2
ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருக்கிறார். அதை த்யுதி படித்திருக்கிறாள்.
கடவுள், இயற்கை என்று எல்லாவற்றின்மீதும் ஈடு ஈடாய் இன்ஸ்டால்மெண்டில் நம்பிக்கை இருந்தாலும் அவள் மலைப்போல் நம்புவதெல்லாம் உழைப்பை மட்டுமே – அப்படியானால் வெற்றியை? உழைப்பின் பலனே எத்தகையாதானாலும் அது வெற்றிதானே! இப்படியான நம்பிக்கையில் அவளுக்கு கேள்வி கிடையாது. அதிலேயே இறுதியாக அவரே சொல்லி வேறு வைத்திருக்கிறார், அதிகப்படியாகக் கேள்வி கேட்காதேயென்று.
அடுத்ததாய் த்யுதியுடைய நம்பிக்கை, அவளுடைய தோழி ரமி. சிறுவயதில் இருந்து ஒன்றாய் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து; ப்ளஸ் டூவில் த்யுதி ப்யூர் சைன்ஸ், ரமி காமர்ஸ் வித் பிசினஸ் மாத்ஸ். அதன் பின்னாலும் முன்னவள் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், பின்னவள் மீனாட்சி காலேஜ். ஏய், த்யுதி நேத்தைக்கு அலைபாயுதே காசட் கேட்டேண்டியில் இருந்து த்யுதி, சுந்தர் பத்தி நீ என்ன நினைக்கற வரை ரமியின் அத்தனையிலும் த்யுதி உண்டு. எப்போதுமே இருவருக்குள்ளும் இருந்த நெருக்கத்தில் அதே நேர்த்தி, அப்படியே, மாறாமல்.
ரமி-சுந்தர் திருமணம் முடிந்த ஆறு மாதங்களில் த்யுதியின் திருமணப்பேச்சு ஆரம்பித்தது. வீட்டிலேயே அப்பா ராகவேந்தர், அம்மா சந்திரா, அண்ணன் ப்ரசாத் என அனைவரும் பல முறை கூடி பேசி, பையனின் குடும்பத்தின் அனைத்தையும் ஆதி முதல் அந்தி வரை தீர விசாரித்து; பற்பல தயக்கங்களையும் கடந்து அநேக சேதிகளையும் விசாரித்து அறிந்த பின் நிச்சயித்து, நடந்தேறி, அடுக்கடுக்காய் அத்தனை துன்பங்கள் பட்டு இன்று காலையில் பாதிக்கு பாதி முடிந்தும் ஒழிந்து விட்ட திருமணம்.
மனைவியின் ஸ்தானத்தில் இருந்து கேட்டவுடன் துகில் உறிக்கும் தன்மையையும், வீட்டினுள் மாடாய் உழைக்கவும், சொன்ன நாழியெல்லாம் சேவகம் பண்ணவும் தாலி பெற்றுக்கொண்டு பெண்ணென்ன அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டாளா?
இதையே எத்தனை முறை தனக்கு தானே கேட்டுக்கொண்டிருப்பாள் த்யுதி.
எல்லாம் தெரிந்த போதும் அவனால் அத்தனை கடுந்துயரமும், சோதனைகளும் ஆன போதும், ஒவ்வொரு முறை அவன் அவளை வற்புறுத்திய நேரமெல்லாம் அவளால் என்ன செய்ய முடிந்தது?
ஒவ்வொரு காலையிலும் முன்னிரவில் கீழ்ப்படிந்த தன்னை ஒரு படி மேலாய் வெறுத்துக்கொள்ள முடிந்தது. கிடத்த நேரமெல்லாம் பிடித்தவையும், உபயோகமாய் பிறவிலும் செலவிட முடியாமல் வாழ்க்கை சூன்யமாகிவிட்டதை எண்ணி உள்ளுக்குள்ளேயே மறுகி மறுகி உள்ளமதை சிதைத்துக்கொள்ள முடிந்தது. விவாகரத்து கோரி இத்தனையையும் செய்து முடிக்க எத்தனை யோசித்திருப்பாள். அந்த யோசனைச் சங்கிலியினால் இந்த முடிவை எடுக்க இத்தனை தாமதம் செய்ய முடிந்தது.
சுற்றிச் சுற்றி வரும் வளையம் போல் எங்கிருந்தாலும் அங்கேயே, அதே வரிசையான எதிர்காலத்தை பற்றிய யோசனையே, கடந்தகாலத்தைப் பற்றிய நினைவுகளே வட்டம் வட்டமாய். வெட்டித்தான் எறிய முடிந்தால் நன்றாக இருக்கும்.
வெளியில் பேசுவதை கேட்காமலிருக்க காதினை மூடிக்கொள்ளலாம், மனவோட்டத்தின் ஓசையையும், தேவையில்லாத தான் அடிபட்ட அத்தனை நினைவுகளையும் புதையல் காக்கும் பூதம் போன்று தலையில் ஏற்றிவைத்து திரிவதை – அகோரமான பேரண்ட இரைச்சலோடு உள்ளுக்குள் ஒலித்து கொண்டே இருப்பதை எப்படி கேட்காமல் இருப்பது.
எல்லாம் தான் முடிந்தாகிவிட்டதே, இன்னும் ஏன் அழுதுத்தொலைகிறாய் என்று அவளாலேயே தன்னை கேட்காமல் இருக்க முடியவில்லை. கோர்ட்டிலிருந்து வீட்டை அடைந்த மாத்திரத்தில் எல்லாம் சிக்னல் கிடத்ததை போல் கண்ணீர் வரத்தொடங்கிற்று.
பிடிவாதமும், வேகமும், காய்ச்சலுமாய் வழியும் கண்ணீரை முந்தியடித்துக்கொண்டு புறங்கையினால் பறபறவென தள்ளினாள், கேட்காதே, யார் என்ன உன்னைப்பற்றி சொன்னாலும் கேட்காதே! உன் மூளையே உன்னைப்பற்றி திரும்ப திரும்ப தேவையில்லாததை மேலெடுத்து வைத்தாலும் கவனம் செலுத்தாதே!
எழுந்தாள். இரண்டெட்டு வைத்தாள் -குளியலறை. மூஞ்சி அலம்பிக்கொண்டாள்.
கண்ணாடியில் கண்ட முகத்தில் கருவளையமும், தூக்கமின்மையும், நிம்மதியில் நி கூட இல்லாமலும் சோர்வின் மொத்த இலக்கணம்போல் தெரிந்தது. உனக்கென்ன வயதாகிறது த்யுதி? இந்த முகரைக்கு வயது இருபத்தெட்டு என்று சொன்னால் யாராவது நம்பும்படியாய் உள்ளதா?
இப்படி இருக்காதே!
மூன்று நிமிடங்களில் அறையில் இருந்து வெளிப்பட்ட த்யுதியின் முகத்தில் தேய்ந்து திரும்பும் பிறையை போல ஒரு கொஞ்சூண்டு சிரிப்பு தீட்டப்பட்டிருந்தது.
கூடத்தின் கௌச்சில் அமர்ந்திருந்த ரமி, "இப்போதான் சுந்தர் ஃபோன் பண்ணினார். லன்ச்க்கு வரலையாம், நீயும் நானும் தான்," என்றதை கேட்டுக்கொண்டு எதிரில் அமர்ந்தாள்.
"நீ தூங்கறேன்னு நினைச்சேன், இல்லையா?" கோர்ட்டில் இருந்து வீடு திரும்பிய ஒரு மணிநேரத்தில் அவள் உறங்கியிருப்பாள் என்று நினைத்திருந்தாள் ரமி. மனதளவில் தாங்கிக்கொள்ள முடியாதபடியான ஒரு பெரிய நிகழ்வை வாழ்ந்து வந்திருந்தவளுக்கு நிச்சயம் அந்த உலகைக்காணமுடியாத, எதையும் கேட்கமுடியாத, கொஞ்ச நேரம் அழமுடியாத தன்னிலை மறக்கும் உறக்கம் தேவை.
பெருமூச்செறிந்து பார்வையை ரமியிடம் நிமிர்த்தினாள் என்ற போதும் அதே யாரோ ஒத்தி எடுத்தாற்போல் ஒரு குறுநகை. "தூக்கமில்லை," ஒற்றைச் சொல் பதிலில் ரமிக்கு ஆச்சரியமில்லை.
இருக்கையின் விளிம்பிற்கு நகர்ந்து த்யுதியின் கைப்பற்றினாள் ரமி "சரி சொல்லு, என்ன சமைக்கறது. கார்த்தால நீ சரியா சாப்படலை. எனக்கும் பசிக்கறது."
"நம்ம வெளியில போய் சாப்பிடலாமா ரமி?" விநாடி இடைவெளியில்லாமல் த்யுதி கேட்டதில் ரமிக்கு ஏற்பட்ட களியினும் ஆச்சரியமே ஆகாசம்வரை இருந்தது. அதனை அவள் எதிர்பார்க்கவில்லை தான்.
"நிஜமாத்தான் சொல்றியா நீ?" ரமிக்கு இப்போது re-assurance தேவைப்பட்டது. வாவென்றாலும் இல்லை, தலைவலி, இன்று வேண்டாம் என்று சாக்கு சொல்லும் த்யுதியா இன்று தானாய் தன்னை அழைக்கிறாள்?
வியப்பும் ஆர்வமுமாய் சுருங்கிக்கொண்டன த்யுதியின் நிரைநெற்றி."எதுக்கு நீ என்ன அப்படி பாக்கறே?" கூடவே அழுந்த ஓசையுடனான குட்டி சிரிப்பு.
"இல்ல, எப்போதும் நான் கூப்ட்டா சாக்கு சொல்லி வீட்டுக்குள்ளேயே இருக்கறவ இன்னிக்கு தானா வெளில போலாம்னா, ஆச்சரியம் வராதா?" உருண்டை கண்களை மேலும் கேலியாய் உருட்டி சொன்னாள் ரமி.
எதிர்கொண்ட பார்வையிலும், உணர்ந்த வியப்பிலும் சற்றே தன் கையை மீறின சிரிப்பை சிக்கனமாய் குறைத்து சிறை படுத்தினாள் த்யுதி. சிக்கனமடைந்த நகையில் விரக்தி ஏராளமாய் ஆக,"இல்லை இத்தனை நாளா யோசிக்கவும், நினைச்சு அழவும் நிறைய இருந்தமாதிரி இருந்தது.."
"இப்போ என்ன ஆச்சாம்?"
"இதுக்குமேல நிஜத்தில அப்படி ஒண்ணும் இல்லன்னு புரிஞ்சது."
த்யுதி சொன்ன பதிலில் யாரோ தனக்காக புத்தம்புதிதாய், தன்னந்தனியாய் ஆக்சிஜன் சப்ளை கொடுத்ததைப்போலொரு நீண்ட மூச்சினை வெளியேற்றி "ஆமாம், நீயும் நானும் மட்டும் ஒண்ணா வெளியில போய் ரொம்ப ரொம்ப நாளாச்சு."
கடலில் பட்ட காலடியாய் விரக்தி கரைந்திருந்தது."ஆமாம், எனக்கு ஏதாவது படம் பாக்கணும்போல இருக்கு, ஏதாவது படம் ரிலீஸ் ஆகியிருக்கு?" சிவந்து மருண்டு நீர்த்திருந்த அவளது விழிகளிரண்டும் ஆவலில் பறக்கும் பட்சியின் விரியும் சிறகுகளாய் விரிந்தன.
"அதெல்லாம் இருக்கும், இப்போதான் வாரத்துக்கு நாலு, அஞ்சு ரிலீஸ் ஆறதே!"
"அப்போ எடு உன் ஃபோன, டிக்கெட் புக் பண்ணு. வெளியில எங்கேயாவது.. க்ரீம் செண்டர், நாவல்டி டீ ஹவுஸ் இல்ல டெக்கான் ப்ளாசால போய் சாப்பிடலாம். அப்புறம் சினிமா. அதுக்கப்புறமா ஹிக்கின்பாதம்ஸ் -ரெண்டு மூணு புஸ்தகம் வாங்கணும். சுந்தர் வரதுக்குள்ளே வந்துடலாம், வா வா.. கிளம்பு கிளம்பு." என்று எக்களித்து கூவி மேசைமேலிருந்த ரமியின் கைப்பேசியை அவள் கையில் திணித்த த்யுதியைவிட்டு ரமியின் பார்வை நகர மறுத்தது. இப்படியே இருந்து விடு த்யுதி, இதுதான் நீ!
சுதாரித்து கொண்டு எழுந்து மாட்டியிருந்த கார் சாவியை எடுத்த ரமியின் முழங்கையை தொட்டுச் சாவியை வாங்கி கொண்டாள் த்யுதி,"இன்னிக்கு நான் ஓட்றேன். ஆனா நான் வண்டிய தொட்டே மாமாங்கம் ஆச்சு -மொதல்ல கஷ்டம் அப்புறம் ஓட்டிடுவேன்." தன் கையிலிருந்து சாவியை பறித்து, கைவிரல் அணைத்து கொண்ட தனது வாலட்டுடன் கதவை நெருங்கியவளை வியந்து பாராமல் இருக்க முடியவில்லை மற்றவளால்.
தன் கைப்பையை தோளுக்குத் தந்து கதவை சாத்திக்கொண்டு காரிடம் நடப்பதற்குள் கேட்டில் இருந்து காரை ரிவர்ஸில் வெளியேற்றியிருந்தாள். முன்கதவை திறந்து ஏறிக்கொண்ட ரமியிடம் பாய்ந்தது த்யுதியின் பல்பு போட்ட புன்னகை."எங்க போறது?"
"நீ இப்படியே சிரிச்சுண்டே இருந்தேயானா எங்க வேணும்னாலும் போகலாம்." பேசிய குரலில் திராணியில்லை. ஓசை கம்மி, தழுதழுத்திருந்தது. ஸ்டீரிங்கை கட்டிக்கொண்டு ரமியின் உணர்ச்சிப் பெருக்கில் உறைந்து போயிருந்தாள் த்யுதி. "என்னை பாத்தா இன்னிக்கு கார்த்தாலை கோர்ட்ல அசிங்கப்பட்டவ மாதிரியே இல்லல?" இப்போதெல்லாம் த்யுதியின் கண்களில் நீர் வெகுவாய் திரையிட்டிருந்தது, ஒரு அலட்சிய புன்னகை, உதட்டை.
அரவணைப்பாய் த்யுதியின் கையினை தொட்டுக்கொண்டது ரமியின் உள்ளங்கை."ஆமாம், இல்ல.. ரெண்டுமே."
எதற்கு ஆமாம், எதனால் இல்லை என்று நெற்றிச் சுருங்க ஒரு பார்வை பார்க்க, புரிந்து கொண்டவளாய் ரமி விளக்கினாள். "உன்னை பார்த்தா டைவோர்ஸ்கோசரம் கோர்ட்டுக்கு போய்ட்டு வந்தாப்ல தெரியலை."
"அந்த இல்லை எதுக்கு?"
"நீ அசிங்கப்படலை, அதுக்குத்தான் இல்லை. இப்போதான் அசிங்கத்தில இருந்து வெளியில வந்திருக்க..."
உள்ளே காய்ச்சலாய் சுற்றித்திரிந்த காற்றையெல்லாம் அண்டத்திற்கு அவிழ்த்துவிட்டு, ஸ்திரமற்று சீட்டில் தலை சாய்த்து கொண்டாள் த்யுதி. "ரொம்ப நாளா சிரிக்காம, சந்தோஷமா இல்லாம இருந்து இருந்து எனக்கு சிரிப்பு மறந்து தான் போச்சா இல்ல எனக்கு சிரிப்புன்னு ஒண்ணு இல்லவே இல்லையான்னே தெரியலை. எப்படி எப்படியோ ஆகிட்டேன்.. எந்த நான் உண்மையான நான்னே எனக்கு தெரியலை ரமி. எதுலே என்ன கிடைக்கும், என்ன பண்ணா எதுவும் அண்டாம இருக்கும், எங்க போனா யார் பாத்து என்ன கேப்பாங்கன்னு மட்டுமே யோசிச்சிருக்கேன், சாதாரணமா இது சாப்பிடணும், அந்த சினிமா பாக்கணும், சுஜாதா படிக்கணும்னு இதையெல்லாம் ஆசைப்பட மறுபடியும் கத்துக்கறேன். த்யுதி, நீ உயிரோட இருக்கே; நீ சராசரி மனுஷி; நீ இதையெல்லாம் இஷ்டப்படலாம்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்."
வாயடைத்து கதை கேட்ட ரமிக்கு கரித்துக்கொண்டு வந்தது. "கல்யாணம் ஆச்சு, டைவோர்ஸ் ஆச்சு. அவ்வளோதான். இதுக்கு மேல என் இஷ்டம் போல இருக்க போறேன். எம்,டி பண்ணப்போறேன். ஜென்ரல் மெடிசின். அதுக்கப்பறமா சூப்பர் ஸ்பெஷாலிட்டி, கார்டியாலஜில, என்ன சொல்ற நீ.. ம்ம்?"
"உன்னிஷ்டம் போல பண்ணுடி!"
"பித்துக்குளி, அழாதேடி."
"நீ ஒண்டியும் அழறேயே."
"இனிமேல் மாட்டேன்."
அன்றிரவு த்யுதி அழுதாள். படுக்கையில் புரண்டாள். அழாதே! அழாதே! அழாதே! அழுதுத்தொலைக்காதே! இந்த அசட்டு அழுகை வேண்டாம், வேண்டவே வேண்டாம். தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
வருகிறதே.. நான் வரவழைக்கவேயில்லை, ஆனால் வருகிறதே.
வரக்கூடாது. கன்னத்தை விருட்டென்று துடைத்து கொண்டாள்.
நாளை என்னென்ன செய்ய வேண்டும்?
காலை ஐந்தரைக்கெல்லாம் எழுந்துக்கொள்ள வேண்டும் -யோகா, மெடிட்டேஷன், அரைமணி.. ஐயோ அழாதே. மேலே, ரமிக்கு உதவி அடுத்த ஒரு மணிநேரம். பின், இதே அறைக்குள் புகுந்து ஒரு குளியல்.. அப்போது அழுகை வந்தால் தண்ணீரோடு தண்ணீராய் தெரியாது. மீண்டும் கண்ணீர். துடை. தூங்கு.
அதன்பின் வேலைக்கு செல்லவேண்டும். அங்கே எல்லோரும் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள். உலகம் உன்னை ஒரு தோல்வியென்றே தீர்மானித்து உன் தலையை உருட்டும்... அதற்கெல்லாம் சஞ்சலப்படாதே... பின்.. அட, மறைக்கழண்ட மண்டை யோசனை பண்ணாதே, தூங்கிவிடு.
பின்னொரு கணத்தில் தூங்கியிருந்தாள்.
முந்திய இரவில் தான் செய்யப்போவதாய் பட்டியலிட்ட அனைத்தையும் செய்து முடித்து சரியாய் ஏழரைக்கெல்லாம் ஒரு சல்வாரில் வீட்டை விட்டு கிளம்பியிருந்தாள். எட்டு மணிக்கு அங்கே அவள் வெள்ளை கோட்டையும், ஸ்டெதஸ்கோப்பையும் மாட்டிக்கொண்டு வார்டுகளில் வலம் வந்து அனைவரிடமும் நலம் விசாரிக்க வேண்டும் -இன்னிக்கு காலம்பற மோஷன் போனீங்களா? வாந்தி பண்ணினீங்களா, நேத்தி ராத்திரி என்ன ஆகாரம் சாப்ட்டீங்க? பரவாயில்லேயே ப்ளேட்லெட்ஸ் கவுண்ட் ஜாஸ்தியாயிருக்கு, இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்... எங்க கைய நீட்டுங்க, பி.பி பார்த்துடுவோம்... இப்படி வியாதிக்கு தகுந்தாற்போல். அது முடித்தால் கீழே அவுட் பேஷண்டில் ஒரு சின்ன மெட்ராசே காத்திருக்கும். மூன்று மணிக்கு அடுத்த ட்யூட்டி டாக்டர் வந்து ஹாண்ட் ஓவர் வாங்கிக்கொள்ளும் வரை இப்படியாகத்தான் செல்லும்.
பத்தரைக்கு இரண்டு தளங்களில் வலத்தை முடித்துக்கொண்டு, இறுதியாய் ஐ.சி.யூவினில் தான் எழுதிய நோட்ஸை சரி பார்த்து வெளியில் வந்த த்யுதியை முன்நோக்கி நின்றிருந்தாள் அந்த இளைஞி.
அவள் அணிந்திருந்த மாலை வான நிறத்திலான சல்வாரை அதனை தழுவியிருந்த கோட் மறைத்திருக்க, கோட்டின் வலது கீழ்ப்பாக்கெட்டில் சொருகியிருந்தது மூன்றாய் மடிக்கப்பட்டிருந்த மானி. துறுதுறுவென த்யுதியின் வருகையை எதிர்பார்த்திருந்து அலந்த அவளது கண்கள் இமையோடு இமையாய் கொட்டிக்கொண்டிருக்க, கையில் ஒரு சிறு நோட்ஸ் எடுத்துக்கொள்ளும் புஸ்தகமும் பேனாவும் கிடந்து அல்லாடின.
இவளுக்கொரு hi சொல்லுங்கள். இவள் தான் ஆருத்ரா. ஆருத்ரா மாதவன். இந்த ஆஸ்பத்திரியில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பின் இறுதி கட்டமான இண்டர்ன்ஷிப் பண்ணிக்கொண்டு இருக்கிறாள். கடந்த மூன்று மாதங்களில், அதாவது இந்த ஆஸ்பத்திரியில் போஸ்ட்டிங் பெற்றதில்லிருந்து த்யுதிக்கு கிடைத்த புதிய நட்பு.
த்யுதி அவ்வறையின் முகப்பை அடைந்தவுடன் உற்சாகம் உடம்பில்லெல்லாம் ஆக முன்னால் தாவி அவள் கைப்பற்றினாள் ஆருத்ரா. "Hi, எப்படி இருக்கீங்க? நேத்தைக்கு நீங்க இல்லாம முதல் ஷிஃப்ட் சுத்த போர். ரெண்டு மணிக்கே பர்மிஷன் போட்டு கிளம்பலாமான்னு பாத்தேன், ஆனா காலேஜுக்கு கம்ப்ளைன் போயிடுத்துன்னா நான் அம்பேல், அதான் பல்ல கடிச்சுட்டு இருந்துட்டேன். நேத்தி வேலையே இல்ல தெரியுமா? இன்னிக்கு பாத்ரூம் போகக்கூட நாழியில்லை. கீழ ஆப்ஸர்வேஷன்ல பெட் பத்தலை. அங்கேயே நிக்கறேன் ஏழுலேர்ந்து. சரி, எனக்கு டைமில்லை. நீங்களும் சீக்கிரமா கீழ போங்களேன்.. வெய்ட்டிங் ரூமே ரொம்பியிருக்கு. நம்ம ஷிஃப்ட் முடிஞ்சதுமே வெளியில போலாம்.. வெய்ட் பண்ணுங்க. நான் வரேன் வரேன்... bye bye.." அவதி அவதியாய் தான் சொல்ல வந்ததை ப்யூக் பண்ணிவிட்டு உள்ளங்காலில் சர்க்கரம் கட்டிக்கொண்டு ஓடினாள்.
கேட்டதில் அசந்து நின்றாலும் சிரத்தையை திருப்பி உறக்க, "ஏய், ஆருத்ரா என்னை பேசவே விடலே நீ!" என்றாள் த்யுதி கெஞ்சலும், கேலியுமாய்.
"ஐயோ, இப்போ பேசாதீங்க. நான் கேக்கமாட்டேன், சாயங்காலம் பேசலாம், சாப்பிடலாம்." மறைந்த அவளது உருவத்தினோடேயே கரைந்து போனது அந்த காந்தக்குரலும். அவள் சென்றுவிட்டதை பார்த்து கொண்டே நின்றது ஒரு பிடிவாத புன்னகை, இந்தப் பெண் இப்படித்தான்.
மதியவேளை என்று பேர் பண்ணமுடியாதபடியான சில்காற்றும், மழை சுமந்த மேகங்களும் தாழ்ந்து அடங்கிய வெய்யிலில்லாத வானமும் திருவான்மியூரை இருட்டாக்கி இருந்தது. தன் வேலை முடிந்து கழற்றிய கோட்டை மடித்து பையில் வைத்து மானியையும் உள்ளே பதுக்கிய நேரத்தில் தான் ஆருத்ரா அவையாவையும் செவ்வனே செய்து முடித்து தோளினில் தொங்கிய backpackஉடன் வந்து நின்றாள்.
பொதுவாகவே, சி. ஆர். ஆர். ஐயென்று ஆனால் போஸ்ட்டிங் செல்லுமிடத்தில் உள்ள ட்யூட்டி டாக்டர்கள் முறைத்து கொண்டும்.,இல்லாத பொல்லாத வேலைகளை தந்து கண்களில் விரல் விட்டு ஆட்டியும் தான் பழக்கம். ஆனால் த்யுதி அப்படியானவளாக நடந்து கொண்டதில்லை.
அவர்களுள் இருந்த நட்பின் பொருட்டு மேடம் என்று தன்னை அழைக்கவேண்டாமென்று கூட அவள் சொல்லியிருந்தாள். ஆனால், இவர்கள் இப்படியாய் பழகுவது தெரிந்த ஆஸ்பத்திரியின் சீனியர் டாக்டர் வினோதினி ஒரு முறை த்யுதியை அழைத்து ஒரு ஸ்டூடண்ட்டோடு இப்படி ஈஷக்கூடாது என்று கெடுபிடியெல்லாம் ஆகி.. அதன்பின் அவ்வளவாய் இருவரும் பேசிக்கொள்வதில்லை.. அந்த கம்பவுண்டிற்குள் மட்டும்.
ஆஸ்பத்திரியின் கதவினை தாண்டிய நான்கடிகளுக்குள் ஆருத்ரா மெல்லிய குரலில் அக்கறை ஆரத்தழுவ கேட்டாள், "என்ன, நேத்தி ராத்திரி கூட அழுதீங்களா? மூஞ்சி இப்படி இருக்கு!" கண்ணினாலே சைகை செய்து அந்த கடைசி வாக்கியத்தில் சற்று அழுத்தி கண்டிப்பாய் விசாரித்தாள்.
"ஆமாம்." த்யுதிக்கு பொய் சொல்ல வராது. உண்மையை அப்பட்டமாய் கண்டுபிடித்துவிட்ட நிலையில் பொய்யிற்கு அவசியமும் இல்லாமல் போனது.
"ஏன் அப்படி பண்ணீங்க?"
"கடேசியா ஒரு தடவ அழுதுண்டேன்."
நடந்திருந்த அடிகளில் நின்று ஆருத்ரா முறைத்தாள். "இனிமேல் இதுக்காக அழமாட்டேன்."
"பிராமிஸ்?"
"ஆமாம், எனக்கு பசிப்போல வருது. வா, நாம ஏதாவது சாப்டலாம்."
மேலே நான்கடிகள் நடந்ததில் ஒரு வட இந்திய உணவகம் நின்றிருந்தது. உள்ளே நுழைந்து அவள் ஒரு பாவ்பாஜி, இவள் ஒரு சேவ் பூரி சொல்லிக்கொண்டார்கள்.
ஒரு மேசையில் அமர்ந்து கொண்டு வசதியானப்பின் த்யுதி தொடங்கினாள், "நானும் ரமியும் நேத்திக்கு பத்மாவத் படம் பார்த்தோம். ரொம்ப நாள் கழிச்சு கேட்டு வாங்கி பாப்கார்ன் சாப்ட்டேன். அப்புறம் மூணு புஸ்தகம் கூட வாங்கினேன், அதில ஒண்ணு உனக்கு, இந்தா," என்று தன் பையில் இருந்து ஒரு புத்தகத்தை நீட்டினாள் த்யுதி. சுஜாதாவின் யவனிகா.
"உனக்கு பிடிக்குமேன்னு வசந்த் இருக்கற கதையா வாங்கினேன், படிச்சுட்டு சொல்லு." என்று புன்னகைத்தவளை ஆருத்ரா கண்ணிமைக்காமல் பார்வையில் புன்னகைத்தாள்.
"சரி அப்புறம் என்ன பண்ணீங்க?"
"ஒண்ணு முடிவு பண்ணேன்."
"என்னது? அழக்கூடாதுன்னா?
"அதுவும்..."
"வேறென்ன?"
"எம்.டி பண்றதுன்னு!"
இப்போது ஆயிரம் வாட் வெளிச்சத்தில் ஆருத்ராவின் முகம் மின்னியது. "அட! சூப்பர் கைக்குடுங்க. எம்.டி என்னது?"
"ஜெனரல் மெடிசின்னு நினைச்சுண்டு இருக்கேன், பார்ப்போம் எக்சாம் எழுதி என்னை கிடைக்கறதோ அது.."
இதுவரை பிரகாசித்திருந்த ஆருத்ராவின் முகம் இப்போது லேசாய்ச் சுருங்கியது. "அது என்ன பார்ப்போம்னு ஒரு இழுவை. இதுலயெல்லாம் நோ காம்பரமைஸ். அது தான் படிக்கப்போறேன்னா அதுதான்."
த்யுதியால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. "சரி, அதுதான்."
"அதுக்கு கோச்சிங் கிளாஸ்ல சேரணுமா?"
"இல்லை"
"பின்ன, நீங்களாவே படிக்கறதா உத்தேசமா?"
"ஆமாம்!"
யோசனையாய், "அப்படியா?" என்றாள் ஆருத்ரா.
"அப்படியேத்தான்."
"எனக்கு இண்டர்ன்ஷிப் முடிய ரெண்டு வாரம் இருக்கு, அதுக்கப்பறம் மூழுவீச்சுல ஆரம்பிங்களேன், நானும் வரேன். நம்ம படிக்கலாம்."
"சரி, பண்ணலாம்."
A/N
இந்த கதை எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் negativities கொண்டு வரணுங்கறது கடையாது. த்யுதி அவளுக்கிருக்கற negativityல இருந்து எப்படி வெளியில வரா, எல்லாத்தையும் ஆப்டிமிஸ்டிக்கா பாக்க எப்படி கத்துக்கறா அதுதான்.
த்யுது ஒண்டியுமில்லாம ரமிக்குன்னு பிரச்சனை உண்டு. ஆருத்ராக்கு கவலைகள் உண்டு. உங்களையும் என்னையும் போல. They're all women after all, பிரச்சனை இல்லாத இருக்குமா!
I think every obstacle in life brings out better things out of us. It betters us as we hurtle through every hard point. அதையேத்தான் இவங்களும் உண்ர்றாங்க.
மத்தபடி chapter எப்படின்னு சொல்லிடுங்க. அடுத்த chapterஓட சீக்கிரம் வந்துடறேன். :)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro