கருப்பு வெள்ளை காதல்
அந்தக் காகத்திற்கும் வெண்புறாவிற்கும் காதல்!
காகம் என்றாலே, வெறுத்து, அதை விரட்டியடிக்கும் இந்தச் சமுதாயத்தில் தன்னையும் ஒருவன் காதலிக்கிறான் என்று எண்ணி அந்தக் காகம் ஆனந்தத்தில் நீராடியது. சந்தோஷம் என்றால் அப்படியொரு சந்தோஷம் அந்தக் காகத்திற்கு! தன் காதலன் வெண்புறாவைச் சந்தித்த அந்த இனிய நாளை நினைத்து நினைத்துத் தனக்குள்ளேயே வெட்கப்பட்டுக்கொண்டது அந்தப் பெண் காகம்!
காகம் அன்று இரை தேடி பறந்துவந்துகொண்டிருந்தது. திதிக்காக படைக்கப்பட்ட எள்ளுருண்டை வீட்டுச் சுவரொன்றின்மீது இருந்தது அதன் கண்களில் பட்டது. அதைக் கொத்தித் தின்றுவிட்டு மேல்நோக்கிய காகம் அதனை வைத்த கண் வாங்காமல் வெண்புறா ஒன்று மரக்கிளையிலிருந்து பார்த்துக்கொண்டே இருந்ததைக் கண்டது. ஓர் ஆண்மகன் தன்னைப் பார்க்கும்போது இயற்கையாகவே மங்கையின் தலை தரையை நோக்கிப் பார்க்கும் அல்லவா? காகத்தின் கண்களும் தரையை நோக்கின.
ஒரு முறை பார்த்த கண்களை மறுமுறையும் பார்க்கத் துடித்தது காகத்தின் மனம். ஒவ்வொரு நாளும் வெண்புறாவைத் தேடி அதே இடத்திற்கு வந்தது. ஆனால், அந்தக் கண்களை மீண்டும் பார்க்க முடியவில்லை.
''உன்னைப் போய் யாராவது காதலிப்பார்களா? ஆளும் மூஞ்சியும். காதலிப்பதற்கு ஒரு முகம் வேண்டாமா? கார்மேகம் வந்துவிட்டால் வெண்மேகம் மறைந்துபோகும் என்று உனக்குத் தெரியாதா? ஏதோ பாத்துச்சாம், அது காதலாம். போடி முட்டாள்!'' இது காகத்தின் மனக்குரல்.
அன்று எப்போதும்போல் காகம் தன் காதலைத் தேடி வந்தது. அன்றும் ஏமாற்றம்தான். தொண்டைக்குழியிலிருந்து வந்த துக்கத்தை 'கா. . கா' என்று கறைந்துவிட்டுப் பறக்க நினைத்தபோது இரண்டு வெண் சிறகுகள் அதனை அணைத்தன. அந்த வெண்புறா காகத்தை முத்தமிட்டது. வெட்கத்தால் அதன் கரிய மேனியும் சிவந்தது. காகமும் வெண்புறாவும் ஓர் தனி உலகிற்கே சென்றன!
இப்படித்தான் காகத்தின் அந்தக் காதல் தொடங்கியது!
ஒவ்வொரு நாளும் இதே இடத்தில் சந்தித்துக்கொள்வதாக அவை தீர்மானித்தன. தன் காதலனைப் பார்க்க வரும்போதெல்லாம் தனக்குக் கிடைக்கும் இரையினைக் காகம் கொண்டுவரும். இரண்டும் பகிர்ந்து உண்டன. தங்கள் அலகால் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டன, கொஞ்சிக்கொண்டன.
''என்னங்க, நமக்குப் பிள்ளை பொறந்தால், யாரு மாதிரி இருக்கும்? உங்க மாதிரியா, என்னை மாதிரியா?'' என்று காகம் தன் காதலனின் நெஞ்சில் சாய்ந்தபடிக் கேட்டது.
''அது உன்னைப் போல் அழகாக இருக்கும் டி,'' என்று தன் காதலியைத் தன் சிறகால் வருடிக்கொண்டே சொன்னது வெண்புறா.
''ச்சீசீ. நான் அழகா? பொய் சொல்லாதீங்க. அசிங்கத்தின் மொத்த உருவம் நான். குழந்தை உங்க மாதிரி வெள்ளையாகப் பொறக்கனும்,'' என்றது காகம்.
''ச்சீ போடி. எந்தக் காதலனுக்கும் அவன் காதலி தேவதைதான். ஊர் மக்கள் என்ன சொன்னாலும், எனக்கு நீ பேரழகிதான்,'' என்று கூறி தன் காகத்தை இறுகத் தன் சிறகுகளால் அணைத்துக்கொண்டது. அந்த மயக்கத்தில் காகம் தன்னையே மறந்தது! வெண்புறாவிடம் சங்கமித்தது!
பருவங்கள் மாறின. பறவைகள் திசைமாறிப் பறந்தன. வெண்புறா தன் அன்பு காதலியிடம், ''என் தங்கமே, பறவைகள் எல்லாம் திசை மாறுதுடி. என் கூட்டத்தனர் வேறு திசையை நோக்கிப் போறாங்க. நானும் அவர்களுடன் போய், அங்கு நல்ல இடம் பார்த்துட்டு உன்னையும் கூட்டிட்டுப் போறேண்டி,'' என்றது வெண்புறா.
காகத்தின் கண்கள் கலங்கின.
வெண்புறா காகத்தைக் கட்டி அணைத்தது. அதன் நெற்றியில் முத்தமிட்டது.
''என்னையும். இப்போதே கூட்டிட்டுப் போங்க. உங்களப் பிரிஞ்சி என்னால இருக்க முடியாதுங்க,'' காகத்தின் குரலில் ஒரு சிணுங்கல்.
''நீ என்ன டீ பேசுறே. என் கூட்டத்தினர் மத்தியில் உன்னை எப்படி டீ கூட்டிக்கிட்டுப் போவது. பைத்தியம். நான் உன்னைத் தனியாக வந்து கூட்டிட்டுப் போரேண்டி செல்லம்,'' கொஞ்சியது வெண்புறா.
''ஏமாத்த மாட்டீங்களே,'' காகம்.
இதைக் கேட்ட வெண்புறா சட்டென்று தன் அணைப்பிலிருந்து காகத்தைத் தளர்த்தியது. அதற்குக் கோபம் வந்துவிட்டது. வெந்நிற மேனி செந்நிறமாகியது.
''ஐயோ, நான் தெரியாம கேட்டுட்டேன். மன்னிச்சிடுங்க. உங்கள நம்பாமே நான் வேறு யாரை நம்பப் போறேன்!. . .,'' காகம் அழுதது. ஆனால் அது வெண்புறாவின் காதுகளுக்கு எட்டவில்லை. அதற்குள் சிறகுகளை அடித்துக்கொண்டு வான்நோக்கிப் பறந்து சென்றுவிட்டது!
"என்னையும் காதலித்த அந்த அன்பு தெய்வத்தைப் போய் சந்தேகப்பட்டுவிட்டேனே!! ஏங்க இந்தக் கருப்பி அறியாமல் செஞ்ச தவற்றை மன்னிக்க மாட்டீங்களா!! என்று ஒவ்வொரு நாளும் தாங்கள் முதல் முதலில் சந்தித்த அந்த மரக்கிளைக்குச் சென்று காகம் புலம்பியது. தன்னை வெண்புறா வந்து அழைத்துச் செல்லுமா என்று ஏங்கியது. தன் அலகை மரக்கிளையில் கொத்திக் கொத்தி தன்னையே தண்டித்துக்கொண்டது. அலகிலிருந்து இரத்தம் மட்டுமே கசிந்தது. ஆனால் அதன் காதலன் வரவில்லை!
காலங்கள் கடந்தன. பருவங்கள் திரும்பின. வெண்புறாவின் கோபம் தணிந்தது. தான் உயிருக்கும் மேலாக நேசித்த காதலியைக் காண வேண்டும் என்ற ஏக்கம் அதன் மனத்தை ஒவ்வொரு நாளும் கிழித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் 'ஈகோ' என்ற அந்த தீங்குணம் அதை இவ்வளவுநாளும் தடுத்து வைத்திருந்தது. இனிமேலும் தன் அன்பு காதலியைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று வெண்புறா முடிவெடுத்தது. தன் உயிரைத் தேடி அந்த மரக்கிளைக்குப் பறந்து வந்தது.
மரக்கிளை பொந்தலும் பொத்தலுமாகக் காணப்பட்டது. வெண்புறா சுற்றிச் சுற்றிப் பறந்து தேடியது. தன் அன்பு காதலி இங்கு நிச்சயம் வருவாள், வந்திருப்பாள் என்று அதற்குத் தெரியும். ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது வெண்புறா. தன் அருமை காதலியின் உயிரற்ற உடல் இலைகளுக்கு நடுவே சிக்கித் தொங்கிக்கொண்டிருந்தது! அது காற்றின் அசைவினால் ஒரு சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்த இரண்டு பறவைக் குஞ்சுகள் வெண்புறாவை 'குரு குரு' என்று பார்த்துக்கொண்டிருந்தன. அவை கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் இருந்தன. வெண்புறா அவற்றைக் கட்டி அணைத்துக்கொண்டது!
முற்றும்*******
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro