எதை தேடி ஓட்டம்?
நீளும் சாலைகளில்
உருளும் வாகனங்கள்,
பாதைகளை அளக்கும் பாதங்கள்,
இவை ஓடுவது எதை தேடி?
கடந்து செல்லும் மனிதர்களை,
அறிய விழையாத மனங்கள்.
இயந்திரத்தின் புகை மூட்டத்தில்,
இயந்திரத்தனமாய் ஓட்டங்கள்.
தலைதெறிக்கும் ஓட்டமெல்லாம்,
வாழ்க்கையை தேடியா?
வாழும் வழியை தேடியா?
கண் பிரியாத இருட்டிலும்,
கண்ணை கட்டும் இரவிலும் ஓடுகிறாய்,
தேவைகளை காரணம் காட்டி,
பணி சுமை கூட்டுகிறாய்.
நீ ஓடுவது,
லட்சத்தை தேடியா?
லட்சியத்தை தேடியா?
இலக்கை நோக்கி செலுத்திய அம்பாக,
எதை நிர்ணயித்து செல்கிறாய்?
எடுத்த காரியம் நிறைவேறியதும்,
இலக்கை இடம்பெயர்த்து
மீண்டும் புறப்படுகிறாய்.
எதை முறியடிக்க இந்த வேகம்?
யாரை வீழ்த்த இந்த அவசரம்?
பிள்ளைகளுக்கு வளர்ந்துவிட ஏக்கம்!
பெரியவர்களுக்கு வளர்ந்து விட்ட ஏக்கம்!
பணம் சேர்க்க ஏக்கம்!
துணையை தேடும் ஏக்கம்!
வசதிகள் கூட்டிவிட ஏக்கம்!
மார்தட்டி, பெருமை பாடிட ஏக்கம்!
மேலும் பொருள் சேர ஏக்கம்!
பசி தீர்த்துவிட ஏக்கம்!
பிணி போக்கிவிட ஏக்கம்!
ஏக்கங்கள் நிறைந்த உலகமா?
ஏக்கம் மட்டும் நிறைந்த ஜீவிதமா?
நீ போதுமென்று நிறுத்துவது எப்போது?
மன ஆசைகள் அடங்குவது எப்போது?
உன் தேவைகள் தான் தீர்ந்து விடுமா?
மனிதா சற்று நில்!
உலகை அழித்து கொண்டிருக்கும் உன் ஓட்டத்தால்,
யாருக்கு பொருளை ஈட்டுகிறாய்?
- அனு
🌺🌺🌺🌺
நம்ம சிங்கார சென்னையின் போக்குவரத்து நெரிசல்ல inspire ஆகி எழுதினது🙏❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro