5
அன்று.......
காலேஜ் இரண்டாம் வருடம் ஆரம்பித்திருந்தது.
" மக்களே, இன்னைக்கு நம்ம எல்லோரும் செகண்ட் இயருக்கு ப்ரொமோசன் வாங்கியிருக்கோம். இப்போ நியூ பேட்ச் வர போகுது. நம்ம சீனியர்ஸ் எல்லாம் எப்படி நம்மள அன்பா, வரவேற்றாங்களோ அதே போல நம்மளும் வரப்போற ஜூனியர்ஸ வரவேற்கனும்" என்று மீனாக்ஷியின் வகுப்பு மாணவன் சாலமன் கூற எல்லோரும் அவன் கூறியதை கேட்டு கைதட்ட ஒரு சிலர் மட்டும் அமைதியாக இருந்தனர்.
" அதெப்படி சாலமன், பர்ஸ்ட் இயர் பசங்கள எப்படி ராகிங்க் பண்ணாம இருக்குறது. நாங்க எல்லாம் கண்டிப்பாக ராக்கிங்க் பண்ணுவோம்" என்று க்ரிஷ் கூற அவனை வகுப்பில் இருந்த ஒரு சிலரை தவிற மற்ற எல்லோரும் ஒரு மாதிரியாக பார்த்தனர்.
" இங்கப்பாரு க்ரிஷ், இந்த காலேஜ்ல இனிமே ராகிங்க் என்ற ஒன்னே இருக்க கூடாதுன்னு நினைக்கிறோம். உன்னால இதுக்கு உதவ முடியலன்னாலும் உபத்திரவம் இல்லாம இரு" என்று கூற க்ரிஷிற்கு கோவம் வந்தது.
" மிஸ்டர் சாலமன், நீங்க ஒன்னும் செகண்ட் இயரோட ஸ்டூடண்ட் ரெப்ரசண்டேடிவ் கிடையாது. மேடை ஏறினவன் எல்லாம் தலைவன் ஆக முடியாது" என்று கூற க்ரிஷிற்கும் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தனர். சாதாரணமாக ஆரம்பித்த வாய்த்தகராறு கைகளப்புக்கு செல்லப்பார்க்க மீனாக்ஷியின் தோழி ரேஷ்மா
" காய்ஸ், காய்ஸ் பீ கூல். நம்ம கைய தூக்கி வோட் பண்ணலாம். யாரு யாரெல்லாம் ராகிங்க் பண்ணலாம்னு சொல்றாங்க, யாருக்கெல்லாம் விருப்பமில்லன்னு சொல்றாங்கன்னு பார்க்கலாம்" என்று கூற வோட்டிங்க் ஆரம்பமானது. வகுப்பில் இருந்த அறுபது மாணவர்களில் 27 பேர் ராகிங்க் வேண்டாம் என்றும் 12 பேர் ராகிங்க் வேண்டும் என்றும் கூற மீதி 21 பேர் எதுவுமே கூறவில்லை. மீனாக்ஷி எதுவுமே கூறாமல் இருக்க அவளை கோபத்துடன் பார்த்த க்ரிஷ் தனது கதிரையை தள்ளிவிட்டு காண்டீன் சென்றான். இவனின் கோபம் எதற்கு என்று அறிந்த ரேஷ்மா மீனாக்ஷியிடம்
" ஏன்டி எரும, அவந்தான் எப்போமே உன்கூட ரொம்ப க்லோஸா இருக்கானே. அப்புறம் ஏன் நீ அவனுக்கு சப்போர்ட்டா கைய தூக்கல" என்று கூற மீனாக்ஷியின் பதில் ரேஷ்மாவை தலை சுற்ற வைத்தது. மீனாக்ஷியை குறும்பாக பார்த்தவள்
"இது அவனுக்கு தெரியுமா? சட்டு புட்டுனு போய் சொல்லிடு. இல்லைன்னா வேற மாதிரி ஆகிட போகுது" என்று கூறியவள் அவளை வலிக்காமல் கிள்ள இங்கு மீனாக்ஷியின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது.
காலேஜ் விட்டு வீடு சென்றான் க்ரிஷ்.அவர்கள் வீட்டில் அவனுடைய அத்தை வீட்டினர் பலர் கூடியிருக்க ராதா பட்டுப்புடவை அணிந்து வந்தவர்கள் முன்னிலையில் இருந்தாள். என்ன நடக்கின்றது என்பதை அறியாதவன் அங்கிருந்த பக்கத்து வீட்டு சில் வண்டு ஒன்றை கூப்பிட்டான்.
"ஹேய் வண்டு, என்ன நடக்குது இங்க" என்று கேட்க அதற்கு அந்த குழந்தை
" பிக் பாய், இன்னைக்கு ராதா அக்காவ பொண்ணு பார்க்க வந்திருக்காங்க" என்று கூற அவனுக்கு ஆரம்பத்தில் சந்தோசமாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை யார் என்பதை உணர்ந்தவனின் முகம் அஷ்டகோனலாகியது. வந்தவர்கள் எல்லோரும் கலைந்து செல்ல க்ரிஷ் யாரிடமும் எதுவும் பேசாமல் தனதறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டான்.
வழமை போல அவனின் தந்தை அவனிடம் எதுவும் பேசவில்லை. அவர் எப்போதும் போல கரார் பேர்வழியாகவே இருந்தார். க்ரிஷ் பத்தாவது படிக்கும் போது தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச படம் பார்த்து பாடசாலையில் மாட்டிக்கொண்டான். அன்றிலிருந்து க்ரிஷிற்கு அவர் பாசம் என்பதை கண்டிப்பின் மூலமே காட்ட தொடங்கினார். அவனுடன் எதுவும் பேச வேண்டும் என்றால் ராதா மூலமாகவே கூறுவார்.
க்ரிஷ் கோபமாகத்தான் அறைக்குள் சென்றான் என்பதை புரிந்தகொண்ட ராதா அவனின் அறைக்குள் சென்றாள்.
" என்னடா ஒரு மாதிரி இருக்க" என்று கேட்க அவன் உடனே கோபத்துடன்
" இந்த வீட்டுல நான் எதுக்குமே வேண்டாதவன் ஆகிட்டேன்ல. உன்ன பொண்ணு பார்க்க வர்றத கூடவா என்கிட்ட முன்னாடி சொல்லமாட்டாரு?" என்று கவலையாக கூற ராதா அவனை பாவமாக பார்த்தாள்.
" டேய் அத்தை திடீரென்று வந்துட்டாங்கடா. எங்களுக்கும் எதுவுமே தெரியாது. அப்பாதான் இன்னைக்கு உன்னோட செகண்ட் இயர் முதல் நாள் என்பதால எப்படியும் நீ காலேஜ்ல இருந்து நேரத்தோட வந்திடுவேன்னு சொன்னாரு. ஆனா நீதான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடிச்சி" என்று கூறினாள். அவள் கூறிய பதிலிலும் க்ரிஷ் சமாதானம் ஆகாததை கண்டவள் அவனின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டாள்.
" க்ரிஷ் எங்கிட்ட ஏதும் சொல்லனும்னு நினைக்கிறியா" என்று கேட்க அவன்
" நான் காலேஜ் முடிச்சதுக்கு அப்புறமாத்தானே உன் கல்யாணம்னு அன்னைக்கு சொன்ன. ஆனா இப்போ எதுக்கு இப்படி அவசரமா பண்ணனும்?" என்று கேட்க அவனின் கேள்வி அபத்தமானது என்பது அவனுக்கே புரிந்தது. இவனின் கேள்வி தன் திருமனம் பற்றி அல்ல என்றும் தான் திருமனம் செய்து கொள்ள போகின்ற நபரை பற்றியது என்பதையும் புரிந்து கொண்டாள் ராதா.
" க்ரிஷ் உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா?" என்று கேட்க அவன் உடனே
" எனக்கு நீ மாமாவ கல்யாணம் பண்றதுல கொஞ்சம் கூட இஷ்டமில்லைக்கா. அவங்கதானே பொண்ணு கேட்டு வந்தாங்க. நம்ம ஏதும் காரணம் சொல்லி இந்த கல்யாணத்த நிறுத்திடலாம்" என்றான். அவனின் முகத்தை கைகளில் ஏந்தியவள்
" இது ஒன்னும் அர்ரேஞ்ட் மேரேஜ் இல்லடா. நானும் மாமாவும் லவ் பண்றோம். அப்பாக்கு லவ் மேரேஜ்னா பிடிக்காதுன்னு தெரியும். அதனாலதான் மாமா அவங்க அம்மாகிட்ட என்ன பொண்ணு கேட்க ஏற்பாடு பண்ணியிருக்காரு. மாமா இன்னும் இரண்டு வாரத்துல மேல்படிப்புக்காக ஸ்காலர்ஷிப்ல லண்டன் போறாறு. அவரு போய் வர எப்படியும் மூணு வருசம் ஆகும். அதுக்கு அப்புறமாத்தான் எங்க கல்யாணம்" என்று கூற அவளின் கல்யாணம் என்ற சொல்லில் அவன் கவனம் பதிந்தது.
அவன் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பதிலேயே அவனுக்கு இந்த திருமணத்தில் துளியும் இஷ்டமில்ல என்பதை புரிந்தவள் தனது போனை எடுத்து யாருக்கோ கால் செய்தாள்.
" ஹலோ எப்படி இருக்கீங்க"
" ஹலோ பொண்டாட்டி, அம்மா வந்தாங்களா? எப்படி என்னோட சர்ப்ரைஸ்" என்று அவளின் மாமா கூற
" அம்மா வந்தாங்க. ஆனா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. தயவு செஞ்சி என்மேல கோபப்படாதீங்க. உங்களுக்கும் என் தம்பிக்கும் அவன் பத்தாவது படிக்கிறப்போ இருந்தே ஒரு பிரச்சினை இருக்கு. அவனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. அவன் விருப்பம் இல்லாம நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்" என்று கூற மறுமுனையில் இருந்து வரும் பதில் கேட்டு அவள் முகம் கலையிழந்தது.
"இங்க பாரு ராதா, அவன் ஒன்னும் விரல் சூப்புற பாப்பா இல்லை. இன்னமும் தம்பி தம்பின்னு சொல்லிக்கிட்டு சுத்தாத. அவன் மேல எனக்கு என்ன சொந்த பகையா. அவன் பண்ண காரியத்த எப்படி மூடி மறைக்கிறது. அதுல அவன் மட்டும் சம்பந்தபடல்ல. அவனோட சேர்த்து ஏழு பேரு மாட்டினாங்க. இவன் ஒருத்தனுக்காக அந்த ஏழு பேரையும் விட சொல்றியா. அந்த மொத்த கூட்டத்திலயும் இவன் ஒருத்தந்தான் கொஞ்சம் நல்லவன். மத்த எல்லோரும் அப்பவே சிகரட், தண்ணினு சுத்துறவனுங்க. நான் பண்ணது கரக்ட்தான் ராதா" என்று கூற அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை.
" இங்க பாருங்க மாமா, நான் தெளிவா சொல்ரேன். க்ரிஷிற்கு விருப்பமில்லாம நான் யாரையும் கட்டிக்க மாட்டேன். எனக்கு அவன் தான் உலகம். நான் உங்கள ஏமாத்திட்டேன்னு நினைச்சீங்கன்னா என்ன மன்னிச்சிடுங்க" என்று கூறி மறுமுனையின் பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் செய்து தனது மொபைலை சுவிட்ச் ஆப் செய்தவள், அவளது மொபைலை க்ரிஷின் மேசையிலேயே வைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றாள்.
பத்தாவது படிக்கும் போது க்ரிஷும் அவனது மோசமான நடத்தை கொண்ட ஏழு நண்பர்கள் சேர்ந்து ஆபாச படம் பார்த்து ஸ்கூல் வாட்ச்மேனிடம் மாட்டினர். அப்போது அந்த பாடசாலையில் ஒழுக்காற்று குழுவின் பழைய மாணவர்கள் சார்பில் க்ரிஷின் மாமா சுரேஷ் இருந்தார். தன்னை எப்படியும் தன் மாமா இதில் இருந்து காப்பாற்றிவிடுவார் என்று அவன் நினைத்தான். ஆனால் இவனை காப்பாற்றுவதை விட அந்த ஏழு பேரையும் பாடசாலை விட்டு நிறுத்த சரியான சந்தர்ப்பம் அமைந்ததை எண்ணி, இந்த பிரச்சினையை சம்பந்தபட்டவர்களின் வீட்டாருக்கு தெரிவித்து அந்த ஏழு பேரையும் பாடசாலை விட்டு விலக்கினர். க்ரிஷ் ஒரளவு நன்றாக படிப்பான் என்பதால் அவனுக்கு எச்சரிக்கை மற்றும் மன்னிப்பு கடிதத்துடன் முடித்துக்கொண்டனர். அந்த வயதில் எல்லோரும் செய்கின்ற தவறுதான் என்ற போதிலும் அது வெளியில் தெரிந்ததால் க்ரிஷிற்கு அவமானமாக இருந்தது. அன்றிலிருந்தே அவனுக்கு சுரேஷை பிடிக்காது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro