Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

19. வருணிகா

     "ஏன்டி!  முகூர்த்தம் முடிஞ்சதும் இதோ சேரி மாத்திட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போனவ... மதியம் கறிச்சோறுக்கு தான் வந்து நிக்குறே... போடி உள்ளே போ... மருமக பொழுது போகாம செல்லே நோண்டிட்டு தனியா உட்கார்ந்திட்டு இருக்கா... போய் அவக்கூட பேசிட்டு இரு..." என தனது நாத்தனார்மகள் வருணிகாவை சிடுசிடுப்புடன் வரவேற்றார் அவளது மாமி வள்ளி.

         வெளியே சம்பந்தி விருந்துக்காக கறிச்சோறு  பந்தி ஆரம்பமாகியிருந்தது. அசைவஉணவின் வாசம் வீதி நுழையும் போதே நாசியை துளைத்தது. கலங்கிய மனதுடன் அதை  கண்டவாறே இல்லம் நுழைந்தவள் எதிரே வந்த அவளது அத்தான் அவினாஷ் மீது  மோத போனாள். நல்லவேளை அவளின் புஜம்பிடித்து  தடுத்து நிறுத்தி குறுநகையுடன் பெண்ணவள் வதனம் பார்த்தான்.  அதே மத்தாப்பு சிரிப்பு ,  ஆட்டோஃபாமாய்  இதயம் வெடிக்க வைக்கும் சிரிப்பு இன்று   எத்தகைய உணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை.

       "என்னவனாய் நீ கைப்பிடிப்பாய் என்று  தானே பத்து வருடங்களுக்காக காத்திருந்தேன்... ஆனால் இன்று நீ  இன்னொருத்தியின் கணவனாய்... என்வாழ்வை விட்டு சென்ற நீ ஏனடா  திரும்பி வந்தாய்..., இதோ இந்த வலியை கொடுக்கவா..?" என மனதோடு அழுது கரைந்தாள்.

       "கலரு... ஜில் ஜில் கலரு..." என அவனின் வழக்கமான அழைப்பில் நினைவு திரும்பினாள்.

       "என்ன சொன்னே.." என விழிகளை உருட்டி பொய்யாய் மிரட்ட,

         "ஜில் ஜில் கலருன்னு..." என குறும்பாய் சிரிக்க,

       "உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா... இனி இப்பிடி கூப்பிடு... உன் வைஃப்கிட்டே வத்தி வைக்கிறேன்...,விடு அவின்.." என தனது கையை அவனிடமிருந்து பிரித்தாள்.

        "உனக்கு மேரேஜாகி உன் ஹஸ்பெண்ட் வந்தாலும் அவன் முன்னாடியும் அப்படிதான் கூப்பிடுவேன்... ஜில்ஜில்...," என்றவன் அவளது கன்னத்தில் தட்டிவிட்டு செல்ல,  அவளையும் மீறி  இளம்சாரல் மனம் வருடி சென்றது.  கசந்த புன்னகையுடன் அவன் பிம்பம் மறையும் வரை அவன் செல்வதையே  வெறித்து கொண்டிருந்தாள்.

        புதுப்பெண்  தர்ஷினிஅருகே சென்று அமர்ந்தாள் வருணிகா.  பல விசயங்கள் கதைத்து கொண்டிருக்க,   தனது கணவனுடனான நட்பு  பற்றி கேட்கலானாள் தர்ஷினி.

         நினைவு தெரிந்த நாளிலிருந்து  அவினும் தானும்  நண்பர்கள் எனவும், தன்னை விட இரண்டு வயது மூத்தவன் தன்னுடன் படிக்க ஆசைப்பட்டு எட்டாம்வகுப்பில் இரண்டுமுறை தோல்வியை தழுவினான் எனவும்,  தான் பூப்பெய்தியதை  அவனிடம் தான்  முதலில் சொல்லுமளவு நெருக்கமான பாசம் இருவருக்குள்ளும் இருந்தது  எனவும், தாய்மாமனாய் முறை செய்து மகிழ்ந்த குடும்பங்கள் தன் தங்கையின் பூப்பூனித நன்னீராட்டு விழாவில் நடந்த கறிச்சோறு விருந்தில்  ஏற்பட்ட சிறு மனக்கசப்பு   பெரும் ப்ரச்சனையாக உருவெடுக்க, மாமனும் மச்சானும் வெட்டுகுத்து வரை சென்றனர் எனவும், அது  காவல்நிலையம் வரை செல்ல, அன்று பிரிந்த குடும்பம் சமீபத்தில் தாத்தா இறப்பில் தான் ஒன்று சேர்ந்தது எனவும்   உறவுகள் தொடர வருணிகாவின் அன்னை அவரது அண்ணனிடம் அவின் வருணியின் திருமணம் பற்றி பேச, அவரோ அவின் தர்ஷினியை காதலிப்பதாகவும், ஏற்கனவே திருமணம் பேசி முடித்துவிட்டதாக சொன்னது வரை அனைத்தையும் மறைக்காமல்  கூறினாள் வருணிகா. 

      இனியும் இந்த நட்பு தொடர வேண்டுமென என பெயரளவுக்கு கூட பெண்ணவள் மொழியாது இருக்க,  அவளின் உள்ளம் அறிந்த வருணிகா வெறுமையான புன்னகையுடன் வேறு கதைகள் பேசத் தொடங்கினாள்.

            மதியம் இரண்டுமணியாக வள்ளி வந்து மருமகளை உணவுண்ண அழைக்க, வருணிகா இருப்பதையே மறந்து  தனது அத்தைம்மாவுடன் சென்றாள். இனி அவினாஷே தன்னுடன் சகஜமாக பழகினாலும் தான் விலகியே நிற்க வேண்டும் அவனின் மகிழச்சியான வாழ்விற்காக என முடிவுடன், தங்கை வந்து அழைக்க விருந்துண்ண சென்றாள்.

            தங்கையின்  சீரில் கசந்த கறிவிருந்து இன்று பெண்ணவளுக்கு மனநிறைவாக இருந்தது. தன் மனதில் நிறைந்தவன், அவன்  மனதில் நிறைந்தவளை  கைப்பற்றிய மகிழ்ச்சியில்.   யாரோ ஒருவர் வந்து, "நீ எப்ப மா கறிவிருந்து போடப் போறே.." என வினவிட,

        கனத்த மனதுடன்,  சிரித்த முகமாய் "சீக்கிரம் பெரியப்பா..." என்றவாறு பிரியாணியை சுவைக்கத் தொடங்கினாள் வாழ்வின் நிதர்சனம் உணர்ந்தவளாய்.


காதலில் நிராகரிப்பு பெரும் வேதனை தான் அவளு(னு)க்கு...
காதல் வென்ற  மகிழ்ச்சியில் அவள்(ன்)ஐ  காணும் வரை...

          

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro