Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 38

சென்னை நகரின் ஒரு பிரபலமான திருமண மண்டபம் சரஸ்வதி குடும்பத்தினரின் வருகையால் களை கட்டியது. பார்கவ் வெட்ஸ் அபிநயசரஸ்வதி என்ற முகப்பு பதாகைகள் பக்கத்தில் நின்று கொண்டு பலராமிடம்,

"என்ன மிஸ்டர் பலராம், பையனுக்கு பத்து நாள்ல கல்யாணம்ன்னு திடுதிடுப்புன்னு அரேன்ஜ்மெண்ட்ஸ்லாம்..... பையன் பொண்ணை கூட்டிட்டு
ஓடிப்போறது மாதிரி ஏதாவது கசமுசா ஆகிடுச்சா?" என்று கேட்ட தன் தொழில் நண்பரிடம் முயன்று வரவழைத்த சிரிப்பை கஷ்டப்பட்டு பலராமும் கீதாவும் தந்து கொண்டிருக்க,

"அங்கிள் அது என்ன கதைன்னா எங்க அண்ணனுக்கு இன்னும் ரெண்டு நாளைக்குல்ல கல்யாணம் பண்ணி வைக்கலன்னா எங்க குடும்பத்துல பொறக்குற குழந்தைங்க எல்லாமே டபுள்ஸா ஐ மீன் ட்வின்ஸா பொறக்குமாம். இருக்குற பாப்புலேஷன்ல எல்லாருக்கும் ரெண்டுன்னா எங்க போறது? அதான் எங்க குடும்ப ஆஸ்தான ஜோதிட சிகாமணி ஸ்ரீலஸ்ரீ ஜெயநந்தானந்த சுவாமிகள் ஆசிர்வாதத்தோட இன்னிக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டோம், நீங்க வாங்க நம்ம சாப்பிட போகலாம்! அப்புறம் இவங்க உங்க பொண்ணா.....பேத்தியா? என்ன படிக்கிறாங்க?" என்று கேட்டுக் கொண்டே அவரைத் தள்ளிக் கொண்டு சென்றவனை சிரிப்புடன் பார்த்த பலராம்,

"ஏய் க்யூட்டி சின்னவன் என்னடீ போறபோக்குல உங்க அண்ணனை ஜோசியக்காரனாக்கிட்டு போறான்.... இவன எங்க விட்டாலும் வாயால பிழைச்சுக்குவான்டீ!" என்று சொன்னவரிடம் சலிப்புடன்,

"காலையில இருந்து எல்லாருக்கும் எத்தன கதை சொல்லி சமாளிச்சுருக்கு ராம் கண்ணா? முடியல. இந்த அண்ணா, அண்ணி, ஷைலுவை வேற இன்னும் காணும்..... அப்பா அம்மாவுக்கு வந்தவுடனேயே பங்ஷன் அட்டெண்ட் பண்றது எப்படியிருக்குமோ தெரியல. நம்ம ஜீவாக்குட்டியும், லட்டுவும் இல்லாம எனக்கு வேலையே ஓட மாட்டேங்குது. நீங்க இங்க பார்த்துக்குறீங்களா? நான் போய் பந்தியில எல்லாருக்கும் ஒரு கும்பிடு போட்டு சாப்பிட வச்சுட்டு மாமா, மீரா, கவிம்மா என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வர்றேன்!" என்று அவரிடம் சொல்லி விட்டு கால் மாற்றி நின்று கொண்டு இருக்க பலராம் தன் மனைவியிடம்,

"கீது ரொம்ப ஸ்ட்ரையின் பண்ணிக்காதடா, அப்புறம் என் தங்கச்சிய வேலை பார்க்க சொல்லிட்டு நீங்க என்னடா பண்றீங்கன்னு ஜெய் மச்சான்ட்ட நாங்க தான் திட்டு வாங்கணும். அபிம்மா ரெடியாயிட்டாளான்னு போய் பாரும்மா.  க்ரிப் பேண்ட் போட்டுருக்காளான்னு மறக்காம செக் பண்ணு, பெயின் கில்லர் டேப்லெட்ஸ் போட்டாளான்னு நியாபகமா கேட்டுக்கோ, இப்போ தான் வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு, கைக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் குடுக்காம கவிம்மாவை அபி கூடவே இருக்க சொல்லு! டையர்டா தெரியுறியே.... ஏன்டா?" என்று கேட்டவரிடம் சிரிப்புடன்,

"வர்றவங்க கேக்குற கேள்வியால தான் டையர்டு ஆகுது ராம், லேசா தலை பாரமா இருக்குற மாதிரி இருக்கு. சரியாகிடும்! நான் உள்ள போறேன்!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார் கீதா. 

"எப்பா பலாமரம் தப்பி தவறி எங்கண்ணன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போனாலும் போறான்..... என்ன ஊர்ல இருக்குற அத்தன பேரும் வாயை வாடகைக்கு எடுத்துட்டு வந்து கேள்வி கேக்குறானுங்க, முடியலப்பா சாமி!" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு தன் தந்தையின் அருகே இருந்த சேரில் அமர்ந்தவனிடம்,

"பாகி ரெடியாகிட்டானான்னு பார்த்தியா? ஆமா நீ என்னடா இப்படி சலிச்சுக்குற..... கல்யாணம்னா சும்மாவா?" என்று கேட்ட தன் தந்தையிடம்,

"இல்லப்பா..... எவன் எந்த நேரத்தில நம்ம கிட்ட எந்த கேள்விய கேக்கப் போறான்னு கொஞ்சம் மண்டை காயுது, மத்தபடி பங்ஷன்லாம் க்ராண்டா ரொம்ப கலர்புல்லா நல்லா தான் இருக்கு!" என்று தன் சொல்லி கூலர்ஸை கழற்றி தன் சட்டையின் முன்பகுதியில் சொருகி கொண்டவனிடம்,

"மாப்பிள்ளை ரெடியாகிட்டானான்னு கேட்டேன், நீ சைட்டடிக்க ரெடியாகிட்டியான்னு கேக்கல, இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும், அதுக்கப்புறம் உனக்கு கல்யாணம் பண்ணலாம், அதுவரைக்கும் பொறுமையா வெயிட் பண்ண முடியுமா? இல்ல உனக்கும் ஏதாவது உங்கண்ணன் மாதிரி தனியா ட்ராக் ஓடிட்டு இருக்கா?" என்று கேட்ட தன் தந்தையை முறைத்தவன்,

"இப்போ தான் நான் படிச்சே முடிச்சுருக்கேன், உலகம் தெரியாத பச்சைமண்ணை போய் கல்யாணம்ன்னு பயமுறுத்துறியே.... இரு உன்னைய கீதா, சரஸ் கிட்ட மாட்டி விட்டு அவங்க கையால பூசை போட வைக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவன் மண்டபத்திற்கு வந்து கொண்டு இருந்த ஒரு குடும்பத்தை கண்டு, "வாங்க வாங்க சுப்பு.... வெல்கம்! வாங்க மேடம், வாங்க ஸார், வாங்க அம்மா" என்று அனைவரையும் பலராமிடம் கூட்டி வந்தான்.

"அப்பா நான் அன்னிக்கு சொன்னேன்ல..... ரோடு ஆக்ஸிடெண்ட்ல ஒருத்தர் மாட்டி எல்லாரும் அவரை அடிச்சு நான் ஹெல்ப் பண்ணினேன்னு.... அது இவரைத் தான், மிஸ்டர் சுப்ரமணியம், இவங்க அவரோட வொய்ப், இவங்க அவரோட மாமனார் மாமியார்!" என்று அறிமுகம் செய்து வைத்தவர்களை பார்த்து கரம் குவித்த பலராம் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் வந்திருந்தவர்கள் அபிநயசரஸ்வதியின் அப்பா, அம்மா, அக்கா மற்றும் மாமன்.

தலையில் கட்டுகளுடன் வந்திருந்தவர் பலராமின் கைகளைப் பிடித்து மன்னிப்பு கேட்டார்.

"ஸார் நான் சொந்தமா ஒரு ட்ராவல்ஸ் வச்சு நடத்திட்டு வர்றேன், அன்னிக்கு ஏதோ என் கெட்ட நேரம் வண்டியில ப்ரேக் பெலியர் ஆகி ரோட்ல சைடுல நின்னுட்டு இருந்த ஒரு புது பைக்ல மோதிடுச்சு. அது காலேஜ் பையன் வண்டி போல.... எல்லாரும் செட் சேர்ந்துட்டு பிரச்சனை பண்ணி என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க, ராகவ் தம்பி தான் சாமி மாதிரி வந்து என்னைய பிரச்சனையில இருந்து காப்பாத்தி, அவங்க கிட்ட சமாதானம் பேசி, என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய், வண்டிக்கு தேவையான செலவையும் குடுத்து....உங்க பையன் தங்கம் ஸார்! அவர் கிட்ட இதுக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலன்னு சொன்னேன், எங்க அண்ணன் கல்யாணத்துக்கு குடும்பத்தோட வாங்க, அது தான் எனக்கு வேணும்ன்னு சொன்னாரு, கடைசியில பொண்ணு யாருன்னு கேட்டா நம்ம அபின்னு சொன்னாரு, ரொம்ப சந்தோஷமாயிருச்சு, எவ்வளவு பெரிய ஆளுங்க நீங்க..... உங்க வீட்ல அபியை கல்யாணம் பண்ணி குடுக்க நாங்க எவ்வளவு குடுத்து வச்சுருக்கணும்?" என்று அவர் பேசிக் கொண்டிருக்க பலராம் புன்னகையுடன்,

"மிஸ்டர் சுப்ரமணியம் எல்லாம் சாகவாசமா பேசிக்கலாம், முதல்ல உள்ள வாங்க, சம்பந்தி நீங்களும் தான், ராகவ் இவங்கள சாப்பிட கூட்டிட்டு போப்பா!" என்று சொல்லி அவர்களை நகர்த்தி விட்டு பெருமூச்சு விட்டார்.

பார்கவின் அப்பா பலராமுக்கு அவர்கள் குடும்பத்தினரிடம் கிடைக்காத மரியாதை சாரா ஜ்வல்லர்ஸ் பலராமுக்கு தடபுடலாக கிடைத்ததை பார்த்து அவர் தன் குணமிகு மருமகளுக்கு இன்னும் கொஞ்சம் நல்ல குடும்பம் கிடைத்திருக்கலாம் என்று நினைத்து ஏளனச் சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தார்.

ஜெய்நந்தன், நிர்மலா, ஷைலஜா, ஜெயந்தன், பத்மா, விவேக் அனைவரும் வந்து கொண்டு இருக்க பலராம் அவர்களை மனதார வரவேற்று, "என்ன மச்சான் இவ்வளவு நேரம் ஆக்கிட்டீங்க.....மாமா அத்தை கார்ல வந்தது டையர்டா இருந்தா கல்யாணம் முடிஞ்சதும் சொல்லுங்க வீட்டுக்கு கிளம்பிடலாம், விவேக், ஷைலு உள்ள வாங்க. இப்பவும்  மாணிக்கம் அண்ணாவுக்கு அதே கண்டிஷன் தானா?" என்று கேட்ட பலராமிடம்,

"வர்றவங்களை கவனி ராம், பைவ் மினிட்ஸ்ல ப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன். நிர்மலா நீ சித்தப்பா சித்தியை சாப்பிட கூட்டிட்டு போ. விவேக் நீ போய் பாகி கூட இருடா, ஷைலு நீ கவி அக்கா கூட போய் இரு. ஜீவா எங்கன்னு கவி கேட்டா வந்துட்டே இருக்கான்னு சொல்லு, மாமா எங்கன்னு கேட்டா அப்பவே வந்துட்டார்ன்னு சொல்லு!" என்று சொல்லி விட்டு கைக்குட்டையால் தன் நெற்றியை துடைத்து கொண்டவரை பார்வையால் அளந்த பலராம்,

"மாணிக்கம் அண்ணா இறந்து போய் எத்தனை மணி நேரம் ஆச்சு?" என்று கேட்டார்.

"ஏ.....ய்! அதெல்லாம் ஒண்ணும் இல்லடா ராம்! வா உள்ள போகலாம்!" என்று சொன்னவரை கைப்பற்றி தடுத்தவன்,

"உங்க குரல் தடுமாறுது மச்சான்..... நல்லது நடக்குற இடத்துல எதுக்கு சங்கடத்தை சொல்லிட்டு; யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்ன்னு நீங்க நினைச்சா வேண்டாம், ஆனா நானும் உங்களுக்கு அந்த யாரோவா?" என்று கேட்டவரது கேள்வியின் தாக்கம் ஜெய் நந்தனை முழுமையாக பாதித்தது.

"மலையில இருந்து நாங்க கிளம்பின அரை மணி நேரத்தில...... யாருக்கும் தெரியாது; கல்யாணம் முடிஞ்சதும் சொல்லிக்கலாம்டா! மனசு பாரமாயிருக்குடா ராம்.....!" என்று சொன்னவரிடம்,

"கீழே முத ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, முஹூர்த்ததுக்கு இன்னும் அரை மணி நேரம் டைம் இருக்கு, நான் அஜுவை உங்க கிட்ட அனுப்பி வக்கிறேன்!" என்று சொல்லி விட்டு அவரை உள்ளே அழைத்து சென்றார் பலராம்.

கீதா தன் மருமகள் குடும்பத்தினரின் வருகையால் அவள் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை எண்ணி எண்ணி பூரித்தார்.

"டேய் மண்டைவீங்கி உண்மையை சொல்லு; அண்ணி அவங்க மாமா மண்டையில கட்டுப் போட்டு உட்கார்ந்து  இருக்குறதுக்கு நீ தான காரணம்?" என்று அவன் சட்டையை பிடித்து கேட்ட தன் அக்காவிடம்,

"சட்டைய கசக்காதடீ எருமை; அவரை அடிச்சதுக்கு ஆள் செட் பண்ணினதும்; புது பைக் நிக்க வச்சதும், அண்ணியோட மாமன மூக்குல முகரையில பேர்த்து விட்டதும், என்னைய அவங்க கூட கோர்த்து விட்டதும்..... எல்லாம் அவன் செயல்!" என்று இருகைகளையும் வான் நோக்கி உயர்த்தியவனிடம்,

"இந்த அவன் எவன்? மலையில உட்கார்ந்துட்டு இருக்கே ஒத்தகுரங்கு.... அது தானே? பாகிக்கு இதெல்லாம் தெரியாம பார்த்துக்க..... அவனை தப்பா நினைக்க போறான்!" என்றவள் கன்னத்தில் தட்டி,

"போடீ இவளே.... இந்த செட்டப் தான் நம்ம மச்சி நம்ம சகோதரனுக்கு குடுத்திருக்கிற கல்யாண பரிசு.... அதனால பாகி ஹாப்பி, அண்ணி ஹாப்பி, மீ ஆல்சோ ஹாப்பியோ ஹாப்பி!" என்று சொன்னவனை பார்த்து "கஷ்டம்" என்று தலையில் அடித்து கொண்டு சென்றாள் கவிப்ரியா.

ஜெய் நந்தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார், அவரது குடும்பத்தின் நினைவு வராதவாறு மாணிக்கம் அண்ணாவின் கடைசி பதினைந்து நாட்களும் ஜீவானந்தன், ஜெய்நந்தன், இனியா, விவேக், நிர்மலா இவர்களில் ஒருவர் அவர் கூடவே இருந்ததில் மாணிக்கம் அவரது முடிவை அமைதியாக முகத்தில் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டார். ஆனால் ஜீவா, ஜெய்யின் பாடு தான் மிகவும் தவிப்புக்குள்ளாகி விட்டது; நமக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நம் கைகளைப் பிடித்து கொண்டு இருந்த ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகி செல்கிறார் என்பதை அவர்களது மூளை ஏற்றுக் கொண்டது. மனம் அடித்துக் கொண்டது.

நேற்று மாலை இனியா அவரிடம் வந்து,
"பல்ஸ் குறைய ஆரம்பிக்குது பெரியப்பா, லெட்ஸ் கிவ் ஹிம் அ பெஸ்ட் குட்பை!" என்று சொன்ன போது  ஜீவா தலையைக் கோதிக் கொண்டான்.  ஜெய் சுவற்றில் சாய்ந்து கொண்டு ஆழ்ந்து ஒரு மூச்செடுத்தார்.

"ஆனந்த் மா......" என்று அழைத்தவரிடம் வேகமாக தலையாட்டிய ஜீவானந்தன், "என்னால முடியாதுப்பா..... நீங்க போங்க!" என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டான். 

அறைக்குள் நுழைந்து மாணிக்கத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு சமன்பட்ட குரலில் "ஒண்ணும் இல்ல மாணிக்கம் அண்ணா; எப்பவும் வர்ற வீசிங் ப்ராப்ளம் தான், சரியாகிடும்!" என்று சொன்னவரை பரிவாக வருடின மாணிக்கத்தின் கண்கள்.

"தம்பிக்கு நான் ஆறுதல் சொல்ற காலம் போய் இப்போ நீங்க எனக்கு ஆறுதல் சொல்றீங்களே....எது எதெல்லாம் அடுத்தவங்களுக்கு பிரயோஜனப்படுமோ அதெல்லாம் எடுத்துட்டு என்னை புதைக்க சொல்லுங்க, சின்னய்யா கல்யாணத்தை பார்க்க முடியலன்னு வருத்தப்படாதீங்க, நீங்களும் பெரியய்யா மாதிரி உங்க பேரன் கல்யாணத்தை பார்க்கத்தான் உங்களுக்கு குடுத்து வச்சுருக்கு! போறேன் தம்பி!" என்று கைகூப்பியவரை கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.

"இது உண்மையா இருக்குமோ? தாத்தா, அப்பா வரிசையில என்னாலயும் ஆனந்த் கல்யாணத்தை பார்க்க முடியாதோ..... மாணிக்கம் அண்ணா ஏன் இப்படி சொன்னார்? ஒரு வேளை நிச்சயதார்த்தம் மாதிரி ஆனந்த் யாருமே இல்லாம கல்யாணமும் செஞ்சுப்பானோ?" என்று மனதிற்குள் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் மட்டும் கிடைக்கவில்லை.

"ஜெய் என்னடா டென்ஷனா இருக்க....ட்ரைவ் பண்ணி வந்தது கஷ்டமா இருக்கா? ஏதாவது சாப்டியா இல்லையா?" என்று கேட்டவரிடம் மாணிக்கம் அண்ணா சொன்ன விவரங்களை சொல்லி விட்டு,

"எனக்கு தெரியாம ஏஞ்சலுக்கும், ஆனந்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற ப்ளான்ல இருக்கியாடா?" என்று கேட்ட படி தன் நண்பனின் அருகில் வந்தவரிடம்,

"எனக்கென்ன கிரகமா பிடிச்சிருக்கு உன்னைய விட்டுட்டு உன் புள்ளைக்கு கல்யாணத்தை நடத்தி உன் கிட்ட ரெண்டு மிதி வாங்குறதுக்கு...... அவருக்கு ஏதாவது கேரா இருந்திருக்கும், சொல்லியிருப்பாரு. ஃப்ரீயா விடுடா.......வா வெளியே போகலாம். நேரமாச்சு!" என்று சொல்லி ஜெய்யை அழைத்து சென்றார் அர்ஜுன்.

உற்றார் உறவினர்கள் அடங்கிய அந்த மண்டபத்தில் சுபநேரத்தில் தன் குடும்பத்தினரின் ஆசிகளுடன் ஊர் கூடி வாழ்த்த பார்கவ் அபிநயசரஸ்வதியின் கழுத்தில் பொன் தாலி பூட்டி தன் வாழ்க்கை துணைவியாக கைபிடித்தான்.

கண்கலங்க நின்று கொண்டு இருந்தவளின் கைகளில் சுரண்டியவன் அவள் சற்று முகத்தை நிமிர்த்த, "ஐ லவ் யூ டி!" என்று சொல்லி உதடு குவித்தான். "நானும் தான் கவி!" என்று சன்னமான குரலில் சொல்லி விட்டு குனிந்து கொண்டாள் அபிநயா.

தன் கடையில் உட்கார்ந்து நாள்காட்டியில் தேதியை கிழித்தவன், "கொத்து கொத்தா கிழிக்க முடிஞ்சா நல்லாத்தேன் இருக்கும், இப்படி ஒத்தை ஒத்தையா கிழிச்சு எப்போ கல்யாணம் பண்ணி கிழிக்கிறது........
கட்டிக்கிட்டவன் புலம்பறது கொஞ்சமாவது உன் காதுல விழுவுதாட்டீ?" என்று புலம்பி கொண்டு இருந்த நேரம் இனியா மொபைலில் அவனை அழைத்தாள்.

"பார்றா என் கண்ணாட்டிக்கு நம்ப நியாபகம் வந்துருச்சு போலயே....." என்று சொல்லி சிரிப்புடன் போனை எடுத்தவன்,

"என்னட்டீ அத்தான் கலியாணம்லாம் சிறப்பா போய்கிட்டு இருக்கா....... என்னைய விட்டுட்டு தனியா போய் ஆட்டம் போட்டுட்டு கிடக்கீல!" என்று கோபம் காட்டியவனிடம்,

"லூசு மாதிரி பேசிட்டு இருக்காதீங்க, யார் கல்யாணத்துக்கு போனா.... யார் ஆட்டம் போட்டா; பத்து பதினைஞ்சு நாளா மண்டை காயுது; உடனே கிளம்பி மலைக்கு வாங்க, அப்பத்தாவையும் கூட்டிட்டு வாங்க, இரண்டு மூணு நாள் இங்க இருக்கிற மாதிரி இருக்கும். மாணிக்கம் தாத்தா இறந்துட்டாங்க!" என்றாள் இனியா சற்று கம்மிய குரலில்.

"மன்னிச்சிகிடுடீ சிட்டு.....மாமா இந்தா கிளம்பிட்டேன்!" என்று சொல்லி விட்டு விரைந்து முடிக்க வேண்டிய வேலையை முடித்து விட்டு கடையை சாற்றி விட்டு தன் புல்லட்டில் ஏறி அமர்ந்து கொண்டு வீட்டுக்கு விரைந்தான் இசக்கிராசு.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro