💟 ஜீவாமிர்தம் 23
அன்று காலையில் ஷைலஜா பார்கவிற்கு அவசர அழைப்பு விடுத்திருந்தாள்.
"எதுக்கு இந்நேரம் கூப்பிடுறா...... என்ன பிரச்சனைன்னு தெரியலயே?" என்று யோசித்து கொண்டே போனை அட்டெண்ட் செய்தவனிடம் ஹலோ கூட சொல்லாமல் ஆரம்பித்து விட்டாள் ஷைலஜா.
"பாகி அத்தான்...... நாலு நாள் ஹாலிடேஸ் இருந்ததுன்னு நானும், லட்டுவும் ஷாப்பிங் வந்தோம். அந்த ராசு இல்ல..... அவன் மலைக்கு வந்திருக்கான்; நம்ம லட்டுவை அவனோட பைக்கில ஏறச் சொல்லி கூட்டிட்டு போய்ட்டான். துரையண்ணாவும், ஜீவாவும் சென்னையில இருக்காங்க. எனக்கு நம்ம கார்ல தனியா ட்ரைவ் பண்ணி வீட்டுக்கு போறதுக்கு பயமாயிருக்கு. லட்டு இல்லாம ஒரே அழுகை அழுகையா வேற வருது. அவளை விட்டுட்டு வீட்டுக்கு போனா அப்பா ரொம்ப திட்டிடுவாரு. வர்ற வழியில என் செருப்பை வேற மிஸ் பண்ணிட்டேன். இப்போ என்ன பண்றது அத்தான்?" என்று கேட்டவளிடம் கோபத்துடன்,
"சென்னையில இருக்கிற எனக்கு போன் பண்ணி ஏன்டீ சும்மா புலம்பிக்கிட்டு இருக்க...... மாமா, விவேக் மாமா யாரையாவது கூப்பிட வேண்டியது தானே ரூபிம்மா..... அந்த ராசுவுக்கு என்ன இவ்வளவு திமிரு? யாருக்குடீ செருப்ப தானம் பண்ணின? மலையில இருந்தாலும் என் உசுரைத் தான் வாங்குற....." என்று எண்ணையில் போட்ட அப்பளம் போல் பொரிந்து கொண்டிருந்தவனிடம்,
"சும்மா சும்மா என்னையே திட்டாத பாகி அத்தான்; ஏதாவது ப்ராப்ளம் வந்தா நா உன் கிட்ட தானே சொல்லுவேன்; இவ்வளவு நாள் ப்ராப்ளத்துக்கு சொல்யூஷன் குடுப்ப. இப்போ என்னடான்னா கோபப்படுற! இனிமே உன் கிட்ட எதுக்கும் வந்து நிக்க மாட்டேன். போ!" என்று முறுக்கிக் கொண்டாள் ஷைலஜா.
"ஆமாடி! உன் செருப்பு, ஹேர்பின், ஹேட்ச்க்ளிப் இதை எல்லாம் தொலைச்சிடு. அப்புறம் அதெல்லாம் தேடிக் குடு பாகி அத்தான்னு முகத்தை பாவமா வச்சுட்டு வந்து நில்லு. எது வருதோ இல்லையோ அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் கோபம் மட்டும் ஈஸியா வந்துடுது.
இனியா நம்பருக்கு கால் பண்ணி அவன் கிட்ட பேசிட்டு உன்னையும், அவளையும் நம்ம வீட்ல விடச் சொல்றேன்! அவன் கிட்டயே உனக்கு ஸ்லிப்பர்ஸும் வாங்கித் தர சொல்றேன்! அப்புறம் அவனுக்கு அதுக்கு பணம் தந்துடலாம். மலையில சூடு இருக்காதுன்னு எங்கேயாவது வெறும் காலோட நடந்து தொலைஞ்சுடாதம்மா புண்ணியவதி, அப்புறம் புள்ள போன் பண்ணியும் ஏன்டா ஒண்ணத்தையும் கிழிக்கலன்னு மாமாவும், ஜீவாவும் என்னைய ரவுண்டு கட்டிடுவாங்க! எங்கடீ இருக்க?" என்று விசாரித்தவனிடம்,
"பஜார் ரோட்ல ----- ஷாப்ல இருக்கேன் அத்தான்! புது ஸ்லிப்பர் கூட வாங்கிட்டேன். ஆனா பே பண்றதுக்கு தான் யாராவது வரணும்! அப்பா, விவேக் சித்தப்பாவுக்கு வேணும்னா கால் பண்ணிடவா அத்தான்.....?" என்று கேட்டவளிடம்,
"ஏய் இருடீ...... மாமுவையெல்லாம் தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணாத. நமக்கு கிடைச்சிருக்கிற ரிசோர்ஸை மேக்ஸிமம் யூட்டிலைஸ் பண்ணிக்கலாம். இன்னொரு பத்து நிமிஷம் வேற ஏதாவது பராக்கு பாத்துட்டு இரு! நான் அந்த ரவுடி மொக்கை ராசுட்ட பேசிட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தான்.
"ஏட்டி சிட்டு..... வந்து எம்புட்டு நேரமாச்சு.....மாமன் முகத்தை கூட பாக்காம அட மழ பேயிராப்புல விடாம என்னைய ஏசிகிட்டே இருக்கீகளே...... சோளக்கருத மேஞ்சுகிட்டே என்னையும் திட்டுறதுதானே..... ஆறிப்புடும்லா" என்று கேட்டு அவள் தோளில் கைபோட்டு தனது பைக்கில் சாய்த்து நிறுத்திக் கொண்டவனிடம் எரிச்சல் குரலில்,
"சோளத்தை மேயணுமா; நான் என்ன மாடா? ஏன் இப்படி பண்றீங்க..... உங்கள யாரு இப்போ மலைக்கு வரச் சொன்னாங்க? ரூபியை வேற பஜார்ல தனியா விட்டுட்டு என்னை இழுத்துட்டு வந்துட்டீங்க..... எப்போ பார்த்தாலும் ஏன் இதே வேலைய செய்றீங்க? வீட்ல எல்லாரும் உங்க மேல ரொம்ப கோபமா இருக்காங்க. பெரியப்பாவுக்கு, அப்பா, அண்ணாவுக்கு எல்லாம் விஷயம் தெரியறதுக்குள்ள போயிடுங்க ப்ளீஸ்.....!" என்று சொல்லி கைகூப்பியவளை சிறு கடுப்புடன் பார்த்து கொண்டு நின்றான் ராசு.
"ஏ....ஏன் இப்படி பார்க்குறீங்க?" என்று தயங்கியபடி இனியா கேட்க,
"நமக்கு வாக்கப்பட்டது ஏன் இப்படி மழுக்கட்டையா இருக்குன்னு யோசன பண்ணிகிட்டு கிடக்குதேன். ஏதாவது சலம்பல்னா நாமதேன் முன்னாடி போய் நிக்கணுமுண்டி! மொக்கை பொஞ்ஜாதியா இருந்துகிட்டு சண்டைக்கு பயந்தா ஆகுமா..... எம் பொஞ்ஜாதிய நா வெளியே கூட்டிட்டு போறதுக்கு எவன் கிட்ட போய் உத்தரவு கேக்கணும்...... எவனா இருந்தாலும் வரச் சொல்லு. ஒரு கை பார்த்துடுவோம்!" என்று சொல்லி சட்டையை முழங்கையில் சற்று மேலேற்றி மடித்து விட்டவனை பார்த்து தலையில் கை வைத்து கொண்டு நின்றாள் இனியா.
"ஏட்டி..... நீ இவ்வளவு நாளா மாமன காணாம தவிச்சியா புள்ள? வீட்ல எல்லாருக்கும் உங்க மேல கோபம்னு சொன்னவுக நா உங்க மேல கோபமா இருக்கேன் மாமான்னு சொல்ல காணுமே.....!" என்று புன்னகையுடன் கேட்க அவனை "நீ பைத்தியமா?" எனும் பாவனையுடன் பார்த்த இனியா,
"இவ்வளவு நேரமா உங்களை திட்டிட்டு இருந்தேனே..... அது கொஞ்சம் கூட உரைக்காம, சூடு சொரணையே இல்லாம மாமாவை காணும்னு தேடினியான்னு கேக்கறீங்க..... காணும்னு தேடுறதுக்கு நீங்க என்ன தொலைஞ்சா போயிட்டீங்க; இதுல வேற எல்லாரும் ராசு எப்போ வருவாரு......வருவாருன்னு கேட்டு துளைக்கிறாங்க...... நீங்க ரொம்ப பாவமாம்; சீக்கிரம் உங்க ரூட்டை க்ளியர் பண்ணி விடணுமாம்!" என்று சொல்லி அவன் கைகளை உதறி விட்டு அவனெதிரே நின்று முறைத்தவளிடம்,
"நம்பள யாருன்னே தெரியாதவுகளுக்கு கூட மொக்கை மேல இரக்கம் வருது. கட்டிக்கிட்ட சிட்டுக்குருவிக்கு அதெல்லாம் காணும்..... என்னத்த பண்றது...... இன்னும் நாலு நாளைக்குதேன் காலேஜ் கிடையாதுல்ல புள்ள; மாமன் கூட அம்பைக்கு வர்றியா? கூட்டிட்டு போயிட்டு கொண்டாந்து வுட்டுர்றேன்!" என்று அவளிடம் கேட்டான் ராசு.
"ம்ஹூம்! உங்க கூடல்லாம் எங்கேயும் வர மாட்டேன். இப்போ ஷைலு வெயிட் பண்ணிட்டு இருக்கிற இடத்தில கொண்டு போய் என்னை விட முடியுமா? முடியாதா?" என்று சற்று பொறுமை இழந்த குரலில் இனியா ராசுவிடம் கேட்க ராசு கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல்,
"கூட வந்தீகன்னா கூட்டிட்டு போவேன். இல்லையின்னா தூக்கிட்டு போவேன். அப்புறம் அதுக்கு ஒருக்கா என்னைய ஏசப்புடாது. சொல்லிப்புட்டேன்!" என்றவனிடம் ஓர் பெருமூச்சுடன்,
"யூ ஆர் அப்சளியூட்லி இம்பாஸிபிள்! யாருக்குமே அடங்க மாட்டீங்களா?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன்,
"அப்படியே வளர்ந்துட்டமாட்டம் இருக்கு. அதுக்கு என்ன செய்றதுலே..... அப்பத்தாதேன் உன்னைய பார்க்கணும்னு என்ட்ட அனத்திக்கிட்டே கிடந்துச்சு. அதேன் வந்தேன். போலாம் மாமான்னு ஒரு வார்த்தை சொன்னீகன்னா பொறவு சிட்டா பறந்துடலாம்!" என்று கண்சிமிட்டிய ராசுவிடம்,
"முதல்ல ஷைலு கிட்ட என்னை கூட்டிட்டு போங்க! அவளும், நானும் எஸ்டேட்டுக்கு போறோம். அதுக்கப்புறம் நீங்க வீட்டுக்கு வந்து பெரியப்பா, அப்பா கிட்ட பெர்மிஷன் கேளுங்க. ரெண்டு பேரும் ஓகே சொன்னாங்கன்னா நான் உங்க வீட்டுக்கு வர்றேன்!" என்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
"அம்பையில இருக்குறது எங்க வூடு கிடையாது. நம்ம வூடு ன்னு சொல்லணும், உங்க பெரியப்புட்டல்லாம் அன்னிக்கே பேசியாச்சு. பொஞ்ஜாதி பக்கத்தில இல்லாம ராவுல தூக்கம் வரமாட்டேங்குது மாமோய் ன்னு கேட்டதுக்கு உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போறது உன் சமர்த்து, ராவேளையில என் தூக்கத்துக்கு கரைச்சல் குடுக்காம போனை வைலே கூவண்டு அன்னிக்கே ஏசிபுட்டாக. அதனால இப்போ என் சிட்டுக்குருவி தேன் அம்ம கூட வாரறதுக்கு கொஞ்சம் மனசு வக்கணும்!" என்றான் ராசு பொறுமையை இழுத்து பிடித்த குரலில்.
"நான் உங்க கூட உங்க...... அங்க வீட்டுக்கு வந்தா என்னை வந்து..... என் கிட்ட கரெக்டா பிஹேவ் பண்ணுவீங்கல்ல......!" என்று பயந்த குரலில் கேட்டாள் இனியா.
"ம்ம்ம்..... கரெக்டா பிஹேவ் பண்றதுன்னா நிதம் உனக்கு சோறூட்டி வுட்டுர்றேன், கடைக்கு, போகையில டாட்டா காட்டிட்டு போறேன்! நீ உங்கொப்பனை காணும், உன் ஸ்நேகிதிய காணும்னு அழுதுட்டு இருந்தன்னா சப்புற நிப்பிள் வாங்கியாந்து உன் வாயில கூட வச்சுவுடுறேன். இவ்வளவு கவனிச்சாக்கா போதுமா..... இல்ல வேற ஏதாச்சும் செய்யணுமா? என்னடீ நினைச்ச என்னைய...... உங்கழுத்தில இழுத்து பிடிச்சு தாலி கட்டினப்போ மயங்கித் தான கிடந்த..... எனக்கு உன் உடம்பு தான் வேணும்னா அப்போ என்னால உன்னை அடைஞ்சிருக்க முடியாதா.....? இல்ல உங்க பெரியப்பு நம்ம வீட்ல வந்து பேசின அன்னிக்கு என் பொஞ்ஜாதிய உங்க கூட எல்லாம் அனுப்பி வைக்க முடியாதுன்னு சொல்லியிருக்க முடியாதா..... படிப்புக்கு மரியாதை குடுக்கிறவன்டீ நானு; ஊடயில நாலு வருஷம் விட்டுப் போன என் படிப்பை கொஞ்சம் வசதி வந்ததுக்கப்புறம் இப்பத்தேன் முடிக்கப் போறேன்! என் அவசர புத்தியால உம் படிப்புக்கு ஏதும் தடங்கல் வந்துடக்கூடாதுன்னு நினைச்சுதேன் உங்கொப்பன் வீட்லயே உன்னை விட்டு வச்சுட்டு புலம்பிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு. இங்க வர்றதுக்கு முன்னாடி எங்க நீ தாலிய கழட்டி வீசியிருப்பியோன்னு நெனச்சு தவியா தவிச்சுக்கிட்டு கிடந்தேன்டீ, நா குடுத்த சங்கிலியை உன் கழுத்துல பார்த்ததுக்கப்புறம் தேன் உசுரே வந்துச்சு. எங்கப்பத்தாவுக்கு பொறவு நல்ல ஒரு பொண்ணு வீட்டுக்கு வந்தா போதும்ன்னு நினைச்சு தான் உங்கழுத்தில தாலி கட்டினேன். ஆனா நீ விரும்பாம உன் கூட சேர்ற அளவுக்கு நான் கெட்டவன் இல்ல இனியா! உன்னை கட்டிக்கிற வரைக்கும் என் மனசுல ஒண்ணுமேயில்ல. ஆனா இப்ப நீ தான் மனசு பூராவும் உட்கார்ந்துட்டு ஆட்டிப் படைக்கிற! என்னிக்கு உன் முழு சம்மதம் கிடைக்குதோ அதுவரைக்கும் நமக்குள்ள கொடுக்கல், வாங்கல் ஒண்ணும் கிடையாது. எவ பின்னாலயும் காதல், கருமாந்திரம்னு சுத்திக்கிட்டு கிடக்க கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நீ கல்யாணம் பண்ணின காலம் தொட்டு பொஞ்சாதிய நினைச்சு ஏங்கிகிட்டு கிடப்பலே மொக்கைன்னு எவனுமே சொல்லல. எவமுலே அது பொஞ்ஜாதி கிட்ட நம்ம ஆசையெல்லாம் சொல்லிகிட்டு இருக்கும் போது நடுவால கூப்பிட்டு உசுரை வாங்குறது?" என்று திட்டியவனிடம் சிரிப்பை உதிர்த்து விட்டு போனை எடுத்தாள் இனியா.
"பார்கவ் அத்தான்.....!" என்று அவள் அழைத்த அடுத்த நொடியில் போனை தன் மனைவியிடம் இருந்து பிடுங்கி தன் காதில் வைத்து, "என்னலே வேணும் உனக்கு?" என்று கேட்ட ராசுவிடம் பார்கவ் சில நிமிடங்கள் எகிறி விட்டு ஷைலஜாவின் பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கேட்டான்.
"ஆத்தி..... நம்ம பொரிஉருண்டை மச்சினிச்சி செருப்பை தொலைச்சிட்டாகளா.....
அவுக தங்கசெருப்புல்லலே கேப்பாக...... அதுக்கு நா எங்க போவேன்?" என்று கேட்டவனிடம் சலிப்புடன்,
"ம்ம்ம்...... எங்கேயாவது மொக்கை போட போவ, டேய் வெறுப்பேத்தாதடா. ஊர்ல இருந்துட்டு ஒரு பிரச்சனை வந்தவுடனே பாகி அத்தான்னு கூப்பிட்டு பேசுறாடா! ஜீவாவும் இங்க இருக்கான். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுடா!" என்று கேட்டவனிடத்தில்
"எலேய் மாக்கான்.... என்ன வாடா, போடான்னு வார்த்தை தடிக்குதுவே....
மருவாதையா என்னைய அண்ணன்னு கூப்பிட்டு பேசிப் பழகு. சொல்லிப்புட்டேன்! ஏட்டி சிட்டு உன் ஸ்நேகிதி எங்கண நிக்காகன்னு உங்க அத்தான் கிட்ட கேளு. கூட்டிக்கிட்டு விரசா வீடு போய் சேரலாம்!" என்று சொல்லி விட்டு தன் புல்லட்டை கிளப்பி இனியாவை பின்னால் அமர்த்தி கொண்டு கிளம்பினான் ராசு.
கடைக்குள் இனியாவை பார்த்ததும் ஷைலஜா சற்று மீண்டு அமைதி பெற்றாள்.
"ஸ்லிப்பரை காணும்னு அத்தான் கிட்ட சொன்னியாம்...... எங்கடீ விட்ட?" என்று கேட்ட தன் தோழியிடம் மெல்லிய சிரிப்புடன் கன்னம் வருடி,
"நம்ம கார்ல இருந்து இறங்கி வரும் போது ஒரு செருப்பு அவசரத்துல கழண்டுடுச்சு லட்டு, அதை ஒரு பொண்ணு எடுத்து என் கிட்ட நீட்டினா. ஆசையா குடுக்க மனசே வராம அரைமனசோட நீட்டினாளா...... அதனால நான் இன்னொன்னை கழட்டி அவ கிட்ட வேகமா நீட்டிட்டேன்டீ...... நீயும் இல்ல, இந்த மாச பாக்கெட் மணியும் காலி! அதான் என்ன பண்றதுன்னு தெரியாம அத்தானுக்கு கூப்பிட்டேன்! ஹாப்பியா இருந்த விஷயம் என்னன்னா அந்த பொண்ணுக்கு ஸ்லிப்பர்
பர்ஃபெக்டா செட் ஆகிடுச்சு. ஆமா...... உங்க புருஷர் நம்ம கார்ல போறதுக்கு ஓகே சொல்லிட்டாரா?" என்று கேட்டு புன்னகையுடன் நின்றிருந்த ஷைலஜாவிடம்,
"சீக்கிரமா ட்ரைவிங் பழகு ரூபிம்மா! பாதியில உன்னை விட்டுட்டு போயிட்டு எனக்கு இன்னிக்கு ரொம்ப கஷ்டமா போச்சு!" என்று பேசிக் கொண்டே அவளது புது காலணிகளை சரிபார்த்து பணத்தை செலுத்தி விட்டு வாங்கி வந்து அவளிடம் தந்து விட்டு இருவரும் காரில் ஆனந்த ஸாகரத்துக்கு வந்தனர்.
ராசு சிறிது நேரம் இடைவெளி விட்டு வந்து
அனைவரிடமும் நலம் விசாரித்து விட்டு இனியாவிற்கு விடுமுறை இருப்பதால் அம்பைக்கு அழைத்து செல்ல நினைக்கிறேன் என்று கூறினான்.
மாப்பிள்ளை வந்து இருக்கிறார் என்று உணவு, உபசரணை எல்லாம் செய்து விட்டு நிர்மலா இனியாவிடம், "இனியா மாப்பிள்ளை கூட ஊருக்கு போறியாடா..... பெரியப்பா, அப்பால்லாம் என்ன சொல்வாங்கன்னு யோசிக்காத. உனக்கு போகலாம்னு தோணுச்சுன்னா நீ கிளம்பலாம்!" என்று சொன்னதும் ஜெய் நந்தனும், ஷைலஜாவும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
"லட்டு...... போக மாட்டேன்னு சொல்லு. என்னை விட்டுட்டு போகாதடீ; ப்ளீஸ்!" என்று இனியாவை கெஞ்சிக் கொண்டிருந்த ஷைலுவிடம், "ஷைலஜா வாயை மூடிட்டு இல்லைன்னா அடி வாங்குவ!" என்றார் நிர்மலா அதட்டல் குரலில்.
"நம்ம லட்டுவுக்கு என்னை விட மிஸ்டர் இசக்கிராசு தான் முக்கியம்னா அவர் கூடவே போக சொல்லுங்க. ஐ டோண்ட் மைண்ட்!" என்று சொல்லி கழுத்தை நொடித்தவளிடம்,
"மெல்ல.....மெல்ல! இப்படியா வார்த்தைய மென்டு துப்புறது....எம்புட்டு கோபம் இருந்தாலும் மரியாதை குறையாம வருது. அயித்தை அவுக வளர்ப்பு அப்படி போலிருக்கு! ஏட்டி சிட்டு பொறப்படலாமா?" என்று கேட்ட தன் கணவனிடம்,
"நா.....நாலு நாள்; நான் ஒண்ணும் பேக் பண்ணல!" என்று தயங்கிய படி சொன்னவளிடம் சிரிப்புடன்,
"உனக்கு என்ன வேணுமுண்டு மாமன் கிட்ட சொல்லு. அம்புட்டையும் கடை பரப்புறேன். நீ எடுத்தது போக சொச்சத்தை கடைக்கு அனுப்புவோம். என்ன விவேக் மாமோய் இந்த மாதிரி உம் பொண்ணு சொல்லுவான்னு நீ எதிர்பார்க்கல இல்ல..... அவ இப்போ ராசு பொஞ்ஜாதியும் தாமுல.... அதேன் வாயை விட்டு சத்தம் வெளிய வந்துடுச்சு. பெரிய மாமோய், அயித்தை, போயிட்டு வர்றோம்! உங்க பொண்ணை நாலு நாள் கழிச்சி உங்க பொண்ணாவே திருப்பி கூட்டிக்கிட்டு வாரேன். வரவா?" என்று கையசைத்து அனைவரிடமும் விடைபெற்று மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டு தன் புல்லட்டை புயல் வேகத்தில் கிளப்பினான் இசக்கிராசு.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro