Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 72

வட்டவிளை பெருமாள் கோவிலில் கதிருக்கும், சந்தனாவிற்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.  தன்னுடைய மனைவியைப் போலவே மகளும் கோவிலிலும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்று தெரிந்து கொண்ட ஆலென், கதிரும் அவரிடம் வாய்விட்டு அதைக் கேட்டு விட்ட பிறகு இந்த கோவிலில் அவர்களுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்.

சஞ்சீவுடைய குடும்பத்தினர், கல்பனாவின் குடும்பம், கதிருடைய ஆசிரியர் மாணிக்கவேலை தவிர மற்ற பணியாளர்கள் பதினைந்து பேர் தான் திருமணத்திற்கு வந்திருந்தாலும் இதுவும் ஒரு வகையில் நிம்மதியான உணர்வாகத் தான் இருந்தது ஆலெனுக்கு.

அவரது குடும்ப உறவினர்கள், சுமலதாவினுடைய குடும்பத்தினர் எல்லோரும் இங்கு வந்திருந்தால் கண்டிப்பாக இன்று இங்கு நடக்கப்போகும் சுபநிகழ்வில் நிறைய சலனங்கள் ஏற்பட்டிருக்கலாம்; இரண்டு மாலைகள், ஒரு தாலி, ஒரு தட்டில் அட்சதை என மிக மிக எளிமையாக நடக்க இருந்த இந்த மாதிரியான திருமணத்தை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை..... அதற்காக ஆலெனின் குடும்பத்தினர் இனி வருந்தப் போவதுமில்லை.

கதிர், சஞ்சீவை விட ஜெபா தான் இந்த திருமணத்திலும், கோவிலின் சுற்றப்புறத்தினாலும் மிகவும் கவரப்பட்டான். தன்னுடைய அக்காவின் திருமணம் இன்று நடைபெற இருந்ததாலோ என்னவோ, குழந்தையைப் போல் மாறி அனைத்து விஷயங்களிலும் குதூகலித்தான்.

"கதிர்ணா..... ஸாரி அத்தான்; இந்த ப்ளேஸ் எவ்ளோ அழகா இருக்குன்னு பாருங்களேன்! கோவிலுக்கு வெளிய வாசல்ல அழகா மஞ்சள் பூவ கொட்டிக்கிட்டு இருக்குற மரமும், கோவிலுக்குள்ள இருந்து வர்ற நாதஸ்வர சத்தமும், மண்டபத்துல உக்காந்து சாமி ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருக்குறதும், அவரோட டிவோட்டீஸ் அவரு முன்னால நின்னு ஏதேதோ பாட்டு பாடுறதும், இந்த கோவிலுக்குள்ள குடுக்குற லட்டு பிரசாதத்தோட வாசமும்...... நீங்க புதுசா இந்த இடத்துல ஒரு பெயிண்டிங்கே வரையலாம் போங்க! இட்ஸ் ரியல்லி அ டிவைன் ஃபீல்! ஒரு வாய் லட்டு சாப்டுறீங்களா?" என்று கதிரிடம் கேட்டான் ஜெபசேகரன்.

"டேய்..... அண்ணா அத்தான், அண்ணா அத்தான்னு கூப்டாம இனிமே மரியாதயா மொத தடவையிலேயே அத்தான்னு கூப்டல; என்னோட இடது கால ஒவாயிலேயே வப்பேன் பாத்துக்க! 
பூவு, மரம், மஞ்சளு, ஊஞ்சலுன்னு  தொணதொணன்னு பேசாம கொஞ்ச நேரம் சும்மாயிரேன்! நானே இங்க ஒரே டென்ஷன்ல நின்னுக்கிட்டு இருக்கேன்! காலையில இருந்து கைகால் எல்லாம் ஒருமாதிரி சிலிர்த்துக்கிட்டே இருக்கு...... இதுல நீ வேற லட்டு சாப்டுறியா? மிச்சர் சாப்டுறியான்னு கேட்டு இம்ச பண்ணிட்டு இருக்க? சஞ்சீவ்..... கல்யாணம் முடியுற வரைக்கும் எல்லா விஷயமும் ஸ்மூத்தா போகும்லடா?" என்று பயத்துடன் கேட்டவனிடம் குறுஞ்சிரிப்புடன்,

"போகலாம்; போகாமயும் இருக்கலாம்.... யாருக்குத் தெரியும்?" என்று பட்டும் படாமல் பதிலளித்தான் சஞ்சீவ்.

"அட இவன் ஒரு வெளங்காத டூத்பேஸ்ட் அத்தான்..... இவங்கிட்ட போயா நீங்க இதெல்லாம் கேப்பீங்க? நம்மகிட்ட இருக்குற தைரியத்தையும் மொத்தமா பக்கத்தூருக்கு கிளம்பிப் போக வச்சுட்டுத் தான் மறுவேல பாப்பான்! எப்டி நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுட்டு நின்னுட்டு இருக்கான் பாருங்க..... ஆமா, நீங்க இங்க கல்யாணம் தான செஞ்சுக்கப் போறீங்க? அதுக்கு எதுக்கு இவ்ளோ பயப்படணும்?" என்று யோசனையுடன் கேள்வி கேட்ட ஜெபாவிடம்,

"அதுதான் ஏன்னு தெரியலடா சேகர்..... ஆனா காலையில எழுந்திரிச்சதுல இருந்து கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு!" என்றான் கதிர்.

"இது கல்யாண நெர்வெஸ்னெஸ்! இப்டித்தான் இருக்கும்; அத ஜாலியா என்ஜாய் பண்ணுங்க பாஸ்!" என்று சொன்ன சஞ்சீவ் அவனை மேலும் கீழுமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

இவன் என்ன என் அத்தானை இப்படி பார்ப்பது என்று நினைத்த ஜெபா சற்றுநேரத்தில் தானும் அந்த செயலே செய்து கொண்டிருந்தான்.

இளம்பச்சை நிறத்தில் ஸ்லிம் பிட் சட்டையும், பட்டு வேஷ்டியும், நெற்றியில் சின்னதாக ஒரு விபூதிக் கீற்றும், இடக்கையில் ஒரு வாட்சும் அணிந்து க்ளீன் ஷேவில், அழகான ஹேர்ஸ்டைலில்
எளிமையாக நின்றாலும், என்னவளை இன்று நான் மணக்கப் போகிறேன் என்று சொல்லும் முகத்தில் இருந்த கர்வத்தால் மணக்கோலத்தில் மணமகனாக மிகவும் அழகனாக தெரிந்தான் கதிரேசன்.

"எதுக்கு அத்தான் நீங்க பதட்டப்படணும்.....? முஹூர்த்ததுக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கு. நம்ம பக்காவா ரெடியாகி வந்தாச்சு. வாங்க போய் சஞ்சீவோட அம்மாவ, உங்க புரஃபொஸர எல்லாம் பாத்து ரெண்டு வார்த்த பேசிட்டு, மனை கிட்ட போய் நிக்கலாம். இந்த நிலாங்க ரெண்டு பேரும் நம்ம கூட நிக்காம சந்து கூட போறோம்னு ஓடிப் போயிடுச்சுங்க பாருங்களேன்!" என்று கதிரிடம் குறைபடித்துக் கொண்டிருந்தான்.

"பாஸ்.... அங்க பாருங்க! உங்க மொத்த டென்ஷனுக்கான மெடிசின் அதோ அந்தப் பக்கத்துல இருந்து நடந்து வந்துட்டு இருக்காங்க பாருங்க! நீங்க தான் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்கன்னு நான் கொஞ்ச நேரம் முன்னால நினைச்சேன். பட் மிஸ் சந்தனாவும் உங்களுக்கு டஃப் குடுக்குறாங்க. யூ போத் ஆர் மேட் ஃபார் ஈச் அதர்!" என்று கதிரிடம் சிறு புன்னகையுடன் சொன்னான் சஞ்சீவ்.

"தேங்க்ஸ்டா தம்பி!" என்று சஞ்சீவிடம் சொன்ன கதிர் தன்னவளை பார்வையால் வருடி ஒரு பெருமூச்சினை வெளியேற்றினான். இவ்வளவு நேரமாக அவன் தலைக்குள் அடைத்துக் கொண்டிருந்த அழுத்தம் மெல்லமாக மறையத் தொடங்கியது.

இளம்பச்சை நிற பட்டுப்புடவையில், தலையில் மல்லிகைப்பூவுடனும், கழுத்தில் அணிந்திருந்த மாலையுடனும், முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடனும் கல்பனா, மினு, குணாளினி, பாகேஸ்வரி, வெண்மதி, இளமதி
இவர்கள் அனைவருடனும் நடந்து வந்து கொண்டிருந்த சந்தனாவைப் பார்த்த ஜெபாவுக்கு ஏனோ மூச்சு முட்டும் அளவிற்கு மகிழ்ச்சி மனதில் நின்றிருந்த போதும் கண்ணையும் கரித்துக் கொண்டு வந்தது.

மற்றவர்களுடன் சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தாலும் சந்தனாவின் மனது முழுவதும் அவன் ஒருவனைத் தான் தேடிக் கொண்டிருந்தது. தன்னுடைய இந்த அலங்காரத்தை அவன் பார்த்திருப்பானா என்று நினைத்தவளின் ஆசையை நிறைவேற்றுவது போல கதிர் அவளைத் தான் பார்த்த படி நின்றிருந்தான்.

கண்களால் அவனைத் தேடியவள், அவன் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று கண்டுகொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவளருகில் வரச்சொல்லி அழைத்தாள்.

அருகில் வரச் சொன்னவளின்
பக்கம் சென்று புன்னகைத்தவன் அவளிடம்,

"எப்டிறீ நீ ஒரு பொடவையக் கட்டி பூவ வச்சா மட்டும் இப்டி தேவதை மாதிரி ஆகிடுற! மத்த நேரமெல்லாம் என் கண்ணுக்கு நீ இவ்ளோ அழகா தெரியலயே? என்னதான்டீ மாயம் பண்ற?" என்று அடிக்குரலில் கேட்டான்.

"நான் ஒண்ணும் பண்ணல. என்னைப் பாத்து எல்லாரும் அழகா இருக்கன்னு சொன்னா, நீ மட்டும் மாயம் பண்றியான்னு கேக்குற.... போடா!" என்று கழுத்தை நொடித்துக் கொண்டாள் சந்தனா.

"தேவத மாதிரியிருக்கன்னு சொன்னேன், அது உங்காதுல விழாதே.... வா எங்க ஸார்ட்ட கூட்டிட்டுப் போறேன்!" என்று அவளிடம் சொல்லி விட்டு
ஜனார்த்தனனுடன் பேசிக் கொண்டிருந்த தன்னுடைய ஆசிரியர் மாணிக்கவேலுக்கு சந்தனாவை அறிமுகம் செய்துவைத்தான் கதிர்.

"கதிர்..... அப்பா கிட்ட அப்புறம் பேசலாம்! முதல்ல போய் மனையில உக்காரு! முஹூர்த்ததுக்கு இன்னும் கால்மணி நேரம் தான் இருக்கு பாரு!" என்று சொன்ன கல்பனாவிடம் உற்சாகமாக சரியென தலையசைத்தவன் சந்தனாவுடன் சேர்ந்து ஆலென், சுமலதா மற்றும்
தன்னுடைய அன்னையின் கால்களிலும் விழுந்து வணங்கி  ஆசிபெற்று விட்டு மனையில் சென்று அமர்ந்தான்.

மணமக்களை பக்கமாக பார்க்கவென்று சாக்கு சொல்லி தன்னுடைய மனைவியின் அருகில் வந்து நின்ற ஜனார்த்தனன் கல்பனாவிடம்,

"ஏய்.... என்னடீ! இன்னிக்கு வழக்கத்த விட பெரிசா சந்தோஷமா இருக்க போலிருக்கு! நீ சிரிக்குற சிரிப்புல மின்னலெல்லாம் தெறிக்குதேம்மா?" என்று சிரித்த படி கேட்டான்.

"வாங்க ஸார்.... பிள்ளைங்க ரெண்டையும், மாமனாரையும் பத்திரமா பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு இங்க வந்தா, எம்பின்னாலயே  நீங்களும்  வந்துட்டு இப்ப மின்னல் வேற தெறிக்குதா உங்களுக்கு? ரொம்ப உத்துப் பாக்காதீங்க! அப்புறம் மின்னல்ல இருந்து கரண்ட் பாஸாகிடப் போவுது!" என்று சொன்ன தன்னுடைய மனைவியின் கைகோர்த்துக் கொண்டு அவளருகிலேயே நின்று கொண்டான் ஜனார்த்தனன்.

பாகேஸ்வரியைப் பொறுத்தமட்டில் அவருக்கு தன் வாழ்வில் இன்று ஒரு பொன்னாள் என்ற நினைப்பு தான் வந்தது. தன்னுடைய மகனுக்கு நிம்மதியான, நிறைவான வாழ்வு அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்ட அந்தத் தாயின் அருகில் வந்து அவர் கையைப் பற்றி அழைத்துச் சென்று தன்னருகில் அமர்த்திக் கொண்டார் சுமலதா.

பழைய சுமா என்றால் அவருக்கு பாகேஸ்வரியின் கவலை கொஞ்சங்கூட புரிந்திருக்காது. ஆனால் இன்றைய சுமாவினால் அந்த அன்னையின் தவிப்பையும் வருத்தத்தையும் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

கிருஷ்ணராஜா, கதிரேசனா என்ற போராட்டத்தில் எப்போதும் போல
தன்னுடைய கணவரின் பக்கம் போய் விடாமல் இந்த முறை தன்னுடைய மகனுடைய பக்கம் நிற்பது என முடிவெடுத்து விட்டார் பாகேஸ்வரி. திருமணத்திற்கு கிருஷ்ணராஜை யாரும் வாருங்கள் என்றும் அழைக்கவில்லை, வரவேண்டாம் எனவும் சொல்லவில்லை. அந்தப் பயலின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் வீட்டில் தன் கண் முன்னே தான் நடக்கிறது..... இருந்தாலும் இந்த பாகேஸ்வரி கூட தன்னிடம் எதையுமே சொல்லவில்லையே என்ற கடுப்பில் இருந்தார் அந்த தந்தை.

அந்த வீட்டில் யாரும் இனி அவருக்கு முதல்மரியாதை தரத் தயாராக இல்லை.... அதற்கு அவர் தகுதியானவரும் இல்லை என்று ஏனோ அவருக்கு இன்னமும் புரிந்திருக்கவில்லை.

ஒரு மரப் பலகையினால் ஆன மனையில் சந்தனாவின் அருகில் அமர்ந்திருந்தவன், தன்னுடைய கையில் மாங்கல்யத்தை வைத்துக் கொண்டு அதை எப்போது தன்னவளின் கழுத்தில் அணிவிக்கப் போகிறோம் என்ற ஆர்வத்திலும், ஒருவிதமான படபடப்பிலும் அமர்ந்திருந்தான்.

'மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா, கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்...!'
என்ற மந்திரத்தை முழங்கிய புரோகிதர் "கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொன்னதோடு, சற்று பக்கத்தில் நின்ற நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டினார்.

பல வருடங்கள் ஒற்றை பக்கக் காதலும், இப்போது சில மாதங்களாக இரட்டை பக்கக் காதலுமான அந்தக்
காதல் கைகூடி கதிர் தன்னுடைய மனம் விரும்பியவளின் கழுத்தில்
மாங்கல்யம் அணிவித்த போது புரோகிதர் உச்ச ஸ்தாயிலில் சொன்ன திருமண மந்திரம்
கெட்டி மேளம் ஒலிக்கும் அந்த சத்தத்தையும் மீறி அவனுடைய காதுகளில் ஒலித்தது. இறைவன் சன்னிதானத்தில் திருமணம் செய்து இனி என் வாழ்வு உன்னோடும், உன் வாழ்வு என்னோடும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்ட தம்பதியர், அதற்கு சாட்சியாக தங்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர்.

அனைவரது வாழ்த்துகளும் அங்கு மங்கள அட்சதையாய் மணமக்களின் மேல் தூவப்பட்டு கதிர் சந்தனாவின் திருமணம் நல்லபடியாக நிறைவுற்று இருந்தது.

ஜெபா இவ்வளவு அழகான கோவில் திருமணத்தை எல்லாம் இதற்கு முன்னால் பார்த்ததேயில்லை. சிறுவயதில் இருந்தே சுமலதாவுடன் கோவிலுக்குச் செல்வதை விட ஆலெனுடன் தேவாலயத்திற்கு செல்வதைத் தான் விரும்புவான். ஞானஸ்நானம் பெற்று அவன் ஜெபசேகரன் ஆன பிறகு  கோவிலுக்கு வருவதே இதுதான் முதல் தடவை; சுமலதா சற்றே பயந்தது போல தன்னுடைய அக்காளின் கோவில் திருமணத்திற்கெல்லாம் அவன் கொஞ்சமும் எதிர்ப்பும் காட்டவில்லை; முகமும் சுளிக்கவில்லை.

"மாம்.... அத்தானும், சந்துவும் கோவில்ல மேரேஜ் வேணும்னு நெனச்சாங்கன்னா அவங்க அத தாராளமா பண்ணிக்கட்டும்! இதுல நான் கஷ்டப்படுறதுக்கோ,  யோசிக்குறதுக்கோ என்ன இருக்கு? கண்ணனும் சரி, கர்த்தரும் சரி...... எங்க பேரச் சொல்லி நீங்க அடிச்சுக்காம
ஒருத்தரோட ஒருத்தர் அன்பா இருங்கடா; மனுஷத்தன்மையோட இருங்கடான்னு தான் சொல்றாங்க.... ஆனா அந்த அட்வைஸ் எல்லாம் நம்ம மண்டைக்குள்ள ஏறவே மாட்டேங்குது! எது எப்டியோ.... சந்துவோட டெம்பிள் வெட்டிங்ல
நான் எல்லாத்துலயும் முன்னால நிப்பேன்!" என்று அன்றே சுமலதாவிடம் சொன்னான். இன்று சொன்னபடி முன்னால் வந்து நின்றான்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro