கண்ணால் பேசும் பெண்ணே - 3
அபியின் மெல்லிய விசில் சத்தம் பிரக்யாவை மீட்க அவனை லேசாக முறைத்தவள், அவன் தோளுக்கு மீறி விழிகளால் வீட்டின் உள்ளே தன் சொந்தங்களை தேடினாள்.
'இவன் எப்படி இங்கே? வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லையே...' என்று யோசனையுடன் நின்றாள்.
அபியோ நிதானமாக அவளின் முக அழகை அணுஅணுவாய் ரசித்து கொண்டிருந்தான்.
'என்ன இவன் நந்தி மாதிரி அசையாமல் வாசலில் குறுக்கே நிற்கின்றான்? ப்ச்... இந்த பெரியம்மா, அண்ணாவெல்லாம் எங்கே?' என்று சலித்தவள், தன் மொபைலை எடுத்து தியாகுவிற்கு ரிங் செய்தாள்.
வீட்டின் உள்ளே இருந்து ரிங்டோன் கேட்கவும், 'இந்த அண்ணா உள்ளே தான் இருக்கின்றானா? இந்த சிடுமூஞ்சியை வாசலில் நிற்க வைத்து விட்டு, இவன் உள்ளே என்ன செய்கிறான்?' என்று உள்ளம் கடுகடுத்தாள்.
பிரக்யாவின் முகத்தில் மாறி மாறி தோன்றும் பாவனைகளை ஆசையுடன் பருகியபடி, அபி சிலையாக நின்றான்.
'இந்த லூசு ஏன் இப்படி என்னையே பே என்று பார்த்தபடி இளித்துக் கொண்டு நிற்கிறது? ஒருவேளை அம்னீஷியாவாக இருக்குமோ... பழசையெல்லாம் மறந்து விட்டானா? ச்சை... எவ்வளவு நேரம் தான் இப்படி வாசலிலேயே அசிங்கமாக நின்று கொண்டிருப்பது? இவன் நிற்கின்ற அழகை பார்த்தால் இப்பொழுதைக்கு வழி விடுபவன் போல் தெரியவில்லை, பேசாமல் திரும்ப வீட்டிற்கு போய் விடலாம்!' என முடிவு செய்து திரும்பினாள்.
அப்பொழுது தான் சுய உணர்வுக்கு திரும்பியவன் வேகமாக அவள் கை பற்றி தடுத்தான், "ஏய்... தியாகு உள்ளே தான் குளித்து கொண்டு இருக்கின்றான் வா!" என்று உரிமையுடன் அழைத்துச் சென்றான்.
அவன் செயலில் திடுக்கிட்ட பிரக்யா, 'ஐயோ... இவன் என்ன இப்படி சட்டென்று என் கையை பிடித்து விட்டான்?' என்று அதிர்ந்தாள்.
"ம்... உட்கார்!" என்று சோபாவிடம் சென்றவனின் கரத்திலிருந்து வேகமாக தன் கையை உருவிக் கொண்டவள், அவனை உறுத்து விழித்தாள்.
அதுவரை தன் எண்ணப்போக்கில் உழன்று கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் அவளின் நிலைப் புரிந்தது.
மெல்ல இதழைக் கடித்தவன் அவளிடம் லேசாக அசடு வழிந்தான், "என்ன நீ எப்பொழுது பார் என்னை முறைத்துக் கொண்டே இருக்கிறாய்? இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை ஆமாம் சொல்லி விட்டேன்!" என்றான் அலட்டலாக.
'ஹையோ... எந்த நேரத்தில் என்ன செய்கிறான் என்று தெரியாத இந்த லூசிடம் என்னை தனியாக மாட்டி விட்டு, என் அண்ணன் லூசு எவ்வளவு நேரமாக தான் குளிப்பான்? இவன் என்னவோ இந்த வீட்டின் சொந்தக்காரன் போல் உரிமையுடன் சட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறான்!' என்று பொறுமை இழந்து கொண்டிருந்தாள் அவள்.
"ஹேய் பாப்பா... நீயே வந்து விட்டாயா, சூப்பர்... சூப்பர், அங்கே நம் வீட்டிற்கு வருவதற்காக தான் நாங்கள் கிளம்பி கொண்டிருந்தோம்!" என்று பிரக்யாவை பார்த்து ஈயென்று இளித்தான் தியாகு.
பதிலுக்கு தன் அண்ணன் மீது அவள் தீப்பார்வையை வீச, 'ஐயோ... என்ன இது இவள் இப்படி முறைக்கின்றாள்? ஒருவேளை எல்லா உண்மையும் தெரிந்து விட்டதா...' என்று திரும்பி அபியை பார்த்தான்.
அவனோ கூலாக கால் மேல் கால் போட்டபடி வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு பிரக்யாவை விழுங்கி விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான்.
'அடப்பாவி... நல்ல்ல்லல பிரண்டு...? இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? இவன் என்னவெல்லாம் சொல்லியிருக்கின்றானோ தெரியவில்லையே...' என்று பெக்க பெக்க விழித்துக் கொண்டு நின்றான் தியாகு.
"அது வந்து... பாப்பா..." என்று அவன் ஆரம்பிக்க, தலையில் அடித்துக் கொண்டவள் அவன் ரூமை நோக்கி கை காட்டினாள்.
அப்பொழுது தான் வெறும் டவலோடு நின்று கொண்டிருப்பதை உணர்ந்தவன், "இதோ... ஒரே நிமிடத்தில் ட்ரெஸ் மாற்றி விட்டு வந்து விடுகிறேன்!" என்று உள்ளே ஓடினான்.
உஃப் என்றபடி தலையை அசைத்தவள், அபியிடம் திரும்பினாள். அதற்காகவே காத்திருந்தவன் போல் ஏதோ பேசுவதற்கு அவன் முன்னே நகர்ந்து அமர, அவனை அலட்சியப்படுத்தி விட்டு எழுந்து உள்ளே சென்றாள்.
'ம்... என்ன இவள் பாட்டுக்கு எழுந்து போய் விட்டாள், இப்பொழுது நான் அவள் பின்னால் போகவா? வேண்டாமா?' என்று அபி அவனுக்குள் பெரிய பட்டிமன்றத்தையே நடத்திக் கொண்டிருக்க, உடைமாற்றி வந்த தியாகு அபி தனித்திருப்பதை கண்டு வேகமாக அவனருகில் வந்தான்.
"அடேய் பாவி... அவளிடம் அப்படி எதைப் பற்றிடா பேசினாய் என்னைப் பார்த்து அந்த முறை முறைக்கின்றாள்? நான் தான் மெதுவாக விஷயத்தை சொல்கிறேன் என்று சொன்னேனில்லை..." என்று மெல்லிய குரலில் உள்ளே எட்டி பார்த்தபடி அவன் காதை கடித்தான்.
"ஹிஹி... மச்சான்! ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபார்மேஷன், நான் இன்னும் அவளிடம் மேட்டரை ஓப்பன் பண்ணவே இல்லை. அதற்குள்ளகாவே... அதாகப்பட்டது என்னை பார்த்தவுடனேயே சண்டி ராணிக்கு ஏகத்துக்கும் பிரஷர் அதிகமாகி விட்டது!" என்று கண்ணடித்து சிரித்தான் அபி.
"அட கடவுளே..." என்று தலையினில் கை வைத்துக் கொண்டவன், "எப்படிடா இந்த நிலையிலும் இப்படி கூலாக சிரித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று பரிதாபமாக வினவினான் தியாகு.
"அதற்காக... என்னை அழச் சொல்கிறாயா? துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... என்று திருவள்ளுவரே இதையெல்லாம் எதிர்பார்த்து தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எழுதி வைத்திருக்கிறார். ஆமாம்... அது திருவள்ளுவரா... இல்லை ஔவையாரா?" என வடிவேலு பாணியில் இவன் கேட்க, அவனோ அபி... என்று பல்லைக் கடித்தான்.
அதே நேரத்தில் கிச்சனிலிருந்து கரண்டியால் வேகமாக தட்டை தட்டும் ஒலி கேட்டது.
"ஐயோ... அவள் என்னை தான் கூப்பிடுகிறாள்!" என்றான் தியாகு பதட்டத்துடன்.
"தெரிகிறது... தெரிகிறது... போ!" என்றான் அபி அலட்சியமாக.
"இப்பொழுது அவளிடம் சென்று நான் என்ன பேசுவது... எப்படி சொல்வது?" என்று டென்ஷனில் விரல் நகம் கடித்தான்.
அவன் கரத்தை தட்டி விட்டவன், "நீ என்னவோ பேசு... எதை பற்றி வேண்டுமென்றாலும் சொல்லு, ஆனால் என் லவ்வை நான் தான் அவளிடம் நேரடியாக சொல்வேன்!" என்றான் அவனுடைய டீசர்ட் காலரை நீட்டாக எடுத்து விட்டபடி.
"இப்பொழுது அது ரொம்ம்பபப முக்கியம்..." என்று அவன் கழுத்தை நொடித்தான்.
"பின்னே... லவ் ஈஸ் லைஃப்மா லைஃப்!" என்றான் அபி ஸ்டைலாக.
"ம்... இதோ இன்னும் பத்து நிமிடத்தில் உன் லைஃப்பை அனுப்பி வைக்கிறேன். அது வொய்ஃபா மாறுகிறதா இல்லை நைஃபா மாறுகிறதா என்பது அப்பொழுது தெரிந்து விடும்!" என்று நக்கலடித்து விட்டு சென்றான் தியாகு.
-தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro