💟 ஜீவாமிர்தம் 47
இனியா இசக்கிராசுவின் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்று இன்று திருமணத்திற்கு வருகை தந்த அனைவரையும் இரு வீட்டார் சார்பாகவும் ஜெய்நந்தன் குடும்பத்தினர் வரவேற்று கொண்டு இருந்தனர்.
ஜீவா, பார்கவ், ராகவ், மூவரும் மாப்பிள்ளை வீட்டினரை வணங்கி வரவேற்று கொண்டிருக்க அவர்களுக்கு எதிர் வரிசையில் நின்று கவிப்ரியா, அபிநயா, ஷைலு மூவரும் பெண் வீட்டார் சார்பாக அழைத்திருந்த சொந்தங்களை வரவேற்று உள்ளே அமர வைத்து கொண்டிருந்தனர்.
ஜெயந்தன், பத்மா, ஜெய் நந்தன், நிர்மலா ஆகியோர் மாப்பிள்ளை வீட்டினரை ஒவ்வொருவராக சாப்பிட அழைத்து சென்று கொண்டிருக்க மீராவும், கீதாவும் இனியாவின் அலங்காரத்தில் உதவிக் கொண்டு இருந்தனர். அர்ஜுன், பலராம் திருமணத்திற்கு வந்திருந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் இருக்கை வசதிகள், மாப்பிள்ளை வீட்டினரின் நெருங்கிய உறவினர்களுக்கு அறை வசதிகள் என்று கவனித்து கொண்டிருக்க விவேக் தன் வாழ்வில் முதன் முறையாக தான் என்ன வேலை செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
ராசுவின் அறைக்கதவை தட்டியபடி உள்ளே சென்றவரிடம், "விவேக்கு மாமா..... என்னய்யா மவளுக்கு கல்யாணம், உம்முகத்துல சந்தோஷத்தையே காணும்; இந்த எடுபட்ட பக்கிக்கெல்லாம் எம்பொண்ணை கட்டிக் குடுத்து விளங்குனாப்லதேன்னு விசனப்படுறியா?" என்று கேட்ட தன் மருமகனிடம் அவசரமாக மறுப்பு தெரிவித்து,
"அப்படி எல்லாம் நான் நினைக்கல மாப்பிள்ளை, இனுக்குட்டி இனிமே உங்க பொறுப்பு! அவள எப்பவும் சந்தோஷமா நீங்க தான் பார்த்துக்கணும், ப்ளீஸ்!" என்று சொல்லி கைகூப்பியவரின் கைகளைப் பற்றிக் கொண்டு,
"இந்த தறுதலைக்கெல்லாம் எவமுலே நம்ம புள்ளய கட்டிக் குடுக்கிறதுன்னு நிறைய பேர் என் காது படுறாப்லயே பேசியிருக்காங்க மாமா! மில்லுல, கடையில, தோட்டத்துலன்னு பத்து இருபது பேரு நம்பட்ட வேலை பார்த்தாலும், ஊரு முச்சூடும் சொந்தபந்தம் இருந்தாலும், நான் தலைவலின்னு படுத்தா இம்புட்டு நாளா தடவிக் குடுக்க ஆளில்லை. அவளை தூக்கிட்டு போறப்போ மாமன் பொண்ணு அழகா இருக்கா; நமக்கு இவள கட்டிக்கிட உருத்து இருக்குன்னு நினைச்சுதேன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மாமா.
ஆனா ஊருக்கு வந்திருந்தப்ப மொறச்சிக்கிட்டே இருந்தாலும் உனக்கும் ஆச்சிக்கும் ஏதாவது ஒண்ணுன்னா இனிமே நான்தேன் பார்த்துக்கணும்னு சொன்னா பாரு; அங்கதான்யா அவட்ட மொத்தமா விழுந்துட்டேன். உம்மவள கல்யாணம் பண்ணிக்கிட்ட பொறவு அவ எங்கம்மைய மாதிரியே என்னைய கைஓங்குறத பார்த்து மெரண்டு ஒருக்கா குறுக்குசந்துலல்லாம் பூந்து ஓடியிருக்கேன் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னால
மொக்கப்பய கொஞ்சம் அப்படிஇப்படிதேன்..... கையில சிக்குனவன தூக்கி போட்டு மிதிக்குறது, காசு பணம்னா எமன் மாரி ஈவு இரக்கமில்லாம அடிச்சு புடுங்குறதுன்னு ஊருக்குள்ள ரொம்ப ராவடி பண்ணிக்கிட்டு இருந்தேன்தேன், இப்போ என் பொஞ்சாதிய கட்டின பொறவு நான் செஞ்சதெல்லாம் எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுது. நா அவ வாழ்க்கையில தேவையில்லாம புகுந்து உழப்பாம இருந்திருந்தா அவளுக்கு ஏத்த மாதிரி இந்த பவின் பயல மாதிரி ஒருத்தன இவளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுருப்பல்ல; நாந்தேன் மாமா உன் பொண்ணு வாழ்க்கையில வலுக்கட்டாயமா நுழைஞ்சுபுட்டேன். ஆனா இனிமேபட்டு இனியா புள்ளைய சந்தோஷமா கண்கலங்காம பார்த்துக்கிடுவேன். அவள மட்டும் இல்ல, அவ குடும்பத்துல இருக்கிற எல்லாரும் இனிமே என் சொந்தக்காரய்ங்க, ஒருத்தனையும் விசனப்பட விட மாட்டேன், எல்லாரையும் என்னால முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா பார்த்துக்கிடுதேன், இது மொக்கை ஒனக்கு குடுக்குற வார்த்தை!" என்று சொல்லி அவர் கைகளில் சற்று அழுத்தம் கொடுத்தவனை பார்த்து கண்கள் கலங்கியவர், "அப்பப்போ நான் அம்பைக்கு வந்து இனுக்குட்டிய பார்த்துட்டு போலாம்ல மாப்பிள்ளை?" என்று கேட்டார். அவரை விநோதமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
"உன்னைய யாரு இனிமே இங்க விட்டுட்டு போகப்போறான்னு நினைச்சு அம்பைக்கு வரவான்னு கேட்டுக்கிட்டு கிடக்க..... நேத்து நிச்சயம் நடக்கும்போதே உன்னைய மறந்துட்டு அவ இனிமே எங்கூட வந்துருவான்னு ஒரு கேனப்பய சொன்னான்...... எவன்டா விசேசம் வப்பான், ரெண்டு புரனி பேசிட்டு வருவம்னு அலையுற பயலுக.... அத தாங்க முடியாம இனியா புள்ளைக்கு கண்ணுல தண்ணியே வந்துடுச்சு. பெரிய மாமா, ஷைலுவை எல்லாம் கூட வாரீகளான்னு கேக்க முடியாது. உன்னைய மட்டும்தேன் உரிமையா நான் அம்பைக்கு கூட்டிட்டு போக முடியும்..... ஒரு ஆறு மாசத்துக்கு என் கூட அம்பையில வந்து மவளுக்கும், மருமவனுக்கும் ஒத்தாசையா இரு மாமா. அப்படியே உனக்கும் எசவா நம்ம ஊருல ஒரு முட்டக்கண்ணிய தேடிப் பிடிப்போம்..... சோலிய கொஞ்சம் பார்த்தமா, அப்படியே ஜாலியா கொஞ்சம் இருந்தமான்னு வாழ்க்கை நல்லாயிருக்கும் பாரு..... பெரிய மாமாட்டயும், ஜீவாட்டயும் நான் பேசிட்டேன். நீயும் ஒருக்கா சொல்லிட்டு ஊருக்கு கிளம்பற வழியப் பாரு! ஒரு அஞ்சாறு மாசம் உன்னோட நேரத்த புள்ளைக்கு குடுய்யா.... பாவம் அவ!" என்று சொன்னவனை முறைத்த விவேக், "சீக்கிரமா என்னைய தாத்தாவாக்குறதுக்கு வழியப் பாருரா கேனப்பயலே..... அத விட்டுட்டு ஜோடி சேக்குறானாம்; இவனையெல்லாம் கட்டிக்கிட்டு நீ பாவம்டா இனுக்குட்டி!" என்று சிரிப்புடன் அவருக்குள்ளாக முணங்கிக் கொண்டவரிடம், "ம்ம்ம்.... இப்படித்தேன் ரொம்ப பதவிசா பேசணும்.... அத விட்டுட்டு வாங்க மருமவனே, போங்க மருமவனேன்னுல்லாம் கூப்பிடாத மாமோய்!" என்று சொன்ன தன் மருமகனுக்கு சிரிப்புடன் மாலை அணிவித்து
மனநிறைவுடன் மணமேடைக்கு அழைத்து சென்றார்.
"லட்டு உன்ன அப்படியே கடிச்சு முழுங்கிடலாம் போல.... அவ்வளவு அழகாயிருக்கடீ!" என்று சொல்லி மீரா, கீதாவின் பின்னாலேயே இனியாவுடன் மணமேடைக்கு வந்து கொண்டிருந்த தன் தோழி ஷைலுவின் துப்பட்டாவை பிடித்து தன் பக்கம் இழுத்த இனியா,
"பவின் ஸார்ட்ட உன் லவ்வை சொல்லிட்டியா ரூபி?" என்று கேட்டாள். அவள் தோள் உரசிய படி நடந்து கொண்டிருந்த ஷைலு,
"முதல்ல உன் மேரேஜ் நடக்கட்டும்டீ! அதுக்கப்புறம் சொல்லிக்கலாம்! நம்ம குருநாதர் தானே.... எங்க போயிடப் போறாரு?" என்று கேட்டுக் கொண்டிருந்தவளிடம் அருகில் வந்து ஒட்டிக் கொண்ட கவிப்ரியா,
"சித்தி..... அவன் என்னை பார்க்குறானான்னு கொஞ்சம் பார்த்து சொல்லேன்!" என்று கேட்டு கீதாவை இனியாவிடமிருந்து சற்று பின்னால் இழுத்து கொண்டிருந்தாள். கீதா கவிப்ரியாவிடம் பதில் அளிக்கும் முன் முந்திக் கொண்டு ஷைலஜா,
"கவி அக்கா.... உனக்கு என்ன தான் பிரச்சனை? காலையில இருந்து 73ஆவது தடவையா ஜீவா அண்ணா உன்னைய பார்க்குறானான்னு கேக்குற, எல்லாரையும் உயிரை வாங்காத கவி அக்கா, ஜீவா என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும், யார் கூட பேசிட்டு இருந்தாலும் உன்னை பார்க்குற மாதிரி நின்னுட்டு இருக்கான், அவனை இங்க வரச் சொல்லட்டுமா?" என்று கேட்ட ஷைலுவிடம் புன்னகை குரலில்,
"ரூபி நான் அவனை பார்க்குறேன்னு அவனுக்கும் தெரியுது, அவன் என்னை பார்க்குறானான்னு எனக்கும் தெரியுது. ஆனா எப்போ பார்த்தாலும் உங்க அண்ணன் ஏன்டீ தூரத்துல நின்னுகிட்டே என்னை லவ் பண்றான்....? கிட்ட வந்து பேசிட்டு இருந்தா குறைஞ்சா போயிடுவான்?" என்று கேட்டவளிடம்,
"ஏன் கேக்குற நீ செய்ய வேண்டியது தான.... தள்ளு காலுக்குள்ள விழுந்து இம்சை பண்ணாத! லெஹங்கா ரெடி பண்ணிதான்னு கேட்டா புடவையை குடுத்துட்டு பேசுறா; மூக்கி! அண்ணா கூட போய் பேசு பே" என்று சொல்லி உதட்டை சுழித்து விட்டு சென்றாள். மணமக்கள் மணவறையில் அமர்ந்ததும் ஜெய் நந்தன் ஒரு பார்வையுடன் விவேக்கிடம் வந்தார்.
"நம்ம லட்டு கல்யாணம் பண்ற அளவுக்கு ரொம்ப வளர்ந்துட்டால்ல டா விவேக்..... மணவறையில ஜோடியா பிள்ளைங்களை பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா! ராசுவும், பவினும் நம்ம பேமிலிக்கு கிடைச்ச ரொம்ப ஆப்ட் ஆன மாப்பிள்ளைங்க போலிருக்குடா. கொஞ்ச நாளைக்கு வேலையெல்லாம் குறைச்சுட்டு ஹாப்பியா இருடா!" என்று சொன்னவரிடம் "சரிண்ணா அண்ணியை எங்க காணும்?" என்று கேட்ட படி நிர்மலாவை கண்களால் தேடி அவரை அழைத்து வந்து ஜெய் நந்தன் அருகே நிறுத்தி விட்டு சென்றார்.
"கெட்டிமேளம் கெட்டிமேளம்!" என்று குரல் கொடுத்தவுடன் மேளம் முழங்க நாதஸ்வரம் ஒலிக்க உற்றார் உறவினர்கள் முன் ஒரு ரெட்டை வடச் சங்கிலியை இனியாவின் கழுத்தில் அணிவித்தான் இசக்கி ராசு.
"அப்பத்தா கண்ணுல பட்டுச்சு..... என்னைய பிரிச்சு பேனு பார்த்துப்புடும்! விரசா சங்கிலியை தூக்கி உள்ளார போட்டுகிட்டு தாலிய வெளிய எடுத்துப்போடு சிட்டு!" என்று சொன்னவனை ஓரக்கண்ணால் முறைத்த இனியா,
"ஆரம்பமே தகராறா...... இன்னிக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு மனசு வரலையாக்கும்? தேவையில்லாம செலவு பண்ணி இவ்வளவு பெரிய செயினை தூக்கி என் கழுத்துல போட்டதுக்கு பதிலா பெரியப்பா கிட்ட இன்னொரு தடவ என் பொண்டாட்டிய கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லியிருக்கலாம்ல?" என்று மெல்லிய குரலில் கேட்டவள் நெற்றியில் குங்குமிட்டு மெட்டி அணிவித்தான் இசக்கிராசு.
"இதெல்லாம் முதல்ல கல்யாணம் நடந்த அன்னிக்கு செய்ய முடியலல்லட்டீ...... என்ன அன்னிக்கு என் அழகி கோபத்துல செவந்து போய் தக்காளிப் பழமாட்டம் நின்னுகிட்டு இருந்தீக; இன்னிக்கு மாமன புடிச்சுப் போய் மொகத்துல சிரிப்போட இம்புட்டு அனுசரிச்சு நிக்கீக! மண்டபம் கொள்ளாத அளவுக்கு சனத்தை திரட்டிட்டு அம்பையில இருந்து அவுகள கூட்டிட்டு வந்துருக்கோம்லா! அதுக்குத்தேன் உன் கழுத்துல சங்கிலி போட்டது! மொக்கைப் பய பொஞ்சாதிடா இந்த புள்ள; பார்த்து சூதாரணமா பேசுன்னு எல்லாருக்கும் சொல்றதுக்குதேன்! ஆனா நம்ம கல்யாணம் அன்னிக்கு நடந்ததுதேன். அத மறுக்கா நடத்த முடியாது" என்று கேட்டவனிடம்,
"எனக்கும் அப்படித்தான் கஷ்டமா இருக்குங்க. இனிமே ரூபி, பெரியப்பாவை எல்லாம் டெய்லி பார்க்க முடியாதுல்ல...." என்று கேட்டவளிடம்,
"விடும்மா..... மாசத்துல ஒரு நாள் சென்னைக்கு, இன்னொரு நாள் உங்க பெரியப்பா வூட்டுக்குன்னு உன்னைய கூட்டியாறேன். நீங்க எல்லாரும்தேன் எதுக்குடா காரணம் கிடைக்கும், ஒண்ணா பட்டறைய போடலாம்ன்னு நெறய நேரம் சேர்ந்து தானம்மா கெடக்குதீக?"...... என்று கேட்ட தன் கணவனிடம் மௌனச்சிரிப்புடன்,
"எல்லாரும் ஒண்ணா இருக்கும் போது நீங்களும் கூட இருக்கணும்னு நினைக்கலையாக்கும்..... நல்ல வேளை பேமிலியில எல்லாருக்கும் உங்கள பிடிச்சிடுச்சு, எல்லா பிரச்சனையும் முடிஞ்சு எல்லாரும் சந்தோஷமா இருக்கிற மாதிரி கல்யாணம்ன்னு ஏதோ ஆக்டிங் வேற போட்டீங்க!" என்று சொன்னவளிடம்,
"அது நம்ம ராசியோ என்னவோ தெரியலடீ சிட்டு! எவனுக்குமே முத பார்வையில என்கிட்ட உரசிகிட தேன் செய்யுது, அப்புறமேலு ஒருவழியா செட் ஆகிடுதுன்னு வச்சுக்கயேன், சரி எனக்கு ஒரு உதவி பண்றியா?" என்று கேட்ட தன் கணவனை கேள்விப் பார்வை பார்த்தாள் இனியா.
"இந்த கண்டிஷனிங்னு சொல்வாய்ங்க பாரு, வீட்ல சக்தி முத்துவுக்கு செய்றீகளே..... டிங்டிங்னு ஒரு சத்தம் கேட்டா அதுக தட்டுல சோறு போட்டு வச்சிருக்காங்கன்னு அதுகளுக்கு பழக்கப்படுத்திட்ட மாதிரி...... இனிமே அந்த கேஸ் வண்டி நீ இல்லாம அவளோட தனிப்பட்ட வாழ்க்கைய சந்தோஷமா வாழணும்னு சொல்லி சொல்லி பழக்கப்படுத்தி விட்டுடு, அவ கல்யாணம் முடிஞ்ச மறுநாள் நாம அம்பைக்கு கிளம்பணும்! கிளம்பற நேரத்துல உன்னைய கட்டிப் பிடிச்சுக்கிட்டு ஒப்பாரி வச்சுட்டு இருந்தான்னா உன்னையதேன் குத்தம் சொல்லுவேன் பார்த்துக்க!" என்று சொன்ன ராசுவிடம் சிரிப்புடன்,
"அதென்ன ரூபியை போய் கேஸ் வண்டின்னு கூப்பிடுறீங்க.... அவளுக்கு மட்டும் கேட்டது என்ன ஆகும்ன்னு தெரியுமா?" என்றவளிடம்,
"ம்ம்ம், நல்லா தெரியுமே..... பள்ளத்துலயும் மேட்டுலயும் சிலிண்டரோட கேஸ் வண்டி ஏறி இறங்கறப்ப டங்கு டங்குன்னு சத்தம் வரும்ல; அதேன் நடக்கும்.... அதுக்குத்தேன் உன் ஸ்நேகிதிக்கு அந்தப் பேரே வச்சுருக்கு! யப்ப்பா அம்புட்டு பயலுக கால்லயும் உழுந்து எந்திரிச்சே கடுப்பாகிடுச்சு, ஏதாவது குடிக்கிறியாடீ சிட்டு?" என்று கேட்டுக் கொண்டிருந்தவனிடம் மறுப்பு தெரிவித்து,
"பெரியவங்க, ஊர்காரங்க, நம்ம வீட்ல எல்லார்ட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு அதுக்கப்புறம் ரிலாக்ஸ்டா ஏதாவது சாப்பிட்டுக்கலாம், ஆச்சி, தாத்தாவை எல்லாம் மேல ஏற வைக்க வேண்டாம். வாங்க!" என்று சொல்லி ராசுவுடன் மணமேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அனைவரிடமும் ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர் புது மண தம்பதியர்.
"ஹாய் ப்ரெண்டு கல்யாணத்துல ரொம்ப பிஸியா...... மேடம் நம்ம பக்கம் எல்லாம் திரும்பவே மாட்டேங்குறீங்க?" என்று கேட்ட பவினிடம்,
"தல என்ன வார்த்தை சொல்லீட்டீங்க...... உங்க கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும், ஆனா எப்படி சொல்லன்னு..... யோசிச்சுட்டே தான் மண்டைய உருட்டிக்கிட்டு இருக்கேன்!" என்று சொல்லி பட்டாம்பூச்சி போல் கண்களை சிமிட்டிய ஷைலுவை புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தவன் கௌதமன், ராகினியிடம் சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தான்.
"இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க பவின்....?" என்று கேட்டவளிடம், "நீ தானே ஏதோ சொல்லணும்னு சொன்ன... அதான் மொட்டை மாடிக்கு வந்தாச்சு, கீழ பாட்டுச் சத்தம், நிறைய கூட்டம்ன்னு...... இட்ஸ் அனாயிங்! கொஞ்ச நேரம் இங்கயே இருக்கலாம், சொல்லு!" என்றவனிடம்,
"தேங்க்யூ சோ மச் பவின், உங்க ஹெல்ப்பால தான் நான் என்னோட பைனல் எக்ஸாம்ஸ் ரொம்ப நல்லா பண்ணியிருக்கேன். உங்க வீட்ல இருக்கிறப்ப உங்கள நிறைய திட்டிட்டேன், அதுக்கு ஸாரி! டிஸ்டிங்ஷன் வருமான்னு தெரியல. பட் எப்படியும் ஷ்யூரா பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணிடுவேன்! நம்ம மேரேஜ்க்கு முன்னால உங்களுக்கு ஏதாவது ட்ரீட் தரணும்னு நினைக்குறேன், என்ன வேணும்னு கேளுங்க!" என்று கேட்டவளிடம்,
"மரியாதை எல்லாம் ரொம்ப அமர்க்களப்படுதே ஷைலு; ட்ரீட்னா எனக்கெல்லாம் டபுள், ட்ரிப்பிள் டமாக்கா தான் வேணும், நான் கேக்குறதெல்லாம் நோ சொல்லாம குடுக்க முடியுமா உன்னால?" என்று கேட்ட படி புன்னகைத்தவனிடம்,
"என்னன்னு தெரியல பவின்.....ஊர்ல இருந்து வந்ததுக்குப்பறம் உங்கள மரியாதை இல்லாம பேச வரமாட்டேங்குது. ட்ரீட் தரணும்னு கேட்டாச்சுல்ல, என்னால தர முடிஞ்சத கேட்டீங்கன்னா கண்டிப்பா தர்றேன் கேளுங்க......!" என்றவளிடம்,
"வயிறு, கால், கை, முகத்தை எல்லாம் டேமேஜ் பண்ணாம ஒரு ஹக் குடு பார்ப்போம்!" என்றான் கண்களில் எதிர்பார்ப்புடன்.
வெட்கப் புன்னகையுடன் அவனிடமிருந்து சற்று விலகி பின்புறமாக திரும்பி நின்று கொண்டவளை பார்த்து பெருமூச்சு விட்டவன்,
"ட்ரீட் எல்லாம் அவ்வளவு தானா? ஒருவேள நான் உன்னால தர முடியாததை கேட்டு உன்னை எம்பாரெஸ் பண்ணிட்டேனோ ஷை....?" என்று கேட்டவனிடம் பதிலேதும் சொல்லாமல் ஒரு மௌனச்சிரிப்புடன் அவன் முகம் நோக்கி திரும்பினாள் ஷைலஜா.
அவளை மேலும் முகம் சிவக்க வைக்க வேண்டாம் என்று நினைத்த பவின் இரு கைகளையும் அவளை நோக்கி விரித்துக் கொண்டு கண்களால் அழைத்தான். அதற்கு மேல் தாமதம் செய்யாமல் அவன் உடலை தழுவிக் கொண்டு நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ஷைலஜா.
"ஷைலு மனசுல வினுவுக்கும் இடம் இருக்கான்னு எனக்கு தெரியணும்? ஷை டூ யூ லவ் மீ?" என்று கேட்டவன் நெற்றியில் முத்தமிட்டு, "யெஸ் மை டியர் வினு! ஐ லவ் யூ!" என்று சொல்லியவளை இறுக்கி அணைத்துக் கொண்டு,
"ஐ ட்டூ லவ் யூ மை லவ்லி ஷை பேபி!" என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டான் பவின்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro