💟 ஜீவாமிர்தம் 35
அன்று மாலையில் தான் பார்கவ் ஹைதராபாத்தில் இருந்து திரும்பி வந்திருந்தான். அவனது க்ளையண்ட்டின் கம்பெனியில் ஏஜிஎம் என்று போய் நான்கு நாட்களுக்கு கணக்குகளுடன் போராடி விட்டு வந்திருந்தான். கண்களை மூடினால் கூட கனவில் பிகர்களாக தான் வந்தது.
ராகவ் இரண்டு நாட்களுக்கு முன்பு தடாலடியாக சென்னைக்கு வந்து இறங்கியிருந்தான். வந்தவுடன் முதல் வேலையாக சரஸ்வதியின் காலில் விழுந்து வணங்கியவன்,
"சரஸ் ஊர்ல இருந்து ராஜேஷ் உனக்காக குடுத்து விட்ட புடவை; அவருக்கு அங்க நெறய ப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்க, ஸோ டைம் கிடைக்குறப்போ உன்னைய கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காரு. ஸாரி உனக்கு பிடிச்சிருக்கா சரஸ்?" என்று கேட்ட தன் பேரனிடம் தலையாட்டி விட்டு, "நீ வரும்போது ராஜேஷும் வந்துடுவார்ன்னு யாரோ சொன்னாங்க!" என்று சற்று குழப்பத்துடன் நின்றவரிடம்,
"வேற யாரு இந்த கவி குண்டம்மா தான் அப்படி பொய் சொல்லியிருப்பா, ஆமா நீ ஏன்டீ முகத்தை இப்படி உம்முன்னு வச்சிருக்க?" என்று கேட்டவனிடம் உச்சுக் கொட்டினாள் கவிப்ரியா. ராகவை வரவேற்கவும் தன்னைப் பார்க்கவும் ஜீவா வரவில்லை என்ற எரிச்சலில் இருந்தாள். அர்ஜுன், மீரா, பலராம், கீதா, ஜெயந்தன், பத்மா அனைவரும் அன்று வீட்டில் இருக்க கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
"என்னடா இன்ஜினியரு..... அப்பப்போ ஊருக்கு வந்து தலைய காட்டிட்டு போயிருக்கலாம்லடா....... ஒரேடியா அங்கயே உட்கார்ந்துட்ட?" என்று கேட்ட ஜெயந்தனிடம்,
"ஹலோ மிஸ்டர் பூம்பாறை நாட்டாமை; நான் வந்துட்டு வந்துட்டு போக நீங்களா பணம் குடுப்பீங்க? நான் ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்ண, இத்தனை வருஷமா அங்க தங்கியிருக்க எங்கப்பா அனுப்பின பணம் வெறும் ரெண்டு லட்சம் தான் தெரியுமா? மத்ததெல்லாம் எனக்கு கிடைச்ச எய்டும், என் பார்ட் டைம் மணியும் தான்! நிறைய செலவு பண்ற; ஊருக்கு வந்து சேருன்னு சொல்லிட்டாருன்னா நான் என்ன பண்றது? அதனால கார்டனிங், குக்கிங், க்ளீனிங், எல்லா வேலையும் கத்துக்கிட்டாச்சு. பத்மாச்சி நீயும் என்னைய ரொம்ப மிஸ் பண்ணியா?" என்று இருவரையும் கட்டிக் கொண்டு அவர்களிடமும் ஆசி பெற்றான்.
சில வருடங்கள் வீட்டிற்கு வராமல் இப்போது வந்தவன் இரண்டு நாட்கள் வீட்டின் கசகச சத்தம், அம்மாவின் சமையல், பாட்டியுடன் அரட்டை, மாமா அத்தை, ஜீவா, ஷைலுவுடன் போனில் அளவளாவல், பெரியம்மா பெரியப்பாவுடன் சற்று நேரம் அவனுக்கு கிடைத்திருந்த வேலை என்று பேசிமுடித்த போது பார்கவ் ஊரில் இருந்து வந்திருந்தான். வீட்டுக்கு வந்தவனை ஓடிச் சென்று கட்டிக் கொண்ட ராகவ்,
"ஹாய்டா தீக்கோழி..... லுக் அட் மீ; ஐ'ம் பேக்; ரொம்ப வருஷம் கழிச்சு நம்ம ஊருக்கு ரீ எண்ட்ரி குடுத்தா என்னடா நீயும் மச்சியும் என்னை ரிசீவ் பண்றதுக்கு வரல.... கவிம்மா வந்ததுனால தான் கொஞ்சம் ரெஃப்ரெஷிங்கா இருந்தது. ஹவ் ஆர் யூ? ஹவ் அபௌட் யுவர் லவ்வர்? அழகா இருப்பாங்களா..... ஐ வாண்ட் டூ சீ ஹெர்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனை மெதுவாக அவன் பிடியிலிருந்து தள்ளி நிறுத்திய பார்கவ்,
"வெல்கம்டா மண்டைவீங்கி; சத்தியமா வெல்கம் மட்டும் தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.... மத்த நலம் விசாரிப்பு எல்லாம் சாப்பாட்டுக்கு அப்புறம் தான். கீத்ஸ் போய் ப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்...... அதுக்குள்ள சாப்பாட்டை ரெடி பண்ணி அழகா எக்ஸிபிஷன் வை பார்ப்போம். ரொம்ம்ம்ம்ப பசிக்குது!" என்று சொல்லி விட்டு அவனறைக்கு சென்றான் பார்கவ்.
"அப்பா அண்ணியை பத்தி கேட்டா இவன் என்னப்பா ப்ரேக்பாஸ்ட் ஆர்டர் குடுத்துட்டு போறான்; அவங்க காரெக்டர் எப்படிப்பா?" என்று கேட்ட தன் இளைய மகனிடம்,
"அபி மீரா பெரியம்மாவை விட அமைதியான பொண்ணுடா; உங்க அண்ணனை பார்த்து அந்த பொண்ணு எப்படி இம்ப்ரஸ் ஆச்சுன்னு தெரியல. அவங்க வீட்ல கொஞ்சம் பிரச்சனை பண்றாங்கடா, நம்ம லட்டுவுக்கும், ஷைலுவுக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல மேரேஜ் ஆகிடும். அதுக்கப்புறம் ஷைலுவுக்கா இல்ல பாகிக்கா யாருக்கு முதல்ல லைஃப் செட்டில் ஆகப்போகுதுன்னு தெரியல. உங்க அண்ணன் கல்யாணம் எப்படி நடக்கப்போகுதுன்னு தான் ரீசண்டா அம்மாவும் நானும் கவலைப்பட்டுட்டு இருக்கோம்!" என்றார் பலராம்.
"டோண்ட் வொர்ரி டாடி; பாகி மேரேஜ் நடக்க வேண்டிய நேரத்துல சூப்பரா நடக்கும், வாங்க சாப்பிடலாம்; அந்த சாப்பாட்டு ராமன் சாப்பிட உட்கார்ந்துட்டான்னா பக்கத்துல இருக்கிறவன் எவனும் அவன் கண்ணுக்கு தெரிய மாட்டோம். ஆனா உடம்பெல்லாம் கரெக்டா மெயின்டைன் பண்ணி அழகா தான் இருக்கான்ப்பா!" என்று சிரித்தவனிடம்,
"நீயும் தீராஸ்க்கு வாடா ராகவ்; பிட்னெஸ் வொர்க்அவுட்ஸ் செஞ்சன்னா இன்னும் அழகாயிடுவ!" என்றார் பலராம்.
"ம்ம்ம்....பார்க்கலாம் டாடி!" என்று தோள் குலுக்கி விட்டு சென்றான் ராகவ்.
பார்கவ் அறைக்குள் எரிச்சலின் உச்சகட்டத்தில் தன் போனை கட்டிலின் மேல் தூக்கி எறிந்தான். கிட்டத்தட்ட ஒரு வாரமாக அபிநயாவிடம் இருந்து அழைப்பு, குறுந்தகவல் எதுவுமே வரவில்லை. அவன் முயற்சி செய்தாலும் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தது. எப்போதும் வீட்டினருக்கு பயந்து அவள் தான் அவனை அழைக்க மாட்டாள். ஆனால் அவன் அழைத்தால், "சொல்லுங்க மிஸ்!" என்று பேச்சை ஆரம்பித்து ஐந்து நிமிடங்களாவது பேசி விட்டு தான் வைப்பாள். ஆனால் சில நாட்களாக அதற்கும் வழியின்றி பார்கவ் தவித்து கொண்டு இருந்தான். அவனது உள்ளுணர்வு அபிநயா எங்கே மறுபடியும் உன்னை விட்டு விலகி சென்று விடுவாளோ என்று கட்டியம் கூறி அவனை பயமுறுத்தி கொண்டு இருந்தது.
இதே யோசனையுடன் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவை அளைந்து கொண்டு இருந்தவனிடம்,
"பாகி இன்னிக்கு ஈவ்னிங் உன் வொர்க் முடிஞ்சதும் சாராவுக்கு கொஞ்ச நேரம் வந்துட்டு போடா. இந்த மன்த் பெண்டிங் பில்ஸ் அமௌண்ட் வேரி ஆகுது, நீ வந்தன்னா ஈஸியா எங்க தப்பு இருக்குன்னு பிடிச்சுடுவ!" என்றார் பலராம்.
"ம்ப்ச்! ஏதோ சரியில்லைப்பா! தப்பா இருக்கு!" என்றவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"புரோட்டாவுக்கு குருமா பண்ணாதீங்க, காம்பினேஷன் நல்லா இருக்காது..... சால்னா தான் செட் ஆகும்னு நான் சொன்னேன்ல பெரியம்மா; இப்போ நம்ம பிரதர் ஃபீல் பண்ணுறாரு பாருங்க! ஏய் கவி கேசரி சாப்பிடலையாடீ.....ரொம்ப டேஸ்ட்டா இருக்கு!" என்று சொன்ன தன் தம்பியிடம்,
"நீயே கொட்டிக்கடா எருமை!" என்று சொல்லி விட்டு அவளும் உணவை கிண்டிக் கொண்டு இருந்தாள். தட்டில் வைத்து விட்ட உணவை காலி செய்யாமல் எழ முடியாது என்ற கவலையுடன்!
"பாகி என்னடா பிரச்சனை? என்னமோ உன்னை டிஸ்டர்ப் பண்ணுது போலிருக்கே?" என்று கேட்டு அவன் முதுகை தட்டிக் கொடுத்தார் அர்ஜுன்.
"அபி ஒருவாரமா என் கூட பேசல, எப்போ போட்டாலும் மொபைல் ஆஃப்ல இருக்கு, கொஞ்சம் பயமாயிருக்கு பெரியப்பா!" என்றான் பார்கவ் சற்று பதட்டமடைந்த குரலில்.
மீராவும் கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அவனிடம், "இன்னிக்கு நீ ஆஃபிஸ் போக வேண்டாம் பாகி; முதல்ல போய் அபியை பாரு; ஏதாவது பிரச்சனைன்னா அவளை கையோட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு. அவளோட குடும்பத்தை நினைச்சு அவ வருத்தப்படாத அளவுக்கு நம்ம நல்லா பார்த்துக்கலாம்!" என்றார்கள்.
"ம்மா....சித்தி; ஏன் இவ்வளவோட விட்டீங்க; ஒரு தாலியும் ரெண்டு மாலையும் வாங்கி குடுத்து விட்டுடுங்க....பிரதர் ஸ்ட்ரைட்டா கல்யாணமும் பண்ணிட்டு வந்துடட்டும்!" என்றாள் கவிப்ரியா கிண்டல் குரலில்.
"ஏய் கவிக்குட்டி நீ இல்லாம அண்ணா எப்படிடீ கல்யாணம் பண்ணிக்குவேன்.... எந்த பிரச்சனை வந்தாலும் அபியை இங்க தான் கூட்டிட்டு வருவேன், நீ தான் நான்
கட்டுற தாலில ஒரு முடிச்சு போட்டு எங்க பாண்டிங்கை ஸ்ட்ராங் ஆக்கணும், நியாபகம் வச்சிருக்கியா?" என்று கேட்டவனை கவிப்ரியா கட்டிக் கொண்டாள்.
"நீ ரொம்ப நல்ல அண்ணனாடா பாகி; உன் ஹாப்பி லைஃப்க்கு என்னோட அட்வான்ஸ் விஷ்ஷஸ்!" என்று சொன்னவளை பார்த்து நக்கலாக சிரித்த ராகவ்,
"இவ சொல்றதையெல்லாம் கேட்டா நல்லவிங்கம்பா; இல்லன்னா ஐ ஹேட் யூ டூ த கோர்ம்பா! மச்சி ஜீவா இவளைக் கட்டிக்கிட்டு நீ ரொம்ப பாவம்டா!" என்று சொன்ன ராகவின் கழுத்தை பற்றியவள்,
"அப்படி கஷ்டமா இருந்தா உன் மச்சியை வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லு. மூஞ்சியை பாரு; உன்னைய பார்க்க வரலைன்னு தான் அவன் கிட்ட பேசாம இருந்தேன், இல்லாட்டி எனக்கென்ன வந்தது அவனை கோபிச்சுக்குறதுக்கு?" என்று கேட்டவளிடம் மீரா,
"மாமா தான் மாணிக்கம் தாத்தாவுக்கு கொஞ்சம் க்ரிட்டிகலா இருக்குன்னு போன்ல பேசறப்ப சொன்னாங்கல்ல கவிம்மா...... அப்புறம் ஜீவா வரலன்னு நீ முகத்தை தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருந்தா என்ன பண்றது? மத்த நேரம் நீ கூப்பிடாமலேயே வர்றவன் இப்போ நீ கூப்பிட்டும் வரலைன்னா ஏதோ பிரச்சனை இருக்குன்னு நீயா தான் புரிஞ்சுக்கணும், இதெல்லாமா சொல்லி குடுக்க முடியும்?" என்று சற்று கோபத்துடன் கேட்டார்.
"யாரும் யாரையும் பார்க்கணும்னு இங்க துடிச்சுட்டு இருக்கல, யார் வந்தாலும் வரலைன்னாலும் எனக்கு ஒரு கவலையும் இல்ல...... ச்சை தேவையில்லாதை எல்லாம் பேசி எதுக்கு மூடு அப்செட் பண்ணிட்டு..... சரஸ் எங்கூட வர்றியா? அவள் போயிட்டு வெளியே ஒரு ரவுண்ட்ஸ் அடிச்சுட்டு வரலாம்!" என்று தன் பாட்டியை தன்னோடு அழைத்தவளிடம்,
"ஏய் கவிக்குட்டி...... இன்னிக்கு ஒரு நாள் என் கூட இரேன்டீ!" என்று கேட்டான் ராகவ்.
"பாகி அண்ணிட்ட பேசப் போறான், நீயும் அவன் கூட போய் அண்ணியை பார்த்து பேசிட்டு வா! நான் கிளம்புறேன்; உங்க பெரியம்மா கூட இருந்தா தேவையில்லாம ஆர்க்யூமெண்ட் தான் நடக்கும்!" என்று சொல்லி விட்டு சரஸ்வதியை அழைத்து கொண்டு சென்றாள் கவிப்ரியா. அவ்வப்போது இந்த விஷயம் நடக்கும் என்பதால் அர்ஜுனும் பலராமும் கீதாவும் அவளுக்கு கையசைத்து விட்டு உள்ளே சென்றனர்.
பார்கவுடன் ராகவும் அபிநயாவை பார்ப்பதற்காக அவளது கல்லூரிக்கு சென்றிருந்தனர். கல்லூரியில் அவர்களை கேட்டருகிலேயே கவுரவமாக நிறுத்திய செக்யூரிட்டி அபிநயா பற்றிய விபரத்தை அவளது டிபார்ட்மெண்ட் ஹெட்டிடம் சேகரித்து விட்டு,
"நீங்க கேட்ட மேடம் ஒரு வாரமா காலேஜ்க்கு வரலையாம் ஸார்!" என்று சொல்லி விட்டு தன் கடமை முடிந்து விட்டது என்று போய் விட்டார்.
"டேய் ராகி அவ வீட்ல எல்லாருமா சேர்ந்து வாணியை என்னமோ பண்ணிட்டாங்கடா; எனக்கு ரொம்ப பயமாயிருக்கு!" என்று மனம் கலங்கிய தன் அண்ணனை சமாதானம் செய்து,
"டோண்ட் லூஸ் ஹோப் மேன்! அண்ணி வீட்ல போய் ஒருதடவை பார்த்துட்டு வந்துடலாம் வாடா அண்ணா!" என்று தைரியம் சொல்லி அவனை அபிநயாவின் வீட்டுக்கு வழி கேட்டவாறு அழைத்து சென்றான் ராகவ்.
அபிநயாவின் வீடு என்று சொல்லப்பட்ட வீடும் பூட்டியிருந்த போது பார்கவிற்கு அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே வரவில்லை.
"மறுபடியும் அபி என் லைஃப்ல இருந்து எங்கேயோ தூரமா போயிட்டாடா ராகவ்!" என்று சொல்லி விட்டு தன் தம்பியின் பின்புற தோளில் சாய்ந்து இருந்தவன் கண்களில் வழிந்த நீர் ராகவின் சட்டையை நனைத்தது.
"டேய் சும்மாயிருடா; புலம்பறதை விட்டுட்டு உருப்படியா ஏதாவது யோசி!" என்று ராகவ் சொல்ல பார்கவ் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு,
"அவளோட கொலீக் ஒரு பொண்ணு இருக்காடா, எனக்கு அவளோட பேரு, நம்பர்லாம் தெரியாது, அவளைப் பார்த்து பேசணும்னா காலேஜ் முடியற டைம் வரைக்கும் வெளியே வெயிட் பண்ணணும்!" என்று சொன்னவனிடம்
"இதை ஏன்டா முதல்லயே சொல்லல.....? வா போகலாம்!" என்று சொல்லி விட்டு பைக்கை உதைத்தான் ராகவ்.
வெகுநேர காத்திருப்புக்கு பிறகு கல்லூரி முடிந்த பின்னர் ஒருவழியாக அபிநயாவின் தோழியை கண்டுபிடித்து அவளிடம் பேசுவதற்கு சென்றான் பார்கவ்.
"அபி பத்தி உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சுருந்தா சொல்லிடுங்க சிஸ்டர். அவளா நினைச்சா தான் என்னோட லைஃப்ல அவளால வர முடியுது, இப்போ என்ன பிரச்சனைன்னு தெரியல, மறுபடியும் ஓடி ஒளிஞ்சு விளையாடிட்டு இருக்கா; ஆனா எனக்கு ஒவ்வொரு இடத்திலயும் அவளை தேடி கண்டுபிடிக்க முடியாம உயிர் போகுது சிஸ்டர். ப்ளீஸ் உங்களுக்கு ஏதாவது இன்பர்மேஷன் அவளே சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி இருந்தாலும் தயங்காம சொல்லுங்க!" என்று கேட்டவனை பார்த்தவாறு கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள் அவள்.
"மிஸ்டர்..... எந்த சூழ்நிலையிலயும் அபிநயாவை கைவிட மாட்டேன்னு ஒரு ப்ராமிஸ் பண்ணி தர முடியுமா உங்களால?" என்று கேட்டவளிடம் விரக்தி சிரிப்புடன்,
"என் கேஸ்ல இப்பவும் சரி அப்பவும் சரி எப்பவுமே கையை அவுத்து விடுறது உங்க ப்ரெண்டு தான்; நான் இல்ல, அவளும் என்னை ஒதுக்கி வச்சுட்டு சந்தோஷமா இருக்க மாட்டா சிஸ்டர்; எங்க ரெண்டு பேரு வாழ்க்கைக்காக தான் கேக்குறேன்!" என்று கேட்டவனிடம் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு முகவரியை நீட்டினாள் அவள்.
"நீங்களும் அபிநயாவும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும். போய் பேசிப் பாருங்க, ஆல் தி பெஸ்ட்!" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
"தம்பிப் பையா வண்டியை எடுறா; அட்ரஸ் கிடைச்சிடுச்சு, உங்க அண்ணியை பார்த்து மலையிறக்கி அப்படியே வீட்டுக்கு தள்ளிட்டு போயிடுவோம்!" என்று சொன்ன தன் அண்ணனின் முகத்தில் இருந்த நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் பார்த்த ராகவ் அவனும் குதூகலத்துடன் கிளம்பினான்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro