Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3. ஒரு வியாபாரி உருவாகிறான்.

வெய்யோன் உச்சியில் நின்று அனலை கக்கி கொண்டிருக்க, அந்த ரெயில்வே லெவல்கிராசிங் அருகே சாலைஓரத்தில் தான்விரிந்த சாக்குபை மேலிருந்த நாவல்பழ குன்று இன்று குறையாது அப்பிடியே இருப்பதை கண்டு அதைவிட அதிகமாய் தகித்தது இசக்கியின் மனம்.

நேற்றிரவு தனது பதிமூன்று வயது மகன் விஜய் சொன்னதை இசக்கி நினைத்து பார்த்தான். பள்ளிக்கிடையேயான அறிவியல்கண்காட்சி போட்டியில் கலந்து கொள்ளபோவதாகவும், அதற்கு பொருட்கள் வாங்க மூன்னூறு ரூபாய் தேவைப்படுவதாகவும், கலந்து வெற்றி பெற்றால் ஐந்தாயிரம் ரூபாயும், தனது புகைப்படம் செய்தித்தாளில் வருமென கண்களில் துடிப்புடன் சொன்ன மகனின் முகம் வந்து சென்றது.

வாரவட்டிக்கு வாங்கிய கடனின் கடைசிதவணை இன்றுதான்... ஒரளவு பணம் கிடைத்தால் கடனை அடைத்து, புதிதாக ஐந்தாயிரம் கடன வாங்க வேண்டுமென எண்ணத்துடன் வியாபாரத்தை தொடங்கிய இசக்கியின் சட்டைபாக்கெட்டில் நூறு ரூபாய் மட்டுமே நிறைந்திருந்தது.

தடுப்பு போடப்பட, வண்டிகள் ஒவ்வொன்றாய் நிற்க தொடங்கியது. அவனருகே ஓர் கார்வந்து நின்றது. கண்ணாடியை இறக்கிய உருவம் கிலோ எவ்வளவு என கேட்க, மூந்நூறு என இசக்கி பதிலளித்தான். சற்று நேரத்திற்கு முன்தான் பெரிய அங்காடியில் நானூறு என்ற விலைஅடை்டையை பார்த்தவன், இசக்கியிடம் இருநூறு ரூபாய்க்கு பேரம் ஆரம்பித்து இருநூற்றி ஐம்பதில் முடித்தான்.

பத்து ரூபாய் பொட்டலமாய் இல்லாமல் இன்று கிலோ கணக்கில் சென்றதற்கு தனது குலதெய்வத்திற்கு நன்றி தெரிவித்த இசக்கியின் கண்களில் மகனின் ஆசையை நிறைவேற்ற போகும் மகிழ்ச்சி தெறித்தது. ஒரு நெகிழி பையில் எடையிட்டு கொடுக்க, காரிலிருந்தவனோ இருநூறு ரூபாய் மட்டும் கொடுத்தான். இசக்கி அவனிடம் கெஞ்ச, ஒரு இருபது ரூபாயை தூக்கி கொடுக்க, இன்னும் ஒரு பத்து ரூபாய் வேண்டுமெனஎன கெஞ்ச, குறுக்கே இருந்த தடுப்பு மேலே தூக்கப்பட கார் கிளம்ப தயாராகியது. இசக்கி மீண்டும் கெஞ்ச, அருகிலிருந்த அவன் மனைவியோ கொடுக்க சொல்ல, அவனோ அந்த பத்துரூபாய்க்கு நூறு தடவை சலித்து கீழே தூக்கிப் போட்டான்.

தன் பொருளுக்கான விற்பனை விலையை தூக்கிபோட்டு போகும் பண்த்தின் மதிப்பு தெரியாத நபரை திட்டியப்படி அந்த பணத்தை எடுக்க செல்ல, அதுவோ காற்றில் தூக்கியடிக்கப்பட்டு சாலையில் போய் விழுந்தது.மகனின் முகமும் பணமும் கண்களில் தெரிய வாகனங்கள் வருவதை மறந்து இசக்கி அதை எடுக்க சென்றான். அடுத்த நொடி அவ்வழியே வந்த தனியார் பேருந்து மோதிசெல்ல, அந்த நாவல்பழகுன்றின் மேல் விழ, அதுவோ சரிந்து சாலையெங்கும் பரவியது அவனின் குருதியுடன் கலந்து

மறுவாரம்...

அதே ரெயில்வே கேட்டில் தடுப்பு போடப்பட, சாலையில் ஓரத்தில் சாக்குபையில் இருந்த நாவல்பழ குவியல் அருகே வாகனங்கள் நிற்கவே கத்தி கத்தி வியாபாரத்தை தொடங்கினான். இருசக்கர வாகனத்தில் வந்தவன் ஒரு இருபது ரூபாய்க்கு பழம் கேட்க, பழம் கட்ட செய்தித்தாளை கிழித்த விஜய்யின் கண்களில், இரயில்வே கேட் முன் பழம்விற்கும் வியாபாரி தனியார்பேருந்து மோதி பலி என தலைப்பில், ரத்தவெள்ளத்தில் கிடந்த இசக்கியின் கருப்புவெள்ளை புகைப்படம் கண்களில் தெரிந்தது. விழிகளில் எட்டிபார்த்த நீரை சட்டையில் துடைத்துவிட்டு தனது வியாபாரத்தை துவக்கினான்.

இவர்கள் சாலையோர வியாபாரிகள் அல்ல...
தஙகள் பொருட்களுக்கு தங்கள்விலையை வைக்கமுடியாத
இவர்கள் சாலையோர தொழிலாளர்களே....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro