#95#
மனு மதுவை எழுப்ப அவன் அறையை நோக்கிச் செல்ல, அதிர்ந்த அஸ்வின் வேகமாக அவள் கரம் பற்றி மீண்டும் பால்கனிக்கு இழுத்து வந்தான்.
"என்ன செய்கிறாய் நீ? இந்த நேரத்தில்..." என்று திகைப்புடன் பேச ஆரம்பித்தவனை இடையில் வெட்டினாள் அவள்.
"நான் எல்லாம் சரியாக தான் செய்கிறேன், என் மேல் நம்பிக்கை இல்லாதவர் வீட்டில்..." என்று அவள் தொடர முயல,
"ப்ளீஸ் மனு... ஏன் என்னை புரிந்து கொள்ளாமல் படுத்துகிறாய்?" என்று அவள் தோள்களை பற்றி சோர்வாக வினவினான் அஸ்வின்.
"நீங்கள் என்னை புரிந்து கொண்டீர்களா? என்னை பார்த்து அந்த வார்த்தையை எப்படி கூறலாம் நீங்கள்? நான் மட்டும் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எந்த நியாயத்தில் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவனிடம் பளிச்சென்று கேட்டாள்.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக, "எப்பொழுதும் இப்படி தான், நன்றாக போய் கொண்டிருக்கும் பொழுது ஏதாவது நடந்து சொதப்பி விடுகிறது. காரணம்... அந்த பிரச்சினை. சரி, இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று விவரம் கேட்டால்... உன் மேல் நம்பிக்கையில்லை என்று சொல்வீர்கள், நானும் அதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். இதைவிட நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட முடியாது!" என்றாள் காட்டமாக.
"மனு..." என்றான் அதிர்ந்து.
"ப்ளீஸ்... வேண்டாம், என்னால் முடியவில்லை. உங்களோடு எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது, இனி பிரச்சினையில்லை என்று என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் உங்கள் பாசத்தை எதிர்ப்பார்த்து எதிர்பார்த்து நான் ஏமாந்து போகின்றேன். இதற்கு மேல் என்னால் முடியாது, ஒன்று என் மேல் நம்பிக்கை வைத்து உங்கள் பிரச்சினையை கூறுங்கள்... இல்லை முடியாது என்றால் என்னை விட்டு விட்டுங்கள், என் மனதை கல்லாக்கி கொண்டு நான் ஒதுங்கி கொள்கிறேன்!" என்றாள் முகம் இறுக.
"மனு... என்ன பேசுகிறாய் நீ?" என்று பதறியபடி அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான் அஸ்வின்.
"வேறு என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? நீங்களே சொல்லுங்கள்!" என்று அவன் விழிகளை நோக்கி அமைதியாக கேட்டாள்.
ஒரு கணம் பேச்சிழந்து நின்றவன், "நான் எல்லாம் சொல்கிறேன், என்னால் உன்னை விட்டு ஒதுங்கி இருக்க முடியாது!" என்றான் தீர்மானமாக.
சட்டென்று மலர்ந்தவள், அஸ்வினை கட்டிக்கொண்டு தாங்க்ஸ் என்றாள்.
எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் மெல்ல மனுவை விலக்கியவன், அவளோடு சென்று சோபாவில் அமர்ந்தான்.
புருவம் சுளித்தபடி தலைக்குனிந்திருந்தவன், "அந்த ஆள் தான் என் பிறப்பிற்கு காரணமானவர்!" என்றான் வெறுப்புடன்.
"அப்படியென்றால்... அவர் உங்கள் அப்பாவா?" என்றாள் மனு ஆச்சரியமாக.
"அந்த ஆளை அப்படியெல்லாம் குறிப்பிடாதே..." என்றான் கோபத்தில் விழிகள் சிவக்க.
இந்த அளவுக்கு கோபமும், வெறுப்பும் வருகிறது என்றால்... அவர் மேல் தான் நிச்சயம் ஏதோ தவறு இருக்கிறது.
"அப்பொழுது அந்த குடும்பம்..." என்று தயக்கத்துடன் நிறுத்தினாள்.
"அந்த ஆளுடைய இன்னொரு குடும்பம்!" என்றான் அருவருப்புடன்.
வாய்க்கு வாய் அந்த ஆள் என்று குறிப்பிடும் அவன் வேதனையை உணர்ந்தவள், அவனுடைய கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டு, "ஐ ஆம் சாரி!" என்றாள் வருத்தத்துடன்.
"உன் பரிதாபம் ஒன்றும் எனக்கு தேவையில்லை!" என்றான் பட்டென்று.
இதழை சுருக்கி புருவத்தை நெறித்தபடி அமர்ந்திருந்தவனை காணும்பொழுது சிறு குழந்தையின் பிடிவாதமான முகபாவனை தான் நினைவிற்கு வந்தது மனுவிற்கு.
மெல்ல புன்னகையுடன் அவன் தோளில் சாய்ந்தவள், "வேறு என்ன தேவை உங்களுக்கு?" என்றாள் மென்மையாக.
அவளின் மென்மையிலும், கேள்வியிலும் அவன் மனம் திடுக்கிட, 'எனக்கு என்ன தேவை?' என்று உள்ளம் தடுமாறியது.
மனுவின் நெருக்கம் அஸ்வினின் மனதை நெகிழச் செய்ய தவித்தபடி அவளை விலக்கி விட்டு எழ முயன்றான்.
அதற்கு அவள் தயாராக இல்லை, அவனை மேலும் இறுக்கி கொண்டாள்.
"மனு! அது தான் சொல்லி விட்டேனே... நீ போய் தூங்கு, நானும் தூங்க வேண்டும்!" என்று அவளை தன்னிடமிருந்து பிரித்தான்.
"இல்லையே... இன்னும் முழுதாக வெளிவரவில்லை. எதை வைத்து நான் உங்களை நம்ப மாட்டேன் என்று சொன்னீர்கள். இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம்?" என்று வினவினாள்.
"ப்ச்... வார்த்தைக்கு வார்த்தை உனக்கு விளக்கம் தர வேண்டுமா?" என்றான் சலிப்புடன்.
"எஸ்... அஃப்கோர்ஸ்!" என்று கைகளை விரித்து அலட்சியமாக தோள்களை குலுக்கினாள் மனு.
அவளின் பாவனை இதழ்களில் புன்னகையை மலரச் செய்ய, அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், "சரியான ஆள்டி நீ..." என்றான் கேலியாக.
"தாங்க் யூ... ஆனால் யாருக்கு?" என்றாள் சட்டென்று.
மனுவின் கேள்வியில் தடுமாறியவன், அதை தவிர்த்து விட்டு மற்ற விவரங்களை சொல்ல ஆரம்பித்தான்.
"நீ என்னை விட்டு பிரிந்தது என் மனதை மிகவும் பாதித்தது. உன்னை பற்றிய துக்கத்தில் படிப்பிலும், விளையாட்டிலும் ஆரம்பத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்தேன். பிறகு ஒருவழியாக அம்மா என்னைத் தேற்றி ஆறுதல்படுத்தி இயல்புக்கு கொண்டு வரும் முன், இந்த ஆளைப் பற்றிய செய்தி எங்கள் தலையில் இடியாக இறங்கியது. அவருக்கு இன்னொரு இடத்தில் வேறு மனைவியும், இரு பிள்ளைகளும் இருந்தார்கள். அந்த ஆள் வேலை விஷயம் என்று அடிக்கடி வெளியூர் சென்றது, அந்த குடும்பத்திற்காக தான் என்பது தெரியாமல் என் அம்மா ஏமாந்து கொண்டிருந்திருக்கிறார்கள். உறவினர் ஒருவர் மூலம் விஷயம் தெரிந்து அம்மா மிகவும் நொடிந்து விட்டார்கள். அவர் வீட்டிற்கே வராமல் இருக்கவும், என் மாமாவை அழைத்துக் கொண்டு போய் நியாயம் கேட்டதற்கு, உன்னோடு வாழ எனக்கு விருப்பமில்லை என்றிருக்கிறார். உங்கள் மகனையாவது எண்ணிப் பார்த்தீர்களா என்று கேட்டதற்கு, நீயே எனக்கு தேவையில்லை எனும் பொழுது உனக்கு பிறந்த மகன் எனக்கெதற்கு என்று தெனாவட்டாக கேட்கவும், அம்மா வெறுத்து போய் விலகி வந்து விட்டார். அன்றிலிருந்து நாங்கள் இருவரும் உறவினர்கள் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோம். அவர் வழி உறவினர்கள் முற்றிலும் ஒதுங்கி விட, அம்மாவின் உடன்பிறந்தவர்களோ தங்களை அட்டைப் போல் ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று எங்களை முடிந்தவரை தள்ளி வைத்தே உறவை பேணி வந்தனர். அம்மா யாரையும் சார்ந்து வாழ விரும்பவில்லை, தனக்கு தெரிந்த தையல் தொழிலை வைத்தே எங்கள் இருவரின் வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொண்டார். அடுத்தடுத்த அதிர்ச்சியால் முற்றிலும் இறுகிப் போன நான், அனைவரை விட்டும் ஒதுங்கி இருக்கவே விரும்பினேன். தவறே செய்திராத எங்கள் இருவர் மீதும் இந்த சமூகம் குற்றம் சாட்டியதே திரும்ப திரும்ப என் மனதில் எதிரொலித்து கொண்டே இருந்தது. கட்டிய மனைவி சரியில்லாததால் தான், அந்த ஆள் இன்னொரு குடும்பம் தேடிச் சென்றான் என்றனர். நான் வளர வளர, இவனும் இவன் அப்பனை போல் தான் வருவான் என்றனர். ஆறுதல் தேடி என் நிலையை வெளியில் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள கூட அச்சமாக இருந்தது. உன்னை பிடிக்காமல் தான் உன் அப்பா உன்னை விட்டு சென்று விட்டார் என்று அருகிலுள்ள சிறுவர்கள் ஆரம்பத்தில் கேலிப் பேசியது என் மனதை மிகவும் ரணப்படுத்தியிருந்தது. இப்படியே எந்த பிடிப்பும் இல்லாமல் அம்மாவும், நானும் ஏனோதானோவென்று வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்தோம். படிப்பிலும் மிக மோசமான நிலைக்கு நான் செல்ல, அம்மா மிகவும் கவலைப்பட்டார்கள். என்னுடைய வகுப்பாசிரியர் அவர்களை அழைத்து எச்சரித்த அன்று, என் அம்மா என்னிடம் வெகு நேரம் பேசினார்கள். நாம் இழந்த கௌரவத்தை உன் படிப்பு தான் மீட்டு கொடுக்கும், எனக்காக நீ நன்றாக படிக்க வேண்டும் என்று அழுதார்கள். அனைத்தையும் இழந்து எனக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களை நானும் வேதனைப்படுத்த விரும்பவில்லை. அன்றிலிருந்து என் கல்லூரிக் காலம் முடியும் வரை நான் தான் ஸ்கூல் மற்றும் காலேஜ் டாப்பராக வந்தேன்!" என்றான் அஸ்வின் உணர்வற்று.
அவனுடைய பால்ய காலத்தை நினைத்து கவலையடைந்தாலும், அவன் உறுதி கண்டு பெருமையாக உணர்ந்தாள் மனு.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro