🌸1🌸
தோட்டத்தில் இருந்த பெரிய மாமரத்தில் இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தியபடி தாவி குதித்து ஓடிக் கொண்டிருக்க, ஆர்வமாக அதை படம் பிடித்து கொண்டிருந்தது அந்த அழகிய கயல்விழிகள்.
உதட்டுச்சாயம் இல்லாமல் இயற்கையிலேயே சிவந்திருந்த மென்மையான இதழ்களில் அழகிய இளநகை பூத்திருக்க நின்றிருந்தாள் நம் நாயகி இளநகை.
முத்துப்பல்லழகியின் ரசனையை கெடுப்பதற்கென்றே கடுகடுத்த பெண் குரல் ஒன்று இடையில் குறுக்கிட்டது.
"ஏய்... இந்தாடி இந்தப் புடவையை கட்டிக்கொண்டு ஒழுங்காக தலைவாரி பார்ப்பதற்கு சுமாராகவாவது கிளம்பி இரு. இன்னும் ஒரு மணி நேரத்தில் உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்!" என்று கையிலிருந்த புடவையை அவள் முன் தரையில் வீசி எறிந்து விட்டுச் சென்றாள் அக்கா சுந்தரி.
முகத்தில் எந்தவித பாவமோ, வருத்தமோ இல்லாமல் குனிந்து கீழே இருந்த புடவையை கையில் எடுத்தவள் மெல்ல அதை தடவிப் பார்த்தாள். மூன்று வருடங்களுக்கு முன்பு வந்த தீபாவளி பண்டிகைக்காக அக்கா தனக்கென்று எடுத்துக் கொண்ட புடவை.
மெல்லிய பெருமூச்சொன்று நெஞ்சிலிருந்து வெளியேறும் நேரம் அவள் விழிகளில் சட்டென்று ஒரு ஒளி தோன்றியது.
முகத்தில் முறுவல் தோன்ற வேகமாக மீண்டும் ஜன்னலருகே சென்றவள் சுற்றும்முற்றும் விழிகளை உருட்டி விட்டு, "ஹேய்... உனக்கு ஒன்று தெரியுமா? இன்று என்னை பெண் பார்க்க வருகிறார்களாம் யாரென்று தெரியவில்லை. அவர்களுக்கு என்னை பிடித்திருந்தால் அடுத்து திருமணம் தான் போலிருக்கிறது. அப்பொழுது நான் வேறு வீட்டிற்கு சென்று விடுவேன் உன்னை எல்லாம் பார்க்க முடியாது பேச முடியாது!" என்று லேசான வருத்தத்தோடு இளநகை பேசிக் கொண்டிருந்தது வேறு யாரிடமும் இல்லை சாட்சாத் மாமரத்து அணில்களிடம் தான்.
ஆமாம்... அவளுடைய எண்ணங்களையும், பேச்சுக்களையும் அவள் பகிர்ந்துக் கொள்ளும் தோழர், தோழியர்களின் பட்டியல் சற்றே வித்தியாசமாக தான் இருக்கும்.
பறவைகள், அணில்கள், பூனைக்குட்டி, அசைந்தாடும் மரம் செடிகள், வான்நிலா என அவளிடம் திரும்பி வாய் பேச இயலாத உயர்திணை, அஃறிணை ஜீவன்களிடம் தான் அவள் நட்பு தழைத்தோங்கி இருக்கும்.
"ம்... என்ன செய்வது? ஆனால் உன்னிடம் பல முறை சொல்லியிருக்கிறேனே ஞாபகம் இருக்கிறதா? அது தான்பா... எனக்கெல்லாம் இவர்கள் எங்கே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க போகிறார்கள் காலம் முழுக்க நான் இங்கே தான் இருக்க போகிறேன் என்று ப்ரீத்தியின் திருமணத்தின் பொழுது சொன்னேனே அது தான். பின்னே திடீரென்று எப்படி? புரியவில்லையே... எனக்கு ரொம்ப வயதாகிறது, இருபத்தைந்து ஆகி விட்டது என்று யாராவது இவர்களிடம் சண்டைப் போட்டிருப்பார்களா..." என ஒற்றை விரலால் தன் தாடையை தட்டினாள் இளநகை.
ஒரு அணில் மரக்கிளையில் தாழ்வாக இறங்கி வந்து அவளை நோக்கி உர்ரென்று சத்தமிட்டு விட்டு ஓட, "ஈஈஈ... ஆமாம் ஆமாம் நீ சொல்வது சரி தான். என் மேல் அவ்வளவு அக்கறை கொள்பவர்கள் இந்த உலகில் யார் இருக்கிறார்கள் உறவினரா... தோழியா... யாரும் கிடையாது!" என்று சோகமாக உதட்டைப் பிதுக்கியவள், "சரி சரி கோபித்துக் கொள்ளாதே நீ இருக்கிறாய் தான். ஆனால் உன்னால் திரும்பி என்னிடம் பதில் பேச முடியாதே நீ என்ன செய்வாய் பாவம்!" என்று அந்த சின்னஞ்சிறு விலங்குக்காக பரிதாபப்பட்டாள் அப்பாவை.
"அச்சச்சோ... என் அக்காவும், மாமாவும் இதை மறந்து விட்டார்களா? எனக்கென்று நகையோ, புடவையோ, பணமோ எதுவுமே இல்லையே பின் எப்படி திருமணத்திற்கு கேட்டு வரச் சொன்னார்கள். மாப்பிள்ளை வீட்டினருக்கு விஷயம் தெரியாமல் எல்லாம் இருக்கும் என்று நம்பி ஏதாவது வருகிறார்களா... இப்பொழுது என்ன செய்வது?" என விரல் நகம் கடித்தாள்.
அதற்குள் சுந்தரி வெளியே யாரையோ அதட்டும் சத்தம் கேட்டது.
சட்டென்று சுதாரித்தவள், "சரி சரி, வருகிறவர்கள் என்னவோ முடிவு செய்துக் கொண்டு போகட்டும். நான் தயாராகிறேன் இப்படியே நின்றால் அக்கா திட்டுவார். அவர்கள் வந்து நேரில் பார்த்தால் எல்லாம் தெரிந்து விடப் போகிறது. என் முகத்தை பார்த்தாலும் பிடிக்கிறதோ இல்லையோ..." என்று தனக்கு தானே உணர்வின்றி பேசியபடி சுடிதாரை மாற்றிப் புடவையை அணிந்தாள்.
மெல்லிய மேனியை கொண்டவளுக்கு அவள் சகோதரியின் ரவிக்கை மிகவும் லூசாக இருந்தது. அங்கே இங்கே என்று சேஃப்டி பின்னால் இழுத்துப் பிடித்து பின் செய்து ஓரளவுக்கு வெளியே நன்றாக தெரிவது போல் போட்டுக் கொண்டாள்.
தன் பஞ்சு விரல்களால் புடவையை மென்மையாக தடவியவள், 'அப்பா... இன்றைக்கு தான் முதல் முறையாக புடவை கட்டுகிறேன். ஏனோ அக்கா ஒரு நாளும் அவளுக்கு புடவைகள் எல்லாம் வாங்கி கொடுப்பதில்லை. எப்பொழுதும் வருடத்திற்கு ஒரு சுடிதார் மட்டும் தான், மீதி அவள் பெண் ப்ரீத்தியின் உபயத்தால் எப்படியும் ஒரு நான்கைந்து சேர்ந்து விடும். அவள் இவளை விட இரண்டு வயது சிறியவள் என்றாலும் லேசாக பூசினாற் போல் இருப்பாள்!' என்று ஏதேதோ எண்ணமிட்டபடி கையில் வைத்திருந்த சற்றே மங்கியிருந்த கண்ணாடியை பார்த்து தன் தலைமுடியை ஒதுக்கி கொண்டாள்.
முகத்தை மெல்ல வருடியவள் பின் யோசனையோடு ஜன்னல் அருகே சென்றாள்.
"எங்கே இந்த அணிலை காணவில்லை? அதற்குள் எங்கே போயிற்று? ப்ச்... நல்லவேளை நீயாவது இருக்கிறாயே..." என்று சிட்டுக்குருவியிடம் அடுத்து பேச ஆரம்பித்தாள் இளநகை.
"நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறேனா? வருகிறவர்களுக்கு என்னை பிடிக்குமா? அவர்கள் எல்லாம் என்னிடம் நன்றாக பேசுவார்களா?" என்று இதயத்தில் பெரும் எதிர்பார்ப்புடனும், ஏக்கத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தவளை தடுத்து நிறுத்தியது சுந்தரியின் குரல்.
"சும்மா மசமசவென்று நிற்காமல் அந்த வண்டியை எடுத்து கேட்டுக்கு வெளியே நிறுத்துங்களேன். வருகிறவர்களுக்கு நடக்க வழியில்லாதபடி வாசலின் குறுக்கே அடைத்தபடி நிறுத்தி வைத்துக் கொண்டு!" என்று தன் கணவன் முருகனை அதட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
"சரி அப்புறம் பேசுகிறேன் பை!" என கிசுகிசு குரலில் கூறி குருவியிடம் கையசைத்து விட்டு தன் அக்காவிடம் விறுவிறுவென்று சென்றாள் நம் பெண்.
"அக்கா! எதுவும் வேலையிருக்கிறதா?" என்றாள் பவ்யமாக.
அவளை மேலிருந்து கீழ் வரை ஒருமுறை வெறுப்புடன் அளந்தவள், "அவர்கள் வரும் நேரம் இப்பொழுது எதற்கு வெளியே வந்து வாசலில் நிற்கின்றாய்? அறிவில்லாத ஜென்மம்... உள்ளே போ, கூப்பிடும் பொழுது தான் வெளியே வர வேண்டும்!" என்று சிடுசிடுத்தாள்.
முகம் வாடி விழுந்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள் தங்கை.
இருந்தும் அவளை எண்ணி உள்ளம் காய்ந்தது சுந்தரிக்கு. என்று இளநகை தன் தாயின் வயிற்றில் உருவானது தெரிந்ததோ அன்றிலிருந்தே முகம்மறியா அவள் மீது இவளுக்கு போட்டியும், பொறாமையும் தான் வளர்ந்தது.
செங்கல்பட்டில் அரசாங்க உத்யோகத்தில் இருந்த மாரியப்பனுக்கு சம்பளத்தை விட கிம்பளம் தான் அதிகமாக வரும். தன் பங்கு வேலையை செய்து கொடுக்க கூட பணம் வாங்காமல் ஒரு துரும்பையும் அசைக்க மாட்டான் அவன்.
தன் ஒரே மகளான சுந்தரியிடம் பாசம் அதிகம் அவளுக்காக எதையும் செய்பவன் ஊரை சுற்றி நிறைய சொத்துக்களை வாங்கிப் போட்டான். அனைத்திற்கும் அவளையே வாரிசாக்கி பள்ளிப்படிப்பு முடிந்து ஒரு வருடமாக வீட்டில் இருந்தவளுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது போல் வரன் தேட ஆரம்பித்தான்.
இந்நிலையில் தான் அவன் மனைவி கற்பகம் தன் நாற்பதாவது வயதில் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பது தெரியாமலேயே ஐந்து மாத கருவை வயிற்றில் சுமந்துக் கொண்டிருந்தாள். மாதந்தோறும் வரும் உதிரம் வரவில்லை என்றதும் வயதான காரணத்தால் நின்று விட்டது என அவளாக தப்பர்த்தம் கற்பித்துக் கொண்டாள். மூத்தப்பெண் பிறந்து பதினெட்டு வருடங்களை கடந்த பின் மீண்டுமொரு குழந்தை தன் வயிற்றில் ஜனித்திருக்கிறதோ என்கிற ஐயமெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை.
ஆறு மாதத்தை தொடும் பொழுது வயிறு பெரியதாகி அக்கம்பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவும் தான் கணவனும், மனைவியும் அவசரமாக மருத்துவனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் குழந்தை வளர்வது உறுதிப்படவும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
ஆறு மாதங்கள் முழுதாக வளர்ந்து விட்ட குழந்தையை கலைக்கவும் வழியில்லை எனவும் கற்பகத்திற்கு மிகவும் அவமானமாகி விட்டது. பெற்ற பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தி எடுக்க வேண்டிய வயதில் தனக்கு ஒரு சிசுவா என்று புழுங்கி தவித்தாள்.
மாரியப்பனுக்கோ இத்தனை ஆண்டுகள் சிரமப்பட்டு எதிலேயும் மாட்டிக் கொள்ளாமல் சம்பாதித்து விட்டு, அதை அக்கடாவென்று உட்கார்ந்து ஆண்டு அனுபவிக்கின்ற வேளையில் தன் தலை மேல் இன்னொரு பொறுப்பா? என்று அதை சுமத்திய மனைவியின் மீது ஆத்திரம் வந்தது அவனுக்கு.
அதில் தன் பங்கு தான் பெரியது என்றாலும் இத்தனை வயதாகி விட்ட பொம்பளைக்கு தான் கர்ப்பமாக இருப்பதை கூட கணிக்க தெரியாதா என்று அவள் மேல் தான் அவனுக்கு ஆங்காரம் அதிமாக பெருகியது.
சுந்தரியோ அதற்கும் மேல்... இத்தனை வருடங்களாக ஒற்றைப் பிள்ளையாக அந்த வீட்டில் அனைத்து சலுகைகளையும் ராணியாக அனுபவித்து வந்தவளுக்கு அதில் பங்கு போட உடன்பிறப்பு என்று ஒர் உறவு வருவதை அவள் சற்றும் விரும்பவில்லை.
ஆகமொத்ததில் இந்த பூமியில் ஜனனம் எடுக்கப் போகும் அக்குழந்தையை மகிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் வரவேற்க இப்புவியில் யாருமில்லை. இப்படி அனைவரும் தன்னை வெறுக்கின்ற ஒரு சூழ்நிலையில் பிறந்தவள் தான் நம் இளநகை.
காலங்கடந்த கர்ப்பத்தினாலும் தீயாய் கக்குகின்ற கணவனின், மகளின் வெறுப்பாலும் தனக்குள்ளேயே தன் நிலையை எண்ணி நொந்துப் போன அந்த தாய் உடல்நலனில் அக்கறை செலுத்தாமல் தன் வயிற்றிலிருந்த சிசுவை பிரசவித்து விட்டு நிம்மதியுடன் கண்களை மூடிக் கொண்டாள்.
ஏற்கனவே தாயின் வயிற்றில் அனைவரது வெறுப்பிலும் வளர்ந்துக் கொண்டிருந்த அக்குழந்தை பிறக்கும் பொழுதே தாயை கொன்றவள் என்கிற பட்டத்தையும் உபரியாக பெற்றுக் கொண்டாள்.
வீட்டு வேலைகளும், குழந்தையின் பொறுப்பும் அப்பா, மகள் இருவர் மீதும் விழ இருவரும் கடுப்பின் உச்சத்திற்கே சென்றனர். மகளின் இறப்பிற்கு வந்த மாமியாரை வீட்டோடு இருக்க வைத்த மாரியப்பன், அவர் மகள் இறந்து விட்ட நிலையிலும் விடாமல் தேள் கொடுக்காக கற்பகத்தையும் அவள் குடும்பத்தையும் சகட்டுமேனிக்கு தாக்கிப் பேசினான். ஊரை அடித்து இவன் சம்பாதித்தது தெரியாமல் ஒன்றுமில்லாதர்கள் வீட்டுப் பெண்ணை கட்டிக் கொண்டேனே என இருபது வருடங்கள் கழித்து ஞானோதயம் வந்தவனாக அரற்றிக் கொண்டிருந்தான்.
ஏதோ கடவுள் புண்ணியத்தில் அக்கிழவிக்கு காது சரியாக கேட்காததால் இவனின் தாக்குதலிலிருந்து அவர் தப்பினார். தன் கடமையில் குறை வராமல் சமையல் வேலை, வீட்டு வேலை, குழந்தையை பார்த்துக் கொள்வது என அனைத்து பொறுப்புகளையும் தன் கைகளில் எடுத்துக் கொண்டார் மூதாட்டி.
மனதில் பலவித புகைச்சல் இருக்கின்ற நேரத்தில் இளநகையின் திருத்தமான அழகும் சேர்ந்து சுந்தரியை எரிச்சலடைய வைத்தது. நிறத்தில் இவளை அடித்துக் கொள்ள முடியாதென்றாலும் லட்சணம் என்ற வார்த்தை அவளை விட்டு தூரம் தான் நின்றது.
எப்படியோ தன் வீட்டிற்கு அடங்கி போகின்ற மாப்பிள்ளையாக பார்த்து அடுத்து வந்த வருடத்தில் சுந்தரிக்கு முருகனை மணமுடித்து விட்டான் மாரியப்பன்.
இளநகைக்கு இரண்டு வயதிருக்கும் பொழுது ப்ரீத்தியை பெற்றெடுத்தாள் அவள் சகோதரி. அனைத்து உரிமைகளும் தனக்கு மறுக்கப்பட்ட நிலையில் தன் சகோதரியின் மகள் மட்டும் அந்த வீட்டின் இளவரசியாக அனைவரின் பாசத்திலும் வளர்ந்தது அக்குழந்தைக்கு ஏமாற்றத்தை அளித்தது.
ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திலும் அவளுக்கான நிராகரிப்பும், ப்ரீத்திக்கான ஆதரவும் புரியப் புரிய அந்த பிஞ்சு மனதில் ஏக்கம் எழ ஆரம்பித்தது. இருந்தாலும் மனதை துவள விடாமல் தனக்கான உலகத்தை தானே அமைத்துக் கொண்டு அதில் மகிழ்ச்சியுடன் துள்ளித் திரிந்தாள் அச்சுட்டிப் பெண்.
______________________________________
Story was removed only sample chapters available.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro