1
என்றைக்கும் போலாய் அன்றும் காலை அவளது மெத்தைக்கு அருகில் இருந்த டைம் பீசின் அலாரம் ஒலிக்கும் முன்பாய் எழுந்திருந்தாள் த்யுதி. இரவின் பனியில் இருந்தும், தனிமையில் இருந்தும், அச்சுறுத்தும் இருட்டில் இருந்தும் அவளை போர்த்தியிருந்த படுக்கையின் விரிப்புகளை சரி செய்து ஜன்னலினூடே நகர்ந்து, அனிச்சையாக அவள் கைகள் உயர்ந்து பின் ஜன்னல் திரையை லாவகமாய் திறந்தன.
எதிரே நுரைகள் தளும்ப ஒலித்து கொண்டிருந்த கடலும், அதன் இறுதியின் பிம்பத்தில் மெலிதாய் ஒளிர்ந்து எழுந்து கடலின் நீலம் அத்தனையிலும் தன் அக்கினிக்குழம்பினை நிரப்பி உற்சாகமாய் பிரவேசித்து இருந்தான் கதிரவன். வானம் எங்கும் கூட்டம் கூட்டமான பறவைகளின் கிறுக்கல்கள் படர்ந்திருந்தன. விடுதலையே உயிரோட்டமாய் கொண்டிருந்தன அப்போது அவள் கண்ட கடலும், கதிரவனும், பின் பறவைகளும். காதினோரம் கூசிய கூந்தல் மயிரை ஒதுக்கிய அவளது மூளை மடிப்பினில் எல்லாம் ஒரே யோசனை வளைவு நெளிவுகளிலெல்லாம் அழுத்தமாய் ஓடிக்கொண்டிருந்தது.
நீள் சிறகுகள் இருந்தும் வெகுண்டு, சுருண்டு, கோழையாய் இருந்த நாட்களெல்லாம் முடிந்துவிட்டனவா? வெகு காலங்கள் விரிக்கப்படாமல் இருந்த சிறகுகளின் இயலாமையும், அதன் வலியும், பாரமும் இனி மனதளவு நீளமாய் விரித்து, வானளவு உயர பறப்பதில் தீருமா?
வருடங்களாய் உள்ளத்தை ரணப்படுத்தியிருக்கும் ஒவ்வொன்றிற்கும் அது மருந்தாகுமா?
தன்னை அறியாமல் அவள் மனம் மூழ்கியிருந்த யோசனைச் சக்கரத்தில் சுற்றியிருந்த கம்பிகள் அவள் கைகளில் இறுகியிருந்தது.
'With the certainty of tides, just like hopes springing high, still I'll rise.' என்றோ படித்த ஒரு ஆங்கில கவிதையின் வரிகள் மனதில் ஆணியென பதிந்திருந்தது. வீழ்வதற்கு அஞ்சி விரிக்கப்படாமல் இருக்கும் சிறகுகள் இருந்தென்ன பயன்? வீழ்வோமென்று எழாமல் இருப்பது முட்டாள்தனம் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
கட்டாயமாய் பறக்கலாம். கடலுக்கு மறுபுறமும் சென்று பார்க்கலாம். ஆனால் அதற்கெல்லாம் விழாமல் இருக்க வேண்டும் அல்லவா? அது அவளால் முடியுமா? கடந்த சில வருடங்களாய் வீழ்ச்சி ஒன்றையே தினம் தினம் கண்டு வரும் த்யுதிக்கு அடுத்ததும் விழ்ச்சியெனில் அது அலுத்திருந்த மனதை மேலும் சோர்வாக்கியது. அதற்கு மேலும் சரிவைக் காண அவளால் முடியுமா? இல்லை சற்று மாறுதலாய், ஓய்ந்திருக்கும் மனதிற்கான ஆறுதலாய், அவளை தளர்த்தும் ஆசுவாசமாய் அடுத்ததாய் ஏற்றம் நேறுமா? ஏற்றம் நேர்ந்தாலும் மீண்டும் சிரித்து மகிழ்ச்சியாய் இருக்க அவளால் முடியுமா? வலிகளுக்கும், அவமானங்களுக்கும் மறத்து சிலையாய் ஆகியிருந்த மனம் மகிழ்ச்சிக்கும், புன்னகைகளுக்கும் கூட மறத்திருக்குமா? அதனை சரி பார்க்க கூட சிரித்து பார்க்கும் நிலையில் த்யுதி இல்லை.
எதற்கும் விடைகள் அவள் கைகளில் இன்றில்லை. விடைகளே தேடி தேடி, அலைந்து திரிந்து, கண்கள் இருள காத்திருந்தவளுக்கு இன்று விடையை தேடுவது கடினமாய் இல்லை. அவள் தேடி செல்லாது, அவளை தேடி வந்திருந்தது இந்த விடியல். முச்சில்லாமல் திணறடிக்குமளவு இறுக்கமும், நசுக்கலும், மிதிகளும், அவஸ்தைகளும், கேட்கமுடியாத பேச்சுக்களும், பார்க்க கூடாத காட்சிகளும், அனைத்திற்கும் மேலாய் இழக்க முடியாதவைகளை இழந்தும்.. இன்று, இங்கே, இப்படி, அந்த இறுக்கம் தாளாது தளர்ந்திருந்த உடலில் உராய்ந்து ஓடிக்கொண்டிருந்த உயிருடன், உயிருள்ளவரையும் பிணமாய்; அவள்.
தினம் எழுந்ததில் இருந்து மருத்துவமனை கிளம்பும் வரையிலான அனைத்து நடைமுறை வேலைகளையும் இயந்திரத்தனமாய் உடல் செய்தது. ஒத்துழைக்காத மூளை அதன் வழியில் நடந்தவையெல்லாம் அசை போட்டும், அதன் வழியில் மனதை உறுப்போட்டும்; தன்னிலை இல்லாது சிதறும் கண்ணீரில் சில நொடிகள் தண்டனையை அனுபவித்தும் நகர்ந்தது. காலை குளிக்கும் நேரம் உடலில் கண்ட செந்நிறச் சிதறல்களையெல்லாம் பார்க்க இயலாமல் கைகொண்டு நகம்வைத்தும், பின் சோப்பின் நுரைகளிலும் தேய்த்து தேய்த்து, மறையாத தடங்களில் எல்லாம் சுட்டெரித்தது சொல்ல முடியாத வேதனை. தேய்த்ததும் மறைய தழும்புகள் அழுக்கல்லவே!
மறையாதென்றறிந்தும் அதனை அழுந்தி தேய்க்க மறந்ததில்லை அவள் ஒரு நாளும்! தேய்த்து தேய்த்து கைகளில் எறிக்கொண்ட ரத்தசுவடுகளும், மனம் வெதும்பி கதறும் வேதனையையும் யாரிடம் சொல்லி அழுவது?
தேவையில்லை. யாரும், அவள் பற்றுதலுக்கென எதுவும்.
இன்று முயன்றவரை போதும், நாளை பார்க்கலாம் என்று சோம்பிய கைகளினால் அரைமனதோடு குளியலை முடித்துக்கொண்டு, அறைக்குள் அடியெடுத்து வைத்தவளுக்கு, உடை அலமாரியை திறந்து அதில் மடிப்புடனாய் தொங்கும் புடவைகளிலும் ஒரு வெறுப்பு. ஒரு பெண் தன் புடவையையே வெறுக்கும் நாள் அவள் வாழ்வில் வருமா? இத்தனை நாட்களாய் தன் வடுக்களை மறைக்க பயன்பட்டது அந்த ஐந்தரை மீட்டர் துணி. இப்போது அந்த மறைப்பு தேவையில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் த்யுதி அவளது ஜீன்ஸுள்ளும், ஒரு காட்டன் குர்தா உள்ளும் புகுந்திருந்து நீதிமன்றம் கிளம்ப ஆயத்தமானாள். தனது லெதர் பையினில் இருந்து வெள்ளை கோட்டையும், ஸ்டெதஸ்கோப்பையும் அள்ளி மேஜை மேல் போட்டு பின் அன்று தேவையான affidavitsஉம், walletஐயும் அதன் இடத்தில் வைத்து ரமியின் வீட்டில், தனக்கென கொடுக்கப்பட்ட அறையில் இருந்து வெளியேறினாள். துணை என்று நம்பியிருந்த மனிதனும், ஒளியிலும் பரந்து நிரைந்திருக்கும் காற்றைப்போல் எங்குமிருப்பதாய் சொல்லப்படும் கடவுளும் அவளை கைவிட்டநிலையில், அவள் நாடியது அவள் தோழி ரமியை மட்டும் தான்.
தன் வாழ்க்கையை போல் சிக்கலில் இல்லாது ரமியின் வாழ்க்கை நல்லவிதமாய் ஓடுவதில் த்யுதி உணர்ந்த மனநிறைவில் தான் அவள் உலகில் கடவுள் என்றொருவர் இன்னுமும் இருந்து வந்தார்.
"ரமிம்மா, இன்னிக்கு கோர்ட்டுக்கு த்யுதியோட போறதானே?" கூடத்தின் இருக்கையில் formalsஇல் அமர்ந்திருந்த சுந்தர் பேசியது, கிச்சனில் இருந்த ரமியின் காதினில் கேட்டது. படிகளில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த த்யுதிக்கும் தான், இலகுவாய்.
அவள் முழுதாய் இறங்கிவிடும் முன்பாய், கிச்சனில் இருந்த வெளிபட்ட ரமியின் கைகளில் அடங்கியிருந்த காபி கோப்பை சுந்தரின் கைகளில் புரிதலாய் திணிக்கப்பட்டது. உடனே, அவனது கேள்விக்கான அவளது பதிலும். "இது என்ன கேள்வி சுந்தர்? Obviously." தோழியின் விவாகரத்து வழக்கு முதன் நாளாய் இன்று நீதிமன்றத்தில் வரவிருக்கிறது. அவள் துயரங்களிலெல்லாம் அவளுடன் முடிந்தமட்டில் இருந்து உதவியவள் இன்று உடன் இல்லாது போய்விடுவாளா.
அதுவும் ரமியை புரிந்து வைத்ததை விட ஒரு படி மேலாய் த்யுதியுடனான அவளது நட்பை புரிந்திருந்தவனிடம் இருந்து இது என்ன கேள்வி. அவனும் அதை ஒன்றும் சந்தேகமாய் கேட்கவில்லை. பதில் தெரிந்தே கேட்கப்பட்ட rhetorical question அது. உறுதிபடுத்திக்கொள்ள கேட்கப்பட்ட ரகம்.
கணவனை பிரிந்த ஒரு மாதத்தில் த்யுதி அதிக நாட்கள் இருந்தது, அவள் வேலை பார்க்கும் மருத்துவமனையின் பின் புறமுள்ள ஒரு பெண்கள் விடுதியிலேயே தான். தோழி என்றாலும் தான் வாழ்க்கை முடிவினால் அவர்களது மகிழ்ச்சியையும், நல்லுணர்வையும் வழிமறிப்பது போல் அவர்களுடன் இருப்பது ஆகப்பெரும் பாவமாய் பட்டது த்யுதிக்கு. அதுமட்டுமில்லாது, ரமியும் சுந்தரும் நேரில் வந்து அவர்களுடன் சில நாட்கள் தங்கியிருக்குமாறு அழைக்கும் வரை, அவளுக்கு அப்படியொரு நினைப்பு துளிர்த்ததே இல்லை!
எத்தனையோ முறை கெஞ்சியும் ரமியும், சுந்தரும்; த்யுதி தனியே தங்கிவிட விட்டுவிடவில்லை. ரமியிற்கு தன் தோழியை வாழ்க்கையின் இருட்டின் தனியே விடக்கூடாதென்ற எண்ணம். சுந்தருக்கு ரமியின் நிம்மதியைத் தாண்டி த்யுதியின் மேல் இருந்த மரியாதையும், அவன் ரமியை கைப்பிடிக்க த்யுதி உதவிய நன்றியுணர்வும் ஒட்டுதலாய். அவர்களின் வலியுறுத்தலால் மாற்று யோசனை இல்லாது த்யுதி கடந்த ஒரு வாரமாய் தன் இருப்பிடமாக்கிக் கொண்டது சுந்தர்-ரமியின் இல்லம்.
த்யுதி வேலையிடத்தில் இருந்து பத்து நிமிடத்தொலைவில் இருக்கும் ஒரு சிறிய தனி வீடு. இருப்பிடத்தை அழகாக்கும் விதமாய் இளகிய மனம் கொண்ட கணவன்-மனைவி; அவர்களே இவளுக்கு நண்பர்களாய், உறவினராய்; அப்போதைக்கு கிட்டதட்ட அவளுக்கு வேண்டிய எல்லாமுமாய் இருந்தனர்.
கேட்ட விடையில் உடல் சிலிர்த்து ஒரு நொடியில் த்யுதி பதிலுரைத்தாள். "என்ன சொல்ற ரமி நீ? Client meeting இருக்கு தானே உனக்கு இன்னிக்கு?"
ஆர்ந்தமர்ந்து ரமியிடம் இருந்து பதில் வந்தது. "இருக்கு தான். அதனால நீ தனியா போகப்போறியா?"
"உங்கள போகவிட்டு ரமியால client கிட்ட நிம்மதியா பேசதான் முடியுமா!" இப்போது வந்த குரல் சுந்தரினது. உள்ளே தீயென கனன்றிருந்த காற்றையெல்லாம் ஒரு பெருமூச்சினில் வெளியே இரைத்த த்யுதி, சுந்தரிடம் முன்னேறினாள். "என்ன சுந்தர் நீங்க கூட இப்படி சொல்றீங்க. அவதான் சொன்னா கேக்கமாட்டா, நீங்க கூடயா?" அவர்களுடன் தங்குவதே அவளை பொறுத்தமட்டில் இடைஞ்சல், இதில் தோழியின் ஒரு நாள் வேலையை பாழ் செய்து அவளை தன்னுடன் நீதிமன்றம் இழுக்க அவளுக்கு சுத்தமாய் மனமில்லை.
"ஐயோ, நீங்களாச்சு உங்க friendஆச்சு. நான் உள்ள வரலப்பா." சுந்தர் புத்திசாலி.
ரமி மறுவார்த்தை பேசவரும் முன்பாய், சுந்தர் முந்திக்கொண்டு இருக்கையில் இருந்து ஆறடியாய் உயர்ந்து, கதவிற்கு முன்னேறினான். "போய்ட்டு வந்து சொல்லு ரமி. நான் வரேன் த்யுதி. எதுக்கும் கவலைப்படாம போய்ட்டு வாங்க." த்யுதியின் முகத்தை அண்டியிருந்த பதற்றத்தை சுந்தர் கவனித்திருந்தான்.
இதனை முன்னரே அனுமானித்திருந்த ரமி அவளுடன் துணையாய் செல்லத் துடிப்பதில் தவறென்று ஒன்றுமில்லையே.
சுந்தர் அலுவலகம் கிளம்பிய பதினைந்து நிமிடங்களில், மேற்கொண்டு argument ஒன்றும் இல்லாது ரமியும், த்யுதியும் காலை உணவை முடித்துக்கொண்டு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியேறினர். இறங்கிய ஒவ்வொரு உருண்டை உணவும் அண்டமாய் கனத்து, வயிற்றினுள் சேர மறுத்தது. சப்பிடாது இருந்து உடலில் ஏற்படும் தழுதழுப்பையும், நடுக்கத்தையும் கையாள அவள் இருந்த மனநிலையில் தன் சக்திக்கும் மீறியிருந்ததை கண்டுகொண்டு, தன் தட்டில் இருந்த உணவை உண்டு முடித்திருந்தாள்.
மருத்துவமனையில் நோயாளிகளைக் கண்டும் மறத்திருந்த த்யுதியின் மனதிற்கு நேரம் மருந்தாகவில்லை. முரணாய் நினைக்கப் பிடிக்காத நியாபங்களையே சுமந்துவந்து அவளிடத்தில் இறக்கிக்கொண்டிருந்தது. கசப்புத்தன்மையே முழுதாய் கொண்ட நியாபகங்கள் எல்லாம் துளிர்விடும் கணமெல்லாம் முட்டிக்கொண்டு வரும் அழுகையை அவள் அறை சென்றடையும்வரை அடக்கிக்கொண்டிருப்பது அவளுக்கு இப்போது ஒரு கைவந்த கலை ஆகியிருந்தது.
அறை திரும்பி யாருமில்லாத மாலைகளிலும், தூக்கத்திற்கு முன்பாய் ஒரு விதமான இறுக்கம் சூழ்ந்து கொள்ளும் இரவுகளிலும் அந்த அழுகையே அவளின் ஆறுதல். அது அவள் வாழ்க்கையில் அறுந்திருந்த எதற்காகவும் அல்லாது, அவளுக்காக என் ஆகியிருந்தது. அவள் மனதின் பற்றுதலுக்கான அழுகை. இன்று அழுது, படுக்கையின் மடிந்து படுத்து, மறுநாள் கண்விழிக்க அவளுக்கு வேண்டிய தெம்பிற்கான அழுகை. அது அவளுக்கானது.
நீண்டு நீண்டு இம்சித்த நேரம்யாவும் அவள் ரமியுடன் நீதிமன்றத்தை அடைந்த மாத்திரத்தில் காற்றில் கரைந்து கண்ணில் அகப்படாமல் போனது. மற்றுமொரு ஒரு மணிநேரத்தில், தன் பெயர் மூன்று முறை அழைக்கப்பட்டதில் தெளிந்து முன்னே நடந்தாள்.
அவள் பெயர் ஒலிக்கப்பட்டதில், அவள் உணர்ந்த தடுமாற்றத்தையும் தாண்டிய ஒரு நிம்மதி இருந்தது. திருமணத்தின் பின் கணவன் பெயரை தன்னதோடு இணைத்து வைக்கவில்லை என்று உறுதிப்படுத்தும் தொனியில் ஒலித்தது அவளது முழுப்பெயர். த்யுதி ராகவேந்தர்.
குடும்ப நீதிமன்றத்தின் அந்த தடுப்பில் நின்றக்கணம், நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி அவளை நோட்டம்விட்டார். அந்த பார்வையில் தான் அத்தனை இளக்காரமும், வஞ்சனையும்! விவாகரத்து கோரி, ஒரு பெண் நீதிமன்றம் ஏறுவதை இன்னமும் குற்றமாகத்தான் பார்க்கிறது போல இவ்வுலகம்.
புதுமைகளும், புரட்சிகளும், பெண்ணியமும் இதர புண்ணாக்குகளும் காணும் படங்களிலும், படிக்கும் புத்தகங்களிலும், இருக்கிறதென்று கற்பனையில் மட்டுமே தவிர நிஜத்தில் அல்ல. நாடு முன்னேறுகிறதென்ற நிஜமான மனஓட்டம் போலியாய் போனது.
அவையனைத்தும் வெறும் பிம்பம். உடைந்துவிட்டது!
மூளை தாங்கிய எண்ண ஓட்டத்தில் ஏறிநின்ற தடத்தின் முன்னிருந்த தடுப்பில் இறுகியது அவளது பிடி. பிடி இறுகி கைகள் நோகிறது என்று விலகும் முன்பாய், முகத்தில் அரையப்பட்ட கேள்வியை ஜீரணிக்க முடியாதவளாய் நின்றாள் த்யுதி.
"ஏம்மா, வீட்ல காட்றவர பிடிக்கலையானா நீயெல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ற? இப்போ வந்து இவர புடிக்கல, வேற ஒருத்தர பிடிச்சுருக்குன்னு டைவர்ஸ் கேக்கற? உன்ன மாதிரி இருக்கவங்களால தான், பெண்களுக்கு நாட்ல மதிப்பில்லாத போச்சு!" அவள் இதுவரை பார்த்திராத நீதிமன்ற சூழலின் பிம்பமும் இப்போது கரைந்திருந்தது. உடைவதாயவது ஒட்டவைக்கலாம், கரைவதை?
முகத்தில் அரையப்பட்ட கேள்வியின் பொருள் புரிய இரண்டு நிமிடங்கள் அவகாசம் பிடித்தது த்யுதிக்கு. கணவனுடன் இருக்க பிடிக்கவில்லை, வேறொருவரை பிடித்திருக்கிறது அதனால் விவாகரத்து வேண்டும் என்றா வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது! விவாகரத்தை கேட்டவுடன் நல்ல மனிதன் போல், அவ்வளவுதானே செய்துவிடலாம். தனியே சென்று வழக்கு தொடர்ந்தால், விவாகரத்து கிட்ட நாட்களாகும், மனம் ஒப்பவில்லை என்று mutual consentஇலேயே பிரிந்துவிடுவோம் என்று இறுதியாய் அவள் கணவன் பேசியது காதினில் ஒலித்தது.
அதன்பின் அவள் அவனை பார்க்கவில்லை. பின்னொரு நாள் மருத்துவமனையில் வந்தவளை சந்தித்தவனோ விவாகரத்து பத்திரத்தை அவள்முன் காட்டி கையொப்பம் கேட்டான். அதனை படித்தும் பாரமால் கையெழுத்திட்டு கண்முன் நீட்டியது எவ்வளவு பெரிய குற்றமானது என்று கேட்கப்பட்ட கேள்வியில் விளங்கியது. அதுவும், இவளுக்கு இன்னொருவருடன் வாழ விருப்பமாம், அதனால் மனமொப்பி அவன் விட்டுத்தருகிறானாம். ஆபாண்டம்!
அவனை திருமணம் செய்துகொண்டதிற்கு இந்தப்பழி ஒன்று தான் மிச்சமாய் போனது அவளுக்கு. சிரத்தை உணர்ந்த போதும் மௌனம் சாதித்த த்யுதிக்கு அடுத்து அவள் என்ன கூறப்போகிறாள் என்று தெரியவில்லை. அதன் தடயம் கூட அவள் மனதில் இல்லை.
தலைகவிழ்த்த மௌனத்தில், தன் மேல் சுமத்தப்பட்ட பழியில் கண்களில் தேங்கி நின்ற கண்ணீருக்கு தன்மானம் வேறு! எதிரில் நிற்கும் முன்னாள் கணவன் ஆகப்போகிறவன் முன்னால் விழுந்துத் தொலைக்க கூடாதென்று.
மௌனமே நிலவிய அவ்விடத்தில் மற்றுமொரு அரையாய் வந்து விழுந்தது நீதிபதியின் அடுத்த கேள்வியும், அது கேட்கப்பட்ட அவள்மீது கொண்ட அருவருப்பின் உடனான அழுத்த தொனியில். "என்னமா சொன்னத ஒத்துக்கற தானே? சீக்கிரமா சொல்லுமா! எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்ப வந்து பேசாம நிக்கற! உன்னால Mr. Srikanth வாழ்க்கையும் நாசமாகுது!"
எதிரில் நின்றிருந்த அவனது முகத்தில் ஒரு ஆணவச்சிரிப்பு! திருமணமான முதல் நாளில் இருந்து அவள் அவனிடத்தில் பார்த்திருந்த வெறுப்பையும், மிருகத்தையும் தாண்டி, தான் நினைப்பது நடந்துவிடின் வெளிப்படும் இந்த ஆணவச்சிரிப்பும் அவள் மனதின் அழியா பாடம்!
பேசும் திறனை கண்டுகொண்டாள் த்யுதி, அதற்கு அடுத்த நொடி. "ஒத்துக்கறேன் மேடம். இவரோட வாழ பிடிக்கல. இன்னொருத்தர விரும்பறேன். அவரும் நானும் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு டைவோர்ஸ் வேணும்." அவள் தவறு செய்யவில்லை. அவள் குரல் இடுங்கி ஒலிக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அதுமட்டுமின்றி அதனை மறுத்து, இல்லை என்று வாதாடி இந்த விவாகரத்து அவளுக்கு கிடைக்கப்போவதுமில்லை.
வேண்டுமென்று அவள் மீது சுமத்தப்பட்ட பழி, இப்போது அவள் அதை மறுத்தாளானால் அவளுக்கு விடுதலை கிடைக்காமல் விட எதையும் செய்துவிடுவான் அவன். இப்போதைக்கான அவளது உடனடி தேவை, அவனிடமிருந்து விலக்கு. உலகத்திடம் மானத்தை இழக்கும் அவளுக்கு அவனுடன் வாழக்கூடாது என்று முடிவெடுக்கும் அளவு தன்மானம் திரண்டிருந்தது.
அவள் சொல்லி முடித்த மாத்திரத்தில், நிதிபதி அம்மாள் முகத்தை அஷ்ட கோணலில் சுளித்தவாறாய் ஶ்ரீகாந்திடம் திரும்பினார். "இந்தமாதிரி caseக்கு எல்லாம் ஒடனே அன்னிக்கே பிரிச்சுவிடற மாதிரி சட்டத்துல இடம் இருந்தா இன்னிக்கே முடிஞ்சிடும், Mr.Srikanth. Unfortunately, மினிமம் மூணுமாசம் ஆகும். மூணுமாசம் கழிச்சு வாங்க," என்று அவனிடம் பண்பாய் எடுத்துரைத்தவர் த்யுதியிடம் திரும்பினார். "நீயும்தான்மா. மூணுமாசம் போய், வா!" என்று கொப்பளித்துவிட்டு அடுத்த வழக்கின் papersஐ ஆராய ஆரம்பித்தார்.
உணர்ச்சிகளில்லாமல் உலாவும் ஜடமென தன்னை நினைத்திருந்தவளுக்கு இன்று தெளிந்தது. அவள் அதுவுமில்லை. உயிரில்லாது உலாவும் வெத்து உடல். அவளை உடலாலும், மனதாலும் யாரினாலும் காயப்படுத்த முடியாது. அவள் கொண்ட காயங்களின் தடயங்களெல்லாம் ஏந்திய உடலில் இதற்குமேலாய் புதிதாய் ஒன்றை ஏந்த இடமில்லை. விவாகரத்து வேண்டியதில் தன்மேல் இருக்கும் சீற்றத்தையும், வெறுப்பையும் அவன் இவ்வாறு செய்து தீர்த்துக்கொள்வான் என்று அவள் அறியவில்லை தான்.
இந்நாள் வரை அவனிடம் மட்டுமாய் அவமானப்பட்டு வந்தவள் இன்று இத்தனை பேர் முன்னிலையில். உயிரே அவளிடம் இல்லை என்று நிற்பவளுக்கு என்ன பெரிதாய் வித்தியாசம் தெரிந்துவிடப்போகிறது.
அத்தோடு பழியை ஏற்றுக்கொண்டதால் ஒண்டி இந்த அத்தியாயம் முடிந்து ஒழியவில்லையே! மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து இதே ஏளனப்பார்வைகளும், அந்த ஆணவச்சிரிப்பையும் பார்க்க வேண்டுமே. கேட்டால் இன்றே பிரித்துவைக்க சட்டத்தில் இடமில்லை என்று அந்த அம்மாள் குறை.. என்னவோ நாட்டில் நடப்பவையெல்லாம் சட்டப்படி ஒழுங்காய் நடப்பது போல்!
நடந்த அடிகளில் தடுமாறாது நடந்து அங்கவள் மீது விழுந்த அருவருப்பு பார்வையில் இருந்து விலகி வந்த த்யுதிக்கு, அதனைப்பற்றிய கவலை ஒன்றுமில்லாது அடுத்ததாய் ரமி கேட்கப்போகும் கேள்வியை எண்ணி மனம் மறுகியது. அவன் சொன்னானால் உன் அறிவு போனது எங்கே? ஏன் இல்லாததையெல்லாம் ஒப்புக்கொண்டாய் என்று அவள் உரிமையாய் வைதாளானால் அவளிடம் கூற பதிலில்லை த்யுதியிடம். இருந்தது என்னவோ மிஞ்சியிருந்த வைராக்கியமும், மீதியிருந்த வாழ்க்கையை ஓட்ட தெளிவும், பின் கண்களில் இருந்து சுட்டுக்கசிந்த கண்ணீரும் தான்.
தான் எதிர்நோக்கியிருந்த கேள்வி வரும் முன்பாகவே, சென்று கொண்டிருந்த தடத்தில் தன்னை அழைப்பது காதில் கேட்டு அதிர்ந்து நின்றாள். "ஏய் டாக்டர், நில்லு!" அவன் தான்!
நின்று திரும்பியவள் அடுத்த ஈட்டு கண்ணீர் அவன்முன்னால் இருந்து மறையும்வரை வெளிவரப்போவதில்லை என்பதில் மட்டும் கவனமாய் இருந்தாள். இத்தனை ரணப்படுத்தியும், இவ்வளவு கடந்தும் முகத்தில் அதேத் திமிர்! ஆணுருப்பு இருக்கிறதென்பதை மட்டுமே ஆணுக்கான அடையாளம் என்று கொண்டிருக்கும் ஒரு மூர்க்கன்!
அவனை நிமிர்ந்து அவள் கண்ட தெளிவான பார்வை அவன் எதிர்பாராதது தான் என்றாலும், அதனையும் உணராது அவன் பாணியிலேயே அவன் தொடர்ந்தான். "என்கூட இருக்கக்கூடாதுன்னு இன்னொருத்தன் கூட இருக்க போறேன்னு சொல்ற அளவுக்கு வந்துட்ட.. அசிங்கமா இல்ல? சம்பாதிக்கறன்னு திமிரா?"
அவன் சொல்வதை கேட்டு த்யுதிக்கு சிரிப்பு வராத குறை. அவளை அவமானப்படுத்த பொய் பழி போடும் அவனுக்கு இல்லாத அசிங்கமும், திமிரும் அதனை வாழ்க்கை சீர்படுத்த ஏற்றுக்கொள்ளும் இவளுக்கு இருக்கவேண்டுமா? இவ்வளவு பேசும் இவன், இதை என்ன இன்னும் மட்டமாகவும் நினைப்பான். அடுத்தவரிடன் கூறுவான். தொலையட்டும்!
அவனிடம் பதில் சொல்ல த்யுதியிடம் வார்த்தைகள் இல்லை. பதிலுக்கு பதில் பேசும் நிலையில் அவள் இல்லை. சூழ்நிலையை சாதகமாக்கி அவனே தொடர்ந்தான். "நீ இல்லனா இன்னொருத்தி! எனக்கென்ன பொண்ணா கிடைக்காது."
அவன் சொல்வதில் அவள் முகத்தில் முரணாய் ஒரு முறுவல் உண்டானது. "ரொம்ப சந்தோஷம், ஶ்ரீகாந்த். சந்தோஷமா இருங்க. நான் வரேன்." பேசி முடிக்கவிருக்கும் தருவாயில் எல்லாம், முகத்தில் சிக்கலாய் விழுந்திருந்த கோப முடிச்சுடன், ரமி அவள் அருகில் நின்றாள். ஏற்கனவே ரமிக்கு ஶ்ரீகாந்தின் மேல் உள்ள வெறுப்பும்,கோபமும் ஏராளம். இன்று வழக்கே இவ்வாறு தொடரப்பட்டிருக்கிறது என்று அறிந்த பின்பு அவையெல்லாம் சொல்லமுடியாதளவு தீட்டப்படும் கூர்மையை அடைந்திருக்கும். அவள் ஏதும் பேசிவிடும் முன்பாய் அவ்விடத்தை விட்டு அகலவேண்டுமென்றே த்யுதி ரமியின் கரத்தை அழுந்த பிடித்து திரும்பினாள்.
ரமியின் முகத்தில் எரிமலையென பொங்கியிருந்த சீற்றத்தை த்யுதி உணர்ந்தது, அவள் பிடியை தன் கையில் இருந்து தள்ளிய நொடி. "பொண்டாட்டிய சமமா பாக்கமுடியாம ஆம்பளனு திமிரா நடந்து, இன்னிக்கு பொய்யா இத்தனை பேர் முன்னாடி அவளை பழி சொல்ல நீயே அசிங்கப்படலை. இவ எதுக்கு படணும். அவ அசிங்கப்படறதெல்லாம் உன்ன கல்யாணம் பண்ணதுக்கு தான்!" வார்த்தைகள் வெடித்த நொடியே த்யுதியின் கையினை பிடித்து தன் புறம் திருப்பினாள் ரமி. "ஆமான்னு சொல்லு த்யுதி!" என்ற வலியுறுத்தலோடு.
இத்தனை நேரம் கட்டிக்காத்த கண்ணீரெல்லாம் அந்த நொடியே ஒழுகி, மிச்சமிருக்கும் தன்மானத்தையும் சீண்டிவிடுமென்ற பயம் தொண்டையில் அடைப்பாய் மாறி பயம் காட்டியது. தன்னால் தனக்காக நின்று, அவனிடம் வாதாட முடியாததை தனக்காக அவள் செய்கிறாள் என்ற பெருமை இருந்தாலும், இவனிடம் வாதாடி மட்டும் என்ன பயன் என்று பெரும் அலட்சியம் அவளிடம் குடிபெயர்ந்திருந்தது.
ரமியின் வார்த்தைகளில் மௌனம் சாதித்த த்யுதி, ஶ்ரீகாந்த கைகளில் முறுக்கேற எதையோ சொல்ல வர அது பொறுக்காது மீண்டும் தானே பேசிவிட்டாள். இப்போதும் ரமியிடம் தான். "ரமி பேசாம போலாம், வா!" சொன்னவள் அதோடு அங்கி நிற்காமல் parking நோக்கி நடக்க முற்பட்டாள்.
இன்றோடு முடியப்போகிறது என்று நினைத்து வந்த த்யுதிக்கு, இன்று தான் எல்லாமே ஆரம்பம் ஆகியுள்ளது என்று தெளிந்தது. இத்தனை நாட்களை அவனிடம் ஒண்டியாய் மல்லுக்கட்டிய அவள், இன்றில் இருந்து இந்த உலகத்துடனே மல்லுக்கு நிற்கப்போகிறாள்.
கணவனிடம் அடிமையாய் இருக்கும் மனைவியை பாவமாய் பார்க்கும் அதே உலகம், மணவிலக்கென்றான பின் ஒரு பெண்ணை எதையும் விட மட்டமாய் தான் பார்க்கும். அதற்கும் அவள் ஆயத்தமாகி தான் இருந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro