Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❤ சிறுநகை 36

மாலை நான்கு மணியளவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சந்தனாவை ஜெபா தொட்டு அசைத்து எழுப்பிக் கொண்டிருந்தான். அவன் எழுப்பிய ஐந்தாவது நிமிடத்தில் உறக்கம் கலைந்து எழுந்தவள்,

"என்னடா வேணும் உனக்கு?" என்று எரிச்சலடைந்த குரலில் கேட்டாள்.

"வா... ஸ்விம் பண்ணப் போவம். கிட்ஸ், கதிர்ணா, நான் எல்லாரும் போறோம். நீ வர்றியா? இல்லையா?" என்று அவளிடம் கேட்க உச்சபட்ச கொதிநிலையை அடைந்தாள் சந்தனா.

"பல்லு இருக்குறவன் பனங்கிழங்க தின்னுட்டுப் போக வேண்டியதுதானடா? நான் எதுக்கு அங்க? நம்ம ஆட்டமெல்லாம் அஞ்சறை அடி ஸ்விம்மிங் ஏரியாவுல தான் தம்பி! நீ கூட்டிட்டுப் போறேன்னு கேக்குறது கடலு ராஜா கடலு..........! நான் பாட்டுக்கு உள்ள போயிட்டேன்னா எவன்டா என்னைய காப்பாத்துறது?" என்று கிண்டலாக கேட்டவளிடம்,

"என்ன சந்து? அதுக்கு தான் நானும், கதிர்ணாவும் இருக்கோம்ல? அப்டியா உன்னைய விட்டுடுவோம்?" என்று சொல்லி தன் அக்கா தரையில் இருந்து எழுந்திரிக்க கையை நீட்டினான் ஜெபசேகரன்.

"நீங்க என்னைய உட்டுடுவீங்களா, உட மாட்டீங்களான்னு எக்ஸ்ப்ரிமெண்ட் பண்றப்ப ஒரே ஒருதடவ என் உசுரு போயிடுச்சுன்னா? நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா!
ரொம்ப நாளைக்குப்புறம் ஆன்ட்டி சாப்பாட்ட என்ஜாய் பண்ணி சாப்ட்டு, தூங்குனா உனக்கு அது பொறுக்கலையா? போடா போ! குட்டீஸ் ரெண்டு பேரும் பத்திரம்! நீயும் ரொம்ப டைவ், கீய்வ்னு தவ்விட்டு இருக்காத! போயிட்டு வா!" என்று அவனிடம் சொல்லி விட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள் சந்தனா.

ஐந்து மணியாக கால் மணி நேரம் இருக்கையில் சமையலறையில் இருந்து வந்த ஏதோ ஒரு நல்ல வாசம் அவளை எழுப்பி விட்டது. முகம் கழுவி சற்று ப்ரெஷ் ஆகி காலையிலிருந்து போட்டிருந்த சுடிதாரை மாற்றி இன்னொரு சுடிதாரில் சற்று பளிச்சென வந்தவளை பார்த்த பாகேஸ்வரி புன்னகைத்து நெட்டி முறித்தார்.

"நல்ல தூக்கமாடா பாப்பா?" என்றவரிடம் புன்னகைத்த படி தலையாட்டியவள்,

"எங்க வீட்ல விட இங்க எனக்கு நல்லா தூக்கம் வந்தது ஆன்ட்டி! என்ன.... இந்த பாய் தான் என் முகத்துல கோடு கோடா போட்டு விட்டுடுச்சு!" என்று சொன்னவளிடம்,

"பாய்ல முகத்த வச்சு தூங்குனா அப்டித்தான கண்ணு ஆகும்! நீங்க ரெண்டு பேரும் இதெல்லாம் பாக்காமயே வளந்தவிங்க பாரு!" என்றவர் சந்தனாவின் தலையை வருடி,

"நீ உங்க அம்மாவாட்டம் இல்லடா பாப்பா! எது கிடைக்குதோ அதுல சமாளிச்சு இருந்துக்குற; முன்ன மாதிரி பளாபளான்னு கண்ண கூச வைக்கிற துணி செருப்பெல்லாம் போடாம, உனக்கு எது பாந்தமா இருக்குமோ அதப் பாத்து போடுற! இத்தன வருஷத்துல உங்கிட்ட நெறய வித்யாசம் தெரியுதுடா பாப்பா..... அப்பா, அம்மால்லாம் எப்டி இருக்காங்க தங்கம்? வந்ததுல இருந்து நா அதக்கூட கேக்கவேயில்ல பாரேன்!" என்று வருந்தியவரிடம்,

"விடுங்க ஆன்ட்டி! நீங்க அவங்கள விசாரிக்காம விட்டது தான் இப்ப பெரிய பிரச்சனையா? டாட் அண்ட் மாம் ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. எங்கிட்ட உங்களுக்கு தெரியுற இந்த வித்தியாசம் உடனே வந்தது இல்ல ஆன்ட்டி! ரொம்ப கஷ்டப்பட்டு, நிறைய அனுபவப்பட்டு வந்த வித்தியாசம்! அதுனால இந்த வித்தியாசம் நல்லாத்தான் இருக்கும்!"

"பழைய சந்தானலஷ்மியா இருந்தா நான் இந்த வீட்டுக்குள்ள வந்துருக்கவே மாட்டேன். பட் இப்ப நான் அப்படியில்ல! அம்மாவும் அப்படியில்ல; அம்மாவுக்கு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா ரியாலிட்டி புரிய ஆரம்பிச்சுருக்கு! அவங்களோட கேரக்டர்ல கொஞ்சம் சேன்ஜ் வந்துருக்கு!"

"இப்போல்லாம் யாருக்கும் பார்ட்டி, தானம்னு பணத்த அள்ளி இரைக்காம ஆலென்ட்ட கன்சல்ட் பண்ணி செலவு பண்றாங்க! என்னையும், ஜெபாவையும் ஒக்கார வச்சு எங்க கூட நிறைய பேசுறாங்க! அதுவே எங்களுக்கு போதுமானதா இருக்கு ஆன்ட்டி!" என்று சொன்ன சந்தனா சற்று தயங்கிய படி பாகேஸ்வரியிடம்,

"ஆன்ட்டி..... கதிர் கூட எனக்கு கல்யாணம்னா அது சர்ச்லயும் ஒருதடவ நடக்கும்னு நினைக்கிறேன் ஆன்ட்டி! இத நீங்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒத்துக்கணும்; மாமாட்டயும் இத புரிய வைக்கணும்!" என்றாள்.

"ஐயயோ..... அந்த மனுஷங்கிட்ட நான் என்னத்த தான்மா பேசுறது? கதிரு இங்க இருந்து காலி பண்ணி அவங்கூட வந்து தங்க சொல்றான்; கையில நெறைய பணம் இருக்கு; அது போக இப்ப கல்பனா இருக்குற மாதிரி ஒரு வீட்ல வேற இருக்கேங்குறான்!

"காரு என்னது; கல்பனா வீடு என்னதுன்னு நெஞ்சு பொளக்குற மாதிரி அம்புட்டு சொத்த என்னது என்னதுங்குறான்;
இதுக்கு மேல உங்க கல்யாணம் வேற இருக்கு; அதுவும் சர்ச்ல நடக்கும்னு வேற சொல்ற..... இது எல்லாத்தையும் கதிரப்பா கிட்ட நான் எப்டி சொல்லி அந்த மனுஷன எப்டி சரிகட்ட போறேனோ தெரியலயே...... ஆனா ஒண்ணு, நீ கதிர கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் பாப்பா!" என்று சொன்ன பாகேஸ்வரியிடம்,

"உங்களுக்கு சந்தோஷம் தான? அது போதும். கதிரோட அப்பாவ சமாளிக்குற வேலைய நான் பார்த்துக்குறேன். ஒருவேள எங்க அம்மாவ சமாளிக்குற வேலை ஏதாவது வந்தா, அத கதிர் பாத்துப்பான். நீங்க எதுக்கும் டென்ஷன் ஆகாம, எனக்கு ஒரு பருப்பு வடைய குடுங்க. ஆமா, எதுக்காக இத்தன வடையும் சட்னியும்? குளிக்கப் போன நாலு டிக்கெட்டும் இன்னும் திரும்பி வரலையாக்கும்? அதுங்க சாப்டுறதுக்கு தான?" என்று கேட்டாள் சந்தனா.

"இல்ல.... கதிரோட அப்பா காலையிலயே கோவிச்சுக்கிட்டு கிளம்பிப் போய்ட்டாரு! அவரு இந்த நேரத்துல வீட்டுக்கு வந்தா சாப்ட சூடா ஏதாவது செய்யின்னு சொல்லுவாரு..... அதுக்காகவும், நம்ம எல்லாருக்காகவும் தான் செஞ்சேன் தங்கம்! ஏம்பாப்பா அவருட்ட பேசி அவர ஊருக்குப் போறதுக்கு சம்மதிக்க வக்கிற வேலைய நெசமாவே உன்னால செய்ய முடியுமா?" என்று பயந்த குரலில் கேட்ட தன்னுடைய வருங்கால மாமியாரிடம்,

"ஏன் முடியாது? கண்டிப்பா முடியும். நீங்க வாங்க. நாம கல்பனா அக்கா வீட்ல போய் வெயிட் பண்ணலாம்!" என்று சொல்லி பாகேஸ்வரியை அழைத்துக் கொண்டு கல்பனாவின் வீட்டிற்கு சென்றாள் சந்தனா.

கல்பனாவின் கணவன் அவளிடம் நாளை அவனுக்கு ஆடிட்டிங்க் அதனால் இன்றிரவு வீட்டிற்கு நள்ளிரவில் தான் வருவேன் என்று நாலரை மணிக்கே சொல்லி விட்டதால் அவள் பொழுது போகாமல் மொட்டை மாடியில் நின்று கொண்டு தன்னுடைய மகள்கள் கதிர் மற்றும் ஜெபாவுடன் போடும் ஆட்டத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்களுடைய வீட்டின் பின்பக்க வாயில் வழியாக இறங்கி இரண்டு நிமிடங்கள் நடந்தால் கடல் தான்.... வெண்மதியும், இளமதியும் தங்கள் தந்தையின் கூட சென்று குளிப்பதை விட கதிருடன் சென்று குளிப்பதை மிகவும் விரும்புவர். அவன் தான் அவர்களுடைய ஆட்டம் அனைத்திற்கும் ஈடுகொடுத்து நிற்பான்.

இன்று ஜெபாவும் அவர்களுடன் சேர்ந்ததால் இருவரது கண்காணிப்பில் வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிறத்தில் இருந்த இரண்டு பறவை மிதவைகளிலும் வெண்மதியும், இளமதியும் குதூகலித்த படி நீந்திக் கொண்டிருந்தனர்.

"கிட்ஸ் ரொம்ப ஜாலியா விளையாடுறாங்கல்ல கல்பனா? நாமளும் போயிருக்கலாம்!
ஆனா நம்மள தண்ணிக்குள்ள இழுத்துப் போட்டுடுச்சுங்கன்னா மண்ணு, தண்ணி இதெல்லாம் ட்ரெஸ்ல பட்டு ஒரே கசகசப்பா இருக்கும்!" என்று சற்றே ஏக்கமாக சொன்னவளிடம் கிண்டலாக,

"அப்படி பயப்படுறவ இங்க உக்காந்தே அவங்க விளையாடுறத பாக்க வேண்டியதுதான்!" என்றாள் கல்பனா.

சந்தனாவும் அதைத்தானே செய்து கொண்டிருந்தாள்? என்ன ஒன்று.... இந்த முறை ஜெபா, வெண்மதி, இளமதி எல்லாரும் அவளுக்கு அவுட்ஃபோக்கஸில் தெரிந்தார்கள்.

கதிரின் சொட்டு சொட்டாக நனைந்த தேகமும், கொஞ்சமாக நிறம் மாறிய ப்ரவுன் நிற பாறை போன்ற அவனது மார்பும், தோளும், புஜங்களும், வயிறும்...... அப்பப்பா என்ன உடம்ப இப்டி வச்சுருக்கான்?" என்று அவளை நினைக்க வைத்தன.

இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜுகள் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் நேராக சென்று அவன் கழுத்தைப் பற்றிக் கொண்டு தண்ணீருக்குள் சென்றிருப்பாள்.

ஆனால் தரையிலேயே பொசுக்கு பொசுக்கென்று கட்டிப் பிடித்து, கன்னத்தை கடிப்பவன் தண்ணீருக்குள் ஒழுக்கத்தை காப்பானா என்று யோசித்துக் கொண்டு தான் பேசாமல் தூரத்தில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனதின் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிந்தோ அறியாமலோ வாய் வார்த்தையாக கல்பனாவிடம் கொட்டி விட்டாள்.

"ஏன் கல்பனா.... கதிர் ரொம்ப அழகா தெரியுறான்ல? ஃப்யூச்சர்ல ரெண்டு நிலாங்க மாதிரி குழந்தைங்களுக்கு அப்பாவா ஆனான்னா இப்டிதான் அவங்கள ரொம்ப கேரிங்கா பாத்துப்பான் போலிருக்கு!" என்று சொன்னவள் ஆசையாக வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பிள்ளைகள் இருவருக்கும் டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள்.

"ஏம்புள்ள.... நீ என்ன அவன தூரத்துல இருந்து சைட் அடிக்குறியா? ரெண்டு நிலாங்களுக்கும் அப்பா ஏற்கனவே ஆஃபிஸூல ஒக்காந்து பொட்டிய தட்டிக்கிட்டு இருக்காரு தாயி; சீக்கிரமா கல்யாணத்த பண்ணிக்கிட்டு, உங்க ரெண்டு பேரோட ஓன் மேனுஃபேக்சரிங்க்ல நிலாவ மாதிரி பெத்துக்குவீங்களோ இல்ல வால் நட்சத்திரம் மாதிரி பெத்துக்குவீங்களோ...... நல்லபடியா குழந்தைங்கள பெத்துட்டு அப்புறம் கொஞ்சுங்க! அதுவரைக்கும் இந்த குட்டிப்பிசாசுங்கள வச்சு ப்ராக்டீஸ் எடுத்துக்குங்க..... கீழ டீவி பக்கத்துல இருக்குற ரூம்ல நாலு டவல்ஸ் எடுத்து வச்சுருக்கேன். அத எடுத்துட்டுப் போயி கதிர்ட்ட குடு!
புள்ளைங்கள ஜெபா கூட அனுப்பிட்டு அவங்கூட
போயி ஏதாவது ரொமான்ஸ் பண்றதுன்னாலும் ஓகே தான்..... எனக்கு ஒண்ணும் ஆட்சேபனையில்ல!" என்று சந்தனாவிற்கு ஒரு வேலையைக் கொடுத்த கல்பனாவிடம் சற்று நேரத்தில்,

"கல்ப்புமா.... பிள்ளைங்க வந்தவுடனே சாப்ட கொஞ்சம் வட போட்டு வச்சுட்டேன்; இந்தப்பய ஒவ்வொரு தடவ வீட்டுக்கு வரும்போதும் அவ்ளோ சந்தோசமா இருக்கும்! இன்னிக்கு என்னடான்னா என்னென்னத்தையோ பேசி,
நம்மள ரொம்ப பதட்டமாக்கி உட்டுட்டான்! எம்மனசு ரொம்ப குழப்பமா இருக்கு! ஒருநடை கோவிலுக்குப் போயிட்டு வருவமாத்தா?" என்று கேட்டார் பாகேஸ்வரி.

"போலாம்மா... இவங்களும் வீட்டுக்கு வர லேட் ஆகும்னு இப்பதான் போன் பண்ணுனாங்க! பிள்ளைங்க ரெண்டையும் கதிரும், சந்தனாவும் பாத்துக்கட்டும்! நாம ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டு கொஞ்சம் சாவகாசமா வீட்டுக்கு வருவோம்!" என்று அவள் சொல்ல அடுத்த பதினைந்து நிமிடத்தில் பாகேஸ்வரியும், கல்பனாவும் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் கிளம்புவதற்குள் கடலில் குளிக்கப் போனவர்களும் வீட்டிற்கு வந்து விட கால் டாக்ஸியில் போய் வருகிறோம் என்று சொன்னவர்களை ஜெபா தான் அப்படியெல்லாம் செல்ல வேண்டாமென மறுத்து கதிருடைய காரில் அவர்களிருவரையும் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னவன் அவசரஅவசரமாக தன்னுடைய ஆடையை மாற்றிக் கொண்டு வந்தான்.

"கோயிலுக்கா? ம்ஹூம்..... வீ ஆர் ஸோ டயர்டு!" என்று சொன்ன சிறுமிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சந்தனா, கதிருடையதாகிப் போனது.

"கதிரு.... அப்பா வந்தாருன்னா அவருக்கு நைட்டு சாப்பாட்டுக்கு ஏதாவது பாக்கணுமுய்யா!" என்று யோசித்த படி சொன்ன அவனுடைய அன்னையிடம்,

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்! பிள்ளைங்களுக்கும் சாப்பாடு குடுத்து தூங்க வச்சுடுறேன். நீங்க சேகர் கூட எங்கங்க போகணுமோ, நிதானமா போயிட்டு வாங்க!" என்று சொல்லி மூவரையும் அனுப்பி வைத்திருந்தான் கதிர்.

"உன்னோட இந்த வீடும் ரொம்ப அழகாயிருக்கு கதிர்! நான் இன்னிக்கு ஒருநாள் இங்க தங்கிக்கட்டுமா? அந்த வீட்ல தூங்குறப்ப எங்க உம்மேல வந்து இடிச்சுடுவேனோன்னு நினைச்சு எனக்குப் பயமாயிருக்கு!" என்று அவனிடம் சொன்ன சந்தனா கதிர் ஏதோ பேச தொடங்கும் முன்,

"சரி நீ டின்னர் வேலைய பாத்துக்க! நாங்க மூணு பேரும் போய் விளையாடுறோம்!" என்று அவனிடம் சொல்லி விட்டு சென்றாள்.

"நான் பேசுறத ஒரு நாள் கூட நின்னு கேக்குற பழக்கமும் கிடையாது! அவ சொல்றத முழுசா காதுல கேட்டனான்னு கவனிக்குறதும் கிடையாது! அப்டியே நிஜாம் பொண்டாட்டி மாதிரி மண்டைய சிலுப்பிக்கிட்டே போறது! இருடீ.... ஒம்மண்டைய எங்கையால இறுக்கிப் புடிச்சு உன்னைய எம்பேச்ச முழுசா கேட்டுட்டுப் போடீன்னு சொல்ற தைரியம் எனக்கு ஒருநாள் வரும்! அப்ப பாத்துக்குறேன் ஒன்னைய!" என்று தன் எப்போதும் வழக்கமாய் வாய்க்குள் முணங்குவதை இன்றும் முணங்கிக் கொண்டிருந்தான் கதிரேசன்.

சிறுநகை மலரும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro