Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

#1#

ரமணன்! அந்தக் குடிலின் உள்ளே கண்கள் மூடி மண்டியிட்டிருந்தான்.

அவன் கரங்களில் மலர்செண்டு வீற்றிருக்க, விழிகளில் கண்ணீர் மொட்டு துருத்திக் கொண்டிருந்தது.

அவன் முன்னே இருந்த சமாதியிலோ, சற்று முன்னர் அவன் ஏற்றி வைத்த மெழுகு தீபம் ஒன்று சுடர் விட்டு ஒளி வீசிக் கொண்டிருக்க சுற்றிலும் வாசனை மலர்களால் அவ்விடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இமைகளை திறந்தவன், உள்ளிருந்து வெளியேற துடித்த நீரை சிரமப்பட்டு விழிகளை அகற்றி விழுங்கி மீண்டும் உள் வாங்கினான்.

முகத்தில் சொல்லிலடங்காத வேதனை குடிக் கொண்டிருக்க தளர்ந்துப் போய் எழுந்தவனிடம் இருந்து மெல்லிய ஆதங்கப் பெருமூச்சொன்று வெளியேற, தன் கையிலிருந்த பூச்செண்டை அந்த சமாதியின் மீது அமைதியாக வைத்தான்.

அதனருகில் குனிந்து மென்மையாய் அந்த பீடத்தை ஒரு பூவை வருடுவதுப் போல் வாஞ்சையுடன் மெல்ல வருடிக் கொடுத்தவனிடம் இருந்து சட்டென்று அவனையும் மீறி உணர்வுகள் வெடித்துக் கிளம்ப, விழிகளில் பெருகிய நீர் மளமளவென்று அவன் கன்னங்களில் இறங்கியது.

தன் உணர்வுகளோடு போராடி அதைக் கட்டுப்படுத்த முயன்றவன் இமைகளையும், கை விரல்களையும் ஒருசேர இறுக்க மூடி அதில் வெற்றியும் கண்டான்.

வேகமாக விழிகளைத் துடைத்து எறிந்துவிட்டு, தாங்க முடியா வலியுடன் விரைந்து அந்த இடத்தை விட்டு அகன்றான் ரமணன்.

அந்நேரம் காற்று பலமாக வீச, அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மெழுகு தீபம் நின்று நேராக ஒளிர இயலாமல் வீசும் புயல் காற்றிற்கேற்ப மெல்ல அலைமோத துவங்கியது.

ஆனால் அடுத்த நிமிடமே மிகவும் அதிசயதக்க வகையில் அத்தீபம் எவ்வித ஆர்பாட்டமுமின்றி அமைதியாக நேராக எரிய ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் காற்றின் வேகம் லேசாக மட்டுப்படவும், ரமணன் வைத்து விட்டு சென்ற மலர்செண்டிலிருந்த மலர்கள் எல்லாம் மெல்லமாக யாரோ வருடிக் கொடுப்பது போல் தலைமுடிக் கலைவது போன்றே கலைந்து கலைந்து நேரானது.

பிறகு அதன்மீது ஏதோ பாரம் அழுந்தியது போல் சற்று நேரம் அப்படியே அமுங்கி கிடந்தது.

தோட்டத்திலிருந்து ரமணன் வேகமாக வீட்டினுள்ளே வருவதைக் கண்ட சமையல்காரி சரளா, "சார்! டிபன் எடுத்து வைக்கட்டுங்களா?" என்று அவனிடம் பவ்யமாக வினவினாள்.

அவளை எரித்து விடுவதைப் போல் பார்த்து வைத்தான் அவன். அதைக் கண்டவளுக்கோ உடலோடு சேர்ந்து உள்ளமும் நடுங்கியது.

"அறிவில்லை உனக்கு?" என பட்டென்று பாம்பாய் மாறி சீறியவன், "எத்தனை நாட்களாக இங்கே வேலைப் பார்க்கிறாய்?" என்று அதட்டினான்.

"மூ... மூ... மூன்று வருடங்களாக!" என்றாள் அவள் வார்த்தைகளில் தந்தியடித்தபடி.

"மூன்று... முழுவதுமாக மூன்று ஆண்டுகளாக இந்த வீட்டில் வேலைப் பார்க்கிறாய் நீ... ஆனால் என்னவோ நேற்று வந்தவள் போல் முட்டாள்தனமாக கேள்வி கேட்டுக் கொண்டு நிற்கிறாய். முதலில் உன்னை யார் இன்று இங்கே வரச் சொன்னது, இந்த நாளில் யாரும் வீட்டுக்குள்ளே கால் எடுத்து வைக்க கூடாது என்று சொல்லியிருக்கிறேனா... இல்லையா? பிறகு எவ்வளவு தைரியமிருந்திருந்தால் நீ இங்கே வந்திருப்பாய்? முதலில் வீட்டை விட்டு வெளியே போ, போ... என்கிறேன் இல்லை..." என்று வெறிப்பிடித்தவனாய் உருமாறி ரமணன் கத்த, பயந்து நடுங்கியவள் நொடி கூட தாமதிக்காமல் அரண்டுப் போய் வெளியே ஓடினாள்.

அடுத்த கணம் வாசல் கதவை அறைந்துச் சாற்றியவன், மடமடவென்று மாடியேறினான்.

அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டவனுக்கு ஏனோ உள்ளிருக்கும் ஆத்திரம் மட்டுப்பட மறுத்தது.

நேரமாக நேரமாக இயலாமையால் வெறி அதிகமாக கைக்கு கிடைத்ததையெல்லாம் தூக்கி சுவற்றில் விசிறியடிக்க ஆரம்பித்தான். நிலைக் கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பம் அவனுடைய கோபத்தை பன்மடங்காக்க, தன் முழுப் பலத்தையும் கைக்கு கொண்டு வந்து கண்ணாடியை நோக்கி ஓங்கி குத்தினான். அவன் வேகம் தாங்க இயலாது சில்லு சில்லாக சிதறிய கண்ணாடி துண்டுகள் எல்லாம் அறையின் தரையெங்கும் விழுந்து துகள்களாய் மாறிக் காட்சியளித்தது.

வலக்கை முஷ்டியில் இருந்து கண்ணாடி கிழித்ததினால் இரத்தம் வழிய ஆரம்பிக்க விழிகளுக்கு நேராக அதை உயர்த்தியவனின் இதழ்களில் இருந்து மெல்ல இகழ்ச்சியான புன்னகை ஒன்று பிறந்தது. சற்று நேரம் உணர்வு மரத்துப் போய் அதையே வெறித்துப் பார்த்தபடி சிலையாக நின்றான் ரமணன்.

எங்கோ தொலைவில் தொலைப்பேசி ஒலிக்கும் சத்தம் அவனை மெதுவாக கலைக்கவும் மெல்ல விழிகளைத் திருப்பியவன், போனருகே சென்று ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தான்.

புருவம் சுளித்தபடி சில நொடிகளை அமைதியாக கடத்தி விட்டு, "ஹலோ!" என்றான் கம்பீரமாக.

"சார்! நான் கவுசிக் பேசுகிறேன். சாரி சார்! ஒரு எமர்ஜென்சி... அதனால் தான் வேறு வழியில்லாமல் போன் செய்தேன்..." என்றான் அவன் தயக்கத்துடன்.

முகத்தில் எரிச்சல் ரேகை பரவ, "ப்ச்... மென்று விழுங்காமல் நேரடியாக விஷயத்துக்கு வா மேன்!" என்றான் இவன் அதிகாரமாக.

"வந்து சார்... இன்று கம்பெனியின் தயாரிப்பு பிரிவில் வேலை நடந்துக் கொண்டிருந்தப் பொழுது ஒரு எம்ப்ளாயி மெஷினில் தவறுதலாக கையை விட்டுவிட்டான்... இடதுகை துண்டாகி விட்டது. உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டோம், அதை தான் உங்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்று..." என இழுத்தான்.

"ஹு ஈஸ் தி ப்ளடி ஹெல்? முட்டாளா அவன்? மெஷினை எப்படி ஆப்ரேட் பண்ண வேண்டும் என்று தெரியாதா அவனுக்கு? இவனுங்க மெஷின் ஆப்ரேட்டிங் கற்றுக் கொள்வதற்கு என்று தானே கம்பெனியின் செலவிலேயே தனியாக ஒரு ட்ரைனிங் கோர்ஸ் வேறு கொடுக்கிறோம். அது பற்றாது என இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சேஃப்டி பிரிகாஷன்ஸ் புரோகிராம்ஸ் வேற, ச்சை..." என்று சலித்தவன்,

"ஹாஸ்பிடலில் அவன் எத்தனை நாட்கள் இருக்கின்றானோ... அதற்கான முழுசெலவையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி விடு. அவனுடைய ட்ரீட்மென்ட் முடிந்த அடுத்த நிமிடம் அவன் சென்டில்மென்ட் அமௌன்ட் முழுவதையும் கொடுத்து வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்து விடு. கொஞ்சம் கூட பொறுப்போ, கவனமோ இல்லாதவன் இனி என் கம்பெனிக்குத் தேவையில்லை!" என்றான் எரிச்சலோடு.

"பட் சார்... ஹீ ஈஸ் எ சின்சியர் எம்ப்ளாயி. ஏதோ பர்சனல் பிராப்ளம் இருக்கும் போலிருக்கிறது, அதனால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில் தான் வேலையில் கவனக்குறைவாக இருந்திருக்கிறான் சார்!"

"ஸோ வாட்? யாருக்குத் தான் பிரச்சினை இல்லை... ஏன் நான் இல்லை...?" என்று வேகமாக தொடங்கியவன் மேலே பேசாது அமைதியானான்.

விழிகளை இறுக மூடி சில நொடிகளில் தன்னை நிதானப்படுத்தியவன், "ஓகே மற்றதை நாளை நேரில் பேசிக்கலாம். நீங்கள் எஸ்.ஐக்கு இன்பார்ம் செய்து ஹாஸ்பிடல் வரச் சொல்லி அந்த பையனிடம் இது நேச்சுரல் ஆக்ஸிடன்ட் தான் என்று பார்மலாக ஒரு ஸ்டேட்மென்ட்ல சைன் வாங்கிடுங்க!" என்றான்.

"ஓகே சார்! தாங்க் யூ!" என்று போனை வைத்தான் கௌசிக்.

ரிசீவரை அதன் தாங்கியில் கிடத்தியவன் புருவத்தை நெறித்தபடி கட்டிலில் அமர்ந்தான்.

'பெர்சனல் பிராப்ளமாம் சார்!'
ஹும்... என்று இகழ்ச்சியாய் இதழ்களை வளைத்தான் ரமணன்.

______________________________________

இந்நாவல் தற்பொழுது புத்தகமாக கிடைக்கின்றது.

Story was removed, only few sample chapters available here.

"சின்ன சின்ன பூவே" தற்பொழுது அமேசான் கிண்டிலில் முழுக்கதையாக கிடைக்கிறது. அதில் உறுப்பினராக உள்ளவர்கள் இலவசமாக படித்து மகிழலாம். இணைப்பிற்கு என்னுடைய ப்ரொபைலில் உள்ள தகவல் பலகையை அணுகவும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro