Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி - 5

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

என்ற பாடல் பிண்ணனியில் ஒலிக்க என்றும் பாடலைக் கேட்டுக் கொண்டே வீட்டை ரணகலப்படுத்துபவளோ வீட்டின் பின்புறத்தில் இருக்கும் துவைக்கும் கல் மீது ஏறி  கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.

கன்னத்தில் கை வைத்திருந்தால் அடிக்க ஓங்கும் அம்மாவின் கை இன்னும் சிறிது நாட்களுக்கே என நினைக்கும் போது யாரோ அவளுக்கு இதயத்தை ஊசியால் குத்துவது போல் இருந்தது.

சிறுவயது முதல் அனைத்திற்கும் பெற்றோரையே சார்ந்து இருந்தவள்
இப்போது தான் வெளி உலகை தனி ஆளாய் காணவேண்டும் என நினைத்திருக்க அதற்குள் இப்படி ஒரு தடை வரும் என கனவிலும் நினைத்திருக்கவில்லை.
சோகங்கள் எனும் சுமையை கூட புன்னகை முகமாக கடந்து வருபவளால் இதை அப்படி எளிதில் கடக்க முடியவில்லை.

எவ்வளவு முயன்றும்  மனம் ஆடும் ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை.
ஊசலைப் போல் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருக்கிறது.
மனம் ஒரு குரங்கு என்பது சரிதான் போல...

அவளுக்கு அந்த குட்டி தோட்டத்திற்குள் வருவதென்றால் கொள்ளைப் பிரியம் ஆனால் இன்று ஏனோ மனம் எதிலும் லயிக்காமல்
புதிதாக துளிர் விட்ட அந்த வாழைக் கன்றையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்ததால் என்னவோ கண்களில் நீர் தேங்கி நிற்க அதைக் கூட உணரும் நிலையில் சுதா இல்லை.

சுதா என்ற அன்னையின் சத்தத்தில்
தன்னிலைக்கு வந்தவள் எழுந்து செல்ல கூட தோன்றாமல் ம்மா என்று மட்டும் குரல் கொடுத்து விட்டு மறுபடியும் வேடிக்கைப் பார்க்க அவளைத் தேடி வந்த அவளின் அன்னையோ கன்னத்தில் அடித்தார்.

"இது என்ன பழக்கம் கன்னத்துக்கு கை கொடுக்கிறது ?" என்று இடுப்பில் கை வைத்து முறைத்த அன்னையை கட்டிக் கொண்டவளுக்கோ வற்றாத நதி போல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ம்மா ம்மா என்ற அவளின் முணங்கல் மட்டுமே வர "அழுறியா சுதா " என்றவரோ அவள் முகத்தைப் பார்த்து  பதறிவிட்டார்.

"ஏன் டா ஏன் அழுகுற? என்னாச்சு " பெற்ற மனமல்லவா பதற்றத்தோடு பயமும் வந்து ஒட்டிக் கொள்ள அவருக்கும் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
அதுவும் திருமணம் நிச்சயம் செய்திருக்கையில்  அழுதால் என்னவென்று நினைப்பது...
மனது பாரமாகிவிட்டது போல் வேறு தோன்றியது.

அவரை அந்த கல்லில் உட்கார வைத்தவள் தானும் அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"சுதா என்னாச்சு " என்றவரிடம்  என்ன கூறுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை.

அன்னை மடி மட்டுமல்ல ,அவர் அருகில் இருப்பது கூட சுகம் தான் போலும்...
இதுவரை குரங்கு சேட்டை செய்துக் கொண்டிருந்த மனம் ஒருநிலையில் இருக்க மனதில் இருப்பதை அம்மாவிடம் கொட்ட ஆரம்பித்தாள்.

"இனிமேல் இப்படி கன்னத்திற்கு கை கொடுத்தா யாரு மா வந்து அடிப்பா? இப்படி நான் அழுகுறப்போலாம் யாரு மா என் கண்ணீரைத் துடைச்சு மடியில படுக்க வெச்சுப்பா? " என்று தேம்பித் தேம்பி அழுபவளை என்ன சொல்லித் தேற்ற என்று அவருக்குத் தெரியவில்லை.

சுதாப்பா என்ற குரலில் சிவராமன் ஓடி வர அவர் பின்னாடியே தீபுவும் ஓடிவந்தான்.

"என்னாச்சு பாரு? அம்மு ஏன் மடிமேல படுத்துருக்கா? என்னாச்சு " மனைவியின் முகத்தில் இழைந்தோடும் சோகம் அவருக்கும் தொற்றி விட ஒரு வித பதட்டத்துடனே வினவி சுதாவின் தலை கோதினார்.

அப்பாவின் ஸ்பரிசம் பட்டதும் எழுந்தவள் உடனே அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு மறுபடியும்  அழ "அம்மு அழாதே டா என்னாச்சு ?" என்றவருக்கு அவள் பதில் சொல்வதாய் இல்லை.

தீபு உள்ளே ஓடிச் சென்று தண்ணீருடன் வெளியே வர அதை வாங்கி சுதாவிற்கு தந்த சிவராமனோ அவளைக் குடிக்கச் சொல்லி கைகளில் திணிக்க மறுப்பேதும் கூறாமல் வாங்கிக் குடித்தவள் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு மூவரையும் பார்த்தாள்.

"இனிமேல் இப்படி இருக்க முடியாதுல மா, உங்களை வெறுப்பேத்தவே எல்லாத்தையும் லேட்டா பண்ணுறது,அப்பாக்கிட்ட ஆம்லெட் போட்டு தர சொல்லி கேட்கிறது, தீபு கிட்ட சண்டை போடுறது , எனக்கு வெண்பொங்கல் பிடிக்கலைனா வேற செஞ்சு தாங்கமானு அடம் பிடிக்கிறது, காலைல லேட்டா எழுந்துக்கிறது, இஷ்டத்துக்கு கோபப்படுறது, தூங்கணும்னு தோணுறப்போலாம் தூங்குறது, ப்ரெண்ட்ஸ் ஓட மிட்நைட்ல அரட்டை அடிக்கிறது இதெல்லாம் அவ்ளோதானே மா!!!
என்னால என் இஷ்டத்துக்கு அங்கே இருக்க முடியாதுல மா " என்றவள் கண்கள் கலங்க  அவளை அணைத்துக் கொண்ட பாருவோ

"அப்படிலாம் இல்லை டா...
கிருஷ்ணா அண்ணா , ராதா அண்ணி உன்னை அவங்க பொண்ணு மாதிரி பாத்துப்பாங்க!!
நீ கவலையே பட வேணாம், உனக்குப் பிடிச்ச மாதிரி அங்கே இருக்கலாம் " என்றவரைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்தவள்

"அங்கிளும் ஆன்டியும் என்னை அவங்க பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டாலும் அவங்க என் அம்மா , அப்பா ஆகிட முடியாதே மா!!
அவங்களுக்கு ஏத்த மாதிரி தானே என்னை நான் மாத்திக்கணும், ஏன் மா பொண்ணுங்களுக்கு மட்டும் இப்படி ? நான் கல்யாணம் முடிஞ்சு அங்கே போனதும் நீ என்கூட அடிக்கடி பேசுவல மா!!! அப்படி நீ பேசுறப்போலாம் நான் சொல்லுவேன் மா, பாரு ஐ மிஸ் யூ , உன்னை விட்டுட்டு இருக்க முடியலைனு" என்றவளை மூவரும் அணைத்துக் கொண்டனர்.

" அப்போ என்னை மிஸ் பண்ண மாட்டே ?" என்ற தீபுவின் வயிற்றில் குத்தியவள் "மிஸ் யூ பப்ளிமாஸ் " எனக் கூறி அணைத்துக் கொண்டாள்.

அவளை அணைத்துக் கொண்டு அனைவரும் உள்ளே செல்ல சிவராமனுக்கோ சுதாவின் இந்த திடீர் செய்கையில் சிறிது சந்தேகம் துளிர் விட ஆரம்பித்தது.

"அம்மு மா நீ யுவாகிட்ட பேசுனியா?" என்றவரின் பார்வை அவளை கூர்ந்து நோக்க தன்னை சமாளித்துக் கொண்டவளோ "பேசுனேன் பா, நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் " எனக் கூறி ஓடி விட அவர் சந்தேகம் இன்னும் வலுப்பெற ஆரம்பித்தது.

அதை மறைக்காமல் அவர் பார்வதியிடம் தெரிவிக்க " எதுக்கு சுதாப்பா இப்படிலாம் யோசிக்கிறீங்க? நம்ம அவகிட்ட இந்த கல்யாணத்தைப் பத்தி சொன்ன உடனே நமக்காக சம்மதிச்ச பொண்ணு சுதா, அவளுக்கு நாம நல்லது தானே பண்ணுவோம்!!! யுவா நல்ல பையன் சுதாப்பா " என்றவர் சமையலைறயினுள் நுழைந்து விட சோபாவில் படுத்து கண் மூடியவருக்கோ அன்றைய நாள் நினைவில் ஓடியது.

காபி ஷாப்பில் இருந்து வந்தவர்கள் இன்று எப்படியாவது இதை சுதாவிடம்  கூறிவிடவேண்டும் என முடிவெடுத்திருக்க கோவிலுக்கு சென்றதால் சிறிது தாமதாக வந்தவள் புன்னகை முகமாக சிவராமனின் அருகில் சென்று அமர்ந்தாள்.

"என்ன பாரு அப்பாவையே சைட் அடிச்சுட்டு இருக்க என்ன சங்கதி?" என்றுக் கேட்டு கண்ணடித்தவளை முறைத்த பார்வதி "இவ்ளோ நேரம் எங்கே சுத்திட்டு வர ?" எனக் கேட்க

அவர் கேட்டதில் கடுப்பானவளோ "உன் மருகமகனோட " என்று கூறிச் சிரிக்க மற்ற சமயங்களில் "பாவம் என் மருமகன் " எனக் கூறுபவரோ
இன்றும் அதே தான் கூறுவார் என எண்ணி சுதா அப்படி கூறியிருக்க
அவரோ அவர் கன்னத்தில் அறைந்திருந்தார்.

"என்ன பேச்சு இது? எப்போமே ஏட்டிக்கு போட்டியா தான் பேசணுமா? " என்றவரின் பேச்சு
எதுவும் அவள் காதில் விழவே இல்லை.

அவர் அடித்ததில் அதிர்ச்சியுடன் அவரை ஏறிட்ட விழிகள் இன்னும் அப்படியே இருக்க சிவராமன் தான் பார்வதியை திட்டி சுதாவை தன்புறம் திருப்பினார்.

"அவ விளையாட்டுக்கு தான் சொன்னா பாரு ! அது உனக்கு நல்லாவே தெரியும் அப்புறம் எதுக்கு அவளை அடிச்ச ?" என்றவரை முறைத்தவர் "என்னமோ பண்ணுங்க" என்று கூறி உள்ளே சென்றுவிட

"அம்மா டென்சனா இருக்காங்களா பா ?அது தெரியாம நான் இன்னும் அவங்களை டென்சன் பண்ணிட்டனே" என்று கூறி வருந்தியவளைப் பார்த்து அவருக்கு பேச நா எழவில்லை...
எப்படிப் பட்ட பெண் இவள் ? என்று தான் தோன்றியது.

"வாங்க பா அம்மாவை போய் சமாதானம் பண்ணலாம் , என்னை அடிச்சுட்டு  அவங்க அங்கே அழுதுட்டு இருப்பாங்க" என்று கூறியவளைப் பெருமைப் பொங்க பார்த்தவர் சமையலறைக்குள் நுழைய மகள் கூறியது போல அவரின் மனைவி அழுதுகொண்டு தான் இருந்தார்.

"கண்ணு வேர்த்துருச்சா பாரு" என்று கூறி பின்னிலிருந்து அணைத்தவளின் கைகளை கிள்ளியவர் "என்னடி " என்றவாறே திரும்பி முறைக்க

"பார்ரா அடிச்சுட்டு வந்து இப்போ முறைக்க வேற செய்யுறியா பாரு ? இதெல்லாம் சரியே இல்ல பாத்துக்கோ" என்றவள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள
அவளை அணைத்துக் கொண்டவருக்கோ கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை.

"என் டிரெஸ்ஸை ஈரம் பண்ணாதே பாரு" என்று கூறி சிரித்தவள் முதுகை அடித்தவர்

"வலிக்குதா டி " எனக் கேட்க

"இல்லையே இல்லவே இல்லை...
அப்படியே கமகமனு இனிக்குது " என்று கூறி முறைத்தவள்

"பளார்னு ஒன்னு விட்டுட்டு இப்போ வலிக்குதானு வேற கேள்வி?? பக்கத்து வீட்டு குட்டி பையனுக்கே கேட்டுச்சாம் அப்படி ஒரு சவுண்ட்!!! ஓங்கி அடிச்சா ஒன்றரை டெசிபல் சவுண்ட்  " என்று கூறிக் கண்ணடித்துச் சிரித்தாள்.

"கொழுப்பு கொழுப்பு  " என்றவர் காதை திருக

"மருமகனைப் பார்க்க போனேனு சொன்னதுக்கு ஏன் பாரு அடிச்ச? நான் எப்போவும் அப்படிதானே சொல்லுவேன் " என்றவளிடம்

"இனி சொல்லாத " எனக் கூற

"அதான் ஏன்? ஒருவேளை வேற மருகமகனைப் பாத்துட்டியோ" தலையைச் சரித்து சுதா வினவ

"ஆமா " என்று தலையசைத்தவரோ இப்போது இடுப்பில் கை வைத்து முறைக்க ஆரம்பித்தார்.
அவர் ஆமாம் என்று சொன்னதும் அவள் செய்த செயல் அப்படி!!!

கீழே விழுந்து ஒரு கையால் தரையில் தட்டிக் கொண்டு மறுகையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பவளை எவ்வளவு திட்டியும் அவள் நிறுத்தியபாடில்லை.

"உனக்கும் கிருஷ்ணா அண்ணா பையன் யுவராஜூக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம் டா" என்ற சிவராமனின் குரலில் அவள் விழிகள் அதிர்ச்சியைத் தத்தெடுத்துக் கொள்ள

"சிரிக்கிறேனு சொல்லி வீடு துடைச்சது போதும் எழுந்து ஹாலுக்கு வா " என்ற பாரு வெளியே செல்ல சிவராமனும் அவர் பின்னே சென்றார்.

சிலை போல் அமர்ந்திருந்தவளுக்கு அதை மூளையில் பதியவே சில நிமிடங்கள் ஆனது.

உடனே வெளியே ஓடியவள் சோபாவில் அமர்ந்திருக்கும் இருவரின் காலடியிலும் அமர்ந்து

"இப்போவே ஏன் " என்று கேட்க

"மூனு மாசத்துல பண்ணனும் டா அதான் " என்ற பார்வதி வேறெதுவும் கூறவில்லை.

அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தவள் தலையசைத்துத் தன் அறைக்கு சென்று விட சிவராமன் தான் ஏன் இப்படி என்பது போல் பார்வதியைப் பார்த்தார்.

"நம்ம கொஞ்சம் செல்லமா பேசுனாலும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவா சுதாப்பா, அவ கொஞ்ச நேரத்துல சரியாகிருவா " என்றவருக்கு சரியென்று தலையசைத்த சிவராமன் கிருஷ்ணாவிற்கு அழைப்பு விடுக்க வெளியே சென்றுவிட
பார்வதியோ மகளின் அறையை எட்டிப் பார்த்தார்.

"சாரி டா செல்லம்! இது நல்ல சம்மந்தம் அதுனால தான்" மனதினுள்ளே மகளுக்கு மன்னிப்பு
விடுத்தவர் தன் வேலைகளைப் பார்க்க சென்றுவிட இப்போது சிவராமன் அவள் அறைக்குள் நுழைந்தார்.

"அம்மு மா " என்றவரின் குரலில் படுத்திருந்தவள் எழுந்து அமர
அவள் முகத்தில் தெரிந்த கலவரத்தில் அவளருகே அமர்ந்தவர்
"உனக்கு பிடிக்கலனா " என்று கூற வருவதற்குள்

"உங்களுக்கு சம்மதம் தானே பா! " என சுதா கேட்க

"ஆமா டா " என்றவரைப் பார்த்துப் புன்னகைத்தவள்

"எனக்கும் சம்மதம் " தலையைச் சரித்து கண்ணடித்து அவள் கூறிய விதத்தில் அவருக்கும் இதழ்களில் புன்னகை தழுவ வாலு புள்ள என்றவாறே வெளியே நகர்ந்தார்.

நல்ல பையன் தான் போல !!! எப்படி இருப்பான்  என்றவளின் மனது இன்னும் மூன்று நாட்களிலேயே அவனைப் பற்றி பயம் கொள்ளும் என அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை!!

நினைவுகளில் உலன்றுக் கொண்டிருந்த சிவராமன் கைபேசி சத்தத்தில் நடப்பிற்கு வர
அதிலிருந்த கிருஷ்ணா சார் என்ற பெயரைக் கண்டதும் அவர் மனதில் இருந்த கலக்கம் மறைந்து புன்னகை முகமாக அதை அட்டெண்ட் செய்தார்.

"சொல்லுங்க கிருஷ்ணா சார்?"

"இன்னுமா சிவா சார் சார்னு கூப்பிடுறீங்க " எனக் கேட்டவர் தானும் சார் என்று தான் அழைத்தோம் என்பதை மறந்து விட

"நீங்க எப்போ சாரை கட் பண்ணுறீங்களோ அப்போ நானும் கூப்பிடுறதை ஸ்டாப் பண்ணிடுறேன்" என்ற சிவராமன் சிரிக்க, அந்தப்பக்கம் கிருஷ்ணாவும் சிரித்தார்.

"சரி நம்ம அப்புறம் இதை டிஸ்கஸ் பண்ணிப்போம், பிள்ளைங்க இரண்டு பேருக்கும் ஜாதகம் பார்த்தோம் பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருக்காம்! இன்னும் இரண்டு மாசத்துல கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லி டேட் குறிச்சு கொடுத்தார் " எனக் கூற

இருவருக்கான பொருத்தத்தைக் கேட்டதும் சிவராமனின் மனதில் இருந்த கலக்கம் ஓடியே விட்டது
எனத் தான் கூற வேண்டும்.

" ஒன்பது பொருத்தம் இருக்கா அடடா ! ரொம்ப சந்தோஷமா இருக்கு கிருஷ்ணா சார், நாளைக்கு கோவில்ல மீதியை பேசிப்போம் " என்றவர் சிறிது நேரம் பேசிவிட்டு பார்வதியிடம் இதைக் கூற அவரைத் தேடிச் செல்ல

"ஒன்பதா ?" உதட்டைச் சுழித்தவளோ

"டேய் லேம்ப் போஸ்ட் உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல டா  !!!!
கடவுளே காப்பாத்துங்க அவனை என்கிட்ட இருந்து !!" என்று வேண்டியவளைப் பார்த்து அவரும் பல்லைக் காட்டிச் சிரித்தார்
யாரிடமிருந்து யாரைக் காப்பது என!!!!

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro