32
ரூபினி சென்று சிறிது நேரத்தில் க்ரிஷ்ஷின் கைபேசி அழைக்க அதில் புது இலக்கத்தில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. புது இலக்கத்தில் இருந்து யார் தனக்கு அழைப்பு விடுப்பது என யோசித்த வண்ணம் அழைப்பை ஏற்றவன்
" ஹலோ க்ரிஷ்" என்று ஒரு பெண்ணின் தேன் பாயும் குரல் ஒலிக்க, அது மீனாக்ஷியின் குரல்தான் என்று அடையாளம் காண அவனுக்கு சில மைக்ரோ செக்கன்கள் போதுமானதாக இருந்தது. என்னதான் கடந்த சில நாட்களாக அவன் மீனாக்ஷியை நேரில் சந்தித்து இருந்தாலும் அவனும் அவளும் மட்டும் தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை. மீனாக்ஷி தனக்கு தனியாக கைபேசியில் அழைப்பை எடுத்திருக்கின்றாள் எனில் அதில் ஏதோ ஒரு பெரிய விடயம் இருக்கும் என்பது அவனுக்கு புரியாமல் இல்லை.
" சொல்லுங்க மிஸஸ் ஷக்தி" என்று கூற மறுமுனையில் மீனாக்ஷிக்கு தொண்டை அடைத்தது. என்னதான் க்ரிஷ் மீது அவள் கோபத்தை காட்டினாலும் அவன் மீது அவள் கொண்ட காதல் மிகப்பெரிது. கடந்த சில நாட்கள் முன் வரை ஷக்தியின் அன்பால் க்ரிஷ்ஷை மறந்திருந்தவளுக்கு அவனின் துரோகத்தால் மறுபடி க்ரிஷ் அவள் மனதில் இடம்பிடித்துவிடுவானோ என்ற பயம். இது எங்கே சென்று முடியும் என்று அவளுக்கு தெரியவில்லை. அதே நேரம் இதை இப்படியே விட்டால் அவளுக்கு க்ரிஷ் மீது (கள்ளக்)காதல் வந்துவிடுமோ என்ற பயமே மேலோங்கி காணப்பட்டது. ஆம் கள்ளக்காதல்தான். திருமணத்திற்கு முன் வந்தால் அது காதல். அதே காதல் திருமணத்தின் பின் வேறொருவருடன் வந்தால் கள்ள காதல். சமூகம் வகுத்த சட்டம் அது. திருமணம் ஆனால் தன் துணையை மறந்துவிடுபவர்கள்தான் அதிகம். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற கணக்கு தீரும் வரை தங்கள் துணையை உருகி உருகி காதலிப்பவர்கள் அதன் பின் கிணற்று தண்ணீரை யார் கொண்டு போகப்போகின்றார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு. ஒரு பெண்ணுக்கு திருமணத்தின் பின் காதலை காட்டாமல் விட்டால் கூட பரவாயில்லை. அவள் காதலின் சுவை அறியாமல் வாழ்ந்துவிடுவாள். ஆனால் காதலின் சுவையை அந்த தொன்னூறு நாட்கள் காட்டியபின் அதை கொடுக்க தவறுவதுதான் இங்கு மிகப்பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். ஆம், உள்ளத்தில் கள்ளம் உள்ளவனுக்கு அந்த வழி ஒன்று போதும். தன் மாயாஜால பேச்சால் பெண்களை தன் வழிக்குள் கொண்டு வர.
" நீ ஏன் க்ரிஷ் அந்த பிரச்சினைக்கு அப்புறம் என்ன பார்க்க வரல்ல. என் போட்டோவ நீ கேட்ட. நான் உனக்கு அத அனுப்பினேன். இது எனக்கும் உனக்குமான ப்ராப்ளம். நமக்குள்ள ஏன் மத்தவங்க வந்தாங்க? நம்மல ஏன் அவங்க பிரிக்கனும்? அப்போ அது நம்ம வாழ்க்கை. ஆனா எல்லோருமா சேர்ந்து அத பிரிச்சிட்டாங்க. எனக்கு வலிக்குதுடா. இன்னைக்கு சிவா மட்டும் இல்லைன்னா நான் உன் பின்னாடியே வந்திருப்பேனோ என்னவோ" என்றவள் சிறிது ஆழமாக மூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
" நடந்தது நடந்திடிச்சி க்ரிஷ். ஷக்தி என் மேல உசிரா இருக்காரு. என்னதான் அவரு நம்ம காதல அழிச்சிருந்தாலும் என்ன இப்போ ரொம்ப சந்தோசமா வெச்சிருக்காரு. நான் எது சொன்னாலும் கொஞ்சம் கூட யோசிக்காம செஞ்சிடுவாரு. என்னால அவர விட்டு வர முடியாது க்ரிஷ். ஆனா உன் வாழ்க்கை நல்லா இல்லாம இருக்கும் போது என்னால சந்தோசமா வாழ முடியாது. உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்.அதுதான் என்னோட இப்போதைய ஆசை. நீ சந்தோசமா வாழ்றத நான் பார்க்கனும். காதலிக்கிறவங்க கூட சேர்றது மட்டும் காதல் இல்லை. நம்ம அவங்க கூட சேர்ந்து வாழ முடியாம போனா கூட அவங்க சந்தோசமா வாழ்றத பார்த்து நம்ம சந்தோசமா இருக்கிறது கூட காதல்தான். நான் இப்போ இரண்டாவது நிலமையில இருக்கேன். என்னால உன்ன இனிமேலும் காதலிக்க முடியாது. ஏன்னா உன்கூட இருந்த காதல் முடிஞ்சி இப்போ ஷக்தி கூட என் காதல் ஒட்டிக்கிச்சி. அதுக்காக உன்மேல அக்கறை இல்லைன்னு இல்ல. உன் வாழ்க்கை நல்லா இருக்கனும். அதுவும் எனக்கு முக்கியம்" என்று கூறினாள்.
மறுமுனையில் க்ரிஷ்ஷிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. மீனாக்ஷி இப்படி வெளிப்படையாக பேசுவாள் என்று அவன் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. ரூபினி கூறும் போது கூட நம்பாவதவன் மீனாக்ஷி இப்போது பேசும் போது நம்பிவிட்டான். அதுதான் மீனாக்ஷியின் மனம் எப்படி இருக்கும் என்பது. இப்போது அவன் மீனாக்ஷியை தன்னுடன் அழைத்தால் அவள் கண்டிப்பாக வருவாள் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அதை அவன் செய்தால் அவனை விட கேடு கெட்டவன் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் புரிந்தது. அதிலும் குறிப்பாக ராதா அவனை மன்னிக்க மாட்டாள் என்று தவறாக எண்ணினான். ஆம், இப்போதையை சூழ்நிலையில் க்ரிஷ்ஷும் மீனாக்ஷியும் மீண்டும் ஒன்றினைய நினைத்தால் அவளே முன் நின்று அதை செய்து முடிப்பாள் என்பது அவனுக்கு தெரியாமல் போனது. அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. அவனுக்கு அது தெரிந்திருந்தால் ஒரு வேலை அவன் தவறான (?) முடிவுக்கு சென்றிருந்தாலும் சென்றிருப்பான்.
" மீனாக்ஷி, நடந்தது நடந்து போச்சி. இனிமே அதைப்பத்தி பேசி எதுவுமே ஆக போறதில்ல. என்ன இருந்தாலும் நீ இப்போ எனக்கு அண்ணி முறை. அண்ணி முறை என்பது அம்மா மாதிரி. பழச மறந்துட்டு நீ வாழ ஆரம்பிச்சி பல நாள் ஆகுது. ஆனா இப்போ புதுசா ஒரு பூதம், அதான் ஷக்திதான் இது எல்லாத்துக்கும் காரணம் என்று தெரிய வந்ததும் உன்னால அத ஏத்துக்க முடியல. சரி எது எப்படியோ. நீயும் ஷக்தியும்தான் சேரனும் என்பது கடவுளோட சித்தம். நீயாச்சும் நல்லா இரு" என்றான்.
" நான் நல்லா இருக்குறதும் நல்லா இல்லாம போறதும் உன்கையிலதான் இருக்கு க்ரிஷ். அது பத்தி பேசத்தான் நான் உனக்கு கால் பண்ணேன். இன்னைக்கு ஈவ்னிங்க் ஆறு மணிக்கு நான் அனுப்புற அட்றஸுக்கு வந்திடு. அங்க வெச்சி பேசிக்கலாம்" என்றவள் காலை கட் செய்து அவனுக்கு தனது வீட்டு லொகேசனை செயார் செய்தாள். அதே நேரம் ராதாவுக்கும் கால் செய்தவள் க்ரிஷ்ஷிடம் அவள் பேசியதை கூறி ராதாவையும் வீட்டுக்கு அதே நேரத்தில் வருமாறும் கூறினாள்.
இருவருக்கும் கால் செய்து பேசியவள் இன்று அவள் வீட்டில் நடக்க போகும் கலோபரத்துக்கு தூபம் போட போகும் நபரான ரேஷ்மாவிற்கு கால் செய்தாள்.
" ஹலோ ரேஷ்மா, நான் மீனாக்ஷி. இன்னைக்கு நம்ம வாழ்க்கை பத்தி பேசி முடிவு பண்ணிக்கலாம். ஆறு மணிக்கு என் வீட்டுக்கு வந்திடு" என்றவள் மறுமுனையில் அவளுக்கு பேசக்கூட அவகாசம் தராமல் அழைப்பை துண்டித்தாள்.
மாலை ஆறு மணி. ஒவ்வொருவர் மனதிலும் வெவ்வேறான எண்ண ஓட்டங்கள். சுரேஷும் ராதாவும் எல்லோருக்கும் முதலில் வந்திருக்க க்ரிஷ் அவர்களின் பின் வந்தான். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஷக்தி அங்கு ராதா மற்றும் க்ரிஷ்ஷை கண்டதும் அவன் உள்ளம் திக் திக் என்று அடித்துகொண்டது. காரணம் ஒரு வேலை மீனாக்ஷி க்ரிஷ்ஷுடன் செல்ல போவதாக கூறினாள் அவனால் எதுவுமே கூற முடியாது. ஆனால் மீனாக்ஷி இல்லாத ஒரு வாழ்க்கையை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு விடயத்தில் மட்டும் அவன் உறுதியாக இருந்தான். அதுதான் இன்று மீனாக்ஷி என்ன முடிவெடுத்தாலும் அதை எதிர்த்து அவன் எதுவுமே பேசுவதில்லை என்று.
எல்லோரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருக்க ராதா மட்டும் க்ரிஷ்ஷை அன்போடு பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில் ஒரு தாய் தன் சேயை பார்க்கும் பார்வை இருந்தது. ஆனால் ராதவிற்கும் மனதில் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அதுதான், க்ரிஷ் தங்கள் மேல் உள்ள கோபத்தில் மீனாக்ஷியுடன் சேரப்போவதாக கூறிவிடுவானோ என்று. சுரேஷை பற்றி கூறவே தேவையில்லை. அவனால் க்ரிஷ்ஷை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. ஷக்தி செய்த துரோகம் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அவனுக்கு கூட அங்கு சிறியளவு மன்னிப்பு கிடைக்க வாய்ப்பு இருந்த்தது. ஆனால் சுரேஷ் செய்தது ஷக்தி மற்றும் க்ரிஷ்ஷை தவிற வேறு யாருக்குமே தெரியாது. அவன் மனமோ க்ரிஷ்ஷிடம் மன்னிப்பை வேண்டி நின்றாலும் அவனால் அதை பகிரங்கமாக மற்றவர் முன் கேட்க முடியவில்லை. காரணம் ராதாவுக்கு அவன் செய்த செயல் எதுவுமே தெரியாது என்பதால். யாரை மன்னித்தாலும் க்ரிஷ் சுரேஷை மன்னிக்க தயாராக இல்லை. அதன் காரணம் ஏன் என்பது கூட எல்லோருக்கும் தெரியும். சுரேஷுக்கு அவன் கொடுக்கும் தண்டனை, அதாவது அவனுக்கு தண்டனை எதுவுமே கொடுக்காமல் இருப்பதே அவனுக்கு மிகப்பெரிய தண்டனையாக இருந்தது.
இவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருக்க ரேஷ்மாவும் அங்கு வந்து சேர்ந்தாள். ரேஷ்மா இங்கு எதற்காக வந்தாள் என்பது மீனாக்ஷியை தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro