உயிர் பெற்ற என் வரம்!
உயிரை உரித்தெடுக்கும் வலி தாங்கி உனக்காய் காத்திருந்தேன்,
ஈருயிரையும் காக்க அறுவை சிகிச்சையாம், மருத்துவர் கூற
என்னை பெற்றவள் எனக்காய் பதற
கண்விழித்து நான் கேட்டது 'பிள்ளை எங்கே'?
உன்னை கையில் ஏந்திய முதல் தருணம்,
முகத்தோடு முகம் வைத்த முதல் வினாடி,
அம்மாவை சாடியதெல்லாம் மறந்து போனது
ஒரு தாயின் வலியை உணர்ந்தேன் அப்போது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை
சொல்லொணா உணர்வுகள் வெள்ளமாய்
கரையுடைத்து கண்ணில் பெருகியதே
இதற்கு பெயர் தான் தாய்மையோ?
கோடானு கோடி வார்த்தைகள் புழக்கத்தில்
'ஙே' என்ற அழுகைக்கும்
'க்கு' என்ற விளிப்புக்கும்
தனி அகராதியே போட்டு விடுகிறாள் தாய்.
மார்பு முட்டி நீ அமுதுண்ணுவது அழகு,
ஓர விழியால் கள்ளப்பார்வை பாரப்பது அழகு,
பிஞ்சு விரல் நீட்டி என்னை வருடுவது அழகு,
என் சேலையை ஈரமாக்கி நீ அழுவது அழகு.
உலகத்து வாசனை திரவியங்கள் தோற்கும்,
உன்னிடம் வீசும் பால் மணத்தில்.
மலமும் மூத்திரமும் அருவருக்கவில்லை
அழிச்சாட்டியம் செய்துவிட்டு நீ களுக்கி சிரிக்கையில்.
கவிழமுயன்று உருளுகையில்,
தவழ்ந்து ஓடி ஒளிகையில்,
உன்னைப் போல் நானும் ஆகி,
கோமாளி பட்டம் ஏற்கிறேன் பெருமையாய்.
கொத்தாய் கூந்தல் பற்றி இழுத்து,
காதை திருகி, மூக்கை கிள்ளி,
கண்ணாடி பறித்து, கன்னம் கடித்து
வலிக்காத உன் வன்முறையில் பொய்யாய் அழுகிறேன்.
வயிற்று வலியோ, சுரமோ வீறிட்டு அழுகிறாய்,
இயலாமையில் புத்தி மழுங்கியது,
பெரியோரிடம் வழக்காடினேன், மருத்துவரிடம் ஓடினேன்,
படைத்தவனையும் சாடினேன், நீ கல்லோ என்று!
உட்கார முயன்று தலையாட்டி பொம்மையாய் நீ சாய,
தலையணையால் சுற்றி அணைகட்டினேன்,
பிடிமானம் பிடித்து நீ எழுந்து நிற்கையில்
எவரெஸ்ட்டில் கொடி நாட்டிய பெருமிதம் என்னுள்.
தள்ளாடி நடக்கும் நடையழகும்,
பிஞ்சு பாத கொலுசழகும்,
குழிவிழும் குண்டு கன்னங்களும்,
பொக்கை வாய் சிரிப்பும்,
உன் எச்சில் முத்தமும்,
உதடு பிதுக்கிய அழுகையும்,
தத்தை கிளி பேச்சும்,
சுருள் முடி அழகும்...
பிடித்ததை ஒதுக்கி, வெறுத்ததை உண்டு,
மசக்கையில் துவண்டு, பத்தியம் இருந்து,
எடை கூடி, இடை பெருத்து,
உறக்கம் தொலைத்து, மூச்சிரைக்க
ஓராண்டு தவத்தின் பலனாய்
தெய்வமே உயிர்பெற்று வரமாய் வந்ததோ?
மகவாய் என் வயிற்றில் உதித்ததோ?
- அனு
❤❤❤❤❤
என்னை தாயாக்கிய என் தங்கத்திற்கு😍😍😍😘😘😘 அவள் பிறந்தாள் பரிசாய் எழுதியது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro