Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3

ஒரு வாரம் கழித்து,

" மச்சான், இந்த வருசம் நடக்க போற இண்டர் காலேஜ் கிரிக்கட் டோர்னமண்டுக்கு நம்ம காலேஜ் சைட்ல ஒரு பவுலர் மிஸ்ஸிங்க்டா" என்று கூறிய தன் நண்பனை கவலையுடன்  பார்த்தான் ஷக்தி. அவனும் அதே யோசனையில்தான் இருந்தான்.

" ஷக்தி, நம்ம க்ரிஷ் சூப்பரா ஸ்பின் பவுலிங்க் போடுவான். ஃபீல்டிங்க் கூட செம்மயா பண்ணுவான். நான் அவனோட ஸ்கூல் மேட்ச் சிலது பார்த்துக்கிறேன். ஆனா ஃபர்ஸ்ட் இயர் பையன நம்ம உடனே டீம்ல சேர்த்துக்கிட்டா இந்த செகண்ட் இயர் பசங்க கேள்வி கேட்பானுங்க. ஏன்னா நம்ம செகண்ட் இயர் சுந்தருக்கு அவன் வந்த உடனே சான்ஸ் கொடுக்கல்ல. நீ இதுல தலையிட்டி சொன்னின்னா செகண்ட் இயர் பசங்க கேட்பாங்கடா" என்று கூற ஷக்தி தன் நண்பன் கூறியதை மனதில் வைத்துக்கொண்டான்.

தனது வகுப்புக்குள் சென்ற க்ரிஷ் மீனாக்‌ஷியை தேடினான்.அவள் இன்னும் காலேஜ் வரவில்லை என்பது தெரிந்தவன் தன் அருகில் இருந்த நண்பர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தான். முதல் வகுப்பு ஆரம்பமாகும் வேலையில் சரியாக மீனாக்‌ஷி வகுப்பு வர அவளை பார்த்து க்ரிஷ் சினேகமாக புன்னகைத்தான்.

பாடங்கள் முடிந்ததும் மதிய உணவுக்காக ஒரு சிலரை தவிர்த்து மற்ற எல்லோரும் கேன்டீன் செல்ல க்ரிஷ் தனது அக்கா செய்து கொடுத்த உப்புமாவை கையில் வைத்து அதை கவலையாக பார்த்துக்கொண்டிருந்தான். இவன் உப்புமாவை கையில் வைத்துக்கொண்டு ஏதொ யோசிப்பதை உணர்ந்த மீனாக்‌ஷி

" ஹேய் என்ன க்ரிஷ், உப்புமா பிடிக்காதா?" என்று கேட்க அவளை நோக்கியவன்

" ச்சேச்சே அப்படி ஏதுமில்ல. இது வேற யோசனை" என்றான். க்ரிஷிற்கு தன் அக்காவின் வாழ்க்கை தன்னால் தாமதமாகி போகின்றது என்ற கவலை. ஆனால் அதை மீனாக்‌ஷி அவன் உப்புமா பிடிக்காமல்தான் இப்படி இருக்கின்றான் என தவறாக புரிந்துகொண்டாள்.

" ஹேய் சும்மா கதை விடாத. அஸ் யூசுவல் பொதுவாக பலருக்கு உப்புமா பிடிக்காது. உனக்கும் அதுதானே" என்று கூற அவள் இருக்கும் பெஞ்சிற்கு சென்றவன் அவள் அருகில் அமர்ந்தான்.

" ஹேய் ஸ்பை கேர்ள், எனக்கு மத்தவங்க உப்புமா எப்படி இருக்கும்னு தெரியாது. ஆனா எங்க அக்கா செய்யிற உப்புமா பாய் கடை பிரியானிய விட சூப்பரா இருக்கும். இந்த கொஞ்சம் சாப்பிட்டு பாரு" என்று கொடுக்க அதை ருசி பார்த்தவள் நிஜமாகவே அது சூப்பராக இருந்தது. காரணம் அந்த உப்புமாவில் மரக்கறிகளுடன் சிக்கன் துண்டுகளும் சேர்த்து கொஞ்சம் காரமாகவும் இருக்க, நிஜமாகவே அது அமிர்தம் போல இருந்தது.

அவன் கொடுத்த உப்புமாவின் ருசியை ருசித்தவள் அவனை பாவமாக பார்க்க க்ரிஷிற்கு உடனே புரிந்தது. அவள் மொத்த உப்புமாவிற்கு அடி போடுகின்றாள் என்று. அவனும் அவளது டிபன் பாக்ஸை தன் பக்கம் எடுத்து தனது டிபன் பாக்ஸை மீனாக்‌ஷியிடம் கொடுத்தான்.

அவன் கொடுத்ததுதான் தாமதம் அவள் வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிடும் அழகை பார்த்தவன் அவளது டிபன் பாக்ஸை திறக்க அதில் தயிர்சாதம் இருந்தது. தனக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் அவளின் மனது நோகக்கூடாது என்று நினைத்து அவனும் பொறுமையாக அதை சாப்பிட ஆரம்பித்தான்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் "க்ரிஷ் உங்க அக்கா உப்புமா நிஜமாவே சூப்பர் டேஸ்ட்டா இருந்தது. நாளைக்கு கொண்டு வரும் போது எனக்கும் சேர்த்து கொண்டு வாங்க" என்று கூற பார்த்து சில தினங்களிலேயே மீனாக்‌ஷி அவனுடன் சினேகமாக பழகுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

" ஆமா, அதெப்படி பார்த்த சில நாள்ளயே என்கூட ரொம்ப க்லோஸ் ஆகிட்ட. மீன் என்கிட்ட சாப்பாட்ட கேட்டு வாங்குற அளவுக்கு நெருக்கமாகிட்டியேன்னு கேட்க வந்தேன்" என்று கூற அவனை பார்த்து புன்னகைத்தாள் மீனாக்‌ஷி.

" அதெல்லாம் ரொம்ப சிம்பிள். ஒரு பையன பார்த்த உடனேயே தெரிஞ்சிடும் இவன் எந்த வகையான மெட்டீரியல்னு. பசங்கள நான் மூனு வகையாக பிரிச்சி வெச்சிரிக்கேன். நீ மூணாவது வகை. நண்பன் கேட்டகரி. அதுக்கும் மேல நீ ஷக்தி சீனியரோட தம்பி. சோ உங்கிட்ட ப்ரெண்டா இருந்தா அவருகிட்ட அடிக்கடி பேசலாம். அதுவும் ஒரு காரணம். ஹ்ம்ம் மனுசன் என்ன ஸ்மார்ட்டா இருக்காறு. காலேஜே அவரு பின்னாலதான் நிட்குது" என்றாள்.

" அடச்சே, நீயும் சக்திய சைட் அடிக்கத்தான் என்கிட்ட க்லோசா பழகுறியா? த்த்தூ" என்று எச்சில் படாமல் துப்பியவனை அலட்சியம் செய்யாமல் பார்த்தவள்

" நீ என்ன வேணா சொல்லிக்க தம்பி. ஷக்தி சீனியர் நிஜமாவே மாஸ் தான். நீ எவ்வளவு வேணாலும் துப்பிக்க" என்று கூற அவன் தனது மொபைலை எடுத்து

" இரு ஷக்திக்கு கால் போட்டு இப்போ நீ பேசினத சொல்ரேன்" என்றவன் ஏதோ ஞாபகம் வர அவளை பார்த்தான்.

" ஆமா நீ ஏன் என்ன தம்பின்னு சொல்ர. நம்ம ரெண்டு பேரும் ஒரே வருசம்தானே" என்று மிகப்பெரிய கேள்வியை கேட்டான். அதற்கு அவள்

" நான் இரண்டு வருசம் படிப்ப ஸ்டாப் பண்ணியிருந்தேன். சோ உன்னவிட நான் எப்படியும் ரெண்டு வருசம் பெரியவதானே. அதனாலதான் தம்பி" என்றாள். இதை கேட்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆன க்ரிஷ்

" ஹாஹா, சரி சரி ரெண்டு வருசத்துக்காக எல்லாம் தம்பினு சொல்லாத. உனக்கு தெரியுமா ஆக்டர் மகேஷ் பாபுவுக்கும் அவரோட வைஃப் நம்ரதாவுக்கும் இடையில மூணு வருச வித்தியாசம் இருக்கு. எது எப்படி வேணா மாறலாம். இந்த தம்பியெல்லாம் விட்டுட்டு நல்ல பொண்ணா க்ரிஷ்னு கூப்பிடற வழிய பாரு" என்றவனை முறைத்தவள்

" போடா பொடிப்பயலே. நான் உன்ன தம்பின்னுதான் சொல்லுவேன்" என்று கூற இவனும் சளைக்காமல் "போடி பண்ணி" என்றான்.

" டேய் அக்காவ இப்படி எல்லாம் கூப்பிடக்கூடாதுடா. உங்க வீட்டுல பெரியவங்க இதெல்லாம் சொல்லிக்கொடுக்கல்லயா" என்று கேட்க அவன்

" நான் என் சொந்த அக்காவையே எருமைன்னுதான் சொல்லுவேன். இதுல நீ எல்லாம் எம்மாத்திரம். சரிதான் போடி" என்றான். இருவரும் தினமும் இப்படி செல்ல சண்டைகள் இடுவது இப்போது வாடிக்கையாகி போனது. அதுவே அவர்கள் இடையில் ஒரு நல்ல புரிந்துணர்வுடன் கூடிய நட்பை உருவாக்க காரணமாகியது.

————

" என்ன ஷக்தி ஏதோ யோசனையில இருக்குற மாதிரி இருக்கு" என்று கேட்ட தன் தாயை பார்த்தவன்

" காலேஜ்ல கிரிக்கட் மேட்ச் இருக்குமா. அதப்பத்திதான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்" என்று கூற அவனின் தாய்

" என்ன பிள்ளையோ. முதல்ல நிம்மதியா சாப்பிடுப்பா. அப்புறமா இந்த கிரிக்கட், ஃபுட்பால் பத்தியெல்லாம் யோசிக்கலாம்" என்றார்.

டைனிங்க் டேபிளுக்கு வந்த ஷக்தியின் தந்தை

"என்ன ஏதோ கிரிக்கட், ஃபுட்பால்னு ஸ்போர்ட்ஸ் சம்பந்தமா பேச்சு போகுது" என்று கேட்க ஷக்தி தன் காலேஜ் மேட்ச்சிட்கு ஒரு பவுலர் குறைவதை தன் தந்தையிடம் கூறினான்.

"இங்க பாரு ஷக்தி எப்பவுமே நான் சொல்ரதுதான். நம்ம எப்போமே ஜெயிச்சிக்கிட்டே இருக்கனும். இல்லைன்னா ஜெயிக்கிறவங்க பக்கம் இருக்கனும். தோல்விதான் வெற்றியின் முதல் படின்னு சொல்றவங்க ஜெயிக்க தெரியாதவங்க. தோல்விதான் வெற்றியின் முதல் படி என்றால் நம்ம இரண்டாவது படியான வெற்றிக்கே போயிடனும். நீ ஜெயிக்கனும்னா எது வேணா பண்ணு தப்பில்ல. உலகத்துல ஜெயிச்சவன் எல்லோரும் ஏதோ ஒரு வழியிலதான் வந்திருப்பான். ஸ்டீவ் ஜாப்ஸ், ரிச்சர்ட் ப்ரான்சன், பில்கேட்ஸ், மார்க் சக்கர்பேர்க் இவங்க எல்லோரும் அவங்க கூட இருந்தவங்கள ஏமாத்திதான் முன்னுக்கு வந்தாங்க. இன்னைக்கு யாருமே அவங்க ஏமாத்தினத பேசமாட்டாங்க. இப்போ இவங்க எல்லாம் நமக்கு மோடிவேசனல் பர்ஸ்னாலிட்டி என்று ஆகிடிச்சி.

எதனால அப்படி? அவங்க வெற்றிதான் காரணம். செத்து ஒன்பது வருசமாகியும் ஸ்டீவ் ஜாப்ஸ பத்தி இப்பவும் நம்ம ஏன் பேசுறோம். அவரோட வெற்றிகள்தான் காரணம். ஆனா ஆரம்பத்துல ஒரு பொண்ண அவர ஏமாத்தினது, தன் உயிர்த்தோழனான வொஸ்னியாக்க ஏமாத்தினது எல்லாம் உலகம் மறந்திடிச்சிஇப்போ நமக்கு தெரிஞ்ச ஸ்டீவ் ஜாப் ஒரு சக்ஸஸ்புல் பர்ஸ்னாலிட்டி.

எப்பவுமே வெற்றிய நோக்கி ஓடாத. எப்படி வெற்றி பெறலாம் என்பதை மட்டும் யோசி. இன்னொரு முக்கியமான விசயம், நம்ம வெற்றி தற்காலிகமானதா இருக்க கூடாது. அவசரத்து எதையுமே வென்றுவிட கூடாது. நாளைக்கு அது நம்மலோட இன்னொரு வெற்றிக்கு முட்டுக்கட்டையா இருந்திடும். சரியான திட்டமிடலோட வெற்றியை அடையனும். அப்போதான் வெற்றி நம்ம கூட  என்னைக்குமே  இருக்கும்" என்று கூறினார். தன் தந்தையின் சொற்களை மந்திர சொற்களாக கருதியவன் தன் மனதுக்குள் தனது வெற்றிக்காக திட்டமிட தொடங்கினான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro