Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 54

"எங்கையில எதுக்கு கெடிகாரத்த வரைஞ்சிட்டு இருக்கடீ..... பதினொரு மணியாச்சு, இன்னும் பேசிக்கிட்டே இருக்கியேடா மொக்கைன்னு சொல்லாம சொல்லுதீகளாக்கும்?" என்று கேட்ட தன் கணவனிடம் மறுப்பாக தலையசைத்து,

"ஒம்பது மணியில இருந்து பேசிட்டு இருக்கோம். இன்னும் எனக்கு தூக்கம் வரலையேன்னு யோசிச்சுட்டு இருக்கேன். லட்டு கூட பேசிட்டு இருந்தா அப்படியே தூங்கிடுவேன்! இன்னிக்கு நம்மளோட போட்டோஸ் நிறைய பார்த்தோம்ல..... ஆனா 23 வயசுல என்னை நீங்க பர்ஸ்ட் டைம் பார்க்க வந்தப்ப எடுத்த உங்க போட்டோ மட்டும் மிஸ்ஸிங் அங்கிள்..... நீங்க அப்போ எப்படி இருந்தீங்க? எவ்வளவு யோசிச்சு பார்த்தாலும் என்னால ரிகலெக்ட் பண்ண முடியல!" என்று உதட்டை பிதுக்கியவளிடம் சிரிப்புடன், 

"என்ன இன்னும் கொஞ்சம் இளசா, இன்னும் கொஞ்சம் ரவுசு பண்ணிட்டு இருந்துருப்போமாட்டம் இருக்கு. இப்பமே நீ கெடாக்குட்டி மாதிரி தாமுல இருக்க..... பதினஞ்சு வயசுல நீயும்தேன் எப்படி இருந்துருப்ப? நானும் எம்புட்டு நேரம் யோசிச்சு பார்த்தாலும் ஆறு வருஷம் முன்னாடி உன்னைய பார்த்ததெல்லாம் எனக்கு நியாபகம் இல்ல. திருவிழாவுல பார்த்ததுதேன் மனசுல பச்சை குத்துனது மாதிரி பதிஞ்சு கிடக்கு, சின்னதா சிட்டுக்குருவி மாதிரி மண்டைய மண்டைய ஆட்டி ஒண் தோழி கூட ஏதோ பேசிகிட்டு இருந்த, மாமே அன்னிக்கு உன்னைய ரொம்ப நேரமா பார்த்து பார்த்து நமக்கு இப்படி ஒரு பொஞ்சாதி கெடைக்க போறான்னு நெனைச்சு சந்தோஷப் பட்டுட்டு கிடந்தேன் தெரியுமா.....? சரி அதெல்லாம் கிடக்கட்டும். எம்புட்டு நேரமா நானும் ஒரு கேள்விய கேட்டுட்டு பதில் வரும்னு  ஓவாய பார்த்துகிட்டு உட்கார்ந்து கிடக்கேன்...... நீ சொகுசா என் நெஞ்சுல சாய்ஞ்சிகிட்டு உட்கார்ந்து இருக்க....... நான் ஒன்னைய தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சத மன்னிச்சிட்டியா இல்லையா சொல்லு சிட்டுக்குருவி?" என்று கேள்வி கேட்டவாறு தன் மனைவியின் விரல்களை பிடித்து சொடுக்கிட்டு கொண்டு இருந்தான் இசக்கிராசு.

தலையை மட்டும் தன் கணவன் புறம் திரும்பி அவனை ஏறிட்ட இனியா, "இன்னும் எத்தன தடவ தான் இதே கேள்வியை என் கிட்ட கேட்டுட்டு இருக்கப் போறீங்க மிஸ்டர் ராசு? நீங்க என்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணினதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு கோபம் வரத்தான் செய்யும். உங்களுக்கு புள்ள பிறந்தா அவன்ட்டயும் நீங்க செஞ்ச விஷயத்தை சொல்லி, நீயாவது உங்கப்பா மாதிரி ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவளை ஃபோர்ஸ் பண்ற லூசுத்தனத்த பண்ணாதடான்னு சொல்லுவேன். சப்போஸ் உங்களுக்கு பொண்ணு பொறந்தா உங்கள மாதிரி வேற எவனும் அவள தோள்ல போட்டு தூக்கிட்டு போயிடாத அளவுக்கு தைரியமான பொண்ணா வளர்ப்பேன்..... மொத்தத்துல நீங்க என்ன தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சதோட தாக்கம் உங்க புள்ளைங்கள வளர்க்குற விஷயத்துல கூட தெரியத்தான் செய்யும், அப்படி  ஈஸியா எல்லாம் நீங்க செஞ்ச விஷயத்தை மறந்துட முடியாது!" என்று நமுட்டு சிரிப்புடன் சொன்னவளை கைகளில் ஏந்தி தன் அருகில் படுக்கையில் கிடத்திய ராசு,

"அதென்னடீ வார்த்தைக்கு வார்த்தை உம்புள்ள உம்புள்ளங்குற...... நீயில்லாம எம்புள்ள எங்கிட்டு இருந்துடீ வரும்...... அன்னிக்கு என்னவோ நம்ம கடையில வச்சு விடுறா மொக்கை, லூசுத்தனமா ஏதோ வேலை பார்த்துட்ட, உன்னைய மன்னிச்சுடுதேன்னு சொல்லி எனக்கு முத்தா குடுத்தியா இல்லையா? புருஷன் பொஞ்சாதியா வாழ்க்கைய ஆரம்பிக்க போறம், உம் மனசுல எந்த வெசனமும் இல்லாம சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சு கேள்விய கேட்டா உள்ளுக்குள்ள ஒண்ணு வச்சுட்டு வெளிய ஒண்ணா பேசுற? நம்ம புள்ளைகளுக்கு ஊர்க்குசும்பு, நாம வுடுற லந்து, நம்ம செய்யுத அலப்பறை இதெல்லாம் கொஞ்சம் தலைகாட்டதேன் செய்யும், ஏன்னா அம்மை ரொம்ப அப்புராணி, ஆனா அப்பன் சரியான எடக்குநாட்டான்ல..... நீ தான் மூணையும் மேய்ச்சு கண்ணுக்குள்ள வச்சு பத்திரமா பார்த்துக்கிடணும்! கொஞ்சம் தெடமா இருந்தன்னா உன்ட்ட நாலு புள்ள கேக்கலாம், நீ ரெண்டு பெத்துபோடவே ஒண் குறுக்கு செத்துடும் போல.... அதேன் எந்த புள்ளையா இருந்தாலும் ரெண்டு போதும்!" என்று சொல்லி விட்டு அவள் தோள் வளைவில் முகம் புதைத்தவனிடம் ஒத்துழையாமல்,

"நமக்கு ரெண்டால்லாம் வேண்டாம், ஒண்ணு போதும்..... நல்லா இருந்தா நாலு புள்ள கேப்பீங்களா நீங்க? ஏன் எங்க பெரியப்பா நடத்துற லிட்டில் சிக்ஸ் மாதிரி நீங்களும் ஏதாவது ப்ரைமரி ஸ்கூல் நடத்தப் போறீங்களா?" என்று கேட்ட தன் மனைவியை அணைத்து அவன் மேல் கிடத்திக் கொண்டவன்,

"பள்ளிக்கூடம் ஆரம்பிக்கத, பால்வாடி ஆரம்பிக்கத எல்லாம் பொறவு பாப்பம்..... இப்போ நீயும் நானுமா ஆக வேண்டிய வேலைய பாப்பம்....ஆத்தி இந்த ஆள உருக்குற குளிருக்கு நீ என் மேல கிடக்குறது இதமா இருக்குடீ  சிட்டு!" என்று சொல்லி விட்டு போர்வைக்குள் இருவரையும் மொத்தமாக சுருட்டிக்கொண்டு தன் சிட்டுக்குருவியை மோகத்துடன் விழுங்கும் கள்ளப்பருந்தாய் மாறினான் இசக்கிராசு.

அடுத்த நாள் காலை ஆறரை மணியளவில் ஜெய் நந்தன் தன் மகளின் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று விவேக்கிடம் கேட்டு கொண்டிருந்தார்.

"ஸாரிடா விவேக்.... எல்லா வேலையையும் உன் கிட்டயே தள்ளிட்டு நான் ஜாலியா கால் ஆட்டிட்டு உட்கார்ந்து இருக்கேன்..... வேலைக்கு ஹெல்ப் பண்ண ஆள் யாரும் வேணுமாடா?" என்று கேட்ட தன் அண்ணனிடம்,

"எஸ்.ஜே.என் க்கு ஒரு ஜிஎம் இருந்தா பெட்டரா இருக்கும்ன்னு நினைக்கிறேண்ணா. மாணிக்கம் அண்ணா இருந்த வரைக்கும் பாக்டரி அட்மினிஸ்ட்ரேஷன் பூரா அவர் பார்த்துப்பாரு. இப்போ அங்கயும் ஒரு கண் வச்சுக்க வேண்டியதிருக்கு. சஹாயனையும் அப்பப்போ கரெக்டா போயிட்டு இருக்கான்னு மானிட்டர் பண்ண வேண்டியதிருக்கு. ருசியிலயாவது கொஞ்சம் கான்சென்ட்ரேட் பண்ணுங்கன்னு சொன்னா நீங்க அதை காதுலயே போட்டுக்க மாட்டேங்குறீங்க. எனக்கு என்ன மாதிரியே மல்ட்டிப்பிள் டாஸ்க்கை ஹேண்டில் பண்ற ஒருத்தன் வேலைக்கு வேணும்!" என்று கேட்ட விவேக்கிடம் நக்கல் சிரிப்புடன்,

"எமோஷன்ஸை மறந்துட்டு பேய் பிடிச்ச மாதிரி வேலைய மட்டும்  பார்க்கறவன் கண்டிப்பா மனுஷன் கிடையாது. ஒரு ரோபோ..... எவனையாவது புடிச்சு உன் வொர்க்கிங் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி ப்ரோக்ராம் வேணும்னா பண்ணு! லூசுப்பையா பாவம் விழுந்து விழுந்து வேலை பார்க்குறியேன்னு பரிதாபப்பட்டா நைஸா என்னையவா உன் வேலைக்குள்ள கோர்த்து விடப் பார்க்குற? ஆனந்த்த வேணும்னா கூப்பிட்டுக்கோடா, சும்மா தான் இருக்கான்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவரிடம் "குட்மார்னிங் அத்தான், குட் மார்னிங் விவேக்!" என்று சொல்லிக் கொண்டு தேநீர் கோப்பைகளுடன் வந்தார் நிர்மலா.

"நிர்மலா ராம் நம்ம கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னான். அஜுவையும், மீருவையும் லானுக்கு வர சொல்லி விடும்மா..... கெளதமும் ராகினியும் பத்திரமா ஊருக்கு போய்ட்டாங்களாம், இப்போ தான் அவன் கால் பண்ணினான். எங்க நம்ம பசங்க ஒருத்தர கூட ஆளைக் காணும்?" என்று தன் மனைவியிடம் கேட்டவாறு தினப் பத்திரிக்கையில் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருந்தார் ஜெய் நந்தன்.

"நேத்து நைட் ஆடிட்டு தூங்க ரொம்ப நேரம் ஆக்கிடுச்சுங்கல்ல..... இன்னும் ஒருத்தரும் எழுந்திரிக்கவே இல்ல போலிருக்கு அத்தான், நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் போய் அஜு அண்ணா,மீரு, மாமா அத்தைய இங்க வரச் சொல்லிட்டு ப்ரேக் பாஸ்ட்டுக்கு என்ன செய்ய சொல்லணும்னு பார்த்து சொல்லிட்டு வர்றேன். விவேக் நம்ம இனுக்குட்டிக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இனிமே நீங்க மட்டும் அவுட் ஹவுஸ்ல தனியா தங்குற வேலையெல்லாம் வேண்டாம், அம்பைக்கு போயிட்டு வந்து வீட்ல உங்களுக்கு வசதியான ரூமை பார்த்து அங்க ஷிப்ட் ஆகிடுங்க!" என்று நிர்மலா விவேக்கிடம் கட்டளையிட்டு விட்டு நகர அவர் தயக்கத்துடன், "அண்ணி அது வந்து....." என்று இழுக்கையில்,

"நம்ம ஷைலு கல்யாணம் முடிஞ்சதும் நந்துவுக்கும் அடுத்து கல்யாண ஏற்பாட்டை பாக்கணும்..... இவ்வளவு நாள் வீட்டு சூழ்நிலையை இழந்ததுனாலயோ என்னவோ நந்து நம்ம வீட்டுக்கு வந்ததுல இருந்து எந்த வேலையும் செய்யாம கல்யாண வேலைக்கு ஹெல்ப் பண்றது, ஜாலியா போறது, வர்றதுன்னு டைம் பாஸ் பண்ணிட்டு இருக்கான். பண்ணையார் ஊர் வேலை, நாட்டு வேலைன்னு சுத்திட்டு எப்பவும் பிஸியா இருக்கற மாதிரி நந்துவுக்கும் இந்த விஷயம் பழகிடக் கூடாது. அவனோட அப்பா தாத்தா காப்பாத்தி பத்திரப்படுத்தி வச்சிருக்கிறதையெல்லாம் அவன் தான் நிர்வாகம் செய்யணும். விளையாட்டுத்தனமா சுத்திட்டு இருந்தாலும் அவன் ரொம்ப எஃபிஷியண்டானவன் தான். அவனுக்கு நீங்க தான் சரியான அட்வைஸ் குடுத்து பிஸினஸ்ல என்கேஜ் பண்ணனும் விவேக்...... அதுக்காகவாவது நம்ம வீட்டுக்கு வர மாட்டீங்களா?" என்று கேட்ட தன் அண்ணியிடம்,

"வந்துடுறேன் அண்ணி கண்டிப்பா நம்ம ஜீவாவை யார் கிட்டயும் கெட்ட பெயர் வாங்க விட்டுட மாட்டேன். நீங்க கவலைப்படாம போங்க அண்ணி!" என்று சொல்லி ஜெய் நந்தன் இருவரது உரையாடலையும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் ஜெயந்தன், பத்மா, ஜெய் நந்தன், நிர்மலா, விவேக், அர்ஜுன், மீரா, கீதா, சரஸ்வதி  அனைவரும் லானில் அமர்ந்திருக்க பலராம் அனைவர் முன்பும் கைகட்டி கொண்டு நின்றார்.

"ராம் என்னடா ஏதோ விஷயம் பேசணும்னு சொன்ன, இப்போ இவ்வளவு பவ்யமா நின்னுட்டு இருக்க! என்ன சொல்லணும்?" என்று கேட்ட அர்ஜுனின் முகத்தை பார்த்தவாறு,

"யாரும் டென்ஷன் ஆகாதீங்க, நேத்து நம்ம வீட்ல இனியா ராசு கல்யாணம் மட்டும் நடக்கல, இன்னொரு முக்கியமான விஷயமும் நடந்துருக்கு. ஜீவா கொஞ்ச நாள் முன்னால எங்கிட்ட ஒரு செயினை கொடுத்து அத மாங்கல்யமா செஞ்சு தரணும்னு கேட்டான், நானும் யாருக்காக கேக்குறானோன்னு நினைச்சு செஞ்சு குடுத்தேன், ஆனா குடும்பத்துல எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போய்ட்டு வந்து பார்த்தா நான் செஞ்சு குடுத்த செயின் நம்ம கவிப்ரியா கழுத்துல இருக்கு. ஜீவாவும் கவிப்ரியாவும் வீட்லயே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்! ரெண்டு பேர்ட்டயும் பேசினதுக்கப்புறம் ராத்திரி பூரா யோசிச்சுட்டு இருந்தேன். விஷயத்தை எல்லார்ட்டயும் சொல்லாம இருக்கறது சரியில்லைன்னு தோணுச்சு, அதான் சொல்லிட்டேன். இனிமே என்ன பண்றதுன்னு சொல்லுங்க!" என்று சொல்லி விட்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றினார் பலராம்.

அவர் சொன்ன விஷயத்தின் வீரியம் புரிந்த பின் அனைவரும் ஆளாளுக்கு "நிஜமாவே நம்ம ஜீவாக்குட்டியா? ராம் உண்மைய தான் சொல்றானா..... என்ன இதுங்க ரெண்டுக்கும் இப்போ அவசரம்? என்னடா நடக்குது இங்க? இல்லல்ல எதுக்கும் தெளிவா அவன்ட்ட கேட்டுடுவோம்; வீட்ல பெரியவங்க எல்லாரும் இருக்கறது அவன் கண்ணுக்கு தெரியுதா தெரியலயா; என்ன அவன் இஷ்டத்துக்கு எல்லா விஷயத்துலயும் சின்னப்புள்ள தனமா முடிவு எடுத்துட்டு இருக்கான்?" என்று மாறுபட்ட கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தனர்.

ஜெயந்தன் சற்று இறுகிய குரலில் ஜெய் நந்தனிடம், "ஜீவானந்தனும் கவிப்ரியாவும் இன்னும் பத்து நிமிஷத்துல ஹால்ல இருக்கணும், வரச் சொல்லு ரெண்டு பேரையும்......" என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றார்.

"டேய் ஜெய் நிஜமாவே நீ சொன்ன மாதிரி நம்ம பிள்ளைங்க கல்யாணம் நம்ம இல்லாம முடிஞ்சே போச்சாடா....?" என்று கலங்கிய தன் நண்பனை சமாதானம் செய்த ஜெய் நந்தன்,

"பொறுடா அஜு நானும் உன்னை மாதிரி தானே..... எனக்கும் ஒண்ணுமே புரியல, எதுக்கு இந்த திடீர் கல்யாணம்? இந்த ஆனந்த் பையன் என்ன விளையாண்டு வச்சுருக்கான்னு தெரியல. என்ன நடந்துச்சுன்னு பேசி க்ளியர் பண்ணுவோம். வா போகலாம், நிர்மலா ஃபீல் பண்ணாத வாம்மா!" என்று தன் நண்பனையும், மனைவியையும் அழைத்தவரிடம் மீராவும், கீதாவும் அருகில் வந்து

"அண்ணா தப்பு யார் மேல இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா பேசுங்கண்ணா, கவியால ஏதாவது பிரச்சனை வந்திருந்தா எங்கள மன்னிச்சிடுங்க அண்ணா!" என்று கரம் கூப்பியவர்களிடம்,

"அய்யோ டேய் மீரு கீது நீங்களும் உங்க அண்ணியும் மூக்கை உறியற அளவுக்கு இப்போ எந்த பிரச்சனையும் நடக்கல, நீங்க ஸ்ட்ராங்கா இருந்தா தான் இத ஏன் செஞ்சான்னு அவன்ட்ட கேள்வி கேக்கவாவது முடியும், இல்லன்னா ரெண்டு பேரையும் சேர்த்து நிக்க வச்சு ஒரு ஆரத்தி கரைச்சு சுத்தி போட்டுட்டு என் மகனுக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சுன்னு எல்லா பத்திரிக்கையிலயும் ஒரு நியூஸ் குடுத்துட்டு பேசாம இருந்துட வேண்டியது தான்........." என்றவரை நெருங்கிய நிர்மலா ஆவேசத்துடன் முதுகில் குத்த மனைவியின் தண்டனையை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு பேசாமல் நின்றார் ஜெய் நந்தன்.

"அண்ணி; அண்ணி......ப்ளீஸ் நிறுத்துங்க; தப்பு செஞ்சது ஜீவாவும் கவியும், நீங்க பாட்டுக்கு அண்ணனை அடிச்சா இதுல என்ன லாஜிக் இருக்கு?" என்று கேட்ட படி நிர்மலாவின் கைகளைப் பற்றிக் கொண்டவர்களிடத்தில்,

"எப்படியெல்லாம் நடத்தி பாக்கணும்னு நினைச்ச எம்புள்ள கல்யாணம்..... முடிஞ்சிடுச்சுன்னு நியூஸ் குடுத்துட்டு பேசாம போயிடுவாராம்! அப்படியே உங்கண்ணனை வேற எங்கயாவது போயிட சொல்லுங்க; இல்ல என்னை விட்டுட சொல்லுங்க! அவன் என்ன தப்பு செஞ்சாலும் நான் இவரைத் தான் தூக்கிப் போட்டு மிதிப்பேன். போங்க எல்லாரும் போய் பஞ்சாயத்து பண்ணுங்க!" என்று சொல்லி விட்டு இரு கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டார் நிர்மலா. தன் அண்ணியின் கோபத்தை தீர்க்கும் வழி தெரியாமல் கைகளைப் பிசைந்த மீரா கீதாவிடம்,

"கொஞ்ச நேரம் கழிச்சு வந்து உங்கண்ணிய நான் சமாதானம் பண்ணிக்குறேன் வாங்கடா போகலாம்!" என்று சொல்லி விட்டு தன் தங்கைகளுடன் இரண்டெட்டு எடுத்து வைத்து விட்டு மறுபடியும் திரும்பி வந்து தன் மனைவியின் உடலை தன் மேல் போர்த்தியிருந்த கம்பளி ஆடையால் போர்த்தி விட்டவர் அவரது முறைப்பில் மயங்கி நிர்மலாவின் ஜிமிக்கையை சுண்டி அவரது கன்னம் கிள்ளி விட்டு சென்றார்.

மீராவும் கீதாவும் தங்கள் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜீவாவை அழைத்து ஹாலில் நிறுத்தும் முன் விஷயம் பார்கவ், இனியா, ஷைலு, ராகவின் காதுகளுக்கு எட்டி அனைவரும் சேர்ந்து மொத்தமாக கொலைவெறியுடன் அமர்ந்திருந்தனர். கவிப்ரியா அனைவர் முன்பும் வந்து நின்று தலை குனிந்து கொண்டு நிற்க பார்கவ் அளவிட முடியாத கோபத்துடன் அவள் மேல் பாய்ந்து அவளை கொத்தாக பற்றியிருந்தான்.

"அவன் என்கேஜ்மெண்ட் பண்ணிக்கலாமான்னு கேட்டாலும் முடியாதுன்னு சொல்ல மாட்ட, கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டாலும் ஒண்ணுமே சொல்ல மாட்ட, அப்படி என்னடீ நெஞ்சழுத்தம் உனக்கு? நான், ராகவ், அப்பா, பெரியப்பா, மாமா, தாத்தா எல்லாம் நம்ம வீட்ல இருக்கிறது உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா? ஒத்த பொம்பள புள்ளன்னு செல்லத்தை தவிர வேற ஒண்ணத்தையும் காட்டாம வளர்த்தது தான் இவ்வளவு நாள் நாங்க செஞ்ச தப்பு!" என்று சொல்லி அவளை இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்து கொண்டிருந்தவனை பாய்ந்து வந்து தடுத்த ஜெய் நந்தன்,

"அறிவு இருக்கா இல்லையாடா உனக்கு? என் ஏஞ்சலை போய் இந்த அடி அடிக்குற..... இன்னும் ரெண்டு நிமிஷத்துல உன் மச்சான் வருவான்.... அவன் பொண்டாட்டிய கன்னம் சிவக்கற மாதிரி அடிச்சதுக்கு என்ன காரணம் சொல்றதுன்னு யோசிச்சு வை. என்னடா தங்கம் அண்ணன் தான் கோபத்துல அடிக்குறான்னா நீயும் வாங்கிட்டே இருக்கியே.... தாத்தாவை மீறி பேசறதுக்கு பயந்து எல்லாரும் அப்படியே நிக்குறாங்கன்னா நீயும் எதுக்குடா அமைதியா நின்னுட்டு இருக்க ஏஞ்சல்?" என்று கேட்டு தன் மார்பில் அவளை சாய்த்து கொண்டு அவள் கன்னங்களை தடவிக் கொண்டு இருந்தவரிடம்,

"அண்ணா அடிச்சதுனால தான் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஃபீல் குடுக்குது டார்லிங். ஒரு அண்ணனா அவனோட கோபம் கரெக்ட் தானே..... இட்ஸ் ஓகே! தப்பு நான் தானே செஞ்சேன்? நேத்து சித்தப்பா கூட இப்படித்தான் கோபப்பட்டாங்க...... அப்பா அம்மா சித்தி தாத்தா ஏன் நீ கூட என்னை அடிக்கணும்னா அடிச்சிடுங்க!" என்று சொல்லி விட்டு மறுபடியும் அவர் நெஞ்சில் கண்ணீருடன் சாய்ந்து கொண்டவளை பார்த்தவாறு அவள் அருகில் வந்து நின்றான் ஜீவானந்தன்.

"ஸாரிடா செல்லம்..... நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு போலிருக்கு, என்னாச்சு, ஏன்மா அழுவுற?" என்று கேட்டவன் அனைவரது முகங்களையும் பார்த்து விட்டு பார்கவிடம் வந்து தன் பார்வையை நிலைநிறுத்தினான்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro