Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 21

அன்றிரவு ஒன்றரை மணி இருக்கும். அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஒருவனுக்கு மட்டும் உறக்கம் வராமல் அவன் தன் மனைவியை அழைக்க கால் டைவர்ட் ஆகி குளிருக்கு இதமாக மனைவியை அணைத்துக் கொண்டு படுத்திருந்த ஜெய் நந்தனை அது தொந்தரவு படுத்தியது.

தூக்கக் கலக்கத்தில் கண்களை திறந்தவர், "நிலாம்மா மொபைல் ரிங் ஆகுது. அத எடேன்!" என்று மனைவியை எழுப்பி அவரிடம் இரண்டு திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டு அதே ஆத்திரத்தில்,

"எவன்டா நடுராத்தில இம்சை பண்றது? நீ எவனா இருந்தாலும், சொல்லப் போற விஷயம் எதுவா இருந்தாலும் காலையில பேசு. இப்போ போனை வை!" என்று சொன்னவரிடம்,

"என்ன மாமா நீங்கதானா..... இப்படி கோட்டிக்கார வேலையெல்லாம் நீங்கதேன் பாப்பீகன்னு தெரியும். உனக்கு நான் என்னய்யா பாவம் செஞ்சேன்?...... எம் பொஞ்ஜாதிய உன் கையோட கூட்டிப் போனது காணாதுன்னு இப்ப பேசக் கூட உட மாட்டியா நீ? கால் டைவர்ட் போட்டு வச்சுட்டா இந்த மஞ்ச மாக்கான் அப்படியே ஓடுறிவேன்னு நினைச்சீகளோ... இனியா புள்ள கிட்ட என்னன்ன பேச
நினைச்சேனோ அது அம்புட்டையும் உம்ம கிட்ட பேசிட்டு தேன் கடைய சாத்துவேனாக்கும்...... மொதல்ல இந்த ஐடியா யாரோடது; அந்த சுண்டக்கா தேன் மாமனோட பேச மாட்டேன் பெரியப்புன்னு உங்ககிட்ட வந்து அழுதாகளாக்கும்?" என்று கேட்ட ராசுவிடம்,

"மாப்பிள்ளை நீங்க நிதானத்துல இல்ல போலிருக்கு! யார் இந்த வேலையை பார்த்து வச்சதுன்னு நிஜமா எனக்கு தெரியல. இப்ப போய் படுங்க. காலையில இனியாட்ட பேசிட்டு நான் அவளை உங்க கிட்ட பேசச் சொல்றேன்!" என்றார் ஜெய் நந்தன் பணிவாக.

"இங்க பாருவே கூத்த..... மொக்கை நிதானத்துல இல்லன்னு நீங்க கண்டீகளா.... உங்க பொண்ணுக்கு பிடிக்காதுன்னு சொன்னாகனுட்டு நா இனிமே புகையையும், தண்ணியையும் விட்ருறம்னு எங்கொலசாமி மேல சத்தியம் பண்ணியிருக்கேன். தெரியும்ல; இனியா புள்ள இது ஒண்ணை தேன் வாயைத் திறந்து எங்கிட்ட கேட்டுச்சு. பொஞ்ஜாதி ஆசைய நிறைவேத்தாங்காட்டி எதுக்கு புருஷன்னு நா இருக்கேன்னு வேண்டாம்.... எப்ப கல்யாண வேலையெல்லாம் ஆரம்பிக்க போறீக? சத்திரம் பிடிக்கணும். சனங்கள திரட்டணும். எம்புட்டு வேல கிடக்கு? ஒவ்வொன்னா பாக்க ஆரம்பிச்சாதேன் சூளுவா இருக்கும் மாமோய்..... ஆனா எனக்கு உங்க மேல ரொம்ப கோபம் தெரியுமா..... ஒரு வாரம் கழிச்சாவது எம் பொஞ்ஜாதிய கொண்டு வந்து உடணும்னு சொல்லியிருக்கலாமுல்ல... நம்ம கட கல்லாவுல அவுகள உட்கார வைக்கல. புல்லட்டில ஏத்தி வெளிய தெருவுல நாலு இடத்துக்கு கூட்டிட்டு போகல. ஒரு முழம் பூ கூட வாங்கித் தரல. இன்னும் ஒருக்கா கூட மாமான்னு கூப்பிட வைக்க முடியல. எம் பொழப்பு இப்படி போயிகிட்டு இருந்தா என்ன செய்ய; ராத்திரி ஆனா தூக்கம் வர மாட்டேங்குது மாமா; எங்கூட்டு கிழவி வேற நீ தேன் தப்பு செஞ்சேன்னு சும்மா என்னைய ஏசிகிட்டே இருக்கு. யோவ் நான் ஒருத்தன் இங்க தொண்டத்தண்ணி வத்த கத்திகிட்டு கிடக்கேன். என்னய்யா நீரு பாட்டுக்கு அங்கண கொட்டாவி விட்டுக்கிட்டு கிடக்கீரு; என்னைய பார்த்தா உங்க எல்லாருக்கும் எளக்குநாட்டமா தெரியுதா?" என்று கொதித்தவனிடம்,

"இந்த அறிவு கட்டாய தாலி கட்டுறதுக்கு முன்னாடி உங்களுக்கு இருந்திருக்கணும். எங்கிட்ட உங்க ஏக்கத்தை எல்லாம் சொன்னாலும் என்னால எதுவும் செய்ய முடியாது. நீங்க தான் வார்த்தைக்கு வார்த்தை என் பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா என் பொண்ணு உங்கள புருஷன்னு இல்ல ஒரு மனுஷனா கூட மதிக்க மாட்டேங்கிறா. நீங்க சொல்ற மாதிரி லட்டுவை எம் புருஷன் கூட அவர் வீட்டுக்கு போறேன் பெரியப்பான்னு சொல்ல வச்சிடுங்க. அடுத்த நிமிஷம் எம் பொண்ணை நிறைவா உங்க கூட அனுப்பி விடுறேன். நான் உறவுகளோட அருமை தெரிஞ்சவன். அதனால தான் பலவந்தமா எங்க வீட்டு உறவா நீங்க வந்திருந்தாலும் உங்களை ஏத்துக்க ஒத்துக்கிட்டேன். ஆனா எங்க இனியாவை அழ வச்சதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகணும். இனியாவோட கோபம் தணிஞ்சதுக்கு அப்புறம் நீங்க நம்ம வீட்டுக்கு வரணும். நாங்க உங்க வீட்டுக்கு வரணும். அதனால தான் அன்னிக்கு உங்க வீட்ல விருந்து சாப்பிட்டு ஆனந்தையும் அமைதிப்படுத்தி கூட்டிட்டு வந்தேன். கோபப்படாம பொறுமையா உட்கார்ந்து யோசிச்சு பாருங்க. எவ்வளவு பெரிய தப்பை அசால்டா செஞ்சுருக்கீங்கன்னு தெரியும். இப்படி அர்த்தராத்திரியில லட்டுவுக்கு போன் பண்ணினீங்கன்னா அவ டென்ஷன் ஆகிடுவா. அதனால அவ கிட்ட பேசணும்ன்னா கொஞ்சம் சீக்கிரமா பேசுங்க. நான் காலையில அவகிட்ட பேசி மொபைல் பிரச்சனையை சரி செய்றேன். நீங்க செஞ்ச தப்பை உணர்ந்து முதல்ல மன்னிப்பு கேளுங்க. ஏதாவது அமைதியான மெலடி கேட்டுட்டு படுங்க. தூக்கம் வரும். எம் பொண்டாட்டி கூட நான் சண்டை போட்டப்போ எல்லாம் நான் அப்படித்தான் தூங்க முயற்சி பண்ணுவேன். நம்ம செய்றது எல்லாமே சரின்னு தான் நமக்கு தோணும். ஆனா இனியாவோட மனநிலையில இருந்து பிரச்சனையை யோசிச்சு பாருங்க. அப்போ தான் எங்க தப்பு பண்ணியிருக்கீங்கன்னு புரியும். இப்போ வைக்கட்டுமா? குட்நைட்!" என்று சொன்னவரிடம் ராசு அவசரமாக,

"மாமா எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி.....! மச்சானும் இப்படித்தேன் தைரியம் குடுத்தாக. நீங்களும் எந்தப்பை பொறுமையா சொல்றீக.... இனியா புள்ள கிட்ட கண்டிப்பா மன்னிப்பு கேக்குறேன் மாமா!" என்று ராசு சொல்ல ஜெய் நந்தன் அவனது பாட்டியை பற்றி இரண்டு வார்த்தைகள் விசாரித்து விட்டு போனை வைத்தார்.

"உன் பாதம் பூவாகும்
உன் பார்வை நீர்தூவும்
ஒரு கண்ணாலே சூரியனே
மறு கண்ணாலே மாமழையே
வந்தாயே என் சீராக
என் தாயும் அது நீயாக
ஏழை ன்னு நினையாத
எம்சாமி நீ தானே!"

என்ற பாடல் வரிகளை கேட்டுக் கொண்டிருந்த ராசுவுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க அவன் அந்த ப்ரக்ஞை இல்லாமல் நிலவை ரசித்துக் கொண்டு இருந்தான்.

அடுத்த நாள் காலையில் பார்கவ் சாரா ஜ்வல்லர்ஸில் இருந்தான். அவர்களுக்கு இருந்த மற்றொரு கடையான பிஆர் ஜ்வல்லரிக்கு இன்று அவன் தந்தை போய் விட்டதால் அவனும், கீதாவும் சாராவிற்கு வந்திருந்தனர். இங்கு திருமண கலெக்ஷன் வகை நகைகள் ப்ரத்யேகமாக இருக்கும். அதற்காகவே பிரசித்தி பெற்றிருந்தார்கள். திருமணப் பெண்களின் ஆசைகளுக்கு ஏற்றவாறு நகை வடிவமைப்பு செய்து தருவார் கீதா. என்ன மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து ஆர்டர் கொடுத்து விட வேண்டும். முக்கால்வாசி பணத்தை முன்பணமாக கொடுக்க வேண்டும். அவர்களுக்காக செய்து வந்ததை கடைசி நேரத்தில் டிஸைன்  பிடிக்கவில்லை என்று  மாற்றக் கூடாது என்று சில விதிமுறைகள் வைத்திருந்தார்கள் அவ்வளவு தான்!

தன் வேலைகளை கவனித்துக் கொண்டே கண்காணிப்பு கேமராவில் கண்களை பதித்திருந்தவன் வாசலைக் கடந்து உள்ளே வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்து சட்டென எழுந்து நின்றான்.

"இவ நகை வாங்க ஊர்ல வேற கடையே கிடைக்கலையா...... இரிடேட்டிங் வுமன்!" என்று முணங்கிக் கொண்டு கீழிறங்கி வந்து அவள் வழியை மறித்து கையைக் கட்டிக் கொண்டு நின்றான் பார்கவ். நீண்ட எட்டு  வருடங்களுக்கு பின் ஸ்கூல் சிறுவன் இமேஜ் எல்லாம் வடிந்து முழு ஆண்மகனாக நிற்கும் தன் காதலனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநய சரஸ்வதி.

"ஹாய் கவி..... பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. ரொம்ப மாறிட்டீங்க; நல்லாயிருக்கீங்களாப்பா?" என்று கேட்டவளிடம்,

"எந்த இம்சையும் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மேடம்! எம்பேரு பார்கவ். நீங்க கூப்பிடுறதுக்காக சொல்லல. ஸார்ன்னு கூட நீங்க என்னை கூப்பிட வேண்டாம். அப்படியே திரும்பி வெளியே போயிட்டீங்கன்னா ரொம்ப ஹெல்புல்லா இருக்கும்!" என்றான் பார்கவ் அவளிடம்.

"வெட்டிங் ஜ்வல்ஸ் ஆர்டர் பண்ணியிருந்தோம். அதை கலெக்ட் பண்ணிட்டு போயிடுறேன்!" என்று அவள் சொன்னதும் பார்கவ் ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்து அவளுக்கு ஒதுங்கி வழி விட்டான்.

அவள் படிகளில் ஏறப் போன போது, "ஒரு நிமிஷம்..... உங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இப்போ உங்களுக்கு தான் கல்யாணமா?" என்று கேட்ட படி தவிப்பும், பரபரப்புமாக அவள் முகத்தை நோக்கியவனிடம் சிரிப்புடன்,

"கூப்பிட கூட வேண்டாம். அப்படியே போயிடுன்னு சொன்னீங்க. இப்போ எதுக்கு டீடெயில் எல்லாம் கேக்கறீங்க...... எங்கக்காவுக்கு கல்யாணம் ஆன விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?
எனக்கு தான் கல்யாணம். இன்னும் பத்து நாள்ல; இப்போ என்ன பண்ணப் போறீங்க? இந்தாங்க இன்விடேஷன். மேரேஜ்க்கு கண்டிப்பா வந்துடுங்க!" என்று சொல்லி அவனிடம் பத்திரிக்கையை நீட்டியவளிடம்,

"வொர்க்கிங் ப்ரிமிசஸை நீட்டா  வச்சுக்கணும்ங்கிறது என் பாலிஸி. உங்க கையில இருக்கிற கார்டை வாங்கினேன்னா அதை கிழிச்சு அங்கங்க எறிய வேண்டியது இருக்கும். உங்க கார்டும் வேஸ்ட் ஆகிடும். ஸோ நீங்களே வச்சுக்குங்க. உங்க ஹஸ்பண்டோட ஹாப்பியா........ லைஃப் லீட் பண்றதுக்கு என்னோட வாழ்த்துக்கள்! சீக்கிரமா உங்க ஜ்வல்ஸை கலெக்ட் பண்ணிட்டு ஸேஃபா வீடு போய் சேருங்க!" என்று சொன்னவனிடம்,

"ஏன் உங்க குரல் ஒரு மாதிரி நெர்வெஸா இருக்கு; அழுகை வருதா......?" என்று கேட்டவளிடம் கையை இறுக்கிக் மூடிக் கொண்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன்,

"மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத வாணி, உடம்புலயும் மனசுலயும் தெம்பில்ல. கிளம்பிடு.....ப்ளீஸ்!" என்று கைகூப்பியவனை பார்த்து சிரித்தவள் அவன் அருகே வந்து நின்று,

"அக்காவையும், தங்கச்சியையும் செட்டில் பண்ணியாச்சு. இனிமே நம்ம கல்யாணத்துக்கு எங்க வீட்ல யாரும் எந்த அப்ஜெக்ஷனும் சொல்லப் போறதில்ல. சொன்னாலும் நான் கேக்கப்போறதில்ல. இவ்வளவு வருஷமா எடுத்துக்கிட்ட கமிட்மெண்டை நிறைவேத்தி
முடிக்கணும்ங்கிற வைராக்யத்துல, உங்கள பார்க்காம, பேசாம, உங்க நிழல் கூட என் மேல படாம இருந்துட்டேன் கவி. உங்க மேல இருந்த நம்பிக்கையில தான் உங்களை அவாய்ட் பண்ணிட்டு போனேன். ஆனா இத்தன வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்ப்பா. இன்னும் பத்து நாள்ல தங்கச்சி மேரேஜ் முடிஞ்சவுடனே உங்க அப்பா, அம்மாவை கூட்டிட்டு எங்க வீட்ல வந்து பேசுங்க. ஒத்துக்கிட்டாங்கன்னா அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லன்னா உங்க வீட்ல இருக்கிறவங்க கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு நம்ம ரிஜிஸ்டர்  மேரேஜ் பண்ணிக்கணும். என்னை உங்களால தூக்க முடியுமா கவி?" என்று அபிநய சரஸ்வதி  புன்னகையுடன் வினவ பார்கவ் அதை வரை இழுத்து பிடித்திருந்த மூச்சை அவசரமாக வெளியேற்றினான்.

"திமிர் பிடிச்சவளே.....ராங்கி, முழு வேக்காடு, சண்டாளி...... நீயெல்லாம்......! இப்டி ஒரு தெளிவான முடிவைத் தான் எடுத்துருக்கேன்னா அதை எங்கிட்ட சொல்லிட்டாவது போயிருக்கலாமேடீ..... நான் இவ்வளவு நாள் லவ் தோத்துப் போன மூடுலயே சுத்திக்கிட்டு இல்லாம நீ என்னைக்கா இருந்தாலும் ஒருநாள் எங்கிட்ட வந்துடுவன்னு நிம்மதியோடவாவது இருந்திருப்பேன்ல...." என்று கேட்டவனிடம்  சிரிப்புடன் கைகூப்பினாள் அபிநயா.

"ம்ம்ம்..... நீங்க நிம்மதியா இருந்தா போதுமா? சந்தோஷமா இருக்க வேண்டாமா கவி..... ஒரு வேளை என் அக்காவுக்கும், தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகியிருந்ததுன்னா நீங்க வேற  யாரையாவது கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன் கவி!" என்று சொன்னவளை முறைத்தவன்,

"கேர்ள்ஸை ஹார்ஷா ட்ரீட் பண்றது, அடிக்கிறதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லாத விஷயம். ஆனா அளவு மீறி என் பொறுமைய சோதிக்காத. அப்புறம் எங்கிட்ட அறை வாங்குவ!" என்றான். 

"ஓகேப்பா..... நா செஞ்சது தப்பு தான். மன்னிச்சுடுங்க. பட் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. வீட்ல சம்மதம் சொல்லாட்டி உங்களுக்கு ஓகேவா?" என்று கேட்டவளை எரிச்சலுடன் பார்த்தவன்,

"நா எட்டு வருஷத்துக்கு முன்னாடியே உங்கிட்ட ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்குவோமான்னு  கேட்டேன். இப்ப வந்து என்னமோ நீயே கண்டுபிடிச்ச மாதிரி மறுபடியும் முதல் கேள்வியில இருந்து  வர்ற!" என்று சலித்துக் கொண்டான்.

"தம்பி 16 வயசுல இந்த கேள்வியை கேட்டதுக்கு உன்னையெல்லாம் கையில கல் எடுத்து அடிச்சுருக்கணும். அன்னிக்கு தைரியம் இல்ல. இன்னிக்கி வேணும்னா செய்யட்டுமா? எங்க உங்களோட மொபைல் வால்பேப்பரை காமிங்க!" என்று கேட்டவளிடம் மழுப்பல் சிரிப்புடன்,

"ஹிஹி....வாணிம்மா! ப்ளீஸ் நாளைக்கு காமிக்குறேனே..... நாலு நாளா கெனடியன் பாப் சிங்கர் ஒருத்தன் தான் வால்பேப்பர்ல இருக்கான்!" என்றான் பார்கவ் பல்லைக் காட்டியவாறு.

"நான் உங்ககிட்ட ப்ரேக் அப் பண்ணிக்கலாம் ன்னு சொன்னவுடனே அப்படியே போயிடுவேன்னு நினைச்சீங்க. லவ் பண்றேன்னு சொல்லி சுத்திட்டு இருந்தப்போ  இனிமே லைஃப் லாங் என் போட்டாவை தான் உங்க மொபைல்ல வால்பேப்பரா வச்சிருப்பேன்னு சொன்னீங்களா இல்லையா..... அப்போ நா மட்டும் ஏன்டா இத்தன வருஷமா உங்க மொகரக்கட்டைய வால்பேப்பரா பொத்தி பொத்தி வச்சுட்டு இருக்கணும்.....போடா தத்தி தடிமாடு!" என்று சொல்லி விட்டு மேலேறியவள் கைகளைப் பிடித்துக் கொண்டு,

"வருங்கால ஆத்துக்காரரை இப்படியெல்லாம் திட்டக் கூடாது வாணிம்மா! நீயும் உன் சிஸ்டர் கல்யாணத்துக்கு ஏதாவது ஒரு ஜ்வல் செட் வாங்கிக்கோயேன். நான் பே பண்ணிடறேன்!" என்றான் பார்கவ்.

"கையை விடுறா. வந்தவுடனே அந்த திட்டு திட்டிட்டு இப்போ கொஞ்சுறியா? மூக்கை உடைச்சிடுவேன்!" என்று அவனை திட்டி விட்டு நகைகளை பார்க்க சென்றாள் அபிநயா. தன்னிடத்தில் அவள் கொண்டிருந்த காதலை எண்ணி வியந்து தன் அபிநய சரஸ்வதியை பார்த்துக் கொண்டு இருந்தான் பார்கவ். 



ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro