கண்ணால் பேசும் பெண்ணே - 2
"இந்த மாதிரி ஆட்களிடம் இனிமேல் என்னை போன்ற ஆட்களை தயவுசெய்து அறிமுகப்படுத்தாதீர்கள். திறமையிருந்தால் மட்டும் போதாது... மற்றவர்களை மதித்து பேச தெரிந்திருக்க வேண்டும்!" என்றான் அந்த பெண்ணிடம் கடுப்புடன்.
"நோ சார்... யூ மிஸ்டேக்கன்!" என்றாள் அவள் வேகமாக.
"என்ன மிஸ்டேக்கன்... பாராட்டுபவனிடம் பதிலுக்கு ஒரு நன்றி கூட சொல்லத் தெரியாதவளிடம் திறமை இருந்து என்ன பயன்?" என்றான் கோபமாக.
"இல்லை... நீங்கள் நினைப்பது போல் இல்லை, அந்த பெண் மிகவும் நல்லவர். அவரால் வாய் பேச முடியாது... ஊமை!" என்றாள் அமைதியான குரலில்.
அவளின் பதிலில் அதிர்ந்தவன், அவசரமாக வாயிலை திரும்பி பார்த்தான். பிரக்யா ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள்.
தன் தவறை உணர்ந்த அபி, அவளிடம் மன்னிப்பு வேண்ட வேகமாக வாசலை நோக்கி ஓடினான். அதற்குள் அவள் பறந்து விட்டாள், ப்ச்... என்று சலித்தபடி நின்றான்.
அவனுக்கருகில் மற்றொரு குரலும் உச்சு கொட்டியது. அவன் திரும்பி பார்க்க, அங்கே தியாகு நின்று கொண்டிருந்தான்.
"ச்சே... பாப்பாவும் உள்ளே இருந்திருப்பாள் போலிருக்கிறதே... அதற்குள் போன் வந்து கெடுத்து விட்டது. அவள் கிளம்பி விட்டாள்!" என்றான் ரோட்டை எட்டி பார்த்தபடி.
"எந்த பாப்பா?" என்றான் அபி ஒரு மாதிரி குரலில்.
"அது தான் என் தங்கை சொல்லி இருக்கின்றேனே... அவள் பெயின்டிங் கூட உள்ளே இருக்கின்றது!" என்றான் விளக்கமாக.
"அவள் பெயர் என்ன?" என்றான் பல்லை கடித்தபடி.
"பிரக்யா!" என்று அவன் கூறி முடித்தது தான் தாமதம், அபியிடமிருந்து நங்கு நங்கென்று நான்கைந்து கொட்டுக்கள் வாங்கினான் தியாகு.
"ஏன்டா கொட்டுகிறாய்?" என்றான் பாவமாக தலையை தடவியபடி.
"கொட்டுவதா... உன்னை கொலையே செய்து விடுவேன் நான். பாப்பாவாம் பாப்பா... அவளுக்கு பெயரில்லை, எப்பொழுது பார் பாப்பா பாப்பா என்று சொல்லி சொல்லியே பதினைந்து வருடமாக அவள் பெயரே என்னவென்று தெரியாமல் செய்து விட்டான் எனக்கு!" என்றான் வெறியோடு அவனை முறைத்தபடி.
அவன் இவனையே பரிதாபமாக பார்க்க, ஒரு கணம் யோசித்தான் அபி.
"சரி பிழைத்து போ... இதற்கு மேல் உன்னை நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதற்கு பரிகாரமாக நீ ஒன்றே ஒன்று செய்ய வேண்டும். இன்னும் ஒரே மாதத்தில் பிரக்யா எனக்கு மனைவியாக வேண்டும். உன் தங்கையின் காலில் விழுவாயோ இல்லை யார் காலில் விழுவாயோ எனக்கு தெரியாது... அவள் எனக்கு வேண்டும் அவ்வளவு தான்!" என்றான் அதிரடியாக.
அவனுடைய வேகத்தை கண்டவன், வாயை பிளந்து நிற்க. இவன் அவனை காருக்கு இழுத்து சென்றான்.
நடந்த அனைத்தையும் அவனிடம் கூறியவன், "என்னை தவறாக எண்ணாதே... ஏற்கனவே அவள் மேல் எனக்கு ஏதோ ஒரு..." என்று தடுமாறியவன், "எனக்கு சொல்லத் தெரியவில்லைடா... ஆனால் உன் மூலம் அவளை பற்றிய விவரங்கள் தெரிய தெரிய என்னையுமறியாமல் என் மனம் அவளை ஏற்கனவே நேசிக்க ஆரம்பித்து விட்டது போல. இல்லையென்றால்... ஏன் எனக்கு இப்படி திடீரென்று தோன்ற வேண்டும்?" என்று கேட்டான் அபி குழந்தைத்தனமாக முகத்தை வைத்தபடி.
ஹஹாவென்று சிரித்த தியாகு, "யப்பா... என்ன ரியாக்ஷன்டா காண்பிக்கிறாய் நீ..." என்றான் புன்னகையுடன்.
பின் சீரியசாகி, "ஓகே அபி! உனக்காக சித்தப்பா, சித்தியிடம் பேசி நான் சம்மதம் வாங்குகின்றேன். ஆனால் அவளுடையை குறை என்றும் அவளுக்கு பெரியதாக தெரியாமல் நீ தான் கவனித்து கொள்ள வேண்டும். அவள் எங்கள் குடும்பத்தின் உயிர்டா! இதுவரை அவளுக்கு ஒரு குறையுமில்லாமல் நாங்கள் பார்த்து கொண்டோம். இனி..." என்று அவன் வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்த, அவன் கரங்களை பற்றிக் கொண்ட அபி, "அவளை என் இமைக்குள் வைத்து காப்பேன்! கவலைக் கொள்ளாதே... என்றும் நீ வருந்தும் அளவுக்கு நான் நடந்து கொள்ள மாட்டேன்!" என்றான் தீர்மானமாக.
"தேங்க்ஸ்டா அபி!"என்று கண்கள் கலங்க அவனை கட்டிக் கொண்டான் தியாகு.
"ஹலோ சார்! ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆப் இண்டியா ஆக வேண்டாம். உன் தங்கையை சமாளிக்க வேண்டும் நினைவில் வைத்து கொள், அவள் என் மேல் ஏக காண்டாக இருக்கிறாள். நான் அவ்வளவு செய்திருக்கிறேன்!" என்றான் பெருமூச்சு விட்டபடி.
வாய் விட்டு சிரித்தவன், "கொஞ்சம் கஷ்டம் தான்... ஆனாலும் சமாளித்து விடுவேன். அதன்பிறகு அத்தனையும் உன்னிடம் தான் வந்து சேரும்!" என்று மிரட்டினான்.
"திருமணம் செய்வதென்று முடிவெடுத்தாகி விட்டது... பிறகு இதற்கெல்லாம் பயந்தால் வேலைக்காகுமா. சமாளிப்போம் இல்லை சரண்டர் ஆகி விடுவோம்!" என்று கண்ணடித்தான் அபி.
இரண்டு தினங்கள் கடந்த நிலையில், தியாகுவின் வீட்டிலிருந்தான் அபி.
"ஏன்டா என்னை இப்படி படுத்துகிறாய்? ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக காலையில் பத்து மணிக்கே ஒரு போன் கூட பண்ணாமல் திடுதிப்பென்று வந்து நின்று பாப்பா வீட்டுக்கு இப்பவே போயாக வேண்டுமென்று அடம்பிடித்தால் எப்படிடா? நான் இப்பொழுது தான் எழுந்தேன், அம்மாவும் ஊரில் இல்லை. நான் குளிக்க வேண்டும், சாப்பிட வேண்டும்!" என்று புலம்பி கொண்டிருந்தவனின் முதுகில் ஒன்று வைத்தான் அபி.
"யப்பா சாமி! போதும்டா நீ புலம்பியது... கிளம்புகின்ற வேலையைப் பாரு. போகின்ற வழியில் ஏதாவது ஹோட்டலில் நிறுத்தி உன்னை சாப்பிட வைத்து விட்டு தான் எனக்கு மறுவேலை ஓகே?" என்றவன், "ஆனால் ஏன்டா இந்த பாப்பாவை மட்டும் விட்டு தொலைய மாட்டேன் என்கிறாய்?" என்றான் அலுப்போடு.
"ஹிஹி... விடுடா... இத்தனை வருடமாக அப்படியே பழகி விட்டது. சரி... இப்பொழுது உன்னை எப்படி அங்கே அழைத்து போய் என்னவென்று அறிமுகப்படுத்துவது?" என்று இழுத்தபடி யோசனையில் ஆழ்ந்தான் தியாகு.
"டேய் அறிவுஜீவி... இல்லாத மூளையை தேடிக் கொண்டு நேரத்தை வீண் பண்ணாதே, நீ போய் குளித்து கிளம்புகின்ற வேலையைப் பார். அதையெல்லாம் நான் சமாளித்து கொள்கிறேன், உங்கள் வீட்டு அல்லி ராணியை ஃபேஸ் செய்வது வரை அனைத்து திட்டமும் தயாராக உள்ளது!" என்றான் அபி ஸ்டைலாக கால் மேல் கால் போட்டவாறு.
"ம்... ஒரு மார்க்கமாக தான்டா சுற்றிக் கொண்டிருக்கிறாய். ஜெட் வேகம் தான்!" என்று கேலி பேசியவனை கண்டு சிரித்தவன்,
"பின்னே உன் லட்சணத்தை தான் இரண்டு நாளாக பார்த்தேனே... நோ இம்ப்ரூவ்மென்ட்ஸ். அது தான் நானே அதிரடியாக களத்தில் இறங்கி விட்டேன், சரி சரி... போ போ... ஆகின்ற வேலையை பார்!" என்று அவனைத் துரத்தியவனை கண்டு சிரித்தபடி டவல் எடுத்து கொண்டு பாத்ரூமில் நுழைந்தான் தியாகு.
மூன்று நிமிடங்கள் சென்றிருக்கும், வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டது.
யோசனையோடு வாசலையும், பாத்ரூமையும் மாற்றி மாற்றி திரும்பி பார்த்த அபி, தோள்களை குலுக்கி விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தான்.
முற்றிலும் எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சியாக, வாயிலில் அழகு தேவதையாக பிரக்யா நின்றிருந்தாள்.
தன் பெரியன்னையின் வீட்டில் அபியை சற்றும் எதிர்ப்பாராதவள் அதிர்ச்சியோடு விழிகள் விரிய நிற்க, மாறாக அபியோ அவளைப் பார்த்த உற்சாகத்தில் இதழ் குவித்து மெல்லியதாக விசிலடித்தான்.
-தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro