Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சைக்கிள் Part 1

''அம்மா, எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு! என்று தன் மழலை மொழியில் கவிதை பாடினாள் மாயா.

''ஆமா, தீபா. ரொம்ப வசதியாக இருக்கு. புக்கிட் பாத்தோக் ரயில் நிலையம் பக்கத்திலேயே இருக்கு. மாயாவையும் வீட்டுக் கீழ் இருக்கும் பாலர்ப் பள்ளியில் சேர்த்துவிடலாம். ஏஜண்ட் ரொம்ப திறமைசாலிதான்,'' என்றான் முகில், மாயாவின் தந்தை.

''அப்பாடா! எனக்கும் ரொம்ப மனநிறைவா இருக்குங்க. இந்த ஊருக்கு வந்து இதோட 3 வீடு மாத்தியாச்சு. ஆனா, இந்த வீட்டைப் பாத்தவுடனே எனக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. பக்கத்து வீட்டு சீனக் குடும்பத்தினரும் நல்லவங்களாகத் தெரியுறாங்க,'' என்று தீபா கூறியதும் தன் அன்னையைக் கட்டியணைத்துக்கொண்டாள் மாயா.

சிங்கப்பூருக்குப் குடிபெயர்ந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. முகில், தீபா குடும்பத்தினருக்கு வீடுதான் ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது. இதற்கு முதலில் அங் மோ கியோவில் 6 மாதங்கள் இருந்தார்கள். அங்கு முகிலுக்கு வேலைக்குச் செல்லப் போக்குவரத்து வசதி சற்றுக் குறைவாகவே இருந்தது. பணியிடத்தில் போய் சேர்வதற்குள் ஒருமணிநேரம் ஆகிவிடுகிறது. அடுத்து ஹௌகாங்கிற்குச் சென்றார்கள். அங்கு அடிக்கடி டெங்கி காய்ச்சல் தலைகாட்டுகிறது என்று பயந்துகொண்டு இப்போது புக்கிட் பாத்தோக்கிற்கு வந்துவிட்டார்கள். இது ஓரளவு அனைவருக்கும் பிடித்திருந்தது. குறிப்பாக, குழந்தை மாயாவிற்குப் பிடித்திருந்தது.

''எதிர்த்த புளோக்கில் யாரோ புதுசா குடிவந்திருக்காங்க போலருக்கு. லாரியில் சாமானெல்லாம் வந்து இறங்கிய வண்ணம் இருக்கு,'' என்று சன்னல் வழியாக மெல்ல எட்டிப் பார்த்தேன். ''ஆமா, நம்மைப் போல ரெண்டாவது மாடி. ஊரிலிருந்து வந்திருக்காங்க போலருக்கு. அந்தச் சின்னப் பொன்னு என்னைப் பாத்துக் கையாட்டுகிறாள். நம்மலும் ஆட்டுவோம்,'' என்று என் விரல்களை அசைத்தேன். பின் இலேசாகப் புன்முறுவலிட்டேன்.

''பாத்து இறக்குங்க. அது டி வி,'' என்று ஒருவர் உரக்கக் கட்டளையிட்டார். அது எனக்குள் இருந்த டி வியைத் திறந்தது.

1974 – சிங்கப்பூரின் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டிக்கு விடிவுகாலம் வந்தது. முதல் முறையாக வண்ணத்தில் உலக கிண்ண காற்பந்தாட்டத்தை ராடின் மாஸ் சமூக நிலையத்தில் பார்ப்பதற்கு மக்கள் வெள்ளமெனத் திரண்டிருந்தனர். கிழக்கு ஜெர்மனியும், நெதர்லாண்டும் இறுதியாட்டத்தில் மோதவிருந்தனர். உட்கார்ந்து பார்ப்பதற்கு இடமில்லை. ''இதற்குத் தான் சீக்கிரம் கிளம்பச் சொன்னேன். நீ சீவி சிங்காரிச்சு வருவதற்குள் நெதர்லாண்டு ஒன்பது கோல் போட்டிடும்,'' என்ற அம்மா என் தலையில் கொட்டினார். சமூக நிலையத்திற்கு எத்தனை இளவட்டங்கள் வருவார்கள். முகத்தில் பவுடரும், உதட்டில் சாயமும் பூசாமல் எப்படி வருவது? என்று என் இருபத்திரண்டு வயது என் அம்மாவைப் பார்த்து மனத்திற்குள் கேட்டது. அப்பா காற்பந்து பார்க்கிறாரோ இல்லையோ, அம்மா எந்தக் காற்பந்தாட்டத்தையும் விடமாட்டார். கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில்கூடத் தவறவிடாத அம்மா, வண்ணத் தொலைக்காட்சியில் பார்ப்பதை விட்டுவைக்கவா போகிறார்? இதில் நான் துணைக்கு வேறு.

எனக்குக் காற்பந்தாட்டத்தில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. அம்மாவிற்காகத்தான் வந்தேன். என் கண்கள் மட்டும் தொலைக்காட்சியைப் பார்க்காமல் மீசையும் கிருதாவும் வைத்திருந்த முகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. சட்டென்று அவை தரையை நோக்கின. ஒரு மீசை வைக்காத முகம் என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. என் முகம் வெட்கத்தால் சிவந்தது!

என் அப்பா எங்கள் திருமணத்திற்குத் தடை சொல்லவில்லை. அம்மாதான். ''எப்படியிருந்தாலும் அவங்க சீனர்கள். நம்ம பழக்க வழக்கத்திற்கு எல்லாம் ஒத்துவருவாங்களா? அவங்க பன்டி சாப்பிடுறவங்க. அது நமக்கு ஒத்துக்காது!'' என்று முணுமுணுத்தார்.

''விடு மீனா, வளர்மதிக்குப் புடிச்சிருக்கு. பையனுக்குச் சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லே. அதுதான் நம்ம பழக்க வழக்கத்தைப் பழகிக்கிறேனு சொல்லுராருலே. அப்புறம் என்ன? பள்ளிக்கூடத்துல கணக்கு வாத்தியாரா இருக்காரு. வேறென்ன வேணும்? இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டுன்னு பள்ளிக்கூடத்துல மட்டும் சொன்னா பத்தாது. அப்படியே செய்யணும்,'' என்று அப்பா அம்மாவின் வாயை அடைத்தார். அப்பாவிற்கு நாட்டுப் பற்று அதிகம். ஊரிலிருந்து சிங்கப்பூருக்குச் சிறு வயதிலேயே வந்துவிட்டார். இங்கு கெப்பல் ஷிப்யாட்டில் இரத்தத்தை வியர்வையாச் சிந்தி உழைத்தார். ''பொறந்தது மதுரையாக இருந்தாலும், சிங்கப்பூருதான் எனக்குச் சோறு போட்டுச்சு, இந்த ஊரு போல எந்த ஊரும் பாதுகாப்பா இருக்காதுமா. இந்த ஊரை மட்டும் விட்டு போய்டாதீங்க,'' என்று சொல்லிச் சொல்லி எனக்கும் என் இரண்டு தங்கைகளுக்கும் நாட்டுப் பற்றை ஊட்டுவார்.

''உன் பெயர் என்னடா தங்கம்?''

''மாயா''

''உனக்கு எத்தனை வயசு?''

''ஆறு''

''பாட்டி, உங்க வீட்டுல பொம்மை இல்லையா?'' என்று அந்தப் பிஞ்சு என்னிடம் கேட்டது.

''பாட்டி வீட்டுல பொம்மை இல்லடா. பாட்டி சாப்பிடும் ஓட்ஸ் பிஸ்கட் இருக்கு. சாப்பிடுறியா தங்கம்?"

"வேணாம் பாட்டி. ஹய்! பாட்டி, சைக்கிள்! அதில் நான் விளையாடலாமா?'' என்று நான் பதில் சொல்வதற்கு முன்பே ஓரமாக வைக்கப்பட்டிருந்த அந்தப் பழைய சைக்கிளில் ஏறி உட்கார்ந்து ஓட்ட ஆரம்பித்துவிட்டாள் மாயா. பிள்ளைகளுக்குச் சைக்கிள் என்றாலே அலாதி இன்பம்தான்.

எதிர்த்த வீட்டுச் சிறுமி மாயா அடிக்கடி என் வீட்டிற்கு வரத் தொடங்கினாள். என் இருளடைந்த வீட்டில் மெழுவர்த்தியை ஏற்றிவைத்தாற்போல் மெல்ல மெல்ல ஒளியேறியது. ''அம்மாகிட்டே சொல்லிட்டுத் தானடா வர்றே?'' என்று மாயா வரும்போதெல்லாம் அவளிடம் கேட்பேன்.

''ம்ம், அம்மாவுக்குத் தெரியும் பாட்டி. அவங்க வீட்டுலேயே நிறையா பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்குறாங்க. அப்போதெல்லாம் நீ எதிர்த்த வீட்டுப் பாட்டி வீட்டுல போய் இருன்னு எங்கிட்ட சொல்லிட்டாங்க. அப்பா வேலைக்குப் போயிடுவாரு. ராத்திரிதான் வருவாரு. நல்ல வேளை. நீங்க பக்கத்துல இருக்கீங்க. இல்லாட்டி எனக்குப் போரடிச்சிரும் பாட்டி,'' என்று மாயா மூச்சுவிடாமல் பெருவிரைவுப் போக்குவரத்து ரயில் வண்டியைப்போல் பேசினாள். பிறகு அவளே தொடர்ந்து, ''அம்மா கூட உங்களுக்கு இந்தக் கேக்கைக் கொடுக்கச் சொன்னாங்க. மறந்துட்டேன்,'' என்று சொல்லிக்கொண்டே ஒரு கேக் துண்டை என் வாயில் திணித்தாள் மாயா. ''டேய், போதுண்டா,'' என்று கேக் நிறைந்த வாயுடன் கூறினேன், மாயாவிற்குத் தெரியாமல் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டேன்.

எப்போதும் காலை பத்து மணிக்கு என் வீட்டிற்கு ஓடோடி வரும் குழந்தையை அன்று காணவில்லை. ஒருவேளை அவளின் பெற்றோர்கள் விடவில்லையோ? எனக்குள் ஒரு சிறு ஏமாற்றம். ஆனால் அது ஒருசில வினாடிகள்தான் நீடித்தது. ''பாட்டி, பாட்டி,'' என்ற அந்தச் சங்கீதம் மீண்டும் ஒலித்தது. ''வந்துட்டியாடி தங்கம். ஏன் இன்னைக்குப் பாட்டியைப் பாக்க வர்ல?'' வந்ததும் வராததுமாகச் சைக்கிளில் ஏறி அமர்ந்துகொண்டாள் மாயா. அவள் வீட்டைச் சுற்றிச் சைக்கிள் ஓட்டும் அழகே தனி. அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றியது.

''பாட்டி, நான் ஸ்க்கூலுக்குப் போறேன். இன்னைக்கு டீச்சர் அப்பா அம்மா படத்தை எடுத்துவரச் சொன்னாங்க. இதோ, இதுதான் என் அப்பா அம்மாவோட கல்யாணப் படம் பாட்டி,'' என்று மாயா சைக்கிள் ஓட்டிக்கொண்டே ஓர் உறையை என்னிடம் நீட்டினாள். அதை எடுத்துப் பார்த்தேன்.

எனக்கும் ஜேக்சன் லிம்முக்கும் திருமணம் நடந்தது. சௌத் பிரிஜ் சாலையில் இருக்கும் ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தில். எங்கள் கூட்டம்தான் பெரிது. சொல்லிக்கொள்வதற்கு அவர் பக்கம் நான்கு நண்பர்கள்மட்டுமே வந்திருந்தார்கள். திருமணம் முடிந்ததும் அவர் புக்கிட் பாத்தோக்கில் தங்கியிருந்த வாடகை வீட்டிற்குக் கிளம்பினோம். அம்மா கண்ணீர் வடித்தார். அப்பா தட்டிக்கொடுத்தார். தங்கைகள் மௌனமாக இருந்தார்கள். முதல் முறையாக என் குடும்பத்தை விட்டுப் பிரிந்தேன்.

"பாட்டி, நல்லாருக்கான்னு சொல்லவே இல்லையே,'' என்று மாயா கேட்டதும் சட்டென்று நினைவுகள் அறுந்தன.

''நல்லாருக்கு ராசாத்தி. நீ அசல் அம்மா மாதிரியே இருக்கே!''

''ஆமா எங்க ஊருல என்னோட பிரண்ஸ் எல்லாம் அப்படித்தான் சொல்லுவாங்க! எனக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும் பாட்டி,'' என்று கூறி அந்த மழலை புகைப்படத்தில் இருந்த தன் தாயாரை முத்தமிட்டது. அந்தக் காட்சி என் இதயத்தைப் பிழிந்தது.

''அத்தை, இன்னும் ஏழு மாதங்களில் உங்களுக்குப் பேரன் பிறக்கப் போகிறான்,'' என்று என் கணவர் என் அம்மாவின் வீட்டுக்குச் சென்று சொல்லிவிட்டு வந்ததுதான் தாமதம், மறுநாளே கோழிச் சூப்பு, ஊடான் சம்பால், வஞ்சனை மீன் பொரியல் செய்து எடுத்துக்கொண்டு அம்மா எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். சாப்பிட முடியாத அளவிற்குச் சாப்பிட்டு முடித்தேன். ''தம்பி, வளரு கொஞ்ச நாள் நம்ம வீட்டில இருக்கட்டும். வாய்க்கு ருசியா ஆக்கி கீக்கி கொடுப்பேன். இங்க அதுக்கு யாரு இருக்கா?'' என்று அம்மா அவரிடம் சொன்னார்.

''பரவாயில்லே அத்தை, நானே என் மனைவியைப் பாத்துக்கிறேன்,'' என்று என் கணவர் சொன்னது அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. முகத்தைச் சுளித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். பெற்ற பாசம் விடுமா? இரண்டு நாளைக்கு ஒருமுறை வந்து என்னைப் பார்ப்பார். வரும்போதெல்லாம் மணமணக்க உணவு வகைகளைச் சமைத்து அடுக்கில் எடுத்து வருவார். அம்மா! அந்த மூன்றெழுத்தின் வார்த்தையின் மகிமையே தனி!

நான் சாய்வு நாற்காலியில் தலையைச் சாய்த்து கண்களை மூடியிருந்தேன். மாயா என் தலையைப் பிடித்துவிட்டாள். ''தலைவலிக்கிறதா, பாட்டி'' என்று பாசத்தோடு கேட்டாள்.

''ஏய் கண்ணு, நீ எப்போடா வந்தே?''

''நீங்க தூங்கும்போதே வந்திட்டேன் பாட்டி. நான் பேபியாக இருக்கும்போது எப்படி இருந்தேன் தெரியுமா பாட்டி?''

''இப்ப மட்டும் நீ பேபி இல்லையா? எனக்கு மாயா கண்ணு எப்பவும் பேபி தான்!''

''போங்க பாட்டி. நான் பெரிய பொன்னு. நான் ஸ்க்கூலுக்கெல்லாம் போறேன் தெரியுமா?'' என்று குரலை உயர்த்திக் கூறினாள் மாயா.

''சரிங்க பெரிய பொன்னு,'' என்ற நான் மாயாவை வாரி அணைத்துக்கொண்டேன். மாயா தன் பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்தாள். அது அவள் பிறந்தபோது எடுத்த புகைப்படம். அதை வாங்கிப் பார்த்தேன்.

''ஆம்பள பிள்ளை,'' என்று என் தாயார் தன் பேரனைத் தூக்கிக் கொஞ்சினார். ''மூக்குத்தான் கொஞ்சம் சப்பை, அப்பாவைப் போல,'' என்று அம்மா உரக்கக் கூறினார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அம்மா என் கணவர்மீது வெறுப்பைக் கொட்டிக்கொண்டுதான் இருந்தார்.

''சீனர்களுக்கு மூக்குச் சப்பையாகத்தான் இருக்கும், இப்போ நீ தமிழச்சி. கறுப்பா இல்லையா?'' என்ற அப்பாவும் அம்மாவை விடுவதாகயில்லை. எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ''என்னைக் கறுப்புன்னு சொன்னா பொத்துக்கிட்டு வந்திடுமே உங்க மகளுக்குச் சிரிப்பு,'' என்று அம்மா என்மீது பொய்க் கோபம் கொண்டார். அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ கூறியும் ஜேக்சன் என்னையும் குழந்தையையும் என் தாய் வீட்டிற்கு அனுப்ப மறுத்துவிட்டார். ''அத்தை, நாங்களே பாத்துக்குறோம். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நான் ஏற்கனவே வளரைப் பாத்துக்கொள்வதற்கு லீவு எல்லாம் போட்டுட்டேன்.''

''என்னப்பா இது. கேக்கும்போதெல்லாம் அனுப்ப முடியாது, அனுப்ப முடியாதுன்னு சொல்றீங்க. குழந்தை பிறந்தா முதல் மாசம் தாய்வீட்டுலதான் இருக்கனும். இது எங்கப் பழக்க வழக்கம். வளரு என்ன, யாருமில்லாத அனாதையா?'' என்று என் அம்மா பட்டாசுபோல் வெடித்தே விட்டார்.

''நான் அப்படியெல்லாம் சொல்ல வரல அத்தை. என் மனைவியையும் மகனையும் விட்டுப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. எனக்குன்னு யாருமில்லை. நான்தான் அனாதை'' என்று ஜேக்சன் சொன்னபோது என் அம்மாமீது எனக்குக் கோபம் வந்தது.

''அம்மா, நான் அங்கெல்லாம் வரலம்மா. நான் என் வீட்டுக்கே குழந்தையைத் தூக்கிட்டு போறேன். உனக்கு ஆசையிருந்தா உன் பேரனை அங்கு வந்து பாத்துக்கோ,'' வெடுக்கென்று நானும் கூறிவிட்டேன்.

''இந்தப் பொன்னுங்களுக்குக் கல்யாணம் ஆனவுடன் எங்கருந்துதான் புருஷன்மீது பாசம் பொத்துக்கிட்டு வருமோ தெரியாது. அம்மா, அப்பா, கூடப்பிறந்தவங்க யாருமே கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க,'' என்று அம்மா பொரிந்து தள்ளினார்.

''நீ மட்டும் என்ன. வளரு பொறந்ததும் என்னைவிட்டுப் பிரிய முடியாம அம்மா வீட்டுக்குப் போக மாட்டேன்னு அடம்பிடிக்கல? அப்புறம் நானும் உங்கூட ஒரு மாசம் உங்க அம்மாவீட்டுல தங்கியிருந்தேனே,'' என்று அப்பா பால் பொங்கி வழியாமலிருக்கத் தண்ணீர் தெளித்தார்.

அப்பா! எங்கள் வீட்டின் சுமைதாங்கி. தன் பெண்கள் மனத்தில் சிறு கீறல்கூட விழக் கூடாது என்பதில் கவனமாக இருந்து எங்களை அடைகாப்பார். அப்பாவின் தோள்களில் சாய வேண்டும்போல் இருந்தது. ''நீங்க எங்கப்பா இருக்கீங்க?''

கண்ணாடி சுக்குநூறாக கீழே விழுந்து உடைந்த சத்தம் கேட்டுத் திடுக்கிட்டேன். மாயா உடைந்த கண்ணாடி துண்டுகளின் பக்கத்தில் நின்று அழுதுகொண்டிருந்தாள். குழந்தையின் முகத்தில் பயம் குடிகொண்டிருந்தது. ''அழாதடா செல்லம். பாட்டி உன்ன திட்ட மாட்டேன். தெரியாமத்தானே அந்தப் புகைப்படத்தைத் தட்டிவிட்டே. ஒரு நொடியில் பாட்டி அதைச் சுத்தம் செய்திடுறேன். கொஞ்சம் தள்ளி நில்லுடா. கண்ணாடித் துண்டு காலுல கீழுல குத்திடப் போது,'' என்று அழும் குழந்தையைச் சமாதானப் படுத்திவிட்டுச் சிதறிக்கிடந்த கண்ணாடித் துண்டுகளைக் கூட்டித் தள்ளினேன். அதன் மத்தியில் அவரின் முகம் தெரிந்தது. அவரின் புகைப்படம். அதைக் குனிந்து எடுக்கும்போது உடைந்த கண்ணாடித் துண்டுகள் என் விரல்களைப் பதம் பார்த்துவிட்டன. ஆனால் அது எனக்கு வலிக்கவில்லை. இதயம் வலித்தது!

''இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!'' என்று எல்லாரும் தனபாலனை வாழ்த்தினார்கள். தனபாலனுக்கு ஐந்து வயது பூர்த்தியாகிவிட்டது. அப்பா, அம்மா, தங்கை, அண்டைவீட்டுக்காரர்கள் என அனைவரும் ஒரு கேக்கைச் சுற்றி நின்றிருந்தார்கள். தனபாலனின் முகம் தங்கத்தைபோல் ஜொலித்தது. என் கண்ணே என் பையன்மீது பட்டுவிடுமோ என்று அஞ்சினேன். ''பையன் அசல் அவங்க அப்பன் மாதிரியே உரிச்சுவச்சிருக்கான். வெளியில போனாக்கூட இவன் தமிழ்ப் பையன்னு யாரும் சொல்ல மாட்டாங்க,'' என்று பக்கத்து வீட்டு ஆனத்தியம்மா என் அம்மாவிடம் கூறியது என் காதுகளில் ஒலித்தது. ''என் பொன்னு மாதிரி இருந்திருந்தா இன்னும் மூக்கும் முழியுமா இருந்திருப்பான்,'' என்று என் அம்மா கூறியதை நான் கேட்டுவிட்டேன் என்பதை அறிந்த என் தாயார் ''எப்படித்தான் இருந்தாலும் என் பேரனைப் போல் அழகு வருமா. எல்லாரும் போனதும் சுத்திப் போடனும்,'' என்று கூறினார். பக்கத்துவீட்டு ஆனந்தியம்மா என் தாயாரை முறைத்துப் பார்த்தார்.

தனபாலன் பார்ப்பதற்கு மட்டும்தான் சீனனைப் போல் இருப்பான். தமிழில் பேசத் தொடங்கினால் இன்றையத் தமிழாசிரியர்கள் அவனைக் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள்!

''வளர், வந்தவங்கல கவனி. நான் சைக்கிள் கடை வரைக்கும் போயிட்டு வரேன்,'' என்றான் ஜேக்சன் தன் மனைவியிடம்.

''ஏங்க இப்ப போறீங்க, எல்லாரும் வந்திருக்கிற சமயத்தில? அப்புறம் போலாமே?''

''இல்லம்மா, தனபாலனுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் கடையில சொல்லி வச்சிருந்தேன். பாவம் பிள்ளை, கேட்டுக்கிட்டே இருந்தான். நம்ம ஆ ச்சோங் இப்போ வரச்சொன்னாரு. கடையைச் சாத்தப் போறாராம். சைக்கிள பையன் பொறந்தநாளு அன்னைக்குத்தான் கொடுக்கனும். நான் போய்ட்டுச் சீக்கிரம் வந்திருவேன். நீ பாத்துக்கோ,'' என்று சொல்லிவிட்டு விரைந்தான் ஜேக்சன்.

''என்னங்க,'' என்று அவரைக் கூப்பிட்டேன்.

''போறவரைக் கூப்பிடாதடி,'' என்று அம்மா தலையில் கொட்டினார்.

''இல்லம்மா, பணத்தை என்னிடம் கொடுத்து வைச்சிருந்தாரு. வாங்காம போறாரு,''

''அதெல்லாம் தம்பிகிட்ட பணம் இருக்கும். நீ போறவரைக் கூப்பிடாதே,'' என்று அம்மா மீண்டும் கூறினார்.

என் கண்களில் 'பொல பொல' எனக் கண்ணீர் நீர்வீழ்ச்சியாகக் கொட்டியது. மாயா தன் பிஞ்சு விரல்களால் என் கண்களைத் துடைத்துவிட்டாள். ''ஏன் பாட்டி அழுரீங்க?'' என்று மாயா கேட்டாள். ''ஒன்னும் இல்லடா. பாட்டி இந்த தூசு எல்லாம் கூட்டினேன் இல்லையா, அதுல ஒன்னு பாட்டி கண்ணுல பூந்திடுச்சு டா,'' என்று சொல்லிக்கொண்டே மாயாவைக் கட்டியணைத்தேன். என்னையும் மீறி ஒரு குழந்தையைப் போல் வாய்விட்டு அழுதேன். மாயா பயந்துவிட்டாள். ''பாட்டி, அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு என்னைச் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க. நான் கிளம்பறேன், பாட்டி,'' என்று அவசர அவசரமாகக் கூறிய மாயா என் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள்.

விழா முடிந்து எல்லாரும் கிளம்பிவிட்டார்கள். அம்மா, அப்பா, தங்கைகள் மட்டும்தான் இருந்தார்கள். ''என்னம்மா, போன மருமகனை இன்னும் காணோம்?'' என்று அப்பா சுவர்க்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டார். அப்போது வீட்டுத் தொலைபேசி அலறியது. ''ஹலோ'' என்றேன். மறுநிமிடம் என் மூச்சு நின்றுவிட்டது!

எல்லாரும் விபத்து நடந்த இடத்திற்குத் தலைதெறிக்க ஓடினோம். ''நீங்கதான் ஜேக்சனின் மனைவியா,'' என்று ஒரு மலாய்க் காவலதிகாரி என்னிடம் கேட்டார். ''I am sorry Madam. Hit and run accident. Mr Jackson Lim died on the spot before the ambulance arrive. These are his belongings." அந்த நொடியே என் இதயம் வெடித்து அதிலிருந்த ஆத்மா அவருடன் சென்றுவிட்டது! அவர் தனபாலனுக்காக வாங்கிவந்த சைக்கிள் சற்றுத் தூரத்தில் கிடந்தது. ''நம் மகனை நன்றாகப் படிக்க வைச்சு, ஒரு டீச்சராக்கனும்னு எனக்கு ஆசை வளர்,'' என்று அவர் கூறியது என் கடமையை எனக்கு உணர்த்தியது. ஓடிச்சென்று சைக்கிளை எடுத்து அதைக் கட்டியணைத்துக்கொண்டேன். ''ஐயோ! என்னையும் நம் மகனையும் விட்டுப் போய்ட்டீங்களே!'' என்று கதறி அழுதேன். இந்த உலகமே சூன்யமானது!

''பாட்டி''

''என்னடா செல்லம். அன்னைக்குப் பாட்டியை அழவிட்டுவிட்டுப் போய்ட்டே?''

''சாரி பாட்டி. நீங்க ரொம்ப அழுதீங்களா, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலே,'' என்று மாயா சைக்கிளின் மீது ஏறிக்கொண்டே பதிலளித்தாள்.

''பாட்டி, உங்க வீட்டுலத்தான் சின்ன பிள்ளைகள் இல்லையே? அப்புறம் இந்தச் சைக்கிள் யாரோட?'' என்று மாயா வினவினாள். இதை எனக்கே கொடுத்திடுரீங்களா?''

''அது ரொம்ப பழசுடா. என் மகனோட. அவனுக்கு 5 வயதிருக்கும்போது வச்சு விளையாண்டது. இப்போ அவனுக்கு. . .நாப்பது வயசுக்கு மேலே இருக்குண்டா,'' மாயா அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை. உடனே சைக்கிளில் ஏறி வீட்டை ஊர்வலம் வரத் தொடங்கினாள். ''பாட்டி, அடுத்த மாசம் எனக்குப் பிறந்தநாள் வருது. அம்மாவும் அப்பாவும் பெரிசா கொண்டாடப் போறாங்க. நீங்களும் வரணும் பாட்டி.''

''கண்டிப்பா வருவேண்டா. ஆமா, என் தங்கத்துக்கு என்ன பிறந்தநாள் பரிசு வேண்டும்?''

''சைக்கிள்''

தனபாலனுக்கு அவன் அப்பா பிறந்தநாள் பரிசாக, வாங்கிய சைக்கிள் மிகவும் பிடித்திருந்தது. அன்றாடம் அதை ஓட்டி விளையாடுவான். அப்போதெல்லாம் அவன் அப்பாவுடன் விளையாடுவதுபோல்தான் என் கண்களுக்குத் தெரியும். அதில் சிறு கீறல்கூட விழுந்துவிடாமல் நான் பாதுகாத்து வந்தேன். எப்போதாவது அப்பாவின் நினைவு வந்தால், ''அப்பா எங்கம்மா?'' என்று கேட்பான். நான் சைக்கிளைக் காட்டி, ''இதோ இருக்கிறார்,'' என்று கூறுவேன். அது அவனுக்குப் புரியாது.

எனக்குச் 'சான்யோ' தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. ''இங்க வந்து இருடி,'' என்று அம்மா எத்தனையோ முறை கூறியும் நான் மறுத்துவிட்டேன். நான் அவ்வாறு செய்வது அவருக்குப் பிடிக்காது. பையன் வளர, வளர, செலவும் உயர்ந்த்து. A&W விரைவு உணவகத்தில் பகுதி நேர துப்புரவாளர் வேலை ஒன்று கிடைத்தது. தனபாலனை என் அண்டைவீட்டாரிடம் அவ்வப்போது விட்டுவிட்டு அந்த வேலைக்கும் சென்றுவந்தேன். தனபாலன்தான் என் உலகம். அந்த உலகத்தில் நான் நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்.

''பாட்டி, இந்த டிரஸ் நல்லாருக்கா?''

''என்னடா, சிவப்பு-வெள்ளையில் ஜொலிக்கிறே? என்ன விஷேஷம்? அன்னைக்கு உன் பிறந்த நாள் வரப்போகுதுன்னு சொன்னலே. இன்னைக்கு உன் பிறந்த நாளா?'' என்று மாயாவை ரசித்தபடியே கேட்டேன்.

''ஐயோ அது அடுத்த மாசம் பாட்டி! இன்னைக்குச் சிங்கப்பூர் பிறந்தநாள். நேஷனல் டே! அப்பா தேசிய நாள் நிகழ்ச்சியை நேரில் பாக்க டிக்கெட் வாங்கியிருக்காரு. நான், அம்மா, அப்பா எல்லாரும் போறோம். நீங்களும் வாங்க பாட்டி!'' என்று குழந்தை அடம்பிடித்தது.

''இல்லடா. பாட்டிக்குக் கொஞ்சம் கால் வலிக்குது. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க,'' என்று குழந்தையைத் தேற்றினேன்.

''சரி பாட்டி''

''ஆமா, இன்னைக்கு ஆகஸ்டு 9தா டா?''

''ஆமா பாட்டி. நான் போயிட்டு வர்றேன்,'' என்று கூறிவிட்டு மழலை சிறகடித்துப் பறந்தது.

ஆகஸ்டு 9, 2000. சிங்கப்பூர் தொலைக்காட்சி, வானொலி அனைத்திலும் 'Shine on me' தேசிய தினப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் நாடி நரம்புகளில் நாட்டுப் பற்றை ஏற்றும். இசையும் தாளம்போட வைக்கும். என் அப்பா இருந்திருந்தால் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் எழுந்து நிற்காமல் இருந்திருக்க மாட்டார். அப்பாவும் அம்மாவும் காலமாகி விட்டார்கள். தங்கைகளுக்கும் திருமணமாகி அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள்.

அன்று தனபாலன் நாட்டுக்காகத் தன் சேவையை ஆற்றிவிட்டு வீடு திரும்பும் நாள். ''அம்மா, இந்த முறை தேசிய நாள் கொண்டாட்டத்தை நாம் நேருல போய் பாக்கலாம். எனக்கு ஃப்ரீ (free) டிக்கெட் கிடைக்கும்,'' என்று தனபாலன் சொல்லிவிட்டுப் போனது என் மனத்தில் ரீங்காரம் பாடிக்கொண்டே இருந்தது.

தனபாலன் அவன் அப்பாவின் சைக்கிளில் ஏறி விளையாடியதெல்லாம் ஐந்து வயதோடு முடிந்துவிட்டது. ''அம்மா, இந்தச் சைக்கிளை உங்க அறையில் கொண்டுபோய் வச்சிக்கிங்க. என் அறையில் இடத்தை அடைக்கிறது," என்று எரிச்சலுடன் கூறிவிட்டு தனபாலன் சைக்கிளை என் அறையில் தூக்கி எறிந்தபோது அவன் அப்பாவையே தூக்கி எறிந்ததுபோல் இருந்தது. அவனைப் 'பளார், பளார்' என்று அறைய நினைத்தேன் - கட்டுப்படுத்திக்கொண்டேன்!

உயர்நிலைப் பள்ளியில் காலடி எடுத்துவைத்ததும் தனபாலனின் நடை, உடை, பாவனை அனைத்தும் மாறிவிட்டன. 'அம்மா' என்ற அணைப்பிலிருந்து தளர்ந்து, 'நண்பர்கள்' என்ற வலைக்குள் புகுந்துவிட்டான். அம்மாவுடன் பேசுவது குறைந்துவிட்டது, நண்பர்களுடன் சேர்ந்து சிரிப்பது கூடிவிட்டது. தொலைக்காட்சி பார்க்கும்போது தனபாலன் என் மடியில் படுத்துக்கொண்டுதான் பார்ப்பான். ஆனால் இப்போது தலையணைமட்டும் தான் என் மடியில் படுத்திருக்கிறது. 'கடவுளே, குழந்தைகள் வளராமல் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்' என்று பலமுறை மனத்திற்குள் வேண்டியதுண்டு. மூக்கில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டேன். ''ச்சேசே, என் மகன் அப்படியெல்லாம் இல்லை. அம்மாமீது அவனுக்குப் பாசம் அதிகம். இல்லையென்றால் ஒன்றாகத் தேசிய நாள் நிகழ்ச்சியைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருப்பானா?''

'டக் டக் டக்' கதவைத் தட்டும் ஒலி. தனபாலன் வந்துவிட்டான்! வாடியிருந்த செடி உயிர்ப்பெற்று எழுந்தது போல, துள்ளிக்குதித்துக்கொண்டு கதவைத் திறந்தேன். 

சைக்கிள் Part 2வில் தொடர்ச்சி. . 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro