Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சைக்கிள் Part 2


தனபாலன்தான். இரண்டு கைகளையும் நீட்டி அவனைக் கட்டியணைக்க முயன்றேன். ஆனால், அவன் அதற்கு முன், ''அம்மா, இதுதான் மேலிங். என் கர்ல்பிரண்ட் (girlfriend) என்று அவன் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு சீனப் பெண்ணை முன்னால் இழுத்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். வீட்டிற்குள் நுழைந்த தனபாலன் தன் தாயை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. ''அம்மா பசிக்குது,'' என்று மட்டும் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டான். பின்னாடியே மேலிங்கும் சென்றாள். அவளின் குட்டைப் பாவாடை காற்றில் அசைந்து மறைந்திருக்க வேண்டியதையெல்லாம் காட்டியது!

மகனுக்காகச் சமைத்து வைத்திருந்த கோழிக் கறி, மீன் பொரியல், ரசம், காய்கறி வகைகள் அனைத்தையும் மேசைமீது எடுத்து வைத்தேன். இருவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிடும்போது தனபாலன் என் முகத்தைப் பார்ப்பான் என்று அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவன் மேலிங்குடன் சிரித்துப் பேசிக்கொண்டே இருந்தான். ஒருமுறைகூட என்னைப் பார்க்கவில்லை. ''அம்மா, மேலிங் சரியாகச் சாப்பிடவில்லை. அவளுக்கு இந்திய உணவு பிடிக்காது. நான் கீழே போய் அவளுக்கு 'ஹோ ஃபன்' வாங்கிக்கொடுத்திட்டு வரேன்,'' என்று கூறிவிட்டு, தனபாலன் கதவைத் திறந்து வெளியே சென்றான். பின்னே மேலிங்கும் சென்றாள். தேசிய நாள் நிகழ்ச்சியை இம்முறையும் தொலைக்காட்சியில்தான் கண்டேன்!

என் மகன் தனபாலன் மிகவும் நல்லவன். அம்மாவிற்கு எந்தப் பாரத்தையும் கொடுக்கவில்லை! பொதுக் கல்விச் சாதாரண நிலைத்தேர்வில் சரியாகத் தேர்ச்சி பெறவில்லை. அதனால், தொடக்கக் கல்லூரிக்கு அனுப்புவதா, பலதுறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்புவதா என்ற வீண் குழப்பத்தையெல்லாம் எனக்கு அவன் தரவில்லை. நேராக ஐ.டி.இ (ITE) தான்! பெரிதாக அங்கும் நன்றாகத் தேர்ச்சி அடையவில்லை! பல்கலைக்கழகம் அனுப்பும் செலவையும் அவன் எனக்கு மிச்சப்படுத்திவிட்டான். இப்போது திருமணச் செலவையும் அவனே பார்த்துக்கொண்டான்! நல்ல வேளை இவற்றையெல்லாம் பார்த்து உடைந்துபோக அவனின் அப்பா உயிருடன் இல்லை!

''அம்மா, நான் மேலிங்கைத் திருமணம் செய்யப் போகிறேன். இன்னும் இரண்டு வாரங்களில் எங்கள் 'ஆர் ஓ எம்' (ROM),'' என்றான் தனபாலன். என் மூச்சுக்காற்று மொத்தமாக வெளியாகி மறுபடியும் சுவாசப் பைக்குள் வந்து அடங்கியது.

''என்னடா இது திடீர் முடிவு?''

"திடீர் முடிவெல்லாம் இல்லை. நான் தான் மேலிங் என் காதலி என்று இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே உங்களிடம் சொல்லிவிட்டேனே. இப்போது எங்களுக்குத் திருமண வயதாகிவிட்டது. திருமணம் முடிந்து நாங்க கலிபோனியாவிற்குச் செல்லப் போகிறோம். அங்கே மேலிங்கின் அப்பா எனக்காக ஒரு நல்ல வேலை பார்த்திருக்கிறார். மேலிங்கின் குடும்பத்தினர் எல்லாரும் அங்குதான் இருக்காங்க. அதனாலே நானும் அங்கே செட்டலாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்,'' என்று தனபாலன் மிகவும் அலட்சியமாகக் கூறினான்.

''ஆனா, உன் குடும்பம் இங்கதானடா இருக்கு''

''என்ன பெரிய குடும்பம்? எனக்கு அப்பா, ரெண்டு அண்ணன், நாலு தங்கச்சியா இருக்காங்க? நீங்க மட்டும்தானே. என் கூட வந்திருங்க. அதெல்லாம் மேலிங் ஒன்னும் சொல்லமாட்டா,'' என்று நக்கலாகக் கூறினான்.

அதைக் கேட்டதும் எங்கிருந்துதான் எனக்குக் கோபம் வந்தது என்று தெரியவில்லை. என் பலத்தையெல்லாம் திரட்டி முதன்முறையாகத் தனபாலனை 'பளார்' என்று அறைந்துவிட்டேன். அந்த அதிர்வில் சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் கீழே விழுந்து நொறுங்கியது. அந்தச் சிதறலை தன் காலால் வேகமாக உதைத்துவிட்டுத் தனபாலன் வீட்டை விட்டே கிளம்பிவிட்டான். ''தனபாலன்!'' என்று கத்தினேன். பக்கத்து வீட்டு அமீனா என்ன என்று எட்டிப்பார்த்தார். அவரின் தோளைப் பிடித்துக்கொண்டு அழுதேன். அவர் நடந்தது என்ன என்று தெரியாமலேயே எனக்கு ஆறுதல் கூறினார். தனபாலனை அடித்ததில் என் கை கன்னிப்போயிருந்தது. ''அவனுக்கு எப்படி வலித்திருக்கும்,'' என்று என் தாய்மனம் புலம்பியது. அதற்குப் பிறகு தனபாலன் என்னைத் தேடி வரவேயில்லை!

''பாட்டி. . பாட்டி,'' என்று மாயா சிணுங்கிக் கொண்டே என் வீட்டிற்குள் நுழைந்தாள்.

''ஏண்டா கண்ணு அழறே?'' என்று அவளைத் தூக்கிக் கொஞ்சினேன்.

''அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க பாட்டி.''

''அம்மாதானம்மா. மாயா என்ன தப்பு செஞ்சீங்க?''

''எனக்கு 2டைம்ஸ் டேபிள் சொல்லத் தெரியலேனு அடிச்சிட்டாங்க பாட்டி. அம்மாவை எனக்குப் பிடிக்கலே. நான் இனிமே அம்மாவோட பேசவே மாட்டேன். நான் உங்கக் கூடவே தங்கப் போறேன்,'' என்று சொல்லிக்கொண்டே மாயா என் மடியில் படுத்துக்கொண்டாள்.

''அப்படியெல்லாம் சொல்லக்கூடாது தங்கம். அம்மா மனசு எப்படி வேதனைபடும். பாட்டி உனக்கு 2டைம்ஸ் டேபிள் சொல்லித் தர்றேன். நீ போய் அம்மாகிட்டே சொல்லு. அவங்க என் பொன்னைப் போல உண்டான்னு சொல்லுவாங்கப் பாறேன்.'' என்று மாயாவைச் சமாதானப்படுத்தினேன். பிள்ளையைப் பிரிந்து வாழ்வது நரக வேதனையிலும் கொடியது என்பது அவர்களைப் பிரிந்த பெற்றோருக்குத்தான் தெரியும்!

வெள்ளை மேகங்களைக் கிழித்துக்கொண்டு வந்த ஒரு இராட்சதப் பறவை என் மகனைக் கலிபோனியாவிற்குத் தூக்கிச் சென்றுவிட்டது. விமானம் என்ற அந்தப் பறவை எப்போது மீண்டும் என் மகனைச் சுமந்து வரும் என்று ஒவ்வொரு முறையும் வானத்தைப் பார்த்துப் பார்த்து அதிலிருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தையும் எண்ணி முடித்திருப்பேன். ஆனால், சென்ற விமானம் திரும்பி வரவில்லை. ஒரு தொலைபேசி அழைப்புத்தான் வந்தது. தனபாலன் சென்று 5 வருடங்கள் கழித்து!!

''பாட்டி, அடுத்த புதன்கிழமை எனக்குப் பத்துடே (பிறந்தநாள்). நீங்க கண்டிப்பா என் வீட்டுக்கு வரனும். அப்பா அம்மாகிட்டே சொல்லிட்டேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.'' கண்ணில் சிரிப்புடன் மாயா கூறினாள். சொல்லும்போதே அவள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது!

''பாட்டி இல்லாமலா, கண்டிப்பா வருவேண்டி செல்லம்.''

''பாட்டி, பிறந்தநாள் பரிசு மறந்துடாதீங்க,'' என்று குழந்தை நினைவுப்படுத்தியது.

''மறக்கமாட்டேன் தங்கம்''

''ஹலோ''

அம்மா, எப்படி இருக்கீங்க?''

''யாரு? தனபாலனா? இந்த அம்மாவை மறந்திட்டே, இல்லடா?''

''அப்படியெல்லாம் இல்லம்மா. மறந்திருந்தால் இப்போ கூப்பிடுவேனா?''

தனபாலனின் பதிலைக் கேட்டு எனக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

''அம்மா, நான் ஏன் கூப்பிட்டேன்னு கேட்டா, நீ ரொம்ப சந்தோஷப்படுவே.''

இலேசாக ஒரு தென்றல் வீசியது. ''சொல்லு தனபாலன். உன் மனைவி நல்லாயிருக்கா?''

அதற்குப் பதில் இல்லை. ஆனால் தனபாலன் தொடர்ந்து பேசினான்.

''அம்மா, நானும் மேலிங்கும் அங்க வர்றதா இருக்கோம். உன் பேத்தியும்தான். சந்தோஷமா?''

பேத்தி என்ற சொல்லைக் கேட்டதும் தென்றலுடன் மலர்களும் பூத்துக் குலுங்கின. ''எப்படா?''

''அடுத்த வாரம் சனிக்கிழமை. பிளைட் டிக்கெட் புக் பண்ணிட்டோம். அம்மா, என்னோட பிறந்த சூறாவைத் தேடி எடுத்து வையுங்க. இங்க சிட்டிசன்ஷிப் அப்பலை பண்றதுக்கு அது கேக்குறாங்க. சரிம்மா. நான் வைச்சிடுறேன்,''

தென்றல் சூறாவளியானது! பழையக் கட்டுகளைப் பிரித்து தனபாலனின் பிறப்புச் சான்றிதழைத் தேடி எடுத்து வைத்தேன்.

''என்னங்க,''

''என்ன தீபா?''

''நம்ப மாயா அடிக்கடி எதுத்த வீட்டுப் பாட்டி வீட்டுக்குப் போயிட்டு வர்றாளே, அவங்க ரொம்ப நல்லவங்கலாம். பாவம் தனியாகத்தான் இருக்காங்கலாம். நம்ம மாயாமீது அளவுகடந்த பாசம் வச்சிருக்காங்க. மாயாவும் அவங்க கிட்ட பாசமாக இருக்காங்க. அதனாலே, அவங்களையும் மாயாவின் பிறந்த நாளுக்குக் கூப்பிடனும்னு மாயா ஆசைப்படுறா,'' என்று தீபா தன் கணவன் முகிலிடம் மெதுவாக அனுமதி கேட்டாள்.

''வரட்டும் தீபா. அவங்களும் நமக்கு அம்மா மாதிரிதானே. இந்த ஊருல நமக்கும் நாலு பேரு வேணும். நீ யாரைவேணுமானாலும் கூப்பிடு. நான் எந்த மறுப்பும் சொல்ல மாட்டேன். ஆனா, பாட்டியைப் போய் நேரில் கூப்பிடு. பெரியவங்களுக்கு நாம் மரியாதை கொடுக்கனும்,'' என்று மனைவியின் தலையைத் தடவி விட்டு முகில் வேலைக்குக் கிளம்பிவிட்டான்.

''மாயா, மாயா,'' என்று தன் மகளை அழைத்தாள் தீபா. ''அடுத்த முறை நீ பாட்டி வீட்டுக்குப் போகும்போது நானும் வர்றேன். பாட்டியை உன் பிறந்தநாளுக்கு அழைக்கனும் இல்லையா?''

''தேங்க்யூம்மா'' என்று மாயா மகிழ்ச்சியில் குதித்து தன் தாயை முத்தமிட்டாள்.

அந்த வாரம் மட்டும் சனிக்கிழமை ஆடியசைந்து வந்தது. தனபாலனைப் பார்ப்பதைவிட ஏனோ என் பேத்தியைப் பார்க்கத்தான் ஆவல் அதிகமாக இருந்தது. அவர்களுக்குப் பிடித்தது எல்லாம் சமைத்து வைத்துக்கொண்டு, வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன். வாசலில் இருந்த என் பார்வையைத் தொலைபேசி அதன் பக்கம் திருப்பியது. 'டிரிங்ங்ங். . டிரிங்ங்ங்'

''அம்மா, சூறாவை எடுத்து வச்சிட்டியா. இன்னும் பத்து நிமிஷத்தில் நான் அங்கு இருப்பேன்,'' என்று தனபாலன் அவசரமாகப் பேசிவிட்டு, தொலைபேசியின் மறுமுனையைத் துண்டித்துவிட்டான். என்னை ஒரு வார்த்தைகூடப் பேச விடவில்லை. அவன் என்ன சொன்னான் என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ளும் முன்பே அவன் வீட்டு வாசலின் முன் வந்து நின்றான்.

எனக்குப் பேச்சு வரவில்லை. என்னைவிட்டுப் பிரிந்துபோன மகனை 5 வருடங்கள் கழித்து மீண்டும் காண்கிறேன். அசல் அவன் அப்பாவேதான்! ஆனால் கொஞ்சம் தொந்தி போட்டிருந்தது. அவருக்கு அதெல்லாம் கிடையாது.

''தனபாலன்! எப்படிடா இருக்கே?" என்று தாய்மனம் அவனைக் கட்டியணைக்க முயன்றது. ஆனால், அவனோ, ''பிறந்த சூறா எங்கம்மா?'' என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

தனபாலன் மாறவேயில்லை. இத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கும் தாயிடம், ''நீ எப்படி இருக்கே,'' என்று ஒருவார்த்தைகூட அவனுக்குக் கேட்கத் தோன்றவில்லை. வந்த வேலையில் மட்டுமே குறியாகயிருந்தான்.

''டேய், இப்பதானடா வந்தே. பொறந்த சூறாவை எடுத்து வச்சிருக்கேன். தர்றேண்டா. எங்கடா என் பேத்தி? அவளைக் கூட்டி வர்றேனு சொன்னே?'' என் குரலில் கடுமை இருந்தது.

''அவங்க எல்லாம் ஹோட்டலில் இருக்காங்க. எனக்கு 5 நாள்தான் லீவு. இங்க முடிக்க வேண்டிய வேலைகள் கொஞ்சம் இருக்கு. அதுக்குத்தான் வந்தோம். நீ முதலில் சூறாவைக் கொடும்மா. நான் உங்கிட்ட அப்புறம் பேசறேன்,'' என்று கூறிவிட்டு, தொலைக்காட்சிப் பெட்டிமீது வைத்திருந்த தன் பிறப்புச் சான்றிதழை எடுத்துக்கொண்டு பறந்துபோய்விட்டான் தனபாலன்.

''தனபாலன், எந்த ஹோட்டல்ன்னு சொல்லுடா. நானாவது என் பேத்தியைவந்து பாக்குறேன்,''

அது அவன் காதுகளில் விழுந்தால்தானே அவன் பதில் சொல்ல! தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு சென்றவன் அப்படியே கலிபோனியாவிற்கே சென்றுவிட்டான். திரும்பி வரவே இல்லை! மகன், மருமகள், பேத்தி எல்லாரும் வந்தவுடன் ஒன்றாகச் சாப்பிடலாம் என்று மேசைமீது சமைத்த உணவு வகைகளை எடுத்து வைத்திருந்தேன். அது உருக்குலையாமல் அப்படியே இருந்தது. ஆனால், நான் சீர்குலைந்து விட்டேன். என்னால் நிற்க முடியவில்லை! சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன்!!

''அம்மா, அம்மா, அதுதான் பாட்டி வீடு. ஆனா, வீட்டின் முன்னாடி போலீஸ் நிக்குறாங்கம்மா. ரொம்ப கூட்டமா வேற இருக்கு!'' என்று மாயா கலக்கத்துடன் தீபாவிடம் கூறினாள்.

''நம்ப கிட்ட போக வேணாம்டா. இங்கேயே நிப்போம். என்ன நடந்துச்சுன்னு யாருகிட்டயாவது கேக்கலாம்,'' என்ற தீபா,

''எக்ஸ்யூஸ் மீ, இந்த வீட்டுல இருந்த பாட்டிக்கு என்ன ஆச்சு?'' என்று அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்.

''பாட்டியா? அப்படியெல்லாம் இங்க யாருமில்லங்க. இந்த வீடு ரொம்ப வருஷமா பூட்டியே இருந்துச்சு. ஏதோ வாடை வேற அதிகமாக இருந்துச்சு. அக்கம் பக்கத்தில் இருந்தவங்க சந்தேகப்பட்டுப் போலீஸ்க்குச் சொல்லியிருக்காங்க. போலீஸ் வீட்ட திறந்துபாத்தப்போ ஒரு எலும்புக் கூடு சாய்வு நாற்காலியில் அப்படியே உக்காந்து இருந்துச்சாம். அப்பா! நாற்றம் தாங்க முடியல. செத்து எத்தனை வருஷமாச்சுன்னு தெரியல!'' என்று அந்தப் பெண் பீதியுடன் கூறினாள். தீபாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. மாயாவை இழுத்துக்கொண்டு உடனே திரும்பிப் பார்க்காமல் தன் வீட்டிற்கு ஓடி விட்டாள். ஆம்புலன்ஸ் வண்டி எலும்புக்கூட்டை மூடி வண்டியில் வைத்து ஏற்றிச் சென்றது.

வீட்டிற்குள் நுழைந்ததும் தீபா தன் கணவரிடம், ''இந்த வீட்டை மாற்றியாகனும்,'' என்று தாண்டவமாடினாள். நடந்தவற்றை முகிலிடம் கூறியபோது அவனின் முகம் பேயறைந்ததுபோல் மாறியது. ''இதுக்குத்தான் குழந்தையைத் தனியாக விடாதே என்று அடித்துக்கொண்டேன்,'' என்று மனைவியைக் குறைகூறினான்.

''அம்மா, பாட்டிக்கு என்னம்மா?'' என்று மாயா விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். ''அவங்களுக்கு உடல்நலம் சரியில்லை. ஆஸ்பித்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க,'' என்று கூறி மாயாவின் வாயை அடைத்த தீபாவிற்கு உள்ளுக்குள் குலை நடுங்கியது.

முகிலின் குடும்பத்தார் தெம்பனீஸ் வட்டாரத்திற்குக் குடிவந்துவிட்டார்கள். மாயாவின் பிறந்தநாள் விழா புதுவீட்டில் நடந்தது. கொண்டாட்டத்தின் நடுவே கதவுமணி ஒலித்தது. தபால்காரர். அவர் கொடுத்த பொட்டலத்தை கையெழுத்திட்டு வாங்கி தீபா மாயாவின் அறையில் வைத்துவிட்டு வந்திருந்த விருந்தினர்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். தனக்கு ஏதோ பரிசு வந்திருக்கிறது என்பதை அறிந்த மாயா உடனே தன் அறைக்கு ஓடி அதைப் பிரித்துப் பார்த்தாள். அந்தச் சைக்கிள்!

''தேங்யூ பாட்டி,'' என்று மாயா அந்தச் சைக்கிளைக் கட்டியணைத்தவாறு எனக்கு நன்றி கூறினாள்! 


********முற்றும் 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro