புல்லட்
உங்களுக்கு புல்லட் பிடிக்குமா?
அடுத்தத் தெருவில் இருந்தாலும் பார்க்கக்கூட அவசியமில்லாது டப் டப் டப் டப் ஒலியிலேயே தன் வருகையை ஆகாத்தியமாய் அறிவித்துவிடும். கண்களில் பட்டுவிட்டால், மறையும் வரை வேறெதையும் கவனிக்கவிடாது. அந்த புல்லட் தான்.
நான்கு வயது எனக்கு ராயல் என்ஃபீல்ட் என்ற பெயரை முழுதாய் மனப்பாடம் செய்து சொல்வதற்குக் கடினமாய் இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அடிக்கடி மறந்து போய் கொண்டே இருக்கும். அதனாலேயே, அந்த பெயர் மீது அவ்வளவு பிடித்தமில்லை.
ஆனால் புல்லட் என்றால் இத்துனூண்டாய், இலகுவாய் இருந்து நினைவில் சேர்ந்து கொண்டது—துப்பாக்கியில் இருப்பதென்பது தெரிந்ததனால் எளிதாய் மனதில் நின்றுவிட்டது.
சிறுவயதில் மனதில் பதிந்தவையின் மீதுண்டாகும் மோகம் எத்தனை வயதானாலும் போகாது. ஆனால் அதுவே இத்தனை வயது வரை இருந்துவிட்டால் அது மோகமாகாதே. காதலாகிவிடுமல்லவா!
இந்த புல்லட் மீதும் அப்படித்தான்.
முதன்முறையாக பார்த்தது மிக மிக அருகாமையில்; அப்பாவின் பஜாஜ் சேட்டக்கில் முன்னாடி நின்று கொண்டிருந்த போது.
காணாததை கண்டவள் போல் (அதுவே முதல் முறை என்பதால், நிஜம்போல் காணாததை கண்டவள் தான்) பார்த்ததை அப்பா கவனித்திருந்தார்.
அந்த சிகப்பு புல்லட்டை கண்களில் ஆராய்ந்த சுவாரஸ்யம் அப்பா சொன்ன அந்தப் பெயரை முழுதாய் உள்வாங்க விடவில்லை. எதோ சொன்னார்.. என்னவென்று சொன்னார். பிடித்து வேறு போயிற்று.. பெயர் தெரிந்து கொள்ள வேண்டுமே!
வேண்டினேன். "அது பேர் என்னப்பா?"
"புல்லட் டா. நம்மகிட்ட இருந்துதே!"
"நம்ம கிட்ட இருந்துதா?" அப்பாவிடம் இருந்ததாமே. அந்த பிரம்மாண்டத்தில் இருந்தே வெளிவரவில்லை அதற்குள் அடுத்தது.
"ஆமாண்டா. அப்பாகிட்ட இருந்தது." இப்போது அம்மாவும் சேர்ந்து கொண்டார்.
"நெஜம்போலையேவா?" இதை கேட்கையில் எந்த குழந்தையும் ஆவென்று தானே இருந்திருக்கும். நானும் அப்படித்தான் இருந்தேன். ஒரு நொடிக்கு முன்னால் கண்ணெதிரே தோன்றி மறைந்து, காதுகளில் மட்டுமாய் ஒலித்து கொண்டிருந்த அந்த அதிசயம் அப்பாவிடம் இருந்திருக்கிறது. பேரதிசயம்.
அதன்பின் என்ன பேசினோமென்று இன்று நினைவிலில்லை. ஆனால் இதுவரை பேசிய எவையும் என்றும் மறந்ததுமில்லை. அன்றிலிருந்து யாராவது என்னிடம் வந்து, "பெரியவளாகி என்ன கார் வாங்குவ?" என்று கேட்டால் அதற்கான பதில், "புல்லட் தான் வங்குவேன்," என்பது தான்.
"ஆனா அது கார் இல்லையே." என்பார்கள்.
"எனக்கு கார் வேணாம், புல்லட் தான் வாங்குவேன்." என்று சொல்லிவிடுவேன்.
"கார் தான் பெருசு. நெறையா பேர் போகலாம்."
"கார்ல அப்படி சத்தம் கேக்குமா?"
"கேக்காதே.."
"அப்போ வேணாம்." புல்லட் போதுமென்ற மனதிற்கு கார் என்னத்துக்கு?
அப்போதிலிருந்து சதா சர்வகாலமும், "அப்பா, எப்போ மறுபடியும் புல்லட் வாங்குவீங்க?" என்றே அலைந்து கொண்டிருப்பேன்.
அப்பாவும் ஒவ்வொரு முறை ஒவ்வொன்று சொல்வார்.
ஒரு நாள், "நீ பெருசாகி வாங்கலாம்டா குட்டி, இப்போவே வாங்கினா நீ ஓட்ட முடியாது." என்பார். சமாதானமாய் தோன்றும். சரியென்று விட்டுவிடுவேன்.
மீண்டும் என்றாவது, எங்கேயாவது பார்த்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதே கேள்வியோடே வீட்டை சுற்றுவேன்.
சற்று புரிந்து கொள்ளும் வயது வந்ததும், "பெட்ரோல் போட்டு மாளாது. மைலேஜே தராது. ரொம்ப செலவு வெக்கும்," என்றார்.
அவரை புரிந்து கொள்ளும் வயது வந்ததும், "அப்போல்லாம் புல்லட்னா ஒரு பரபரப்பு. ஒரு ஆசை. அதுக்காக கொஞ்ச நாள் வெச்சிருந்தேன்." என்றார்.
அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று தெரிந்தது. ஆனாலும் கேட்டேன். "இப்போ என்ன ஆச்சு?"
"வயசாச்சு. இதுக்குமேல என்னத்துக்கு புல்லட் மோகம்!"
"உங்களுக்கு இல்ல, எனக்கு இருக்குல்ல!"
"அப்போ நீ ஓட்டு." வேண்டவே வேண்டாமென்று மட்டும் வராது–இப்போது வேண்டாமென்று தான் வெவ்வேறு விதமாய் பதில் வரும். அப்போது எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத்தெரியாது, அதனால் அந்த 'நீ ஓட்டு' சற்று சவாலாய் இருந்தது.
அப்பாவின் splendor plusஇலேயே மோட்டார் சைக்கிள் பழகியாயிற்று.
லைசன்சும் வாங்கியாயிற்று. புல்லட் மட்டும் தான் குறை. அதுவே படுபயங்கரமாய் டெம்ப்ட் செய்ய, செமஸ்ட்டர் விடுமுறைக்கு ஊருக்கு வந்த போது ஆரம்பித்தேன். "புல்லட் வாங்கலாம்பா."
அப்போதும் வாங்கலாமேயென்று வாயில் வரவில்லை. "நீதான் இப்போ இங்க இல்லையேடா. வாங்கி வெச்சு நான் என்ன பண்றது?" எனக்கு ஐயோ என்றானது.
அந்த ஐயோவை புரிந்து கொண்ட அம்மா, "எத்தன மாமாங்கமா கேக்கறா? வாங்கலாமேப்பா!" என்றார். எப்படியும் வாங்கலாம் என்ற முடிவிற்கு வந்து விட்டால் அடுத்த கட்டம் 'அம்மா என்ன சொல்றா கேளு' என்பதாய் தான் இருக்கும். அதற்கு முன் அம்மாவே கேட்டுவிட்டதால் எனக்கு சற்று துள்ளலாய் இருந்தது.
"உனக்கு அதுல உக்கார தெரியாம விழுந்துடவ." அப்பா நமுட்டு சிரிப்பும் பரிகாசமுமாய் இதை சொன்னதும் அம்மாவிற்கு எங்கே இருந்து அப்படி ஒரு கோவம் வந்தது என்று தெரியாது.
வேடிக்கையான கோவம். "ஹலோ, எனக்கொண்ணும் பார்த்த முதல் நாளேயெல்லாம் ஆசையில்ல. உங்க பொண்ணு ஆசைப்படறாளேன்னு தான் கேட்டேன்." கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. நான் சிரித்ததை பார்த்து அம்மாவும் சிரித்து, அம்மா சொன்னது துளியும் புரியாமல் அப்பா இருவரையும் மாறி மாறி பார்த்து முழித்தார்.
அப்பாவிற்கு நெடுநேரம் அம்மா சொன்ன ரெஃபரென்ஸ் புரியவேயில்லை.
அதன்பின் அந்த யோசனை வெகுவாய் தளர்ந்தது. படிப்பை முடித்து கொண்டு வாங்கிக்கொள்ளலாம் என்று மீண்டும் ஒத்திபோட்டு கொண்டேன்.
அதற்கு சில நாட்கள் கழித்து அப்பாவின் splendorஇல் அம்மா ஏறி அமர்ந்த போதுதான் கவனித்தேன். அப்பா பரிகாசம் செய்தது உண்மையில் அம்மாவிற்கு ஏறி அமர சிரமமாய் இருக்கும் என்பதால் தான் என்று.
அப்பா எப்போதாவது 'சரிடா குட்டி, வாங்கிடலாம்' என்று சொன்னாரானால் இங்கே அப்டேட்டுகிறேன். அது வரை யாராவது சம்பாதித்து என்ன வாங்குவாய் என்று கேட்டால், புல்லட் என்று சொல்லிக்கொள்கிறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro