அத்தியாயம் 2: அவனின்றி தனிமையில்
வினேயவீரன்: க
நேரம் போனதும் தெரியவில்லை. நாட்கள் ஓடியதும் தெரியவில்லை. ஒரு வாரமோ இரண்டு வாரமோ போய் விட்டது என்று நினைக்கிறேன். என் விஜய் இறந்து ஒரு வாரமோ இரண்டு வாரமோ போய் விட்டது. அப்படித்தான் நினைக்கின்றேன்.
ஹாசினியோடு நாங்கள் கம்பெனிக்கு சென்று கொண்டிருந்த போது, அவளை சீண்டியபடி விளையாடிச் சிரித்துக் கொண்டிருந்தான். மீண்டும் லீவ் தான் எடுப்போம் என வேண்டுமென்றே அவளின் எரிச்சலை கூட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவளை சீண்டிவிட்டு ஹாசினி நீலாம்பரிக்கு அத்தை மகள் போல் அவதாரம் எடுப்பதை பார்ப்பதில் எனக்கும் விஜய்க்கும் அப்படி ஒரு சந்தோஷம்.
அதே மகிழ்ச்சியில், சிரித்தபடியே என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் அவன்.
அந்த ஒரு நொடி, என்னிடம் காலத்தை மாற்றும் சக்தி இருந்திருந்திருந்தால், அந்த நொடியோடு அனைத்தையும் நிறுத்தியிருப்பேன்.
அதற்குப் பின் நடந்த எதுவும் நினைவிலும் இல்லை. அவனே இல்லை, இதற்கு மேல் இருக்கும் காலத்தை மட்டும் வைத்து நான் என்ன செய்வது?
நான் மயக்கம் தெளிந்து கண் விழித்த போது, அனைத்தையும் முடித்துவிட்டு என் விஜயை அனாதையைப் போல ஒரு சவப்பெட்டியில் அடைத்து ஏதோ ஒரு சுடுகாட்டில் புதைத்திருந்தனர்.
என்னைத் தடுத்த அனைவரையும் மீறி, அந்த இடத்தைத் தோண்டி எடுத்து அவன் இறக்கவில்லை என கதற வேண்டும் போல் இருந்தது. ஆனால்...என்னால் முடியவில்லை.
நாங்கள் ஓட்டி வந்த காரில் ப்ரேக் ஃபெயிலியர் ஆனதால், காரை எங்கேனும் நிறுத்துவற்காக ஹாசினியும் விஜயும் எடுத்து அவசர முடிவுகளில் கண் மூடி கண் திறப்பதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டதாம். அவர்கள் நிதானமாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதாம். இதெற்கெல்லாம் காரணம் ஹாசினியின் முட்டாள்தனம் தானாம்.
" வீட்டுக்கு போலாம் வீரா... வா டா, " இவ்வளவு நேரம் என் முன் அமர்ந்து அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்த என் அம்மா என் தலையை கோதி அழைத்தார்.
நான் எதுவும் சொல்லவில்லை. கண்களை மூடி மீண்டும் படுத்துக் கொண்டேன். என் அம்மா ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து எழுந்து வெளியே சென்று விட்டார்.
ஹாசினிக்கு பலத்த அடி இல்லை என்று என்னை நலம் விசாரிக்க வந்த அவளது அம்மாவினால் தெரிந்து கொண்டேன். அவள் என்னைப் பார்க்க வரவில்லை.
" வினய் இன்னும் இரண்டு நாள் அப்பறமா டிஸ்சார்ஜ் ஆகிடலாம். அது வரைக்கும் அவரு பெட் ரெஸ்ட்லையே இருக்கட்டும். " யாரோ ஒருவர் நான் இருந்த ரூமின் பின் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
இருளடையத் தொடங்கி சில மணி நேரங்கள் ஆகியதால், நான் இருந்த ஹாஸ்பிட்டலில் அமைதி கூடத் தொடங்கியது. கண்களை மூடினால் பளிச்சென தெரிந்த அவனது சிரித்த முகத்தை காண முடியாமல் கண்களை மேலிருந்த ஃபனின் மீதே பதித்திருந்தேன். மணி நேரங்கள் உருண்டோட, ஒரு கட்டத்திற்கு மேல் அந்த இடத்தில் என்னால் மூச்சு விட முடியவில்லை.
நடுங்கும் என் கால்களை தரையில் பதித்து மெதுவாக எழுந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். நான் எண்ணியதை போல வெளியே யாரும் இருக்கவில்லை. ஆழ்ந்த அமைதியோடு அந்த ஹாஸ்பிட்டலும் உறக்கத்தில் இருந்தது போல...
என் உடையை மாற்ற எண்ணம் வரவில்லை... கால்களில் செருப்பு தேவையிருக்கவில்லை. கண்கள் பழகிய இருளுக்குள் மூழ்கிய நான்...நடக்கத் தொடங்கினேன்.
சாலைகள் கடந்து, வீடுகள் கடந்து தானாகவே என்னை எங்கோ அழைத்துச் சென்றது என் கால்கள். எங்கு சென்றேனென தெரியவில்லை, ஆனால் எப்படியோ அவனை வந்தடைந்து விட்டேன்.
என் மனதில் நீடித்த வெறுமை கூடியது. என் கண் முன்...அவனது கற்சாமதி. அது அவனது கற்சாமதி தான். என் விஜயுடையது தான்.
உயிரற்ற அனாதையை போல், பெயரற்ற கற்சாமதிக்குள் என் விஜயை அடைத்திருந்தனர். வளவளத்த என் கால்கள் என்னை ஏமாற்றிட, ஆட்சியபனையின்றி அவன் கற்சாமதி முன் மண்டியிட்டு விழுந்தேன்.
உண்மையில்...என்ன சொல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும், இதற்கு மேல் எனக்கு என்ன ஆக உள்ளது என எனது எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. என் பிறப்பின் ஊடே, தெளிவு பிறந்த நாள் முதல் எனது நிழலாக பயணித்த என் மற்றொரு நிழல் இப்போது என்னுடன் இல்லை என்ற உண்மையை எவ்வாறு எடுத்துக் கொள்வதென்று தெரியாத நிலையில் என் கைகள் கீழே கிடந்த ஒரு கூரான கல்லை எடுத்தது.
மனம் போன போக்கில் அந்த கல்லால் அந்த கற்சாமதியை உடைக்கத் தொடங்கினேன். குளிரில் நடுநடுங்கி அமர்ந்திருந்த வேளையில், என் கைகளுக்கு மட்டும் எவ்றாவு இந்த சக்தி வந்ததோ தெரியவில்லை.
அவனது பெயரை செதுக்கி விட்டு அந்த கற்சாமதியையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
" விஜய், "
காற்றிலும் புகாமல் என்னிடமே மீண்டு வந்தது என் அழைப்பு. அந்த மையான அமைதிக்கு இணையாக ஒலித்த என் வேகபெருமூச்சுக்களும்...காற்றில் அசைய மறுத்த மரங்களில் மறைந்திருந்த பூச்சிகளும் என்னை அரவணைத்தது போல் இருந்தது.
" விஜய்... எங்க இருக்க? ஏன் போன? " என் குரல் தழுதழுக்கத் தொடங்கிய போது, மேலும் என்னால் பேச முடியவில்லை. நானும் வரேன், என்னையும் அழைத்துச் செல் என கத்த வேண்டும் போல் இருந்தது ஆனால் அது என் விஜயின் காதுகளுக்குக் கேட்காது.
என் குரல் கேட்டிருந்தால் எப்போதோ அவன் என்னிடம் வந்திருப்பான். என்னிடம் வந்து அமர்ந்து, என் தலையை ஒரு தட்டுதட்டி, " போர போக்குல நாம பேய் கூட தான் டூயட் பாடனும்னு சொன்னா, உடனே அத செய்ய வந்துடுவியா? அப்படி என்ன அவசரம் டா உனக்கு? " என சிரித்தபடியே என்னை வந்த வழியிலே இழுத்துச் சென்றிருப்பான்.
பேச்சு மறந்த குழந்தை போல, என்னைப் பார்த்துக் கொண்டே நின்றிருக்க மாட்டான். இங்கு வந்த பிறகு, மேலும் அவன் இறக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறான் என கதறும் என் இதயத்தை லேசாக்குவது போல் பார்க்கும் இடமெல்லாம் அவன் தான் தெரிந்தான்.
காலை வெயில் புணர்ந்த வேளையில், தட்டுத்தடுமாறி கால் போன போக்கில் நடந்த நான் எப்படியோ எங்களின் வீட்டை வந்தடைந்து விட்டேன். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. யாரும் வந்தது போலும் தெரியவில்லை. வீட்டின் சாவி எப்போதும் விஜயிடம் தான் இருக்கும். எனக்கு ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைத்து எடுக்கும் பழக்கமே கிடையாது.
இத்தனை காலம் அதற்கான தேவையும் இருக்கவில்லை.
பெருமூச்சோடு கதவை பார்த்தபடியே நின்றேன். வீடில்லை என்றால் என்ன, நடப்போம் என ஏதோ ஒரு சிந்தனையிலே திரும்பி படிகளை நோக்கிச் சென்ற நேரம், கதவிற்கு வெளியே கிடந்த கால்மிதி சற்று விலகியது.
" சாவி ஒன்னு கால்மிதி கீழையும், பீரோல் மேலயும் இருக்கு டா வெண்ண, நியாபகம் வச்சுக்கோ, நான் கேப்பேன். " என என்றோ கூறிய அவனது குரல் என் காதில் ஒலித்தது. அவனும் அங்கு தான் அந்த கால்மிதியின் அருகில் நின்றபடி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த சாவியை எடுத்து கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தேன். அவசரகதியில் அன்று நாங்கள் விட்டுச் சென்ற அதே நிலையில் தான் கிடந்தது அனைத்தும். எங்களுக்குத் தான் உருப்புடுற புத்தியே கிடையாதே என நினைத்துக் கொண்டே, சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்தேன்.
கதவிற்கருகில் நின்று வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவன், பின் என் அருகில் வந்தமர்ந்தான்.
அமைதி
எனக்குத் தெரிந்து இந்த அமைதியை நான் என்றும் அனுபவித்தது இல்லை. மழை கொட்டும் இரவு நாட்களில், இவனை கலட்டி விட்டுவிட்டு ஜன்னல் அருகில் அமர்ந்து விட வேண்டும் என பல நாட்கள் திட்டம் போட்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை விட்டால் தானே? என்னையும் என் தனிமையை அடையவிடவில்லை, அவனும் தனித்தே இருந்ததில்லை.
இத்தகைய அமைதி தூக்கத்தில் தான் நிலைத்திருந்தது எங்களிடையில். அந்த தூக்கம் கூட இப்போது எனக்கருகில் இல்லை.
காலத்தின் முட்கள் நில்லாமல் ஓடியது. சுவற்றை வெறித்தபடி நானும் என்னை வெறித்தபடி அவனும் அப்படியே தான் அமர்ந்திருந்தோம்.
இவனை காட்டி அனைவரிடமும் என் விஜய் இறக்கவில்லை என கூறலாம் வா என்பது போல் அழைத்தது ஒரு குரல். ஆனால் எழுந்து சென்று அவனை சற்று அருகில் பார்க்கக் கூட எனக்கு உடல் அசைவு கொடுக்கவில்லை.
" எவ்வளவு நேரம் இப்படியே ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பார்த்துட்டு இருக்கப் போறோம்? " மறத்துப் போன விளையாட்டுத் தனத்தோடு, இந்த கனவிலாவது இவன் குரல் கேட்காதா என்ற ஏக்கத்திலும் எதாவது ஒரு மாயமந்திரத்தினால் என் முன் இருக்கும் என் விஜய் என்னிடம் பேசி விட மாட்டானா என்ற வலியிலும் அவனை பார்த்தேன்.
அந்த சுடுகாட்டில் அவனை பார்த்தது முதல் அவன் எப்படி என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ அதே போல் தான் இப்போதும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
" விடு.... நீ பேசலன்னாலும் இப்படி கண்ணு முன்னாடி இருக்குறதும் நல்லா தான் இருக்கு, "
கண்களை மூடி சுவற்றில் என் தலையைச் சாய்த்துக் கொண்டேன். கனவிலும் அவன் இல்லாத இந்த வீட்டில் நான் இருப்பேன் என எண்ணியதில்லை.
நாட்களும் ஓடியது.
நடைபிணம் போல தினம் எழுந்தேன், என் அருகிலே சுற்றித் திரிந்த அவனைப் பார்த்தபடி நானும் அலைந்தேன்.
அர்த்தராத்திரியில் ஹாஸ்பிட்டலில் இருந்து காணாமல் போன என்னை, இரண்டு நாட்காள் பின் எங்களது வீட்டில் கண்டுபிடித்தான், எங்கள் அண்ணன் செல்வராகவன்.
" எங்கடா போய் தொலஞ்ச?! எதுக்கு இங்க வந்த?! " என நான் கதவை திறந்த உடனே என்னைக் கண்டு கத்தினான். நான் பெரிதாக எதுவும் பேசும் மனநிலையில் இல்லாமல் இருந்ததால் கதவை மூடிவிட்டு மீண்டும் வந்து படுத்துக் கொண்டேன் அன்று.
செல்வா கதவை தட்டிக் கொண்டே இருந்தான். கதவருகில் விஜய் நின்றபடி என்னை ஒரு முறை பார்த்தான்.
உனக்கு பார்க்குறத தவிர்த்து வேற வேலை இல்லை... அட்லீஸ்ட் பேய் மாறி இல்லாம இருக்கியே ... என முனுமுனுத்தபடியே திரும்பிப் படுத்துக் கொண்டேன்.
மறுநாளும் காலை அதே நேரம் செல்வா வீட்டின் கதவை தட்டினான். நான் காது கேட்காதவன் போல தான் படுத்திருந்தேன்.
எனக்கு சாப்பாடோ ட்ரெஸ்ஸோ தண்ணியோவெல்லாம் வேணாம். இப்போ இவன உள்ள விட்டா இவன் என்ன அங்க இழுத்துட்டு போய்டுவான். நான் கதவ திறக்கமாட்டேன்... என எண்ணியபடியே படுத்திருந்தேன்.
கதவை திறயேன் என்பது போல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். அவனுக்கு வேற என்ன வேலை?
" கதவ திற வீரா... இப்படியே தனியா இருந்தீன்னா நீ செத்துருவ டா. என்ன உள்ள விடு! " அன்று மதியம் போல் மீண்டும் செல்வாவின் குரல் கேட்டது.
எவ்வளவு நேரம் போனதென்றெல்லாம் தெரியவில்லை, நான் ஏதோ சத்தம் கேட்டு மீண்டும் கண் திறந்து பார்த்தபோது, விஜய் கதவருகில் தான் நின்றிருந்தான். அதே நேரம், கதவும் திறந்து கொண்டது.
அசதியாக நின்ற செல்வா கைகளில் சில பைகளோடு உள்ளே வந்தான்.
" வீரா நான் சொல்றது கேளு டா... இப்படியே இருக்காத வீட்டுக்கு போலாம் வா, "
நான் கதவருகில் நின்ற விஜயை பார்த்தேன். அவன் மும்மரமாக அவனது கைகளை பார்த்துக் கொண்டே நுப்பத்தி இரண்டு பல்லும் தெரிவது போல இளித்தான்.
" டேய் அண்ணன பாரு டா.. என்னடா ஆச்சு உனக்கு? " செல்வா அழுத்தமாய் எனது தாடையை பிடித்து வேகமாய் இழுத்தான்.
இவன் கேட்டா மட்டும் இப்போ எனக்கு பேசுற மூடு வரனுமா ... என்பதை போல அவனை பார்த்து விட்டு மீண்டும் விஜயை பார்த்தபடி திரும்பி படுத்துக் கொண்டேன்.
சாப்டாம செத்துராத என யாருக்கோ கத்திக் கொண்டே என்னை வலுக்கட்டாயமாய் தூக்கி அமர வைக்க முயற்சித்தான் செல்வா. நான் அவன் கைகளை தட்டி விட்டு விட்டு மீண்டும் படுத்துக் கொண்டேன்.
" ஏன் டா இப்படி பன்ற?! ஒருத்தன் உனக்காக தினம் இங்க வந்துட்டு வந்துட்டு போறேன்?! எனக்கு எவ்வளவு வேல இருக்குத் தெரியுமா?! ஏன் டா இப்படி வீட்டுல உள்ள எல்லார் உயிரையும் வாங்குற?? "
ஆவேசம் அவனது மூளையை மறைத்து விட்டது. இவன் என்ன புது கதை சொல்கிறானோ தெரியவில்லை. எனக்கு அதில் இஷ்டமும் இல்லை.
" செத்துப்போனவன நெனச்சுட்டு ஏன் டா இப்படி உயிரோட இருக்குற எங்கள போட்டு கொல்ற? உனக்காக தான இவ்வளவு பன்றேன்?! "
அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தேன். எனக்கு வாயைத் திறந்து பேசுவதற்கெல்லாம் இப்போது மூடு இல்லை. இவனிடம் பேசி மட்டும் என்னாக போகிறது? நான் தினம் உணவுண்டு மட்டும் என்னவாக போகிறது?
ஏதோ விழுந்து உடையும் சத்தம் கேட்டு செல்வா சடாரென திரும்பி பார்த்தான். கதவருகில் நின்றிருந்த விஜய் நேராக வந்து செவாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். கத்திக் கொண்டிருந்தான் போல ...
செல்வா அவனை ஒரு மனிஷனாகவே மதிக்காமல் மீண்டும் என்னை போட்டு உலுக்கினான். நான் அலட்டல் இல்லாமல் திரும்பிபடுத்துக் கொண்டேன்.
கத்திக் கத்திப் பார்த்தவன் பின் சிறிது நேரத்தில் கதவை அறைந்து சாத்தி விட்டு சென்றுவிட்டான். இப்போது விஜய் மீண்டும் என் அருகில் தெரிந்தான்.
அவன் கைகளையே மும்மரமாக பார்த்தபடி கைகளையும் அங்குமிங்கும் வீசிக் கொண்டிருந்தான்.
இதையெல்லாம் வெளியே சொன்னால் என்னை பைத்தியம் என்று தான் அழைப்பார்கள். ஆனால் இவன் இப்படியாவது என் கண் முன் இருக்கிறானே. அது தான் போதுமே எனக்கு...
நான் பைத்தியமானாலும் அவன் பைத்தியமாகவே தெரிந்தாலும் பரவாயில்லை.
நேரமும் ஓடியது. என்னை சுற்றி ஏதேதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் எழுந்து பார்க்குமளவு தெம்பு இருப்பதை போல் தெரியவில்லை.
தட்டுத்தடுமாறி புரண்டு படுத்து கண்களை அசதியோடு மூடிக் கொண்டேன்.
" அய்யோ என்ன டா இது கொடுமையா இருக்கு! எப்படி தான் பேயெல்லம் படத்துல பார்த்த உடனே பேசுது?! எந்த பட்டனா டா அழுத்தனும்?! " என யாரோ...விஜய் கத்தும் குரல் கேட்டது.
என்ன சொல்கிறான் இவன்? யாரிடம் பேசுகிறான்?
" டேய் வீரா உனக்காக நான் என்ன என்னலாம் டா பன்றது?! ஹையோ பேய் ட்ரெய்னிங்கு நான் எங்க டா போவேன்?! "
மீண்டும் இப்போது காற்று வேகமாக வீசும் சத்தம் ஒரு புறமிருந்து கேட்டது.
நான் கண்ணைத் திறந்து தடுமாற்றத்தோடே சுற்றிப் பார்த்தேன். பார்த்த இடமெல்லாம் தெரிபவன் இப்போது கண்ணிற்கே அகப்படவில்லை.
" விஜய்.... விஜய் எங்க டா இருக்க?! "
எனது கற்பனை கூட காணாமல் போய் விட்டதா என்ற பயம் நொடியில் என்னை ஆட்கொண்டது. போய் விட்டானா? ஏன் எங்கும் தெரியவில்லை. ஏன் தெரியவில்லை.
படபடவென என் இதயம் பறபறத்தது. நான் திக்பிரம்மை பிடித்ததை போல யாருமற்ற அந்த வீட்டில் சுற்றி சுற்றி வந்தேன். யாரோ என் பின் மண்டையிலிருந்து கொண்டு " அவன் செத்துட்டான் அவன் செத்துட்டான் எல்லாம் உன்னோட கற்பனை. அவன் திரும்ப வரவே மாட்டான். செத்தவன நினைக்காத! " என மாற்றி மாற்றி கத்திக் கொண்டே இருப்பது போல் இருந்தது.
என் மூச்சு வேமெடுக்க, கண்கள் மருண்டு எதிலோ தட்டுத் தடுமாறி நான் நின்ற போது தான் மீண்டும் அவன் குரல் கேட்டது. குரல் மட்டுமல்ல, அவனும் என்னை தாங்கிப் பிடித்தபடி என்னைப் பார்த்தான்.
" வீரா! "
அருவமாய் அவன்...
ஹாய் இதயங்களே !!
திரும்ப காணாம போ மாட்டேன் சொன்னேன்ல... வன்ட்டேன் பாருங்க... கோச்சிகாதீங்க மை டியர் இதயங்களே டெய்லி யூடி போடுற அளவுக்குளாம் நான் இன்னும் வரல.. இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா வந்துட்டு இருக்கேன். கவலப்படாதீங்க இந்த கதைய முடிக்காம விட மாட்டேன். ரொம்ப சோம்பேறித்தனம் கூடிப் போச்சு உங்க தீராக்கு.. அதான் உருப்புடவே தோன மாட்டுது. ஹிஹிஹிஹி அட்லீஸ்ட் இனிமே ஒரு வாரத்துக்கு இரெண்டு யூடியாவது குடுக்க ட்ரை பன்றேன் சரியா? உங்க ஆதரவுக்கு. ரொம்ப ரொம்ப நன்றி இதயங்களே... கண்டிப்பா உங்களுக்காக இந்த கதைய நான் எழுதுவேன். நல்லா இல்லனா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, போக போக உங்களுக்கு புடிச்ச மாரி மாற ட்ரை பன்றேன். ரொம்ப நன்றி இதயங்களே. அடுத்த அத்யாயத்தோட சீக்கிரம் வர ட்ரை பன்றேன். டாட்டா!!!
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro