#48#
"என்ன புஜ்ஜிம்மாவா? பாருடா... அதற்குள் செல்லப்பெயர் எல்லாம் வைத்தாயிற்றா? ம்... இதிலிருந்தே குழந்தையின் வரவை எவ்வளவு ஆவலாக நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இவள் உங்களை அப்பா, அம்மாவாக அடைய மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்!" என்று குழந்தையின் பிஞ்சு கரங்களைத் தடவி புன்னகைத்தார்.
"இல்லை ஆன்ட்டி... இவள் தான் எங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தந்திருக்கிறாள்!" என்றான் ரமணன் அவள் முகத்தை வாஞ்சையுடன் நோக்கியவாறு.
மெல்லிய சிரிப்புடன் அவன் தோளை தட்டியவர், "சரி நந்தினியை இன்னும் ஐந்து நிமிடத்தில் ரூமிற்கு அழைத்து வந்து விடுவார்கள். டேக் கேர்!" என்று தன்னறைக்குச் சென்றார்.
அறையில் நந்தினி சோர்வாக கண்களை மூடி படுத்திருந்தாள்.
குழந்தையை மெல்ல தொட்டிலில் படுக்க வைத்தவன், அவளிடம் வந்தான்.
அவள் முகத்தில் தெரிந்த களைப்பை கவனித்தவன், ஆதரவாக... மயிலிறகாக தலையை வருடிக் கொடுத்தான்.
அந்த வருடலில் மெல்ல விழிகளைத் திறந்தவள், சோர்வையும் மீறி அவன் முகத்தை ஆர்வமாக நோக்கினாள்.
கனிவாய் புன்னகைத்தவன், குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
"புஜ்ஜிம்மா நம்மிடம் வந்து விட்டாள்!" என்றான் கரகரப்பாக.
பளிச்சென்று முகமும், இதழும் ஒரு சேர மலர அவனை நோக்கியவளின் விழிகள், அடுத்த நொடி அவளைக் காண வேண்டி ஆசையாக சுற்றிலும் அலைப்பாய்ந்தது.
அதைப் புரிந்து கொண்டவன், குழந்தையை எடுத்து அவளருகில் படுக்க வைத்தான்.
அவள் லேசாக தலையை குனிந்து, குழந்தையின் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.
ரோஜா இதழினும் மெல்லிய பட்டு மேனியை பரவசத்தோடு தடவியவளுக்கு உணர்ச்சிவசத்தால் மெய்சிலிர்த்தது.
"இங்கே பார்!" என்று குழந்தையின் வலது கரத்தை அவளிடம் காண்பித்தான் ரமணன்.
குழந்தையின் கரத்தில் கட்டை விரலுக்கு கீழ் மெல்லிய நீள் வட்டமாக அவள் தோலின் நிறத்திற்கு சற்று வெளிறிய நிறத்தில் நிலா மச்சம் ஒன்று இருந்தது.
முகம் புன்னகையில் விரிய, அவனைப் பார்த்து சிரித்தவள், அவனை அருகிழுத்து ஐ லவ் யூ! என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.
குழந்தை சூரிய வெளிச்சத்தை காண முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தாள்.
குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு வாரமாகியிருந்தது.
அவளை இளங்காலை வெயிலில் சற்று நேரம் காண்பிக்க வேண்டும் என்று கூறி இருந்ததால் பேபி ஆயில் தடவி லேசாக மசாஜ் செய்து, அவளை வெயிலில் காண்பித்தபடி நின்று கொண்டிருந்தான் ரமணன்.
வீட்டிலிருக்கும் நேரம் முழுக்க அவன் தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அவளுக்கு கண்ணும் கருத்துமாகச் செய்தான். நான் அலுவலகம் சென்ற பின் தான் நீ குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நந்தினிக்கு அன்பு கட்டளை வேறு இட்டிருந்தான். அவளும் அவனைப் பற்றி அறிந்திருந்ததால் தந்தை மகளுக்கிடையே நுழைவதில்லை... அவர்கள் போக்கிற்கு விட்டு விட்டு விட்டாள்.
"ஹேய் குட்டிம்மா! இங்கே வந்து இவளை பாரேன்... என்ன வேலை செய்கிறாள் என்று. சூரிய வெளிச்சத்தையே பார்க்க மாட்டேனென்று கண்களை இறுக்க மூடிக் கொண்டிருக்கிறாள் பார்!" என்று சிரித்தபடி நந்தினியை அழைத்தான்.
குழந்தை அடுத்து குளிப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், அவன் குரல் கேட்டு அவனிடம் வந்தாள்.
அருகில் வந்து அவள் நின்றவுடன், குழந்தை மெல்ல சிமிட்டியபடி கண்களைத் திறந்தாள்.
"ஹேய்... நான் வந்ததும் திறந்து விட்டாளே..." என்று கைத்தட்டி குதூகலித்தாள் நந்தினி.
அதைக் கண்டு வியந்தவன் யோசனையோடு அவளைப் பார்க்க, அவளைக் கண்டு அவள் ஏன் கண் திறந்தாள் என்ற விடை அவனுக்கு புரிந்தது.
"அப்படியா மேடம்... சரி வந்து என் பக்கத்தில் நில்லுங்கள்!" என்றவன் கூறியதும், அவள் அவனருகில் சென்றாள்.
குழந்தை வேகமாக மீண்டும் கண்களை மூடி கொண்டாள்.
அதைக் கண்ட நந்தினி திகைப்புடன், "என்ன மறுபடியும் கண்களை மூடி கொண்டாள்?" என்று கேட்டாள்.
"இப்பொழுது மறுபடியும் இங்கே வந்து நில்!" என்று அவளை பழைய இடத்தில் நிற்கச் சொல்ல, அவள் நின்றதும் குழந்தை மீண்டும் கண்களைத் திறந்தாள்.
அதைக் கண்ட ரமணன் தன்னை மறந்து வாய் விட்டு சிரிக்க, நந்தினி அவனைப் புரியாமல் பார்த்தாள்.
"என்ன பார்க்கிறாய்? பிறந்து ஒரு வாரமே ஆன இந்த வாண்டு உஷாராக என்னென்ன வேலை செய்கிறது பார்!" என்று புன்னகைத்தவன், "நீ இங்கே நின்றால் அவளுக்கு நேரடி வெளிச்சம் மறைவதால் கண்களைத் திறந்தாள். அதே நீ இந்த பக்கம் நகர்ந்தால் வெளிச்சம் வருகிறது என்று மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறாள்!" என்று விளக்கினான்.
அவள் அவனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு, குழந்தையிடம் வெளிச்சத்தை மறைத்தும், நகர்ந்தும் விளையாட... அவளும் இவள் வேகத்துக்கு கண்களை மூடி மூடித் திறந்தாள்.
இருவரும் வாய்விட்டு சிரித்தபடி தங்கள் புஜ்ஜிம்மாவின் அழகையும், விவேகத்தையும் ரசித்தனர்.
குழந்தைக்கு பதினோறாவது நாள் மனஸ்வினி என்று பெயரிட்டனர்.
"குட்டிம்மா! என்ன செய்கிறாய்? புஜ்ஜிம்மாவும் நானும் கிளம்பி எவ்வளவு நேரமாகிறது... நீ என்னடாவென்றால் இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லை!" என்று கேட்டப்படி உள்ளே நுழைந்த ரமணன் திகைத்தான்.
அவன் கம்பெனி பிரொடக்ஷன் மேனேஜர்க்கு திருமணம். நீண்ட நாட்களாக அவன் கம்பெனியில் இருக்கும் நம்பிக்கையான ஊழியர்.
"என்னடா இப்படி நிற்கின்றாய்?" என்று கேலி செய்தபடி அவள் அருகில் சென்றான்.
"எல்லாம் உங்களால் தான்... பாருங்கள் என்ன புடவை வாங்கி வந்திருக்கிறீர்கள் நீங்கள்? சுத்தமாக கீழே ப்ளீட்ஸே எடுக்க முடியவில்லை. மடிப்பு நீட்டாகவே வர மாட்டேன் என்கிறது... நானும் எவ்வளவு நேரமாக ட்ரை பண்றேன்!" என்றாள் அவனிடம் அழாக் குறையாக.
"என்னை கூப்பிட்டிருக்க வேண்டியது தானே..." என்றவன் தன் மகளிடம் திரும்பி, "புஜ்ஜிம்மா! அம்மா ரெடியாகும் வரை, நீ இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது. அப்பா போட்டு விட்ட எதையும் கழட்ட கூடாது... மீறி எதையாவது கலைத்தாய் என்றால் நான் உன்னை வீட்டிலேயே விட்டு விட்டு அம்மாவை மட்டும் அழைத்து சென்று விடுவேன்!" என்று அவளை செல்லமாக மிரட்டியபடி கட்டிலில் அமர வைத்தான்.
அவள் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு, பால் கண்களில் குறும்பு மின்ன... இதழ் குவித்து ஊம்... ஊம்... என்று தலையை தலையை ஆட்டினாள். அந்த அழகில் மெய் மறந்தவன், குனிந்து அவளின் குண்டு கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டான்.
அப்படித்தான் ஒரு முறை பர்த்டே பார்ட்டிக்கு செல்ல குழந்தைக்கு அழகாக டிரஸ் செய்து, கலர் கலராக ஹேர் கிளிப்ஸ் எல்லாம் போட்டு விட்டு அழகிய தலையலங்காரம் ஒன்றை செய்திருந்தான் ரமணன்.
கிளம்பும் வேளையில் அவனுக்கு முக்கியமான போன் கால் ஒன்று வர அவன் அவளை சோபாவில் அமர வைத்து விட்டு, பால்கனிக்கு போன் பேச சென்றான்.
நந்தினியும் குழந்தைக்கு பால் கலந்து பாட்டிலில் எடுத்துக் கொள்ளவென்று கீழே சென்று விட்டாள்.
குட்டி மேடத்திற்கு மிகவும் போரடித்தது. கிளம்பி வெளியே செல்லாமல் எவ்வளவு நேரம் தான் இப்படியே அமர்ந்திருப்பது... சுற்றிப் பார்த்தால் அப்பாவும், அம்மாவும் வருவதற்கான அடையாளமே தெரியவில்லை.
மெல்ல தட்டு தடுமாறி கீழே இறங்கியவள் தளிர் நடையில் நடந்து சென்று, டிரஸ்ஸிங் டேபிள் முன் நின்றாள்.
கண்ணாடியில் இப்படியும், அப்படியும் தன்னை திருப்பி திருப்பி பார்த்தவளுக்கு, தன் தந்தை செய்திருந்த அலங்காரத்தில் திருப்தி ஏற்படவில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro