன்றைய ஆண்களின் கனவு கன்னி எப்படி இருப்பார்களோ அப்படியே இருந்தாள். குட்டி உருவம். கழுத்துக்கு சற்று கீழே இருந்த கூந்தல் காற்றில் அசைந்தாடிய பொழுது அது கூந்தலா இல்லை பறவையின் சிறகா என்னும் அளவிற்கு பார்க்கவே பஞ்சாக தெரிந்தது.
ஜீன்ஸ், தொடை வர இருந்த முக்கால் கை குர்தா என மார்டன் ரதி தான். ஒரு பக்கமாக பார்க்க முகமும் லட்சணமாக தன்னை விட சிறிது கலரும் அதிகமாக தான் இருந்தாள்.
'அய்யய்யோ கரெக்ட் பண்ணிடுவாளோ? இவன் வேற கரி கடைல நிக்கிற நாய் மாதிரியே பாக்குறானே' தன்னை குனிந்து பார்த்தாள். 'ச்சை வைசு அவ எவ்ளோ அழகா டிரஸ் பண்ணிருக்கா... நீ என்னடி நயிட்டி போட்டு நிக்கிற?'
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன்னிடம் இருந்த அழகிய நைட் பாண்ட் செட் ஒன்றை அணைந்து வந்த பொழுதும் இடம் சிறிதும் மாறாமல் அதே இடத்தில ஒட்டி நின்ற அவன் மாமன் மகளின் எண்ணம் இங்கிருந்து பார்த்த வைஷ்ணவிகே புரிந்தது.
இனியும் பொறுக்க முடியாதென்று இங்கிருந்து இரண்டு கைகளையும் அசைத்து அவனின் கவனத்தை ஈர்க்க முயன்று தோற்றவள், தன்னுடைய அறையில் இருக்கும் கனமான Windchime hanging bell எடுத்து வந்து வேண்டும் என்றே கையில் வைத்து ஆட்ட, அந்த மெல்லிய மணி சத்தத்தில் கார்த்தியின் கண்கள் அவள் மேல் விழ, தன்னை முறைத்து பார்த்து புருவத்தை உயர்த்தும் அவள் பாவனையில் புரியாமல் விழித்த கார்த்தி பார்வையை திருப்பிய பொழுது மீண்டும் மணி சத்தம்
'டிங் டாங்... டிங் டாங்... டிங்' .
தன்னை தான் அவள் அழைக்கிறாள் என்று உணர்ந்தவன் அஸ்வினியின் பார்வையை உறுத்தாமல் வைஷ்ணவியை பார்க்க, அவளோ அஸ்வினியை கை காட்டி விலகி நிறுத்துமாறு சைகை செய்தாள்.
அவள் கூறியதை புரிந்துகொண்டவன் இது என்ன செயல் என்று பார்க்க, மீண்டும் அஸ்வினியை கட்டி தள்ளி நிற்க கூறினாள். இந்த முறை அவளை வேண்டும் என்றே வெறுப்பேற்ற அஸ்வினியின் கையை தானே கார்த்தி பற்றி தட்டிக்கொடுக்க அஸ்வினிக்கு ஆச்சிரியம் தாளவில்லை. நம்ப முடியாமல் அவனை பார்த்தவளுக்கு ஏதோ பெரிய சொல்ல முடியாத மகிழ்ச்சி.
கண்களில் சிரிப்போடு வைஷ்ணவியை கண்டவன் கவனத்தை அஸ்வினி ஈர்த்தாள் அவன் கை மேல் தன்னுடைய கையை அழுத்தி பிடித்து. இது அவனுக்கே அதிர்ச்சி தான். கையை தட்டிவிட்டு எடுக்க தான் நினைத்தான். அஸ்வினி வேறு ஒரு பிளான் வைத்திருந்தாள் என்று அவன் அப்பொழுது உணரவில்லை.
அவள் கை இறுக்கத்தில் தான் வைஷ்ணவியை மடக்க எண்ணி தானே அஸ்வினி கையில் மாட்டியது தெரிந்தது. பதட்டத்தை காட்டாமல் வைஷ்ணவியை பார்க்க அவள் கையை ஓங்கி ஏதோ ஏறிய தயாராக இருந்தாள்.
இறுதி எச்சரிக்கையாக, 'யோவ் சமயலு கைய எடுயா' என்று முணுமுணுத்தது அவள் நா.
அவன் என்ன மாட்டேன் என்றா நிற்கிறான், அஸ்வினி விட்டால் தானே. தர்மசங்கடமாக இருந்தது அஸ்வினி கையை பிடிக்க. கையை உருவ பார்த்தான், அஸ்வினி ஏதேதோ கதையை பேசுகிறேன் என்று அவன் கையை இன்னும் பத்திரமாக தன்னுடைய கைக்குள் வைத்தாள்.
வைஷ்ணவி பொறாமையில் என்ன செய்வதென்று தெரியாமல் மஹாலக்ஷ்மி எண்ணிற்கு அழைத்தாள்.
"சொல்லு டா" உற்சாகமாக இருந்தது அவர் குரல்.
"என்ன உங்க பையன பொண்ணு பாக்கவா வந்துருக்காங்க? இப்டி தனியா பேச விட்ருக்கீங்க?"
வரவேற்பறையிலிருந்து வெளியே வந்தவர், "வெளிய தானே நின்னு பேசுவாங்கனு நெனச்சேன். மாடிலயா இருக்கான்?" அவளிடமே மீண்டும் கேள்வியை வைத்தார்.
"மாமியாரே... உங்க புள்ள இங்க உங்க அண்ணன் மகளோட கொஞ்சி கொழாவிட்டு இருக்கார். நீங்க வந்து அவள கீழ கூட்டிட்டு போகல, வீடு ஏறி வந்து சண்டை போடுவேன் பாத்துக்கோங்க"
"டேய் வைஷ்ணவி" அவள் குரலின் மாற்றத்தில் சிரித்தார் அவர்.
"சிரிக்காதிங்க யத்தைய்ய்ய்..."
வைஷ்ணவியின் சிணுங்களில் மாடி ஏறியவர், "சரி நான் பாத்துக்குறேன். நீ போன வை டா" ஒன்றும் நடவாதது போல் சென்று வெயிலில் தலை முடியை உலரவைக்கும் வேலையில் இறங்கினாள்.
மாடி ஏறி வந்த மஹாலக்ஷ்மி மருமகளை பார்த்து கண் சிமிட்டி, மகனிடம் சென்றார்.
"அஸ்வினி..." அன்னையின் அழைப்பில் விழித்தவன் இதையே சாக்காக வைத்து அவளிடமிருந்து கையை பிரித்து சற்று இடைவெளிவிட்டு நின்றான்.
"என்னடா இங்க வந்துட்ட... அத்தை உன்ன கீழ ரொம்ப நேரமா தேடிட்டு இருந்தேன்"
"சும்மா மாமாகிட்ட பேச வந்தேன் அத்தை. நேரம் போனதே தெரியல"
"சரிடா நீ கீழ வா. அத்தை உனக்கு புடிச்ச ஜிலேபி செஞ்சு வச்சேன்"
"இல்லை அத்தை, அப்றம் வர்றேன். மாமாகிட்ட இப்டி நேர்ல பேசியே ரொம்ப நாள் ஆச்சு" மீண்டும் கார்த்தியின் கை மேல் தன்னுடைய கையை வைத்து அஸ்வினி கார்த்தியை பார்த்து சிரிக்க, அவனும் சன்னமாய் சிரித்தான்.
இருவரின் கையை பார்த்த மகாலட்சுமிக்கு சற்று சங்கடமாகி போக, "சூடா இருக்கு அஸ்வினி. வா நீ ஒடனே" பிடிவாதமாய் அவர் நிற்பது கூட மகனுக்கு சந்தோசமாக தான் இருந்தது.
வைஷ்ணவியின் முறைப்படி நினைத்து அஞ்சவில்லை அவன். ஏனோ அஸ்வினியின் செயல் இன்று விசித்திரமாக உணர்ந்தான். கீழே இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவனிடம் வந்து பேசியவள் அப்படியே அவனை மாடிக்கு இழுத்து வந்து ஒரு அடி நகர விடாமல் நிறுத்தி பிடித்தாள்.
"போ அஸ்வினி, நானும் சைட்க்கு கெளம்பனும்" என்கவும் தான் அரை மனதாய் அத்தையுடன் கீழே வர தயாரானாள்.
அப்பொழுதும் விடாமல், "மாமா நானும் உங்க சைட்க்கு வரவா?" என அவனிடம் வந்து மீண்டும் நின்றாள்.
"அதெலாம் மொத்தமா கடை ரெடி ஆனதும் பாத்துக்கலாம் டா. இப்போ ஆளுங்க எல்லாம் அதிகம் இருப்பாங்க. வா நீ"
என கையேடு இழுத்து சென்றவர் படி இறங்கும் பொழுது நின்றவர், "உனக்கு வைஷ்ணவியை தெரியாதுல?" என்றவர் எதிர் வீட்டை பார்த்து,
"வைஷ்ணவிமா" எதார்த்தமாக பார்ப்பது போல் உற்சாகமாக முதலில் மஹாலக்ஷ்மி பின்னால் நின்ற கார்த்தியை பார்த்து தான் கை அசைத்தவள் பிறகு மாமியாரை பார்த்தாள்.
"ஹாய் ஆண்ட்டி" என்றாள் அருகில் இருந்த அஸ்வினியை பார்க்காமல்.
"வைஷு இது தான்டா என் அண்ணன் பொண்ணு... அஸ்வினி இது வைஷ்ணவி. ரொம்ப நல்ல பொண்ணு" கூடுதலாக ஒரு சர்டிபிகேட் மகனுக்கும் சேர்த்து வாசித்தார்.
"ஹாய் வைஷ்ணவி" தேன் குரலில் தன்னிடம் பேசிய அஸ்வினியை பார்த்து மனத்தினுள்ளே, 'வாடி என் சகாளத்தி' என்ற மனம் வெளியில், ஒரு சிறிய ஹாய் மட்டும் கூறி நிறுத்தியது.
அதன் பிறகு என்ன நினைத்தாளோ அஸ்வினியே தானாக கீழே சென்றுவிட மஹாலக்ஷ்மி மகனிடம் திரும்பி, "இன்னைக்கு ஒன்னும் சைட்க்கு போக வேணாம். நாளைக்கு போ மாமா அத்தை எல்லாம் வீட்டுக்கு வந்துருக்காங்க" இன்னும் கோவமாகவே இருந்தவரின் உணர்வு புரிந்து சரி என்று அமைதியாகிவிட்டான்.
மஹாலக்ஷ்மி கீழே சென்றதும் கார்த்திக்கை அழைத்த வைஷ்ணவி, "என்ன உங்களுக்கு வேணும்? எனக்கு பொறாமைய தூண்டி விட தான் பண்ணிங்களா?"
"உங்கள பொறாமை படுத்த நான் ஏன் இதெல்லாம் பண்ண போறேன்?" இதென்ன வம்பு என்று கார்த்திக்கு சலிப்பு.
"நேத்து நான் பேசுனது உங்கள ஏதோ அபக்ட் பண்ணிருக்கு அதான் இப்டி பண்றீங்க"
திடுக்கிட்டான், "அது எதுக்குங்க என்ன அபக்ட் பண்ணனும்? நான் எப்பவும் போல நல்லா தான் இருக்கேன். யாருக்காகவும் நான் மாறணும்னு அவசியம் இல்லையே"
"அப்டி அவசியம் இல்லனா ஏன் ஆறு மாசம் பாரின் போற ஐடியா? நான் உங்கள ஏதோ அபக்ட் பண்றேன். அந்த பயம் தானே?"
அவளின் பெருமை சிரிப்பை அலட்டல் எதிர்கொண்டவன், "கற்பனை அதிகமோ?"
"இதுநாள் வர இல்ல, ஆனா இப்போ அதிகமா வருது. உங்களால..." இதழின் ஓரம் தோன்றிய சிரிப்பை பற்கள் கடித்து உள் இழுத்தவள் அவன் பதிலுக்கு காத்திருக்க அவனோ சற்று தடுமாறி தான் போனான் அவளின் ஆளை விழுங்கும் பார்வையில்.
மேலும், "அப்டி என்ன வீட்டுல இருக்க எல்லாரோட மனசையும் கஷ்டப்படுத்தி போகணும்?"
"உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லங்க எனக்கு" கடுகடுத்தான் கார்த்தி.
அவள் இன்னும் திடமாய், "சொல்லணும்ங்க. என் மனச உங்ககிட்ட இழுக்க தெரிஞ்சதுல? அப்ப அது கேக்குற கேள்விக்கும் நீங்க தானே பதில் சொல்லியாகணும்?" குரலை சற்று உயர்த்திய வைஷ்ணவியைப் பார்த்து எவருக்கேனும் கேட்டுவிட்டால் என்ற பயம் வர வீணாக எதற்கு வம்பு என்று கீழே முடிவெடுத்தவனை அதட்டி நிற்க வைத்தாள் பெண் ரவுடி.
"பேசாம போனீங்க என்கிட்ட ப்ரப்போஸ் பண்ணி லவ் பண்ண போர்ஸ் பண்றிங்கன்னு உங்க அம்மாகிட்ட சொல்லுவேன்"
சோர்ந்து அவளை பார்த்து திரும்பியவன், "தமிழ் நாட்டுல ஷார்ட்லிஸ்ட் ஆகியிருக்க மூணே மூணுபேர்ல நானும் ஒருத்தன். என்னோட திறமையை வளத்துக்க எனக்கு ஆசை இருக்கும்ங்க. வீட்டுல தான் புரிஞ்சுக்காம ஹர்ட் பண்றங்கனா நீங்களும் தேவையில்லாம பேசி ஹர்ட் பன்னாதிங்க"
சோர்ந்த முகத்துடன் அறைக்குள் சென்று பதுங்கியவன் நிலையை பார்த்த வைஷ்ணவிக்கு அந்த அப்பாவி ஜீவன் மேல் சிறு இரக்கமும் பிறந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro