#19#
கார் ஓரிடத்தில் நிற்கவும், அவனிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று விரல்களால் ஷாலை இறுக்கியபடி சிந்தித்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து வெளியே பார்த்தாள்.
சட்டென்று அவளின் முகம் அதிர்ச்சியை வெளியிட்டது. திரும்பி அவனை மருண்டு பார்த்தவள், வேகமாக காரின் கதவை திறக்க முயற்சித்தாள்.
ஆனால் அவளால் முடியவில்லை... இயலாமையால் விழிகள் கலங்கி இதழ்கள் துடிக்க நெஞ்சம் விம்மியது.
அதுவரை கையை கட்டிக் கொண்டு அவளின் முயற்சிகளை பார்த்திருந்த ரமணன், அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்கவும் அவளிடம் பேசினான்.
"ஷ்... இப்பொழுது எதற்கு அழுகின்றாய்?" என்று கேட்டான்.
"ப்ளீஸ்... என்னை விட்டு விடுங்கள் நான் போய் விடுகின்றேன். நீங்கள் இந்த மாதிரியெல்லாம் செய்தீர்கள் என்று யாரிடமும் பிராமிஸ்ஸாக கூற மாட்டேன்!" என்றாள் அழுகை குரலில்.
முகத்தில் குறும்பு தாண்டவமாட, "அப்படியா... சரி எங்கே போவாய்?" என்று அப்பாவியாய் கேட்டான்.
"ஹா... வீட்டிற்கு!" என்று அவசரமாக கூறினாள்.
அவள் வேறு ஏதோ சொல்ல வந்து வேகமாக மாற்றியதை கவனித்தவன், அவள் விழிகளை கூர்ந்து பார்த்தான்.
அவன் பார்த்த பார்வையில் அவள் முகத்தில் பதற்றம் தொற்றி கொண்டது. அவன் விழிகளை நேருக்கு நேர் சந்திக்காமல் விழிகளை தாழ்த்திக் கொண்டவள், தன் மடியில் இருந்த ஹேண்ட் பேகை இறுக பற்றிக் கொண்டாள்.
தன்னிடம் எதையோ மறைப்பதால் தான் அவளிடம் இந்த தடுமாற்றம் என்பதை புரிந்து கொண்டவன், தற்காலிகமாக அந்த ஆராய்ச்சியை ஒத்தி வைத்து விட்டு அவளின் உடல்நிலையை முதலில் கவனிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
"சரி இறங்கு... வா உள்ளே போய் டாக்டரை பார்க்கலாம்!" என்று கதவைத் திறக்க போனான்.
"இல்லை மாட்டேன்... நான் உங்களுடன் எங்கேயும் வர மாட்டேன்!" என்று வர மறுத்தாள் அவள்.
"ஹேய்... நீ வலியில் துடித்து கொண்டே என்னுடன் வர மறுத்ததால் தான் உன்னை சும்மா பயமுறுத்தினேன் ஓகே. உன் ஹெல்த்தை செக் பண்ண தான் இங்கே ஹாஸ்பிடல் வந்திருக்கின்றோம்... வேறொன்றுமில்லை பயப்படாமல் இறங்கி வா!" என்று அவளை வற்புறுத்தினான்.
"நான் உங்களை நம்ப மாட்டேன்... நீங்கள் பொய் சொல்கிறீர்கள். என்னை உள்ளே அழைத்துச் சென்று என்னவோ செய்ய பார்க்கறீர்கள்!" என்றாள் விழிகளில் அச்சத்துடன்.
ஒருபுறம் அவளை நினைத்து கோபம் வந்தாலும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது அவனுக்கு. இன்று இந்த நாட்டு பெண்களின் நிலை இது தானே... இவள் என்ன செய்வாள்?
தனியாக செல்வது தான் பாதுகாப்பில்லை என்றால்... அறிந்தவர், அறியாதவர் யாருடனும் வெளியே தனியாக செல்வதும் பாதுகாப்பில்லை. எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று அக்கம்பக்கத்தவர் முதற் கொண்டு உறவினர் வரை யாரை நம்பவும் பயமாக இருக்கிறது பெண்களுக்கும், பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கும் என்றெண்ணி வருத்தமாக இருந்தது.
அவள் அவனையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ஆழ்ந்த மூச்செடுத்து நிதானமாக வெளியிட்டவன், அவள் கண்களை நேருக்கு நேர் நோக்கினான்.
"இங்கே பார்! நான் சொல்வதை அமைதியாக கேள். நீ நினைப்பது போல் உன்னை எதற்காகவும் நான் கடத்தவில்லை, தனியாக அமர்ந்து சாப்பிடக் கூட முடியாமல் ஏதோ ஒரு வலியில் நீ அவஸ்தப்பட்டு கொண்டிருந்ததை பார்த்ததால் தான்... உனக்கு உதவ முன் வந்தேன். அதே போல் வேலை வெட்டியில்லாமல் எந்த பெண் தனியாக மாட்டுவாள் அவளிடம் வம்பிழுக்கலாம் என்று அலைபவனும் நான் இல்லை. சொஸைட்டியில் மரியாதைக்குரிய இடத்தில் இருப்பவன் நான், என் பெயர் ரமணன். இதோ பார்... இது என்னுடைய கார்ட்!" என்று அவள் கையில் தன் கார்டை திணித்தான்.
அதை நெற்றி சுருங்க பார்வையிட்டவள், "இந்த கார்டுக்குரியவர் நீங்கள் தான் என்று... எப்படி நான் நம்புவது?" என்றாள் சந்தேகமாக.
"தேவை தான் எனக்கு..." என்று அலுத்துக் கொண்டவன், அவனுடைய டிரைவிங் லைசன்ஸ் ஐடியை எடுத்து காண்பித்தான்.
"போதுமா... இல்லை ஆதார் கார்ட், பான் கார்ட், வோட்டர் ஐ.டி எல்லாம் வேண்டுமா?" என்றான் நக்கலாக.
"இல்லை... இல்லை அதெல்லாம் வேண்டாம். ஆனால்..." என்று அவள் சந்தேகத்துடன் இழுக்கவும்,
"ப்ச்... இன்னும் என்ன?" என்றான் சலிப்புடன்.
"இல்லை... ஒரு பெரிய கம்பெனிக்கு ஓனர் என்றால் மட்டும் நீங்கள் மிகவும் நல்லவராகி விடுவீர்களா? உங்களை மாதிரி எத்தனை பணக்காரர்கள் தப்பு செய்து விட்டு கோர்ட் கேஸ் என்று அலைந்து இறுதியில் பணம் கொடுத்து அந்த தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறீர்கள்?" என்றாள் கேள்வியாக.
"அம்மா... தாயே... ஒட்டு மொத்த பணக்காரர்களும் நல்லவர்கள் என்று நான் வாதாட வரவில்லை. என்னை பொறுத்த வரை நான் நல்லவன், என் மனசாட்சியின் சொல் கேட்டு நடப்பவன்!" என்றான் அழுத்தமாக.
"அதை தான் நான் எப்படி நம்புவது?" என்று அவள் மீண்டும் கண்களில் சந்தேகத்துடன் வினவ, ரமணன் கடுப்பின் உச்சத்திற்கே சென்றான்.
"அப்படியே ஓங்கி ஓர் அறை விட்டேன் என்று வைத்துக் கொள்... வாயிலிருக்கும் பல் முப்பத்தியிரண்டும் கொட்டி விடும் ஜாக்கிரதை... பாவம் சின்ன பெண் தனியாக உடல் வலியில் சிரமப்படுகிறாளே என்று உதவ வந்தால்... குறுக்கு விசாரணையா நடத்திக் கொண்டிருக்கிறாய்? உன் நம்பிக்கைக்கும், பாதுகாப்புக்கும் உறவினர் யாரையாவது கூப்பிட்டுக் கொள்ளலாம் விவரம் சொல்லு என்றால் அதையும் சொல்லாமல், நல்ல வக்கணையாக வாய் கிழிய பேசுகிறாய் நீ...?" என்றான் அவளை முறைத்தபடி.
அவள் முகத்தில் சற்று முன்பிருந்த சந்தேகம் மறைந்து மீண்டும் பயம் வந்து அப்பிக் கொண்டது.
"ப்ச்... அப்பா! ரொம்ப மிரட்டாதீங்க... பாவம் அவங்க பயப்படறாங்க..." என்று அவளுக்கு பரிந்து வந்தாள் குழந்தை.
"நீ சும்மா இரு... உனக்கு ஒன்றும் தெரியாது. எவ்வளவு நேரமாக அந்த வலியை தாங்கி கொண்டு பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருக்கிறாள் பார். நாம் இவளுக்காக பார்த்தால்... இவள் நம்மையே சந்தேகப்படுகின்றாள். சரி போகட்டும் காலம் அப்படி இருக்கிறது என்று பொறுத்துப் போனால், என்னை மிகவும் சோதிக்கின்றாள்!" என்று உணர்ச்சி வேகத்தில் அவன் பின்னால் திரும்பி அக்குழந்தையிடம் நியாயம் பேச ஆரம்பித்தான்.
அதுவரை அவனை லேசான அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் இதயம், யாருமில்லாத பின் புறத்தை பார்த்து அவன் தனியாக பேச ஆரம்பிக்கவும்... மத்தளம் கொண்டு அடிப்பது போல் துடிக்க ஆரம்பித்தது.
விழிகள் தன் முழு அளவுக்கு பெரியதாக விரிய அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் அவள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro