Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 50

ஷைலஜா பவினை அழைத்துக் கொண்டு ஆனந்த ஸாகரத்திற்கு சென்று கொண்டு இருந்தாள். தன் இனிய தோழியின் திருமணத்தில் ஒன்றி நிற்க முடியாமல் பவினை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பி வந்து கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் ஆகி விட்டது. இனியும் தாமதித்தால் தன் தந்தை யாரையாவது ஒருவரை அனுப்பி வைத்து விடுவார், இல்லை அவரே கிளம்பி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு பவினிடம் சென்று கிளம்பலாமா என்று கேட்டாள்  ஷைலு.

"இங்க வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சு; சும்மாவே உட்கார்ந்து எனக்கு தூக்கம் வருது. என்ன புக் எடுத்துட்டு வந்த?" என்று கேட்ட பவினிடம் தயங்கிய படி,

"ம்ம்ம்.......அண்டர்ஸ்டாண்டிங் ப்ராபபிளிட்டியும், மார்டன் மெத்தட்ஸ்  ஆஃப் ஸ்டாட்டிஸ்டிக்ஸும் எடுத்துட்டு வந்தேன் வினு, எக்ஸாமுக்கு அவசரமா படிச்சு சிலபஸை சரியா கரைச்சு குடிக்க முடியல, ஸோ எப்படியாவது ஸப்ஜெக்ட் நாலேஜை கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிடணும்!" என்று புத்தகங்களை மார்பில் இறுக்கியபடி பேசிக் கொண்டு இருந்தவளை பார்த்து விட்டு காதை கைகளால் மூடிக் கொண்டு நின்றான் பவின்.

"ஏய் ..... எதுக்கு இப்படி காத மூடிட்டு நிக்குற?" என்று கேட்டவளிடம் சலிப்புடன்,

"நீ சொல்ற பொய்யெல்லாம் என் காதுல விழக் கூடாதுன்னு தான்; நான் படிக்கிறப்போ ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரத்துக்கு மேல எந்த புக்கையும் தூக்கி வச்சுட்டு படிச்சதேயில்ல ஷைலு, க்ளாஸ்ல சில லாஸ்ட் பெஞ்ச் ப்ரகஸ்பதிங்க இருக்கும், எக்ஸாமுக்கு பத்து நாள் முன்னாடி வந்து என்னோட ஃரெபரென்ஸ், நோட்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டு போய் மொத்தமா டிஸ் அசெம்பிள் பண்ணி என்னையும் கடைசி நேரத்துல கான்சென்ட்ரேட் பண்ண விடாம உயிரை வாங்கியிருக்கானுங்க, அவனுங்களுக்காக கண்டுபிடிச்சது தான் உனக்கு நான் சொன்ன மெத்தட்...... என் புக்ஸை படிச்சத விட ரொம்ப அதிகமான டைம் எடுத்து  உன்னோட ஸ்டாட்டிஸ்டிகல் சிலபஸை தான் அப்செர்வ் பண்ணிக்கிட்டேன்; அப்படி கஷ்டப்பட்டு நான் படிச்சத உன் மூளைக்குள்ள கதையா சொல்லி இறக்கிட்டு இருக்கும் போதே பாதி நேரம் என் ஷோல்டர்ல சாய்ஞ்சு நீ தூங்கிட்டு தான் இருந்த! இப்போ மறுபடியும் ஸ்டடீஸ் மெட்டீரியல் எடுத்துட்டு வந்தேன்னு சொல்றியே..... சத்தியமா என்னால இத நிஜம்னு யோசிக்க முடியல!" என்று அவளிடம் கேட்டவன் அவளது மணிக்கட்டில் நாடி பிடித்து பார்த்து விட்டு,

"அஃப்கோர்ஸ் நீ என் கிட்ட பொய் தான் சொல்ற, உன் ஹார்ட் பீட் வேகமா இருக்கு, ஃப்ரீத்திங் ஸ்டெப்லைஸ்டா இல்ல! அப்படி என்ன புக் எடுத்துட்டு வந்த.... என் மூளையை ரொம்ப வலிக்க வக்கிறயே ஆர்வக்கோளாறு?" என்று கேட்டவனிடம் கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டாள் ஷைலஜா.

"யப்பா டேய் ஒரு பொய் சொன்னதுக்கு தண்டனையா இவ்வளவு பெரிய ஸ்பீச்சை கேக்கணும்னா நான் இனிமே உன் கிட்ட பொய்யே சொல்ல மாட்டேன்! எக்ஸாம் இருக்கும் போதே படிக்கல, இப்போ என்ன படிச்சு கிழிக்க போறேன்னு நீ கேப்பன்னு நான் எதிர்பார்க்கல, இந்தா புக்ஸை பிடி.... இன்னிக்கு நம்ம டேட்டிங், ஸோ நான் எங்க கூப்பிட்டாலும் வருவேன், என்ன கேட்டாலும் தர்றேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்க, மறந்துடாத, கீ ப்ளீஸ்!" என்று அவன் புறம் சாய்ந்து கார் சாவிக்காக கையை நீட்டியவளிடம்,

"உன் கிட்ட லைசென்ஸாவது இருக்கா அதுவும் இல்லையா ஷை? ப்ளீஸ் என் காரும், நம்ம ரெண்டு பேர் உயிரும், எதிர்க்க ரோட்ல வர்றவங்க உயிரும் ரொம்ப முக்கியம்லமா, நல்லா ட்ரைவிங் தெரிஞ்ச எனக்கே இந்த ஊர்ல ஓட்டுறது கொஞ்சம் டஃப்பாயிருக்கு, நீ ஓட்டுறத பார்த்து நான் வாயை திறக்கறேன் ஆனா சத்தம் கூட வரமாட்டேங்குது, இந்த விஷப்பரிட்சையெல்லாம் நம்ம சென்னை போனதுக்கப்புறம் வச்சுக்கலாமே?" என்று பயத்துடன் சாவியை இறுகப் பற்றிக் கொண்டு இருந்தவன் கைகளில் இருந்து பறித்துக் கொண்டு,

"வேர்ட் இஸ் அ வேர்ட், நான்
ட்ரைவிங் லைசென்ஸ் வாங்கிட்டேன் வினு.... சூப்பரா ஓட்டுவேன், பட் சில பல டெக்னிக்கல் டிபெக்ட் வந்து வண்டிக்கு கொஞ்சம் அங்க இங்க அடிபடுது அவ்வளவுதான்;
உன்னைய பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், சீட் பெல்ட் போட்டுக்கோ குருநாதா!" என்று சொல்லியவளை பரிதாபமாக
ஒரு பார்வை பார்த்து விட்டு பெருமூச்சுடன் புத்தங்களை பார்த்து கொண்டு இருந்தான் பவின்.

"தி கிவ்விங் ட்ரீ, தி கேட் இன் தி ஹாட்" என்ற அவளது இரு நூலக புத்தங்களை பார்த்து விட்டு, "இந்த குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்து மெச்சூர்டு ரீடிங் செஞ்சா நல்லாயிருக்கும்!" என்று முணுமுணுத்தான்.

"ஏய் என்ன திட்டுறியாடா துரியன்?" என்று கேட்ட படி அவனது புறம் முகத்தை திருப்பியவளிடம், "நான் எங்கம்மா உன்னை திட்டினேன்? காலையில இருந்து நீ தான் என்னைய திட்டிட்டு இருக்க, தயவுசெஞ்சு ரோட்ல இருந்து உன் டைவர்சனை திருப்பாம துரியன்னா என்னன்னு மட்டும் கொஞ்சம் சொல்லிடேன்!" என்று கெஞ்சியவனை பார்த்து சிரித்து விட்டு,

"நம்ம உன்னதம் ஜுஸ்க்காக நிறைய பழம் நம்மளே விளைய வைக்கிறோம் வினு, அதுல துரியன் ஃப்ரூட்டும் ஒண்ணு; முள்நாரிப்பழம்னு சொல்வாங்க... ரொம்ப விலை ஜாஸ்தி, நிறைய சத்து இருக்குற பழம்னு எங்கப்பா எங்கள சாப்பிட சொல்லி கம்பெல் பண்ணுவாரு, பட் அதோட வாடைக்கு பயந்தே நான், லட்டு எல்லாம் அது பக்கத்துலயே போக மாட்டோம். முதமுதல்ல நீ என்னைய கவி அக்கா வீட்ல வச்சு இரிடேட் பண்ணினப்போ உன்னை திட்டுறதுக்கு ஏதாவது வேர்ட் வேணும்னு யோசிச்சனா டக்குன்னு துரியன் தான்
நியாபகத்துல வந்துச்சு.... வினு லைட்டா ஏதாவது சாப்பிட்டு போகலாமா, லட்டுவை பார்த்துகிட்டே மண்டபத்துல லன்ச் சரியாவே சாப்பிடல, எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்களாம், ஸோ வீட்டுக்கு வர எப்படியும் இன்னும் ஒன் ஹவர் ஆகும்!" என்று அவனிடம் அனுமதி கேட்டவளிடம்,

"முதல்ல போட்டிங்ன்ன, அதுக்கப்புறம் ஷாப்பிங்னு சொன்ன, இப்போ ரெண்டு மணி நேரமா லைப்ரரியில வந்து உட்கார்ந்து குழந்தைங்க படிக்கிற புக்ஸை உருட்டிட்டு வந்துருக்க.... 1 மணிக்கு ஆரம்பிச்ச உன் ரவுண்ட்ஸ் இன்னும் முடியலையா ஷை பேபி, ப்ளீஸ் வீட்டுக்கு போகலாமே?" என்று கேட்டவனது கண்கள் போதும் என்னை விட்டுவிடேன் என்று அவளிடம் கெஞ்சியது.

"இது தான் லாஸ்ட் வினு; அடுத்து எங்கயும் போகணும்னு சொல்ல மாட்டேன், ஸ்நாக்ஸ் சாப்பிட்டு ஒரு ரெப்ஃரெஷ்மெண்ட் ட்ரிங்க் குடிச்சுட்டு கிளம்பிடலாம்!" என்று கேட்டு விட்டு சற்று ஓரங்கட்டி வண்டியை நிறுத்தியவளிடம்,

"ஓகே எனக்கு எப்பவும் பர்ஸ்ட் டிகாஷன் பில்டர் காஃபி தான்..... அது கிடைக்கலன்னா பால் மட்டும் போதும், ஆமா இப்போ ஏன் வண்டியை திடீர்னு ஸ்டாப் பண்ணிட்ட?" என்று சற்று குழப்பத்துடன் அவளிடம்  கேட்டான் பவின்.

"இல்ல ரெஸ்டாரெண்டுக்கு போகணும்னா இப்போ ரிவர்ஸ் எடுக்கணும், ஆனா எனக்கு தெரியாதே அதான் என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்!" என்று சொல்லி ஸ்டியரிங் வீலில் கவிழ்ந்து படுத்திருந்தவளிடம் எரிச்சலுடன்,

"நீ நாளைக்கு முதல் வேலையா
ஆர்டிஓ ஆஃபிஸ்க்கு போய் எனக்கு தெரியாம லைசென்ஸ் குடுத்துட்டாங்க, ஒழுங்கா வண்டியை ஓட்டக் கத்துட்டு அப்புறமா வாங்கிக்குறேன்னு சொல்லி அவங்கட்ட உன் லைசென்ஸ திருப்பி குடுத்துட்டு வந்துடு. இனிமே நீ ஒழுங்கா வண்டி ஓட்டக் கத்துக்கற வரைக்கும் கார் கீயை கையில எடுக்கக்கூடாது. இப்பவே 6 மணி ஆச்சு, அம்மாவும் அப்பாவும் 9 மணிக்கு சென்னை கிளம்பணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க, அதுக்குள்ள  வீட்டுக்கு போகணும். நான் ஓட்டவா இல்ல இப்படியே உட்கார்ந்து இருப்பமா?" என்று கிண்டலாகக் கேட்டு புன்னகைத்தவனிடம்,

"நீயே ஓட்டு, நான் பாதை சொல்றேன், கல்யாணத்தன்னிக்கு காலையில தான்  அங்கிளும், ஆன்ட்டியும் வருவாங்களா?" என்று அவனிடம் கேட்டாள் ஷைலு.

அவளை ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறக்கி தானும் இறங்கி வந்து இருக்கை மாறி அமர்ந்து கொண்டு,
"அம்மா கொஞ்சம் எப்பவுமே பிஸி ஷைலு; நம்ம நிச்சயதார்த்தத்துக்கே கூட முழுசா இரண்டரை நாள் இருக்குல்ல; அதுவரைக்கும் அவங்களை சும்மா உட்கார்ந்து இருக்க சொல்ல முடியாது, பட் நான் இங்க தான் இருப்பேன், எனக்கு ஒரு வாரம் லீவ் விட்டாங்கப்பா!" என்று சொல்லி விட்டு அவளிடம் வழி கேட்டு அதன் படி சென்று கொண்டிருந்தான் பவின்.

"ஆன்ட்டி டாக்டரா இருக்காங்க, நீயும் மெடிக்கல் ஃபீல்டுல தான் இருக்க, நல்லா படிப்பேன்னு வேற சொல்லி இருக்க, ஏன்ப்பா நீ டாக்டர் ஆகல?" என்று திடீர் சந்தேகம் எழுப்பிய ஷைலுவிடம்,

"இந்த கேள்வியெல்லாம் என் மண்டைய உடைச்சியே, அன்னிக்கு கேட்டுருக்கணும், நீ ரொம்ப லேட் பண்ணிட்ட ஷை!" என்று சொல்லி புன்னகைத்தவனை பார்த்து பொறைமையற்ற ஒரு உச்சுக் கொட்டல் புறப்பட்டது ஷைலுவிடமிருந்து.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமலே ரெஸ்டாரெண்ட் வரை கூட்டி வந்து விட்டான் பவின்.

"நம்மட்ட ஒருத்தர் கேள்வி கேட்டா பதில் சொல்றதுக்கு இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கக்கூடாது மிஸ்டர் பவின்!" என்று சொன்னவளின் முகத்திற்கு நேராக தன் உள்ளங்கைகளை நீட்டினான் பவின்.

"என்ன பண்ற?" என்று கேட்டு விட்டு அவனுக்கு காஃபியும், அவளுக்கு இரண்டு நொறுக்கு தீனிகளையும் ஆர்டர் செய்து கொண்டு இருந்தவளிடம்,

"ஷை அம் ஐ ஸ்டிங்க்கிங்? ஸ்மெல் பண்ணிட்டு சொல்லு! நான் அந்தப் பழம் மாதிரி ஸ்மெல் அடிக்கலன்னா இனிமே என்னை நீ துரியன்னு கூப்பிடக்கூடாது!" என்று சொல்லி விட்டு அவள் நெற்றியில் இருந்து இதழ்கள் வரை இரு விரல்களால் வருடிக் கொண்டு இருந்தான் பவின்.

"ஸ்மெல் பண்றதுக்கு மூக்கு பக்கத்துல கைய வச்சா போதும், இப்படி முகம் பூராவும் லைன் போடத் தேவையில்ல! அது உனக்காக தேடிக் கண்டுபிடிச்ச நிக் நேம், ஸோ நீ வாசமாவே இருந்தாலும் எனக்கு துரியன் தான்!" என்று சொன்னவள் கைகளைப் பற்றிக் கொண்டு,

"உங்கிட்ட ஒரு ஸாரி கேக்கணும் ஷைலு; நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்ன்னு டிஸைட் பண்ணினதுக்கப்புறம் கூட நீ பெரிசா எங்கிட்ட ஒண்ணும் ரெஸ்பான்ட் பண்ணல, ஸோ சில விஷயத்துல உன் க்யூரியாசிட்டியை தூண்டி விட்டு என்னை திரும்பி பார்க்க வச்சேன், நம்ம ரெண்டு பேர் காதல்ல இந்த விஷயத்துல மட்டும்  நான் கொஞ்சம் தப்பு பண்ணிட்ட மாதிரி கில்டியா ஃபீல் குடுத்துச்சு, ஐ'ம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி!" என்று சொன்னவனது கையில் தன் உதட்டில் இருந்து ஒரு முத்தத்தை பிய்த்து ஒட்ட வைத்தாள் ஷைலு.

"ஏய் ஷைலும்மா உன் கையில இருந்து தானே கிஸ்அ பிய்ச்சு எடுக்குற.... அட்லீஸ்ட் என் கன்னத்துலயாவது ஒட்ட வைக்கலாம்ல? சொல்லணும்னு நினைச்சதெல்லாம் சொல்லி முடிச்சாச்சு, வீட்டுக்கு கிளம்பிடலாமா?" என்று கேட்டவனிடம்,

"எல்லாத்தையும் சொல்லிட்டியா..... இப்போ நீ எதையோ ஹைட் பண்ற போலிருக்கே; உன் ஹார்ட் பீட் எப்படி இருக்குன்னு கேக்கலாமா? ஆனா எனக்கு பல்ஸ் எல்லாம் பார்க்க தெரியாதே?" என்று உதடு பிதுக்கியவள் கைகளைப் பிடித்து, "பல்ஸ் பார்க்க தெரியலன்னா டைரக்டா ஹார்ட் பீட்டையே கேளு!" என்று சொல்லி தன் நெஞ்சில் வைத்தான் பவின்.

"ஐயோ வினு அப்போலேர்ந்து நீ கொஞ்சம் ஓவரா போயிட்டு இருக்க, அடி வாங்குவ. பப்ளிக் ப்ளேஸ்ல ஒழுங்கா பிஹேவ் பண்ணலன்னா எங்கம்மா வீட்டுக்கு போனதுக்கப்புறம் ரெண்டு நாள் என் கூட பேச மாட்டாங்க. நம்ம தப்பை நம்மளே ரியலைஸ் பண்ணி ஸாரி கேட்டதுக்கு அப்புறம் தான் நிர்மலா நார்மலாவாங்க! ஸோ உன் கன்னத்துல கை வைக்குறது, ஹார்ட்ல கை வைக்குறது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா வச்சுக்கலாம், இப்போ என் கைய விடு!" என்று சொல்லி விட்டு எழுந்தவளிடம்,

"உங்க அம்மாவும், அப்பாவும் உனக்கு நிறைய வேல்யூஸ் சொல்லி குடுத்து நல்ல பொண்ணா வளர்த்து இருக்காங்க ஷை.... நம்ம கல்யாணம் பண்ணிக்க போறோம்னாலும் வெளியே வந்திருக்கும் போது கொஞ்சம் டிஸ்டென்ஸ் மெயின்டையின் பண்ணி இருக்கணும் தான், நிறைய பேர் இப்போ இப்படியெல்லாம் யோசிக்கறதில்லை.
வா நீ கேட்ட கேள்விக்கு கார்ல போகும் போது பதில் சொல்றேன்!" என்று சொல்லி விட்டு அவள் கைகளை பற்றி அழைத்து சென்றான் பவின்.

"டாக்டரோட பையன் அதுனால ஈஸியா காசு குடுத்து இவனையும் டாக்டர் ஆக்கிடுவாங்கன்னு சொல்லி சொல்லியே நிறைய பேர் இரிடேட் பண்ணினாங்க ஷைலு.... எனக்கு ஒரு விஷயம் கிடைச்சதுன்னா அது முழுக்க முழுக்க என்னோட முயற்சியில கிடைச்சதா இருக்கணும், ஸோ மெரிட்ல சீட் கிடைச்சா மட்டும் தான் மெடிக்கல் காலேஜ்க்கு போவேன் இல்லன்னா என் மார்க்ஸ்க்கு ஏத்த மாதிரி இந்த பீல்டுலயே வேற கோர்ஸ் செலக்ட் பண்ணிக்குவேன்னு அப்பா அம்மாட்ட முதல்லயே தெளிவா சொல்லிட்டேன், ஜஸ்ட் மிஸ்ல டாக்டர் ஆக முடியல, பட் ஒரு லேப் டெக்னீஷியனா நான் செய்ற வேலையை எனக்கு ரொம்ப பிடிச்சு ரசிச்சு தான் செஞ்சுட்டு இருக்கேன். நோய்க்கு ட்ரீட் பண்றவங்க முக்கியம்னா, நோய் இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்றவங்களும் அதே மாதிரி முக்கியமானவங்க தானே..... இப்பவும் அம்மா அப்பாவோட ப்ரெண்ட்ஸ் காங்ல  நிறைய பேருக்கு நான் பார்க்குற வேலை திருப்திகரமா இல்ல, நீயும் எப்படியாவது டாக்டர் ஆகியிருக்கலாம்ன்னு சொல்வாங்க,
பட் உங்கப்பா தான் அதெல்லாம் எதுவுமே சொல்லாம, அவளோட ப்ரேக் அப்பால நான் மனசளவுல டையர்டு ஆகி உட்கார்ந்தப்போ உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி குடுக்க ஓகே சொல்லி என் ஹெஸிடேஷனை சரி பண்ணினாரு தெரியுமா? அவர் நினைச்சு இருந்தா உங்க ஸ்டேட்டஸ்க்கு உனக்கு இன்னும் பெட்டரான ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி குடுத்துருக்கலாம், ஆனா அப்பா அம்மாட்ட வச்சிருக்கிற ப்ரெண்ட்ஷிப்க்காக, என் மேல நம்பிக்கை வச்சு எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி தரப் போறாரு! என் லைஃப்ல முதமுதல்ல ஒரு எக்ஸைட்மெண்ட், துள்ளல், நம்ம லவ் பண்றோம்ன்னு ஒரு ஃபீல் இதெல்லாம் உன்னை பார்த்து தான் வந்துச்சு, இன்பாக்ட் உன்னை காதலிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் என்னோட பர்ஸ்ட் சாய்ஸ் ஒரு பெரிய மிஸ்டேக்ன்னு எனக்கு புரிஞ்சது. இத மாதிரி நிறைய லவ்வோட லைஃப் லாங் உன் கையை பிடிச்சுக்கிட்டு உன் கூட வரணும் ஷை! மனசுல இருந்தது எல்லாத்தையும் சொல்லிட்டேன், இனிமே சொல்றதுக்கு ஒண்ணுமில்ல மிஸ். ஷைலஜா ஜெய்நந்தன், வுட் யூ லைக் டூ மேரி மீ?" என்று கேட்டவனிடம் ஒரு பெருமூச்சுடன்,

"யெஸ் அப்கோர்ஸ் நீங்க என்னோட ஆளு தான் பவின், வீடு வந்துடுச்சு, இறங்கலாமாப்பா? நல்லவேளை இப்படி ஒரு சின்னப்பையனை அவ மிஸ் பண்ணிட்டா.... அதனால நான் ரொம்ப லக்கி!" என்று சொல்லி சிரித்து விட்டு இறங்குவதற்காக கார் கதவை திறக்கப் போனவளை கைகளைப் பற்றி தடுத்தவன்,

"துரியன்ல இருந்து என்னைய சின்னப்பையனாக்கிட்டியா? ஆனா உன் கிட்ட அந்த வேர்டுக்கு அர்த்தம் கேக்காமலே இருந்திருக்கலாம் போல, என்னைப் பார்த்து எப்படி நீ நாத்தம் அடிக்குற பழம்னு சொல்லலாம்?" என்று அமர்ந்திருந்த சீட்டீல் தட்டிக் கேட்டவனிடம்,

"இப்படியே உன் கார் ஸீட்ல குத்தி குத்தி நியாயம் கேட்டுட்டு இரு குருநாதா.... லட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவா, ஆரத்தி கரைச்சு வைக்கணும், போயிட்டு வரட்டுமா, எனிவேஸ் தேங்க்ஸ் ஃபார் தி டேட்டிங்" என்று சொல்லி விட்டு காரை திறந்தவள் வெளியே இறங்காமல் பயத்துடன் காலை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு
கொண்டாள்.

"என்னம்மா கீழே இறங்கு!" என்று சொன்னவனை முறைத்தவள், "உனக்கு கண்ணு தெரியுதா இல்லையா தம்பி..... வெளிய மழை தூறுது பாரு! வீட்டுக்குள்ள எப்படி போறதாம்? நீ என்ன பண்ற, குடுகுடுன்னு வீட்டுக்குள்ள ஓடிப் போய் ஒரு குடை எடுத்துட்டு வந்து உன் ஷை பேபிய ஒரு சொட்டு கூட தண்ணி மேல படாம கூட்டிட்டு போ பார்ப்போம்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவளிடம் குறுஞ்சிரிப்புடன்,

"மாட்டுனியா மவளே..... எப்படியும் கார் பார்க்ல இருந்து வீட்டுக்குள்ள போறதுக்கு கார்டன் வழியா தானே போகணும், நான் உனக்கு சின்னப்பையனா..... என்னை இவ்வளவு நாள் துரியன்னு கூப்பிட்டதுக்கும், இப்போ சின்னப்பையன்னு கூப்பிட்டதுக்கும் அப்பாலஜி கேளு! இல்லன்னா தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல்னு பாட்டு பாடிட்டே நான் உன்னைய இங்கயே விட்டுட்டு ஓடிடுவேன்!" என்று அவளை மிரட்டிக் கொண்டிருந்தவனிடம்,

"அய்யய்யோ குருராயரே அப்டிலாம் சொல்லப்படாது, மழையில நனைஞ்சா ஜல்ப்பு பிடிச்சுக்கும். காய்ச்சல் வரும், உடம்பு நடுங்கும், உங்களுக்கு என்ன ஸாரி தானே கேக்கணும்? ஸாரியோ ஸாரி... கைண்ட்லி எச்சூஸ்மீ! 
கேட்டாச்சு இது போதுமா?" என்று கேட்டவாறு பயத்துடன் வானத்தை பார்த்து கொண்டு இருந்தவளிடம்,

"ம்ஹூம்! உன் ஸாரியில ஒரு ஃபீல் இல்லையே.... அதனால!" என்று சொல்லி சிரித்தவனிடம் பல்லைக் கடித்தவள்,

"டேய் நானும் போனா போகுது பொறுமையா இருக்கணும்னு பார்க்குறேன். என்னை கடுப்பேத்துன.... அழுதுடுவேன் பார்த்துக்க!" என்று சொல்லி அழுகைக்கு தயாரானவளிடம்,

"அடுத்த நடிப்பா......ஊப்ஸ் உன் டிராமாவெல்லாம் பார்க்க எனக்கு பொறுமையில்ல பேபி, இந்தா பிடி!" என்று சொல்லி பின் சீட்டில் இருந்து தனது ஜெர்கினை எடுத்து நீட்டியவனிடத்தில்,

"இதப் போட்டா மூக்கு, நெத்தியெல்லாம் நனையுமே... பையா என் முகத்தை தண்ணி படாம ஸேஃபா கவர் பண்ணிக்க உன் சட்டையை கழட்டி தர்றியா?" என்று கேட்டவளை முறைத்தவன் ஜெர்கினை மறுபடியும் இருந்த இடத்தில் வைக்க போகவும் அவனிடமிருந்து அதைப் பறித்து போட்டுக் கொண்டு 
ஓட்டமும் நடையுமாக வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தவளை, "பார்த்து மெதுவா போ பேபி" என்று சொல்லி விட்டு புன்னகையுடன் பின்தொடர்ந்தான் பவின்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro