Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 24

தன் முன் நிற்பது க்ரிஷ் தானா இல்லை வேறு எவருமா என்ற சந்தேகத்தில் எச்சிலை கூட்டி விழுங்கியவாறு இருந்தான் சேவன்...

கோட்டைக்குள் குழப்பமாய் சுற்றி கொண்டிருந்த சேவன் திடீரென கேட்ட சேவன் என்ற அழைப்பில் திரும்பி பார்த்தான்... நீலி மிகவும் தீவிரமாய் விளையாடி கொண்டிருந்ததால் சேவனை கவனிக்க தவற அவனோ " தான் கேட்டது உண்மையில் அக்குரல் தானா... எங்கோ செவி சாய்த்த குரல் போலே இருந்ததே " என சிந்திக்க சட்டென அவன் முன் வந்து மிதந்தது ஒரு கருங்கல்...

அதை கண்டு திடுக்கிட்ட சேவன் கண்களை விரித்து விழிக்க சில நொடிகளில் அது எரிந்து சாம்பலாய் காற்றில் கரையவும்  " உம் வரவிற்காய் வெகு நாழி காத்திருக்கிறேன்.. தையை கூர்ந்து வரவும் " என்ற வாக்கியம் காட்சி கொண்டு காற்றோடு மறைந்தது...

சேவன் : இது ஒற்றற்கலையல்லவா என கத்தி கொண்டே எழுந்தவனை

நீலி : என் நேர்ந்தது சேவா என நீலி குழப்பமாய் பார்க்க...

சேவன் : நீலி எமக்கு அனல் கோவனிடமிருந்து தூது வந்துள்ளது... அவர் எம்மை அழைக்கிறார் யான் சென்று வருகிறேன் என உடனே அருகிலிருந்த யாளி மீது ஏறி அதன் தும்பிக்கை வழியே கீழே சருக்கி கொண்டு வெகு சீக்கிரமாய் இறங்கி ஓடினான்...

நீலி : என்(ன) கூறவருகிறாய் சேவா.. அனல்கோவன் தானென நீ எவ்வாறு அறிவாய்... என கத்தி கேட்க...

சேவன் : ஒற்றற்கலை தீ சுடராய் வந்திருப்பின் அது அனல் கோவனின் அடையாளமே என ஓடி கொண்டே கத்தினான்... அதெங்கு நீலிக்கு கேட்டிருக்க போகிறது ...

வெளியே ஓடொடி வந்த சேவன் உடனே சிந்திக்காமல் தன் சக்திகளை உபயோகித்து அடர்ந்த கானகத்தினுள்(காட்டிறுகுள்) நுழைந்தான்...

அரை மணி நேரம் பின் ஏதோ ஒரு சத்தத்தில் சட்டென திரும்பினான்... அவனுக்கு சில அடி தூரங்களில் சித்தார்த் மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தான்...

அவனை கண்டதும் இருளிள் " அனல் கோவனே " என சேவன் சந்தோஷமிகுதியில் கத்தி விட சேவன் இமை மூடி திறக்கும் நொடி பொழுதில் வேகமாய் ஏதோ ஒன்று அவனை கிடத்தி அவ்விடத்தை விட்டு மறைந்திருக்க இப்போது இவன் முன் அமர்ந்திருக்கிறான்...

சித்தார்த் : தாம் எண்ணுவது மெய் தான்.. யான் அனல் கோவன் அன்று என அமைதியாய் கூறியவன் அவனுக்கு நேராய் நெருங்கி அமர்ந்து அவனை உருத்து நோக்கினான்...

சேவன் : பின் தாம் யாரென்பதை யான் அறியலாமா...

சித்தார்த் : தாராளமாக.. ஆயினும் அதற்கு முன் தம்மிடமிருந்து சில விசனங்களை யான் அறிய உள்ளுகிறேன் (நினைக்கிறேன்) ..

சேவன் : எவ்விசனம்..

சித்தார்த் : தாம் அதிசக்தி வாய்ந்த கோவன்கள் மடிந்ததை அறிவீர் தானே...

சேவன் : ஆம்.. அதை ஏன் தாம் வினவிட வேண்டும்...

சித்தார்த் : தேவை உள(உள்ளது) .. அத்தினத்தில் என்(ன) நிகழ்ந்ததென்பதை கூற இயலுமா...

சேவன் : அது அது.. பொருத்தருள வேண்டும்.. எம்மால் அதை கோவன்களை மீறி கூற இயலாது... யான் அளித்த வாக்கின் பால் அம்மூவர் எம் மீது கொண்ட நம்பிக்கையை யான் இழக்க நேரிடபோவதில்லை...

சித்தார்த் : சரி.. எவ்வாறு கோவன்கள் மடிந்தரென்றாவது விவரிக்க இயலுமா...

சேவன் : அதை விவரித்து கூறுமளவு எமக்கு தைரியம் அன்று.. என தலை குனிந்து கூறும் போதே சேவனின் முகத்தில் ஒரு வலியின் சாயல் தெரிந்தது... அதை காண சித்தார்த்திற்கும் மனதில் வலியெடுக்க கரத்தை இறுக்கி மூடி அதை கட்டுப்படுத்தியவன்

சித்தார்த் : யாவர் என்.. கோவன்களை மடிய செய்தது... என் தந்தைகளை என கேட்க வந்து கோவன்களை என மாற்றியதை சேவன் கவனிக்காதது தான் வருத்தமே...

சேவன் : கோவன்களை பற்றி அறிந்திருக்கிறீர்... அவர்கள் மடிந்ததையும் அறிந்திருக்கிறீர்.. அத்தருணத்தில் யானும் உள்ளதை அறிந்திருக்கிறீர்.. பின் இவ்வினாவிற்கும் தம்மிடம் விடை இருக்க வேண்டுமே என நிமிர்ந்து அவனை பார்க்க...

சித்தார்த் : அன்று என்(ன) நிகழ்ந்ததென்பதை மூவரே அறிவர்... அது கோவன்கள் மாத்திரம் தான்.. அவர்கள் கூறவே நீரும் அறிந்துள்ளீர்... பிற வம்சங்களுள் உள்ள எவருக்கும் அன்று என் நிகழ்ந்ததென்பது அறியாத விசனம் தான் என விளக்கமளித்தான்...

சேவன் : பிற வம்சமா... அவ்வாறெனில் தாம் மாய வம்சங்களுள் பிறந்தவரா...

சித்தார்த் : ஆம்...

சேவன் : எவ்வம்சம்... என கேட்டவன் அவன் கூறிய வம்சத்தை கேட்டு ஆடித்தான் போயினான்...

சித்தார்த் : பஞ்சலோகத்து அதிரதீர வம்சம்

சேவன் : என்ன அதிரதீர வம்சமா... ஆதலின் தாம் முவ்வீரட்சகன்களுள் ஒருவரா...

சித்தார்த் : ஆம் முவ்வீரட்சகன்களுள் முதலாமவன்..

சேவன் : வணங்குகிறேன் இரட்சகனே...

சித்தார்த் : வணக்கத்திற்கு குறையன்று.. எமக்கு விடையே வேண்டுமானது...

சேவன் : பொருத்தருளும் இரட்சகனே... தாம் எத்துனை முறை வினவினாலும் இதுவே எமது விடை... கோவன்களுக்களித்த வாக்கினை மீறி எம் நா அறுபட்டாலும் நிகழ்ந்தவையை கூற மாட்டேன்...

சித்தார்த் : ஹ்ம் எவரால் மடிந்தரென்றாவது கூறலாமே...

சேவன் : யட்சினி வம்சத்தை தன் வசம் மாற்றிய யட்சினி சர்ப்ப வம்ச யஷ்டிகளாளே கோவன்கள் மடிந்தனர்...

சித்தார்த் : அவர்கள் இவ்விருவது ஆண்டுகளும் எச்செயலும் புரியாமல் மௌனம் காத்ததன் காரியத்தை(காரணத்தை) தாம் அறிவீரா...

சேவன் : ஹ்ம் முழுமையான காரியத்தை(காரணத்தை) அறியேன்.. இருந்தும் அவர்கள் மௌனம் காத்ததன் ஒற்றை காரியம்(காரணம்) அறிவேன்... இருவது ஆண்டுகள் முன் இன்றைய தினத்தில் யட்சினி சர்ப்ப வம்சத்தவர்கள் கோவன்களை எதிர்த்து நின்றனர்... அதி சக்தி படைத்த கோவன்களை அழிக்க வேண்டி பத்து பேருமாய் கடினப்பட்டு போராடி அதில் வெற்றி கனியையும் ஈட்டினர்.. ஆயினும் அப்போரில் தலைமை அமைச்சன் சாகாரகாந்தனை விடுத்து மற்ற நாழ்வரும் அவர்களுள் உள்ள நாழ்வரையும் இணைத்து எட்டு அமைச்சர்களும் தனித்தனியே சிறை பட்டனர்... பசப்பச்சை அமைச்சன் மகரகாந்தன் சஹாத்திய சூரர்களிடம் சிறை பட்டு சில தினம் முன்பே விடுப்பட்டான்... வெள்ளிவேடம் தரித்த தளபதி விஞ்ஞவெள்ளன் மண்ணுக்குள் சிறையண்டினான்... அமைச்சன் மிதரவர்தனன் மற்றும் அருளவர்தனன் இருவரும் கோவன்களின் சக்திகளால் மடியப்பட்டிருந்தனர்.. அவர்களை உயிர்த்தெழ செய்ய சாகாரகாந்தன் பல யாகங்கள் ஈட்டி போதுமான சக்திகள் இல்லா காரியத்தினால்(காரணத்தினால்) இருவரின் உயிரையும் பிரித்து அவர்களை பெண் இனத்தில் உயிர்த்தெழ செய்தான்.. அது மட்டுமன்றி சென்ற திங்கள் விஞ்ஞவெள்ளன் மற்றும் மகரகாந்தன் இருவரும் விடை பெற்றதும் இரா(இரவு ) பகல் பாராது ஒரு சக்தி வாய்ந்த யாகத்தை ஈட்டி அவர்களின் சக்திகள் மூலம் மிதரவர்தினி மற்றும் அருளவர்தினிக்கு பழைய உருவையும் சக்திகளையும் தாரை வார்த்து அவர்களை முழுதாய் மிதரவர்தனன் மற்றும்  அருளவர்தனனாகவே உயிர்த்தெழ செய்து விட்டனர்... ஆதலின் இப்படி ஐவர் வெவ்வேறு திசையில் இருந்தமமையாலே இவ்விருவது வருடாந்திரத்தை மௌனமாய் கடத்தினர் ...

சித்தார்த் : ஹ்ம்ம் பஞ்சலோக வம்சத்து விந்தைகளை துஷ்ரந்கள் கிடத்தி சென்றதாய் விசனம் கேட்டேன்.. அது உண்மையா...

ஆம் அன்று விசை போல் நாயகிகளின் மதியை செயழிலக்க செய்து நாயகன்களை விட்டு பிரித்து கடத்தி சென்றது கண்ணிற்கு அகப்படாத உருவம் கொண்ட யஷ்டிகளின் சகாயம் செய்யும் துஷ்ரந்துகளே..

சேவன் : ஆ..ஆம் .. நேற்றைய தினத்தில் தான் அச்சம்பவம் ஈடேரப்பட்டது.. ஆயின் அது துஷ்ரந்துகளின் சதி என்பதை யாதறிந்தீர்... (எப்படி அறிந்தீர்)

சித்தார்த் : கண்ணிற்கபடாத விசை என்கையிலே அது துஷ்ரந்துகள் தானே..

சேவன் : மெய் தான்...

சித்தார்த் : சரி பஞ்சலோக விந்தைகளை ஏன் கிடத்தவேண்டும்... அதற்கு பின் ஏதேனும் காரியம்(காரணம் ) உளதோ (உள்ளதா)

சேவன் : உளது(உள்ளது) இரட்சனே.. அடுத்த திங்களில் யஷ்டிகள் யோகபரிபூஜன யாகத்தை ஈட்ட உள்ளனர்..

சித்தார்த் : யோகபரீபூஜன யாகமா...

சேவன் : ஆம் ஐயாகம் ஈட்டப்பட்டால் அவர்களுக்கு நரபலி ஈட்டிட பஞ்சலோகத்து விந்தைகளே தேவைபடுவர்...

சித்தார்த் : ஆயினும் அதற்கு எம் சகோதரன்களான இரட்சகன்களும் அத்துடன் பராக்ரம வீரன்களும் அன்றோ உடன் நரபலியிடப்பட வேண்டும்...

சேவன் : ஆம் ... ஆயினும் இச்சமயம் தங்கள் இரு வம்சத்திற்கும் அபார சக்தி உளதினால்(உள்ளதனால்) அவர்கள் மூன்கூட்டியே சக்தியை பெருகச்செய்திட உள்ளனர்...

சித்தார்த் : நாங்கள் இல்லையின்றி அது நிறைவேறிடாதே ... அதற்கும் ஏதேனும் திட்டம் வகுத்துள்ளனரா...

சேவன் : ஆம்.. நாகனிகளுக்கு ஈடான யட்சினிகளையும் அவர்கள் மூன்றாண்டுகளாய் சிறை பிடித்து வைத்துள்ளனர்.. இந்நரபலியில் அவர்களையும் நரபலி தந்திட வாய்ப்புள்ளது...

சித்தார்த் : யட்சினிகளா என குழப்பமாய் புருவத்தை சுருக்கினான்...

சேவன் : ஆம் இரட்சகனே... இப்பிறவியில் யட்சினிகள் மெய்யாகவே பிறப்பெடுத்துள்ளனர்...

சித்தார்த் : அவ்வாறிருப்பினும் எங்களை அழிக்க இச்சக்திகள் போதாதே..

சேவன் : அதற்கு தான் இளவரசிகளையும் என தொடர்ந்தவன் சட்டென நிறுத்த சித்தார்த் அவனை அதே குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தான்...

சித்தார்த் : எந்த இளவரசிகள்

சேவன் : அ..அது..

தலையின் கிறுகிறு என்ற ஓசையுடன் பாரம் கூட கூட வண்டானது தேனின் சுவையில் மயங்கியதை போல் எதனாலோ மயங்கி மெதுவாய் கண்களை பிரித்தாள் மாயா...

அவள் முன் அவளது சகோதரிகள் அனைவரும் கண்களை மூடி மயக்கத்தில் இருந்தனர்..

கண்களை நன்கு திறந்து பார்த்த மாயா சுற்றி முற்றி காண அது கிட்டத்தட்ட அரண்மனைகளுள் இருக்கும் பாதால சிறையை ஒத்திருந்தது... கல் செவுருகள்.. சாயமின்றி இருந்த அறை... சிறையே தான் என நிரூபிப்பதாய் இருந்த கம்பிகளால் பூட்டப்பட்ட வாயிற்கதவு... ஒரே ஒரு ஜன்னல் அதுவும் அந்த அறையின் மேற்குரையில் இருந்தது...

அந்த ஜன்னலின் வழியே நிலவின் பிம்பம் மெல்ல மெல்ல மறையும் காட்சி தெரிந்து கொண்டிருந்தது.. மாயாவின் நினைவில் ஆதவின் தவிப்பு நிறைந்த வதனமே நிழலாடி கொண்டிருந்தது... அதை அன்றி வேறெதுவும் நினைவிலின்றி போக அச்சிறையில் சூழ்ந்திருந்த இருளும் அதற்கு வெளியே சூழ்ந்திருந்த சூழலும் அச்சத்தை மெதுவாய் சுரண்டி சுரண்டி எழுப்பி கொண்டிருந்தது...

அந்த நேரம் சரியாய் அச்சிறையின் வெளி புறத்தில் காலடி ஓசை மெதுவாய் கேட்டிட... மாயா பயத்தில் உடனே கண்களை மூடி கொண்டு மயங்கியிருப்பதை போலவே பாவித்து கொண்டாள்...

இப்போது அக்காலடி ஓசை மிகவும் அருகில் கேட்க மெதுவாய் ஒற்றை கண்ணை திறந்து அச்சிறை கதவை நோக்கிய மாயா மறு கண்ணையும் திறக்க இவளை கண்டு கொண்டதாய் மெதுவாய் கையசைத்தாள் வெளியே நின்றிருந்த வேதித்யா...

ஆனால் மாயா முழுதாய் கண்களை பிரிக்கும் முன் சட்டென வேதித்யாவின் தலை முடியை கொத்தாய் பிடித்து இழுத்தான் விஞ்ஞவெள்ளன்...

வேதித்யா : அன்னையே என இவள் கத்த இவளின் சத்தத்தில் சித்ரியாவும் எழிலும் பயத்தில் பணிப்பெண்கள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தனர்...

விஞ்ஞவெள்ளன் : எத்துனை தைரியமிருப்பின் இச்செயலை புரிய முனைந்திருப்பாய்... என்னடி உறவுகளை காக்க இதயம் உருகுகிறதோ என பல்லை கடித்து கேட்டவன் அவளை கீழே தள்ளி விட சித்ரியா ஓடி வந்து அவளை தாங்கி கொண்டாள்...

வேதித்யா : பொருத்தருள வேண்டுகிறேன் தளபதியாரே... யான் எத்தவறும் புரிய முனையவில்லை... இரா ஊனை (இரவு உணவை) அளிக்கவே வந்தேன் என கண்ணீருடன் கூற அவன் அதை நம்பும் நிலையில் இல்லை...

விஞ்ஞவெவ்வன் : பொய்யுரைக்காதே பாவையே.. உமது எண்ணம் அறியேனென எண்ணுகிறாயா... யாம் அறிவேனடி... உறவுகளை கண்டதும் காதல் (அன்பு) பொங்கிவிட்டதன்றோ

எழில் : என்(ன) உளறல்மொழி தளபதியாரே.. யமக்கு இச்சர்ப்பலோகத்தை அன்றி வேறெந்த உறவுகளும் அன்று.. அவ்வாறிருக்கையில் இப்பெண்டிர்கள் (இப்பெண்கள் ) எமது உறவென தாம் ஏன் உரைக்க வேண்டும் என சகோதரியை ஏசுவதால் ஏற்பட்ட சினத்தில் கத்தி விட்டாள்...

விஞ்ஞவெள்ளன் : தளபதியாரினையே எதிர்த்து வாதிடுகிறாயோ... உமக்கு இன்று சரியான பாடம் புகட்டுகிறேன் என அவள் தலை முடியை பிடித்து இழுத்து சென்றான்... எழில் வலியில் கத்த சித்ரியாவும் வேதித்யாவும் அவர்கள் பின் ஓடி வந்தனர்...

மாயா அவர்கள் படும் வேதனையை கண்டு துணுக்குற்றாள்... அரண்மனைக்குள்ளே இழுத்து சென்ற விஞ்ஞவெள்ளன் எழிலை ஒரு அறையில் தள்ளி விட தடுமாறி தரையில் விழுந்தவள் எழும் முன் விஞ்ஞவெள்ளன் உள்ளே வந்திருந்தான்...

அவனின் பார்வை எழிலின் உடம்பில் ஏதோ ஊரும் உணர்வை கொடுத்தது... தன் கையே தனக்கு உதவி என நினைத்து கொண்ட எழில் அவன் அசந்த நேரம் எழுந்து கதவின் புறம் ஓடி வந்தாள்...

விஞ்ஞவெள்ளனோ சற்றும் யோசிக்காமல் அவன் காத்திருந்த நொடி வந்ததாய் எண்ணி வாளை கையிலெடுத்து எழிலை நோக்கி ஓங்கினான்...

கணநேரத்தில் தப்பித்த எழில் அக்கதவை திறக்க முயன்றாள்... வெளியிலிருந்து கொண்டு சித்ரியாவும் வேதித்யாவும் அக்கதவை திறக்க சொல்லி கத்தி கொண்டிருந்தனர்...

அந்த அறையிலே ஓடி கொண்டிருந்த எழில் ஒரு மூலையில் கால் இடறி கீழே விழ இதையே எதிர்பார்த்த விஞ்ஞவெள்ளன் கொக்கரித்து கொண்டே அவள் மூச்சினை அருக்க வாளை ஓங்க சட்டென உள்ளே புகுந்து அவ்வாளை பிடித்திருந்த அவன் கரத்தில் தன் கூரிய மூக்கால் கீறி விட்டது ஒரு குட்டி பருந்து...

அக்கீறலில் விஞ்ஞவெள்ளன் அலர... இப்போது எழிலுக்கு முன் அவளின் அரணாய் நின்றது நம் விதுஷின் குட்டி பருந்து வசு..

அதன் பார்வையை கண்ட விஞ்ஞவெள்ளன் ஒரு நொடி பின் நகர்ந்தான்... அவனின் மூளையில் பல விஷயங்கள் ஒரே நேரத்தில் சுழன்றடிக்க அபாய மணிகள் ஒளித்து தான் செய்யவிருந்த காரணத்தை வெளிச்சமிட்டு காட்டியது... அவ்வாளை தூர எறிந்தவன் வேகவேகமாய் வெளியே சென்றான்...

அவன் வெளியே வந்த மறுநொடி சித்ரியாவும் வேதித்யாவும் அறைக்குள் ஓடி சென்று எழிலை கட்டி பிடித்து கொண்டு மூவருமாய் அழுதனர்...

எழில் அழுகையுடன் அப்பருந்தை எதற்சையாய் நோக்க ஒரு தீர்க்கமான பார்வை பார்த்து நின்ற வசு தன் சிறகுகளை விரித்து காற்றில் சுழற்றி ஒரு மஞ்சள் ஒளியை உருவாக்கி எழிலிடம் அனுப்பியது...

அம்மஞ்சள் ஒளி எழிலின் கைகளுள் தஞ்சம் கொள்ள வசு அங்கிருந்து விடைபெற்று வந்த வழியே திரும்பி சென்றது... தன் கரத்தை திருப்பி பார்த்த எழில் அதில் இறக்கைகள் போன்ற வடிவத்திலிருந்த டாலர் கொண்ட செய்ன் இருப்பதை கண்டு அதை வருடி பார்த்தாள்...

வெளியே வேகவேகமாய் வந்த விஞ்ஞவெள்ளனின் முன் மிதரவர்தனனும் அருளவர்தனனும் ஓடோடி வந்தனர்... வந்த வேகத்திற்கு இப்போதும் விஞ்ஞவெள்ளனுக்கு மிதரவர்தனனிடமிருந்து பரிசாக ஒரு அறை ஆடி தள்ளுபடி இன்றி இலவசமாய் கிடைத்தது...

மிதரவர்தனன் : என்(ன) காரியம் செய்யவிருந்தாய் விஞ்ஞவெள்ளா... மதிகெட்டு விட்டாயா மூடனே... தாம் மாத்திரம் எழிலை ஏதேனும் செய்திருந்தாள் யோகபரீபூஜன தினத்தில் அதி சக்திக்கு எங்குடா செல்வாய்...

விஞ்ஞவெள்ளன் : பொருத்தருளும் மிதரா.. பெரும் செயலை புரிய இருந்தேன்...

அருளவர்தனன் : தாம் ஈட்டிய செயலில் எழிலின் தேகத்தில் சிறு கீறல் பட்டு ஒறை துளி உதிரம் வீணாகியிருந்தாலும் உமக்கு பெரும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்...

விஞ்ஞவெள்ளன் : புரிய கூடாத தவறாய் புரிந்து விட்டேன்.. ஏன் அவற்றையே மீண்டும் மீண்டும் உரைக்கிறீர் இருவரும்... என ஆத்திரத்தில் கத்தினான்...

மிரதவர்தனன் : ஏனடா கூற மாட்டாய்.. இருவது ஆண்டுகள் முன் இந்த மூவரையும் பிஞ்சு குழந்தைகளாய் கோவன்களின் உயிர் பிரியும் நொடி பறிக்கத்தானே பெரும்பாடு பாட்டு யாம் இருவரும் உயிர்மடிந்தோம்... நீ இவ்வாறு தான் கூறுவாய்...

விஞ்ஞவெள்ளன் : என்ன.. கோ..கோவன்கள் ஏன் அவர்களை காக்க வேண்டும்...

இப்போது அருளவர்தினி ஏதோ கூற விஞ்ஞவெள்ளனுக்கு ஒரு நொடி இதயம் நின்று துடித்தது....

சித்தார்த் மணிக்கட்டில் இதயம் வேகவேகமாய் துடிக்க தொடங்கியிருந்தது... சேவன் பதிலளிக்க மறுத்து வேண்டுமென்றே அதை வேறு ஏற்றி விட்டு கொண்டிருந்தான்...

சித்தார்த் : உண்மையை கூறும்... யாரந்த இளவரசிகள்...

சேவன் : எம்மால் முடியாது...

சித்தார்த் : உண்மையை தாம் கூறி தான் ஆக வேண்டும்.. எவ்வாறு அவ்விளவரசிகள் அச்சர்ப்பலோகத்தை அடைந்தனர் என்க சேவன் மனதில் எதையோ நினைத்ததை அச்சு பிசகாமல் அறிந்த சித்தார்த்தின் இதயம் ஒரு நொடி துடித்து அடங்கியது ....

" தங்கள் இறுதி மூச்சிலும் தான் ஈண்ட மகவுகளை கை விடாமல் இருந்த கோவன்களின் பெண் வாரிசுகள் தான் மூன்று இளவரசிகளாகிய சித்ரியா வேதித்யா மற்றும் எழிலினியா... "

மாயம் தொடரும்...

ஹாய் இதயங்களே... எப்டி இருக்கு யூடி... ரொம்ப குட்டியோ.. டோன்ட் வரி இந்த யூடிய இப்டியே முடிச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு அடுத்த யூடி நைட்டு உங்கள தேடி வரும்... அதுல நம்ம ஹீரோஸோட ட்ரெய்னிங்க என்ஜாய் பன்னலாம்... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro