💟 ஜீவாமிர்தம் 28
ராசு அன்று காலையில் வானத்துக்கும், பூமிக்கும் தாவிக் கொண்டு இருந்தான். தன் மாமன் மகளை மணந்து கொண்டது என்னவோ அவளைக் கட்டாயப் படுத்தித் தான்; ஆனால் அவளைப் பார்த்ததும் அவனுக்கு உண்டான காதல் பொய்யில்லை. அதை அவளிடம் உணர்த்தி விட்டு தான் மறு வேலை என்று நினைத்திருந்தான். ஆனால் இனியா இவ்வளவு எளிதில் தன்னை ஏற்றுக் கொள்வாள்;அது மட்டுமில்லாமல் ஊரறிய கணவன் என்ற அங்கீகாரம் தந்து விடுவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
இரவோடு இரவாக தனது தோட்டத்தில், கடையில், அரிசி ஆலையில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளிகளுக்கும் உடையும், மதிய விருந்தும் தயார் செய்ய சொல்லி விட்டான்.
"ராசு மாமா இருக்காகளாக்கா?" என்று கேட்ட படி ராசுவின் வீட்டிற்கு முன்பாக வந்து தயங்கி நின்ற ஒரு சிறு பெண்ணிடம்,
"உள்ள வாங்க, உங்க ராசு மாமா வெளியே போயிருக்காங்க. நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?" என்று மென்மையாக கேட்ட அக்காவை அந்த சிறுமிக்கு மிகவும் பிடித்தது.
"நீ யாருக்கா.... என்னைய போய் வாங்க போங்கங்க.... அப்பத்தா இல்ல; எங்க போச்சு? உன்னைய இங்கண நா பார்த்ததேயில்லையே? " என்று தோரணையாக கேட்ட சிறுமிக்கு வயது எட்டோ ஒன்பதோ தான் இருக்கும்.
சிறு சிரிப்புடன், "என் பேரு இனியா; உங்க ராசு மாமா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு, அப்பத்தாவும், உங்க மாமவும் டவுனுக்கு போயிட்டு வர்றோம்னு சொல்லிட்டு போனாங்க; வர ரெண்டு மூணு மணி நேரம் ஆகும். நான் உங்களை மரியாதை பேசினா தானே நீங்களும் எனக்கு மரியாதை குடுப்பீங்க? அதான் வாங்க போங்கன்னு பேசுறேன், இப்போவாவது வந்த விஷயத்தை சொல்வீங்களா?" என்று கேட்ட இனியாவிடம்,
"என்னது...... ராசு மாமா கல்யாணம் பண்ணிகிடுச்சா? எனக்கு சொல்லவேயில்ல....?" என்று அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அருகில் முழங்காலிட்டு அமர்ந்து,
"நீங்க கேக்கவேயில்லேயே.... அது தான் யாரும் சொல்லியிருக்க மாட்டாங்க, நான் சாப்பிடப் போறேன், நீங்களும் வர்றீங்களா சேர்ந்து சாப்பிடலாம்!" என்று கேட்டவளை திகைப்புடன் பார்த்த சிறுமி
"எங்க மாமனுக்கு போய் உன்னைய கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க பாரு.... ஐயோ அக்கா நீ ரொம்ப பாவம்; எங்கப்பாரு வட்டிப் பணம் குடுத்து விட்டாருக்கா, முந்நூறு ரூபா கம்மியா இருக்கு, ராசுமாமாட்ட எங்கப்பாரு வந்துருந்தார்னா ரூபா கம்மியா குடுத்ததுக்காண்டி அவர தூக்கி போட்டு மிதிச்சிப்புடும், அதுக்குத்தே மாமாவ சமாதானப் படுத்தி, இந்த ரூபாய குடுத்துட்டு வரச் சொல்லி எங்கிட்ட
எங்க அம்மா சொல்லி விட்டுச்சு! நல்ல அக்காவா இருக்க, ராசுமாமாவ கொஞ்சம் கம்மியா வட்டிப் பணம் கேக்கச் சொல்லுக்கா, இல்லைன்னா என்னைய பள்ளிக்கூடம் போக விடாம கடலைக் காட்டுக்கு வேலைக்கு கூட்டிட்டு போயிடுவாக!" என்று அந்த குழந்தை பாவமாக சொன்னதும் இனியாவிற்கு தொண்டை அடைத்தது.
அவனது கடைச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு அந்த சிறுமியை கையில் பிடித்துக் கொண்டு தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள் இனியா. ஆம் இசக்கி ராசுவின் வீடு இப்போது அவளது வீடாகவும் மாறியிருந்தது.
"உங்க அப்பா பேரு என்னம்மா?" என்று அந்த சிறுமியிடம் விசாரித்து அவர் செலுத்தி வந்த தொகையை கணக்கிட்டவள் சிறுமி கையில் வைத்திருந்த தொகையில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு,
"அப்பா கிட்ட சொல்லு, இனிமே ராசு மாமா கடையில பாங்க் வட்டி மட்டும் குடுத்தா போதுமாம், அவங்க வொய்ப் சொல்லி அனுப்பிச்சாங்கன்னு சொல்லு, நெக்ஸ்ட் டைம் இங்க வரும் போது உங்க வீட்டுக்கு நான் வர்றேன். அப்போ உனக்கு புது டிரஸ் வாங்கிட்டு வர்றேன், அப்பா அம்மாவே உன்ன வேலைக்கு போன்னு சொன்னாலும் கேக்க கூடாது. நல்லா படிக்கணும்!" என்று அவள் கையில் மீதமுள்ள பணத்தை அவள் கைகளில் வைத்து மடக்கிய இனியாவை சந்தோஷ மிகுதியில் அணைத்து அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு சென்றாள் அந்த சிறுமி.
"ஏட்டி சிலுக்கு.... நீ எங்கலே இங்க; எம் பொஞ்ஜாதிய கட்டிப் பிடிச்சுக்கிட்டு முத்தம் குடுத்துக்குதீக..... என்னவே நடக்குது இங்க?" என்று ஒரு கையை இடுப்பில் கை வைத்துக் கொண்டு தன் வேஷ்டியை மடக்கி கட்டியவனை பார்த்து அந்த சிறுமி பம்மினாள்.
அவன் கண்களில் இருந்து பார்வையை நகர்த்தாமல், "சொன்னதெல்லாம் மறக்காம வீட்ல சொல்லணும்டா! காசு பத்திரம், பார்த்து போ!" என்று அவளை இனியா வழியனுப்பி வைத்து விட்டு தன் கணவனிடம்,
"சீக்கிரமா வந்துட்டீங்களே?" என்று கேட்க சிறுமி அந்த இடைவெளியில் ராசுவை தாண்டி போய் விட்டாள்.
"போன வேல சூளுவா முடிஞ்சதுத்தா. பச்சையில பத்து, செவப்புல பத்து, மஞ்சள்ல பத்துன்னு கலருக்கு பத்து புடவையை தூக்கியாந்துட்டேன். அடியேய் சிலுக்கு... இங்கண ஒருத்தன் கூப்பிட்டுக்கிட்டே கெடக்கேன். கையில என்னடீ காச எடுத்துட்டு போறவ... வட்டிக் காசு கட்டிட்டியா?" என்று அந்த சிறுமியிடம் விசாரித்தவனிடம் இவ்வளவு நேரம் நடந்த கதையை அவள் மகிழ்ச்சியுடன் சொல்லி விட்டாள்.
"எவங்காச எவமுலே தூக்கி தானம் குடுக்கறது?" என்று கேட்ட எகிறியவனுக்கு எதிரில் வந்து நின்று அவனை கடைக்குள் கையைப் பற்றி இழுத்து கதவடைத்த இனியா,
"என்னமோ சொன்னீங்களே? என்ன சொன்னீங்க?" என்றாள் நேர் பார்வையில் அவனைப் பார்த்து.
"என்னடீ கையெல்லாம் பிடிச்சு இழுத்து கதவைச் சாத்துற? அவ்வளவு திமிராகிடுச்சா....?" என்று கேட்டவனிடம் அருகில் வந்தவள்
"பேச்சை மாத்தக் கூடாது மிஸ்டர் மொக்கை! உங்க காசை தூக்கி நான் தான் குடுத்தேன், உங்க வட்டிக் கணக்கு அப்ப்ப்பா தலை சுத்துது...... இப்படி அநியாயமா அடுத்தவங்க கிட்ட இருந்து காசை கொள்ளையடிச்சா அது நம்மளை மட்டும் இல்ல, நாளைக்கு நம்ம குழந்தையை கூட பாதிக்கும். தயவுசெஞ்சு தொழிலை நியாயமா நடத்துங்க ராசு!" என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்க இசக்கி ராசு சிறு சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தான்.
"ஹலோ என்ன அப்பப்போ எங்கேயாவது ட்ரீமுக்கு போயிடுறீங்க?" என்று அவன் முகத்திற்கு முன்னே சொடுக்கிட்டவளிடம்,
"எனக்கு என்னத்த இவிங்க செஞ்சாய்ங்களோ அதத் தான நானும் இவிங்களுக்கு செய்ய முடியும்..... நம்ம புள்ளைய பாதிக்கும்....அது இதுன்னு நல்லாத்தேன் வசனம் பேசுற; என்னைய ஒரு வாட்டி மாமான்னு கூப்புடுறியா...... இனிமேபட்டு தொழிலை ரொம்ப கணக்கா பார்த்துக்கிடுதேன். இந்த ஸ்பீட் வட்டி, ஜெட் வட்டி, டீலக்ஸ் வட்டி, ராக்கெட் வட்டி எல்லாத்தையும் உம் மேல சத்தியமா வுட்டுப்புடுதேன், என்ன சொல்ற?" என்று கேட்டவனிடம் ஒரு பனை ஓலை விசிறியை கையில் எடுத்துக் கொண்டு பக்கத்தில் வந்தாள் இனியா.
"மாமன மாமான்னு கூப்பிடேன்டீ சிட்டு!" என்று ஏக்கத்துடன் கேட்டவனை விசிறியை திருப்பிப் பிடித்து அதன் கைப்பிடியால் அவன் தோளில், தலையில், மார்பில் அடித்துக் கொண்டு இருந்தாள் இனியா.
"த்த்த்சு.....இப்போ இது எதுக்கு?" என்று சலிப்புடன் கேட்ட ராசுவிடம்,
"என் காதலையும் வியாபாரம் ஆக்குறியாடா; நீ எனக்காக ஒண்ணு செஞ்சா நான் உனக்காக ஒண்ணு செய்யணுமா, அப்படி செய்றது பிஸினஸ்டா லூசு மாமா....... ஐ லவ் யுவர் மேன்லினெஸ்; ஐ லவ் யுவர் அரெகென்ஸ், அண்ட் ஐ லவ் யூ! இன்னிக்கு ஈவ்னிங் பங்ஷன்ல தான் சொல்லலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள என்னை சொல்ல வச்சுட்டல்ல.... போடா!" என்று சலித்துக் கொண்டவளை விரைந்து அணைத்துக் கொண்டு கண்கள் மூடிக் கொண்டு நின்றான் இசக்கிராசு.
"ராசு அப்பத்தா தேடுவாங்க.....வீட்டுக்கு போகலாமா?" என்று கேட்ட தன் மனைவியை மேலும் கீழும் பார்த்தவன்,
"ஏன்டீ என்னைய இவ்வளவு சீக்கிரம் மன்னிச்ச? இப்போ உங்கிட்ட இருந்து என்னன்னமோ வேணும்னு மனசு தவிக்குது. படிக்கணும்னு சொல்லிட்டு நீ என்னைய விட்டுட்டு போய் அங்கண ஒங்கொப்பனோட ஒக்காந்துகிடுவ, நான் ஒத்தை ஆளா இங்கண என்ன செய்யுறதாம்?" என்று அவன் உயரத்தை சற்று குறுக்கி தன் மனைவியின் கழுத்தில் தன் தலையை சாய்த்து கொண்டு குறை படித்தவனிடம் காதோரம் சாய்ந்து,
"ம்ம்ம்.... வைக்கப்படப்பு மேல படுத்துக்கிட்டு அடுத்த போகத்துக்கு என்ன விளைய வக்கலாம்னு யோசிச்சுட்டு இருங்க, அதுக்குள்ள வந்துடுவேன்! டைமாச்சு. வாங்க போகலாம்!" என்று அவன் அணைப்பில் இருந்து விலக நினைத்தவளின் எண்ணம் பலிக்கவில்லை.
"ம்ப்ச்! இப்போ வர்றீங்களா இல்லையா?" என்று தன் சத்தத்தை சிறிது கூட்டியவளிடம் சிரிப்புடன்,
"பார்றா... நம்ம சிட்டுக்குருவிக்கு சத்தமெல்லாம் பெரிசா வருது..... இப்ப உங்கள விட முடியாதுங்கேன். என்ன பண்றதா உத்தேசம்?" என்று கேட்ட தன் கணவனை ஒரு சிரிப்புடன் சுவர் ஓரத்திற்கு நகர்த்திப் போனாள் இனியா.
"அய்யே சுவத்து பக்கத்துல நகர்த்திட்டா நாங்க பயந்துடுவோமாக்கும். ஏட்டி கைய விடுறீ..... எங்கடீ கையை வைக்குற..... ஆத்தி!" என்று கத்தியவன் கைகள் தன் மனைவியின் இடையை இறுகப் பற்றியிருந்தது. தன்னவள் தேகத்தை இதுவரை அவன் தீண்டியதே இல்லை என்றெல்லாம் சொல்லி விட முடியாது, இரண்டு மூன்று முறை அவளை தன் தோளில் கிடத்தியிருக்கிறான். கழுத்துப் புறத்தை கைகளால் வலுக்கட்டாயமாக உரசியிருக்கிறான் தான்..... ஆனாலும் அவளது அனுமதியுடனான முதல் தீண்டல் சற்று நடுக்கத்தை வரவழைத்தது அவனுக்கு.
"இந்தாருடீ..... பேச்சு பேச்சா இருக்கட்டும், நாங்கல்லாம் முரட்டு சிங்கிளு; பக்கத்துல வந்தா உனக்குத்தேன் நல்லதில்ல பார்த்துக்க, யோவ் விவேக்கு மாமா உம் புள்ள இன்னிக்கு என்னைய உண்டு இல்லன்னு பண்றாய்யா.....உங்க ரெண்டு பேர்ட்டயும் பகுமானமா இவள உங்க புள்ளையாவே ஒப்படைக்கிறேன்னு வேற சொல்லிட்டு வந்தேன். நானும் எவ்வளவு நேரம்தேன் நல்லவ.....ம்ம்ம்ஹும்!" என்று திடீரென கிடைத்த இனியாவின் முத்தத்தில் சற்று திமிறியவன் சற்று நேரத்தில் அவளைத் திணறடித்து கொண்டு இருந்தான்.
அங்கு ஆரம்பித்த அவர்களது முத்தம் ஊரார் வாழ்த்துக்கள், விருந்து, இனியா விடைபெற்று ஊருக்கு கிளம்பியது, ராசுவுடன் ஊருக்கு வந்து சேர்ந்தது இந்த வேலைகளுக்கு நடுவிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடந்து கொண்டே இருக்கிறது.
ஆனந்த ஸாகரத்தில் ஜீவாவிற்காக ஒரு வரவேற்பு குழு தயாராக இருந்தது. இனியாவும், ராசுவும் கூட அங்கே இணைந்து கொண்டனர்.
"ஏட்டி என்ன நடுக்குது இங்க.... உங்க வீட்ல எல்லாம் எல்லாரும் இவ்வளவு அமைதியா இருக்கிறது தப்பாச்சே!" என்று இனியாவின் காதருகே ரகசியம் பேசிய ராசுவிடம்,
"எங்க ஜீவாண்ணா கவி அக்காவை யாருக்கும் சொல்லாம நிச்சயம் பண்ணிக்கிட்டாங்க...... அதுதான் எல்லாரும் கோபமா இருக்காங்க. நீங்களும் வாயை மூடிட்டு இருங்க!" என்று சொன்னவளிடம்
"மாமன் வாய நீ வேணும்னா மூடுறியாடீ சிட்டுக்குருவி?" என்று கேட்டு கண் சிமிட்டினான் ராசு. இனியா கோபத்துடன் முறைக்க அவன் அடங்கி ஜெயந்தனிடம் சென்றான்.
"மச்சான் அப்படி என்ன பண்ணிப்புட்டாப்டி? அத்தை புள்ளைய கூட்டிட்டு போய் நிச்சயம் பண்ணியிருக்காவ, இது பெரிய குத்தமா? இனியா புள்ளைய மாதிரி அந்த புள்ள அழுவக் கூட இல்லையே.... அது பாட்டுக்குதேன் நிக்குது!" என்று கேட்டவனை அனைவரும் கொலைவெறியுடன் முறைத்தனர்.
"நீங்க உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பேச வேண்டாம், இந்த வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை நீங்க; அந்த மரியாதையை காப்பாத்திக்கோங்க, டேய் ஜீவா என்னடா இது?.... உங்கிட்ட இப்படி ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கலடா!" என்று சொன்ன ஜெயந்தனிடம்,
"ராசு தேங்க்ஸ்டா மாப்பிள்ளை!" என்றவன் நிதானமாக ஜெயந்தன் முன் வந்து நின்றான்.
"ஏன் எங்கிட்ட நீ இதை எதிர்பார்க்கல தாத்தா.... எங்கப்பா எங்கம்மாவை கடத்திட்டு வந்து தானே கல்யாணம் பண்ணினாரு..... யாருக்குமே தெரியாம எஸ்டேட்டுக்கு எஸ்கேப் ஆனப்ப கூட கடத்திட்டு தானே போனாரு? அவரோட பையன் எப்படி இருப்பேன் சொல்லு. இதெல்லாம் கேப்ஸியோட பெர்மிஷன் இல்லாம ராசு மாதிரி தப்பு செஞ்சிருந்தேன்னா நீங்க என்னை திட்டுறதுல நியாயம் இருக்கு! முதல்ல மாலை போடணுமா? ரிங் போடணுமான்னு கவி தான் கேட்டா. ஒரு அப்ஜெக்ஷன் கூட சொல்லல, இதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய மீட்டீங்?" என்று கேட்ட ஜீவானந்தனை பார்த்து ராசு பொருமிக் கொண்டு இருந்தான்.
"என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு தான்டா, அப்புறம் அண்ணன்னு நானெல்லாம் கவிம்மாவுக்கு எதுக்கு இருக்கேன்?" என்று குதித்த பார்கவிடம்,
"டேய் மச்சி இது ரொம்ப தப்பு. என்னைய அநாவசியமா பகைச்சுக்காத. அப்புறம் ஃபீல் பண்ணுவ!" என்று சொன்னான் ஜீவானந்தன்.
"என்னடா பண்ணுவ.... ஓவரா மிரட்டுற; உன்னால முடிஞ்சத செய்டா!" என்று சவால் விட்டான் பார்கவ்.
அவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, "தாத்தா நானாவது நிச்சயம் மட்டும் தான் செஞ்சேன். இந்தப் பையன் எப்படா நேரம் கிடைக்கும்னு பார்த்துட்டு இருக்கான், அந்த பொண்ணு வீட்லயும் பிரச்சனை போயிட்டு இருக்கு, விட்டா ரிஜிஸ்டர் மேரேஜ் முடிச்சிட்டு தான் அந்தப் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வருவான். அன்னிக்கே போய் நாங்க ரெண்டு பேரும்....... ம்ம்ம்ம் என்னை விடுறா, தாத்தா என்னைக் காப்பாத்து தாத்தா... நான் சொல்றதை கேட்டுட்டு போ; ஆஆஆ அம்மா டாடி ஆமா பண்ணையார் எங்கடா?" என்று தன் வாயைப் பொத்தி, தன்னை கீழே உருட்டி தன் நெஞ்சின் மேல் ஏறி அமர்ந்து இருந்த பார்கவிடம் கேட்டான் ஜீவானந்தன்.
"உன்னைய மாதிரி ஒரு தலைவலியை தந்தது போதாதுன்னு இப்போ மாமாவுக்கு நிஜமாவே தலைவலி வேற; ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காராம்" என்று சொன்ன பார்கவிடம் சிரிப்புடன்,
"ஏன்டா அரைவேக்காடு..... அவர் கூட எங்கம்மாவும் இருக்காங்கடா; அவர் எப்படிடா ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பாரு.... கொஞ்சம் வயித்துல இருந்து எந்திரிக்கிறியா.... வலிக்குது!" என்று சொன்னவனை
"அவ்வளவு சீக்கிரம் உன்னைய விடுறதுக்கா மேல ஏறி உட்கார்ந்தேன். பொண்ணு வீட்டுக் காரங்க எல்லாம் சேர்ந்து இப்போ மாப்பிள்ளைக்கு மரியாதை செய்யப் போறோம். கீது, பெரியம்மா, பெரியப்பா, அப்பா எல்லாரும் வாங்க!" என்று கத்திக் கொண்டு இருந்தவனை ஷைலுவும், இனியாவும், கவியும் சேர்ந்து உருட்டி கீழே தள்ளி விட்டனர்.
"டேய் இங்க ஒருத்தன் பேசிக்கிட்டே இருக்கேன்..... காதுல வாங்காம நீங்க எல்லாரும் விளையாண்டுட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்ட ஜெயந்தனிடம்,
"விளையாடறது நல்லா இருக்கு, எங்களுக்கு இது தான் பிடிச்சிருக்குன்னு அர்த்தம் தாத்தா!" என்று அனைவரையும் கிளப்பி ஜெய் நந்தன் வெட்ட வெளியில் அமைத்திருந்த ஷவருக்கு கூட்டி சென்று விட்டாள் கவிப்ரியா. எங்கே இன்னும் கொஞ்ச நேரம் நின்று கொண்டு இருந்தால் தன்னையும் ஏதாவது திட்டி விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு. அனைவரும் சும்மா இருந்தாலும் அவன் சும்மா இருக்க விட மாட்டான். எனவே அர்ஜுன், பலராம், ஜெயந்தன், பத்மாவை தவிர அனைவரையும் கிளப்பி கூட்டி சென்று விட்டாள்.
"ஒரு வார்த்தை எல்லார் கிட்டயும் சொல்லிட்டு செஞ்சுருக்கலாம்லடா?" என்று கேட்ட அர்ஜுனிடம்,
"சத்தியமா சொல்றேன் மாமா! அவ இவ்வளவு நாள் பத்திரமா வச்சிருந்த காதலை அவ எங்கிட்ட குடுத்தப்போ நீங்க யாருமே எனக்கு நியாபகம் வரல, அவளோட அன்கண்டிஷனல் லவ்க்கு மரியாதை குடுக்கணும்னு தோணுச்சு, ஸோ என்னையே குடுக்கறது தான் சரியா இருக்கும்ன்னு நினைச்சேன். தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க!" என்று கேட்டவனிடம் குறுஞ்சிரிப்புடன்,
"போடா தலைவலின்னு பம்மிட்டு ரூம்ல உட்கார்ந்து இருக்கான் பாரு உங்கப்பன்..... அவனைப் போய் கூட்டிட்டு வா, அவன் கிட்ட பேசிட்டு முஹூர்த்ததுக்கு நாள் குறிப்போம்!" என்று ஜெயந்தன் சொல்ல ஜீவா "யெஸ்.... எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சுடீ!" என்று தன் பாட்டியை கட்டிப் பிடித்து கன்னம் கிள்ளி முத்தமிட்டு விட்டு மேலே சென்றான்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro