யாதுமாகி நின்றாய்!*
தலைசாய்த்து இளைப்பாற தாய்மடி வேண்டினேன்,
கண்டித்து அரவணைக்கும் தந்தை நிழல் வேண்டினேன்,
தாயின் பிம்பமாய் தமக்கையை வேண்டினேன்,
சண்டைக்குப்பின் தோள்கொடுக்கும் சகோதரன் வேண்டினேன்,
ஆயுள் முழுவதும் குறையா நட்பை வேண்டினேன்,
கூடி குதூகலிக்க சுற்றம் வேண்டினேன்,
ஊர் மெச்சும் அறிவும் தெளிவும் வேண்டினேன்,
பகட்டாய் வாழ செல்வச் செழிப்பு வேண்டினேன்,
காதலாய் கசிந்துருகும் துணையை வேண்டினேன்,
முத்தும் ரத்தினமுமாய் பிள்ளைகள் வேண்டினேன்,
வேண்டியது அனைத்தும் கிட்ட தன்னிலை மறந்தேன்.
மனங்களின் கசப்பும், உறவில் வெறுப்பும்,
எதிர்பார்ப்பின் சுமையும், பகட்டின் சாயமும்,
செல்வத்தின் நிலையாமையும், உயிரின் இழப்பும்;
வேண்டாத அனைத்தும் வலுவில் வந்ததும்,
மதியிழந்து நின்றேன், விடை தேடி தவித்தேன்.
தாயும் தந்தையும், ஊரும் உறவும்,
வாழ்க்கை துணையும், ஈன்ற பிள்ளையும்,
இன்பமும் துன்பமும், செல்வமும் வறுமையும்,
அறிவும் ஆற்றலும், பிணியும் பகையும்,
உயிரும் மூச்சும் சிந்தனையும் இயக்கமும்,
யாதும் நீயே என உணர்த்தி
இதுவரை வேண்டாத ஞானமதை அருளினாய்,
அனைத்தும் நீயே அகிலாண்டேஸ்வரி!
எனை ஆட்கொண்ட என் குருவும் நீயே!
- அனு
🌺🌺🌺🌺🌺🌺
*பாரதிக்கு கோடி கோடி வந்தனம்! அவரைப் போன்ற ஒரு மனிதன் இனி பிறக்க சாத்தியம் உண்டா?
அவர் சிறந்த தேவி உபாசகன் என்பது தெரிந்ததே, அவரின் "யாதுமாகி நின்றாய் காளி" மற்றும் "நின்னை சரணடைந்தேன்" பாடல்களின் பாதிப்பு, மேலே பதிவிட்டிருப்பது.
என் அன்னை அகிலாண்டேஸ்வரி என் மீது கொண்ட கருணைக்கு என் காணிக்கை! தேவி உபாசகர்கள் பாரதி உட்பட அனைவரும், என்னை மன்னித்து பிழை பொறுத்தருள வேண்டும்🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro