Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 57

"டேய் எருமை மாடு, ரூபி நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் எல்லாரையும் கவனிச்சு வழியனுப்பி வச்சுட்டு இப்போ தான்டா பந்தியில ரெண்டாவது ரவுண்டு எம்பொண்டாட்டியோட உட்கார்ந்து என்ஜாய் பண்ணி சாப்பிட்டுட்டு வந்தேன். ரசிச்சு சாப்பிடதெல்லாம் வாய் வழியா வெளிய வந்துடும் போலிருக்கு. இந்த வீட்ல இருக்கிறவிங்க வேற ராத்திரி ஆனா வீட்டுக்கு வெளியே வர்றதுக்கு காசு கேக்குறவங்க...... ப்ளீஸ்டா தங்கம் மச்சானை இப்படி வவ்வால் மாதிரி தலைகீழா தொங்க விட்டன்னா அப்புறம் உனக்கு குசேலருக்கு பொறந்த மாதிரி 27 புள்ள பொறக்கும். நான் தெரியாம கேக்குறேன்.... நீ தானடா டையலாக் எல்லாம் எழுதிக் குடுத்து என்னைய கவி கிட்ட கோபப்பட சொன்ன; அவட்ட பேசிட்டு இருக்கும் போது எனக்கு கொஞ்சம் சுர்ருனு ஏறிடுச்சு. அதான் அடிச்சுட்டேன். உடம்புல இருக்கிற பார்ட் எல்லாம் வேற வேற இடத்துக்கு போயிடும் போலிருக்கு. கீழ இறக்கி விடுடா!" என்று கெஞ்சிக் கொண்டிருந்த பார்கவை பார்த்து சற்று இரக்கப்பட்ட ஜீவானந்தன்,

"அவள அடிக்கிற மாதிரி நடின்னு தானே சொன்னேன்..... கோபம் வந்ததுன்னா நீ போய் சுவத்துல முட்டிக்க; எம் பொண்டாட்டிய அடிக்க நீ யாருடா? பாவம் பொழச்சு போன்னு உன்னை இப்போ அவுத்து விடுறேன், இன்னொரு வாட்டி என் பொண்டாட்டி மேல கையை வச்ச, உன்னை மூட்டையில கட்டி பரண்ல தூக்கி போட்டுட்டு வந்துடுவேன் பார்த்துக்க!" என்று சொல்லி அவனை மெதுவாக கீழறக்கி அவன் கை கால்களில் கட்டியிருந்த முடிச்சுகளை அவிழ்த்து கொண்டு இருந்தான்.

"ஏன்டா மச்சி இவ்வளவு கோபப்படுற..... புது மாப்பிள்ளை இப்படி கொந்தளிக்கலாமா? முன்னாடி தான் என் குத்தமா உன் குத்தமான்னு எப்பப் பாரு புலம்பிட்டு இருந்த; இப்போ கொஞ்ச நாளா ஜாலியா தானே போயிட்டு இருந்தது...... மறுபடியும் என்ன பிரச்சனை?" என்று கேட்ட தன் நண்பனை கோபமாக முறைத்த ஜீவானந்தனிடம்,

"இல்ல தங்கம்..... வீரபத்ரர் மாதிரி ரொம்ப அழகாயிருக்கியே, இதுக்கு பின்னால என்ன நடந்துச்சுன்னு கேட்டேன். ஷ்ஷ்ஷ் ஆ! ஏன்டா மூஞ்சிய பொத்தி தூக்கிட்டு வந்து தலை கீழா கட்டி தொங்க விடுறதுக்கு உனக்கு கார் ஷெட் தான் கிடைச்சதா? வீட்டுக்குள்ள போய் பேசலாமா, ஏதோ பூச்சி கடிக்குதுடா! வாணி வேற என்னைய காணும்னு பயந்துட்டு இருப்பா!" என்று கேட்டு தன் மாமன் மகனின் கோபத்திற்கான காரணத்தை அவன் வாயில் இருந்து வர வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான் பார்கவ்.

"அபிக்கு கால் பண்ணி நீ வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்னு சொல்லு! உன் கூட கொஞ்சம் பேசணும்!" என்று சொன்ன ஜீவானந்தனை பார்த்து தலையில் அடித்து கொண்ட பார்கவ் தன் மனைவிக்கு அழைத்து இரண்டு நிமிடங்கள் பேசி விட்டு சலிப்புடன்,

"உம் பொண்டாட்டியும், எம் பொண்டாட்டியும் சேர்ந்து தான் படுத்துருக்குங்களாம், எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்ல, ஜீவாண்ணா ரூம்ல போய் தூங்குங்கன்னு சொல்றா; போயும் போயும் உன் அத்தை பையனா வந்து பொறக்க என்ன பாவம்டா பண்ணி தொலைச்சேன் நானு...... பதினோரு மாசம்...... பதினோரே மாசம் தான்டா அவள லவ் பண்ணேன்...... அதுக்குள்ள அவ வீட்ல இருக்கிறவங்க அவளுக்கு மண்டையில என்ன மசாலாவ தடவுனாய்ங்களோ தெரியல..... நம்ம ப்ரேக் அப் பண்ணிக்கலாம் கவின்னு......" என்று பேசிக் கொண்டிருந்த பார்கவின் பேச்சை, "ஒரு நிமிஷம் இரு!" என்று சொல்லி நிறுத்துமாறு கைகாட்டிய ஜீவா,

"ப்ரேக் அப் பண்ணிக்கலாம் என்னன்னு......?" என்று கேட்க பார்கவ் தன் வாயில் அடித்துக்கொண்டு,

"அதான்டா பிரிஞ்சுடலாம்னு சொல்லி டாட்டா காமிச்சுட்டு போயிட்டா, எங்க கல்யாணத்துக்கு மறுநாள் கூட லீவ் போட மாட்டேன், சம்பளம் போயிடும்னு சொன்னவள இப்போ தான் கையில காலுல விழுந்து எல்லாரும் வர்றாங்கம்மான்னு சோப் போட்டு சரி பண்ணி, நானும் ஒரு பத்து நாள் என்னைய தேடாதீங்கன்னு சொல்லி வேலைக்கெல்லாம் ஓபி அடிச்சுட்டு இங்க வந்தது ராத்திரியில உன் கூட உட்கார்ந்து பேசறதுக்கும், தலைகீழா ஊஞ்சல் ஆடி விளையாடிட்டு இருக்கிறதுக்கும் தானா?" என்று கேட்டு ஏக்கமாக மூச்சு விட்டவனைப் பார்த்து பொறுமையை இழந்த ஜீவா,

"டேய் முண்டம்! இங்க அவனவன் இவ்வளவு நாள் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சிருந்த காதல் மொத்தமா போச்சுன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தா இந்நேரத்திலயும் உனக்கு லவ் கேக்குதா? ரெண்டு நாளைக்கு நீ, ராசு ரெண்டு பேரும் ஒழுங்கா வால சுருட்டிட்டு எங்கூடவே இல்லன்னா கிளம்பி நான் பாட்டுக்கு சென்னைக்கு போயிடுவேன்!" என்று சொல்லி விட்டு முழங்காலை கட்டிக் கொண்டு தலையை சாய்த்து கொண்டவனிடம்,

"நீ இவ்வளவு கடுப்பாகுற அளவுக்கு என்ன தான்டா ஆச்சு? விஷயம் என்னன்னு சொல்லி தொலையேன்!" என்று கேட்ட பார்கவிடம் அனைத்தையும் ஒப்பித்து விட்டு மறுபடியும் முழங்காலில் தலையை சாய்த்து கொண்டான் ஜீவானந்தன்.

"ஷ்ஷ்ஷப்பா..... என் கூட பொறந்தது ஏன்தான் இப்படி ஒட்டு மொத்த இம்சைய கூட்டுதோ தெரியலயே! நீ கண்ணாடியால கையை கிழிச்சுட்டு கிடந்தப்ப எந்த கில்டினெஸ்ல அவ உன்னை கவனிச்சுட்டு சோறெல்லாம் ஊட்டி விட்டாளாம்? ஏன்டா எந்தங்கச்சி என்ன அவ மனசுக்குள்ள உன் மேல வச்சிருக்கிற காதலை கூட புரிஞ்சுக்க முடியாத அவ்வளவு லூசா.....?" என்று கேட்டு தலையை பிடித்து கொண்ட பார்கவை பார்த்து சிரித்த ஜீவா,

"நல்லா கேட்ட போ! அவளா லூசு? எங்க அடிச்சா இவனுக்கு வலிக்கும்னு தெளிவா தெரிஞ்சு வச்சுக்குறவடா..... நான் பதிலே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு கேள்வியை கேட்டுட்டு அவ மனசுல வச்சிருந்த கோபத்தை எல்லாம் சொல்லி முடிச்சிட்டா பாரு! என்னை பார்த்தாலே குற்ற உணர்வு வந்து தவிக்கிறேன்னு சொல்றவ எதுக்குடா அவ வீட்டுக்கு நான் போறப்போ எல்லாம் பத்து தடவை என் பார்வையில படற மாதிரி என் முன்னாடி வந்து நிக்கணும்? எங்கப்பா அவளுக்காக குடுத்த குறிஞ்சிப்பூவை பத்திரப்படுத்தி வச்சிருந்து எனக்கு மட்டும் குடுக்கணும்..... கசங்கிப் போன பூவை குடுக்கிறதெல்லாம் உந்தங்கச்சி அகராதியில காதல் இல்லையாமா? ராசுட்ட பேசுற வரைக்கும் அவ கிட்ட பாசத்தை காமிக்க தோணுச்சு, அவன்ட்ட பேசினதுக்கப்புறம் அவள காதலோட பார்க்கணும்ன்னு தெரிஞ்சது, ரெண்டு வயசுல இருந்து அவள பார்த்துட்டு இருக்கிறதுனால அவள தான் மனசுல முதல்ல கொண்டு வந்து வைக்கணும்ங்கிற உணர்வு அவன் சொல்ற வரைக்கும் எனக்கு வரல, அவன்ட்ட இந்த விஷயத்தை ஷேர் பண்ணினது தான் உந்தங்கச்சிக்கு பிரச்சனையா இருக்கும்ன்னா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. தெரிஞ்சோ தெரியாமலோ என் வாயில இருந்தே என்னைப் பத்தி ரொம்ப கேவலமான ஒரு வார்த்தைய வர வச்சிட்டாடா..... அவ மேல கோபம் கோபமா வருது, ஏன்டா அவ மேல கோபப்படுறோம்னு நினைச்சு என் மேலயும் கோபமா வருது! பெரியவங்களா பார்த்து செஞ்சு வச்சிருந்தா என் மேரேஜ்ல இவ்வளவு காம்ப்ளிகேஷன்ஸ் வந்திருக்காதோடா பாகி?" என்று தன் நண்பனிடம் கேட்டு பெருமூச்சு விட்டவனை பாவமாக பார்த்து விட்டு அணைத்துக் கொண்டவன்,

"எந்தங்கச்சி பிசாசை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகும் நீ என்னைய தான் கட்டிப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்கணும்னு உன் ஃபேட் இருக்கு பார்த்தியா..... அது தான்டா எனக்கு கஷ்டமா இருக்கு. பெரியவங்கள எல்லாம் ஒரு வார்த்தை கேக்காம அவ போடுன்னதும் செயினை போட்டல்ல; அப்புறம் எந்த மூஞ்சிய வச்சுட்டு இப்போ பெரியவங்க செஞ்சு வச்சிருந்தான்னு ஒரு கேள்வியை வேற கேக்குற.....? நாளைக்கு காலையில ரூபி கல்யாணத்தப்ப கவிப்ரியாவை நீ யூஸ் பண்ணிக்கிட்டியாங்கிற கேள்விக்கு மாமா கிட்ட பதிலை கேக்குற..... அதுக்கப்புறம் அவ செவுள் மேல ரெண்டு அறை விட்டுட்டு மரியாதையா விவேக் மாமா கூட கிளம்பி போய் பாக்டரி, பண்ணை, எஸ்ஜேஎன், ருசி எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துக்குற. கோவிலுக்கு எங்கையாவது போனாக் கூட மாமா அங்க உட்கார்ந்து இருக்கிறவங்கள காட்டி அவங்க ஹெல்ப் கேக்குறவங்கடா பாகி உன்னால முடிஞ்சத செஞ்சுட்டு வான்னு சொல்லுவாரு. அவர் புள்ள உன்னைய
என்ன மாதிரி ஒரு வார்த்தைய சொல்ல வச்சிட்டாடா ராட்சஸி!" என்று சொல்லி விட்டு காரில் சாய்ந்து கொண்டு நின்றான் பார்கவ்.

"விடுறா என் அம்முலு தானே.... அவ என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும். இப்போ திட்டுற வாயால தான் பின்னாடி ஒரு நாள் மன்னிப்பு கேட்க தவிச்சுட்டு நிப்பா.... ஆனா அப்பவும் அவ வாயில இருந்து வர்றதுக்கு முன்னாடி நான் அவள தடுத்துருப்பேன்டா! ஏன்னா ஐ சின்ஸியர்லி லவ் ஹெர் சோ மச்!" என்று சொன்ன ஜீவானந்தனை முறைத்த பார்கவ்,

"இப்படி நீ வாழைப்பழமா இருந்தா அவ உன்னைய வாயில போட்டு மெல்லத்தான் செய்வா...... வாங்க ஜீவானந்தன்; நாளைக்கு காலையில ஐ'ம் ஸாரி இன்னிக்கு காலையில அஞ்சரை மணிக்கு தலையில தண்ணிய ஊத்தி எழுப்பி விட்டுருவாய்ங்க, உங்க தங்கச்சி கல்யாணத்த தம்பதி சமேதரா நின்னு நல்ல படியா நடத்தி முடிக்கணும்ல?" என்று கேட்டு புன்னகைத்தவனிடம்,

"டேய் பாகி அம்முலு என்ன கலர்லடா புடவை கட்டிக்க போறாளா இருக்கும்? நான் நாளைக்கு லைஃப்ல பர்ஸ்ட் டைம் வேஷ்டி கட்டிக்கப் ப்ளான் பண்ணி இருக்கேன், அவளுக்கு மேட்சிங்கா ட்ரெஸ் போட்டா நல்லா இருக்கும்ல.....?" என்று கேட்ட தன் மாமன் மகனிடம்,

"........ , ........., .......! மணி என்னன்னு பாருடா, எவ்வளவு வெட்டு குத்து நடந்தாலும் அதிலயும் ஒரு ரொமான்ஸ் கேக்குதா உனக்கு. வா போய் படுப்போம். காலையில அந்த பக்கி என்ன ட்ரெஸ் போடுதுன்னு விசாரிச்சு மெசேஜ் பண்றே........ ஆ.......கீத்து இப்ப எதுக்குடா என்னைய அறைஞ்ச?" என்று கேட்டு கன்னத்தில் கை வைத்து கொண்டு நின்றவனிடம்,

"இல்ல முதல்ல அவள லூசுன்ன, அதுக்கப்புறம் பிசாசுன்னு சொன்ன, இப்போ பக்கிங்கிற, என்னைய இப்போ திட்டினியே டாஷ் டாஷ்னு..... அந்த மாதிரி என்ன வேணும்னாலும் சொல்லிக்க, ஆனா அவள என் முன்னாடி திட்டினன்னா அறை வாங்குவ!" என்று சொன்ன ஜீவானந்தனை பார்த்து தலையில் அடித்து கொண்டு தன்னுடன் அழைத்து சென்றான் பார்கவ்.

ஷைலஜாவின் அறைக்குள் இரண்டு மணி நேரமாக இருந்த பவினை வெளியே சென்று விடும் படி கெஞ்சிக் கூத்தாடி கொண்டிருந்தாள் ஷைலஜா.

"ஷை பேபி நான் என்ன ரெண்டு வயசு குழந்தையா.... எங்கப்பா அம்மாவுக்கு நடுவுல போய் படுத்துக்கறதுக்கு, பாரு எவ்வளவு பெரிசா வளர்ந்து வச்சிருக்கேன், காலையிலயும் பாத் எடுத்துட்டு டவலோட தான் வந்து நிப்பேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால பயந்து கத்தின மாதிரி நாளைக்கும் கத்தாத. சரியா?" என்று கேட்டு அவள் கட்டிலில் வசதியாக படுத்துக் கொண்டு போர்வையை போர்த்திக் கொண்டவனிடம்,

"வினு ப்ளீஸ்ப்பா; நானே உன்னைய கெஸ்ட் ரூம் வரைக்கும் கொண்டு வந்து கம்பர்டபிளா படுக்க வச்சுட்டு கூட போறேன். காலையில யாராவது ரூமுக்குள்ள வந்து உன்னையும், என்னையும் சேர்த்து பார்த்து டென்ஷன் ஆகி, அப்புறம் பெரிய ப்ராப்ளம் ஆகி தேவையா இதெல்லாம்.....?" என்று கேட்டவளிடம் சிறு புன்னகையுடன்

"உங்கிட்ட எல்லா விஷயமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பட் ஹாஸ்பிட்டாலிட்டில மட்டும் நீ ரொம்ப வீக்கா இருக்க. அது ஒண்ணு தான் பிடிக்கல. நீ நம்ம வீட்டுக்கு வந்தப்போ என் ரூமை உங்கிட்ட குடுத்துட்டு நான் தானே வேற ரூமுக்கு போனேன்...... இப்போ நான் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன். ஐ'ம் யுவர் ஸ்பெஷல் கெஸ்ட், ஸோ நீ போய் கெஸ்ட் ரூம்ல படு!" என்று சொன்ன பவினின் வாதத்தை மறுத்த ஷைலஜா,

"போப்பா.... நான் வேற ரூமுக்கு எல்லாம் போக மாட்டேன். தேவையில்லாம என் பக்கத்துல வந்து படுத்து ரிஸ்க் எடுக்காத, அவ்வளவு தான் சொல்லுவேன்!" என்று சொன்ன ஷைலஜாவிடம் சிரிப்புடன்,

"நீ ஏன் மிஸ் இனியா கிட்ட மட்டும் ரொம்ப அட்டாச்டா இருக்கன்னு ஜெய் அங்கிள்ட்ட இன்னிக்கு கேட்டேன் ஷை பேபி! டீனுன்னு ஒரு பப்பிய நீ பால் குடுத்து கொன்னுட்டியாமே....... எல்லாரும் உன்னை திட்டினப்போ இனியா மட்டும் உனக்கு ஸப்போர்ட் பண்ணினாங்களாமே, அதுல இருந்து தான் உங்க ப்ரெண்ட்ஷிப் செம ஸ்ட்ராங் ஆச்சுன்னு சொன்னாங்க. எனக்கு ஒரு டௌட், பப்பிக்கு எதுவும் ஃபீட் பண்ணலன்னா தானே செத்துப் போயிடும்? நீ பால் குடுத்து எப்படிம்மா கொன்ன?" என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஆர்வமாக கேட்ட தன் வருங்கால கணவனிடம்,

"அந்த பப்பி அவங்க டாடி வீராவை மாதிரி பெரிசா சீக்கிரம் வளரணும்னு நினைச்சு நான் வந்து வினு...... அப்போ ரொம்ப குட்டிப் பாப்பாவா அதுனால ஒரு பக்கெட் ஃபுல்லா பாலை ஊத்தி வச்சு அத உள்ள போட்டுட்டு அது குடிச்சு பெரிசாகுதான்னு பார்த்தேன், ஆனா அது செத்துப் போனவுடனே எப்படி அழுதேன் தெரியுமா..... வீட்ல எல்லாரும் எம்மேல ரொம்ப கோபமா இருந்தாங்க. நம்ம லட்டு மட்டும் தான் என் கூட சேர்ந்து அவளும் அழுதா! அதுனால தான் அவ எனக்கு பெஸ்ட்டீ தெரியுமா?" என்று கேட்ட தன் காதலியிடம் அடக்கப்பட்ட சிரிப்புடன்,

"நீ அப்போலேர்ந்தே ஆர்வக்கோளாறு தானா ஷை..... நான் கூட இப்போ தான் இப்படியோன்னு நினைச்சேன். ஒண்ணு பால ஊத்தி கொல்லப் பார்க்குற..... இல்ல பாலால அடிச்சு கொல்லப் பார்க்குற! ஐ தாட் யூ ஆர் சஸ் அ டேன்ஜரெஸ் கேர்ள்!" என்று சொல்லி விட்டு அவளுக்கு சரியாக போர்த்தி விட்டவனை தன்னால் முடிந்த அளவு திட்டி விட்டு சற்று நேரத்தில் உறங்கி விட்டாள் ஷைலு. அவள் உறங்கிய சற்று நேரத்தில் தன் போர்வையை காணாமல் தேடிய பவின் அதற்குள் அவளிடமிருந்து நான்கு மிதிகளை வேறு பரிசாக பெற்றிருந்தான். எக்குத்தப்பாக கட்டிலில் புரண்டிருந்தவளை நகர்த்தி நேராக படுக்கையில் கிடத்தியவன் சற்று நேரம் அவள் முகத்தை பார்த்து விட்டு "மை லவ்லி லேஸி டர்ட்டிள்....." என்று முணுமுணுத்து அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்தான் பவின்.

நள்ளிரவு இரண்டு மணியளவில் தன் அறையில் உறக்கமே வராமல் புரண்டு புரண்டு படுத்து விட்டு பின் எழுந்து அமர்ந்து விட்டார் ஜெய் நந்தன். அருகில் தன் மனைவி அமைதியாக உறங்கி கொண்டு இருப்பதை பார்த்து அவருக்கு கோபம் வந்தது. நிர்மலாவை சுரண்டிக் கொண்டே, "நிலாம்மா! எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதுடீ பஞ்சு மூட்டை நீ என்ன இப்படி தூங்குற... நாளைக்கு நம்ம ரூபினிக்கு இனிஷியல் மாறிடும்ல!" என்று கேட்டவரிடம் "ம்ம்ம்!" என்று முணங்கி விட்டு போர்வையை தலை வரை மூடிக் கொண்டார். "ரூபிம்மா நம்மள விட்டுட்டு கௌ வீட்டுக்கு போயிடுவா. அப்புறம் நம்ம என்ன பண்றது நிலாம்மா?" என்று கேட்ட தன் கணவரிடம் நிர்மலாவின் ம்ம்ம் இப்போது வேறு தொனியில் வந்தது.

"ஏய் இங்க நான் பாட்டுக்கு புலம்பிட்டு இருக்கேன், அத சரியா கேக்க கூட செய்யாம நீ என்னடீ ஊம் ஊம்னு அனத்திக்கிட்டு இருக்க..... வா குளிச்சுட்டு அப்படியே தோட்டத்துல ஒரு வாக் போயிட்டு வருவோம். நம்ம பொண்ணை பத்தி தனியா யோசிச்சுட்டு இருந்தா எனக்கு அழுகை அழுகையா வருது!" என்று சொன்னவரிடம்,

"ம்ப்ச், அர்த்த ராத்திரியில உயிரை வாங்காதீங்க ஸ்ரீ, உங்களுக்கு தூக்கம் வரலைன்னா ரூபி கிட்ட போய் படுங்க. என்னை இன்னும் இரண்டு மணி நேரமாவது நிம்மதியா தூங்க விடுங்க!" என்று அரை உறக்கத்திலும் பேச வேண்டியதை தெளிவாக பேசி விட்டு மறுபடியும் படுத்து விட்டார் நிர்மலா.

தன் மனைவி தந்த யோசனை நன்றாக இருப்பது போல் தோன்றவே ஜெய்நந்தன் மெதுவாக எழுந்து ஷைலஜாவின் அறைக்கு சென்று கதவை மெதுவாக திறந்தார். ஷைலஜாவின் கட்டிலில் ஒருபுறம் தலையணைகளை அடுக்கி வைத்து விட்டு, தனது கையணைப்பில் அவளை இறுக்கிக் கொண்டு உறங்கி கொண்டிருந்த பவினின் தோளில் படுத்து தன் மகள் நிம்மதியாக உறங்கி கொண்டிருப்பதை கண்ட ஜெய் நந்தனுக்கு மெலிதான ஒரு பொறாமை தோன்றினாலும் அவர் இதழ்களில் சிறு புன்னகையும் தோன்ற தவறவில்லை.

"குட் நைட் வினு, குட் நைட் டா என் அழகு ரூபினி!" என்று சொல்லி கதவை மெதுவாக சாற்றி விட்டு மறுபடியும் அவரது அறைக்கு திரும்பி சென்றார் ஜெய்நந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro