எங்கே எனது கவிதை - 1
கல்லூரியில் முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருந்த ஹாசினிக்கு வாழ்க்கை வண்ணமயமாகத் தோன்றியது.
பள்ளிப்பருவம் முடிந்து ஆரம்பித்த இந்த வாழ்க்கை சிறகடித்துப் பறப்பது போல் அவளை உணரச் செய்தது. இனி யாரும் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறாய்... இந்த வருடம் பாஸாகி விடுவாயா போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டு தொல்லை பண்ண மாட்டார்கள்.
'ஷ்... அப்பா... இந்த ப்ளஸ்-டூ முடிப்பதற்குள் தான் எத்தனை தொல்லை? படி படி என்று ஒரு பக்கம் உயிரை வாங்குவது மட்டுமில்லாமல்... அங்கே டியூசன் போனால் நல்ல மார்க் வாங்கலாம், இல்லையில்லை இங்கே போ... அது தான் பெஸ்ட் என்று ஆளாளுக்கு இலவசமாக அட்வைஸ் செய்து நம்மை ஒரு வழி ஆக்கி விடுவார்கள். ஓடி களைத்து வரும் என் போன்ற மாணவர்களுக்கு கல்லூரி தான் சொர்க்க பூமி!' என்று எண்ணி குதூகலித்தாள்.
குறுகிய காலத்திலேயே நல்ல நட்பு வட்டம் அமைந்து, மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள் ஹாசினி.
அவளுக்கு பிடித்த பாடம் கணிதம் தான், பக்கம் பக்கமாக தியரி எழுதுவதை விட கால்குலேஷினில் ஸ்ட்ராங்காக இருந்து விட்டால் போதும், கணிதம் மிகவும் சுலபமான பாடம் என்று கல்லூரியிலும் அதை தான் பேச்சுலர் டிகிரியில் எடுத்திருந்தாள்.
பிடித்த பாடங்கள், நண்பர்கள் என்று சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அவள் மனதை பாதிக்கின்ற விஷயமாக ஒன்று நடந்தது.
தோழிகள் அனைவரும் மதிய இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து கேலிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் அப்பேச்சு வந்தது, அதாவது எதிர்கால கணவரைப் பற்றிய தங்களின் கனவுகளை பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
இவள் உட்பட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் எதிர்பார்ப்புகளை சொல்ல, ஒருத்தி மட்டும் லேசாக வாடிப் போய் தெரிந்தாள்.
என்னவென்று விசாரித்ததற்கு, "இல்லை... எனக்கு அக்கா ஒருவள் இருக்கிறாள், அவளுக்கு வயது இப்பொழுது இருபத்தியெட்டு. எனக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம். அவளுடைய ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் வருகின்ற வரன்கள் எல்லாம் அமையாமல் தட்டிப் போகிறது. அவளை விட இரண்டு வயது சிறியவன் என் அண்ணன் தற்பொழுது காதல் திருமணம் செய்து கொண்டு அண்ணியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். அது எங்களுக்கு சங்கடம் என்றால் அக்காவின் நிலை தான் இன்னும் பரிதாபம், தனக்கென்று ஒரு வாழ்க்கை அமையாதா என்ற ஏக்கத்தில் ஏனோதானோவென்று வேலைக்குச் சென்று வந்து கொண்டிருக்கின்றாள். அதையெல்லாம் பார்க்கும் பொழுது நம்மை மனதார நேசிக்கின்ற ஒருவர் வந்து காலாகாலத்தில் திருமணம் செய்துக் கொண்டால் போதும் என்று தோன்றுகிறது!" என்று பெருமூச்சு விட்டாள் அவள்.
அதை கேட்டு பையன் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று அதிக எதிர்பார்ப்புகளை கூறியவர்கள் கூட, அவள் சொல்வது சரி தான் என்று ஆமோதித்தனர்.
ஹாசினியின் முகம் யோசனையில் வீழ்ந்தது.
'திருமணம் மிகவும் வயது கடந்து தள்ளிப் போகிறது அல்லது திருமணமே நடக்காமல் போகிறது என்றால் ஒரு பெண்ணின் நிலை எப்படி இருக்கும்?'
அவளைச் சுற்றியுள்ளவர்கள், தான் தங்கள் குடும்பம் என்று சந்தோசமாக இருப்பார்கள். அவளை மருந்து கூட தங்கள் உலகில் சேர்த்துக் கொள்ள முயல மாட்டார்கள். தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை பார்த்து அவள் கண்திருஷ்டி பட்டுவிடும் என்று எதிலும் அவளை ஒதுக்கி வைக்கவே விரும்புவார்கள். ஆனால் தங்களுக்கென்று பணத்தேவை வரும்பொழுது மட்டும், அவளுக்கென்று குடும்பமா... குழந்தையா... தனியாக இருக்கின்ற அவள் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்பதை மட்டும் உரிமையாக எதிர்பார்ப்பார்கள். கொஞ்சம் ஸ்டப்பார்ன் ஆன பெண்கள் என்றால் ஒரளவு சமாளித்து விடுவார்கள், மற்றவர்கள் அவர்களின் போலியான பாசத்திற்கு அடங்கி தான் போவார்கள். இதில் ஒன்று மட்டும் உறுதி எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தாங்கள் ஆறுதலை தேடிக் கொள்ள ஆதரவின்றி தவிப்பார்கள். வயதான காலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பணத்திற்கு முன் நிற்கும் அனைவரும் பின்னே போய்விடுவார்கள். தங்கள் பெயரில் சொத்து சேர்த்து வைப்பவர்கள் மட்டும் சற்று பிழைத்துக் கொள்வார்கள்.
ஏதேதோ யோசனையில் இருந்தவளின் மனதில் ஒரு நெருடல் உண்டானது. இது வரை வாழ்ந்த வாழ்க்கையில் எல்லாம் சுயநலமாய் தோன்றியது.
மாலை சோர்வாக வீட்டை அடைந்த ஹாசினி, தன் அம்மாவை பார்த்தாள்.
எந்த கவலையுமின்றி எதையோ வாயில் போட்டு நொறுக்கி கொண்டு ஜாலியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
'இவளுக்கு எந்த ஒரு சிறு வருத்தமோ... பரிதாபமோ மனதின் மூலையில் கூட தோன்றாதா? நான் தான் சிறு பெண், இதுவரை அந்த உணர்வுகள் புரியவில்லை!' என்று தவித்தவள் சென்று தன் அறையில் அடைந்து கொண்டாள். மனம் அமைதியின்றி அலைப்பாய துவங்கியது.'
இரவு எட்டு மணியை நெருங்கியதும், வேக வேகமாக நான்கு வீடு தள்ளி இருக்கும் தன் பாட்டி வீட்டிற்குச் சென்றாள்.
வீட்டில் யாரும் இருப்பதற்கான அடையாளம் இல்லாமல் அமைதியாக இருந்தது. ஆனால் கதவு திறந்திருக்கிறதே என்று உள்ளே சென்று பார்த்தால், சித்ரா டீ கலந்து கொண்டிருந்தாள்.
எதுவும் பேசாமல் அமைதியாக நிலையில் சாய்ந்து நின்று அவளை அளவெடுத்தாள் ஹாசினி.
மெலிந்த தேகம் முப்பத்தியாறு வயது நடக்கிறது, ஆனால் பார்ப்பவர்கள் முப்பதை தாண்டி சொல்ல மாட்டார்கள். நல்ல லட்சணமான முகம், இத்தனை வருட வேலை அனுபவம் உள்ளதால் வெறும் ப்ளஸ்-டூ என்றாலும் மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கின்றாள்.
சித்ரா! வேறு யாருமில்லை, ஹாசினியின் பெரியம்மா... அதாவது அவளுடைய தாயின் மூத்த சகோதரி.
டீ கலந்து கொண்டு திரும்பியவள் அவளை அங்கே கண்டு ஆச்சரியமாகி, "ஹேய்... நீ எப்பொழுது வந்தாய்? பூனை போல் ஓசையின்றி வந்து நிற்கின்றாய்? சரி இந்தா டீயை பிடி, நான் வேறு கலக்குகிறேன்!" என்றாள் புன்னகையுடன்.
அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தாள் ஹாசினி, "என்ன இன்று அப்படி புதிதாக பார்க்கிறாய்?" என்றாள் கேலியோடு.
"இன்றைக்கு தான் எல்லாம் புரிகிறது, டீ வேண்டாம் குடித்து விட்டேன்!" என்று அவளிடம் மறுத்தபடி சென்று சேரில் அமர்ந்தாள்.
"ஏன்மா... என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு டல்லாகத் தோன்றுகிறாய்? கல்லூரியில் ஏதாவது பிரச்சினையா?" என்று கவலையோடு விசாரித்தாள் சித்ரா.
"எங்கே மற்றவர்களை காணோம்?" என்றாள் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்.
ஹாசினியின் பாட்டி வீட்டில், அவளுடைய சித்தியின் குடும்பம் தாத்தா பாட்டியுடன் வசிக்கிறது. சித்ரா திருமணம் ஆகாத முதிர்கன்னி, வீட்டில் மூத்தவள்.
- தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro