"ஆன்ட்டி..... வேணாம் ஆன்ட்டி! நீங்க அங்கிள்ட்ட எதுவும் பேச வேணாம்!" என்று பாகேஸ்வரியிடம் சொல்லி அவசரமாக எழுந்தவளை மறுபடியும் கையைப் பிடித்து இருக்கையிலேயே அமர்த்தியவன்,
"ஏய்....... சும்மாயிரு லஷ்மி! எங்கம்மா இப்ப கொஞ்ச நாளா தான் அந்த ஆள எதித்து கேள்வியே கேக்க ஆரம்பிச்சுருக்காங்க. அதுலயும் இன்னிக்கு சஞ்சீவோட அம்மா பேசுற மாதிரியே பாயிண்டா பேசுறாங்க. எங்க அம்மாவுக்கு இப்டியெல்லாம் பேசத் தெரியுமான்னு நெனச்சு நானே வாயப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா
இதப் போயி வேண்டாங்குறியே? அம்மா பேசுங்கம்மா! உங்க மனசுக்குள்ள இருக்குற ஒரு கேள்வியையும் உட்டுடாதீங்க! எல்லாத்தையும் அந்த ஆள்ட்ட கேளுங்க; சேகர் நீ ஏன்டா அங்க நின்னுட்டு இருக்க? கால் வலிக்கப் போவுது...... இங்க வந்து ஒக்காரு வா!" என்று ஜெபாவையும் அழைத்து தன்னுடைய இடப்புறத்தில் அமர வைத்துக் கொண்டான் கதிர்.
"ஏ.... பாகேஸூ! என்......னடீ? ஆத்தாளுக்கும், புள்ளைக்கும் என்னையப் பாத்தா அவ்ளோ எகத்தாளமா தெரியுதுல்ல?
புள்ள வீட்ல வந்து வசதியா ஒக்காந்துருக்கோம்,
புதுசா வேலைக்கு எல்லாம் போக ஆரம்பிச்சுர்க்குறோம், அங்க மொதலாளியா வேற இருக்கோம்னு நெனைப்பு வந்து
திமிராகிடுச்சாடீ ஒனக்கு? நிறைய பேசுற! அதுவும் எங்கிட்டயே தைரியமா பேசுற!" என்று இளக்காரமான ஒரு பார்வையுடன் கேட்டவரிடம்,
"ஒங்க கிட்ட பேசுறதுக்கு தைரியத்துக்கு என்னங்க கொறச்சலு? இதுநாள் வரயில எனக்குப் பேசத் தெரியாமயெல்லாம் நான் உங்ககிட்ட பொறுமையா போய்ட்டு இருக்கல; அப்பன் புள்ளைக்குள்ள ஏற்கனவே இருக்குற மனஸ்தாபம் நானும் பேசுறதால பெரிசாகிடக் கூடாதேன்னு தான் உங்க பேச்சுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு இருந்தேன்......!"
"எப்ப நீங்க உங்க இஷ்டத்துக்கு எம்புள்ள, எம்மருமக, அவ குடும்பத்துல இருக்குறவங்க, சஞ்சீவ் தம்பின்னு எல்லார் மேலயும் சகட்டுமேனிக்கு வார்த்தையால சேத்த அள்ளிப் போட ஆரம்பிச்சிட்டீங்களோ,
இனிமேலும் என்னால அமைதியா வாய மூடிக்கிட்டு இருக்க முடியாது பார்த்துக்கங்க.....!"
"கதிரு கிட்ட இருக்குற கடையெல்லாம் ஒரு சொடுக்குல மந்திரம் போட்டு வரவச்சதில்ல; அந்தப்பய இதையெல்லாம் ஒழைச்சு தான் வாங்கியிருக்கான்!"
அவன் சொத்த அவன் இஷ்டத்துக்கு அவன் என்னமும் பண்ணிட்டுப் போறான். நீங்க என்ன அவன் கடையில மொதல் போட்டீங்களா? இல்ல புள்ள முன்னேறட்டும்னு இப்ப எம்மருமக செஞ்சுக்கிட்டு இருக்குற மாதிரி அவங்கூடவே இருந்து அவனுக்கு ஏதாவது யோசன தான் சொன்னீங்களா? என்ன செஞ்சுட்டீங்கன்னு மாசம் ஒரு லட்சம் குடுன்னு நாக்கு கூசாம அவங்கிட்ட கேக்குறீங்க? இப்ப சொல்றேன். ஒங்கள கட்டிக்கிட்டதுல இருந்து
இத்தன வருசம் சொல்லாத ஒரு வார்த்தைய சொல்றேன்!"
"எம்புள்ளைக்கும், எம்மருமகளுக்கும் மரியாதை குடுத்து, அவங்களோட நிம்மதியான வாழ்க்கைக்கு தொந்தரவு தராம இந்த வீட்ல இருக்குறதுன்னா இருங்க! இல்ல.... ஊர் ஊரா சுத்துறது உங்களுக்கு ரொம்ப பிடிச்ச வேல தான? அந்த வேலையப் பாக்குறதுக்கு கெளம்புங்க! நீங்க என்னைய விட்டுட்டு போயிட்டீங்கன்னு நெனச்சு நான் அழப் போறதுமில்ல; நீங்க என்னைய விட்டுட்டுப் போற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்னு நெனச்சு வருத்தப்படப் போறதுமில்ல! இத்தன வருஷம் கழிச்சுத்தான் எனக்கு இந்த ஞானோதயம் பொறந்துருக்குன்னு நெனைக்குறேன். முதல்ல எம்மருமக கிட்டயும், அவ தம்பி கிட்டயும் உங்க பேச்சுக்கு மன்னிப்பு கேளுங்கங்க!" என்று மிக உறுதியான குரலில் பேசிய பாகேஸ்வரியை கதிர் உட்பட அனைவரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணராஜ் என்ன தவறு செய்தாலும் அவரை விட்டுக் கொடுக்காமல் அவர் பக்கத்தில் ஏதாவது நியாயத்தை தேடும் பாகேஸ்வரியைத் தான் சிறுவயதில் இருந்து கதிருக்குத் தெரியும்....... ஆனால் அவரையே மன்னிப்பு கேட்க சொல்லும் தைரியத்தை தன் தாய்க்கு வெளி உலக அனுபவம் தான் கற்பித்ததா என்று யோசனை செய்து கொண்டிருந்தான் கதிரேசன்.
"ம்ம்ம்! பாப்பாட்ட மன்னிப்பு கேக்குறீங்களா? இல்ல இப்டியே வெளிய கெளம்புறீங்களா?" என்று கேட்ட பாகேஸ்வரியிடம் எழுந்து வந்து அவரது கையைப் பற்றிய சந்தனா,
"ஐயோ வேணாம் ஆன்ட்டி! அங்கிள் பேசுனது எதையும் நான் பெரிசா எடுத்துக்கல; இத அப்டியே விட்டுடுங்க!" என்றாள் மெல்லிய குரலில்.
"சும்மாயிரு நீயி! அந்த காலத்துல இருந்து, இன்னிக்கு வரைக்கும் பொண்ணுங்கள பேசுனா தலைய குனிஞ்சுகிட்டு போயிட்டு இருந்தது போதும். கொஞ்சமாவது முகத்த நிமுத்தி, நம்மள பேசுனவங்கள எதித்து கேள்வி கேப்போம்! அங்கிள் பேசுனது எதையும் நான் பெரிசா எடுத்துக்கலன்னு சொன்னியே.....?"
"இவரு பேசுனத பெரிசா எடுத்துக்காமயா நீ ஆடிப்போன மாதிரி நின்ன? அதுவுமில்லாம எம்மகன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு வேற சொல்லப் போனியே பாப்பா? நீ இல்லாம கதிருக்கு கல்யாணமும் இல்ல; வம்ச விருத்தியும் இல்ல தாயி! நீ இவங்காசுல மஞ்சக்குளிச்சத எப்ப இவரு பாத்தாராம்? வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு எதையாவது பேசக்கூடாதுல்ல? கண்டிப்பா இவரு உங்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்!" என்று சந்தனாவிடம்
சொன்னவர் தன் கணவருடைய முகத்தை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றார்.
கதிர், ஜெபா, சந்தனா, பாகேஸ்வரி அனைவரும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவர் வேகமாக யோசித்து தன்னுடைய மகனிடம்,
"நீ இவ வீட்ல வேல பாத்தவன்னு இன்னும் இவளோட ஆத்தாக்காரிக்கு தெரியாதுல்ல?
நான் அங்க போய் ஒன்னைய பத்தி எல்லாத்தையும் சொல்லி ஒங்க கல்யாணத்த நிப்பாட்டிருவேன்!" என்றார்.
"ம்மா.... உங்க புருஷன நான் சாதாரணமா ஊர்சுத்திக்கிட்டு இருக்குறவருன்னு தப்பா நெனச்சுட்டேன்மா! எங்கள பிரிக்க
என்னென்ன கணக்கெல்லாம் போட்டு வச்சுருக்காரு பாருங்க!" என்று தன் அன்னையிடம் சிரிப்புடன் சொல்லி தன் தலையைக் கோதிக் கொண்ட கதிர்,
"போங்க ஸார்! கிருஷ்ணராஜ் ஸார்.... எங்க மாமியார்ட்ட போயி, அவங்கள பாத்து, எல்லாத்தையும் சொல்லிட்டு அப்டியே வடக்க போற ட்ரெயினுல உங்களுக்குப் பிடிச்ச
ஏதாவது ஊருக்கு டிக்கெட் வாங்கி சந்நியாசம் போயிடுங்க. என் வீட்ல இருந்துட்டு, எங்காசுல மஞ்சக்குளிச்சுட்டு, எனக்கே ஆப்படிக்கணும்னு நெனக்குற எவனுக்கும் நா ஒத்த ரூபா கூட செலவழிக்க முடியாது!" என்று தீர்மானமாக சொன்னவன் சந்தனாவின் அருகில் வந்து அவளது தோளில் கைபோட்டு கொண்டு,
"நீங்க மன்னிப்பு கேட்டீங்கன்னா நாங்க அடுத்த வேலையப் போய் பாப்போம்! உங்க வாயில இருந்து வர்ற வார்த்தைக்காக தான் ரொம்ப நேரமா எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்!" என்றான் உல்லாசமான குரலில்.
"நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின..... நன்மை கண்டோம்!" என்ற மனநிலையில் இருந்தான் அவன். தன்னிடமிருந்த விஷ சுரப்பி வேலை செய்யா விட்டால் ஒரு நாகம் எப்படி மண்புழுவை போன்ற ஒரு பாவப்பட்ட ஜந்துவோ, அதைப் போல் தன்னுடைய எல்லாப் பக்க வழிகளும் அடைபட்டு பாவமாக நின்று கொண்டிருந்தார் கிருஷ்ணராஜ்.
உணவு, உடை, இருப்பிடம் போக மகனிடமிருந்து மாதா மாதம் கிடைக்கும் வருவாயில் தான் அவரது வெளியுலக இன்பங்கள் அனைத்தும் அடங்கியிருக்கிறது. அதில் போய் அவன் கை வைத்தான் என்றாலோ, இப்போது சொன்னது போல வீட்டை விட்டு துரத்தி விட்டான் என்றாலோ முதலுக்கே மோசமாகி விடும் என்று நினைத்தவர்,
"என்னைய மன்னிச்சுடு!" என்று சந்தானலஷ்மியிடம் ஒருவழியாக மன்னிப்பு கோரியும் இருந்தார்.
"அப்பாடா! ஒரு பிரச்சன முடிஞ்சது! நல்லா காதலிக்குறாய்ங்கடா ரெண்டு பேரும்; நாளுக்கு ஒரு பிரச்சனையும்; பொழுதுக்கு ஒரு பஞ்சாயத்துமா! நமக்கெல்லாம் ஆலென் பொண்ணு பாத்து குடுக்கலையின்னா நம்ம பேசாம கர்த்தருக்கு ஊழியம் பண்ண போயிரணும்!" என்று நினைத்து ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினான் ஜெபசேகரன்.
ஒரு சின்ன பெண்ணிடம் போய் மன்னிப்பு கேட்க வைத்து விட்டார்களே என்ற எரிச்சலில் கிருஷ்ணராஜ் வழக்கம்போல தன் செருப்பை அணிந்து கொண்டு வெளியில் சுற்றக் கிளம்பி விட்டார்.
"ம்மா..... உங்க வீட்டுக்காரர் ரவுண்ட்ஸூக்கு கிளம்பியாச்சு! இனிமே ராத்திரி தான் திரும்பி வருவாருன்னு நினைக்கிறேன்!" என்று சொன்ன மகனிடம் பதிலேதும் பேசாமல் ஸோஃபாவில் மடிந்து அமர்ந்த பாகேஸ்வரியின் கண்களில் நீர் பெருக ஆரம்பித்தது.
"ம்ப்ச்! என்னம்மா நீங்க? என்னைக்கும் இல்லாம இவ்ளோ தைரியமா இருக்கீங்கன்னு நெனச்சா மறுபடியும் பழைய குருடி கதவ திறடின்னு ஆரம்பிக்குறீங்களே? இப்ப எதுக்காக அழறீங்க?" என்று கேட்ட மகனின் சிகையை தடவிக் கொடுத்தவர்,
"உங்க அப்பா செஞ்சது, செய்றதெல்லாம் தப்பா இருக்குய்யா, ஆனாலும் அவர திட்டையில எம்மனசு வலிக்குதே? என்ன செய்ய?" என்று கேட்டு கண்களில் நீர் பெருக்கினார் பாகேஸ்வரி.
"உங்க பாசம், என் பாசத்துக்கு எல்லாம் எங்க அப்பன் கிட்ட வேலையே இல்ல! கடைசி வரைக்கும் அந்த ஆளு நம்ம அன்பையும் புரிஞ்சுக்கப் போறதில்ல; அதுனால இப்டியெல்லாம் ஒக்காந்து அழாதீங்க!" என்றான் கதிர்.
"ஆமா ஆன்ட்டி; அழாதீங்க! நீங்க இப்டி வருத்தப்பட்டுட்டு இருந்தா கதிர்ணா எங்க அக்காவ தான் சமைக்க சொல்லிருவாரு! உங்க கையால நல்ல ஒரு வெஜிடேரியன் சாப்பாடு சாப்டலாம்னு நெனச்சு தான் நாங்க ரெண்டு பேரும் இங்க கெளம்பி வந்தோம். எங்க வீட்ல ஆலென் நண்டு, மீனுன்னு வாங்கி கழுவி ஊற வச்சுட்டு அந்த கேப்ல
எங்க அம்மாவ கரெக்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு. அங்க இருந்தா ஒரே ரொமான்ஸா இருக்குதுன்னு, இங்க வந்தா ஒரே அழுகாச்சியா இருக்குது! என்ன செய்யறது...... நான் போறதுக்கு மூணாவதா வேற இடம் இல்லையே?" என்று நீட்டி முழக்கியவனிடம் கண்களை துடைத்துக் கொண்டு சிரித்த பாகேஸ்வரி,
"அதுனால என்னய்யா தம்பி? நாம இங்கயே சைவம் சமைச்சு சாப்டலாம்; ஆனா ஒனக்குப் பிடிச்சது, பாப்பாவுக்கு பிடிச்சதுன்னு கொஞ்சம் காய்கறிங்க வாங்கணுமே?" என்று கேட்க ஜெபா தன்னுடைய அக்காவையும், கதிரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அதுனால என்ன ஆன்ட்டி? வாங்க உங்கள நான் மார்க்கெட்டுக்கு
கூட்டிட்டுப் போறேன். ஜாலியா வண்டியில ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு காய்கறிங்கள கூடையில போட்டு அள்ளிட்டு வருவோம்!" என்றான்.
"அப்ப சரி தம்பி.....!" என்று ஜெபாவிடம் சொன்ன பாகேஸ்வரி,
தன் மகனிடம்,
"கதிரு..... நீயும், பாப்பாவும் பேசிக்கிட்டு இருங்கய்யா; நாங்க மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்துடுறோம்!" என்று சொல்லி விட்டு தன்னுடைய புடவையை மாற்றிக் கொண்டு வருவதற்கு அறைக்குள் சென்றார்.
"என்ன..... இன்னும் மொறச்சுக்கிட்டே நிக்குற? உன் ஸ்ட்ரெஸ எல்லாம் கீழ இறக்கி வையி! கதிர்ணாவ உங்கிட்ட தனியா விட்டுட்டுப் போறேன். அரைமணி நேரத்துல நாங்க திரும்பி வந்துடுவோம். அதுக்குள்ள அவர அடிப்பியோ, கடிப்பியோ இல்ல எப்பவும் போல தலையப் பிடிச்சிக்கிட்டு ஒக்காருவியோ அது உன் இஷ்டம்; ஆனா நாங்க போயிட்டு திரும்பி வீட்டுக்கு வர்றதுக்குள்ள நீ நார்மல் ஆகியிருக்க புரியுதா?" என்று தன் அக்காவிடம் சொன்னவன்,
"ஏன்டா இந்த வேலை பாக்குற?" என்பது போல் அவனிடம் கையை விரித்த கதிரிடம் கண்சிமிட்டி சிரித்து விட்டு சற்று நேரத்தில் பாகேஸ்வரியுடன் வெளியே கிளம்பினான்.
"ஸார்.... உங்களுக்காக இந்த ரேஷன் இப்போ என்ன செய்யணும்?" என்று கேட்டவனிடம் உச்சபட்ச எரிச்சலில்,
"நீ ஒண்ணும் செஞ்சு கிழிக்க வேண்டாம்! கொஞ்ச நேரம் என்னை தனியா இருக்க விடு!" என்றாள் சந்தனா.
"நீ தனியா இருக்குறதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு சேகர் எங்கம்மாவ வெளிய கூட்டிக்கிட்டுப் போனான்? நம்ம ரெண்டு பேருமா தனியா இருக்குறதுக்குடா சூபொ!" என்று சொல்லி அவளருகில் சென்றவன், காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளை அப்படியே பொம்மை போல் தொடையிலும், முதுகிலும் பற்றித் தூக்கிக் கொண்டு மாடிக்கு ஏறினான்.
சிறுநகை மலரும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro