ஷ்ஷ்ஷ்
" தம்பி நீங்க கேட்ட விலைல இந்த வீடு தான் வாடகைக்கு இருக்கு, வேணும்னா பாருங்க "
வீட்டை சுற்றி பார்த்தான் அவன்...சிறிய கிணறு உள்ள தோட்டம், முற்றம், சமையல் அறை மற்றும் 1 படுக்கை அறை கொண்டு சின்னதாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.
" அண்ணே எனக்கு ஒகே. வீடுனா இப்படி தான் இருக்கனும். எவ்வளவு அழகா இரசித்து கட்டி இருக்காங்க. இவ்ளோ விலை கம்மியா நான் எதிர்பார்க்கல. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு" வீட்டை பார்த்து புன்னகைத்தவாறே பேசினான் சபீர்.
" ஆமா ஆமா ஏன் இருக்காது... அது இருக்குல்ல அப்போ அப்படி தான் இருக்கும்" அவனுக்கு கேட்காதவாறு முணுமுணுத்தார் தரகர்.
" என்ன அண்ணே சொன்னீங்க? " இவரை திரும்பி பார்த்து கேட்டான் சபீர்.
" ஒன்னுமில்ல தம்பி. வீட்டை நல்லா சுத்தமா வைச்சுக்கோங்க, அப்புறம் முடிஞ்சவரை வீட்ல சத்தம் அதிகம் வராம பார்த்துக்கோங்க. முக்கியமா நைட்ல "
" அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவேன்ணே... இப்படி வீடு கிடச்சதே பெரிய விஷயம் "
" சரி தம்பி எப்போ இங்க மாத்திட்டு வரீங்கன்னு சொல்லுங்க. அதுக்குள்ள நான் ஓனர்கிட்ட பேசி வாடகை பத்திரம் ரெடி பண்ணி வைக்கிறேன் "
" நான் நாளைக்கே வர ரெடிண்ணே. நீங்க எல்லாத்தையும் நாளைக்கு தயார் பண்ணி கொண்டு வந்துருங்க. ஆமா இப்பவே சாமானெல்லாம் கொண்டு வந்து வச்சுக்கலாமாண்ணே? "
அவர் முகம் சற்றே சுருங்க, "இல்ல தம்பி மணி இப்பவே 6 ஆகுது. ஓனர்கிட்ட சொல்லனும், நீங்க நாளைக்கே வந்துருங்களேன்"
" சரிண்ணா. நீங்க பேசிட்டு சொல்லுங்க "
இருவரும் அங்கிருந்து கிளம்ப அவர்கள் பின் நின்ற நிழலுருவமும் மெல்ல காற்றில் கரைந்தது.
சபீர் மறுநாள் அந்த வீட்டில் அவன் சாமான்களை எல்லாம் அடுக்கி வைத்து கொண்டு இருந்தான். சமையல் அறையில் அவனுக்கு மட்டும் தேவையான கொஞ்ச பாத்திரங்களை அடுக்க கைத்தவறி டம்ளர் ஒன்று கீழே விழுந்தது. டங் டங் என்று அந்த சத்தம் வீடே எதிரொலித்தது.
கீழே குனிந்து அவன் அதை எடுக்க போக உருண்ட டம்ளர் சட்டென்று ஆட்டத்தை நிறுத்தியது. சரேலென கையை பின்னுக்கு எடுத்தவன் அதையே ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தான், ஏதோ அது அவனை தாக்க காத்திருப்பது போல்.
பின் "என்னடா சபீரு இதுக்கெல்லாமா பயப்படுவ. நாங்கலாம் சுனாமிலயே சும்மிங்க போடுறவங்க, பிஸ்கோத்து" என தலையை சிலுப்பியவன் தன் மற்ற வேலைகளை கவனிக்கலானான்.
ஒரு வழியாக எல்லா வேலைகளையும் முடித்தவன் ஸ்விகியில் சாப்பாடை ஆர்டர் செய்துவிட்டு தன் மொபைலில் ஒரு படத்தை போட்டு பார்க்க ஆரம்பித்தான். வால்யூம் பட்டணை அவன் ஏற்ற அது ஏறி ஏறி இறங்கிய வண்ணம் இருந்தது.
" ச்ச.. இந்த ஸ்மார்ட் போனே வேஸ்ட், வாங்கி ஒரு வருஷம் ஒழுங்கா வருதா? பேசாம பழைய ப்லிப் போன் வாங்க வேண்டியதுதான் இத தூக்கிப்போட்டு " என்று நினைத்துக்கொண்டான்.
அதே நேரம் படுக்கை அறை பக்கமிருந்து
" ஹி ஹி ஹி "
யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது. என்னடா இது என்று துணுக்குற்றவன் அந்த அறையை நோக்கி சென்றான். அவன் கதவை திறந்த அதே நொடி
வீட்டு அழைப்புமணி அடித்தது. அந்த திடீர் சத்தத்தில் தூக்கிவாரிப்போட அவனின் இதயத்துடிப்பு பக் பக் என எகிறியது.
"ச்ச என்ன இது இங்க வந்ததுல இருந்து சும்மா சும்மா பயந்துட்டு இருக்கேன்" என இதயத்தை நீவி விட்டபடி கதவை திறக்க சென்றான்.
அங்கு சாப்பாடு பார்ஸலுடன் டெலிவரி ஆள் நின்றுகொண்டு இருந்தான்.
"சபீரா?" என அவன் கேட்க
"ஆமா நான் தான்" என்று கூறி பார்ஸலை பெற்றுக்கொண்டான் இவன்.
"இருங்க காசு கொண்டு வரேன்" என்று இவன் உள்ளே சென்று பர்ஸை எடுத்து வந்தவன் உரிய பணத்தை அவனிடம் தந்தான். காசை வாங்கி கொண்டு சபீரின் பின் பார்த்து சிரித்து டாடா காட்டியவன்
" உங்க பையன் க்யூட்டா இருக்கான் சார் "
" பையனா? நான் மொரட்டு சிங்கிள் டா" என கூறி யாரை சொல்றான் என சபீர் திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை.
" லூசா இவன்" என நினைத்து அவனிடம் என்னவென்று கேட்க திரும்ப அவனோ வண்டியை கிளப்பி சென்றுவிட்டான்.
"எங்கிருந்துடா எனக்குன்னு வரீங்க? ஏற்கனவே நானே பீதில இருக்கேன் இவன் வேற கடுப்பேத்திட்டு போறான். ப்பா என்னா பசி, சரி சாப்பிடுவோம்"
சாப்பாட்டை திறக்க பிரியாணியும் சிக்கன் கிரேவியும் வீட்டையே மண மணக்க செய்தது. பிரியாணியை பார்த்தவுடன் மற்றவை மறக்க தண்ணீர் எடுத்து வந்து சாப்பிட ஆரம்பித்தான் சபீர்.
ஒரு வாய் எடுத்து வைத்து "ஆஹா ஆஹா அருமை அருமை" என பாராட்டியப்படியே அடுத்த வாய் எடுக்க அப்பொழுது அவன் காதுக்கருகில்
"எனக்கு பிரியாணி" என்று ஒரு பெண் குரல் கொஞ்சியது. அந்த குரலில் சாப்பாடு புரைக்கேற லொக் லொக் என இரும்பியப்படி பதறி அவன் திரும்ப கண்ணில் நீர் நிறைந்ததால் ஒரு நிமிடம் ஒன்றும் தெளிவாக தெரியவில்லை.
தலையில் நன்றாக தட்டியபடி கண்ணை துடைத்துவிட்டு மறுபடியும் வீட்டை சுற்றி அலசினான் சபீர். எந்த அசைவும் இல்லாமல் இவன் இதயத்துடிப்பிற்கு மாறாக வீடு நிசப்தமாக இருந்தது. உள்ளே சென்று பார்க்க பயந்தவன், திகில் பரவ ஏதோ சரியில்லை என்று வீட்டை விட்டு விற்றென்று கிளம்பினான் சபீர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro