Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கண்ணால் பேசும் பெண்ணே - 4

பிரக்யாவிடம் சென்ற தியாகு, "என்னம்மா?" என்று மெல்ல கேட்டான்.

அவனை நேராக நோக்கியவள், வெளியில் இருப்பவன் யார்? என சைகையில் கேட்டாள்.

"அவன் என் ஸ்கூல்மேட்மா... பெயர் அபிஷேக், கிட்டதட்ட டென் இயர்ஸ் ஒன்றாகப் படித்தோம் அதன்பிறகும் ரொம்ப டச்சிலேயே தான் இருக்கின்றோம். என்னுடைய க்ளோஸ் பெஸ்ட் பிரெண்ட், மிகவும் நல்லப் பையன்!" என்று ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தவனை, அவனைப் பற்றிய பெருமை போதும் நிறுத்து என்பது போல் வாயைப் பொத்திக் காண்பித்தாள்.

'சரி... சாப்பிட்டாயிற்றா?' என விரல்களில் அபிநயம் பிடித்தாள் பிரக்யா.

அவன் இல்லையென்று தலையாட்டவும், ஃபிரிட்ஜை திறந்து குடைந்தவள் இட்லி மாவையும், தேங்காயையும் வெளியே எடுத்தாள்.

ஒரு நொடி தயங்கியவள், 'வெளியில் இருக்கும் அந்த மகாராஜா எப்பொழுது கிளம்புவான் இல்லை அவனுக்கும் செய்ய வேண்டுமா?' என்றாள்.

'என்ன அபியை இந்த இறக்கு இறக்குகிறாள்?' என சிந்தித்தவன், "இல்லைம்மா... அவன் மதியத்துக்கு மேல் தான் கிளம்புவான், அவனுக்கும் சேர்த்து செய்து விடு!" என்று தியாகு கூற, அவள் விழிகள் இடுங்க அவனைப் பார்த்தாள்.

"என்னம்மா... வந்ததிலிருந்து அண்ணாவை ஒரு மாதிரியாகவே பார்க்கின்றாய்?" என்றான் குறையோடு.

லேசாக சிரித்தவள், 'நீ வீட்டிற்கு அழைத்து உட்கார வைத்திருக்கும் ஆள் அப்படி? அவன் காற்று வீசுகின்ற இடத்தில் இப்படி தான் இருக்க முடியும்!' என்று இதழ் வளைத்து பழிப்பு காண்பித்தாள்.

"சரி... அதெல்லாம் இருக்கட்டும், அவன் யார் தெரியுமா? உன்னிடம் அவனைப் பற்றி பல முறை சொல்லியிருக்கின்றேன்... கெஸ் பண்ணு!"

' அவனைப் பற்றியா?'என நெற்றிச் சுருக்கியவள், 'இதுவரை எந்த பிரெண்டை பற்றியும் அண்ணா கேவலமாக சொன்னதில்லையே... அப்பொழுது அவனைப் பற்றி கண்டிப்பாக சொல்லி இருக்க மாட்டார்கள்!' என்று அசட்டையாக தோள்களை குலுக்கினாள்.

திகைத்தவன், "இல்லைம்மா... உன் படிப்பிற்கு கூட காரணமானவன், அப்புறம் அவன் கம்பெனியில் தான் உனக்கு வேலை..." என்று அவன் முடிக்கவில்லை, வேகமாக திரும்பியவள், 'உண்மையாகவா?' என்பது போல் தலையசைத்து வினவினாள்.

தியாகு ஆமோதிக்க, பிரக்யா வேக வேகமாக மேலே பார்த்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி கடவுளே... என கும்பிடு போட்டாள்.

'நல்லவேளை உன் மொக்கை ப்ரெண்டிடமிருந்து கடவுள் என்னை காப்பாற்றினார். இல்லை... காலம் முழுக்க அவன் ஆபிஸை கட்டிக் கொண்டு அழ வேண்டியதாய் போயிருக்கும்!' என்று அவனிடம் நாக்கை நீட்டி நக்கலாக சிரித்தாள்.

"என்ன பாப்பா நீ? அவனைப் பற்றி முழுவதும் தெரியாமல், இப்படி குறைவாக மதிப்பிடுகிறாய்... அபி எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?" என்று அவளுக்கு அபியை புரிய வைக்க முயன்றான்.

'ஒன்றும் தெரிய வேண்டாம்... அவன் கடைந்தெடுத்த லூசு என்று எனக்கு ஆல்ரெடி தெரியும். நான் தான் அவன் நடவடிக்கைகளை ஒவ்வொரு முறையும் பார்க்கின்றேனே... எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று புரிந்துக் கொள்ள முடியாதவன். அவனுடைய அறிமுகமே எனக்குத் தேவையில்லை!' என்று கரங்களை ஆட்டியவளின் விழிகள் மெல்ல விரிந்தது.

தியாகுவின் பின் கரங்களைக் கட்டியபடி அபி நின்றிருந்தான்.

பிரக்யா தான் சொன்னது அவனுக்கு புரிந்திருக்குமா என்ற யோசனையில் தடுமாற, அபி நைஸாக தியாகுவை கிச்சனை விட்டு வெளியேற்றினான்.

அதைக் கவனித்தவள் வேகமாக அவனை பின் தொடர முயன்றாள், அவளை வெளியே செல்ல விடாமல் வழி மறித்து நின்றான் அபி.

முகம் சுளித்தவள், புருவம் நெறிய அவனை முறைத்துப் பார்த்தாள்.

"இதற்கெல்லாம் கொஞ்சம் கூட அசர மாட்டோம், நாங்கள் எல்லாம் பனங்காட்டு நரி தெரியுமல்லவா?" என்றான் அசட்டையாக.

ஹும்... என ஏளனமாக இதழை வளைத்தாள் பிரக்யா.

"ஆமாம்... ஏன் என்னை கண்டாலே அடுப்பில் வைத்த பாலாக பொங்கி கொண்டு திரிகிறாய்? நம் முதல் சந்திப்பில் ஏற்பட்ட பிரச்சினை தான் இதற்கு காரணம் என்றால் அதை இப்பொழுது விளக்கமாக சொல்லி விடுகிறேன். அந்த பெரியவர் என்னிடம் ஒரு உதவி கேட்டு வந்தார், அவர் வந்தப்பொழுது அது தொடர்பான வேலைகள் முடியாததால் அடுத்து தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். வேலை முடிந்து தேடினால் அவரைப் பிடிக்க முடியவில்லை, கொடுத்திருந்த முகவரியிலும் இல்லாமல் வீட்டை காலி செய்து விட்டாராம். ப்ச்... ஒரு வயதானவருக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. அதனால் தான் அன்று அவரை சாலையில் கண்டதும் போன உயிர் திரும்பி வந்ததாக எண்ணி உன்னிடம் உதவி கேட்டேன். நீ செயல்படவில்லை என்றதும் கோபம் வந்தது, அது தான் அப்படி திட்டி விட்டேன். பிறகு ஆர்ட் எக்ஷிபிஸினில் தான் விவரம் தெரிந்தது, மன்னிப்பு கேட்க உன்னைத் தேடினால் நீ பறந்து விட்டாய்!" என்று விளக்கினான் அபி.

ஓ... என்று இழுத்தாள் பிரக்யா, அவளின் குவிந்த வடிவான இதழ்களின் மேல் அபியின் பார்வை விழுந்தது.

நிமிர்ந்தவள், அவன் பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்து, 'என்ன?' என்று விழிகளாலேயே கேள்வி எழுப்பினாள்.

அவளை மெல்ல நெருங்கியவன் குனிந்து, "ஐ லவ் யூ!" என்றான் கண்ணோடு கண் பார்த்து.

'என்ன?' என்று தற்பொழுது இதழசைவில், தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியவள், விரைவாக அவனிடமிருந்து விலகி வெளியே செல்ல முயன்றாள்.

"வெயிட்... வெயிட்... பதில் சொல்லாமல் போனால் எப்படி?" என்று அவளைத் தடுத்தான் அபி.

எரிச்சலுடன் அவனைப் பார்த்தவள், 'உங்கள் விளையாட்டுக்கு ஆடும் பொம்மை நான் இல்லை...' என்று விழிகளை உருட்டி படபடவென்று தன் கரங்களை அசைத்தாள்.

சற்று யோசித்தவள், தன் மொபைலை எடுத்து தான் நினைத்ததை டைப் செய்து காண்பித்தாள்.

அதை வாங்கி அணைத்து அவள் கரங்களில் வைத்தவன், "எல்லாம் புரிகிறது, இதற்கு அவசியமில்லை. அதேபோல் உன்னை என் கைப்பாவையாகவும் இருக்க சொல்லவில்லை. அதெல்லாம் சுத்தப் போர்... நீ எப்பொழுதும் இதே மாதிரி என்னிடம் சண்டைப் போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக தான் உன்னை திருமணமே செய்து கொள்ள நினைக்கின்றேன், அப்பொழுது தான் லைஃப் செம இன்டிரெஸ்டிங்காக போகும்!" என்று கற்பனையில் விழிகள் மூடி சிலாகித்தான் அபி.

கடவுளே... என தலையிலடித்துக் கொண்டாள் பிரக்யா, "ஹேய்... உனக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? என் அமரக் காதலை கேட்டு தலையிலடித்துக் கொள்கிறாய்!" என்று இடையில் கை வைத்து பொய்யாய் முறைத்தான்.

அவளையுமறியாமல் இதழ்கள் புன்னகையில் மலரத் துடிக்க, அதை அடக்கியதால் அவளின் கன்னம் சிவந்ததை கண்டும் காணாமல் கண்டான் அபி.

"ஆங்... அப்புறம் என்னால் பேச முடியாது அது இது என்று என்னிடம் பரிதாபத்தை எதிர்பார்க்காதே... இத்தனை திறமைகளை வைத்துக் கொண்டு நீ திமிராக நடந்து கொள்வது பிடித்திருப்பதால் தான் உன் மேல் எனக்கு காதலே வந்தது..." என அவன் பேசிக் கொண்டிருக்க, அவனுடைய மொபைல் ராகம் பாடியது.

அதுவும் எப்படி?

"கண்ணால் பேசும் பெண்ணே... என்னை மன்னிப்பாயா?
கவிதை தமிழில் கேட்டேன்...
என்னை மன்னிப்பாயா?"

'அடப்பாவி...! என்னமாய் சீன் போடுகிறான்?' என்று பிரக்யா, அவனை லேசாக கண்கள் சுருக்கி பார்க்க.

"ஹிஹி..." என்று வழிந்தவன், "அது ஒன்றுமில்லை... என்னிடம் சண்டைப் போட்டு முறைத்துக் கொண்டே சுற்றுவாய் அல்லவா? அதனால் தான் இந்த பாட்டு!" என்று சமாளித்தான்.

ஓஹோ... என்றவள் அப்புறம் என்று கைகளை விரித்து காண்பிக்க, "அடுத்த சிட்சுவேசன் சாங் கூட ரெடி... இப்பொழுது மட்டும் நீ ஐ லவ் யூ சொல்லு, ரிங் டோனை மாற்றி விடுகிறேன்!" என்றான் வேகமாக.

அவன் சாதுர்யத்தை எண்ணி வெளிப்படையாகவே சிரித்தவள், தலையசைத்தபடி நகர்ந்தாள்.

"இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?" என்றான் அபி முன்னே வந்து.

ஹும்... என்று நக்கலாய் இதழ் கடித்து பார்த்தவள், 'கண்களால் பேசினாலே புரியுமில்லையா? பிறகு ஏன் என்னை கேட்கின்றீர்கள்?' என்று சைகையில் கேட்டு தோள்களை குலுக்கினாள்.

"புரிகிறது தான்... இருந்தாலும்..." என்று இழுத்தவன், "உன் சிரிப்பில் கொஞ்சம் நக்கல் தெரிகிறதே... என்னை வைத்து காமெடி, கீமடி பண்ணவில்லையே?" என்று சந்தேகமாக வினவினான்.

அபியின் பாவனையில் மீண்டும் சிரிப்பு பீறிட, திரும்பி நின்று கொண்டாள் பிரக்யா.

அவளை பின்னிருந்து தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், "இன்னும் ஒத்துக் கொள்ள மனம் வரவில்லையா?" என்றான் அவளிடம் குனிந்து.

முகம் சிவக்க விழிகளை தாழ்த்தினாள் அவள், "ப்ளீஸ்..." என்று தன் விரல் கொண்டு நிமிர்த்தினான் அவன்.

ஒரு கணம் அவன் விழிகளை நோக்கி விட்டு மின்னலென பார்வையை விலக்கி கொண்டவள், சம்மதமாக தலையசைத்தாள்.

"ஹுர்ரே..." என்று சந்தோசத்தில் கத்தியவன் ஆவலுடன் அவள் முகம் நோக்கி குனிய, அவன் குரலில் தெரிந்த உற்சாகத்தை கேட்டு ஆர்வத்தை அடக்க முடியாமல் அங்கே பிரசன்னமானான் தியாகு.

"ஏய்... என்னடா பாப்பா சம்மதித்து விட்டாளா?"

"ஷ்... அப்பா... கொஞ்சமாவது டீசன்ஸி இருக்காடா உனக்கு? இரண்டு லவர்ஸ் தனியாக பேசிக் கொண்டிருக்கின்ற இடத்திற்கு இப்படி தான் வருவாயா?" என்று தியாகுவை முறைத்தான் அபி.

"அடேய் பிராடு... உன் தங்கை காலில் விழுவாயோ இல்லை யார் காலில் விழுவாயோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, இன்னும் ஒரே மாதத்தில் அவள் எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று சேர்த்து வைக்க சொல்லி விட்டு இப்பொழுது என்னை விரட்டுகின்றாயா?"

அதைக் கேட்டு பிரக்யாவின் முகம் மலர, அபியை விழியினாலேயே கபளீகரம் செய்தாள். அவனோ அவளைப் பார்த்து புன்னகையுடன் கண் சிமிட்டினான்.

"பாப்பா... நீயுமா? அண்ணா பேசுவது உன் காதிலேயே விழவில்லை போலிருக்கிறதே?" என்று புலம்பினான் தியாகு.

"அது தான் தெரிகிறது இல்லை... இடத்தை காலி பண்ணு காற்று வரட்டும்!" என்று கைகளால் விசிறினான் அபி.

'இத்தனை தூரம் வளர்ந்ததுக்கு நீ தான் காரணம், உன்னை யார் இவரிடம் என்னை தனியே விட்டு விட்டு போக சொன்னார்கள்? இதற்கு நான் பொறுப்பில்லை!' என்று தோள்களை குலுக்கினாள்.

"ஹும்... சரி சும்மா இருப்பதற்கு அட்லீஸ்ட் பெரியவர்களிடம் விவரத்தை தெரிவிக்கின்ற வேலையையாவது பார்க்கின்றேன்!" என்று அலுத்தபடி சென்றான்.

"ஹேய்... தாங்க்ஸ்டா மச்சான்!" என்று தியாகுவை கட்டிக் கொண்ட அபி, "அப்படியே இந்த வாரத்தில் நல்ல முகூர்த்தம் இருக்கின்றதா என்று பார்க்க சொல்லு!" என்று பல்லைக் காட்டினான்.

"டேய்... இப்படி கேட்க கொஞ்சம் கூட கூசவில்லையா உனக்கு?" என கேட்டான் தியாகு.

"ம்... என் பெண்டாட்டியை திருமணம் செய்து கொள்ள, நான் ஏன்டா கூச்சப்பட வேண்டும்?" என்று சீரியஸாக எதிர்கேள்வி கேட்டான்.

பிரக்யா தலைக்கு மேல் கும்பிட்டு, 'இதற்கு மேல் மானத்தை வாங்காதே போ...' என்று அவனை அனுப்பி வைத்தாள்.

வேகமாக அவளை அருகில் இழுத்த அபி, "இதற்காக தானே அவனை அனுப்பினாய்?" என்று ஆவலுடன் குனிய, நறுக்கென்று அவன் கைகளில் கிள்ளினாள் பிரக்யா.

"ஏய்... ஏன்டி கிள்ளுகிறாய்?" என்று அலறிய அபியின் வாயைப் பொத்தியவள், 'கொன்று விடுவேன்!' என விழிகளாலேயே மிரட்டினாள்.

"ஓவராக தான் மிரட்டுகிறாய்!" என்று முறைத்தவனை, 'உங்களுக்கு சண்டைப் போட்டால் தானே பிடிக்கும்!' என்று சிரித்து சமாளித்தாள்.

பிறகு அவன் வாட்சை நோண்டியவள், அது என்ன பாட்டு என்று மெல்ல விசாரித்தாள். ஏதுமறியா பிள்ளைப் போல் புரியாத பாவனையை வெளிப்படுத்தியவனை கண்டு கோபமடைந்தவள், அவனை விட்டு விலக முயல, அவளை தன் கைப்பிடியிலேயே நிறுத்தியவன் அவளின் மொபைலில் தன் நம்பரை டைப் செய்து கால் பட்டனை அழுத்தினான்.

"கண்கள் இரண்டால்...
உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய்... போதாதென்று...
சின்ன சிரிப்பில்...
உன் கள்ளச்சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு..."

என பாட, எப்படி? என்று ஸ்டைலாக புருவம் உயர்த்தி அபி விசாரிக்க, பதிலுக்கு செம என இதழசைத்து கண்களால் புன்னகைத்தாள் பிரக்யா.

** END**

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro