Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

#80#

அஸ்வினுடன் தனியாக இருப்பதை எண்ணி, மனுவின் மனதில் இனம்புரியா பதட்டம் ஏற்பட்டது.

இதுவரை அவனை சுலபமாக சமாளித்து வந்தவளால், இன்று ஏதோ ஒன்று நடக்கவிருப்பது போல் ஒருவித அச்சம் தோன்றியது.

அவளின் பதட்டத்தை உணர்ந்த அஸ்வின், அவளை இயல்பாக்க அடுத்தடுத்து வேலைகள் கொடுத்து யோசிக்க நேரம் இல்லாமல் பார்த்து கொண்டான்.

சற்று நேரத்தில் அவளும் இயல்பாகி வேலையில் ஒன்றிப் போனாள். இடையில் வந்த சாப்பாட்டு வேளையிலும், அஸ்வின் தான் அவளைக் கவனித்தானே தவிர அவள் அவன் புறம் பார்வையைத் திருப்பவேயில்லை.

வேலைகளின் இடையே மனுவின் மொபைல் ஒலிக்க, எடுத்து காதில் வைத்தவள், "ஆங்... ப்பா... இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் வந்து விடுங்கள். ஓரளவுக்கு வேலை முடிந்து விட்டது, மீதியை நாளைப் பார்த்துக் கொள்கிறேன்!" என்று தன் அப்பாவிடம் சொல்லி விட்டு போனை பேக்கினுள் வைத்தாள்.

'பத்து நிமிடத்தில் கிளம்புகிறாளா?' என்று திகைத்தவன், 'நான் இன்னும் அவளிடம் பேசவேயில்லையே!' என்று மலைத்தான்.

இதற்கு மேல் பொறுமை வேண்டாம் என்று நினைத்தவன், "மனு..." என மெல்ல அழைத்தான்.

அவனிடம் பார்வையை உயர்த்தியவள், புருவத்தை சுருக்கியபடி விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

"ப்ளீஸ்... ப்ளீஸ்... இதை தவிர வேறு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தயவுசெய்து என்னை புரிந்து கொள், எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. உன்னுடைய நட்பு எனக்கு வேண்டும், என் தவறை நான் முழுமையாக புரிந்துக் கொண்டேன்!" என்று அவளிடம் மன்றாடினான்.

'நட்பா? ஹும்...' என்று மனதினுள் பழித்தவள், தன் உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

தன்னிடம் எதுவும் பேசாது அவள் கிளம்பி நடக்க ஆரம்பிக்க, அஸ்வின் தடுமாறிப் போனான். அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை, ஆனால் இச்சந்தர்ப்பத்தை விட்டால் மீண்டும் தனிமை வாய்ப்பது அரிது என்று அவளை பின் தொடர்ந்தான்.

எப்படியாவது அவளை இன்று தன்னிடம் பேச வைத்தே ஆக வேண்டும் என்ற வெறி அவனுக்குள் தோன்றியது. அதற்காக அவளிடம் அவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான், அவள் சற்றும் அசைந்து கொடுக்காமல் அவன் பேச்சு காதில் விழாதது போல் தன் போக்கில் நடந்து சென்றாள்.

மனு சற்றும் அவனை மதிக்காமல் மேலே முன்னேறிச் செல்ல, அஸ்வின் முற்றிலும் தன் பொறுமையை இழந்தான்.

அவள் கரம் பற்றி சுழற்றி இழுத்து தன் எதிரே நிறுத்தியவன், "ஏய்... என்னடி ரொம்பத்தான் அலட்டிக் கொள்கிறாய்? நானாடி உன் பின்னால் வந்தேன்... நீ தானேடி சும்மா சும்மா என் பின்னால் வந்து என் அமைதியை கெடுத்தாய். இப்பொழுது பேச முடியாது என்றால் நான் சும்மா விட்டு விடுவேனா... எனக்குத் தெரியாது நீ என்னிடம் பேசித் தான் ஆக வேண்டும், பழையபடி இயல்பாக சிரித்து பழக வேண்டும். அதுவரை உன்னை நான் விட மாட்டேன்!" என்று வெறிப் பிடித்தவன் போல் கத்தியவன், சட்டென்று அவள் கரத்தை கீழே விட்டு விட்டு திகைத்து நின்றான்.

அஸ்வின் தன் கரம் பற்றி இழுத்து எதிரே நிறுத்தி வைத்து கத்த ஆரம்பிக்கவும், அவளுக்காக அவன் விழிகளில் தெரிந்த தவிப்பில் தன்னை இழக்க ஆரம்பித்தவள், அவன் திகைத்து விலகவும் குழப்பத்துடன் அவன் முகத்தை பார்த்தாள்.

அவன் விழிகள் தேங்கியிருந்த இடத்தை நோக்கி தன் விழிகளைத் திருப்பியவளும் திடுக்கிட்டாள்.

அங்கே அவர்கள் இருவரையும் குழப்பத்துடன் பார்த்தபடி ரமணன் நின்றிருந்தான்.

அஸ்வினுக்கோ மிகவும் பதட்டமாகி விட்டது, முதல் நாளே ரமணன் தன் மகளிடம் வைத்திருந்த அன்பை, தன் கண்களால் நேரில் கண்டவன் அவன்.

'இன்று அவர் கண் முன்னாலேயே அவருடைய மகளின் கரம் பற்றி இழுத்து சண்டையிட்டு கொண்டிருக்கிறேனே... அவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்?' என்று எண்ணியபடி பதற்றத்துடன் நின்றான்.

ரமணனோ அஸ்வினுடைய திகைத்த முகத்தை ஒரு நிமிடம் கூர்ந்து விட்டு, மனுவிடம் தன் பார்வையை திருப்பினான்.

அதுவரை செய்வதறியாது கைகளை பிசைந்துக் கொண்டிருந்தவள், தன் தந்தையின் பார்வை தன் மேல் விழவும் வேகமாக ஓடிச்சென்று, அவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவள் திடீரென்று ஓடிவந்து தன் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்தது, ரமணனுக்கு திகைப்பு மட்டும் தான் என்றால்... அஸ்வினுக்கோ அது பேரதிர்ச்சியாக இருந்தது.

'ஐயோ... என்ன இவள் இப்படி செய்து விட்டாள்... இப்பொழுது எதற்கு இவள் இப்படி அழுகிறாள்? அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? நான் ஏதோ அவளிடம் தவறாக நடந்து கொண்டதாக அல்லவா நினைப்பார்!' என்று டென்ஷனாக தன் பிடறியை தடவினான்.

ரமணன் குழம்பியபடி மனுவை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான், "ஷ்... மனும்மா... இப்பொழுது எதற்கு இப்படி அழுகின்றாய்? யூ ஆர் அ பிரேவ் கேர்ள் க்நோ!" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

அவள் தலையசைத்து மறுத்தபடி மீண்டும் அவன் மீது சாய்ந்துக் கொண்டாள்.

"ப்ச்... என்னடாம்மா இது? சரி வா வீட்டிற்குப் போகலாம்!" என்றபடி அவளை விலக்க முயற்சிக்க, அவனை மேலும் இறுக்கிக் கொண்டவள், "நான் உங்களிடம் சற்றுப் பேச வேண்டும்!" என்றாள்.

"இப்பொழுதேவா..."

"ம்..." என்றாள் அவன் மார்பிலிருந்து தலையை நிமிர்த்தாமல்.

ரமணனுடைய பார்வை அஸ்வினிடம் உயர, அதுவரை அப்பா, மகளின் சம்பாஷனையை கேட்டிருந்தவன் விலகிச் செல்ல முயல, அவனை கை நீட்டி தடுத்து அங்கேயே தொடர்ந்து நிற்குமாறு சைகை செய்தான் அவன்.

அஸ்வின் தயங்கியவாறு அங்கேயே வேரூன்றி நின்றான்.

"அப்பா!" என்று மென்மையாக அழைத்தாள் மனு.

"ம்... சொல்லுடா!" என்று அவள் தலைமுடியை கோதினான்.

"அப்பா! அன்றைக்கு முதல் நாள் அலுவலகத்துக்கு வந்தப்பொழுது, எனக்கு மிகவும் தலைவலி வந்து மயங்கி விழுந்ததாக கூறினேன் அல்லவா... அதற்கு முழுமுதற் காரணம் இவர் தான், இவரை பார்த்தவுடன் தான் எனக்கு தலைக்குள் ஏதேதோ செய்து பளீரென்று தாங்க முடியாத வலி ஏற்பட்டு மயக்கம் வந்தது!" என்றாள் மனு.

அதைக் கேட்ட அஸ்வின் அதிர்ச்சியுடன், 'நான் ஒன்றுமே செய்யவில்லையே...' என்று எதையோ சொல்ல முயற்சிக்க... ரமணன் கண்களாலேயே அவனை பேச விடாமல் தடுத்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro